Showing posts with label புத்தகத் திருவிழா. Show all posts
Showing posts with label புத்தகத் திருவிழா. Show all posts

Saturday, 25 November 2017

புத்தகத் திருவிழாவினிலே



(புத்தகத் திருவிழா என்றால் திரும்பத் திரும்ப என்ன எழுதுவது என்று தெரியவில்லை. எனவே இந்த பதிவைப் படிக்கும் போது சலிப்பு ஏற்பட்டால் ( அதாவது Bore அடித்தால்)  மன்னிக்கவும்) 

சென்றவாரம், புதுக்கோட்டை புரவலர், கவிஞர் தங்கம் மூர்த்தி அய்யா அவர்கள்  புதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2017 இற்கான அழைப்பிதழை அனுப்பி இருந்தார். அவருக்கு நன்றி. நேற்று தொடங்கிய தொடக்க விழாவிற்கு என்னால் செல்ல இயலவில்லை. புதுக்கோட்டை ஃபேஸ்புக் நண்பர்கள் பலரும் தொடக்க விழாவை சிலாகித்து, வண்ணப் படங்களுடன் எழுதி இருந்தனர். எனவே இன்று (25.11.17 – சனிக்கிழமை), முற்பகல் 11.00 மணி அளவில் திருச்சி – கே.கே.நகரிலிருந்து புறப்பட்டு புதுக்கோட்டைக்கு பஸ்சில் சென்றேன். பேருந்து நிலையத்திற்கு எதிரே இருந்த, வழக்கமாக நான் உணவருந்தும் விடுதியில் மதிய உணவை முடித்துக் கொண்டு, புத்தகத் திருவிழா நடைபெ றும் நகர்மன்றம் சென்றேன். 

நகர்மன்றத்தில்

மதிய உணவுவேளை என்பதால் புத்தக அரங்குகளில் அதிக நெரிசல் இல்லை. ஒன்றிரண்டு விற்பனையாளர்களும் பக்கத்தில் உள்ளவர்களை பார்த்துக் கொள்ளச் சொல்லி சென்று இருந்தனர்.  நான் வீட்டை விட்டு கிளம்புவதற்கு முன், இண்டர்நெட்டில் சில நூல் வெளியீட்டார்களின் நூல் பட்டியலைப் பார்த்து, வாங்க வேண்டியவறை குறித்துக் கொண்டு சென்று இருந்தேன். அவைகள் அங்கு இல்லை, ஆன் லைனில் வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள்.

ஒருமுறை வீதி – இலக்கிய கூட்டத்தில் பூமணி எழுதிய ஒரு நூலினைப் பற்றி, மறைந்த ஆசிரியர் குருநாதசுந்தரம் (வலைப்பதிவரும் கூட) அவர்கள் விமர்சனம் செய்து இருந்தார். ஆனால் எனக்கு நூலின் பெயர் மறந்து விட்டது; இதே நூலினைப் பற்றி கவிஞர் மீரா செல்வகுமார் அவர்களும் சொல்லி இருந்த படியினால், அவரிடமே செல்போனில் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் ‘அஞ்ஞாடி’ (காலச்சுவடு வெளியீடு) என்று சொன்னார். இந்த நூலும் கிடைக்கவில்லை. – பொதுவாகவே எல்லா புத்தகத் திருவிழாவிலும், பதிப்பாளர்கள், அவர்களது எல்லா வெளியீடுகளையுமே எடுத்து வருவதில்லை; ( சென்னை மட்டும் விதிவிலக்கு என்று நினைக்கிறேன்) அவற்றை கொண்டு வந்து விட்டு, மறுபடியும், மூட்டை கட்டிக் கொண்டு போவதில் உள்ள சிரமம்தான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது
.
ஒருசில நூல்கள் மட்டும்

(படம் மேலே – நக்கீரன் முகவர் திரு காஜா மொய்தீன் ( சக்சஸ் புக் ஷாப் ) அவர்களது அரங்கில், நூல் ஒன்றை வாங்கிய போது)

எனவே இருப்பதில் வாங்கிக் கொள்வோம் என்று ஒரு சில புதிய நூல்களை மட்டும் வாங்கினேன். என்னதான் இனிமேல் எந்த புத்தகமும் வாங்கக் கூடாது என்று நினைத்தாலும், நான் பாட்டுக்கு புத்தக வாசிப்பில் உள்ள ஆர்வம் காரணமாக வீட்டு நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்கிக் கொண்டே இருக்கிறேன். எனக்குப் பிறகு இவை என்ன ஆகுமோ என்று தெரியவில்லை.

