அண்மையில் தோழர் ஆசிரியர் இரா. எட்வின் அவர்கள் ’நோக்குமிடமெல்லாம்’ என்ற தனது வலைத்தளத்தில், ’அய்யம்’ என்ற தலைப்பினில்,
நான் தொல்காப்பியம் எல்லாம் படித்தவன் இல்லை. ஆனால் கீழே உள்ளது தொல்காப்பியத்திலிருந்து என்று அறிகிறேன்.
“ ஈ என் கிளவி இழிந்தோன் கூற்றே
தா என் கிளவி ஒப்போன் கூற்றே
கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே”
தா என் கிளவி ஒப்போன் கூற்றே
கொடு என் கிளவி உயர்ந்தோன் கூற்றே”
எனில், இழிந்தவன் தன்னைவிட உயர்ந்தவனிடம் ஒரு பொருளை வேண்டிக் கேட்பதற்கு ”ஈ” என்ற சொல்லையும், தனக்கு சம நிலையில் இருப்பவனிடம் கேட்கும்போது “ தா” என்று கேட்க வேண்டும் என்றும், உயர்ந்தவன் தன்னைவிட தாழ்ந்தவனிடம் கேட்குமொபோது “ கொடு” என்று கேட்க வேண்டும் என்றும் ஆகிறது.
எனில்,இழிந்தவன், ஒப்போன், உயர்ந்தவன் என்பது சாதியப் படிநிலைகளைக் குறிப்பதாகத்தான் எனக்குப் படுகிறது. எனில், சாதிக்கொரு வார்த்தையை தொல்காப்பியம் பரிந்துரைப்பதாகவே படுகிறது. அது அப்படித்தான் எனில் சொல்கிறோம், “ குற்றம் குற்றமே” அல்லது இதற்கு வேறு ஏதும் பொருளிருப்பின் சொல்லுங்கள் சரியாயிருப்பின் ஏற்கிறோம்.
என்று எழுதி இருந்தார்.( www.eraaedwin.com/2015/05/blog-post_17.html ) தோழர் இரா.எட்வின் அவர்களது ‘அய்யம்’ பற்றி
வெளிப்படையாக சொல்வதானால் “நீங்கள் சொல்வது சரியே; குற்றம்தான். தொல்காப்பியர் காலத்தில் ஜாதிகளில் ஏற்ற தாழ்வு கடைபிடிக்கப்பட்டது” என்பதுதான். இதில் ஒளிவு மறைவோ, சப்பைக் கட்டோ இல்லை.
ஜாதியும் தமிழர்களும்:
பண்டைத் தமிழர் வரலாற்றைப் பற்றி எழுதும்போது , “கல் தோன்றி, மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி” (புறப்பொருள் வெண்பாமாலை (பாடல்
எண்.35) என்று சொல்வார்கள். அந்த மூத்த குடியில் இப்போது உள்ளதுபோல் பிறப்பால் உண்டான ஜாதி பாகுபாடு இல்லை என்றும் அது தொழில் சார்ந்த பாகுபாடு என்றும் சொல்வார்கள். உண்மையில் சங்ககாலத்தில் தமிழர்களிடையே இருந்த ஜாதி பாகுபாடானது அவரவர் தொழில் முறையால் உண்டானதா அல்லது பிறப்பால் உண்டாக்கப்பட்டதா என்று அறுதியிட்டு சொல்ல முடியாத சூழ்நிலைதான் இருக்கிறது.
சங்க இலக்கியத்தில் வரும் – இழிசினன், இழி பிறப்பாளன், உயர்ந்தோன், தாழ்ந்தோன், மேற்குடி, கீழ்குடி, புலையன் போன்ற சொற்கள் அக்காலத்தில் சாதியில் பாகுபாடு இருந்ததை உணர்த்துவன.
வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே - புறம்.183
என்பது புறநானூற்றின் அப்பட்டமான வரிகள்.
தமிழர், தமிழ் என்று நமக்குள் இருக்கும் தமிழ் பற்றின் காரணமாக தமிழர்களை உயர்த்திக் காட்ட வேண்டி, சில உண்மைகளை மறைக்கப் பார்க்கிறோம். தமிழர்கள் டீ அல்லது காபி அல்லது டாஸ்மாக் அல்லது அன்ன ஆகாரம் இன்றி கூட இருந்து விடுவார்கள். ஆனால் ஜாதி இல்லாமல் மட்டும் இருக்க மாட்டார்கள். ஜாதியைக் கட்டிக் காப்பதில் கெட்டியானவர்கள். திருவள்ளுவர், கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டே ஜாதி அரசியல் செய்யும் வகையறாக்களை தமிழ்நாட்டில் இப்போது பார்க்கலாம்.
வச்சணந்தி மாலை:
வச்சணந்தி மாலை என்பது 12 - ஆம்
நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு இலக்கண நூல். வெண்பா பாட்டியல் என்று இன்னொரு பெயரும் உண்டு. தமிழ் இலக்கிய இடைக்கால வரலாற்றில் வரும் நூல். இதனை எழுதியவர் குணவீர பண்டிதர். தனது
ஆசிரியருக்கு
கௌரவம் செய்ய வேண்டி வச்சணந்தி (வஜ்ரநந்தி)
என்ற தனது ஆசிரியரின் பெயரால் இதனை இயற்றினார்.
