மார்ச் ஒண்ணாம் தேதி
(01.03.2015) அதாவது
இன்று, எனது பிறந்தநாள். 60 முடிந்து 61 தொடக்கம். இனிமேல் நானும் ஒரு சீனியர்
சிட்டிசன்(Senior Citizen). எந்த கோவிலுக்கு போவது என்று நான் யோசித்துக் கொண்டு இருந்த வேளையில்,
என்னோடு பணிபுரிந்த நண்பர் ஜெகதீசன் அன்றையதினம் நடக்க இருக்கும் தனது அறுபதாம் ஆண்டு நிறைவு திருமண (”ஷஷ்டியப்த பூர்த்தி சாந்தி சுப முஹூர்த்தம்”) விழாவிற்கு சென்றவாரமே அழைப்பிதழ் அனுப்பி வைத்ததோடு
செல்போனிலும் அழைப்பு விடுத்து இருந்தார். அவருக்கும் 61 தொடக்கம். ரொம்பவும்
நல்லதாகப் போயிற்று. திருவானைக் கோவில் என்று முடிவாயிற்று.
திருக்கோவில்
நுழைவு:
இன்று காலை எனது
பெற்றோர் இருக்கும் இடத்திற்கு சென்று, அவர்களது வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டு,
பஸ்சில் திருவானைக்கோவிலுக்கு புறப்பட்டுச் சென்றேன். பஸ்ஸை விட்டு இறங்கியதும்,
கடைத்தெருவில் ஒரு ஹோட்டலில் காலை டிபன் முடித்துக் கொண்டு கோவிலை நோக்கி நடக்கத்
தொடங்கினேன்.
(படம் மேலே)
திருவானைக்கோவில் கடைத்தெரு.
(படம் மேலே)
கோயில் கோபுரம்.
கோயிலின் கோபுரம்
வழியே உள்ளே நுழைவதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது. அவ்வளவு நெரிசல். உள்
வீதிகளில் குடியிருப்பவர்கள் மற்றும் கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஆகியோரது
இருசக்கர, நாலு சக்கர வாகனங்கள். உள்ளே நுழைந்ததும் அருள்மிகு ஜம்புகேஸ்வரர்
அகிலாண்டேஸ்வரி திருக்கோவில் நுழைவு வாயில்.
(படம் மேலே)
திருக்கோவில் நுழைவு வாயில்.
(படம் மேலே)
முன்புற கோபுரத்தின் பின்பக்க தோற்றம்.
கேமரா அனுமதிச்சீட்டு
கோயில் கோபுரத்தைக்
கடந்ததும் யானை கட்டும் இடத்திற்குச் சென்றேன். யானையை படம் எடுக்க முயன்றபோது
பாகன், கேமராவிற்கு, அருகிலுள்ள கோயில் அலுவலகத்தில் அனுமதிச்சீட்டு வாங்கி வரச்
சொன்னார். அங்கே போனபோது, இன்று ஞாயிறு – விடுமுறை என்பதால் கோயிலுக்குள் மூலவர் சன்னதி அருகே இருக்கும் கவுண்டரில்
வாங்கிக் கொள்ளுங்கள் என்று அங்கிருந்த ஒருவர் சொன்னார். சிரமத்தை பாராது அங்கே
சென்றேன். கேமராவிற்கு அனுமதிசீட்டு கேட்டபோது உடனே கொடுக்கவில்லை. நிறைய
கேள்விகள். யாரோ ஒரு கல்யாண போட்டோகிராபர், திருமண மண்டபத்தில் (சினிமாவில் படம்
எடுப்பது போன்று) மணமக்களை ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து இருக்கும்படி படம் எடுத்து
விட்டாராம். யாரோ ஒரு பக்தர் இதனை மேலே புகார் செய்ய (நல்ல விஷயம்தான்). எனவே
இப்போதெல்லாம் ரொம்பவும் கெடுபிடி என்றார்கள். ஒருவழியாக கேமராவிற்கு
அனுமதிச்சீட்டை (ரூ 30/=) வாங்கிக் கொண்டு மீண்டும் யானை இருக்கும் இடத்திற்கே
வந்தேன். யானையை படம் எடுக்கும்போது மட்டும் கேமராவில் பிளாஸ்சை ஆப் செய்து
கொள்வேன். மேலும் எட்டி நின்றே படம் எடுப்பேன். எனது பயத்தைத் தெரிந்து கொண்ட அவர்
பயப்படாமல் கிட்டே வந்து படம் எடுக்கச் சொன்னார்.
