Showing posts with label சிலந்தி லில்லி. Show all posts
Showing posts with label சிலந்தி லில்லி. Show all posts

Sunday, 29 May 2016

சிலந்தி லில்லி ( Spider Lily )



சில தினங்களுக்கு முன்னர் திரு G.M.B அய்யா அவர்கள் தனது வலைத்தளத்தில் மலரே மலரே வாசமில்லா மலரே என்ற தலைப்பினில் பதிவு http://gmbat1649.blogspot.in/2016/05/blog-post_14.html ஒன்றை வெளியிட்டு இருந்தார்கள். அதில் அவரது வீட்டுத் தோட்டத்தில் பூத்த அதிசய மலர் ஒன்றினைப் பற்றி படங்களுடன் வெளியிட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து நானும் எங்கள் வீட்டுத் தோட்டதில் மலர்ந்த ஒரு பூச்செடியைப் பற்றி இங்கு சொல்லப் போகிறேன். 

லில்லி:

நாங்கள் புறநகர் பகுதியில் புதுவீடு கட்டி வந்த சமயத்தில் (1998) வீட்டு முகப்பில், காம்பவுண்டு சுவருக்குள்  நிறைய பூச்செடிகள் வைத்து இருந்தோம். என்னதான் தண்ணீர் ஊற்றி கவனமாக பார்த்துக் கொண்டாலும், எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான். தண்ணீரின் ஈரம் பூமியில் காய்ந்து, சில சின்ன செடிகள் பட்டு போய் விட்டன. இப்படி பட்டுப்போன செடிகளில் வெள்ளை நிற லில்லி செடியும் ஒன்று..இதனை விற்ற நர்சரியில் ஆப்ரிக்கன் லில்லி என்று சொல்லி கொடுத்தார். இதில் நீலம் அல்லது வெள்ளை நிறப் பூக்கள் பூப்பவை என்று இருவகை உண்டு. எங்கள் வீட்டில் இருந்தது வெள்ளை லில்லி. 

சில வருடங்கள் கழித்து, ஒரு மழைக்காலத்தில் (2014) மறுபடியும் அந்த செடி துளிர்த்தபோது, ஒருவித புழுக்கள் செடியைக் கடித்து குதறிக் கொண்டு இருந்தன. உடனே செடியைக் காப்பாற்ற வேண்டி, வீட்டில் இருந்த கொசுமருந்தை (Sprayer) செடிகள் மீதும், புழுக்கள் மீதும் தெளித்தேன். புழுக்கள் செத்து விட்டன; கூடவே அடுத்தநாள் செடியும் பாதி பட்டு போய், அப்படியே முழுதும் அழிந்து விட்டது. (நான் நர்சரி கார்டனில் போய் ஆலோசனை கேட்டு இருக்க வேண்டும்) (படங்கள் கீழே)2014







மழைக்காலத்தில்:

அப்புறம் இந்த செடி சில மாதங்களாக கண்ணில் தென்படவில்லை. சென்ற ஆண்டு (2015) மழைக்காலத்தில் மீண்டும் துளிர்விட்டு சில பூக்களை பூத்தது. (படங்கள் கீழே)








 இந்த ஆண்டு (2016) கடும் வெயில் காரணமாக காய்ந்து போயிருந்த இந்த செடி, அண்மையில் பெய்த கோடைமழையால் துளிர்த்து விட்டது முதலில் ஒரு பூ மட்டும் பூத்து இருந்தது. அப்புறம் ஐந்தாறு பூக்கள்.. பூப்பதும் உதிருவதுமாக இருக்கின்றன. எனவே தரையில் இருக்கும் இந்த செடியைக் காப்பாற்ற. மண் நிரப்பிய  சிமெண்டு பூத்தொட்டிக்குள் மாற்றி விடலாம் என்று இருக்கிறேன். (படங்கள் கீழே)











செடி பற்றிய விவரங்கள்:

வழக்கம் போல கூகிளில் தேடியபோது இதே செடியைப் போன்ற இலைகள் கொண்ட செடியின் விவரம் கிடைத்தது. இதன் தாயகம் தென் ஆப்பிரிக்கா. இதன் தாவரப் பெயர் agapanthus-africanus என்று தெரிய வந்தது. www.boethingtreeland.com/agapanthus-africanus-peter-pan-white.html ) ஆனால் இந்த இணையதளத்தில் உள்ள பூக்களின் படங்களுக்கும், எங்கள் வீட்டில் உள்ள செடியில் உள்ள பூக்களின் படங்களுக்கும் வித்தியாசம் இருப்பது போல் தோன்றுகிறது. எங்கள் வீட்டில் உள்ள செடி முழுமையாக, உயரமாக வளர்ந்து பூத்தால்தான் இரண்டும் ஒன்றா அல்லது வெவ்வேறு வகையா என்பதும், இது எந்த வகை ஆப்பிரிக்கன் செடி என்ற விவரமும் தெரிய வரும். விவரம் அறிந்தவர்கள் சொல்லலாம்.

பிற்சேர்க்கை – ( 01.06.2016 – 22.36) ஸ்பைடர் லில்லி

மரியாதைக்குரிய வலைப்பதிவர்கள் திரு V.N.S (வே.நடனசபாபதி) சகோதரி கீதமஞ்சரி மற்றும் தளிர் சுரேஷ்  மூவரும் கீழே பின்னூட்டங்களில் தமது கருத்துக்களை சொல்லியுள்ளார். மூவருக்கும் நன்றி.
இவற்றுள் சகோதரி கீதமஞ்சரி அவர்கள் கொடுத்த சுட்டியில் உள்ள     ( www.flowersofindia.net/catalog/slides/Long%20Flowered%20Spider%20Lily.html ) Long Flowered Spider Lily என்ற படம் பொருத்தமானதாக உள்ளது. அவருக்கு மீண்டும் நன்றி. எனவே மேலே பதிவிலும் சில மாற்றங்கள் செய்து எழுதியுள்ளேன். நண்பர்கள் மன்னிக்கவும். அதில் உள்ள படங்கள் கீழே.



படங்கள் – மேலே நன்றி: flowersofindia.net

இன்று (01.06.16) எனது அம்மா வழி உறவினர் ஒருவரது வீட்டு ’மாமன் நலுங்கு’ நிகழ்ச்சிக்காக, அம்மா கிராமத்திற்கு சென்று இருந்தேன். காட்டில் தேடிய மூலிகை காலில் பட்ட கதையாக,  அவரது வீட்டிலும் இதே செடிகள் இருந்தன. அவர் தோட்டக்கலைத் துறையில் பணிபுரிபவர். அவரும் இதனை SPIDER LILY என்று உறுதிப்படுத்தியதோடு Ornamental Plants வகையைச் சேர்ந்த செடி என்றும் குறிப்பிட்டார். இன்று அவரது வீட்டில் எனது செல்போனில் எடுத்த படம் ஒன்று கீழே.