அன்பு நண்பர்களுக்கு வணக்கம்! இன்று எனக்கு பிறந்தநாள்
(01.03.1955). வயது 63 முடிந்து 64 தொடங்கியுள்ளது. நான் உயிரோடு இருக்கிறேனா என்பதனையே,
இன்று கண் விழித்த பிறகுதான் நிச்சயம் செய்து கொண்டேன். ஏனெனில், 10 நாட்களுக்கு முன்னர்
(19.02.18 திங்கட் கிழமை - காலை 9.15 மணி அளவில் எனக்கு கடுமையான மூச்சுத் திணறலும் மயக்க நிலையும் ஏற்பட்டு, ஆபத்தான நிலைமையில், ஒரு மருத்துவமனையின் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டேன். அங்கு உடனடியாக எனக்கு வேண்டிய
முதலுதவிகளை நன்றாகவே செய்து காப்பாற்றி விட்டார்கள். பல்வேறு சோதனைகளுக்குப் பின்னர்,
எனக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், உடனடியாக இதய அறுவை
சிகிச்சை (Open Heart
Surgery) செய்ய வேண்டும்
என்றும் சொல்லி 23.02.18 வெள்ளியன்று டிஸ்சார்ஜ் செய்தார்கள்; வீட்டுக்கு சென்றுவிட்டு
ஒருவாரம் கழித்து ஆபரேஷனுக்காக வரச் சொன்னார்கள்.
(நான் ஏற்கனவே வலது முழங்கையில் வந்த பெரிய கட்டிக்கு ஒரு அறுவை
சிகிச்சை, அப்புறம் ‘appendix’ ஆபரேஷன் மற்றும் அண்மையில் விபத்து காரணமாக இடது குதிகாலில்
அறுவை சிகிச்சை – என்று மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டவன். எனவே மீண்டும் அறுவை
சிகிச்சையா என்று எனக்குள் ஒரு நடுக்கம்)
வீட்டுக்கு வந்தவுடன், எதற்கும் இன்னொரு டாக்டரிடம் (Second
Opinion) கேட்டுக் கொள்ளலாம் என்று, (27.02.18 செவ்வாய்க் கிழமை) மூத்த அனுபவம் வாய்ந்த
M.D.,D.M – Cardiologist ஒருவரிடம் சென்று முழு விவரத்தையும், எனது பயத்தினையும் சொன்னோம்.
அவரது மருத்துவ மனையில், எனக்கு ECG Scan,
BP, Urine மற்றும் Blood சோதனைகள், Echo Test மற்றும் Tread Mill Test ஆகியவை செய்யப்பட்டன
.
அதன் பிறகு மாலை 4.30 அளவில் டாக்டர் எங்களை அழைத்தார். அப்போது
அவர் // இதற்கு முன்பு நீங்கள் பார்த்த, மருத்துவ மனையில் கொடுத்துள்ள CD மற்றும் ரிப்போர்ட்டுகள்
அடிப்படையில் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருக்கின்றன. இதய அறுவை சிகிச்சை
(Bypass surgery) செய்து கொள்வதா வேண்டாமா என்பது குறித்து நீங்கள்தான் முடிவு எடுத்துக்
கொள்ள வேண்டும். அதேசமயம் இதய அறுவை சிகிச்சை செய்து விட்டதாலேயே, எல்லாம் சரியாகி
விட்டது என்று யாராலும் Guarantee தர முடியாது. யாரும் சொல்லவும் மாட்டார்கள், அறுவை
சிகிச்சைக்குப் பின்னரும் RISK மற்றும் உணவு கட்டுப்பாடு போன்றவை இருக்கத்தான் செய்யும்
// என்று சொன்னார். மேலும் இங்கு செய்த சோதனைகளிலும், உங்களுக்கு இதயத்தில் பிரச்சினைகள்
இருப்பதாகவே காட்டுகின்றன என்று சொன்னார்.
நான் எனது கருத்தாக // டாக்டர் எனக்கு இதய அறுவை சிகிச்சை செய்து
கொள்ள பயமாக இருக்கிறது; முடிந்தவரை அறுவை சிகிச்சை செய்து கொள்ளாமலேயே மருந்துகளை
எடுத்துக் கொள்ளவே விரும்புகிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அதன்படியே செய்கிறேன்
// என்று தெரிவித்தேன்.
உடனே டாக்டர் // அப்படியானால், நீங்கள் உணவு எடுத்துக் கொள்ளுவதில்
மற்றும் பழக்க வழக்கங்களில், நீங்கள் கட்டுப்பாடுடன் இருந்து கொள்ள வேண்டும்; இந்த
முறையிலும் Guarantee கிடையாது. RISK இருக்கத்தான் செய்யும் // என்று சொன்னார். மேலும்
டாக்டர் என்னிடம் எந்த மாதிரியான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும், எப்படி எப்படி எல்லாம்
கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு, முப்பது நாட்களுக்கு மருந்துகள்
எழுதி கொடுத்துவிட்டு 15 நாட்கள் கழித்து வரச் சொல்லி இருக்கிறார்.
நானும் 27.02.18 செவ்வாய்க் கிழமை இரவிலிருந்து அவர் கொடுத்த மருந்தையே
எடுத்து வருகிறேன். எல்லாம் இறைவன் செயல் மற்றும் அருள் என்று நான் நம்புகிறேன். நம்பிக்கையே
வாழ்க்கை.
( இன்று (01.03.18) எனது ஃபேஸ்புக் பக்கம் நான் எழுதியது இது.