நான் வங்கியில்
பணியில் இருந்தபோது ஒரு நகரக் கிளையிலிருந்து நகரின் இன்னொரு பக்கம் இருந்த
தென்னூர் கிளைக்கு மாற்றல் ஆனேன். அது திருச்சி தென்னூர் சாஸ்திரி சாலையில்
இருந்தது. (அருகில் தில்லைநகர் )நான்
அந்த கிளைக்கு மாறுதல் ஆவதற்கு முன்னரே அந்த சாலையில் அடிக்கடி வண்டியில் சென்று
இருக்கிறேன். அப்போது அவ்வளவு போக்குவரத்து இல்லை. அவ்வாறு செல்லும் போதெல்லாம்
“சாஸ்திரி சாலை” என்பது, மறைந்த பிரதமர் லால்பகதூர்
சாஸ்திரி பெயரில் இருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.
சாஸ்திரி சாலை:
தென்னூர் கிளையில்
சேர்ந்த பிறகுதான் அங்கிருந்த வியாபார நிறுவனங்களிலும், சில கடைகளிலும் இருந்த
பெயர்ப் பலகைகளில் சாஸ்திரி சாலை அல்லது S.S.சாலை என்று இருப்பதைக் கண்டேன். அதாவது சுவாமிநாத
சாஸ்திரி சாலை என்ற பெயரை அவ்வாறு சுருக்கி எழுதி உள்ளனர். சுவாமிநாத
சாஸ்திரி என்பவர் யார் என்று என்னோடு
பணிபுரிந்த நண்பர்களிடம் கேட்டதில் அவர்களுக்கும் தெரியவில்லை. தென்னூரும் அருகில் உள்ள தில்லைநகரும்
டாக்டர்களும் கிளினிக்குகளும் நிரம்பிய பகுதியாகும். எனவே யாராவது ஒரு டாக்டர்
பெயராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.
அண்மையில் மூத்த
பத்திரிகையாளர் கே.சி. லட்சுமி நாராயணன் அவர்கள் எழுதிய ’தலித்துகளும் பிராமணர்களும்’ என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. அதில் சுவாமிநாத
சாஸ்திரி அவர்களைப் பற்றிய குறிப்புகளைப் படிக்க முடிந்தது. அவர் ஒரு டாக்டர்.
மேலும் இண்டர்நெட்டில் தேடியதிலும் சில குறிப்புகள் கிடைத்தன. அவற்றை இங்கே
பகிர்ந்து கொள்கிறேன்.
சிறந்த காந்தியவாதி (ஹரிஜன சேவா சங்கம் )
மகாத்மா காந்தி
அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சேவை செய்வதற்காக ” ஹரிஜன சேவா சங்கம் “ என்ற அமைப்பை தொடங்கினார். அதில்
காங்கிரசார் பலர் இணைந்து கொண்டு சேவை செய்தனர். அவர்களுள் ஒருவர் திருச்சி
டாக்டர் டி.வி.சுவாமிநாத சாஸ்திரி அவர்கள். இவர் திருச்சி ஜில்லா காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், திருச்சி ஜில்லா ஹரிஜன சேவா சங்கத்தின் தலைவராகவும் இருந்தவர்.
இவருடைய சொந்த ஊர்
கும்பகோணம். இவருடைய தந்தையின் பெயர் வாசுதேவ சாஸ்திரி. தாயார் இலட்சுமி அம்மாள். இவர்
சென்னையில் மருத்துவக் கல்லூரியில் படித்தபோதே காந்திய கொள்கைகளில் ஈடுபாடு
கொண்டவராய் இருந்தார். திருச்சியில் இருந்தபோது ஹரிஜன சேவா சங்கத்தில் தன்னை
இணைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக தீண்டாமையை எதிர்த்து பிரச்சாரம்
செய்தார். சொன்னதோடு இல்லாமல் திருச்சி தென்னூரில் மல்லிகைபுரம், சங்கிலிச்சேரி
ஆகிய இரு தாழ்த்தப்பட்ட குடியிருப்புகளுக்கு மத்தியில் தனது மருத்துவமனையைக்
கட்டினார். இவரை சிலர் சம்பாதிக்கத் தெரியாதவர் என்றும் பைத்தியம் என்றும் கிண்டல் செய்தனர். இவர் பிராமணர் என்பதால், இவருடைய உறவினர்கள் இவரை சாதிவிலக்கும்
செய்தனர். ஆனால் டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி அவர்கள் எதனைப் பற்றியும் கவலைப்படாது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு
இலவசமாக மருத்துவ உதவிகள் செய்தார்.
