Showing posts with label தலித். Show all posts
Showing posts with label தலித். Show all posts

Tuesday, 1 August 2017

சேரி பிகேவியர்



அண்மையில் சமூக வலைத் தளங்களிலும் விவாதக் களங்களிலும் ‘சேரி பிகேவியர்’ (Cheri behaviour) என்ற வார்த்தை அடிபட்டுக் கொண்டு இருந்தது. அப்போது சில குறிப்புகள் மட்டும் எடுத்து வைத்து இருந்தேன். வீட்டு சூழ்நிலை காரணமாக, கட்டுரையாக அப்போதே வெளியிட இயலவில்லை. 

சேரி என்ற சொல்

உண்மையில் சேரி என்பது மக்கள் வசிக்கும் பகுதியைக் குறிக்கும் சொல்லாகும். சங்க காலத்தில் உயர்ந்த பொருளில் பொதுப் பெயராக இருந்த அது, இன்றைக்கு குறிப்பிட்ட சாரர் மட்டும் இருக்கும் இடத்தை குறிப்பதாக இருக்கிறது.

பிக்பாஸ் எனும் டீவி தொடரில் ( நான் இந்த பக்கம் போவதே கிடையாது ) காயத்ரி என்பவர் ஓவியா என்பவரைத் திட்டும்போது இந்த சேரி பிகேவியர் என்ற வார்த்தையைச் சொன்னதாக சொல்லுகிறார்கள். இவரும் இந்த வார்த்தையை உள் நோக்கத்தோடு சொன்னதாகத் தெரியவில்லை. திட்டு வாங்கிய ஓவியா என்பவரும் இதுபற்றி வருத்தம் அடைந்ததாகத் தெரியவில்லை. 

ஒவ்வொருவருக்கும் ஒரு புத்தி இருக்கிறது. சிலர் சில காரியங்களைச் செய்தால் “ஒன்னோட புத்தி ஒன்னை விட்டு போகலே” என்று சொல்லுவார்கள். இதையே தொழில் ரீதியாக, குழு அடிப்படையில் இப்படியே வாத்தியார் புத்தி, போலீசு புத்தி என்று சொல்லிக் கொண்டே போகலாம். இந்த அடிப்படையில், அந்த அம்மணி ‘சேரி பிகேவியர்’ (Cheri behaviour) என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். 

அதற்குள் நாட்டு நடப்பில் ஒருவர் இந்த பிக் பாஸ் டீம் மீது வழக்கு போடுவேன் என்கிறார்; இன்னொருவர் கோடி கொடுத்தால் தான் ஆச்சு என்கிறார். மற்றவர்கள் ‘கம்முனு’ இருக்கிறார்கள். கோர்ட்டுக்குப் போனால் இவை எல்லாம் நிற்காது. ஏனெனில் நம்நாட்டில் ஜாதியைச் சொல்லி உள்நோக்கத்தோடு திட்டினால்தான் கேஸ். 

பழைய செய்திகள்

’ஹரிச்சந்திரா’ என்ற தமிழ் திரைப்படம் 1968 இல் வெளிவந்தது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அரிச்சந்திரனாக நடித்து இருக்கிறார். அந்த படத்தில், மயானத்தில் அரிச்சந்திரன் பாடுவதாக ஒரு காட்சி. அதில் ‘பேய் உலவும் காட்டில் திரியும் ஈனப் பறையனே’ என்று சந்திரமதி வசனம் பேசுவாள். அதற்கு மறுமொழியாக அரிச்சந்திரன் பாடும் பாடலின் துவக்க வரிகள் இவைதான்.

ஆதியிலும் பறையன் அல்ல
ஜாதியிலும் பறையன் அல்ல
நீதியிலும் பறையன் அல்லவே – நானே
பாதியில் பறையன் ஆனேனே

‘பாடும் வானம்பாடி’ 1985 இல் நடிகர் ராஜிவ் நடிகை ஜீவிதா நடித்து வெளிவந்த படம். இதில் ’வாழும்வரை போராடு’ என்று துவங்கும் பாடலில்,

மாடி வீட்டு ஜன்னலும் கூட
சட்டைய போட்டிருக்கு – அட
சேரிக்குள்ள சின்னப்புள்ள
அம்மணமா இருக்கு

என்ற வரிகள் வரும். பாடலை எழுதியவர் கவிஞர் வைரமுத்து. 

