Tuesday 30 June 2015

கட்டாய ஹெல்மெட் – எதிர்ப்பு ஏன்?



பைக்கிலோ, ஸ்கூட்டரிலோ அல்லது மொபெட்டிலோ செல்கிறோம்.
ஒரு சின்ன விபத்து ஏற்படுகிறது. தலையைத் தவிர உடலின் ஏதோ ஒரு இடத்தில் சிறுகாயம். அந்த சிறு காயத்தால் ஏற்படும் வலி (ரண வலி) சொல்ல முடியாதது. அதே காயம் தலையில் ஏற்பட்டால்? உயிருக்கும் ஆபத்துதான். சுருக்கமாகச் சொன்னால் தலைக்காயம் சீரியஸ்தான். இதற்காகவே இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களை கட்டாயமாக ஹெல்மெட் அணியச் சொல்லுகிறார்கள். எல்லோருக்கும் இது தெரியும். இருந்தும் ஏன் எதிர்க்கிறார்கள்?  

சில அசவுகரியங்கள்:

முதல் குறை இதன் வடிவமைப்பு. ஹெல்மெட் தேவைதான். ஆனாலும் இதனை தலையில் போட்டுக் கொண்டவுடன் பின்னால் வரும் வாகனங்கள் சரியாகத் தெரிவதில்லை; அடிக்கடி வியூ மிரரில் (VIEW MIRROR) பார்த்துக் கொண்டே ஓட்ட வேண்டி உள்ளது.

காதுகளில் நமக்கு நாமே பஞ்சை வைத்துக் கொண்டது போன்ற உணர்வு. நம்நாட்டில் பலபேர் சாலை விதிகளை சரிவர கடைபிடிப்பதில்லை. அவற்றுள் ஒன்று, இடது பக்கமாக வேகமாக வந்து நம்மை ஓவர்டேக் செய்வது. அந்த ஆசாமி வேகமாக வருவது, ஹெல்மெட் அணிந்த நமக்கு அவர் கடந்த பிறகுதான் தெரியும்.

ஹெல்மெட் அணிபவர் மூக்குக் கண்ணாடி அணிபவராக இருந்தால் அடையும் சிரமங்களை பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

சில இடங்களில் நாம் அடிக்கடி வண்டி நிறுத்தும் இடங்களில் ஹெல்மெட்டிற்கும் காசு கேட்கின்றனர். எப்போதோ ஒருதடவை என்றால் பரவாயில்லை. தினமும் அலுவல் காரணமாக பஸ் நிலையம், ரெயில் நிலையங்களில் வண்டியை விட்டுச் செல்பவர்கள், ஹெல்மெட்டுக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை மாதாமாதம் கொடுக்க வேண்டி வரும்.

எனது அனுபவம்:

நாங்கள் இருப்பது புறநகர் பகுதி. மளிகை சாமான் தவிர மற்ற பொருட்கள் வாங்க வேண்டுமென்றால் அருகிலுள்ள டவுனுக்குத்தான் செல்ல வேண்டும். வண்டியில் டவுனுக்கு   அடிக்கடி செல்ல வேண்டி இருப்பதால் (முன்பு சைக்கிள்) எல்லோருடைய வீட்டிலும்  பைக்கோ, ஸ்கூட்டரோ அல்லது மொபெட்டோ இருக்கும். ஒவ்வொரு முறையும் தயிர் வாங்க, பால் வாங்க என்று செல்லும்போது ஹெல்மெட்டை மறக்காமல்  போட்டுச் செல்ல வேண்டும். சிலசமயம் மறந்து விட்டால் போலீஸ்காரர் கண்ணில் படாமல் செல்ல வேண்டும் என்ற பதற்றம்தான் மிஞ்சும். (நான் டவுனுக்கு எனது மொபெட்டில் எப்போது சென்றாலும் ஹெல்மெட் போட்டுக் கொண்டுதான் செல்வேன். (இப்போது டவுனுக்கு வண்டியில் செல்வதில்லை)

என்னைப் போன்ற சீனியர் சிட்டிசன்கள் அடுத்த தெருவில் இருக்கும் டாக்டரைப் பார்க்க ஸ்கூட்டி, ஸ்கூட்டர், மொபெட் போன்ற வண்டிகளைத்தான் எடுத்துக் கொள்கிறார்கள்.  பெரும்பாலும் அதிக வேகம் இல்லை. (சைக்கிள் ஓட்டும் பையன் ஓவர்டேக் செய்து விடும் வேகம்தான்) சீனியர் சிட்டிசன்களுக்கு ஹெல்மெட் என்பது குருவித் தலையில் பனங்காய் என்பது போல. அதிலும் குறிப்பிட்ட வயதுவரைதான் வண்டி ஓட்ட முடியும். அப்புறம் தானாகவே நிறுத்தி விடுவார்கள். இதில் இருசக்கர வாகனத்தில் செல்லாத போது, ஆட்டோவுக்கு கொடுக்கும் காசைப் பற்றி சொல்ல வேண்டியதில்லை.


