Showing posts with label மூட்டைப் பூச்சி. Show all posts
Showing posts with label மூட்டைப் பூச்சி. Show all posts

Tuesday, 3 June 2014

மூட்டைப் பூச்சி தொல்லை



சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் கடையில் “ கில் பக் “ இருக்கா என்று கேட்டால் உடனே தந்துவிட மாட்டார்கள். கேட்டவர் பெரியவர் என்றால் என்ன ஏது எதற்கு என்று விசாரித்துவிட்டு தருவார்கள். சின்ன பையன் என்றால் வீட்டில் பெரியவர்களை வரச் சொல்லுவார்கள். அப்போது மூட்டைப் பூச்சி கடியும், மூட்டைப் பூச்சியைக் கொல்லும் கில்பக் (KILL BUG) பூச்சி மருந்தும் அவ்வளவு பிரபலம். வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர்கள் நிறையபேர் அப்போது நாடியதும் இந்த பூச்சி கொல்லி மருந்தைத்தான். அதனால் இந்த மருந்தை, கடைகளில் கேட்டால் உடனே தந்துவிட மாட்டார்கள். இந்த மருந்து இப்போது இல்லை.

மூட்டைப் பூச்சி:

மூட்டைப் பூச்சி என்பது சிறிய வகை பூச்சி. உடம்பு தட்டையாக, மேற்புறம் வரிவரியாக அரக்கு கலரில் இருக்கும். ஆறு கால்கள், இரண்டு மீசைகள், ரத்தத்தை உறிஞ்ச உதவும் கொடுக்கு ஆகியவை உண்டு. ஆங்கிலத்தில் BED BUG என்று பெயர். கிட்டதட்ட பெரிய கரப்பான் பூச்சியின் சிறிய வடிவம் கரப்பான் பூச்சிகளுக்கு இறக்கைகள் உண்டு. மூட்டைப் பூச்சிகளுக்கு இறக்கைகள் கிடையாது.

மூட்டைப் பூச்சி கடி:

மூட்டைப் பூச்சி கடி என்பது பட்டவர்களுக்குத்தான் தெரியும். பகலில் பதுங்கிக் கிடக்கும் இவை இரவில்தான் தமது திறமையை நம்மிடம் காட்டுகின்றன. பார்த்தால் சின்னதாக இருக்கும் இவை நம்மை கடிக்கும்போதும் நம்முடைய இரத்தத்தை  உறிஞ்சும் போதும் நமக்கு ஒன்றும் தெரியாது. இரத்தத்தைக் குடித்து முடிந்தவுடன் கடித்த இடத்தில் தடிப்பும் அரிப்பும் ஏற்படும். கடிபட்டவர் தூக்கத்தை மறந்து விட வேண்டியதுதான். படுக்கையில் இருந்து எழுந்து மூட்டைப் பூச்சிகளை வேட்டையாடுவதற்கே நேரம் சரியாகி விடும். அவற்றை நசுக்கினால் வரும் நாற்றம் சக்கிக்காது. சில வீடுகளில், மாணவர் விடுதிகளில் சுவற்றில் போர்க்களம் போல மூட்டை பூச்சியை நசுக்கிய இரத்த சுவடுகளைக் காணலாம்.

அப்போதெல்லாம் சொந்த வீட்டுக்காரர்களை விட வாடகை வீடுகளில் இருந்தவர்கள் அதிகம். மூட்டைப் பூச்சி என்பது வீட்டுக்கு வீடு சாதாரணமாக இருந்தது. அதிலும் ஒண்டு குடித்தனங்கள் இருந்த ஸ்டோர் போன்ற வீடுகளில் மக்களோடு மக்களாய் அவைகளும் வசித்தன. இந்த மூட்டைப் பூச்சிகள் மரச் சாமான்களின் இடுக்குகளிலும், சுவற்றில் உள்ள ஓட்டைகளிலும் (அப்போதெல்லாம் சுவற்றில் ஆணிகள் அடித்து போட்டோ படங்களை வரிசையாக மாட்டி வைப்பார்கள்) பாய், தலையணை, படுக்கையிலும் அண்டி கிடக்கும்  வீடு விட்டு வீடு மாறும்போது அவைகளும் பெண்டு பிளைகளோடு கூடவே குடித்தனம் வந்துவிடும். நம்மீது அவ்வளவு ரத்த பாசம் அவைகளுக்கு. மூட்டைக்கு பயந்து தியேட்டர்களுக்கு இரவுக் காட்சி படம் போனவர்களும் உண்டு. அங்கே போனாலும் இதே தொல்லைதான். பல ஊர்களில் மூட்டைப் பூச்சி கடிக்கு என்றே பேர் பெற்ற தியேட்டர்கள் இருந்தன. அந்த தியேட்டர்களில் படம் பார்க்கும்போது ஒரு மாதிரி நெளிந்து கொண்டேதான் உட்கார வேண்டும். அங்குதான் அப்படி என்றால் பஸ், ரெயில் இவற்றையும் இவை விட்டு வைப்பதில்லை. இப்போதும் ரெயில், அரசு பஸ்களில் மூட்டைப் பூச்சி கடியோடு கொசுக்கடியும் உண்டு.

