Showing posts with label கன்னித்தீவு. Show all posts
Showing posts with label கன்னித்தீவு. Show all posts

Sunday, 15 June 2014

சிந்துபாத்



வலைப்பதிவில் எழுதத் தொடங்கிய நாளிலிருந்து இந்த தலைப்பில் எழுத வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை. காரணம் சின்ன வயதில் படித்த கதைகளில் மறக்க முடியாத சிந்துபாத் என்ற கதாபாத்திரமும் ஒன்று.

கன்னித்தீவு:

எனக்கு சிந்துபாத்தை அறிமுகம் செய்து வைத்தது தினத்தந்திதான். அப்போதுதான் பள்ளியில் முதலாம் வகுப்பு முடிந்து இரண்டாம் வகுப்பு படிக்கத் தொடங்கிய சமயம். பாடப்படிப்பு அல்லாத ஒன்றை எழுத்துக் கூட்டி படித்த பத்திரிகை எது என்றால் அது தினத்தந்திதான். காலையில் தினத்தந்தி வந்தவுடன் முதல் ஆளாக முதலில் படித்தது இரண்டாம் பக்கத்தில் உள்ள கன்னித்தீவு படக்கதைதான். அதில் வரும் சிந்துபாத்தின் சாகசங்கள் அப்போதைய வயதில் படிக்க ரொம்பவும் பிரமிப்பாக இருக்கும். ஆரம்பத்தில் தினத்தந்தியின் இரண்டாம் பக்கத்தில் சிந்துபாத்தின் மூலக் கதையை அப்படியே படக்கதையாக தொடர்ந்து வெளியிட்டார்கள்.  ஓவியர் கணு என்பவர் படங்களை வரைந்தார். பிறகு பாலன் போன்றவர்கள் வரைந்தனர். எல்லாம் கறுப்பு வெள்ளை படங்கள்தான். இப்போது வண்ணப் படங்களாக இந்த கதை வருகிறது. அப்புறம் சிந்துபாதின் ஏழு பயணங்களும் முடிந்த பிறகு கதை என்பது வேறு திசையில் கற்பனையாக வந்து கொண்டு இருக்கிறது. ஒரு சாதனைக்காக நிறையபேர் இந்த கதையை மாறி மாறி இன்றுவரை தொடர்ந்து எழுதுகிறார்கள் என்று நினைக்கிறேன். 1960 இல் தொடங்கிய இந்த படக்கதைக்கு, இன்றைக்கு (15.06.2014) தொடரும் சி:19188 என்று போட்டு இருக்கிறார்கள். அதாவது 19188 ஆவது நாளாக தினத்தந்தியில் கன்னித்தீவு கதை வந்து கொண்டு இருக்கிறது.


இந்தக் கதையை வைத்து நிறைய விஷயங்களில் மற்றவர்களை கிண்டலடிப்பது வழக்கம். பிரச்சினைகள் அல்லது வழக்குகள் வழ வழ என்று  இழுத்துக் கொண்டே போனால் தினத்தந்தி கன்னித்தீவு மாதிரி போகிறது என்பார்கள். இந்த கதையை புத்தகமாக வெளியிட்டால் நன்றாக இருக்கும். இந்த கதையில் வரும் சிந்துபாத், லைலா, மூசா மந்திரவாதி இவர்களை மறக்க முடியாது. நானும் படித்து முடித்து வேலையில் சேர்ந்து ஓய்வும் பெற்று விட்டேன். இன்னும் லைலா அப்படியே குள்ளமாகவே இருக்கிறாள். அவளுக்கு எப்போது முழு வடிவம் கிடைக்கும்? வருகின்ற தலைமுறைதான் பதில் சொல்ல வேண்டும்.

அரேபிய இரவுகள்:

உயர்நிலை பள்ளியில் படிக்கும் போது சிந்துபாத்தின் கடல்பயணங்கள் “ என்ற தலைப்பில் சிறுவர்களுக்கான நூல் கிடைத்தது. அப்புறம் ஆயிரத்தோரு இரவு அராபியக் கதைகளில் சிந்துபாத்தின் சாகசங்களை மனக் கண்ணில் ரசிக்க முடிந்தது.