அடுத்து ‘ஒன்னா இருக்கக் கத்துக்கனும்’ (1992 இல் வெளிவந்தது) என்ற படத்தில் நடிகர் கவுண்டமணியும், அடுத்து ‘பிறகு’ என்ற படத்தில் (2007 இல் வெளிவந்தது) வடிவேலுவும் வெட்டியான்கள் வேஷத்தில் நடித்து இருக்கிறார்கள். இருவரும் பேசும் வெட்டியான் வசனங்கள் நகைச்சுவை என்ற பெயரில் நிறையவே நையாண்டிகள்.

நம்ம ஊர் என்று சொல்லிக் கொள்ளும் சுப்ரமண்யன் சுவாமி ஒருமுறை இண்டர்நேஷனல் பறையா (International Pariah) என்று சொல்லி சிக்கலுக்கு ஆளானார். அப்போது அவர் “கேம்பிரிட்ஜ் அகராதியில் இருப்பதைத்தான் நான் சொன்னேன்; தலித்துகளைக் குறிப்பிட்டு சொல்லவில்லை. அந்த அகராதியில் Pariah என்பதற்கு சொல்லப்படும் பொருளை நீக்க முயற்சி செய்வேன்” என்றும் சொன்னார்.

மேலே சொன்ன செய்திகளில் யாரும் பெரிதாக தண்டிக்கப்பட்டதாக தெரியவில்லை. பெரும்பாலும் இவற்றை சம்பந்தபட்ட சமூகத்தினரும் அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. உதாசீனம் செய்து விட்டார்கள்.

போராட்டம் போராட்டம்

இன்றைக்கு எதற்கெடுத்தாலும் மறியல், போராட்டம், வழக்கு என்று தமிழ்நாடு அல்லோல கல்லோல பட்டுக் கொண்டு இருக்கிறது. சாதாரணமாக ஒரு மனு கொடுத்து தடுத்து நிறுத்த வேண்டியவற்றிற்கு எல்லாம் ரத்தக்களரியாக போராடிக் கொண்டு இருக்கிறார்கள். ஒரு பிரச்சினையை முழுதாக தீர்ப்பதற்குள் அடுத்த ஒன்றிற்கு தாவி விடுகிறார்கள். சிம்புவின் பீப் சாங் போன்று இந்த ‘சேரி பிகேவியர்’ (Cheri Behaviour) கொஞ்ச நாளைக்கு பேசப்படும். மக்களுக்கு இருக்கும் எவ்வளவோ பிரச்சினைகளை மக்கள் நினைக்காமல் இருக்கவும், திசை திருப்பவும் இது போன்ற மடை மாற்றும் வேலைகள் எப்போதும் நடந்து கொண்டுதான் இருக்கும்.   

Sunday, 6 December 2015

அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்” – நூல் விமர்சனம்


சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னர் திருச்சியில் உள்ள ‘மணற்கேணி பதிப்பகம்’ சென்று இருந்தேன். சில நூல்களை வாங்கினேன். அவற்றுள் ஒன்று. நீதிபதி K. சந்துரு அவர்கள் எழுதிய “அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்”. அண்மையில்தான் இந்த நூலை படித்து முடித்தேன். அந்நூலைப் பற்றிய எனது பார்வை இது.
                                                                                                                                                                   
                                                                                                                                                               
ஏன் இந்த நூல்?