நான் இன்று வாங்கிய நூல்கள்:

வணக்கம் – வலம்புரி ஜான் (நக்கீரன், சென்னை வெளியீடு)
தேவதைகளால் தேடப்படுபவன் – கவிஞர் தங்கம் மூர்த்தி ( படி, சென்னை வெளியீடு )
1945இல் இப்படியெல்லாம் இருந்தது – அசோகமித்திரன் (காலச்சுவடு, நாகர்கோவில்)
குமரிக்கண்டமா சுமேரியமா? – பா.பிரபாகரன் (கிழக்கு பதிப்பகம், சென்னை)
தலித்களுக்காகப் பாடுபட்டதா நீதிக்கட்சி? – ம.வெங்கடேசன் (கிழக்கு பதிப்பகம்)
பறையன் பாட்டு – தலித்தல்லாதோர் கலகக் குரல் – தொகுப்பாசிரியர் கோ.ரகுபதி (தடாகம், சென்னை வெளியீடு)
மேயோ கிளினிக் – நீரிழிவைச் சமாளிப்பது எப்படி? – மரியா கொலாசோ கிளவெல் (தமிழில் மருத்துவர் சிவசுப்ரமணிய ஜெயசேகர் – அடையாளம், புத்தாநத்தம் வெளியீடு)

படங்கள் கீழே ( சில அரங்குகளில் எடுத்த படம்)







ஒவ்வொரு அரங்காக சுற்றி வந்த போதும் எனக்கு தெரிந்த முகமாக யாரும் இல்லை. ஒருவேளை மாலையில் சென்று இருந்தால் பார்த்து இருக்கலாம்.

நாணயவியல் கழகம்





புத்தக அரங்குகளை விட்டு வெளியே வந்த போது,, ‘இளங்கோ சார் … இளங்கோ சார்’ ‘ என்று யாரோ அழைப்பது கேட்டு திரும்பினேன். ஃபேஸ்புக் நண்பர், திரு ஷேக் தாவூத் பஷீர் அலி (புதுக்கோட்டை நாணயவியல் கழக செயலர்) அவர்கள் தான் அழைத்து இருந்தார். உடனே அவரது மேற்பார்வையில் இருந்த உலக பணத்தாள், காசுகள் மற்றும் தபால்தலை கண்காட்சி அரங்கிற்கு சென்று வந்தேன். இங்குள்ள நிறைய சேகரிப்பு மற்றும் குறிப்புகளுக்கு பாராட்டுகள். 

(படம் மேலே - திரு ஷேக் தாவூத் பஷீர் அலி அவர்களுடன் நான்)

விஷுவல் டேஸ்ட் (Visual Taste)


Wednesday, 30 November 2016

புதுக்கோட்டை – புத்தகத் திருவிழா 2016




புதுக்கோட்டைக்கு எத்தனையோ முறை சென்று வந்து இருக்கிறேன்; பணியில் இருந்தபோது, டெபுடேஷன் பணிக்காக, திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு ஒருமாதம் சென்று வந்தும் இருக்கிறேன். ஆனால் எனக்குத் தெரிந்து புதுக்கோட்டையில் பெரிதாக புத்தகத் திருவிழா ஏதும் நடந்ததாக நினைவில் இல்லை. இத்தனைக்கும் இங்கு நூல்வாசிக்கும் ஆர்வலர்கள் அதிகம் என்பதனை, இங்கு சொல்ல வேண்டியதில்லை. நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் சார்பாக வழக்கம் போல அவர்கள் நடத்தும் புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை மட்டும் அடிக்கடி நடைபெறும். ஆண்டுதோறும் சென்னையிலும் நெய்வேலியிலும் நடக்கும் பிரமாண்டமான புத்தகத் திருவிழாவை புதுக்கோட்டையிலும் நடத்த முயற்சி செய்யுங்கள் என்று, ஆசிரியர் முத்துநிலவன் அய்யாவிடம் நான் சொல்லியதாக நினைவு. இப்போது புதுக்கோட்டை புத்தக வாசிப்பு ஆர்வலர்கள் கனவை நிறைவேற்றும் வண்ணம், சென்ற சனிக்கிழமை (26.11.16) முதல் 04.12.16 முடிய, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் புத்தகத் திருவிழா, புதுக்கோட்டை நகர்மன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஆசிரியர் முத்துநிலவன் அவர்கள் விழாக்குழு சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் வரச் சொல்லி குறுஞ்செய்திகள் அனுப்பி இருந்தார்.

