Showing posts with label கண்ணதாசன். Show all posts
Showing posts with label கண்ணதாசன். Show all posts

Thursday, 2 March 2017

கவியரசு கண்ணதாசன் கதை – நூல் விமர்சனம்



செட்டிநாட்டில் உள்ள சிறுகூடல் பட்டியில் பிறந்த முத்தையா எப்படி கவிஞர் கண்ணதாசன் ஆனார், திரையுலகில் மட்டுமல்லாது தமிழ் இலக்கிய உலகிலும் எவ்வாறு புகழ்பெற்றார் என்பதனைச் சொல்லும் வாழ்க்கை வரலாற்று நூல் இது. ‘கவியரசு கண்ணதாசன் கதை’ என்ற - இந்நூலை எழுதிய எழுத்தாளர் வணங்காமுடியின் இயற்பெயர் சு.ராமகிருஷ்ணன் என்பதாகும். இவரது சொந்த ஊர் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த செட்டிகுளம் பண்ணையூர் ஆகும். ராணி வார இதழின் துணை ஆசிரியரான இவர் இந்தத் தொடரை அந்த பத்திரிகையில் 64 வாரங்கள் எழுதியுள்ளார்.
கவிஞர் கண்ணதாசன் மனவாசம், வனவாசம், அர்த்தமுள்ள இந்துமதம் என்று, தான் எழுதிய எல்லா நூல்களிலும், அவர் தனது வாழ்க்கைச் சம்பவங்களை ஆங்காங்கே சொல்லி இருக்கிறார். ஆனால் எழுத்தாளர் வணங்காமுடி அவர்கள் கவிஞரின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கி, கவிஞரின் தோற்றம் முதல் மறைவு வரை ஒரு முழு நூலாக சுவைபடச் சொல்லி இருப்பதே இந்த நூலின் பெருமை ஆகும்.

கவிஞரும் மதுவும்:

கண்ணதாசனும் மதுவும் மங்கையும் என்று பெரிய கட்டுரையே எழுதலாம். அவற்றை பல்வேறு பக்கங்களில் ஆசிரியர் சொல்லிச் செல்கிறார்.

‘” உங்களைக் கவிஞராக்கிய நிகழ்ச்சி எது? “ என்று வாசகர் ஒருவர் கேட்டார்.  அதுக்கு கண்ணதாசன் சொன்ன பதில் “என் முதல் காதல் தோல்வி “ அப்போதெல்லாம் அவர் அடிக்கடி முணுத்த பாடல் இது (இந்நூல் பக்கம்.26)

என் அன்னை செய்தபாவம் நான் மண்ணில் வந்தது
என் அழகு செய்த பாவம் நீ என்னைக் கண்டது
நம் கண்கள் செய்த பாவம் நாம் காதல் கொண்டது

”ஒருபக்கம் மதுவையும்,, மறுபக்கம் மாதுவையும் வைத்தால் உங்கள் மனம் என்ன செய்யும்?” என்ற கேள்விக்கு, “எனக்கு இரண்டு கரங்கள் .ஒரே மனம். அவை, சம அளவில் பிரியும்” என்று பதிலளித்தார், கண்ணதாசன். (இந்நூல் பக்கம்.87)

வசமான பெண்மையும் வளமான கிண்ணமும்
வாழ்க்கையில் உள்ள மட்டும்
வாராது வஞ்சகம் வாராதிங்கு என்னிடம்
வாராது மரண பயமே!
…… ….. ….. ….. …..
தங்கமே கிண்ணமெங்கே?
சரிபாதி நீயுண்டு தருவாய் என்கையிலே
தழுவாது மரண பயமே!

என்பது கவிஞரின் ‘மதுக்கோப்பை’ என்ற கவிதை.(இந்நூல் பக்கம்.88)

கவிஞரின் பாட்டு பிறந்த கதை:

நூலின் பல இடங்களில், கவிஞரின் பாடல் வரிகளைக் காட்டும் நூலாசிரியர் வணங்காமுடி ‘பாட்டு பிறந்த கதை’ என்ற தலைப்பில், சில பாடல்கள் பிறந்த பின்னணியையும் சுவையாகச் சொல்லுகிறார்.