நீதிபதி K. சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த காலத்தில் இவரைப் பற்றிய செய்திகளை, இவரது பேட்டிகளை பத்திரிகைகளில் படித்து இருக்கிறேன். தொழிலாளர்களின் நலனில் அக்கறை கொண்டவர், இடதுசாரி சிந்தனை உள்ளவர், நேர்மையானவர் என்று கேள்விப் பட்டு இருக்கிறேன். “

/// ’குற்றம் செய்தவரைக்கூடத் தமது வாதத் திறமையால் நிரபராதி என நிரூபித்துக் காட்டுபவர்தான் நல்ல வழக்கறிஞர்’ என்பது நமது பொதுப் புத்தியில் பதிந்திருக்கும் கருத்து. அதற்கு மாறாக ‘குற்றம் செய்தவர் எனத் தனக்குத் தெரிந்த எவருக்காகவும் வாதாடுவதில்லை’ என்ற கொள்கையைக் கொண்ட வழக்கறிஞராக இருந்தவர் திரு. சந்துரு /// -
(இவர்தான் சந்துரு, (ஆசிரியர் ரவிக்குமார் - நூல் – பக்கம்.4 -5 )

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய K.சந்துரு அவர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன், தனக்கு பிரிவு உபசார விழா ஏதும் வேண்டாம் என்று மறுத்ததோடு, உயர்நீதிமன்றம் வழங்கிய காரை ஒப்படைத்துவிட்டு நண்பர்களுடன் மின்சார ரயிலில் வீட்டுக்கு சென்றார். “ – என்பது செய்தி. 

இந்த நூல் எதற்கு என்று சிலர் மனதில் எழலாம். அவர்களுக்கு பதில் அளிப்பது போல் இந்த நூலின் ஆரம்பத்தில் ’ஏன் இந்த நூல்?’ என்ற தலைப்பில் விடை தந்துள்ளார். நீதிபதி K. சந்துரு அவர்கள் நீதிபதியாக இருந்த காலத்தில் ஜாதி, மதம், தீண்டாமை, தலித்துகளின் சம்பந்தப்பட்ட உரிமை வழக்குகளிலும் தீர்ப்புகள் எழுதியுள்ளார். இந்த தீர்ப்புகளை தருவதற்கு பெரிதும் உதவியது டாக்டர் அம்பேத்கரின் எழுத்துக்களும் அவரது உரைகளுமே என்று சொல்லும் இவர், தனது தீர்ப்புகளை பலரும் பாராட்டிய நிலையில், சட்ட சஞ்சிகைகளில் (LAW JOURNALS) இந்த தீர்ப்புகள் வெளியிடப்படவில்லை என்றும், இது ஒரு நவீன தீண்டாமை என்றும் குறிப்பிடுகிறார்.

/// இன்றிருக்கும் சூழ்நிலையில் அப்படிப்பட்ட தீர்ப்புகளை ஆவணப்படுத்தாவிட்டால் அவை சட்ட சரித்திரங்களிலிருந்து மறைக்கப்பட்டுவிடும் வாய்ப்புகளுமுண்டு. அந்நேரத்தில்தான் தலித் சமூக சிந்தனையாளர் ரவிக்குமார் இந்நூலை எழுதுவதற்கு என்னை ஊக்கப்படுத்தினார். அவருக்கு எனது நன்றி. ///  (இந் நூல் பக்கம் - 20)

எனவே, இதுவே இந்த நூல் வெளிவந்ததற்கான காரணம் எனலாம்.

நூலின் அமைப்பு:

நீதிபதி K. சந்துரு அவர்கள் எழுதிய இந்த நூலின் முதற்பதிப்பு ஏப்ரல் – 2014 இல் வெளிவந்தது. திருத்திய மூன்றாவது பதிப்பாக அண்மையில் (நவம்பர், 2014) வெளிவந்துள்ளது. இந்த பதிப்பினில் ரவிக்குமார் அவர்களின் பதிப்புரை, நூலாசிரியரின் ”ஏன் இந்த நூல்?” என்ற தலைப்பில் விளக்கவுரை மற்றும் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களின் அணிந்துரையோடு நூலாசிரியரின் முன்னுரை ஆகியவை நூலின் ஆரம்பத்தில் இருக்கின்றன. நூலின் பிற்பகுதியில் கலைஞர் மு.கருணாநிதி, தொல்.திருமாவளவன், ‘இந்து’ என்.ராம், பத்திரிகையாளர் போன்றோரது மதிப்புரைகள் இணைக்கப் பட்டுள்ளன. இந்த நூலில் கீழ்க் கண்ட பதினைந்து கட்டுரைகள் உள்ளன