போலீஸும் சட்டமும்:

பொதுவாகவே எந்த ஒரு சட்டமும் பாரபட்சமின்றி கடை பிடிக்கப்பட்டால் அது மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும். (ஹெல்மெட் விஷயத்தில் சீக்கியர்களுக்கு விதிவிலக்கு தரப்பட்டுள்ளது ) மற்ற சட்டங்களைக் காட்டிலும் இந்த ஹெல்மெட் சட்டத்தின்மீது போலீசார் காட்டும் அக்கறை பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனால் நடைமுறையில், ஹெல்மெட் போடாமல் செல்லும் சிலரை போலீஸ் கண்டு கொள்வதே இல்லை. குறிப்பாக சாதாரண நடுத்தர மக்கள்தான் இந்த கட்டாய ஹெல்மெட் சட்டத்தால் பாதிக்கப் படுகிறார்கள். ஆட்டோ கட்டணம் பற்றி சொல்ல வேண்டியதில்லை. மீட்டர் போடாமல் ஓடும் ஆட்டோக்களை என்ன செய்ய முடியும். அவர்களுக்கென்று சங்கங்கள் உண்டு. ஆனால் இருசக்கர வானம் ஓட்டுபவர்களுக்கு என்று எந்த சங்கமும் கிடையாது.

கட்டாய ஹெல்மெட்: போலீசாரின் கெடுபிடிகள் தேவையற்றது.
http://tthamizhelango.blogspot.com/2012/02/blog-post_01.html  என்ற பதிவினில் நான் எழுதியது.

// நமது நாட்டில் தொட்டதெற்கெல்லாம் இரு சக்கர வண்டியைத் தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. பிள்ளைகளைப் பள்ளி கல்லூரி அழைத்துச் செல்ல, அலுவலகம் செல்ல , அவசர பொருட்கள் வாங்க என்று எல்லாவற்றிற்கும் தேவைப் படுகிறது. நமது நாட்டில் பஸ் கட்டணத்தையும் கும்பலையும் பார்த்தால் பயணம் செய்ய யோசிக்க வேண்டியுள்ளது. பஸ்ஸில் சென்று வருவதற்குள் ஒரு நாள் ஆகிவிடுகிறது. பஸ் வசதியும் அடிக்கடி கிடையாது. இரு சக்கர வண்டியை எடுத்தால் ஹெல்மெட் போட்டாயா என்று கேள்வி. ஹெல்மெட் போடுவது குறித்து இரு வேறு கருத்துக்கள் உள்ளன.

வெளியூர் பயணத்திற்கு செல்லும் முன் இரு சக்கர வண்டிகளை ஸ்டாண்டில் விடும்போது ஹெல்மெட்டைப் பத்திரப் படுத்துவதற்கு படாதபாடு பட வேண்டியுள்ளது. சில ஸ்டாண்டுகளில் ஹெல்மெட் வைக்க தனி கட்டணம் வேறு வசூல் செய்கிறார்கள். சில ஸ்டாண்டுகளில் ஹெல்மெட்டை வைக்க அனுமதிப்பதில்லை. வண்டியை வைத்துவிட்டு கையோடு எடுத்துச் செல்லும்படி சொல்கிறார்கள். பிச்சைப் பாத்திரம் போன்று எங்கு சென்றாலும் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.  ஹெல்மெட் அணிவதால் பின்பக்கம் வரும் வண்டிகளின் சத்தம் கேட்பதில்லை. பலருக்கு ஹெல்மெட் அணிவதால் தலை சுற்றல், முடி உதிர்தல், தலை அரிப்பு போன்ற பிரச்சினைகள். இரு சக்கர வண்டி ஓட்டும் பெண்கள் ஹெல்மெட் அணிவதால் உண்டாகும் சங்கடங்கள் சொல்லவே முடியாது. அவ்வளவு கஷ்டம். இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில் ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே விபத்தில் இருந்து தப்பிக்க முடியுமா? ஹெல்மெட் அணிந்தவர்களே விபத்தில் சிக்கி உயிர் இழப்பதை செய்திகளாக பார்க்கிறோம். இப்போது புதிதாக ஹெல்மெட் அணிந்த குற்றவாளிகள் வேறு  உருவாகியுள்ளனர். //
  