மேலும் சாதி
ஒழிப்பு, பெண்ணுரிமை, விதவைகள் மறுமணம் போன்ற சமூக சீர்திருத்தங்களிலும் தன்னை
ஈடுபடுத்திக் கொண்டார். 1921 இல் நடந்த ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஒரு ஆண்டு ஜெயிலில்
அடைக்கப்பட்டார். 1930 இல் நடைபெற்ற உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்டதால் இவரது மனைவி உட்பட குடும்பமே
ஜெயிலுக்கு போனது. ஆஸ்பத்திரியில்
தன்னிடம் வரும் நோயாளிகளை பார்க்கும்போதும் கூட ராட்டையில் நூல் நூற்றுக்
கொண்டிருந்தார். 1934 இல் இவர் தொடங்கிய பத்திரிகையின் பெயர் “களிராட்டை” என்பதாகும்.
தொண்டின்
நினைவாக:
டாக்டர் சுவாமிநாத
சாஸ்திரி அவர்கள் செய்த ஹரிஜன சேவையைப் பாராட்டி, டாக்டர் ராஜேந்திர பிரசாத்
அவர்கள் தங்கத்தினால் ஆன நூல் நூற்கும் தக்ளியையும், தங்க பதக்கத்தையும் கொடுத்து
கௌரவப்படுத்தினார்.
1961 இல்
திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி மாநாட்டு பந்தலுக்கு டாக்டர் சுவாமிநாத
சாஸ்திரியின்
பெயர் காமராஜரின் உத்தரவுப்படி வைக்கப்பட்டது.
சாஸ்திரிக்கு பெரியார், காமராஜர், சத்தியமூர்த்தி, டாக்டர் டி.எஸ்.எஸ். ராஜன்,
கல்கி, எஸ்.எஸ்.வாசன், சதாசிவம் ஆகியோருடன் நல்ல தொடர்பு இருந்தது.
1887இல் பிறந்த டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி அவர்கள் சிறைவாசத்தின் போது
ஏற்பட்ட காசநோயின் காரணமாக 1946 ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 19 ஆம் நாள் மரணம்
அடைந்தார் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் விடுதலை பத்திரிகையில் அவரது சேவையைப்
பாராட்டி ” டாக்டர் சுவாமிநாத சாஸ்திரியின் வாழ்க்கை, மக்கள்
அனைவருக்கும் ஓர் எடுத்துக்காட்டாகத் திகழும் “ என்று குறிப்பிட்டு, ஒரு தலையங்கம்
எழுதினார்.
சாஸ்திரி அவர்களின் தொண்டினை நினைவு கூறும் வண்ணம், அவர் வசித்த தென்னூர்
பகுதியில் உள்ள ஒரு நீண்ட சாலைக்கு (திருச்சி கோகினூர் தியேட்டரிலிருந்து தென்னூர்
மேம்பாலம் வரை (சிப்பி தியேட்டர் இருக்கும் சாலை) சுவாமிநாத சாஸ்திரி சாலை என்று பெயர் சூட்டப்பட்டது. திருச்சிராப்பள்ளியை
திருச்சி என்றும், புதுக்கோட்டையைப் புதுகை என்றும் ஊர்ப் பெயர் முதலானவற்றை
சுருக்குவது வழக்கம். அதே போல டாக்டர் சுவாமிநாத சாஸ்திரி சாலையின் பெயரை மக்கள் குறிப்பிடும் போது சாஸ்திரி சாலை என்றும்
கடைக்காரர்கள் S.S.சாலை என்றும்
சுருக்கிவிட்டார்கள்.
( இந்த பதிவினில் டாக்டர்
டி.வி.சுவாமிநாத சாஸ்திரி அவர்களது படத்தினை வெளியிட ஆசைப்பட்டேன். எவ்வளவோ முயற்சி
செய்தும் கிடைக்காதது எனக்கு பெரிய குறைதான்.)
நன்றி! – இந்த கட்டுரையை எழுத துணை நின்றவை:
தலித்துகளும் பிராமணர்களும் – நூலாசிரியர் கே.சி. லட்சுமி நாராயணன்
தமிழ் நாட்டுச் சுதந்திரப் போராட்ட தியாகிகள் – கட்டுரை
ஆசிரியர் வெ.கோபாலன்
Chitti recollects... – An Article