1.பெளத்தம் ஏன்?
2.மத மாற்றம்.
3.பஞ்சமி நிலம்
4.கல்லறையில் சமத்துவம்
5.பொதுச் சேவைகளில் பாரபட்சமற்ற தன்மை
6.இடஒதுக்கீடு
7.நூலகத்திற்கு வந்த கேடு
8.கழிப்பறைகளுக்கு வந்த கஷ்டம்
9.சாதி மறுப்புத் திருமணங்கள்
10.பாலியல் கொடுமைக்குள்ளாக்கப் பட்ட தலித் சிறுமிகள்
11.உணவு உண்ணும் உரிமை
12.வன்கொடுமை இழைத்த காவலர்களுக்கு நிவாரணம் மறுப்பு 13.தீண்டாமைச் சுவர் தகர்ந்தது
14.கோவில்களில் வழிபாட்டுரிமை
15.தலித்துகளின் வாழ்வுரிமை

ஒவ்வொரு கட்டுரையின் தலைப்பையும் வைத்தே, அவை இன்ன பொருள் உள்ளடக்கியவை என்று புரிந்து கொள்ளலாம்.

சில தகவல்கள்:

மதம் மாறிய பௌத்தர்களுக்கு இட ஒதுக்கீடு: இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கீழ், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு இருந்தாலும், இந்து மதத்திலிருந்து பௌத்தத்திற்கு மாறியவர்களுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டது. 34 வருட போராட்டத்திற்குப் பிறகு,. மதம் மாறிய பௌத்தர்களுக்கும் இடஒதுக்கீடு உரிமை உண்டு என்று 1990 ஆன் ஆண்டு சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஆனால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamilnadu Public Service Commission) இந்த உண்மையை மறைத்துவிட்டு மதம் மாறிய பௌத்தர்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்றே சொல்லி வந்தது. நீதிபதி K. சந்துரு அவர்கள் TNPSC இன் இந்த போக்கைக் கண்டித்ததோடு, அதன் உத்தரவையும் ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.

மீனாட்சிபுரம் ரஹமத் நகராக மாறிய சம்பவம்: 1981 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் சுமார் நூறு இந்து தலித் குடும்பத்தினர் இஸ்லாம் மதம் தழுவினர். மீனாட்சிபுரம் என்ற பெயர் ரஹமத் நகர் என்று மாறியது. அன்றைய காலகட்டத்தில் இந்த சம்பவம் இந்தியா முழுக்க பரபரப்பாக பேசப்பட்டது. இதனையொட்டி தமிழ்நாட்டில் வந்த மதமாற்ற தடைசட்டம் (2002) பற்றியும், அது திரும்பப்பெறப்பட்டதையும் நினைவுகூர்ந்த நூலாசிரியர், மீனாட்சிபுரங்கள் உருவானதைப் பற்றி கவிஞர் வாலி அவர்கள் எழுதிய கவிதை வரிகளை சுட்டிக்காட்டுகிறார் ( இந்நூல் பக்கம் – 42 )

ஆறுமுகம் என்றிருந்தோன்
அப்துல்லா ஆனதுவும்
அய்யனார் என்றிருந்தோன்
அந்தோனி ஆனதுவும்
வேறுமுகம் நாம் காட்டி
வித்தியாசம் பல பேசி
உடன் பிறந்தோரையெல்லாம்
ஒதுக்கியதால் வந்த வினை
-    கவிஞர் வாலி