படம் மேலே - சிந்துபாத் பாக்தாத் நகர வியாபாரி. தனது வியாபாரத்தைப் பெருக்க அடிக்கடி கப்பலில் பயணம் செய்பவன். அவன் பயணம் செய்த போது பலமுறை கப்பல் உடைந்து ஆளில்லாத தீவுகளில் ஒதுங்குகிறது. அப்போது  தனக்கு ஏற்பட்ட பல திகிலான அனுபவங்களை நண்பர்களிடம் சொல்லுகிறான்.

படம் மேலே ஒருமுறை கடற் பயணத்தின் போது வழியில் ஒரு தீவு. கப்பலில் சென்ற எல்லோரும் இளைப்பாற இறங்குகின்றனர். மீண்டும் செல்லும் போது சிந்துபாத் தூங்கிவிட அவனை அங்கேயே விட்டு விட்டு  மற்றவர்கள் கப்பலில் சென்று விடுகின்றனர். கோட்டைச் சுவர் போல  இருக்கும் ரூக் என்ற ராட்சதப் பறவையின் முட்டையைப் பார்க்கிறான். இரவு அந்த முட்டையில் வந்து அமரும் ரூக் பறவையின் கால்களில் தன்னைக் கட்டிக் கொள்கிறான். காலையில் அது பறக்கும் போது அவனும் தப்பிக்கிறான்
..
படம் மேலே: ஐந்தாவது கடற் பயணத்தின் போது ஆள் இல்லாத தீவு ஒன்றில் கிழவன் ஒருவன் மீது இரக்கம் ஏற்பட்டு தனது முதுகில் ஏற்றிக் கொள்கிறான். ஆற்றைக் கடந்து  இறங்கச் சொன்னால் அவன்  மறுக்கிறான். அந்த கிழவனிடமிருந்து எப்படி மீண்டான் என்று ஒரு கதை.

படம் மேலே -ஆறாவது கடற் பயணத்தின் போது கப்பல் திசைமாறி ஒரு தீவில் ஒதுங்குகிறது. அங்கு மணலில் கிடக்கும் மாணிக்கக் கற்களை மூட்டை கட்டுகிறான். பின்னர் ஒரு தெப்பம் செய்து அதன் மூலம் அந்த தீவை விட்டு ஒரு ஆற்றின் வழியே வெளியேறுகிறான்.
  
குரங்குகள் தீவு , அவலட்சணமான பூதம் , நரமாமிசம் உண்ணும் காட்டு மிராண்டிகள், மரணக் கிணறு, கடற் கொள்ளையர்கள், யானைகள் கல்லறை என்று சிந்துபாத் செய்த ஏழு கடற்பயணங்களும் சாகசங்களாகச் செல்லுகின்றன. உண்மையிலேயே அவை  பிரமிப்பானவைதான். அந்தகாலத்து அராபியக் கதைகளை ரசித்துப் படிப்பதே தனி சுகம்தான்.

ஹாலிவுட் படங்கள்:

சிந்துபாதின் கடற் பயணங்களை  மையமாக வைத்து ஆங்கில திரைப் படங்களும் வந்தன.

Sinbad the Sailor (1947)
The Magic Voyage of Sinbad (1953)
The 7th Voyage of Sinbad (1958)
The Golden Voyage of Sinbad (1973)
Captain Sinbad (1963)
Sinbad and the Eye of the Tiger (1977)
Sinbad of the Seven Seas (1989)
Sinbad: Legend of the Seven Seas (2003)
Sinbad and the Minotaur (2010)
Sinbad: The Fifth Voyage (2011)
Sinbad: Beyond the Veil of Mists (2000)
Sinbad: The Fifth Voyage (2014)




ஆனால் திரைக்கதை என்பது முற்றிலும் மாறுபட்டது. சிந்துபாத் எதிர்கொள்ளும் மந்திரவாதியின் மந்திர தந்திரங்கள், வீரதீர செயல்கள் என்று கதையும் காட்சிகளும் அமைக்கப்பட்டு மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றன.

படம் மேலே: Sinbad and the Eye of the Tiger (1977) படத்தில் ஒரு காட்சி


(PICTURES THANKS TO GOOGLE IMAGES)

படித்துவிட்டு தமிழ்மணத்தில் கணக்கு உள்ளவர்கள் மறக்காமல் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி!