Showing posts with label ஸ்ரீரங்கம். Show all posts
Showing posts with label ஸ்ரீரங்கம். Show all posts

Monday, 8 February 2016

ஸ்ரீரங்கம் – வலைப்பதிவர்கள் சந்தி்ப்பு (2016)



சென்ற மாதம் புதுக்கோட்டையில் நடைபெற்ற ஒரு இலக்கிய கூட்டத்தின்போது, திரு.வெங்கட் நாகராஜ் அவர்களிடம் பேசிக் கொண்டு இருந்தபோது, நியூஸிலாந்திலிருந்து வலைப்பதிவர் துளசி டீச்சர் (துளசி கோபால்) அவர்கள், அடுத்த மாதம் ஸ்ரீரங்கம் வர இருப்பதாகவும், ஸ்ரீரங்கத்தில் வலைப்பதிவர்களைச் சந்திக்க இருப்பதாகவும், எனக்கு தகவல் சொல்வதாகவும் சொல்லி இருந்தார். 

அதேபோல, சென்ற வாரம், ஞாயிறு (07.02.16) அன்று மாலை நான்கு மணிக்கு ஶ்ரீரங்கம், அம்மாமண்டபம் சாலையில், திருமதி  கீதா சாம்பசிவம் அவர்களின் இல்லத்தில், வலைப்பதிவர்கள் சந்திப்பு நடக்க இருப்பதாக எனக்கு மின்னஞ்சல் வந்தது. வெங்கட் நாகராஜ் மற்றும் கீதா சாம்பசிவம் ஆகியோர் அழைத்து இருந்தனர். இதுபற்றி மூத்த வலைப்பதிவர் திரு V.G.K. (வை.கோபாலகிருஷ்ணன்) பேசியதில் அவரும் அந்த கூட்டத்திற்கு வருவதாக சொல்லி இருந்தார்.

’கோஸி நெஸ்ட்’
 
நானும் நேற்று மாலை நாங்கள் குடியிருக்கும் K.K.நகர் பகுதியிலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு பஸ்ஸில் புறப்பட்டு சென்றேன். தை அமாவாசையை (இன்று) முன்னிட்டு நேற்று கோயில்களுக்குச் செல்லும் பக்தர்கள் கூட்டம் காரணமாக, போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தது. எனவே சரியான நேரத்தில் கூட்டம் நடக்கும் இடத்திற்கு செல்வதில் கொஞ்சம் தாமதம் ஆகி விட்டது. எனவே V.G.K. மற்றும் வெங்கட் நாகராஜ் இருவரும் செல்போனில் நான் எங்கு வந்து கொண்டு இருக்கிறேன் என்று கேட்டனர். நான் இப்படியே பஸ்ஸில் போனால், இருக்கும் நெரிசலில், இன்னும் நேரம் ஆகும் என்பதால், காவிரிப் பாலம் தாண்டியதும், மாம்பழச் சாலையில் இறங்கி, ஒரு ஆட்டோவைப் பிடித்து கூட்டம் நடக்கும் ’கோஸி நெஸ்ட்’ (COZY NEST) அபார்ட்மெண்ட் (அம்மாமண்டபம் சாலை) சென்று விட்டேன். (4.15 p.m.). மேடம் கீதா சாம்பசிவம் அவர்களது ப்ளாட்டில் எனக்கு முன்னரே எல்லோரும் அங்கு விஜயம்.