விபத்துக்கு காரணங்கள் பல இருக்கின்றன. குடித்து விட்டு ஓட்டுவது; எதிர்திசையில் வருவது; அதி வேகம் என்று பல காரணங்கள். (அதிவேக பைக்குகளின் உற்பத்திக்கும் விளம்பரத்திற்கும் தடை போட வேண்டும். செய்வீர்களா?) எனவே ஹெல்மெட் அணியாமல் சென்று விபத்து ஏற்பட்டால் நஷ்டஈடு இல்லை என்று சட்டம் கொண்டு வரலாம். (இதிலும் சில ஆசாமிகள் காசு பார்த்து விடுவார்கள், என்பது வேறு விஷயம்)  

இப்போது புதிதாக ஹெல்மெட் வாங்கி ரசீதை காட்ட வேண்டுமாம்; ஏற்கனவே வாங்கிய ஹெல்மெட்டை என்ன செய்வது? இதில் சட்டம் யாருடைய நலனுக்கு என்பது வெளிப்படை.  எனவே ஹெல்மெட்  அணிய வேண்டுமா இல்லையா என்பதை அவரவர் தேர்விற்கு விட்டு விடலாம். கட்டாயப்படுத்தி கண்ட இடங்களில் நிறுத்தி வசூல் வேட்டை செய்ய வேண்டியதில்லை.  


Saturday 20 June 2015

வலைச்சரம் – சில சர்ச்சைகள்


தமிழ் வலையுலகில் தனக்கென ஒரு பெரிய வாசகர் வட்டமும் ஆதரவும் பெற்ற (26.02.2007 இல் தொடக்கம்) வலைச்சரம், 22.மார்ச்.2015 இற்குப் பிறகு புதிதாக ஆசிரியர் பொறுப்பேற்க யாரும் வராதபடியினால் அப்படியே நின்றது. வலைச்சரம் மீதுள்ள ஆதங்கத்தினால் வலைச்சரம் ஒரு வேண்டுகோள்
http://tthamizhelango.blogspot.com/2015/04/blog-post_97.html என்ற ஒரு பதிவு ஒன்றினை எழுதி இருந்தேன்.

அதில் பல நண்பர்களும் தங்களது கருத்தினை வெளியிட்டு இருந்தார்கள். அவற்றுள் மூத்த வலைப்பதிவர் திரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்)  அவர்களின் கருத்துக்களைக் கண்ட சகோதரி ஆதி.வெங்கட் (கோவை டூ தில்லி) அவர்கள், “வை.கோ சார் - எல்லோருக்கும் வழிகாட்டியாக இருந்த தாங்களே உடனடியாக வலைச்சர ஆசிரியராக பொறுப்பேற்று தங்களின் உற்சாகமான எழுத்துக்களால் எல்லோரையும் மீண்டும் வலைச்சர பக்கம் இழுக்கலாம். இதை உடனடியாக பரிசீலனை செய்யலாமே சார்.. என் அன்பான வேண்டுகோள் இது...:18 April 2015 at 09:01.... என்று ஒரு அன்பான வேண்டுகோள் விடுத்தார். நானும் இதனை வழி மொழிந்தேன்; சகோதரி தேனம்மை லஷ்மணன் அவர்களும் வழிமொழிந்து கருத்துரை தந்தார்.

திரு V.G.K அவர்களும், வலைச்சர நிர்வாகிகளின் சம்மதத்தோடே எழுதத் தொடங்கினார். எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டு இருந்தது.

