தஞசை மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ளது கபிஸ்தலம் என்ற ஊர். இந்த ஊரில் 108
திவ்ய திருத்தலங்களில் ஒன்றான ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. நான்
இந்த ஊருக்கு உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளுக்காக அடிக்கடி சென்று இருக்கிறேன்.
ஆனால் இந்த பெருமாள் கோயிலுக்கு சென்றதில்லை. நேற்று முன்தினம் (19.06.2014,
வியாழக்கிழமை) அந்த ஊரில் நடைபெற்ற காதணி விழாவுக்கு சென்று இருந்தேன். இந்த தடவை
கபிஸ்தலம் கோயிலுக்கு சென்றே ஆக வேண்டும் என்பதால் சீக்கிரமே புறப்பட்டுச் சென்றேன்.
படம் மேலே: தலபுராணத்தை விளக்கும் புடைப்பு சிற்பம்
திருச்சியிலிருந்து தஞ்சாவூர் வழியாக பாபநாசம் சென்றேன். பாபநாசத்தில் ஊரில்
நுழைந்தவுடன் புளியமரம் என்று ஒரு பஸ் நிறுத்தம். அங்குதான் கபிஸ்தலம் செல்லும்
சிற்றுந்துகள் (MINI BUS) ஷேர் ஆட்டோக்கள் நிற்கின்றன. நான் சென்ற நேரம்
சிற்றுந்து வர இன்னும் அரைமணி நேரம் ஆகும் என்றார்கள். ஷேர் ஆட்டோக்காரர் ஒருவர் ” கபிஸ்தலம், கபிஸ்தலம்” என்று குரல் கொடுத்துக்
கொண்டு இருந்தார். ஏறகனவே நிறையபேர் இருந்ததால் நான் அதில் ஏறவில்லை. அவர் சென்ற
அடுத்த நிமிஷம் இன்னொரு ஷேர் ஆட்டோ. அதில் பயணம் செய்தேன். கட்டணம் ஐந்து ரூபாய்.
ஊரில் இறங்கியவுடன் கோயிலுக்கு வழி கேட்டு நடந்தேன்.
ஊருக்கு கிழக்கே (திருவையாறு – கும்பகோணம் சாலையில்)
சிறிது தூரத்தில் கோயிலுக்கு செல்லும்
வழியைக் காட்டும் அறிவிப்புப் பலகை ஒன்று இருந்தது. அது காட்டிய வழியே
தெருவுக்குள் நுழைந்தேன். சிறிது தூரத்தில் பெருமாள் கோயில். இதுநாள் வரை பெரிய
கோயிலாக இருக்கும் என்று நினைத்து இருந்தேன். இடம் பரப்பளவில் குறைவுதான். ஆனாலும்
108 திவ்ய தேசங்களில் ஒன்று என்பதால் வெளியூரிலிருந்து காரிலும், ஆட்டோவிலும்
பகதர்கள் தரிசனம் செய்ய வந்து இருந்தனர்.
உள்ளே நுழைந்தவுடன் ஒரு அம்மாள் பூ விற்றுக் கொண்டு இருந்தார். அவரிடம் பூ வாங்கிக்
கொண்டேன். கோயிலில் பெருமாள் தரிசனம். சின்ன வயது குருக்கள் ஒருவர் அர்ச்சனை
செய்தார். அங்கிருந்த மற்றொரு ஊழியர் ஒருவர் எனக்கு கோயிலின் தல புராணத்தை சொன்னார்.
(கஜேந்திரன் என்னும் யானையை முதலையின் பிடியிலிருந்து ஆதிமூலம் காப்பாற்றி இருவருக்கும் சாபவிமோசனம்
தந்த கதை ) நான் ஏற்கனவே படித்த கதைதான். பெருமாள் தரிசனம் முடிந்த பிறகு, உறவினர்
வீட்டு காதணி விழா நிகழ்ச்சி நடந்த திருமண மண்டபம் (கடைவீதிக்கு) சென்றேன்.
கபிஸ்தலத்தில் எடுத்த படங்கள்.
படம் மேலே:கோயிலுக்கு செல்லும் வழியைக் காட்டும் அறிவிப்புப்பலகை
படம் மேலே: கோயிலுக்கு செல்லும் சாலை
படம் மேலே: கோயில் முன்னே உள்ள அறிவிப்புப் பலகை
படம் மேலே: கோயில் முன் வாயில்
படம் மேலே: கோயில் முன் வாயில் உட்புறம்
படம் மேலே: கொடிமரத்துடன் கோயிலின் உட்புறம்
கோயில் இருக்குமிடம்:
1.கும்பகோணம் -
திருவையாறு, சாலையில்
சுவாமிமலை, உமையாள்புரம் தாண்டி கபிஸ்தலம் உள்ளது. 2. திருவையாறிலிருந்தும்
இந்த ஊருக்கு வரலாம். 3. தஞ்சாவூர் – பாபநாசம் வழியாகவும்
வரலாம்.4.கும்பகோணம் - பாபநாசம் வழியாகவும் வரலாம்.
தமிழில் கவித்தலம். கவி என்றால் குரங்கு. ராமாயணத்தில் வரும் வாலி, சுக்ரீவன் என்ற இரு வானரங்கள் வழிபட்ட இடம் என்பதால் கவித்தலம். இந்த ஊரை மேல கபிஸ்தலம் என்றும் சொல்லுகிறார்கள்.
தமிழில் கவித்தலம். கவி என்றால் குரங்கு. ராமாயணத்தில் வரும் வாலி, சுக்ரீவன் என்ற இரு வானரங்கள் வழிபட்ட இடம் என்பதால் கவித்தலம். இந்த ஊரை மேல கபிஸ்தலம் என்றும் சொல்லுகிறார்கள்.





















