’கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் தார்வேந்தன் இலங்கை இராவணன்’ என்று சொல்லுவார்கள். கம்பர் இவ்வாறு பாடவில்லை; இது ஒரு தனிப்பாடல் வரி என்பார்கள். நிற்க. இப்போதெல்லாம் கடன் கொடுத்தவர்கள்தான் கலங்கி நிற்கிறார்கள்
என்பது புதுமொழி. ஆனாலும் வங்கிக் கடன் என்றாலே கொடுத்தவரும் கலங்குவதில்லை; வாங்கியவர்களில்
கலங்காதவர்களும் உண்டு.
இருபது அம்சத் திட்டம்:
நான் வெளியூரிலிருந்து உள்ளூர் நகரக் கிளைக்கு பணிமாற்றல் பெற்று
வந்த நேரம். பாரதப் பிரதமரின் 20 அம்சத் திட்டத்தின் கீழ்,சுயவேலை வாய்ப்பு என்ற பெயரில்
வேலையில்லாத பட்டதாரிகளுக்கு, வேலைவாய்ப்பு அலுவலகம் பரிந்துரையின்படி அரசு வங்கிகளில்
கடன் தொகை வழங்கிக் கொண்டு இருந்தார்கள். வழக்கம் போல அவரவர் ஏரியாக்களுக்கு ஒதுக்கப்பட்ட
வங்கிகளுக்கு மக்கள் படையெடுப்பு. விண்ணப்ப பாரங்களை பூர்த்தி செய்து தருவதற்கென்றே
கடைவீதியில் சிலர் கடை போட்டு, கூடவே ஸிராக்ஸ் மெசினும் வைத்து நல்ல வியாபாரம். சில
சமயம் வங்கி சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு விடை தெரியாவிடில் வங்கி ஊழியர்களிடம் கேட்டு
விண்ணப்ப பாரங்களில் எழுதுவார்கள். . இதில் அரசியல்வாதிகள் சிபாரிசுக் கடிதங்களும்
உண்டு. வேலை வாய்ப்பு அலுவலகம், தாலுகா அலுவலகம், கட்சி ஆபிஸ், வங்கிகள் என்று அலைந்ததன்
பலனாக, கிட்டத் தட்ட எல்லோருக்குமே கடன் தொகை கிடைத்தது எல்லாம் முடிந்து கடன் வாங்கிய
ஒருவர் என்னிடம் கடைசியாக கேட்ட கேள்வி “ சார்! வங்கியில் வாங்கிய இந்தக் கடனை திரும்பக்
கட்ட வேண்டுமா?” என்பதுதான்.
விவசாயி என்றால்..
இந்திய விவசாயி என்றால் நிறையபேரின் மனக்கண்ணில் வருவது ஏர் கலப்பையும்,
மேலாடை அணியாத விவசாயியும்தான். ஆனால் நடைமுறையில், வங்கிக்கடன் பெறுபவர்கள் அனைவருமே
வசதியான விவசாயிகள்தான். இவர்கள் இலவச மின்சாரம், உர மான்யம், விதை மான்யம், கடன் தள்ளுபடி
என்று எல்லா சலுகைகளும் பெறுவார்கள். அவர்கள் விவசாயத்திற்கு என்று டிராக்டர் வாங்குவார்கள்.
தாங்கள் வைத்து இருக்கும் நிலங்களில் பயன்படுத்துவது மட்டுமன்றி, மற்ற விவசாயிகளுக்கும் இந்த டிராக்டரை மணிக்கு இவ்வளவு என்று வாடகைக்கும்
விடுவார்கள்.. ஆனால் கடன் வசூல் என்று போனால் பணத்தை ஒழுங்காக கட்டுவது இல்லை. காரணம் என்றேனும் ஒருநாள் ஆட்சியில் இருக்கும் அல்லது
ஆட்சிக்கு வர இருக்கும் அரசியல் கட்சிகள், இந்த விவசாயக் கடனை எல்லாம், தள்ளுபடி செய்துவிடும்
என்ற எதிர்பார்ப்புதான். ஒரு சாதாரண விவசாயியும், ஏக்கர் கணக்கில் நிலம் வைத்திருக்கும்
இந்த விவசாயியும் ஒன்றா? என்பதை எண்ணிப் பார்ப்பதில்லை. ஒருமுறை நாளிதழ் ஒன்றில் நான்
கண்ட விளம்பர வாசகம் ‘இலவச மின்சாரம் மற்றும் பம்புசெட்டுடன் கூடிய விவசாய பண்ணைத்
தோட்டம் விற்பனைக்கு’
விஜயமல்லையாக்கள்:
ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், ப்ளாக் – என்று விஜயமல்லையாவைப்
பற்றி விமர்சனம் வராத நாளே இல்லை எனும் அளவுக்கு செய்தி பரிமாற்றம் இருந்தது. ஒருவிதத்தில்
வங்கி நடைமுறைச் சட்டத்தில், கடன் வழங்குவதில் உள்ள அரசியலையும், வசூல் விஷயத்தில்
உள்ள பலவீனத்தையும் இவர்களால்தான் மக்கள் தெரிந்து கொண்டனர் எனலாம். இதில் குறிப்பாக
சொல்ல வேண்டிய விஷயம் என்னவென்றால், இதுபோன்ற மல்லையாக்கள் உருவாக எல்லா அரசியல் கட்சிகளுமே
காரணம் என்பதுதான். இது போன்ற ஆட்களிடம் கட்சி பேதமின்றி நன்கொடை தாராளமாக இருக்கும்.
எனவே இந்த விஜயமல்லையாக்கள் வங்கிக்கடன் பெறுவதற்கு எல்லா அரசியல் கட்சிகளுமே உதவும்.
இவர்களும் கிடைத்த வாய்ப்பை பெற்றுக் கொண்டு, சட்டத்தில் இருக்கின்ற, சந்து பொந்துகளில்
நுழைந்து, வங்கிக் கடனை, வாராக் கடனாக (NPA) மாற்றி விட்டு ’பெப்பே’ காட்டி விடுகின்றனர்.
சிறிய கடன்காரர்கள் வகை தெரியாமல் முழிக்கிறார்கள். இவர்களிலும் மல்லையாக்கள் இருக்கிறார்கள். வங்கிகளில் வாராக்கடன் என்பது நாட்டிற்கு பொருளாதாரக் கேடு.
(ALL PICTURES COURTESY: GOOGLE IMAGES)
(ALL PICTURES COURTESY: GOOGLE IMAGES)