வலைச்சர விதிகள்:

வலைச்சரத்தில் எழுதும்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்று சிலவற்றை வலைச்சர நிர்வாகிகள் நிர்ணயித்துள்ளனர். அய்யா திரு V.G.K அவர்களின் முதல் மூன்றுநாள் பதிவுகளைத் தொடர்ந்து படித்ததில், அவர் தனது வலைத்தளத்தில் எழுதுவது போலவே எழுதுவது தெரிய வந்தது. இருந்த போதிலும், ஒரு மூத்த பதிவர் என்ற முறையில் அவருக்காக விதிவிலக்கு கொடுத்து இருக்கலாம் என்றே எண்ண வேண்டி இருந்தது. அதன்பின்னர் திரு V.G.K அவர்களின் வலைத்தளத்தில் (நினைவில் நிற்போர் - 14ம் திருநாள்
http://gopu1949.blogspot.in/2015/06/14.html ) தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் கருத்துரை, மறுமொழி என்று சூடாக விவாதம் நடந்து இருக்கிறது. இது நிறையபேருக்கு தெரிய வாய்ப்பில்லை. ஏனெனில் திரு V.G.K அவர்கள் தனது பதிவுகளை தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைப்பதில்லை. இதற்கிடையே முனைவர் பழனி.கந்தசாமி அவர்கள் தனது பாணியில் வலைச்சரம் பற்றிய ஒரு கண்டனம் என்ற தலைப்பினில் ஒரு பதிவை எழுதி இருந்தார். http://swamysmusings.blogspot.com/2015/06/blog-post_20.html  அதில் ( 15. ஜூன். 2015) நான் எழுதிய கருத்துரை இது.

// இந்த பதிவைப் பார்த்த பிறகுதான் ஒரு மிகப் பெரிய விவாதமே அய்யா திரு V.G.K (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களது வலைத்தளத்தில் நடைபெற்று இருப்பதைப் பார்த்தேன். திரு V.G.K அவர்கள் ஆர்வமாக வலைச்சரம் ஆசிரியர் பணி செய்ய தானாகவே முன்வந்தார். வலைச்சரத்தில் உள்ள சில விதிமுறைகள் அவருக்கு ஒத்துவரவில்லை என்றதும் விலகிவிட்டார்.

ஆனால் திரு. தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் எங்கே வலைச்சரத்தை மற்றவர்கள் தப்பாக நினைத்துக் கொள்வார்களோ என்ற ஆதங்கத்தில், வலைச்சர நிர்வாகிகளில் ஒருவர் என்ற முறையில் நிறையவே எழுதிவிட்டார் என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்வதுபோல பல பின்னூட்டங்களை திரு. தமிழ்வாசி பிரகாஷ் அவர்கள் எழுதி இருக்க வேண்டியதில்லை.

நினைவுக்கு வந்த ஒரு காட்சி திருவிளையாடல் படத்தில் (தருமி நகைச்சுவை) பாண்டியன் அரசவையில் புலவர் நக்கீரனும் இறையனாரும் சூடாக விவாதம் செய்யும் போது , மன்னன் செண்பகப் பாண்டியன் சொல்வதாக ஒரு வசனம்

புலவர்களே சாந்தமாக உரையாடுங்கள். புலமைக்கு சர்ச்சை தேவைதான். அது சண்டையாக மாறிவிடக் கூடாது.

எது எப்படி இருந்த போதிலும் , இனியும் வேண்டாம் விவாதம், நண்பர்களே.. //

இந்த கருத்தினை மேற்கோள் காட்டி, திரு V.G.K அவர்களது மேற்படி பதிவினில் பின்னூட்டமாக நான் எழுதியபோது அவர் தந்த மறுமொழி இது.


@தி.தமிழ் இளங்கோ
தங்களின் வருகைக்கும் புதியதொரு தகவலுக்கும் நன்றி.

//இனியும் வேண்டாம் விவாதம், நண்பர்களே.. //

OK Sir. Thanks for your kind advise. Accepted. – vgk ///


தமிழ்வாசியின் மின்னஞ்சல்:

இதற்கிடையே தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் மின்னஞ்சல் ஒன்று (15.06.2015) எனக்கு வந்திருந்தது. (இதன் முழு விவரம் இங்கு வேண்டியதில்லை) அதற்கு நான் அன்றே அனுப்பிய பதில் மின்னஞ்சல் இது.

// அன்புள்ள சகோதரர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு வணக்கம். நலம். தங்கள் நலனறிய நாட்டம்.

தங்களது  மின்னஞ்சலை மதியம்தான் பார்த்தேன். வலைப்பதிவு நண்பர்களிடையே இப்படி தேவையற்ற சர்ச்சை ஏற்பட்டுவிட்டதே என்ற வருத்தம்தான் மேலிட்டது.