சென்று வந்தேன்:

எனவே நேற்று (29.11.16 – செவ்வாய்) மாலை திருச்சியிலிருந்து இந்த புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவிற்கு சென்று வந்தேன். பஸ்சில் செல்லும்போது, வறட்சியான காட்சிகளையே (இந்த வருட மழை பொய்த்து விட்டதால்) பார்க்க முடிந்தது. இரவு திரும்பி வரும்போது நல்ல குளிர். நேற்று அங்கே எடுத்த படங்கள் இவை (கீழே)

(படம் மேலே) புதுக்கோட்டை நகர்மன்ற நுழைவு வாயிலில் அழைப்பு. 

(படம் மேலே) நேற்றைய நிகழ்ச்சிக்கான ப்ளக்ஸ் பேனர்.
 
(படம் மேலே) பங்கேற்ற ஸ்டால்கள் விவரம்

(படம் மேலே) புதுக்கோட்டை மண்ணின் மைந்தர்கள் பற்றிய குறிப்புரைகள் அடங்கிய ப்ளக்ஸ் பேனர்கள்.

(படம் மேலே) புதுக்கோட்டை நகர்மன்றம் நூறாண்டு பாரம்பரிய பெருமை உடையது. இந்த மன்றத்தையே முழுமையாக மறைத்த வண்ணம் ப்ளக்ஸ் பேனர்கள். இதனை தவிர்த்து இருக்கலாம்.

(படம் மேலே) ஒரு புத்தக ஸ்டாலில் எடுத்த படம்

புதுக்கோட்டைக்கு தனி ஸ்டால்:

புதுக்கோட்டை மாவட்ட எழுத்தாளர்களின் நூல்களுக்கென்று தனியாக ஒரு ஸ்டால் வைத்து இருந்தார்கள். நான் போனபோது, தம்பி மாணவக்கவிஞர் நடராஜ் என்பவர் ஸ்டால் பொறுப்பாளராக இருந்தார்.

(படங்கள் மேலே) மாணவக்கவிஞர் நடராஜ்

(படம் மேலே) புத்தகத் திருவிழாவிற்கு சென்று வந்ததன் அடையாளமாக நானும் ஒரு போட்டோ எடுத்துக் கொண்டேன்.

(படம் மேலே) அப்போது அங்கே வந்த கவிஞர் சோலச்சி மற்றும் எழுத்தாளர் அண்டனூர் சுரா. இருவரும் ஆசிரியர் பணியில் இருப்பவர்கள்: வலைப்பதிவாளர்களும் கூட.

மாலை நடக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால், வீடு திரும்ப நள்ளிரவு ஆகி விடும் என்பதால் உடனே திரும்பி விட்டேன். 

வாங்கிய நூல்கள்:

’ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இராது’ என்ற பழமொழிக்கு ஏற்ப, நூல்கள் வாசிக்கும் வழக்கம் உள்ள, என்னைப் போன்ற புத்தக ஆர்வலர்களுக்கு, புத்தகம் வாங்காமல், படிக்காமல் இருக்க இயலாது. அந்த வகையில் எங்கள் வீட்டு நூலகத்திற்கு என்று வாங்கிய நூல்கள் இவை.

1.வீடில்லாப் புத்தகங்கள் – எஸ்.ராமகிருஷ்ணன் (தி இந்து)
2.மகாத்மா காந்தி கொலை வழக்கு – என்.சொக்கன் (கிழக்கு பதிப்பகம்)
3.சிறுவர் நாடோடிக் கதைகள் – கி.ராஜநாராயணன் (அகரம்)
4.சாதிகளின் உடலரசியல் – உதயசங்கர் (நூல் வளம்)
5.என்கதை - சார்லி சாப்ளின் – தமிழில்: யூமா வாசுகி (NCBH)
6.சாதியும் நானும் – பதிப்பாசிரியர்: பெருமாள் முருகன் (காலச்சுவடு)
7.எது நிற்கும்? – கரிச்சான் குஞ்சு (காலச்சுவடு)
8.சுவிசேஷங்களின் சுருக்கம் – லியோ டால்ஸ்டாய் – தமிழில்: வழிப்போக்கன் (பாரதி புத்தகாலயம்)
9.சங்க காலத் தமிழகத்தின் சமூக நிலை – வெ.பெருமாள் சாமி (பாரதி புத்தகாலயம்)
10.சாதி, வர்க்கம், மரபணு – ப.கு.ராஜன் (பாரதி புத்தகாலயம்)

11.ஒரு நாடோடிக் கலைஞன் மீதான விசாரணை – அண்டனூர் சுரா (இருவாட்சி)


 

Wednesday, 9 March 2016

திருச்சி – புத்தகத் திருவிழா 2016



ஒவ்வொரு வருடமும், திருச்சியில் புத்தகக் கண்காட்சி நடைபெறும்போதும், “போகாமல் இருந்தால்தான் என்ன?” என்று தோன்றும். ஆனால், புத்தகத் திருவிழா பற்றிய செய்திகளை படித்ததும் அங்கு போகாமலோ அல்லது ஒன்றிரண்டு புத்தகங்களை வாங்காமலோ இருக்க முடிவதில்லை. இந்த வருடமும் அப்படித்தான். அதிலும் பாபாஸி (BAPASI) திருச்சியில் நடத்தும் முதல் புத்தகத் திருவிழா என்பதால் போகாமல் இருக்க இயலவில்லை.

மக்கள் வெள்ளம்:

எனவே நேற்று மாலை, ( 08.03.2016 – செவ்வாய்), நாங்கள் இருக்கும் கே.கே.நகரிலிருந்து பஸ்ஸில் தில்லைநகர் வந்து, அங்கிருந்து திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகில்  உக்கிரகாளியம்மன் கோயில் எதிரில் மாநகராட்சி மைதானத்தில் நடைபெற்ற, திருச்சி புத்தகக் கண்காட்சிக்கு (TRICHY BOOK FAIR) நடந்து சென்றேன். அதற்கு முன்னால் வீட்டில் ’தி இந்து தமிழ்’ பத்திரிகையில் புத்தக கண்காட்சி பற்றி வந்த செய்திகளை மீண்டும் படித்தேன். திரு V.G.K. (வை.கோபாலகிருஷ்ணன்) அவர்களும் எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி அதில், 

/// அன்புள்ள தி. தமிழ் இளங்கோ அவர்களுக்கு, வணக்கம். நம்பூவனம்வலைப்பதிவர் திரு. ‘ஜீவிஐயா அவர்கள் சமீபத்தில் சந்தியா பதிப்பகம் மூலம் ஒரு மிகச்சிறந்த நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். நூலின் தலைப்புமறக்க முடியாத தமிழ் எழுத்துலகம் .பிச்சமூர்த்தியிலிருந்து  எஸ்.ரா.வரைஜீவி 264+4=268 பக்கங்கள் - விலை ரூ. 225 மேற்படி நூலின் மேல் அட்டைப்படத்தை இத்துடன் தங்களுக்கு அனுப்பியுள்ளேன்.  

ஸ்டால் நெ.   86 & 87 திருச்சிதென்னூர் மாநகராட்சி மைதானத்தில் தற்போது நடைபெற்றுவரும் புத்தகக்கண்காட்சியில் இந்த நூல் கிடைக்கும்புத்தகக் கண்காட்சி  இந்த மாதம் 13ம் தேதி வரை மட்டும் நடைபெறும் என்று தெரிகிறதுஇது, புத்தகப்பிரியரான தங்களின் தகவலுக்காக மட்டுமே.
அதில் அவரால் எழுதப்பட்டுள்ள தகவல்கள் படிக்க மிகவும் சுவாரஸ்யமாகவும் பயனுள்ளதாகவும் உள்ளன. இதைப்பற்றி என் பதிவினில் விரைவில் எழுதலாம் எனவும் நான் நினைத்துள்ளேன்அன்புடன் VGK ///

என்று குறிப்பிட்டு இருந்தார். எப்படியோ திரு V.G.K மீண்டும் வலைப்பக்கம் எழுத வருகிறார். மகிழ்ச்சியான தகவல்.

எப்போதுமே திருச்சியில் எந்த புத்தகக் கண்காட்சி நடந்தாலும் நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் இப்போதும் மக்கள் வெள்ளம் அதிகம் இருந்தது. நிறைய தெரிந்த முகங்களைக் காண முடிந்ததது. 