கல்லறையில் சமத்துவம்: மதுரை தத்தநேரி என்ற மாநகராட்சி சுடுகாட்டில் ஜாதி அடிப்படையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளன. ஆரிய வைசிய சமூகத்தினர் தங்களுக்கு தனியிடம் வேண்டுமென கேட்க, அவர்களுக்கும் இவ்வாறே ஒதுக்கப்பட்டது. மாநகராட்சி கூட்டத்தில் இது பிரச்சினையானதும், இந்த உத்தரவை மாநகராட்சி ஆணையர் ரத்து செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து அவர்கள் வழக்கு தொடுத்தனர்.  கோர்ட்டுக்கு போனார்கள். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ( மதுரைக் கிளை ) மாநகராட்சி சட்டத்தில் ஜாதிக்கொரு இடம் சுடுகாட்டில் ஒதுக்க வழியேதுமில்லை என்று சொல்லி, தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி சுடுகாடுகளிலும்  முதலில் வருபவருக்கு முதலிடம் என்ற அடிப்படையில் இறந்தவர்களின் உடலை எரியூட்ட வசதி செய்ய ஆணையிட்டது. இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதி K. சந்துரு அவர்கள், தமது தீர்ப்பினில் ‘ரம்பையின் காதல்’ என்ற திரைப்படத்தில் வரும்

சமரசம் உலாவும் இடமே,
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே,
ஜாதியில் மேலோரென்றும்,
தாழ்ந்தவர் கீழோரென்றும்,
பேதமில்லாது எல்லோரும்,
முடிவினில் சேர்ந்திடும் காடு
தொல்லையின்றியே தூங்கிடும் வீடு

என்ற பாடலை (பாடலாசிரியர் மருதகாசி), மேற்கோளாக எடுத்துக் காட்டியதையும் இங்கு குறிப்பிட்டு இருக்கிறார்.(இந்நூல் பக்கம் 49 – 51 )

மேலே சொன்ன தகவல்களோடு இன்னும் நிறைய செய்திகள், சட்ட நுணுக்கங்கள் இந்த நூலில் இருக்கின்றன. ஒவ்வொரு வழக்கைப் பற்றியும் சொல்லி, அந்த வழக்குகளுக்கான தீர்ப்புகள் எப்படி சட்டப்படி அம்பேதகர் வழியில் அமைந்தன என்பதையும் நூலாசிரியர் சொல்லி இருக்கிறார். நூலிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் ஒரு ஆவணம் எனலாம். இந்த நூலின் மூன்றாம் பதிப்பே இந்த நூலுக்கு இருக்கும் வரவேற்பினை எடுத்துக் காட்டும். வழக்கறிஞர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் இந்த நூல். ஒரு நல்ல கையேடாகவும், வழிகாட்டியாகவும் விளங்கும்

நூலின் பெயர்: அம்பேத்கர் ஒளியில் எனது தீர்ப்புகள்
நூலாசிரியர்: நீதிபதி K. சந்துரு
பக்கங்கள்:  208  விலை ரூ 150/= (திருத்திய மூன்றாம் பதிப்பு)
நூல் வெளியீடு: மணற்கேணி பதிப்பகம்,
முதல் தளம், புதிய எண்.10 (பழைய எண்: 288),
டாக்டர் நடேசன் சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600005
செல் போன்:  944033305


Friday, 7 August 2015

தலித் கிறிஸ்தவர்கள் இடஒதுக்கீடு - உச்சநீதிமன்றம் கருத்து



இப்போது நாடெங்கும் தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள் தங்களையும்  (தாழ்த்தப்பட்ட இந்துக்களைப் போலவே) பட்டியல் இனத்தில் (SCHEDULED CASTE) சேர்க்க வேண்டும் என்று கோரி வருகிறார்கள். இந்திய உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது. கீழே சொல்லப்பட்ட செருப்பு தைக்கும் சூசை வழக்கு  பலருக்கு தெரியாது. சில வருடங்களுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்ட அந்த வழக்கின் தீர்ப்பைப் பற்றி அப்போது தினகரன் ( 02, டிசம்பர், 1995 ) நாளிதழில் வந்த செய்தி இது. (அப்படியே டைப் செய்துள்ளேன்)

செருப்பு தைக்கும் சூசை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

தலித் கிறிஸ்தவர்களை அட்டவணை சாதியில் இணைக்கலாமா? கூடாதா என்னும் பிரச்சினை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு வைக்கப்பட்டது 1982-ம் வருடத்தில்! இந்த வழக்கு நமது மாநிலமான தமிழ்நாட்டைச் சார்ந்தது என்பதால் தமிழர்களாகிய நாம் இதனைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.