// எனக்காக இல்லாவிட்டாலும் நீங்கள் பற்று வைத்துள்ள வலைச்சரத்திற்காக ஆதரவு தெரிவித்தோ, எங்களுக்காகவோ ஒரு வரி கூட நீங்கள் எழுதவில்லையே? ஏன் ஐயா? //

என்று கேட்டு இருந்தீர்கள்.

திரு V.G.K அவர்களது வலைத்தளத்தில் (14 ஆம் நாள்) அவரது வரிகளை வைத்தே எனது பின்னூட்டம் எழுதி இருக்கிறேன். இதில் வலைச்சர விதிகள் அவருக்கு ஒத்துவரவில்லை என்பதையும், தன் போக்கிலேயே அவர் எழுத ஆசைப்பட்டார் என்பதையும் அவரே சொல்லி இருப்பதையும் காணலாம்.

இதே பதிவினில் G.M.B  அய்யா, சகோதரி தேன்மதுரத்தமிழ் கிரேஸ் ஆகியோர் எழுதிய பின்னூட்டங்களையும் காண்க. மேலும் வலைச்சரம் 11.06.2015 பதிவினில் சூரி என்கிற சுப்புத் தாத்தா எழுதிய பின்னூட்டத்தையும் பார்க்க. 

மேலும் இது குறித்து நானே ஒரு பதிவை எழுதலாம் என்று எண்ணி இருந்த நேரத்தில், முனைவர் பழனி. கந்தசாமி அவர்கள் இதுகுறித்து பதிவு ஒன்றை எழுதியிருந்தார். வீண் சர்ச்சையை மேலும் வளர்க்க வேண்டாம் என்பதால் நான் அவருடைய பதிவினில் எனது கருத்தை மட்டும் எழுதியுள்ளேன்.

மூத்த வலைப்பதிவர் திரு V.G.K மற்றும் வலைச்சரம் இடையே எழுந்த கருத்து வேறுபாட்டில் என்ன செய்வது என்ற திகைப்பின் காரணமாக பல பதிவர்கள் அமைதியாக இருந்துவிட்டனர் என்பதே உண்மை.

தமிழ்மணம் ஒரு நதியைப் போல; வலைச்சரம் அதன் கிளைநதியைப் போல. நதிப் பிரவாகம் என்பது எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். மனம் தளர வேண்டாம்.

அன்புடன் தி.தமிழ் இளங்கோ, 15.06.2015 //

இதற்கு அவர் (தமிழ்வாசி பிரகாஷ்) அன்றே அனுப்பிய பதில் மின்னஞ்சல் இது.

// வணக்கம் ஐயா...
   நலமே...
   தங்களது பதில் மிகவும் திருப்தியளிக்கிறது. நன்றி //

சர்ச்சைகள் தேவையில்லை:


முனைவர் பழனி.கந்தசாமி அவர்களின் நேற்றைய (19.06.15) பதிவை (http://swamysmusings.blogspot.com/2015/06/blog-post_5.html பதிவுலகில் அநியாயங்கள் நடக்கின்றனவா? ) பார்க்கும்போது இன்னும் தேவையற்ற சர்ச்சைகள் தொடர்வதாகவே தெரிகிறது. யார் தொடர்கிறார் என்ற விவாதத்திற்குள் நான் நுழைய விரும்பவில்லை. ஏற்கனவே எனது கருத்தினை சொல்லி விட்டேன். நாளை ஒருவருக்கொருவர் சந்திக்கும் போது அவரவர் முகத்தை எங்கு வைத்துக் கொள்வோம் என்பதனை யோசிக்க வேண்டும்.

இன்னும் சில மாதங்களில் புதுக்கோட்டையில் வலைப்பதிவர்கள் மாநாடு தொடங்க இருக்கிறது. சகோதரி தேனம்மை லஷ்மணன் அவர்கள் தனது வலைத்தளத்தில் ( http://honeylaksh.blogspot.in ) சொல்வதைப் போல

                            வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
                          என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.! 
                                        - தேனம்மை லஷ்மணன்



Monday 8 June 2015

நினைவுகள் - சில பழைய இந்தி பட பாடல்கள்




எப்போதும் காலையில் எழுந்தவுடன் காபி சாப்பிடும் வரை கம்ப்யூட்டரில் இண்டர்நெட்டில் மேய்வது வழக்கம். சென்ற வாரம் ஒருதினம் ( ஜூன் 1, 2015) வழக்கம் போல எனது முதல் மேய்ச்சல் நிலமான கூகிள் (GOOGLE) சென்றேன். ‘Nargis’ 86th birth day’ – என்று மின்னியது. உடனே எனக்கு நர்கீஸ் நடித்த அந்நாளைய இந்தி பாடல்களோடு மற்றைய சில இந்தி பாடல்களும் நினைவுக்கு வந்தன. அன்றைக்கே இந்த பதிவை எழுதியிருக்க வேண்டும். இயலவில்லை.

