Showing posts with label ஏறுதழுவல். Show all posts
Showing posts with label ஏறுதழுவல். Show all posts

Thursday, 19 January 2017

ஜல்லிக்கட்டும் மாற்று கருத்தும்



நாணயத்திற்கு இரு பக்கம் இருப்பதைப் போல, எந்த ஒன்றினைப் பற்றியும், இருவேறு கருத்துகள் உண்டாவது இயல்பு. அது போலவே ஜல்லிக்கட்டு விஷயத்திலும் ஆதரவு அல்லது எதிர்ப்பு என்று இருவேறு நிலைகள் உண்டு. இதன் எதிரொலி, இப்போது கூகிளில் ‘நீங்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவளிப்பவரா இல்லையா’ என்று வாக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. 

எனது பதிவும் எதிர்ப்பும்

ஜல்லிக்கட்டு விஷயத்தில் எனது நிலை என்பது, எதிர்ப்பு நிலைதான். (ஜல்லிக்கட்டு ஆதரவாளர் இல்லை) எனவே ஒரு வலைப்பதிவர் என்ற முறையில், சென்ற ஆண்டு (2016), ’ஜல்லிக்கட்டு – தடை வேண்டும்’ என்ற தலைப்பினில் http://tthamizhelango.blogspot.com/2016/01/blog-post.html எனது வலைத்தளத்தில் ஒரு கட்டுரையை வைத்தேன். எனது கருத்துரைப் பெட்டியில் (Comments Box) ஆதரவு, எதிர்ப்பு என்று நண்பர்கள் தங்கள் கருத்துக்களை சொல்லி இருந்தார்கள்; நானும் அவற்றினுக்கு எனது நிலையில் மறுமொழிகளைத் தந்து இருந்தேன்.

பீட்டா (PETA) போன்ற அமைப்புகள் எதிலும் நான் சேரவில்லை. அவர்கள் ஜல்லிக்கட்டில் காளையை துன்புறுத்துகிறார்கள் என்ற ஒரு காரணத்தைச் சொல்லி எதிர்க்கிறார்கள். ஆனால் என்னைப் போன்றவர்கள், மனிதர்கள் இந்த ஜல்லிக்கட்டில் பலத்த காயமடைகிறார்கள், கை கால் ஊனமாகிறார்கள் மரணமடைகிறார்கள் என்ற ஆதங்கம் காரணமாக எதிர்க்கிறோம். இதில் என் போன்றவர்களது நிலைப்பாட்டில் தவறு ஏதும் இல்லை என்று நினைக்கிறேன். 
 
ஜல்லிக்கட்டு விஷயத்தில், சென்ற ஆண்டு இல்லாத அரசியல் பரபரப்பு , ஜெயலலிதா மறைவுக்குப் பின்பு இந்த ஆண்டில் அதிகம் உள்ளது. ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி, தமிழகத்தில் ஆங்காங்கே மாணவர்கள் போராட்டம், மறியல் என்று செய்திகள் வருகின்றன.(இந்நேரம் ஜெயலலிதா ஆட்சியில் இருந்து இருந்தால் என்ன நடந்து இருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்)

இந்த சூழ்நிலையில் எனது ஃபேஸ்புக்கிலும், நான் இணைந்துள்ள இரு வாட்ஸ்அப் குழுக்களிலும் மேற்படி எனது பதிவினை அண்மையில் பகிர்ந்தேன். இது விஷயமாக, ஒரு வலைப்பதிவு நண்பர் ஒருவர், எனது பதிவிற்கு, அவரது நண்பர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து கருத்து சொன்னதாகவும், நீங்கள் இப்படி எழுதலாமா என்றும் ஆதங்கப்பட்டு என்னுடன் செல்போனில் பேசினார். நான் அவருக்கு மறுமொழியாக, உங்கள் நண்பர் எனது தளத்தில் கருத்துரை தந்தால் நான் விளக்கம் தருகிறேன் என்று சொல்லி விட்டு, ’இப்போது ஜல்லிக்கட்டுக்கு விரோதமாக யாரேனும் கருத்து சொன்னால், அவரைத் தமிழினத் துரோகியாகச் சித்தரிக்கும் போக்கு வந்துள்ளது’ என்றும் தெரிவித்தேன். 