‘கர்ணன்’ படத்தில் வரும் ’உள்ளத்தில் நல்ல உள்ளம் .உறங்காதென்பது, வல்லவன் வகுத்ததடா’ என்ற பாடல் பெருந்தலைவர் காமராஜரை நினைத்து எழுதியது. (இந்நூல் பக்கம்.106)

‘படிக்காத மேதை’ படத்தில் இடம் பெற்ற ‘ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா’ பாடலில் பாதி, பாங்குக்கு போகும் அவசரத்தில் எழுதியது. (இந்நூல் பக்கம்.107)

கவிஞர் கண்ணதாசனின் சொந்தப் படமான ’கறுப்புப் பணம்’ வெளியான போது கவிஞருக்கு கடன் அதிகம். கவிஞருக்கு அப்போது, தீபாவளிக்கு கையில் காலணா இல்லை. அப்போது பி.எஸ். வீரப்பா ‘ஆனந்த ஜோதி’ என்ற படத்திற்கு பாட்டெழுத அழைக்கிறார். அப்போது எழுதிய பல்லவி ‘காலமகள் கண் திறப்பாள் சின்னையா – நாம் கண்கலங்கி கவலைப்பட்டு என்னையா?” (இந்நூல் பக்கம்.112)

சம்பத்துக்காக தேர்தலில் கடுமையாக உழைத்தார் கவிஞர் கண்ணதாசன். இருந்தும் அவர் தோல்வி. அப்போது கவிஞர் எழுதிய ஒரு பாடல் ‘யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல’ (இந்நூல் பக்கம்.118)

ஒருமுறை அறிஞர் அண்ணா , தன்னைப் பார்க்க வந்த தி.மு.க தொண்டரிடம், ‘நீங்கள் எந்த ஊர்?” என்று கேட்க, அவர் “கருவூரிலிருந்து வருகிறேன்” என்று சொன்னார். உடனே அண்ணா “எல்லோரும் கருவூரிலிருந்து தான் வருகிறார்கள்’ என்று மென்சிரிப்பு செய்தார். இதை அருகிலிருந்து ரசித்த கவிஞர், அந்த சம்பவத்தை பின்னாளில் ‘எந்த ஊர் என்றவனே” என்று தொடங்கும் பாடலை எழுதினார் .(இந்நூல் பக்கம்.123)

இப்படி நிறைய குறிப்புகளைத் தந்து இருக்கிறார் நூலாசிரியர்.

அரசியலும் கவிஞரும்

தி.மு.கவில் இருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை ”வனவாசம்” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். தி.மு.கவை விட்டு விலகியதும் (குறிப்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்த காலத்து) நடந்த சம்பவங்களை, “மனவாசம்” என்று எழுதினார். சிலர் வனவாசம் என்ற நூலை வைத்துக் கொண்டு கருணாநிதிக்கும் கவிஞருக்கும் இடையில் ஏதோ தீராப் பகைமை போல் பேசுவார்கள். ஆனால் நமது ஆசிரியர் வணங்காமுடி அவர்கள், தமது நூலில், இருவருக்கும் இடையில் எத்தகைய அன்பு இழையோடியது என்பதை, கருணாநிதி மீது காதல், காதல் அல்ல… கனிந்த அன்பு – என்ற தலைப்புகளில் சொல்லி இருக்கிறார். மேலும் இருவருக்கும் இடையில் எதனால் நிரந்தர இடைவெளி உண்டாகியது என்பதனையும் அடுத்து வரும் சில தலைப்புகளில் மிகைப்படுத்தாமல் சொல்லி இருக்கிறார். மேலும் கண்ணதாசனுக்கு கலைஞர் கருணாநிதி ‘கவிஞர் என்ற பட்டம் தந்ததும், கவிஞரை முதன்முதல் அரசியல் மேடையில் பேசச் சொன்னதும் பொள்ளாச்சியில்தான் என்று சுவைபடச் சொல்லி இருக்கிறார் ஆசிரியர் வணங்காமுடி. (இந்நூல் பக்கங்கள் 136 முதல் 139 முடிய)

மற்ற அரசியல் தலைவர்களுடனும் இவர் அவ்வப்போது இணக்கம் கொண்டு இருந்ததையும், சுணக்கம் கொண்டதையும் நூலின் பல பக்கங்களில் காணலாம். இங்கே கலைஞர் கருணாநிதியுடனான நட்பை மட்டும், நான் சொல்லக் காரணம், ஏதோ அவர்களுக்கிடையில் ஜென்மப்பகை போன்று தவறாக சொல்வதால்தான்.
 