1982-ம் வருடம் மே மாதம் தமிழ்நாடு கதர் மற்றும் கிராம தொழில் வாரியத்தார் சென்னை நகரத்தின் தெருவோரங்களில் அமர்ந்து செருப்பு தைக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தொழில் பற்றிய சர்வே ஒன்றை மேற்கொண்டது. அப்படி சர்வே செய்யப்பட்டபோது அதில் பதிவானவர்கள்  பலருள் சூசை என்பவரும் ஒருவர். இவர் பூர்வீகத்தில் இந்து மதத்தை சார்ந்தவர். ஆனால் பின்னர் கிறிஸ்தவராக மதம் மாறியவர்.

1982 ஜூலை மாதம் இவர்களுக்கெல்லாம் ‘பங்க்எனப்படும் பெட்டிக்கடைகளை இலவசமாக வழங்கினார்கள். இந்திய அரசின் பணத்தில் இந்த பெட்டி கடைகள் செய்யப்பட்டு மாநில அரசால் வழங்கப்பட்டது. சூசை தவிர பிற செருப்பு தைப்போர் அனைவருக்கும் கடைகள் வழங்கப்பட்டன. சூசைக்கு மட்டும் இல்லை. ஏன்? சூசை கிறிஸ்தவர் என்பதால் அட்டவணை சாதியினர் நல்வாழ்வுக்காக அமுல் நடத்தப்படும் திட்டத்தின் கீழ் அட்டவணை சாதி அல்லாத சூசைக்கு எப்படி உதவி செய்ய முடியும் என்பது அரசின் நிலை.

இதுகுறித்து சூசை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது. வழக்கு விசாரணை நீடித்துக்கொண்டே போய் 1985-ம் வருடம் செப்டம்பர் மாதம் 30-ந்தேதியன்று தீர்ப்பு கூறப்பட்டது. சூசையின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்படவில்லை. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இதற்கு காரணமாக உச்சநீதிமன்றம் கூறிய காரணம் என்ன?

சாதி அமைப்பு என்பது இந்து சமய அமைப்பில் ஓர் அம்சம் என்பதை யாரும் மறுக்கமுடியாது. சாதி அமைப்பு என்பது இந்து சமயத்துக்கு மட்டுமே உரிய ஒரு வினோதமான ஒரு சமூக விசித்திரம் “ ( …. IT CANNOT BE DISPUTED THAT THE CASTE SYSTEM IS A FEATURE OF THE HINDU SOCIAL STRUCTURE. IT IS A SOCIAL PHNOMENON PECULIAR TO HINDU SOCIETY “ ) 

இப்படி சொல்லியதோடு நில்லாமல் இன்னொரு கருத்தையும் கூறியது. அதாவது, “ இந்து மதத்தில் இருந்தபோது தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஒருவர், இந்து மதத்திலுள்ள பிறரால் இழிவாக நடத்தப்படுவது போல அவரே கிறிஸ்தவ சமயத்திற்கு மதம் மாறிய பிறகும் அவரை அவரது புதிய சமயத்தவர்களான கிறிஸ்தவர்கள் நடத்துகிறார்களா? “ இது உச்ச நீதிமன்றம் கூறிய கருத்து - கேட்ட கேள்வி. இதற்கு இன்னமும் சரியான பதில் உச்சநீதிமன்றம் வாயிலாக இன்னமும் கூறப்படவில்லை. இது ஒரு பெரிய தடைக்கல்லாக உள்ளது என்று சில சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நன்றி: தினகரன் (திருச்சி பதிப்பு) தேதி- 02, டிசம்பர், 1995.