தமிழ்நாட்டில் இந்தி பட பாடல்கள்

நான் பள்ளி மாணவனாக இருந்த நாட்களில் பிரபலமான பல இந்தி பல பாடல்களை வானொலியில் ஒலி பரப்புவார்கள். மேலும் அப்போதெல்லாம் (அறுபதுகளில்) பெரும்பாலான வீடுகளில் ரேடியோப் பெட்டி என்பதெல்லாம் கிடையாது. ரேடியோ என்பது வசதி படைத்தவர்கள் சமாச்சாரம். ஆனாலும் பெரும்பாலும்  ஓட்டல்களில் ரேடியோ கட்டாயம் இருக்கும். அவ்வாறு ஒலி பரப்பி கேட்ட சில இந்தி பாடல்கள் மனதில் நின்று அசைபோட வைத்து விட்டன.


அப்புறம் கொஞ்சம் பெரியவன் ஆனதும்தான் இந்தி திரைப்படப் பாடல்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. அப்போது இந்தி எதிர்ப்பு உச்சத்தில் இருந்த நேரம். இந்தி எதிர்ப்பு என்பது மாணவர்கள் போராட்டமாக மாறிய சூழ்நிலையில், இந்தி படங்களை தமிழ்நாட்டில் திரையிடவே பயந்தார்கள். இருந்தாலும்,  சில இந்தி பாடல்களின் மெட்டுக்கள் அப்படியே காப்பி செய்யப்பட்டு தமிழ் திரைப்பட பாடல்களிலும் வந்தன. ஆனாலும் முஸ்லீம் நண்பர்களது திருமணம் போன்ற விசேச நிகழ்ச்சிகளில் அவர்கள் வீடுகளில் தமிழ் பாடல்களோடு ஒன்றிரண்டு இந்தி படப் பாடல்களையும் ரேடியோசெட் ஆள் வைப்பார். (அப்போதெல்லாம் திருமணம் என்பது வீடுகளில்தான்; அக்கம் பக்கத்து வீடுகளில் விருந்து நடைபெறும். இப்போது திருமண மண்டபங்கள் நிறைய வந்து விட்டன) அப்போது அடிக்கடி வைக்கும் பாடல்களை கேட்கும் போது யார் நடித்த படம் என்று கேட்பது வழக்கம். பெரும்பாலும் ராஜ்கபூர் நர்கீஸ் நடித்தது என்றுதான் சொல்வார்கள். நம்ப ஊர் எம்.ஜி.ஆர்- சரோஜாதேவி மற்றும் சிவாஜி பத்மினி திரையுலக ஜோடிகள் போல அந்நாளைய இந்தி திரையுலக ஜோடி ராஜ்கபூர் நர்கீஸ்.

பின்னர் தி.மு.க ஆட்சி வந்ததற்குப் பின் இந்தி எதிர்ப்பு என்பது கொள்கை அளவில் மாறிப் போன பின்பு, தமிழ்நாட்டில் தாராளமாக இந்தி படங்கள் திரையிடப்பட்டன. திருச்சியில் கெயிட்டி, பிளாஸா தியேட்டர்களில் இந்திப் படங்கள் நல்ல வசூலை குவித்தன. அப்புறம் மற்ற தியேட்டர்களிலும் திரையிட்டார்கள். நெஸ்காபி அறிமுகம் ஆன சமயம். அங்கங்கே கல்லூரி மாணவர்களையும், வேலையில்லாத இளைஞர்கள் ஒருங்கிணைக்கும் இடங்களாக நெஸ்கபே ஸ்டால்கள் விளங்கின. அப்போது இந்த காபி, டீக்கடைகளில் மட்டுமல்லாது திருவிழா, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளிலும் இளைஞர்களது விருப்பப் பாடல்களாக  இந்தி படப் பாடல்களை ஒலி பரப்பினார்கள். இப்போது காலம் மாறி விட்டது. இந்தியை தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக் கொள்கிறோம்.