சில சுவையான தகவல்கள்

கண்ணதாசனுக்கு மதுப்பழக்கம் ஏற்பட காரணமாக இருந்த நண்பர்கள் இருந்த ஊர் புதுக்கோட்டை இராயவரம். எனவே கவிஞர் புதுக்கோட்டையை மதுக்கோட்டை என்றே செல்லமாக அழைப்பார் .(இந்நூல் பக்கம்.90)

ஒருமுறை கவிஞர் கண்ணதாசன், நண்பர்களுடன் காரில் செல்லும்போது, வேலூர் நகர எல்லையில் வடை டீ சாப்பிட காரை நிறுத்துகிறார். அப்போது அங்கு வந்த பள்ளி மாணவர்களில் ஒருவன்  அவரைப் பார்த்தவுடன் ‘நீங்கள் பாடல் கண்ணதாசன்தானே?” என்று கேட்கிறான். அவனிடம் அவர் “பாடல் கண்ணதாசன் என்று எதில் படித்தாய் தம்பி?” என்று சிரித்தபடியே கேட்க, அவன் “ரேடியோவில் சார்” என்று பதிலளித்தான். .(இந்நூல் பக்கம்.183 – அப்போதெல்லாம் வானொலியில் பாடலாசிரியர் பெயரைச் சொல்லும் போது, கவிஞரை பாடல் கண்ணதாசன் என்று சொல்லுவார்கள்)

1977 ஆம் ஆண்டு வாக்கில், கவிஞர் கண்ணதாசன் அவர்கள், அப்பாஸ் இப்ராகிம் என்ற நண்பர் நடத்திய பத்திரிகையில், அவரது வேண்டுகோளுக்கு இணங்க திருக்குரானுக்கு விளக்கவுரை எழுதத் தொடங்கினார். சில நண்பர்கள் அதை விரும்பவில்லை; கண்டனம் தெரிவித்தார்கள். கண்ணதாசனும் ஒரு அறிக்கை வெளியிட்டு விட்டு மேற்கொண்டு எழுதுவதை நிறுத்தி விட்டார். (இந்நூல் பக்கம் – 377)

’இன்றைய இளைஞனுக்கு என்னுடைய வாழ்க்கை ஓர் எச்சரிக்கை. புகை,மது போன்ற கொடிய பழக்கங்களைப் பழகிக் கொள்ளக் கூடாது, எப்படி வாழ வேண்டும் என்பதற்கல்ல … எப்படி வாழக்கூடாது என்பதற்கு நான் ஒரு எடுத்துக் காட்டு’. – கவிஞர் கண்ணதாசன்

தனது வாழ்க்கை பற்றி கவிஞர் சொன்ன வார்த்தைகள் இவை. (இந்நூல் பக்கம் – 100)

இன்னும் நிறையவே இந்நூலில் தகவல்கள் உண்டு. கவிஞர் கண்ணதாசன் பற்றி கட்டுரைகள் எழுத விரும்புவோருக்கும், மேடையில் பேச விரும்புபவர்களுக்கும், மற்றும் கவிஞர் மீது ஆர்வமும் பற்றும் கொண்டவர்களுக்கும் பயனுள்ள நூல்.

நூலின் பெயர்: கவியரசு கண்ணதாசன் கதை
ஆசிரியர்: வணங்காமுடி
நூலின் பக்கங்கள்: 424 விலை:  ரூ 80/=  நான்காம் பதிப்பு டிசம்பர், 2008
நூல் வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம், 23, கண்ணதாச்ன் சாலை, தியாகராய நகர், சென்னை – 600017 தொலைபேசி 0431 24332682

(இப்போது இந்நூலின் விலை ரூ 130/= என்று தெரிய வருகிறது)

தொடர்புடைய எனது பிற பதிவுகள்

கவிஞர் கண்ணதாசனும் விமர்சனங்களும் http://tthamizhelango.blogspot.com/2014/05/blog-post.html
கவிஞர் கண்ணதாசன் பாடலும் நெடுநல்வாடையும் http://tthamizhelango.blogspot.com/2013/07/blog-post_938.html
எங்கள் கல்லூரி விழாவில் கண்ணதாசன் http://tthamizhelango.blogspot.com/2013/06/blog-post_24.html   

