Showing posts with label வணக்கம். Show all posts
Showing posts with label வணக்கம். Show all posts

Wednesday, 6 December 2017

வணக்கம் சொல்லுதல் தமிழ் மரபா?



ரொம்ப நாளாகவே, படிக்கும் காலத்தில் இருந்தே எனக்குள் ஒரு சந்தேகம். நமக்குள் ஒருவருக்கு ஒருவர் வணக்கம் சொல்லுதல் தமிழ் மரபா என்பதே.. ஏனெனில் நானறிந்த வரையில் நான் படித்த பழைய தமிழ் இலக்கியங்களில் எங்கும், மக்கள் ‘வணக்கம்’ என்று சொல்லிக் கொண்டதாகவே  தெரியவில்லை.

ஆனால் இப்போது நாம் வணக்கம் என்ற சொல்லை நன்றாகவே பயன் படுத்துகிறோம். தமிழ் ஆர்வலர்கள் அல்லது மேடைப் பேச்சாளர்கள் பலரும், தொடங்கும்போது வணக்கம் சொல்லி விட்டு, முடிக்கும் போது, நன்றி – வணக்கம் என்று அமர்கின்றனர். வடக்கிருந்து எந்த தலைவராவது இங்கு பேச வந்தால், இந்த பத்திரிகைகள் தலைப்பில் போடும் செய்தி, தமிழில் பேசினார் என்பதுதான். அவர்கள் அப்படி எவ்வளவு நேரம் தமிழில் பேசினார்கள் என்று படித்துப் பார்த்தால், அவர்கள் ‘வணக்கம்’ சொன்னதைத்தான் இவர்கள் இப்படி தலைப்பாக போட்டு இருப்பது தெரிய வரும்.. நிற்க.

‘வணக்கம் சொல்லாதே’ – பேராசிரியர் நன்னன்

அண்மையில் மறைந்த தமிழறிஞர் பேராசிரியர் நன்னன் அவர்கள் “வணக்கம் சொல்வது தமிழர் முறையே அல்ல” என்று சொல்லுகிறார். அவருடைய கருத்து இங்கே.

// நாம் ஒருவரை ஒருவர் பார்த்தால் வணக்கம் சொல்கிறோம். அது தவறு, வணக்கம் சொல்வது முட்டாள்தனம், தமிழர் வரலாற்றில் எங்குமே வணக்கம் என்ற குறிப்பே கிடையாது. சேர மன்னர் தன் குடும்பத்துடன் கானகத்தை காணச் சென்ற போது கூட மக்கள் அனைவரும் வாழ்த்து தான் சொன்னார்களேத் தவிர வணக்கம் சொல்லவில்லை. 'வாழ்க எங்கோ' அதாவது வாழ்க அரசர் என்று தான் சொன்னார்கள். ஆரிய பழக்கம் வந்த பின்னர் தான் நமஸ்ஹாரம் என்று ஒருவரைஒருவர் பார்த்து சொன்னார்கள். அதைத் தமிழில் எப்படி சொல்வது என்று கேட்டார்கள். அதைத் தொடர்ந்து தான் வணக்கம் நம்மை தொற்றிக் கொண்டது. //

என்று சென்னை புத்தகத் திருவிழாவில் பங்கேற்ற போது நன்னன் உரையாற்றினார். ( நன்றி: tamil.oneindia.com  Dt 07.11.17 )

VIDEO COURTESY: https://www.youtube.com/watch?v=o7jLiUO0z7s பெரியார் வலைக்காட்சி - 

ஆங்கிலேயர் மரபும் தமிழர் வழக்கமும்

முதலில் ஒரு சில இலக்கிய மேற்கோள்களை இங்கு பார்ப்போம்.
கூடா நட்பு பற்றி பேச வந்த, திருவள்ளுவர்,

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான்.  ( திருக்குறள் .827 )

என்று சொல்லுகிறார். ( இதற்கு மு.வரதராசனார் உரை: “வில்லின் வணக்கம் வணக்கமாக இருந்தாலும் தீங்கு செய்தலைக் குறித்தமையால், பகைவரிடத்திலும் அவருடைய சொல்லின் வணக்கத்தை நன்மையாகக் கொள்ளக் கூடாது” ) இந்த திருக்குறளில் வணக்கம் என்ற சொல், ஒருவருக்கொருவர் முகமன் கூறிக் கொள்ளுதல் என்ற பொருளில் இல்லை. இங்கு வணங்குதல் என்ற வினையின் செயலை மட்டும் குறிக்கிறது.