இந்தி பாடல்கள் சில:

நர்கீஸ் - ராஜ்கபூர் நடித்துக் கொண்டிருந்த ஆரம்ப நாட்களில் நான் பிறக்கவே இல்லை. ஆனாலும் பின்னாளில் அவர் நடித்த இந்தி படப் பாடல்களை கேட்கும் சந்தர்ப்பங்கள் அமைந்தன. அப்புறம் டீவி, கம்ப்யூட்டர், இண்டர்நெட் என்று வந்த பிறகு அவர் நடித்த பழைய இந்தி பட பாடல்களை அடிக்கடி கண்டு கேட்டு ரசிக்க முடிகின்றது.


ஆஹ் (Aah ) - என்று ஒரு இந்தி திரைப்படம் 1953இல் வெளியானது. ராஜ்கபூர் - நர்கீஸ் நடித்தது. இதில் வரும் jaane naa nazar pehchane jigar –  என்ற பாடலையும் மறக்க முடியுமா என்ன? இந்த ஆஹ் (Aah )  படம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு (பாடல்களின் மெட்டும் அப்படியே தமிழில்) அவன் என்ற பெயரில் வெளியானது (1953) மேலே சொன்ன இந்தி பாடலின் மெட்டில் கண் காணாததும் மனம் கண்டு விடும்‘ – என்ற பாடலை பாடலாசிரியர் கம்பதாசன் எழுதினார். ராஜா ஜிக்கி  பாடினார்கள். ராஜ்கபூர் நர்கீஸ் தமிழில் பாடும், இந்த பாடலைக் கண்டு கேட்டு மகிழ்ந்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை கிளிக் செய்யுங்கள்.



சோரி சோரி (Chori Chori) என்ற படத்தில் (1956 இல் வெளிவந்தது) வரும் aa jaa sanam madnoor என்ற பாடல் மறக்க முடியாத ஒன்று. நர்கீஸ் ராஜ்கபூர் நடித்த இந்த பாடலைக் கண்டு கேட்டு மகிழ்ந்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை கிளிக் செய்யுங்கள்.


இந்த பாடலின் மெட்டில் முஸ்லிம் சமய பாடல் ஒன்று உள்ளது. பாடல் நினைவில் இல்லை.


அனாரி (Anari) என்ற 1959 இல் வெளிவந்த படத்தில் வரும்  Sab Kuchh Seekha Ham Ne என்ற பாடலையும் மறக்க முடியாது. 

sury Siva said...
அனாரி படத்தில் ராஜ் கபூர் உடன் நடித்திருப்பது நூடான்.
நர்கீஸ் அல்ல.
சுப்பு தாத்தா.


இந்த பாடலைக் கண்டு கேட்டு மகிழ்ந்திட கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை கிளிக் செய்யுங்கள்.


இந்த பாடலின் மெட்டுக்கள் ஜெமினி கணேசன் நடித்த பாசமும் நேசமும் என்ற படத்தில் எல்லாம் நாடகமேடை என்ற பாடலில் அப்படியே இருப்பதைக் கேட்கலாம். 
(இந்த தமிழ் பாடல் பற்றி ஒரு பதிவு ஒன்றும் எழுதியுள்ளேன். தலைப்பு: எல்லாம் நாடக மேடை பாடலாசிரியர் யார்?  இணைப்பு: http://tthamizhelango.blogspot.com/2014/10/blog-post.html)

                                  (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)


Thursday 4 June 2015

விளம்பரமே இல்லாத விளம்பரப் பதிவுகள்



பல நண்பர்கள் ஏற்கனவே இதுபற்றி எழுதிய விஷயம்தான். இருந்தாலும் அந்த பதிவுகளில் அப்படி என்னதான் இருக்கிறது என்று போய் பார்த்தேன். எனக்கு தட்டுப்பட்ட ஒன்றிரண்டு விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்ற ஆசைதான். உதாரணத்திற்கு தமிழ்மணத்தில் வெளியாகும் பொக்கிஷம் மற்றும் வார்த்தை விருந்து போன்றவை. இன்னும் சில வலைத்தளங்களையும் சொல்லலாம்.