இந்நிலையில், ஜல்லிக்கட்டை ஆதரிக்கும் நண்பர் ஒருவது வலைப்பதிவில் வந்த பின்னூட்டம் ஒன்றில்,

// நம்மில் இரு வலைப்பதிவர்களே மாறுபட்ட கருத்து சொல்கிறார்கள்... இதில் ஒருவர் தமிழ் இலக்கியம் (M.A) படித்தவர்... மற்றுமொருவர் ஊருக்கேற்ப குசும்புக்காரர்... இருவரும் பாவம்... இவர்களை திருத்த முடியாது..//

என்ற கருத்து பதியப்பட்டு இருந்தது. (இதில் தவறு ஏதும் இல்லை; அவர் கருத்தை அவர் சொல்லுகிறார்) இருந்தாலும் அவர் கருத்துப்படி, தமிழ் இலக்கியம் படித்தால் கட்டாயம் ஜல்லிக்கட்டை ஆதரிக்க வேண்டுமா? இல்லையேல் தமிழினத் துரோகி என்ற வரிசையில் வந்து விடுவார்களா?  இதில் மாற்றுக் கருத்து எதுவுமே சொல்லக் கூடாதா? என்பதுதான் எனது சந்தேகம். 

நமது இனம், கலாச்சாரம், பரம்பரை வழக்கம் என்று பலரும் பழைய பாதையிலேயே செல்லும் வேளையில், சிலர் மாற்றுக் கருத்தும் சொல்கிறார்கள் என்பதும் உண்மையே. பல பழைய கண்மூடிப் பழக்க வழக்கங்கள் (பரத்தையர் ஒழுக்கம், உடன்கட்டை ஏறுதல், விதவைக் கோலம், முதுமக்கள் தாழி, நரபலி, வெட்சி (ஆநிரை கவர்தல்) போன்றவை) இன்று இல்லாமல் போனதற்கு காரணம் என்னவென்று சொல்வது? காலப்போக்கில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மாற்றம்தானே.

வரலாற்றுப் பக்கம் பார்வையைத் திருப்பினால் சாக்ரடீஸ், இயேசு கிறிஸ்து, புத்தர், கலிலியோ, இராமாநுஜர், ராஜாராம் மோகன்ராய், பெரியார் ஈ.வெ.ரா என்று பல மாற்றுக்கருத்து சிந்தனையாளர்களைச் சொல்லலாம்.

இன்றைய போராட்டம்:

காவிரிப் பிரச்சினைக்காக கர்நாடகா மாநில பெங்களூருவிலிருந்து தமிழர்களைத் துரத்தி அடித்த போது வராத தமிழர் வீரம், ஜாதி ஆணவக் கொலைகள் நடந்தபோது வராத எல்லோரும் தமிழரே என்ற உணர்வு,  டாஸ்மாக்கை எதிர்த்துப் போராடிய மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறையின் போது வராத மாணவர் என்ற உணர்வு, அண்மையில் பணமதிப்பு இழப்பை எதிர்த்து போராட்டம் நடத்திய பெண்களின் மார்பகங்களின் மீது கைவைத்த கயமைத்தனத்தின் போது வராத ரோஷம் – இந்த ஜல்லிக்கட்டை முன்னிட்டு வந்து இருப்பது எதனால் என்பது, இதன் பின்புலம் என்ன என்ற கேள்வியில்தான் முடியும். உண்மையில் இப்போது, ஜல்லிக்கட்டை வைத்து, மக்களுக்கான மற்ற பிரச்சினைகளிலிருந்து மக்களை  திசை மாற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதே உண்மை.


Friday, 15 January 2016

ஜல்லிக்கட்டு – தடை வேண்டும்



பொங்கலும் பொதுத்தேர்தலும் ஒருசேர வந்து விட்டதாலோ என்னவோ, இப்போது ஜல்லிக்கட்டு பிரமாதமாய் பேசப்படுகிறது. அதிலும் இந்த அரசியல்வாதிகள், ஏதோ தமிழர்கள் அனைவரும் ஜாதி சமயத்திற்கு அப்பாற்பட்டு பொங்கும் பூம்புனலாய் தமிழ், தமிழன் என்று ஒற்றுமையாக இருப்பது போலவும் பேசி வருகின்றனர். 

தமிழர் பண்பாடு:

தமிழ்நாட்டில் இப்போது சிலர் எதற்கெடுத்தாலும் தமிழ், தமிழன் என்று சாயம் பூசுகிறார்கள். அந்த வகையில் பழைய ஏறுதழுவல் என்பதுதான் இன்றைய ஜல்லிக்கட்டு என்றும் , தமிழர் வீர விளையாட்டு என்பதால் அதை தடை செய்யக்கூடாது என்றும் பேசுகிறார்கள். உண்மையில் அன்றைய ஏறுதழுவல் என்பதற்கும் இன்றைய ஜல்லிக்கட்டுக்கும் நிறையவே வித்தியாசங்கள். 

