Showing posts with label அ.தி.மு.க. Show all posts
Showing posts with label அ.தி.மு.க. Show all posts

Monday, 24 April 2017

சசிகலா எதிர்ப்பு அரசியல்



மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும் , கலைஞர் கருணாநிதியும் திரையுலக நண்பர்கள். இந்த நட்பு அரசியலிலும் தொடர்ந்தது. அறிஞர் அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் கருணாநிதியா அல்லது நாவலர் நெடுஞ்செழியனா என்ற கேள்வி வந்த போது., அப்போது கட்சிக்கு வெளியே உள்ள பலரும் சொன்ன வாசகம் படித்த நாவலர்தான் வர வேண்டும் என்பது. ஆனால் அப்போது, எம்.ஜி.ஆர் தனது திரையுலக நண்பர் கருணாநிதிக்கு ஆதரவு தந்தார். நாவலருக்கென்று கோஷ்டி அரசியல் நடத்த ஆட்கள் இல்லை. கட்சித் தொண்டர்களின் ஆதரவும் கலைஞருக்கே இருந்தது. கலைஞர் கருணாநிதி முதலமைச்சர் ஆனார்.

கருணாநிதி எதிர்ப்பு அரசியல்

முதல்நாள் ஒரு தி.மு.க மாநாட்டில் கட்சிக்காக இராணுவத்தையே எதிர்ப்பேன் என்ற எம்.ஜி.ஆர், ஒருநாள் கட்சியிலுள்ள ஒவ்வொரு உறுப்பினர் உட்பட மேலிடம் வரை அனைவரின் சொத்துக் கணக்கையும் காட்ட வேண்டும் என்றார். தி.மு.கவை உடைக்க, இந்திரா காங்கிரசின் சதி என்றார்கள். எம்ஜிஆர் தி.மு.கவை விட்டு நீக்கம் செய்யப்பட்ட போது ‘எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டார்; கருணாநிதி அவரை கட்சியை விட்டு நீக்கி விட்டார்” என்று பிரச்சாரம் செய்தார்கள். மேலும் கட்சியின் தொண்டர்கள் பலரும் எம்.ஜி.ஆருக்குப் பின்னாலேயே சென்றார்கள். அதன் பின்னர் எம்.ஜி.ஆர் அவர்கள், அ.தி.மு.க என்ற தனிக்கட்சி தொடங்கியதும் ஆட்சியைப் பிடித்ததும் எல்லோரும் அறிந்த வரலாறு. அன்று தொடங்கிய கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்பது, எம்.ஜி.ஆருக்குப் பின் வந்த ஜெயலலிதாவின் காலத்திலும் தொடர்ந்தது.

தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக எது நடந்தாலும் அதற்குக் காரணம் கருணாநிதிதான் என்று சொன்னார்கள்; காவிரிப் பிரச்சினை ஆனாலும், இலங்கைத் தமிழர் பிரச்சினை என்றாலும் கருணாநிதிக்கு எதிராகவே வை.கோபால்சாமி, நடராஜன் (சசிகலா), பழ.நெடுமாறன், சுப்ரமணியன் சுவாமி, போன்ற தி.மு.க எதிர்ப்பாளர்கள் திட்டமிட்டு பிரச்சாரம் செய்தார்கள். இந்த கருணாநிதி எதிர்ப்பு அரசியலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். வெளியே இவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்த விஷயத்தில் இவர்களுக்குள் ஒரு UNDERSTANDING உண்டு. கருணாநிதி எது செய்தாலும் எதிர்ப்பார்கள்; ஆனால் அதே காரியத்தை ஜெயலலிதா செய்தால் வாயே திறக்க மாட்டார்கள். ஜெயலலிதா காலத்தில் இன்னும் வேகமாக கருணாநிதியை ஒரு தீயசக்தி என்று சொல்லி அரசியல் நடந்தது. கலைஞர் கருணாநிதியின் குடும்பம் சார்ந்த அரசியலும் தி.மு.க ஆட்சியில் ’குறுநில மன்னர்கள்’ பாணியில் மாவட்டத் தலைவர்கள் செய்த பரிபாலனமும் இந்த எதிர்ப்பிற்கு வலு சேர்த்தன.

சசிகலா அரசியல்

சசிகலாவின் அரசியல் என்பது, ஜெயலலிதாவோடு நட்பு தொடங்கிய காலத்திலிருந்தே தொடங்கி விட்டது எனலாம். ஜெயலலிதாவை முன்னிலைப் படுத்தி நிழல் அரசியல் நடத்தியவர் இந்த சசிகலாவை இயக்கியவர் அவரது கணவர் நடராஜன். இந்த அரசியலுக்கு மேலே சொன்ன கருணாநிதி எதிர்ப்பு அரசியல் பக்க பலமாக விளங்கியது.
இப்போது வரலாறு திரும்பி விட்டது. ஜெயலலிதா மறைவினாலும், கருணாநிதியின் உடல்நிலையாலும் இப்போது கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்பது மங்கி விட்டது. கலைஞருக்குப் பின்னால் தி.மு.க எப்படி என்று சொல்ல முடியாது. எனவே கருணாநிதி எதிர்ப்பு அரசியல் என்பது எதிர்மறை பலனையே தரும். அதேபோல இறந்து போன ஜெயலலிதாவை குற்றவாளி என்று திரும்பத் திரும்ப சொன்னாலும் எதிர்மறை பலன்தான். ( நமது நாட்டில் எப்போதுமே, இறந்தவர்களை அவர் எவ்வளவு பொல்லாதவராக இருந்தாலும் மன்னித்து, நல்லவராக்கி விடுவார்கள்: இது தெரியாத ஸ்டாலின் ஜெயலலிதாவை தூற்றுவதில் அரசியல் சாணக்கியத்தனம் இல்லை.. பி.ஜே.பியிலிருந்து ஜெயலலிதா பற்றிய விமர்சனம் எதுவும் இல்லை என்பதிலிருந்தே அவர்களின் யுத்தியை அறிந்து கொள்ளலாம் ) இந்த சூழ்நிலையில் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், இதுநாள் வரை சசிகலா நடராஜன் என்று அழைக்கப்பட்ட இவர் இப்போது வி.கே.சசிகலா என்ற பெயரில், சின்னம்மாவாக உருவெடுத்து இருக்கிறார்.

சசிகலா எதிர்ப்பு அரசியல்

அன்றைக்கு திமுகவை விட்டு வெளியே வந்த எம்.ஜி.ஆருக்கும், எம்.ஜி.ஆருக்குப் பின் வந்த ஜெயலலிதாவிற்கும் ஜாதி மத அபிமானங்களைக் கடந்த  கட்சித் தொண்டர்கள் என்ற ஆதரவு இருந்தது. ஆனால் இப்போது அரசியல் பிரவேசம் செய்துள்ள சசிகலா நடராஜனுக்கு இந்த தொண்டர்கள் ஆதரவு இல்லை. எனினும் ஜெயலலிதா மறைவிற்குப் பின், முதல்வர் பதவியை அடைய ரொம்பவும் சாமர்த்தியமாகவே காய்களை நகர்த்தினார். ஏனெனில் அ.தி.மு.க.வில் உள்ள எம்.எல்.ஏக்கள் அனைவருமே ( ஓ.பி.எஸ் உட்பட) சசிகலாவால் தேர்வு செய்யப்பட்டவர்கள். ஆனால் கோர்ட் தீர்ப்போ அவரை சிறைக்குள் தள்ளி விட்டது. இப்போது சிறையில் இருந்தபடியே, தமிழ்நாட்டின்  அரசியல் அதிகாரத்தை தனது கைக்குள் வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறார். ஆனால் தமிழ்நாட்டில் பெரும்பான்மையோர் ஜாதி, மதம் கடந்து சொல்லும் ஒரு வாசகம் “வேறு யார் வேண்டுமானாலும் வரட்டும். ஆனால் இந்த சசிகலா வகையறாக்கள் மட்டும் வர வேண்டாம்” என்பதே. அந்த அளவுக்கு வெளியே வெறுப்பு அனல் பறக்கிறது. இதனாலேயே, ஓ.பி.எஸ் எனப்படும் ஓ.பன்னீர்செல்வம் மீது என்ன விமர்சனம் இருந்தாலும் பலரும் அவற்றை கண்டு கொள்வதில்லை. மத்தியில் ஆளும் பி.ஜே.பியும் தாங்கிப் பிடிக்கிறது.. ( சசிகலா - நடராஜன் மட்டும் தனக்கு ஜெயலலிதாவிடம் இருந்த செல்வாக்கை வைத்து, தமிழ், தமிழர் நலன் என்று தமிழ்நாட்டு நலனிலும் உண்மையான அக்கறை காட்டி வெளிப்படையான அரசியல் செய்து இருந்தால், இன்று எங்கோ உயர்ந்து இருப்பார் ; இவருக்கென்று ஒரு ‘மாஸ்’ ( mass ) உருவாகி இருக்கும். ஆனால், நிழல் மனிதர்கள் வெளிச்சத்தில் மறைந்து போய்விடுவார்கள் என்பதே நிதர்சனமான உண்மை.)

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, சட்டசபையில் “நான் ஒரு பாப்பாத்தி“ என்று தன்னை சொல்லிக் கொண்டாலும், பிராமணர்களுக்காக அவர் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை என்பதே அந்த சமூக மக்களின் கருத்து. இன்றும் ”ஜெயலலிதா கெட்டிக்காரி” என்று வாயால் சொன்னாலும், அவரைப் பற்றி அவர்கள் சொல்லும் ஒருவரி விமர்சனம் ‘பிடிவாதக்காரி’ என்பதே. பிராமணர்களில் பலருக்கு இன்னும் காஞ்சி சங்கராச்சியார் ஜெயேந்திரரை கைது செய்த விவகாரத்தில் யார் பின்புலம் என்பதை மறக்க மாட்டாதவர்களாகவே உள்ளனர்.  
   
அடுத்து என்ன?

எம்.ஜி.ஆர் அபிமானம், ஜெயலலிதாவின் செல்வாக்கு என்ற காரணங்களால் கிடைத்த, தற்போதுள்ள ஆட்சி, அதிகாரம், எம்.எல்.ஏ பதவி என்ற காரணங்களுக்காக – இந்த பதவியில் உள்ளவர்கள் மட்டுமே சசிகலாவை ஆதரித்தார்கள். அவர் கைகாட்டிய எடப்பாடி பழனிச்சாமியை தமிழக முதல்வராக தேர்ந்தெடுத்தார்கள். தினகரன் மூலம் தனது பதவிக்கு ஆபத்து என்றதும், இவரும் ஓ.பி.எஸ் போலவே இப்போது சசிக்கு எதிராக கலகக்குரல் எழுப்புகிறார். எத்தனை நாட்களுக்கு இப்படியே ஓடும்? ஒருவேளை ஆட்சி கலைக்கப்பட்டு அல்லது கவிழ்க்கப்பட்டு ஜனாதிபதி ஆட்சி வருமேயானால், எல்லாம் தலைகீழ்தான்.

ஆனால் அ.தி.மு.கவில் ஜெயலலிதாவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை, சசிகலாவிற்கான எதிர்ப்பை, தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் காலூன்ற, மேலே மத்தியில் ஆளும் கட்சியாக உள்ள பி.ஜே.பி முயற்சி செய்து வருகிறது. இதற்கு அ.தி.மு.கவை தங்கள் கைப்பாவையாக்கி, அவர்களை முன்னிறுத்தி காரியம் நடைபெற்று வருவது எல்லோரும் அறிந்த ஒன்று. இதற்கு தி.மு.க எதிர்ப்பு அரசியல் நடத்துபவர்களது மறைமுக ஆதரவும் உண்டு. காரணம் அவர்கள், வெளியே பெரியார் கொள்கை, தமிழ் தேசியம், ஈழம் என்று பேசினாலும் அவர்களைப் பொருத்தவரை யார் ஆட்சிக்கு வந்தாலும் தி.மு.க மட்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர்கள் மேலும் கலைஞரின் நேரடி வழிகாட்டுதல் இல்லாத இல்லாத திமுக இனி எப்படி பயணம் செய்யும் என்று சொல்ல முடியாது. இது திராவிட பூமி, பெரியார் மண், இங்கு பி.ஜே.பியை விட மாட்டோம் என்பதெல்லாம், சிலர் தமக்கு தாமே சொல்லிக் கொள்ளும் ஆறுதல் வார்த்தைகள் ஒழிய வேறு இல்லை. ஏனெனில் இவர்களுக்குள் ஒரு ஒருங்கிணைப்போ, ஒற்றுமை உணர்வோ அல்லது சகிப்புத் தன்மையோ கிடையாது .தமிழ்நாட்டில் பொதுத் தேர்தல் என்று வந்தால், அ.தி.மு.க - பி.ஜே.பி கூட்டணி என்று ஒன்று உருவாகி, சட்டசபைக்குள் பி.ஜே.பிக்கு என்று சில சீட்டுகள்  கிடைத்தாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றும் இல்லை. 

(பேசாமல் ஆந்திராவில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, ‘பிரஜா ராஜ்யம்’ என்ற, தான் தொடங்கிய கட்சியை காங்கிரசில் கரைத்தது போல அ.தி.மு.கவை பா.ஜ.கவில் இணைத்து விடலாம் )
   
( ஒரு மாதத்திற்கு முன்பே எழுதி வைக்கப்பட்ட கட்டுரை இது. கால மாறுதலுக்கு ஏற்ப, கொஞ்சம் திருத்தி வெளியிட்டுள்ளேன் )                        
                           xxxxxxxxxxxxxxxxxxx .

தொடர்புடைய எனது பிற பதிவுகள்

ஜெயலலிதா - கண்ணீர் அஞ்சலி! http://tthamizhelango.blogspot.com/2016/12/blog-post_7.html
மீண்டும் ஆட்சியில்அம்மாதான் http://tthamizhelango.blogspot.com/2016/02/blog-post_20.html

Monday, 13 February 2017

முதல்வர் பதவியும் சரஸ்வதி சபதமும்



’கிடக்கிறதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை’ – என்ற கதையாக, இருக்கிற பிரச்சினைகளை யெல்லாம் விட்டு விட்டு, இப்போது ’சசிகலா முதல்வர் ஆகலாமா?” என்று இருபக்கமும் விவாதம் நடைபெறுகிறது. தற்போதைய முதல்வர் ஓ.பி.எஸ் அவர்களின் திடீர் தியானப் புரட்சியும், பேட்டிகளும் தமிழக அரசியலை, இன்னும் சூடாக்கி விட்டது. சசிகலா நடராஜனுக்கு ஆதரவாக அப்போலோ புகழ் சி.ஆர் சரஸ்வதி, வளர்மதி போன்றவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை செய்ய, டீவி காட்சிகளில் வந்து விட்டார்கள். பழ.நெடுமாறன், தோழர் தா.பாண்டியன், போன்றவர்களும் தங்களது விசுவாசக் குரலை ஒலிக்கத் தொடங்கி விட்டார்கள். எதிர்க்கட்சி என்ற முறையில் ஸ்டாலின் போன்றவர்கள் தங்களது அரசியலை தொடங்கி விட்டார்கள். மக்களும் பணப் பிரச்சினை, ரேஷன் பிரச்சினை, ஆதார் குழப்பங்கள், பீட்டாவுக்கு தடை, மெரினா தாக்குதல் போன்றவற்றை மறந்து விட்டு நாடகமேடைப் பக்கம் வேடிக்கை பார்க்க வந்து விட்டதில், மத்தியில் ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி கட்சியினருக்கு, அப்பாடா என்று ஒரு ஆசுவாச பெருமூச்சு. 

எங்கே தவறு?

இந்திய ஜனநாயக அரசியல் முறைப்படி, யார் வேண்டுமானாலும் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் தலைவர் ஆகலாம், பெரும்பான்மை ஜனநாயகம் என்ற அடிப்படையில் அந்த கட்சியினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள்,, முதல்வரை  தேர்ந்தெடுக்கலாம் என்று அரசியல் சாசனம் சொல்வதால், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா முதல்வர் பதவி கோருகிறார். அவர் அந்த பதவிக்கு தகுதியானவரா இல்லையா என்பதற்கு இங்கு எந்த அளவுகோலும் இல்லை.

சட்டமன்றக் கூட்டம் நடக்கும்போதே, பார்வையாளராக வந்த சசிகலாவை, சபாநாயகர் ஆசனத்தில் உட்காரவைத்து விட்டு, ’நான் அப்படித்தான் செய்வேன்? உங்களால் என்ன செய்ய முடியும்?” என்று மற்றவர்களை ஒரு பார்வை பார்த்தவர் ஜெயலலிதா.
  
ஓ.பி.எஸ்சின் கலகக்குரல்

நெடுநாள் தனக்கு ஏற்பட்ட அவமானத்தையும், மனதுக்குள் இருந்த மன அழுத்தத்தையும் மெரினாவில் போட்டு உடைத்து விட்டார் ஓ.பி.எஸ். இக்கட்டான சமயங்களில் மட்டும், தேவைப் படும்போது தன்னை பயன்படுத்திக் கொண்டதையும், இப்போது அவமானப்பட்டதையும் அவரால் தாங்கிக் கொள்ள முடியாததன் வெளிப்பாடே அவருடைய காலங்கடந்த திடீர்க் கலகம். சூழ்ச்சி அரசியலில் இதெல்லாம் சகஜம். தி.மு.கவை விட்டு எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டபோது இருந்த நிலைமைதான் இப்போது அ.தி.மு.கவிலும் உண்டாகி இருக்கிறது. ஆனால் ஒ.பி.எஸ் அவர்களை எம்.ஜி.ஆரோடு ஒப்பிட முடியாது. வி.கே.சசிகலா என்ற சின்னம்மா தோற்றத்திலும் உடை அலங்காரத்திலும் தன்னை ஜெயலலிதாவாக காட்டிக் கொள்வதை நிறையபேர் ரசிக்கவில்லை. அவர் சசிகலாவாகவே இருக்கட்டும். மெரினா புரட்சியில், பல்வேறு பிரச்சினைகளும் ‘ஜல்லிக்கட்டு’ என்ற மையப் புள்ளியில் குவிந்ததைப் போன்று, சசிகலாவுக்கு எதிரான எல்லா எதிர்ப்புக் குரல்களும் ஓ.பி.எஸ்சுக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டில் ஒன்று சேர்ந்துள்ளன. பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு யாருக்கு இருக்கிறது என்பதும், இரட்டை இலை யாருக்கு என்பதும் ஒரு பொதுத்தேர்தல் வந்தால்தான் தெரியும்.

கதைகளும் கற்பனைகளும்

நமது நாட்டில் மன்னர் ஆட்சியின்போது சாமான்யன் கேள்வி கேட்கமுடியாது, அரசாள முடியாது. ஆனால் சாமான்யன் அரசனை கேள்வி கேட்பது போலவும், அரசன் சாதாரண மக்களிடம் கருத்து கேட்பது போலவும் கதைகள் உண்டு. அரச வம்சத்தில் வாரிசு இல்லாத நிலையில். பட்டத்து யானை கையில் ஒரு மாலையைக் கொடுத்து வீதிக்கு அனுப்புவார்களாம்: அந்த பட்டத்து யானை யார் கழுத்தில் மாலை போடுகிறதோ, அவனை ராஜாவாக்கி விடுவார்களாம் இப்படியும் ஒரு கதை. இதன் அடிப்படையில், கரிகால் சோழன் மன்னன் ஆனான் என்றும் ஒரு கதை உண்டு. (நிச்சயம் அந்த யானையை சாதாரண மக்கள் இருக்கும் தெருக்களின் பக்கம் அழைத்து வந்து இருக்க மாட்டார்கள் எனலாம்)

இதையெல்லாம் விட, மேலாக, காட்டுக்குப் போன ராமன் வரும்வரை, அவனுடைய பாதுகைகளை அரியாசனத்தில் வைத்து பரதன் நாடாண்டதாக இராமாயணத்தில், ஒரு கதை உண்டு. இன்றும் ‘பாதுகா பட்டாபிஷேகம்’ என்ற கதாகலாட்சேபம் விமரிசையாகத்தான் சொல்லப் படுகிறது.

சரஸ்வதி சபதம்

சில புராணக் கதைகளையும், மக்கள் மத்தியில் நிலவிய சில நாடோடிக் கதைகளையும், ஒன்றாகப் பிசைந்து, தனது கற்பனா சக்தியின் மூலம், புராண திரைப்படக் கதைகளை தயாரித்து இயக்கி வெற்றி கண்டவர் A.P.நாகராஜன் அவர்கள். அந்தகாலத்து ஊர் திருவிழாக்களில் இவரது புராணப்பட வசனங்களை, சவுண்ட் சர்வீஸ் அபிமானிகள் லவுட் ஸ்பீக்கரில் ஒலிபரப்பாமல் இருக்க மாட்டார்கள்.

மேலே சொன்ன அம்சங்களோடு வெற்றிகண்ட ஒரு தமிழ்த் திரைப்படம்தான் A.P.நாகராஜனின் ‘சரஸ்வதி சபதம்’. இந்த படத்தின் கதைப்படி, ”தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா, இங்கு நீ தந்த பிச்சையிலே வளர்ந்தேனம்மா” என்று பாடிவந்த பிச்சைக்காரப் பெண் ஒருத்தி, யானை மாலை போட்டதால் பட்டத்து ராணி ஆகிறாள். பட்டத்து ராணி ஆனதும், அவள் எடுக்கும் அதிரடி நடவடிக்கைகள் இந்த கால அரசியலை நினைவூட்டும். நிறையபேருக்கு இந்த படமும், கதையும் அத்துப்படி என்பதால் கதையை இங்கு விளக்கமாக சொல்ல வேண்டியதில்லை. இந்த வேடத்தில் நடித்து இருப்பவர் நடிகை கே.ஆர் .விஜயா அவர்கள்.

சட்ட திருத்தம் தேவை

எனவே, ஒரு பிரதமராகவோ அல்லது முதல் அமைச்சராகவோ தேர்ந்தெடுக்கப் படும்போது அவர் ஜனநாயக முறைப்படி தேர்தலில் நின்று, (எம்.பி அல்லது எம்.எல்.ஏ - என்று) தேர்ந்தெடுக்கப் பட்டவராக இருத்தல் அவசியம் என்று அரசியல் சட்ட திருத்தம் செய்யாதவரை, இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கத்தான் செய்யும். 

இப்போது நடக்கும் அரசியல் செய்திகளைப் பார்க்கும்போது , சட்டசபையை கலைத்து விட்டு, பொதுத் தேர்தலை நடத்துவதே நாட்டுக்கு நல்லது என்று தோன்றுகிறது.  

Tuesday, 4 October 2016

சசிகலா – துணைமுதல்வர் ஆக வாய்ப்பு



சென்ற மாதம் (செப்டம்பர். 2016) 22 ஆம் தேதி முதல், தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், உடல்நலக் குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். 

பால்கனிப் பாவை:                                                                                                                    

ஜெயலலிதா நடிகையாக இருந்தபோது ரசிகர்களுக்கும், அரசியல்வாதியாக மாறியவுடன் தொண்டர்களூக்கும், அடிக்கடி பால்கனியில் இருந்து காட்சி தருவார்; கையை அசைப்பார். இது என்.டி.ராமராவ் ஸ்டைல். இதனால் இவரை ‘பால்கனிப் பாவை’ என்றே அப்போது சொன்னார்கள். ஆனால், இன்றைய சூழ்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் ICU- வில்இருக்கும் அவர், மருத்துவமனை வாசலில் காத்து இருக்கும் தொண்டர்களை இதுவரை பார்க்க முடியாத நிலைமையில் அவரது உடல்நிலைமை இருக்கிறது.

சாதாரணமாக மருத்துவமனையில் ICU- வில் இருப்பவர்களை மற்றவர்கள் சென்று பார்க்க அனுமதி இல்லை; ரொம்பவும் வேண்டப்பட்டவர்களை மட்டும், கதவில் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடி வழியேதான் பார்க்க அனுமதிப்பார்கள். 

( மேலே படம் – நன்றி நக்கீரன்..இன்)

நேற்று மாலை (03.10.16) அப்போலோ மருத்துவமனை வெளியிட்டுள்ள நான்காவது மருத்துவ அறிக்கையில் முதல்வரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாகவும், கிருமி தொற்று மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட (respiratory support) சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளனர். இதில் சுவாசம் சம்பந்தப்பட்ட respiratory support என்பதனை ‘செயற்கை சுவாசம்’ என்று நாமாகவே புரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

துணைமுதல்வர் பதவி:

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, 02.10.16 அன்று மருத்துவமனையில் அமைச்சர்கள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாக செய்தி. மேலும் அனைத்து அ.தி.மு.க எம்.எல்.ஏக்களையும் சென்னைக்கு வரச் சொல்லி இருப்பதாகவும் சொல்கிறார்கள். ஜெயலலிதா முழு குணம் அடையும் வரை, அரசு நிர்வாக எந்திரத்தை நடத்திடவும், எதிர்க்கட்சியினரின் சில கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், முதல்வரின் நெருங்கிய தோழி சசிகலா அவர்களை துணை முதல்வராக தேர்ந்தெடுக்கும் படியான அரசியல் சூழ்நிலை, அ.தி.மு.கவில் அமையும் போலிருக்கிறது. தமிழ்நாட்டில் நிலவும், அசாதாரண நிலைமையைக் கருத்தில் கொண்டு, சசிகலா தேர்தலில் போட்டியிட வசதியாக தஞ்சை தொகுதிக்கு தேர்தல்தேதி அறிவிக்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது.

கலைஞர் கருணாநிதி என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. மத்திய அரசுக் கட்டிலில் இருக்கும் பி.ஜே.பியின் ஆதரவு யாருக்கு என்பது வெளிப்படை.  எதுவும் நடக்கலாம்.


( மேலே படம் – நன்றி: விகடன்.காம் )
                                                                                 
ஒரு பாடல்:

’முத்துச்சிப்பி’ என்றொரு படம். ஜெய்சங்கர் - ஜெயலலிதா நடித்தது. அந்த படத்தில் ”தொட்ட இடம் துலங்க வரும் … தாய்க்குலமே வருக’ … என்று தொடங்கும் ஒரு பாடல்.  எழுதியவர் கவிஞர் வாலி. இந்த படம் வந்த ஆண்டு 1968. அப்போது எழுதப்பட்ட இந்த பாடல் காட்சியில் ஜெயலலிதாவையும், அம்மனையும் மாறி மாறி காட்டி பாடல் அம்மனுக்கா அல்லது அம்மாவுக்கா என்று வித்தியாசம் காண முடியாதபடி படமாக்கி இருப்பார்கள். இந்த பாடலை ஜெயா டிவியில் அடிக்கடி ஒளிபரப்புவார்கள். பாடல் இதோ 

(நன்றி – யூடியூப்) 

அரியதாய் … பெரியதாய் … வணக்கத்திற்குரியதாய்
எளியதாய் வலியதாய் என்றுமே இனியதாய்
மலர்ந்ததாய் கனிந்ததாய் மனதிலே நிறைந்ததாய் …
வளர்ந்ததாய் வாழ்வதாய் வந்த தாய்
எங்கள் தாய் … எங்கள் தாய் …

தொட்ட இடம் துலங்க வரும் … தாய்க்குலமே வருக …
கண் பட்ட இடம் பூ மலரும் … பொன் மகளே வருக …
பொன் மகளே வருக … நீ வருக!

கருணை என்ற தீபம்
இரு கண்களில் ஏந்திய தாயே
காலந்தோறும் நெஞ்சில் வந்து கோவில் கொண்டவள் நீயே 
பூமுகத்தாமரை மேலே அருள் பொழிகின்ற தெய்வத்தாயே  
பூமுகத்தாமரை மேலே அருள் பொழிகின்ற தெய்வத்தாயே
வானம் பார்த்த பூமிக்கெல்லாம் மாரியென்பது நீயே …
முத்து மாரியென்பது நீயே … முத்து மாரியென்பது நீயே …

இதயம் உன்னைப்பாடும் …
நல்ல எண்ணங்கள் மாலைகள் போடும்
இன்னல் வந்த நேரம் உந்தன் புன்னகை ஆறுதல் கூறும்
வாவென வேண்டிடும்போது எதிர் வருகின்ற செல்வம் நீயே
நாலும் கொண்ட பெண்மைக்கெல்லாம் தலைவியாகிய தாயே …
ஒரு தலைவியாகிய தாயே!!

(திரைப்படம்: முத்துச்சிப்பி (1968) பாடல்: வாலி  / பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன் / இசை: எஸ்.எம்.சுப்பையா நாயுடு)

Tuesday, 15 November 2011

ஸ்ரீரங்கத்தில் தலைமைச் செயலகம்

சென்னைக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் கொஞ்ச நாளாகவே ஒத்து வரவில்லை. இவர் முன்பு தனது ஆட்சியில் சென்னையில் ஒரு இடத்தில் புதிதாக தலைமைச் செயலகம் கட்ட முயன்றார். ஏகப்பட்ட தடைகள். எதிர்ப்புக் குரல்கள். அவர் செய்ய எண்ணியதை கருணாநிதி முடித்துக் கொண்டார். இப்போது ஜெயலலிதா  சிறிது இடைவெளிக்குப் பின்பு மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளார்.. தனி மெஜாரிட்டி இருந்தாலும், சென்னையில் எந்த காரியம் தொடங்கி னாலும், கோர்ட் அது இது என்று இழுத்துக் கொண்டு போகிறது.

சென்ற முறை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது  ராணிமேரிக் கல்லூரியின் இடத்தை தேர்ந்தெடுக்காமல், வேறொரு இடத்தை தேர்ந்தெடுத்து இருந்தால்,  தலைமைச் செயலகத்திற்கு இவரது காலத்திலேயே புதிய கட்டிடம் உருவாகி இருக்கும். அப்போது பிரச்சினை என்று வந்தபோது மற்ற மாவட்ட மக்கள் நமக்கென்ன என்று இருந்து விட்டார்கள். இவரை ஆதரித்து அப்போது யாரும் குரல் கொடுக்கவில்லை. ஏனெனில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சென்னைக்கே முதலிடம் தருகின்றனர். சென்னை நகருக்கு மட்டுமே புதிய சாலைகள்,புதிய பேருந்துகள், புதிது புதிதாக மேம்பாலங்கள். மெட்ரோ ரயில், பெரிய நூலகங்கள், துணை நகரத் திட்டங்கள், பூங்காக்கள் என்று சென்னைக்கே அள்ளித் தந்தனர். சென்னையை மட்டுமே முதன்மை படுத்தினார்கள். மற்ற மாவட்ட மக்களுக்கு கிள்ளி கூட தரவில்லை. இன்னும் மற்ற மாவட்டங்களில் உள்ள சாலைகளும், பாலங்களும், குடிநீர்த் தொட்டிகளும், ஆண்டுக் கணக்கில் பராமரிப்பு கூட இல்லாமல் இருக்கின்றன. காவிரிக் கரையில் உள்ள திருச்சி போன்ற நகரங்களில் உள்ள மக்கள் இன்னும் தண்ணீர் தேடி குடங்களோடு அலைகின்ற சூழ்நிலை.

எனவே முதல்வர் ஜெயலலிதா அவர்கள் தி.மு.க ஆட்சி போன்று சென்னைக்கு மட்டுமே முதலிடம் தராமல் மற்ற மாவட்ட மக்களுக்கும் புதிய திட்டங்களை உருவாக்கினால் சரித்திரத்தில் அவர் பெயர் நிற்கும். அதற்கு முன்னோடியாக தமிழகத்தின் நடுவில் இருக்கும் அவரது தொகுதியான ஸ்ரீரங்கத்தில் புதிய தலைமைச் செயலகத்தை கட்டினால் முதல்வர் ஜெயலலிதா பெயர் சொல்லும். யாரும் எதிர்த்து பேச முடியாது. ஸ்ரீரங்கமும் சுற்றியுள்ள இடங்களும் வளர்ச்சி பெறும். மற்ற மாவட்டங்களில் சில புதிய அலுவலகங்களை  தொடங்கலாம். அனைத்து மாவட்ட மக்களும் பயனடை வார்கள். எதற்கெடுத்தாலும் சென்னையிலேயே எல்லோரும் குவிய வேண்டியதில்லை. செய்வாரா?

Tuesday, 1 November 2011

எம்ஜிஆரின் “டெல்லிக்கு தலை வணங்கு”


திமுக வில் எம்ஜிஆர் இருந்தபோது அவர் புரட்சி நடிகர். இந்த  பட்டத்தை அவருக்கு தந்தவர் கலைஞர் கருணாநிதி. இருவருமே திரையுலகிலிருந்து வந்தவர்கள். இவர்களால் திமுக வளர்ந்தது. திமுகவால் இவர்கள் வளர்ந்தனர். தொழில் முறையாலும், ஒரே கட்சிக் காரர்கள் என்பதாலும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் என்னவோ திமுகவாக இருந்தாலும் அப்போதைய பட அதிபர்கள் பலரும் காங்கிரஸ் காரர்கள். மத்தியில் ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்காரனாக இருப்பதில் அவர்களுக்கு பல அனுகூலங்கள். படம் எப்படி எடுத்தால் காசு பார்க்கலாம் என்பது இவர்களுக்கு அத்துபடி. எனவே அவர்கள் இவர்கள் இருவரையும்வைத்து படம் பண்ணினார்கள். நஷ்டம் வராத வியாபாரம்தான் முக்கியம்.மேலும் அப்போது மக்களிடையே திமுக நல்ல ஆதரவு பெற்ற கட்சியாக வளர்ந்து இருந்தது. எனவே பல பட அதிபர்கள் காங்கிரஸ்காரர்களாக இருந்தாலும் எம்ஜிஆர் சொன்னபடி காட்சிகளை அமைத்தார்கள் பாடல்களைஅமைத்தார்கள். அதே போல் கருணாநிதியின் அனல் பறக்கும் வசனங்களையும் படங்களில் அனுமதித்தார்கள். படங்கள் நல்ல வசூலைத் தந்தன.

1967 சட்ட மன்ற தேர்தல் தொடங்கி தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சிக்கு வர இயலவில்லை.தமிழ் நாட்டைச் சுற்றியுள்ள கேரளா,ஆந்திரா,கர்நாடக மாநிலங்களில் காங்கிரஸுக்கு கிடைக்கும் வாய்ப்புகள் தமிழ்நாட்டில் அமையவில்லை. தமிழ் நாட்டில் திமுக இருக்கும் வரை இது நடக்காது. மேலிடத்திற்கு அனுப்பப்பட்ட தகவல் காங்கிரஸை யோசிக்க வைத்தது. தமிழ் நாட்டில் காங்கிரஸ் ஆட்சி, இல்லையேல் காங்கிரஸ் ஆதரவு பெற்ற ஒரு கட்சியின் ஆட்சி.. திமுகவை உடைத்தால் ஒழிய கதை ஒன்றும் ஆகப் போவது இல்லை. அப்போது பிரதமராக இருந்தவர் இந்திரா காந்தி .பாகிஸ்தானையே இரண்டாக உடைத்தெறிந்த அம்மையாருக்கு திமுக எம்மாத்திரம்?

எம்ஜிஆர் தனக்கென்று ஒரு பிம்பம் (image) திரைப் படங்களில் உருவாக்கி வைத்து இருந்தார். இவர் நடிக்கும் படங்களில் வெற்றிலை பாக்கு போட மாட்டார், மது அருந்த மாட்டார், நியாயத்திற்காக சண்டை போடுவார், அம்மாவை தெய்வமாக நினைப்பார்,பெண்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார் , எல்லாவற்றிலும் நியாயவானாக நடந்து கொள்வார். தனது சொந்த வாழ்க்கையிலும் அவர் இவைகளைக் கடைபிடிப்பதாக எம்ஜிஆரின் ரசிகர்கள் நினைத்தனர்.இதனால் கட்சியில் எம்ஜிஆருக்காக மிகப் பெரிய ஆதரவாளர்கள் கூட்டம் (Mass)  இருந்தது. இந்தஆதரவாளர் களை குறி வைத்து டெல்லியில் காய் நகர்த்தினார்கள். எம்ஜிஆருக்கு நெருக்கமான காங்கிரஸ்காரர்கள் மூலம் சில செய்திகள்சொல்லப்பட்டன. ஆரம்பத்தில் மறுத்த எம்ஜிஆர்  தனது இமேஜ், மேல்மட்ட அரசியல் வாதிகளால், கெட்டுப் போவதை விரும்பவில்லை. மேலும் தனிப்பட்ட முறையில் வரும் மத்திய அரசாங்க நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும் தயங்கினார். என்வே தனிக் கட்சி (1972 இல்) தொடங்கினார். அரசியலில் வெற்றியும் பெற்றார்.

இதனால் அவர் மக்களின் பெரும் ஆதரவு பெற்ற முதலமைச்சர் (1977- 1987) ஆனபோதும் கூட மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியையே ஆதரித்தார். 1977-இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் இந்திரா காந்தியை ஆதரித்தார். இந்திரா காந்தி பதவியிழக்கும் படியான சூழ் நிலையில் மத்தியில் ஜனதா கட்சி (1977) ஆட்சிக்கு வந்தது. அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய். எனவே ஆட்சி மாறியதும் காங்கிரஸின் எதிரியான மொரார்ஜியை ஆதரித்தார் எம்ஜிஆர். 

இதனிடையே தஞ்சாவூர் பாராளுமன்ற  தொகுதிக்கு இடைத் தேர்தல் வந்தது. அதில் போட்டியிட நினைத்த இந்திரா காந்தி அம்மையாருக்கு எம்ஜிஆர்  மத்திய அரசு பயம் காரணமாக ஆதரவு தரவில்லை. மொரார்ஜி ஆட்சி கவிழ்ந்து சரண்சிங் ஆட்சி (1979) வந்தபோது சரண்சிங்கின் கட்சிக்கு எம்ஜிஆர் ஆதரவு தந்தார். அந்த மந்திரிசபையில் பாலா பழனூர், சத்தியவாணிமுத்து ஆகியோர் அதிமுக சார்பாக மத்திய அமைச்சர்கள் ஆனார்கள்.. கொஞ்ச நாள்தான். சரண்சிங்கும்கவிழ்ந்தார்.  காங்கிரஸ் மீண்டும் (1980) வந்தபோது திரும்ப காங்கிரஸை ஆதரித்தார். 


ஆக மத்தியில் எந்த கட்சிஆட்சியில் இருக்கிறதோ அந்த கட்சியோடு இணக்கமான  உறவு என்பதே எம்ஜிஆரின் அரசியல் பார்முலா. 
அதுதான் “டெல்லிக்கு தலை வணங்கு”