திருமதி ஜெயலக்ஷ்மி ( கல்வி அதிகாரி; ’நிற்க அதற்குத் தக’ – வலைப்பதிவர்) அவர்கள் தனது மகன் வினோத்துடன் வந்து இருந்தார். (இந்த வினோத் சில மாதங்களுக்கு முன்னர் விபத்து ஒன்றில் சிக்கி, திருச்சி மருத்துவமனை ஒன்றில் ICU வில் இருந்தார்; அப்போது அவரைப் பார்க்க அங்கு சென்றபோது, பார்க்க அனுமதி இல்லாததால் திருமதி ஜெயலக்ஷ்மி அவர்களிடம் மட்டும் விசாரித்து விட்டு வந்து விட்டேன். நேற்று அவர்கள் இருவரையும் சந்தித்து நலம் விசாரித்ததில் மிக்க மகிழ்ச்சி) மேலும் சில நண்பர்களையும் சந்தித்தேன்.

அங்கு இருந்த ஒவ்வொரு புத்தகக் கடைக்கும் சென்று வந்தேன். சில நூல்களை மட்டுமே வாங்கினேன். வலைப்பதிவர் பேராசிரியர் மதுரை ‘தருமி’ அவர்கள்  மொழி பெயர்த்த ’பேரரசன் அசோகன் ’ என்ற நூல் திருச்சியிலேயே இங்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. திரு V.G.K அவர்கள் குறிப்பிட்ட 87 ஆம் எண் ஸ்டாலில் (சந்தியா பதிப்பகம்). ஜீவி அவர்களது நூலை வாங்கினேன். அங்கேயே நமது வலைப்பதிவர் துளசி டீச்சரின் (துளசி கோபால்) எழுதிய ‘அக்கா’ என்ற நூலும் கிடைத்தது. கடைசியாக ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தேன்.

புகைப்படங்கள்:

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கு தருவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

(படம் – மேலே) திருச்சி தென்னூர் உக்கிரகாளியம்மன் கோயில்

(படம் – மேலே) NCBH அரங்கத்தில் நான்.

(படம் – மேலே) பேராசிரியர் அ.நல்லுசாமி அவர்களுடன் நான்.

 
வாங்கிய நூல்கள்:

பேரரசன் அசோகன் – சார்ல்ஸ் ஆலன் (தமிழில்: தருமி) – எதிர் வெளியீடு
பெண் ஏன் அடிமை ஆனாள்? – பெரியார் ஈ.வெ.ரா – திராவிடன் புத்தக நிலையம்
தமிழ்நாடு – நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள் – திரட்டித் தொகுத்தவர் – ஏ.கே.செட்டியார் - (சந்தியா பதிப்பகம்)
ந.பிச்சமூர்த்தியிலிருந்து எஸ்.ரா.வரை – ஜீவி (சந்தியா பதிப்பகம்)
அக்கா – துளசி கோபால் (சந்தியா பதிப்பகம்)
நாட்டார் வழக்காற்றியலும் வெகுசன ஊடகமும் – சண்முகம் (புதுப்புனல்)
வங்கியில் போட்ட பணம் – சி.பி.கிருஷ்ணன் (பாரதி புத்தகாலயம்)
நிலம் வீடு கட்டிடம் வாங்குவோர் கவனத்திற்கு சுப.தனபாலன் (பிராம்ப்ட் பதிப்பகம்)
ரியல் எஸ்டேட் வழிகாட்டி - சுப.தனபாலன் (பிராம்ப்ட் பதிப்பகம்)
கவர்மெண்ட் பிராமணன் – அரவிந்த மாளகத்தீ (காலச்சுவடு)

ஒரு ஆலோசனை:

திருச்சி புத்தகக் கண்காட்சி நடந்த இடம், நகரின் மையப் பகுதியில் என்றாலும், பஸ் போக்குவரத்து வசதி இல்லாத இடம். மழை பெய்தால், அந்த இடம் அவ்வளவுதான். அந்த ஏரியாவின் எல்லா தண்ணீரும் அங்கு வந்து விடும். எனவே அடுத்த முறை கண்காட்சி நடத்தும் போது, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் அல்லது சிந்தாமணி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் நடத்த வேண்டும். என்று கேட்டுக் கொள்கிறேன். (அண்மையில் பெரம்பலூரில் நடந்த புத்தகத் திருவிழாவில் அமைந்த இடம், அரங்க அமைப்பு, அடிப்படை வசதிகள் யாவுமே பாராட்டும்படி சிறப்பாக அமைந்து இருந்தன)  


குறிப்பு:புத்தகக் கண்காட்சி தினமும் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை ( 04.03.2016 முதல் 13.03.2016 முடிய)