‘தம்பிரான் வணக்கம்’ என்ற நூலின் தலைப்பே வணக்கம் என்று அமைந்துள்ளது. இந்த நூல் 20.10.1578 இல் தமிழில் வந்த முதல் அச்சு நூல் ( Printed book ); இந்திய மொழிகளிலும் இதுவே முதல் அச்சுநூல் ஆகும். போர்த்துகீசியமொழியில் எழுதப்பட்ட இந்த கிறிஸ்தவ சமய போதனை நூலை, தமிழில் மொழி பெயர்த்து, வெளியிட்டவர் அண்ட்ரிக் அடிகளார் (Hendrique Henriques) இந்த நூல், கிறிஸ்தவ இறைவணக்கம் என்ற பொருளில், வணக்கம் என்ற சொல்லை கையாண்டு இருக்கிறது எனலாம்.

சிந்தாமணி நிகண்டு என்பது அருஞ்சொற் பொருள் கூறும் அகராதி ஆகும். இதனை எழுதியவர் இலங்கை, யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ச.வைத்தியலிங்கம் பிள்ளை என்பார். இந்த நூல் 1876 இல் இயற்றப்பட்டது ஆகும். இந்த,சிந்தாமணி நிகண்டில் வணக்கம் என்ற சொல்லிற்கு நிகரான இரண்டு சொற்கள் காணப்படுகின்றன. 1.உபாசிதம் 2. சம்மானனம் ( தகவல்: விருபாவின் ‘சிந்தாமணி நிகண்டு மின்–அகராதி’ ) இவை இரண்டும் வடமொழி சொற்கள்.

பொதுவாகப் பார்க்கும்போது, ஒருவரைப் பார்த்து ஒருவர் வணக்கம் சொல்லுதல் தமிழர் வழக்கமன்று. வாழ்த்து தெரிவித்தல் மட்டுமே. ஆங்கிலேயர் ஆட்சி இங்கு வந்த பிறகு அவர்களுடைய மரியாதைகளில் ஒன்றான Good Morning, Good Evening, Good Night கூறும் வழக்கம் இங்கும் புகுந்தது. இதற்கு மாற்றாக ‘நமஸ்காரம்’ என்று சொல்ல ஆரம்பித்தனர்.

 எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற தனித்தமிழ் இயக்கம், மறைமலை அடிகள் தலைமையில் தமிழ்நாட்டில் தோன்றிய போது பல வடமொழிச் சொற்கள் தமிழ் வடிவம் பெற்றன. எனவே அப்போது எழுத்திலும், பேச்சிலும் வழக்கத்திலிருந்த பல சமஸ்கிருத சொற்கள் வழக்கொழிந்து போயின. நமஸ்காரம், ஜலம், சந்தோஷம், அபேட்சகர், பிரஜை போன்ற வடமொழி சொற்கள் முறையே வணக்கம், நீர், மகிழ்ச்சி, வேட்பாளர், குடிமகன் என்றாயின. பாராளுமன்றம் நாடாளுமன்றம் ஆயிற்று நமஸ்காரம் மறைந்து ‘வணக்கம்’ வழக்கில் வந்தது இப்படித்தான். (முன்பெல்லாம் தமிழ் சினிமாவில், படம் முடிந்தவுடன் ‘சுபம்’ என்று போடுவார்கள்; பிற்பாடுதான் ‘வணக்கம்’ என்று போட ஆரம்பித்தனர்.)

வணக்கம் சொல்லுவோம்:

எது எப்படி இருந்த போதிலும், ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற நன்னூலின் கருத்தினுக்கு ஏற்ப, வணக்கம் என்ற சொல், ஒருவருக்கொருவர் முகமன் கூறிக் கொள்ளும், அன்பைத் தெரிவித்துக் கொள்ளும், வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்ளும் ஒரு பொது தமிழ்ச் சொல்லாக, தமிழர்கள் மனதினில் ஆழமாக பதிந்து விட்டது. எனவே நாம் வணக்கம் சொல்லிக் கொள்வதில் தவறேதும் இல்லை. வணக்கம்!