அன்றைய ஏறு தழுவலில் ஒரு காளையை பட்டியிலிருந்து திறந்து விட்டவுடன், ஒரு வீரன்தான் அதன் மீது பாய்வான்; காளையின் திமிலை அழுத்திப் பிடித்து அடக்குவான். ( மாட்டின் திமிலை அழுத்திப் பிடித்தால் அதன் மூர்க்க குணம் அடங்கிவிடும். எனது மாணவப் பருவத்தில் நான், எங்கள் தாத்தா வீட்டு மாடுகளை தொழுவத்தில் கட்டும்போது, சில காளைகள் நிற்காது; அப்போது அவற்றின் திமிலை அமுக்கச் சொல்வார்கள்; அமுக்கியதும் ஓரளவுக்கு கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.) இன்றோ ஒரு மாட்டின்மீது பலரும் பாய்கின்றார்கள்.

அதிலும் இன்னொரு கதை. மாட்டை அடக்கும் வீரனுக்கு, அந்த மாட்டின் சொந்தக்காரர் தன்னுடைய மகளை திருமணம் செய்து கொடுத்து விடுவாராம். சங்க இலக்கியங்களில் சொல்லப்படாத கதை. வீரபாண்டிய கட்டபொம்மன் சினிமா வந்தவுடன் இந்த கதைக்கு இன்னும் வலு சேர்ந்தது என்பதே உண்மை. அந்த படத்தில் வரும் ஒரு வசனம் “ அடி வெள்ளையம்மா ஓங் காளைக்கு வந்ததுடியம்மா ஆபத்து” 

இன்னும் சிலர் ஜல்லிக்கட்டு காளைதான் ஒவ்வொரு ஊரிலும் இனவிருத்திக்காக பயன்படுவது போல் எழுதுகின்றனர். உண்மையில் கோயிலுக்காக நேர்ந்து விடும் காளைகளே இனவிருத்திக்காக பயன்படுகின்றன. இவற்றை கிராமங்களில் பொலிகாளைகள் என்பார்கள். இந்த கோயில் மாடுகளை யாரும் கட்டிப் போட்டு வளர்ப்பது இல்லை.. அவை பாட்டுக்கு திரியும், மேயும். ஊர் மக்களும் அவற்றிற்கு தீனி, கழுநீர் வைப்பார்கள். ஆனால் ஜல்லிக்கட்டு காளைகளை அவற்றின் உரிமையாளர்கள் கட்டிப் போட்டே சீற்றத்துடன் வளர்ப்பார்கள். இவை ஜல்லிக்கட்டு முடிந்து  பட்டியை விட்டு வெளியே வந்து விட்டாலும், மனிதர்கள் மீது ஆக்ரோஷமாகவே இருக்கும். வழியில் தென்படுபவர்கள் மீது பாயவும் செய்யும். எனவே பொலிகாளை எனப்படும் கோயில் காளையை ஜல்லிக்கட்டு காளையோடு ஒப்பிடக் கூடாது. மேலும் ஜல்லிக்கட்டு காளையை இனவிருத்திக்கு விட்டால், அதன் முரட்டுத்தன்மை குறைந்துவிடும் என்ற நம்பிக்கையின் காரணமாக, மாட்டின் உரிமையாளர் அவற்றை இணை சேர விடுவதில்லை என்பதே உண்மை.

தமிழர் பண்பாடு என்றால், சங்க இலக்கியத்தில், அகப்பாடல்களில் வரும், தமிழர்களின் ‘‘பரத்தையர் ஒழுக்கம்’ பற்றி என்னவென்று எடுத்துக் கொள்வது?

(ஏறுதழுவல் பற்றிய அதிக விவரங்களத் தெரிந்து கொள்ள, நமது அன்பிற்குரிய ஆங்கில ஆசிரியர் திரு.ஜோசப் விஜூ அவர்கள் (ஊமைக் கனவுகள்) http://oomaikkanavugal.blogspot.com/2016/01/1.html  எழுதிய ’ஜல்லிக்கட்டு’ பற்றிய கட்டுரைகளில் காணலாம்.)

ஜல்லிக்கட்டு நடத்துபவர்கள்:

பெரும்பாலும் இந்த ஜல்லிக்கட்டை நடத்துவதில் அந்த ஊர் பெருந்தனக்காரர்கள் எனப்படும் பெரிய மனிதர்களும், பழைய ஜமீன்தார் முறையில் வாழ்க்கை நடத்துபவர்களும்தான் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கின்றனர். இவர்களோ அல்லது இவர்களது பிள்ளைகளோ யாரும் களத்தில் நின்று மாடுபிடிக்கப் போவதில்லை. விலங்கு, மனிதன் போடும் சண்டையை ரசிக்கும் ஒருவித குரூர ரசனையின் இன்னொரு வடிவம் எனலாம். ‘ஈகோ’ ( நீயா? நானா? என்ற ) உணர்வோடுதான்  ஜல்லிக்கட்டுகள் நடக்கின்றன. மாடுபிடி வீரர்கள் அனைவரும் சாதாரண பாமரர்களே. உயிரைப் பணயம் வைக்கும் இவர்களுக்கு பெரிதாக ஒன்றும் கிடைக்கப் போவதில்லை. எங்கள் ஊர்ப்பக்கம் (சோழமண்டலம்) இந்த ஜல்லிக்கட்டில்  ஜாதி மோதல்களோ, மாடுபிடி தகராறோ  அதிகம் வந்ததில்லை. ஒருசில சின்ன தகராறுகள் பத்திரிகைகளில் மாடுபிடி தகராறு என்ற பெயரில் செய்திகளாக வெளிவரும்.