வலைப்பதிவர்கள் :

அங்கு வந்திருந்த வலைப்பதிவு நண்பர்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இந்த சந்திப்பிற்கு முக்கிய காரணமான துளசி டீச்சரும் , அவரது கணவர் திரு.கோபால் அவர்களும் நியூஸிலாந்திலிருந்து வந்து இருந்தனர். திரு வெங்கட் நாகராஜ் அவர்கள் தனது மனைவி திருமதி. ஆதி வெங்கட் மற்றும் மகள் ரோஷிணி (இருவரும் வலைப்பதிவர்கள்) ஆகியோருடன் வந்து இருந்தார். எழுத்தாளர் ரிஷபன் அவர்கள் தனது மனைவியுடன் (பெயர் கேட்க மறந்து விட்டேன்) வந்து இருந்தார். இன்னும் மூத்த வலைப்பதிவர்கள் திருமதி ருக்மணி சேஷசாயி, திரு. வை.கோபாலகிருஷ்ணன் மற்றும் திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி ஆகியோரும் (மூவருமே எழுத்தாளார்கள்) வந்து இருந்தனர்.

(படம் – மேலே) துளசி கோபால் தம்பதியினர்
(படம் – மேலே) கீதா சாம்பசிவம் மற்றும் துளசி கோபால் தம்பதியினர்
(படம் – மேலே) துளசி டீச்சர் அவர்களிடம் நான் புத்தகம் கொடுத்தபோது

அன்பான உபசரிப்பும் கலந்துரையாடலும்:

தங்கள் இல்லத்திற்கு வந்து இருந்தவர்களை கீதா சாம்பசிவம் தம்பதியினர், சூடான ரவாகேசரி, சூடான போண்டாக்கள் (சட்னியுடன்), சுவையான சூடான காபி தந்து அன்புடன் வரவேற்று உபசரித்தனர். 

ரவாகேசரியைப் பார்த்தவுடன் எழுத்துலக நண்பர்களுக்கு தாங்கள் பெண் பார்க்கப் போனபோது, பெண் வீட்டார் கொடுத்த ரவாகேசரியை ‘இனிமையாக’ நினைவு கூர்ந்தனர். எழுத்தாளர்கள் திரு. ரிஷபன், திரு. V.G.K மற்றும் திரு ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி மூவருமே BHEL இல் பணி புரிந்த நாளிலிருந்து நண்பர்கள்; (திரு V.G.K பணி ஓய்வு பெற்று விட்டார்). மூவரும் நகைச்சுவையாக நிறைய ஜோக்குகளையும் எழுத்துலக அனுபவங்களையும் சொன்னார்கள். வெங்கட் கேமராவும் கையுமாக இருந்தார். எல்லோரையும் தனது கேமராவினால் சுட்டார். விரைவில் அவரிடமிருந்து அதிக படங்களுடன் பதிவு ஒன்றை எதிர்பார்க்கலாம். துளசி டீச்சரும், அவரது கணவர் கோபால் சாரும் தங்களது பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

(படம் – மேலே) வை.கோபாலகிருஷ்ணன் மற்றும் ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி ஆகியோருடன் நான்
(படம் – மேலே) ரிஷபனின் மனைவி, ருக்மணி சேஷசாயி, ரோஷிணி, கீதா சாம்பசிவம், ஆதி வெங்கட் மற்றும் துளசி கோபால்


(படம் மேலே) திரு (கீதா) சாம்பசிவம் அவர்களுடன் வை.கோபாலகிருஷ்ணன்
 (படம் மேலே) துளசி கோபால், ருக்மணி சேஷசாயி மற்றும் வெங்கட் நாகராஜ்

எழுத்தாளர் ரிஷபன் அவர்கள் தான் எழுதிய ‘முற்று பெறாத ஓவியம்’ என்ற நுலினை எல்லோருக்கும் அன்பளிப்பாக வழங்கினார். ‘உலகத் தமிழ் வலைப்பதிவர் கையேடு’ என்ற நூலினை டீச்சர் துளசி கோபால் அவர்களிடம் கொடுத்தேன். ( இந்த கையேடு வலைப்பதிவர் திருவிழா – 2015 வில், கணினித் தமிழ்ச்சங்கம், புதுக்கோட்டை வெளியிட்டது ஆகும்). டீச்சர் ருக்மணி சேஷசாயி அவர்கள் தனது கையினால் செய்ஆ மணிமாலைகளை, அன்று அங்கு வந்திருந்த பெண்களுக்கு அன்புப் பரிசாக வழங்கினார்; மேலும் மறுபடியும் அவர்கள் சென்னைக்கே சென்று குடிபோகப் போவதாகவும் சொன்னார். 

(மேடம் கீதா சாம்பசிவம் அவர்கள் சோர்வாக இருந்தார். அவரது பதிவைப் பார்த்த பிறகுதான், அவருக்கு அன்று திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்ட விஷயம் தெரிய வந்தது) 

மாடியிலே: 

எல்லோரும் ஓரளவுக்கு பேசி ஓய்ந்ததும், திரு. சாம்பசிவம் அவர்கள் எல்லோரையும் தாங்கள் இருக்கும் அபார்ட்மெண்ட் மாடிக்கு அழைத்துச் சென்றார். (மேடம் கீதா சாம்பசிவம் அவர்கள் மட்டும் வீட்டிலேயே இருந்து கொண்டார்), மாடியிலிருந்து காவிரியைக் கண்டதும் ’நடந்தாய் வாழி காவேரி’ என்று பாடத் தோன்றிற்று. 

(படம் மேலே) மேற்குச் சூரியன்
(படம் மேலே) தென்னைகள் நடுவினில் தெரியும் மலைக்கோட்டை
(படம் மேலே) கம்பீரமான ராஜகோபுரம் –
(படம் மேலே) குடிநீர்க் குழாய்கள்


V.G.K. அனுப்பி வைத்த படங்கள்:

கூட்டம் தொடங்கியதிலிருந்து திரு.V.G.K. (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களும் மற்றவர்களும் நிறைய படங்கள் எடுத்து இருந்தனர். நானே அவரிடம், அவர் எடுத்த போட்டோக்களை கேட்டுப் பெற வேண்டும் என்று நினைத்து இருந்தேன். நான் கேட்பதற்கு முன்னதாகவே அவற்றை மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார். அவருக்கு நன்றி! அவற்றிலிருந்து சில படங்கள் (கீழே).

                                                               – x – x – x –
இந்த பதிவர் சந்திப்பு பற்றிய மற்றைய நண்பர்களது பதிவுகள்:

திருச்சி, ஶ்ரீரங்கத்தில் பதிவர்கள் மாநாடு!
http://sivamgss.blogspot.in/2016/02/blog-post_7.html

திருவரங்கத்தில் பதிவர் சந்திப்புஃபிப்ரவரி 2016 http://venkatnagaraj.blogspot.com/2016/02/2016.html
 

Thursday, 16 July 2015

அமல அன்னை சர்ச் - அமலாஸ்ரமம் (ஸ்ரீரங்கம்)



சென்ற மாதத்தில் ஒருநாள். எனக்கு தெரிந்த கிறிஸ்தவ நண்பரிடமிருந்து போன். தனது மகனுக்கு ஸ்ரீரங்கத்தில் உள்ள அமலாஸ்ரமம் சர்ச்சில் திருமணம் என்றும் காலையிலேயே வந்து விடும்படியும் அழைப்பு. நானும் சீக்கிரமே, அங்கு சென்று விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில், அன்றைக்கு காலையிலேயே எங்கள் பகுதியில் இருக்கும் ஒருவருக்கு திருமணம் என்று அழைப்பு வந்தது. அதற்கும் போக வேண்டும். இதற்கும் போக வேண்டும். எனவே சர்ச்சில் நடைபெற்ற நண்பரின் மகன் திருமணத்திற்கு தாமதமாக சாப்பாட்டு வேளையில்தான் செல்ல முடிந்தது.

திருச்சி – ஸ்ரீரங்கம் சாலையில், மாம்பழச் சாலையிலிருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலையில் காவிரிக் கரையில் அமைந்துள்ளது அமலாஸ்ரமம் எனப்படும் அமல அன்னை சர்ச். இங்கு “AMALA ANNAI CAPUCHIN PROVINCE’ எனப்படும் கிறிஸ்தவ சமயத்துறவிகளின் பயிற்சி மையமும் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.  

நான்காவதோ அல்லது ஐந்தாவதோ படித்தபோது, நான் படித்த ஆர்.சி. நடுநிலைப் பள்ளியில் (பட்டர் ஒர்த் ரோடு,திருச்சி.2) இருந்து, ஆசிரியைகள் எங்களை இந்த சர்ச்சிற்கு அழைத்து வந்தபோதுதான்  எனது முதல் வருகை. அப்போது இவ்வளவு வாகன வசதி கிடையாது. எனவே பழைய காவிரி பாலம் வழியாக நடந்துதான் வந்தோம். அப்புறம் நாங்கள் குடியிருந்த பகுதியில் இருந்த கிறிஸ்தவ நண்பர்களோடு சில தடவை வந்து இருக்கிறேன். எனவே பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்த உற்சாகத்தில், மதியநேரம் என்றபோதும்,  நான் சில படங்களை எனது கேமராவில் எடுத்துக் கொண்டேன்.

 (படம் - மேலே) அமல அன்னை கெபி முன்பு நான்


 (படம் - மேலே) அமல அன்னை கெபி முன்பு எனது மகன் 



சிறிய தேவாலயமாக இருந்தாலும் காவிரிக் கரையில் அமைந்து இருக்கின்ற படியினால், மரங்கள் மற்றும் நந்தவனம் சூழ்ந்து மிகவும் அழகான அமைதியான  சூழ்நிலையில் இருக்கிறது. நான் சிறுவனாக (சுமார் 50 வருடங்களுக்கு முன்னர்) இருந்து இந்த தேவாலயம் வந்தபோது சுற்றிப்பார்க்க அவ்வளவு கட்டுப்பாடு இல்லை. இப்போது சூழ்நிலையின் காரணமாக வழிபாடு நேரம் தவிர மற்ற நேரங்களில் ஆலயத்தைப் பார்க்க கட்டுப்பாடுகள்.

அவர்கள் இணையதளத்திலிலிருந்து சில புகைப் படங்கள் இங்கே:















 













அமலாஸ்ரமம் பற்றிய மேல் அதிக விவரங்களுக்கு கீழே உள்ள இணைய முகவரியை “க்ளிக்” செய்யவும்.




Sunday, 12 January 2014

வைகுண்ட ஏகாதசி - ஸ்ரீரங்கன் தரிசனம்



பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா! அமரேறே! ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.  
                                                                 - தொண்டரடிப்பொடியாழ்வார்  

நேற்று (11.12.2014) ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா. நான் இந்த திருவிழாவுக்கு அடிக்கடி சென்றதில்லை. வங்கியில் வேலைக்கு சேர்ந்த புதிதில், முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பர் A R பாலசுப்ரமண்யன் என்பவரோடு இரண்டு தடவை காலையில் பரமபத வாசல் வழியே சென்று இருக்கிறேன். நேற்று நான் மட்டும் தனியே மாலை ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றேன்.

பஸ் ஸ்டாண்டில்:

திருச்சி மத்திய பேருந்து நிலையம் சென்றேன். ஸ்ரீரங்கம் செல்லும் பஸ் ஒவ்வொன்றும் நிரம்பியே சென்றன. ஸ்ரீரங்கம் பஸ் நிலையம் வந்து இறங்கியவுடன் ராஜகோபுரத்தினை படம் எடுத்துக் கொண்டேன். எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம் மற்றும் கட்டுப்படுத்தும் வழிகாட்டும் போலீசார். இன்னொரு இடத்தில், பஸ் ஸ்டாப் கூரையின் கீழ் வட இந்தியர்கள் கும்பலாக அமர்ந்து இருந்தனர்.  