Tuesday, 6 May 2014

கவிஞர் கண்ணதாசனும் விமர்சனங்களும்



கவிஞர் கண்ணதாசன் ஊரறிந்த சிறந்த தமிழ் கவிஞர். அவரைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவரது தமிழ் திரைப்படப் பாடல்கள் மூலம் அவர் பிரபலம் ஆகியிருந்த போதிலும் மரபுக் கவிதைகளையும் படைப்பதில் வல்லவர். அவருடைய கவிதைத் தொகுப்புகளில் இந்த மரபுக் கவிதைகளையும் காணலாம். அவர் எல்லோருக்கும் நண்பர். அதே சமயம் பலருடனும் தனது வெளிப்படையான விமர்சனங்களால் வீண் மனக் கசப்பை ஏற்படுத்திக் கொண்டவர். இதனால் பல வீண் சர்ச்சைகள். இருந்த போதும் அவர் மீது வைத்த தமிழ்க் காதலால் அவர் பிறரைப் பற்றி பேசியதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

கண்ணதாசனும்  தி.மு.க.வும், எம்.ஜி.ஆரும்:

கண்ணதாசன் ஆரம்பத்தில் தி.மு.க வில் இருந்தார். மேல்மட்ட, இரண்டாம் மட்ட தலைவர்களோடு நல்ல நெருக்கம். எனவே அப்போதைய அவரது பாடல்கள் தி.மு.க பிரசாரப் பாடல்களாகவே இருந்தன. அப்போதைய திமுக கூட்டங்களில்

                      அச்சம் என்பது மடமையடா
             அஞ்சாமை திராவிடர் உடமையடா
              ஆறிலும் சாவு நூறிலும் சாவு
              தாயகம் காப்பது கடமையடா
              தாயகம் காப்பது கடமையடா (அச்சம்)
             - பாடல்: கவிஞர் கண்ணதாசன்
                         (படம்: மன்னாதி மன்னன்)  
             
என்ற பாடல் அமர்க்களப்படும். அப்போதெல்லாம் தி.மு.கவில் கவிஞர் உயர்ந்த இடத்தில் வைத்து பேசப்பட்டார். தி.மு.க எதிர்ப்பாளர்கள் கவிஞரை நாத்திகன் என்று வசைபாடினர். மேலே சொன்ன பாடல் தமிழக வானொலிகளில் தடை செய்யப் பட்டு இருந்தது. இலங்கை வானொலியில் மட்டும் அடிக்கடி ஒலிபரப்பானது.

கவிஞரின் ராசி அவருக்கும் தி.மு.க விற்கும் ஒத்து வரவில்லை. கட்சி மாறி காங்கிரசுக்கு போனார். வழக்கம்போல அவர்கள் இவரை கடுமையாக விமர்சனம் செய்ய இவரும் அவர்களை காய்ச்சினார். “அண்ணன் காட்டிய வழியம்மா இது அன்பால் விளைந்த பழியம்மா“ என்று பாடினார். தி.மு.கவில் இருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வனவாசம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். சிலர் இந்த நூலை வைத்துக் கொண்டு கருணாநிதிக்கும் கவிஞருக்கும் இடையில் ஏதோ பெரிய பகைமை போல் பேசுவார்கள். தி.மு.கவை விட்டு விலகியதும் நடந்த சம்பவங்களை “மனவாசம்” என்று எழுதினார்.

அவர் எம்.ஜி.ஆரைப் பற்றியும் கடுமையாக விமரிசித்து தொடர் ஒன்றை எழுதி இருக்கிறார். காங்கிரஸ்காரர் சின்ன அண்ணாமலையின் பாராட்டைப் பெற்ற இந்த தொடர் பின்பு புத்தகமாக வந்தது.. நூலின் பெயர் “எம்.ஜி.ஆரின் உள்ளும் புறமும்”.  பின்னர் இரண்டாம் பாகம் எழுதுவதாக இருந்தார். ஏனோ எழுதவில்லை.

போதைப் பழக்கம்:

கவிஞர் கண்ணதாசனுக்கு முதலில் மதுப் பழக்கம் மிதமிஞ்சி இருந்தது. அந்த பழக்கத்தை விட்டுவிட பின் போதை ஊசிக்கு அடிமையானார். ஒரு படத்திற்காக இவர் எழுதிய வரிகள், இவருக்கு அப்படியே பொருந்தும்.  

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு
                   - (படம்: ரத்தத்திலகம்)
  
அவருக்கு வேண்டாதவர்கள் கவிஞரை குடிகாரன் என்று பேசினார்கள், எழுதினார்கள். இவ்வாறு விமர்சனம் செய்தவர்கள் பலபேர் குடிகாரர்கள். பின்னாளில் அந்த பழக்கங்களை விட்டொழித்த பின்னர் மற்றவர்களுக்கு குடிக்காதே என்று அறிவுரை சொன்னார். இதனையும் கிண்டலடித்தனர். இதற்கு அவர், மதுப் பழக்கம் உள்ள ஒருவனே மதுவினால் விளையும் தீமைகளைத் தெளிவாக எடுத்துரைக்க முடியும்.என்று பதில் சொன்னார்.

திரைப்படப் பாடல்கள்

பழைய இலக்கியக் கருத்துக்களை கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் எடுத்தாளுவது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் போன்ற காப்பியங்களிலும் மற்றைய தமிழ் இலக்கிய நூல்களிலும் திருக்குறள் வரிகள், கருத்துக்கள் கையாளப்பட்டு இருப்பதைக் காணலாம். அவ்வாறே கவிஞர் கண்ணதாசனும் கையாண்டார். இதனையும் அவருக்கு வேண்டாதவர்கள் “கண்ணதாசன் காப்பி அடிக்கிறார் “ என்றார்கள். கண்ணதாசன் பெருந்தன்மையாக தனது பாடல்களில் பழைய இலக்கியக் கருத்துக்கள் இருப்பதனை ஒத்துக் கொண்டதோடு இதில் தவறு ஏதும் இல்லை என்றும் த்க்க பதில் தந்தார். உதாரணத்திற்கு

அத்திக்காய் காய்காய்காய்! ஆலங்காய் வெண்மதியே!
இத்திக்காய்க் காய்ந்துனக் கென்னபயன் - சற்றுமென்மேல்
பற்றற் றவரைக்காய்! பாவைக்காய்க் கோவைக்காய்
சொற்றக்காய் தூதுளங் காய்!        -  தனிப்பாடல்

என்பது தனிப்பாடல். இதனை ஒட்டி கவிஞர் கண்ணதான் எழுதிய வரிகள்:

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
என்னுயிரும் நீயல்லவோ?
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே..
                                                                          (படம்: பலே பாண்டியா)

பட்டினத்தாரின் தத்துவப் பாடல்களில் கவிஞருக்கு அதிக ஈடுபாடு உண்டு. அர்த்தமுள்ள இந்துமதம் என்ற நூலில் ஞானம் பிறந்த கதைஎன்ற பகுதியில் பட்டினத்தார் , பத்திரகிரியார் இருவரைப் பற்றியும் சிறப்பித்து எழுதி இருக்கிறார்.

அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே, விழி அம்பு ஒழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே, விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே.
                                       - பட்டினத்தார்

என்ற பட்டினத்தார் பாடலுக்கு விளக்கமாக அமைந்த கண்ணதாசன் பாடல் வரிகள்:

ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன?
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?

வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
                         - படம்: பாத காணிக்கை

கவிஞரின் சில திரைப்பட பாடல் வரிகளும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டன. படம் : அனுபவி ராஜா அனுபவி. இந்த படத்தில் நாகேஷ்  சென்னை வாசிகளைக் கிண்டலடித்து பாடுவது  போல ஒரு பாடல். “ மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்று தொடங்கும் இந்த பாடலில் வந்த,

ஊரு கெட்டுப் போனதுக்கு
மூரு மாருக்கெட்டு அடையாளம்
நாடு கெட்டுப் போனதுக்கு
மெட்ராஸு நாகரிகம் அடையாளம்

என்ற வரிகளை நீக்கச் சொல்லி சென்னை மூர் மார்க்கெட் வியாபாரிகள் குரல் எழுப்பினார்கள்.

படத்தின் பெயர் குமரிப்பெண். 1966 இல் வெளிவந்தது. ரவிச்சந்திரன் ஜெயலலிதா நடித்தது. இந்த படத்தில் பங்களா வாசலில் நிற்கும் கூர்க்காவை ரவிச்சந்திரன் கிண்டல் செய்வது போல் ஒரு பாடல்.

ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீதான் ராஜா
ஜாவ்ரே ஜா அந்த வீட்டுக்கு நான்தான் ராஜா
ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீதான் ராஜா
ஜாவ்ரே ஜா அந்த வீட்டுக்கு நான்தான் ராஜா
தினம் தினம் இரவினில் தூங்கிவிட்டு
திருடரைத் திருடிக்கொண்டோட விட்டு
தினம் தினம் இரவினில் தூங்கிவிட்டு
திருடரைத் திருடிக்கொண்டோட விட்டு
அகப்பட்ட மனுஷனைப் பிடிக்கிற வேலைக்கு
ஆர்ப்பாட்டம் என்ன ராஜா?