இந்த மாதிரியான பதிவுகளை என்ன காரணத்திற்காக யார் எழுதிறார்கள்? எதற்காக எழுதிறார்கள்? என்றே தெரியவில்லை. எழுதுபவரின் சுயவிவரம் (PROFILE) எங்குமே இருக்காது. சிலசமயம் பதிவின் வெளியே தமிழ்மணத்தின் முகப்பில் kamali , என்றும் உள்ளே Posted by hari என்றும் இருக்கும். சில பதிவுகளில் எழுதுபவர் பெயர் வெவ்வேறாக இருந்தாலும் போய்ச் சேருவது என்பது ஒரே பதிவிற்குத்தான். தமிழ்மணத்தில் அதிகம் ஹிட்ஸ் வாங்குவதற்காக அல்லது முதலிடம் வருவதற்காக அப்படிச் செய்கிறார்களா என்றால் அப்படி செய்வதாகவும் தெரியவில்லை.

பெரும்பாலும் பொதுநலம் சார்ந்த அல்லது உடல்நலக் குறிப்புகளையே பதிவுகளாகப் போடுகிறார்கள்

விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்றாமல் புகைப்படம் எடுத்த பொது மக்கள்

தொப்பையை குறைக்க 14 எளிய வழிகள் - To Reduce Belly fat”

"ஏ.சி. வாங்க செல்கிறிர்களா' இதை படித்து விட்டு செல்லவும் ?

பென்டிரைவ் விலை இருமடங்காக வாய்ப்பு!

நீரிழிவை கட்டுப்படுத்தும் கொய்யா இலையை பற்றி தெரிந்து கொள்வோம்

கோயில்களில் மணி அடிப்ப‍தும் சங்கு ஊதுவதும் ஏன்? எதற்கு?”
“KFC” சிக்கனின் ரகசியத்தை அம்பலப்படுத்திய “BBC” ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்!

“1915களில் திருச்சி பெரிய கடை வீதியின் அரிய புகைப்படம்..

சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்!

ஒரு பதிவினில் 60 செகண்டுகளில் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டவர்களை காப்பாற்றும் வீட்டு மருந்து....!! என்று ஒரு செய்தி. போய் பார்த்தால் அப்படி சொல்லும் டாக்டர் யார் என்பது பற்றிய குறிப்பே இல்லை..

சிலசமயம் கவர்ச்சியாக சினிமா செய்திகளைக் கொண்டு இருக்கும். சில நண்பர்கள் தினத்தந்தி, தினமலர், தினமணி, தினகரன் என்று தமிழ் நாளிதழ்களின் வார மலர்களில் வந்தவற்றை அப்படியே COPY & PASTE முறையில் தங்கள் பதிவுகளில் பகிர்ந்து இருப்பார்கள். அவற்றை இந்த விளம்பர பதிவுகள் மறுபடியும் COPY & PASTE முறையில் வெளியிடுவதைக் காண முடிகிறது.

“ அருகிலுள்ள விளம்பரத்தை ஒரு க்ளிக்காவது அழுத்துங்கள் நண்பர்களே.. : - என்று கெஞ்சலாக கேட்டு இருப்பார்கள். சரி இதனால் என்னதான் ஆகப் போகிறது என்று, அவர்கள் சொல்லும் விளம்பரம் எங்கு இருக்கிறது என்று தேடிப் பார்த்தால் எங்குமே இருக்காது. இதுவாவது பரவாயில்லை, ஒரு பதிவில் சரியான ஒரு விளம்பரத்தைக் கண்டுபிடித்துக்ளிக் செய்தால் மட்டுமே விளம்பரத்தை நீக்க முடியும். என்று கட்டம் கட்டி சொல்லி இருக்கிறார்கள்.கை வலிக்கும் வரை அந்த கட்டத்தை க்ளிக் செய்து கொண்டே இருக்க வேண்டியதுதான். இப்படி இல்லாத விளம்பரத்தைச் சொல்லி வரும் பதிவுகளை என்னவென்று சொல்வது.

இது மாதிரியான பதிவுகளை பார்த்தவுடனேயே தெரிந்து கொள்ளலாம். அப்படியே புறக்கணித்து விடலாம். இல்லை டைம் பாஸிங்கிற்காக என்னதான் சொல்ல வருகிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால் போய்ப் பார்க்கலாம். பாதகம் இல்லை. ஆனாலும் ரகசிய கேமரா போன்று, இதிலும் ஏதேனும் உள்குத்து விஷயங்கள் ஏதும் இவற்றில் இருக்கின்றனவா என்று தெரியவில்லை. தொழில்நுட்பம் தெரிந்த நண்பர்கள்தான் சொல்ல வேண்டும். எவை எப்படி இருப்பினும் அவை நமது வலைத்தளத்தை பாதிக்காமல் இருந்தால் சரிதான்.