பாட்டியல் என்றால் சிற்றிலக்கியங்களில் பிரபந்தங்கள் போன்ற நூல்களுக்கு
இலக்கணம் ஆகும். பொதுவாகவே நான்கு வருணத்தை (அந்தணர், அரசர், வைசியர், சூத்திரர்
ஆகியோரை) மையமாக வைத்து பாட்டுடைத் தலைவனது வருணத்திற்கு தகுந்தவாறு பா புனைய
வேண்டும் என்பது இந்த ‘பாட்டியல் நூல்களின் மையக் கருத்தாகும். அடிமையிலும் அடிமையான பஞ்சமர் எனப்படும் ஐந்தாவது வருணத்தினருக்கு அந்த
காலத்தில் சமூக அந்தஸ்து இல்லை,
என்பதால் அவர்களைப் பற்றிய குறிப்புகள் பாட்டியல்
நூல்களில் இல்லை.
( இந்த பாட்டியல் நூல்களைத்தான் பல ஆண்டுகளாக புலவர் வகுப்புகளில்,
கல்லூரிகளில் பாட நூல்களாக போற்றி வருகிறார்கள் ) இது தமிழின் குற்றமன்று; தமிழில்
எழுதியவர்களின் மற்றும் ஆதரித்தவர்களின் குற்றமாகும்.
வச்சணந்தி மாலையில்
ஒழியா வுயிரனைத்து மொற்றுமுத லாறும்
அழியா மறையோர்கா மென்பர் - மொழியும்
அடைவேயோ ராறு மரசர்க்கா மென்பர்
படையாத சாதிகளின் பண்பு.
பண்பார் வணிகர்க்காம் பாங்கி லவறனக்கள்
மண்பாவுஞ் சூத்திரர்க்கா மற்றையவை - நண்பால்
அரனரிசேய் மால்கதிர்கூற் றாய்மழைபொன் மெய்க்கும்
பிரமன் படைப்புயிர்க்குப் பேசு.
என்ற பாடல்களில்
இன்னின்ன வருணத்திற்கு இன்னின்னின எழுத்துக்கள் வைத்து பாட வேண்டும் என்று
சொல்லுகின்றன..
அ, ஆ,இ, ஈ, உ,
ஊ, எ,
ஏ, ஐ,
ஒ, ஓ,
ஒள, க,
ங, ச
ஞ, ட,
ண – என்ற பதினெட்டு எழுத்துக்களும் அந்தணர்களுக்கானவை.
த, ந, ப, ம, ய, ர – என்ற ஆறு எழுத்துக்களும் அரசர்களுக்கானவை.
ல, வ, ற, ன – என்ற நான்கு எழுத்துக்களும் வைசியர்களுக்கானவை.
ழ. ள – என்ற இரண்டு எழுத்துக்கள் சூத்திரர்களுக்கு (அதாவது வேளாளர்களுக்கு) ஆனவை.
த, ந, ப, ம, ய, ர – என்ற ஆறு எழுத்துக்களும் அரசர்களுக்கானவை.
ல, வ, ற, ன – என்ற நான்கு எழுத்துக்களும் வைசியர்களுக்கானவை.
ழ. ள – என்ற இரண்டு எழுத்துக்கள் சூத்திரர்களுக்கு (அதாவது வேளாளர்களுக்கு) ஆனவை.
மேலும் இந்நூலின்
(வச்சணந்தி மாலை) சில பாடல்களில், பிராமணர்களுக்குரியது வெண்பா; அரசனுக்குரியது ஆசிரியப்பா. வைசியருக்குரியது
கலிப்பா மற்றும் சூத்திரர்களுக்குரியது
வஞ்சிப்பா என்றும் வரையறை செய்கின்றது. மேலும்
அந்தணர் இயல்பு, மன்னர் இயல்பு, பூவைசியர் இயல்பு, தனவைசியர் இயல்பு, சூத்திரர் இயல்பு – என்று நான்கு வகையான வருணத்தினருக்கும் இன்னின்ன இயல்புகள் என்றும் கூறுகிறது.
பார்திகழு மூவர் பணித்த பணியொழுகல்
ஏருழுத லீதல் பிழையாமை - பார்புகழக்
கோட்ட மிலாமை யொருமைக் குணம்பிறவும்
காட்டினார் சூத்திரர்தம் கண்.
என்ற பாடலில் அந்தணர்,அரசர், வைசியர் சொன்ன பணிகளைச் செய்தல் சூத்திரர்கள் கடமை என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
தொல்காப்பியர் காலத்தில்:
தொல்காப்பியத்தில், அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் ஆகிய நான்கு வருணங்களுக்குரிய உரிமைகள் மற்றும் ,தொழில்கள் பற்றிய சூத்திரங்களைக் காணலாம். எனவே தமிழகத்தில், தொல்காப்பியர் காலத்தில் நான்குவகை வருணபேதம் இருந்தது என்று உறுதியாகச் சொல்லலாம். மேலும் தொல்காப்பியத்தில் குறிப்பிட்டு இருக்கும் இழிந்தோன், ஒப்போன், உயர்ந்தோன் என்ற சொற்களை வைத்துப் பார்க்கும்போது, தொல்காப்பியர் காலத்திலேயே உயர்ந்தோன், தாழ்ந்தோன் என்ற படிநிலையும் இருந்தது என்றே எண்ண வேண்டி உள்ளது.
அப்போது
தொடங்கிய இனக்குழுக்களின் வளர்ச்சி பின்னாளில் ஜாதீய
படிநிலையாகப் பெருகியதையே வச்சணந்தி மாலை கூறுகிறது எனலாம். எனவே தோழர் ஆசிரியர் இரா. எட்வின் சொன்ன கருத்தினை அப்படியே வழி மொழிகின்றேன்
” சாதிக்கொரு வார்த்தையை தொல்காப்பியம் பரிந்துரைக்கிறது. இது குற்றமே.”