(படம் மேலே)
கேமரா அனுமதிச்சீட்டு
(படம் மேலே) யானை
அகிலாவும் அதன் பாகனும்.
அதன்பிறகு கோயில் உள்ளே
சென்று மண்டபத்தை அடைந்தேன். அங்கே ஒரு ஓரத்தில் பார்வையாக வைக்கப்பட்டு இருந்த
யானை பராமரிப்பு உண்டியலில், என்னால் இயன்ற தொகையை போட்டேன்.
(படம் மேலே) உள்புற
கோயில் கோபுரம்
(படம் மேலே) உள்
மண்டபம்.
திருமண நிகழ்ச்சி
பின்னர் தனிவழி கட்டண
சீட்டை (ரூ10/=) பெற்றுக் கொண்டு ஜம்புகேஸ்வரரை இறைவணக்கம் செய்தேன். சைவசமயத்தின்
முக்கியமான சிறப்பு நாட்களெல்லாம் (தைப்பூசம், சிவராத்திரி போன்றவை) அண்மையில்தான்
வந்து போயின. எனவே கூட்டம் அவ்வளவாக இல்லை. பின்னர் மூலவர் ஜம்புகேஸ்வரர் சன்னதியை
விட்டு வெளியே வந்து கோயில் பிரகாரங்களை சுற்றி விட்டு, நண்பரின் அறுபதாம் ஆண்டு
நிறைவு கல்யாணம் நடந்த நவராத்திரி மண்டபம் வந்தேன். மண்டபத்தின் அருகில்தான்
அம்மனின் (அகிலாண்டேஸ்வரி) சன்னதி. அங்கு வெளியூர் கும்பல். எனவே அவர்கள் நின்று
கொண்டு இருந்த வரிசைக்கு வெளியே இருந்தபடியே அம்மனை வணங்கிவிட்டு மண்டபம் வந்தேன்.
அங்கு நண்பரின் அறுபதாம் ஆண்டு நிறைவு திருமண நிகழ்ச்சியில் (படம் ஏதும்
எடுக்கவில்லை) கலந்து கொண்டுவிட்டு, அவர் ஏற்பாடு செய்து இருந்த ஹோட்டலில் மதிய
உணவை சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினேன்.
மேலும் சில
படங்கள்:
(படம் மேலே) உள்
பிரகாரம்
(படம் மேலே) உள்
பிரகாரத்துள் ஒரு மண்டபம்
(படம் மேலே)
அம்மன் சன்னதி அருகே, யானை அகிலாவை மதியம் அழைத்து வந்து இருந்தார்கள். அப்போது
அங்கு வந்த பக்தர்கள் பலர் அதனிடம் ஆசீர்வாதம் வாங்கினார்கள்.
நானும் பயத்துடனேயே பெற்றுக்
கொண்டேன். அப்போது எனது கேமராவை அங்கு யாரிடமாவது கொடுத்து எடுக்கச் சொல்லலாம்
என்ற ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. காரணம் அங்கே மண்டபத்தில் நான் கண்ட ப்ளக்ஸ்
பேனர் எச்சரிக்கை வாசகம்தான்.
(படம் மேலே)
எச்சரிக்கை வாசகம் அமைந்த ப்ளக்ஸ் பேனர்
(படம் மேலே)
கோயில் நந்தவனம்
(படம் மேலே) உள்
பிரகாரத்திலிருந்து
(படம் மேலே) 1970
ஆம் ஆண்டு நடைபெற்ற கோயில் குடமுழுக்க பற்றிய கல்வெட்டு.