(படங்கள் - ஸ்ரீரங்கம் ராஜகோபுரம். 

(படம் - மேலே) வைகுண்ட ஏகாதசிக்கு வந்து இருந்த வட இந்தியர்கள்.

ராஜகோபுரம் வழியாக:

பின்னர் ராஜகோபுரம் வழியாக ஸ்ரீரங்கம் கோயில் நோக்கி நடந்தேன். வழியில் சில காட்சிகள். முன்பெல்லாம் சாலை எங்கும் அன்னதானம், குடிநீர் பாக்கெட்டுகள் வழங்குதல் நடைபெறும். இப்போது அனுமதி பெற்றுத்தான் இவற்றை செய்ய வேண்டும். இது பற்றிய விவரங்கள் அடங்கிய ப்ளக்ஸ் பேனர்கள் ஆங்காங்கே அம்மா படத்துடன் அரசுத்துறை சார்பாக  வைக்கப்பட்டு இருந்தன. மற்றும் காவல்துறை அறிவிப்பு பேனர்களும் இருந்தன. மேலும் ஒவ்வொரு சின்ன கோபுரத்தின் அருகிலும்  பழைய செருப்புகள் நிறைய குவிந்து கிடந்தன. (கோயிலுக்கு வரும் பல பக்தர்கள் தாங்கள் அணிந்து வந்த செருப்புகளை, அப்படியே விட்டு விட்டு, வெறுங் காலுடன் கோயிலுக்குச் செல்வார்கள். தரிசனம் முடிந்ததும் வெளியே கடைகளில் புதிதாக வாங்கிக் கொள்வார்கள்)

(படம் மேலே) உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அறிவிப்பு.

(படம் - மேலே) கடை வீதியில்

(படம் மேலே) ராஜகோபுரம் நுழைவு வாயில்


(படம் மேலே) உள் கோபுரங்கள்

ரெங்கா கோபுரம் வெள்ளை கோபுரம்:

ரெங்கா கோபுரம் நுழைவு அருகே நிறைய போலீஸ். ஏகப்பட்ட கெடுபிடிகள்.. போலீசார் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பும், திரும்ப கிடைத்தவர்கள் பற்றிய அறிவிப்பும் செய்து கொண்டே இருந்தனர். பாராட்டப்பட வேண்டிய விஷயம். ரெங்கா கோபுர வாசலில் யாரையும் நிற்க விடவில்லை. பரமபத வாசல் செல்ல நீண்ட வரிசை. மூங்கில் கம்புகளைக் கொண்டு தடுப்புகள். மேற்கில் செல்லும் வரிசையைப் பார்க்கச் சென்றேன். அந்த வரிசையில் சென்றுவர அரைநாள் ஆகி விடும்போல் இருந்தது.

(படம் மேலே) பரமபத வாசல் செல்ல நீண்ட வரிசை

எனவே ஸ்ரீரங்கத்தில் இருந்த எனது நண்பர் சங்கர் என்பவருக்கு செல்போனில் விவரத்தைச் சொல்லி யோசனை கேட்டேன். அவர் “ இன்று பரமபத வாசல் வழியாக செல்ல வேண்டாம். இன்னொரு நாள் செல்லுங்கள். வெள்ளை கோபுரம் வழியாக ஆயிரங்கால் மணடபம் செல்லுங்கள். அங்கே மண்டபத்தில் பெருமாளின் ரத்னாங்கி சேவை. பெருமாள் தரிசனம் உண்டுஎன்றார். செருப்புகளை அருகே இருந்த கடையில் போட்டுவிட்டு டோக்கன் வாங்கிக் கொண்டேன். அவர் சொன்னபடியே வெள்ளை கோபுரம் நோக்கி செல்லத் தொடங்கினேன். இதற்கிடையே கிழக்கிலிருந்து ஒரு 108 ஆம்புலன்ஸ் சைரனோடு கோபுர வாசலில் வந்து நின்றது. யாரையும் அங்கு நிற்கவிடாமல் விரட்டினார்கள். படம் எடுக்க முடியவில்லை. நான் வெள்ளை கோபுரம் நோக்கி நகர்ந்தேன். வழியில் நாமம் போட்ட யானை ஒன்றை வைத்து ஆசீர்வாதம் தந்து காசு வாங்கிக் கொண்டு இருந்தார் ஒரு பாகன். ( கோயில் யானை ஆண்டாளை புத்துணர்வு முகாமிற்கு அனுப்பி விட்டார்கள். கோயில்களில் முக்கியமான விழாக்கள் நடைபெறும் மார்கழியில் கோயில் யானைகளுக்கு இது மாதிரி முகாம் தேவையா?)