இந்த பாடலைக் கேட்டு தமிழ்நாட்டில் இருந்த கூர்க்காக்கள் சங்கத்தினர் கவிஞருக்கு எதிராக அறிக்கை வெளியிட்டார்கள். வானொலியில் ஒலிபரப்ப தடை போட்டார்கள். ஆனாலும் இலங்கை வானொலியில் இந்த பாடலை ஒலிபரப்பிக் கொண்டுதான் இருந்தார்கள்.

ஒரு குட்டிக்கதை:

கவிஞர் கண்ணதாசன் சொல்லும் குட்டி கதை ஒன்றினைக் கேளுங்கள்.


ஒரு சபைக்கு நான் போயிருந்தேன். பெரியபெரிய அறிஞரெல்லாம் வந்திருந்தார்கள். அவர்களையெல்லாம் சாதாரணமாக நினைத்து, ஓர் அரை குறைப் படிப்பாளி, ஆணவத்தோடு பேசிக்கொண்டு இருந்தார். அவரது ஆணவத்தைப் பார்த்து அவர் பேசியதிலிருந்த தவறுகளைக்கூட யாரும் திருத்தவில்லை.ஒவ்வொரு வரியையும் முடிக்கும்போது, “எப்படி நான் சொல்வது?” என்று கேட்டுக் கொண்டே இருந்தார். நான் ஆத்திரம் தாங்காமல், “ஒரு குழந்தை எப்படிச் சொல்லுமோ, அப்படியே சொல்கிறீர்கள்என்றேன்.தெளிவில்லாதவன்விவேகமற்றவன்என்பதை நயமாகவும், நளினமாகவும் சொன்னேன். சில கவியரங்கங்களிலும் இந்த அனுபவம் எனக்குக் கிடைத்திருக்கிறது. இலக்கண மரபோ, இலக்கியச் சுவையோ தெரியாத சிலரும், அந்த அரங்கங்களில் தோன்றிவிடுவார்கள். என்னைத் தாக்கிவிட்டால் தாங்கள் பெரிய கவிஞர்கள் என்ற எண்ணத்தில், அசிங்கமாகத் தாக்குவார்கள். நான் அடக்கத்தோடும் பயத்தோடும் உட்கார்ந்திருப்பேன். திரும்ப அவர்களைத் தாக்கமாட்டேன். காரணம், கிருபானந்தவாரியார் சொன்ன ஒரு கதை.

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக்கொண்டு சுத்தமாக வந்துகொண்டிருந்ததாம்.
ஓர் ஒடுக்கமான பாலத்தில் அது வரும்போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்ததாம்.
யானை ஓர் ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழிவிட்டதாம்.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்துவிட்டது!என்று சொல்லிச் சிரித்ததாம்.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா! நீ பயந்துவிட்டாயா?” என்று கேட்டதாம்.

அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னதாம்.
நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்துவிடக் கூடாதே என்று ஒதுங்கினேன். நான் ஏறி மிதித்தால் அது துவம்சமாகிவிடும்; ஆனால் என் கால் அல்லவா சேறாகிவிடும்.

இந்தக் கதையின்படி சிறியவர்களின் ஆணவத்தைக் கண்டு, நான் அடக்கத்தோடு ஒதுங்கி விடுவது வழக்கம். முன்னேற விரும்புகிற எவனுக்கும் ஆணவம் பெருந்தடை. ஆணவத்தின் மூலம் வெற்றியோ லாபமோ கிடைப்பதில்லை; அடிதான் பலமாக விழுகிறது.

(நன்றி: அர்த்தமுள்ள இந்துமதம்கவியரசு கண்ணதாசன் http://newindian.activeboard.com/t46467841/topic-46467841 )

வருவதை எதிர் கொள்ளடா:

கவிஞரின் அர்த்தமுள்ள இந்துமதமும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. கவிஞர் கண்ணதாசன் தன்னைப் பற்றிய விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்பட்ட்தாகத் தெரியவில்லை. அவர் நடத்திய கண்ணதாசன் இலக்கிய இதழின் முகப்பில்  இருந்த அவரது கவிதை வரிகள் இவைகள்.

போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்
ஏற்றதோர் கருத்தைஎன துள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன் அஞ்சேன்
                                                        - கவிஞர் கண்ணதாசன்



(PICTURES THANKS TO “GOOGLE”)