இன்னொரு கோணம்:

மதத்தின் அடிப்படையில் அல்லாது இன்றைய நிலை என்ற கோணத்தில் பார்க்கும்போது, கிறிஸ்தவ மதத்தினை தழுவினாலும் அவர்கள் நிலைமை அப்படியேதான் இருக்கிறது என்கிறார்கள்.

இன்னும் படித்த பலர் இட ஒதுக்கீட்டில் வேலை வாய்ப்பிற்காக வேண்டி கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறிக் கொள்கிறார்கள். பெயர் மாற்றம செய்து கொள்ளும்போது கூட கிறிஸ்தவத்திற்கும் இந்து மதத்திற்கும் பொதுவான ஒரு பெயரை வைத்துக் கொள்கிறார்கள். ஆனால் நடைமுறையில் அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் கிறிஸ்தவர்களாகவே இருந்து கொள்கிறார்கள். ஆரம்பத்தில் இதனை எதிர்த்த கிறிஸ்தவ மெஷினரிகள் இதனை இப்போது கண்டு கொள்வதில்லை.  

நாட்டின் பல இடங்களிலும் முக்கிய நகரங்களிலும் கிறிஸ்தவ மெஷினரிகள் மற்றும் பணக்கார கிறிஸ்தவர்கள் நடத்தும் பல கல்வி நிறுவனங்களில் தொழிற்சாலைகளில்  தலித் கிறிஸ்தவர்களுக்கு சரியான வாய்ப்புகள் தரப் படுவதில்லை. இதற்காகவும் அவர்கள் போராடி வருகிறார்கள்.

கல்லறையில் குறுக்குச்சுவர்:

Till death do us part: Dalits are buried on the other side of the wall in this cemetery (Courtesy: http://www.bbc.com/news/world-south-asia-11229170 )

திருச்சியில் ஒரு கிறிஸ்தவ கல்லறையில் தலித் கிறிஸ்தவர்களையும் மற்ற கிறிஸ்தவர்களையும் ஒரு குறுக்குச்சுவர் வைத்து பிரித்து வைத்து இருக்கிறார்கள். அதை உடைக்கவும் போராடுகிறார்கள். ஆனால் இவைகள் எதனையும் யாரும் கண்டு கொள்வது கிடையாது. இந்த குறுக்குச் சுவரைக் கட்டிக் காக்கும் கல்லறைக் கமிட்டியின் முக்கிய பொறுப்பாளர்கள் சிலர் அரசியல் கட்சிகளில் முக்கிய பொறுப்பு வகிப்பவர்கள்.

இதற்கு யார் காரணம்? இந்த நிலைமையை நீக்க வேண்டியது பல்வேறு தொண்டு நிறுவனங்களையும், பல கல்வி நிறுவனங்களையும் வைத்துள்ள கிறிஸ்தவ சமூகம்தான் இதனை நீக்க பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். அந்த நிறுவனங்களில் தலித் கிறிஸ்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை சரியாக கொடுக்க வேண்டும்.                                                              

எனவே பாராளுமன்றத்தில் இட ஒதுக்கீட்டிற்காக  ஒரு சட்ட திருத்தம் கொண்டு வந்தால்தான் தலித் கிறிஸ்தவர்களின் கோரிக்கை நிறைவேறும். இதற்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பார்களா என்று தெரியவில்லை. அதிலும் இப்போது நடக்கும் பி.ஜே.பி ஆட்சியில் எந்த அளவிற்கு இது சாத்தியம் என்று சொல்ல முடியாது. மேலும், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்தே, எல்லா மட்டத்திலும் வெளியாள் முறை (OUTSOURCING) மற்றும் ஒப்பந்தமுறை (CONTRACT) நுழைந்து விட்டபடியினால், இடஒதுக்கீடு என்பது பெயரளவில்தான் இருக்கிறது.

கட்டுரை எழுத துணை நின்றவை:
1. தினகரன் (திருச்சி பதிப்பு) தேதி- 02, டிசம்பர், 1995
3. Google search : writ of petition No. 9596 of 1983
     SOOSAI THE COBBLER AGAINST THE SUPREME COURT OF INDIA