(படம் மேலே) வெள்ளை கோபுரம்

(படம் மேலே) இதுவும் வெள்ளை கோபுரம்


 (படம் மேலே) வெள்ளை கோபுரம் அருகே யானயும் பாகனும் 

ஆயிரங்கால் மண்டபம்

உள்ளே ஆயிரங்கால் மண்டபத்தின் வாசலில் பல பக்தர்கள் அசதியினால் தூங்கிக் கொண்டு இருந்தனர். இன்னொரு பக்கம் கோயில் பிரசாதம் விற்பனை நடந்து கொண்டு இருந்தது. உணவுப் பொருட்களின் விலை விவரத்தினை கீழே உள்ள படத்தில் காணலாம்..

(படம் மேலே) கோயில் பிரசாதம் விற்பனை 

(படம் மேலே) பிரசாதம் விலைப் பட்டியல்

(படம் மேலே) ஆயிரங்கால் மண்டபத்தின் வாசலில் பக்தர்கள்



(படங்கள் மேலே) அரங்கன் தரிசனம்

ஸ்ரீ ராமானுஜர் சன்னதி:

நான் எப்போது ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றாலும் அங்குள்ள ஸ்ரீ ராமானுஜர் சன்னதி தவறாமல் செல்லுவேன். இந்த தடவை சன்னதிக்குள் நுழைய முடியவில்லை. அவ்வளவு கும்பல். 

(படங்கள் மேலே) இன்னும் சில காட்சிகள்

(படம் மேலே) ஸ்ரீ ராமானுஜர் சன்னதி


பின்னர் கருடாழ்வார் அருகே வந்தபோது, சிலர் அங்கே ஸ்ரீமத் பகவத் கீதை (தமிழ் மூலம் பொழிப்புரை) புத்தகத்தை இலவசமாகத் தந்தார்கள். எனக்கும் இரண்டு தந்தார்கள். (நான் ஏற்கனவே படித்ததுதான்)


வெளியில் வந்து பஸ் ஏறி வீடு வந்து சேர்ந்தேன்.

பொது சுகாதாரம்:

முப்பது வருடத்திற்கு முன்பு ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வைகுண்ட ஏகாதசி அன்று வந்தால் ஊரையே நாறடித்து இருப்பார்கள். அவசரத்திற்கு ஒதுங்க இடம் இருக்காது. எனவே கோயிலுக்கு போவதென்றால் அதிகம் சாப்பிடாமல், அதிகம் தண்ணீர் அருந்தாமல், வயிறு விஷயத்தில் கவனத்தோடும் செல்வேன். இப்போதும் அப்படியே சென்றேன். இந்த தடவை ஆங்காங்கே மாநகராட்சியின்  இலவச கழிப்பிடங்களையும், மொபைல் டாய்லெட்டுகளையும் மற்றும் தனியார் நடத்திய கட்ட்ணக் கழிப்பிடங்களையும் காண முடிந்தது. சுகாதார அடிப்படையில் இது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

குறிப்பு: இங்கு மேலே உள்ள அனைத்து படங்களும்  கேனான் டிஜிட்டல் கேமரா (CANON POWERSHOT A800) வினால் எடுக்கப்பட்டவை.