மூட்டைப் பூச்சி ஒழிப்பு:

இவற்றை ஒழிக்க ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களில் வீடுகளில் சுடுதண்ணீரை கொதிக்க கொதிக்க மரச்சாமான்களின் இடுக்களில் ஊற்றுவது அல்லது மண்ணெண்ணெயை சொட்டு சொட்டாக தெளிப்பது அல்லது மரச்சாமான்களை வெயிலில் காயவைத்தல் அன்று சர்வ சாதாரணம். இவற்றை அழிக்க பூச்சி மருந்தை தெளிக்க வேண்டும். இதற்கென்று இருக்கும் பம்ப் ஒன்றில் கில்பக் மருந்தையும் மண்ணெண்ணெயையும் கலந்து மூக்கில் துணியை கட்டிகொண்டு நானும் தெளித்து இருக்கிறேன். இப்போது ஸ்பிரேயர்களுடன் மருந்துகள் வந்துவிட்டன. அப்படியும் அவை சாவதில்லை. தப்பி விடுகின்றன. மூட்டைக் கடிக்கு பயந்து வீட்டை அப்படியே கொளுத்தி விட்டால் கூட தேவலை என்ற எண்ணம் கூட சிலருக்கு உண்டாகி இருக்கிறது போலிருக்கிறது.. எனவே மூட்டை பூச்சிக்கு பயந்து யாரேனும் வீட்டைக் கொளுத்துவார்களா? என்ற பழமொழியையும் நம்மவர்கள உருவாக்கி இருக்கின்றனர். அதாவது அல்பமான எதிரிக்கு பயந்து நீ ஓடி ஒளியாதே என்பது பொருள்.

நாங்கள் மக்கள் நெருக்கம் மிகுந்த நகர்ப்புறத்தில் வாடகை வீட்டில் இருந்தபோது மூட்டைப்பூச்சி தொல்லையால் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறோம். இப்போது நாங்கள் இருக்கும் புறநகர்ப் பகுதியில் சொந்த வீட்டில் இந்த தொல்லை இல்லை. காரணம் வீடு கட்டும்போதே PEST CONTROL பயன்படுத்தியதுதான் என்று நினைக்கிறேன். ஆனாலும் பாம்புகள் நடமாட்டம் உண்டு.

இப்போது மூட்டைப் பூச்சிகள் அதிகம் இல்லை. இவற்றை அடியோடு ஒழிக்க அரசு எந்த முயற்சியும் செய்யாமலேயே இவை தாமாகவே குறைந்து விட்டன. காரணம் நவீனமயம் தான். ஆனாலும் ஆங்காங்கே சில இடங்களில் இவற்றைக் காணலாம். மனிதர்களிலும் சில மூட்டைப் பூச்சி கடி ஆசாமிகள் உண்டு. அவர்கள் அங்கே வரும்போதே பார்த்தவுடன் இங்கேயே சிலர் ஓடிவிடுவார்கள்.

புலவர் கவிதை:

புலவர் கல்லூரியில் விடுதியில் தங்கி படித்தபோது, இரவில் தனக்கு ஏற்பட்ட மூட்டைப் பூச்சி கடி அனுபவத்தினைக் கவிதையாகத் தந்து இருக்கிறார் நமது வலைப்பதிவர் புலவர் சா.இராமாநுசம் அய்யா அவர்கள்
 
   மடித்தயிடம் மேலுறையின் சந்தும் பொந்தும்-நீங்கள்
           
மறைந்துறையப் புகலிடமே உமக்குத் தந்தும்
  
கடித்தயிடம் தெரியாமல்  துளியும் இரத்தம்-அட்டா
           
கசியாமல் கடிப்பதுதான் விந்தை நித்தம்
   
அடிக்கடியே வருகின்றீர் அந்தோ தொல்லை-மேலும்
           
அடுக்கடுக்காய் வருகின்றீர் உண்டா எல்லை!
   
படித்தியது போதுமினி க் காலி செய்வீர்-இன்றேல்
            
பழிவந்து சேருமய்ய மூட்டை யாரே!
                      
                           -  புலவர் சா இராமாநுசம்

நன்றி: புலவர் கவிதைகள்


(PICTURES THANKS TO GOOGLE)