நீதிமன்ற உத்தரவுகள்:

ஐம்பது வருடங்களுக்கு முன் நடந்த காட்சிகள் இன்னும் நினைவில் இருக்கின்றன. எங்கள் அம்மாச்சி ஊர் கோயில்காளை அந்தநாளில் பிரசித்தம். அதை ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களுக்கு கொண்டு செல்வார்கள். எங்கள் சொந்தக்கார பையன்கள் இருவர் அந்த மாடு செல்லும் ஊர்களுக்கெல்லாம் கூடவே செல்வார்கள்: படிப்பை இழந்து வாழ்க்கையை வீணடித்ததுதான் அவர்கள் கண்டபலன்.

அப்போதெல்லாம் மாடு பிடிக்கப்போகும் இளைஞர்கள் மாடு முட்டி, குடல் சரிந்து இறந்த செய்திகள் அடிக்கடி வரும். அதே போல  கை போனவர்கள், கால் போனவர்கள், கண்ணில் மாட்டின் கொம்பு குத்தி ஒரு கண் குருடானவர்கள், படாத இடத்தில் பட்டு ஆண்மை இழந்தவர்கள் பற்றியும் சொல்வார்கள். இதில் மாட்டு வேடிக்கை பார்க்கப் போய் மாட்டிக் கொண்டவர்களே அதிகம். இவர்களுக்கு எந்தவிதமான இழப்பீட்டையும் அரசாங்கமோ அல்லது மாட்டு வேடிக்கை நடத்தும் ஊர்க்காரர்களோ அன்று கொடுத்தது கிடையாது. அப்புறம், நீதிமன்ற நடவடிக்கைகளுக்குப் பிறகுதான் ஜல்லிக்கட்டு நடத்துவதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டன. இழப்பீடுகள் கொடுத்தல் போன்றவை நடைமுறைப் படுத்தப் பட்டன. 

தடை வேண்டும்:

நடிகர் ராஜேஷ் – வடிவுக்கரசி - பாக்கியராஜ் நடித்த ஒருபடத்தின் பெயர் ‘கன்னிப் பருவத்திலே’. இந்த படத்தில் ராஜேஷ் ஒரு மாடுபிடி வீரர். ஒரு காளையை அடக்கும்போது, அந்தக்காளை அவரது உயிர்நிலையில் முட்டி விடுகிறது. இதனால் ஆண்மையை இழந்து விடுகிறார். கல்யாணத்திற்குப் பிறகே இந்தக் குறைபாடு தெரிய வருகிறது. இந்த மனப்போராட்டமே இந்த படத்தின் முக்கிய கரு. வில்லன் பாக்கியராஜ். அப்புறம் என்ன? விடையை யூடியூப்பில் அல்லது வெள்ளித் திரையில் காண்க. 

ஜல்லிக்கட்டால் உயிரிழந்த, காயமடைந்த குடும்பத்தினர் பற்றி யாரும் கவலைப்படுவது கிடையாது. இந்த ஊடகங்கள் அவர்களை பேட்டி எடுப்பதுமில்லை. எனவே காளைகள் மீதுள்ள இரக்கம், துன்புறுத்தக் கூடாது என்று சிலர் பேசினாலும், மனித உயிர்கள் மீதுள்ள அக்கறையினால் ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தடை வேண்டும்.

                   (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)

பிற்சேர்க்கை (16.01.16) 

ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்கள், ஒரு மாடுபிடி வீரனின் ஆர்வக் கோளாறையும், அந்த ஆர்வத்தால் மாடுபிடிக்கச் சென்று, மாடுமுட்டி ஜல்லிக்கட்டில் இறந்ததையும், அதன்பின்னர் அவன் குடும்பம் படும் அவலத்தினையும், கீழே சுட்டிக் காட்டப்பட்டுள்ள அவருடைய பதிவினில் அருமையாக படம் பிடித்து காட்டி இருக்கிறார். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய பதிவு.

தடம்மாற்றிய பண்டிகை! – சிறுகதை http://manavaijamestamilpandit.blogspot.com/2016/01/blog-post_16.html