Showing posts with label காரைக்குடி. Show all posts
Showing posts with label காரைக்குடி. Show all posts

Monday, 22 February 2016

காரைக்குடி – மணிமண்டபங்களும் புத்தகத் திருவிழாவும் (2016)



எத்தனையோ தடவை காரைக்குடி போயிருக்கிறேன். ஆனால் கம்பன் மணிமண்டபம், கண்ணதாசன் மணிமண்டபம் இரண்டும் போனதில்லை. ஒவ்வொருமுறையும் நேரமின்மை காரணமாக அந்த மண்டபங்களுக்கு செல்வது முடியாமல் போய்விடும். அண்மையில், முன்னணி  வலைப்பதிவர் சகோதரி தேனம்மை லட்சுமணன் அவர்கள் தனது வலைத்தளத்தில் புத்தகத் திருவிழா - 2016. காரைக்குடி. என்ற ஒரு பதிவினை வெளியிட்டு இருந்தார். சரி, இந்த வாரம் வெளியூர்ப் பயணமாக காரைக்குடி சென்று வருவோம், அப்படியே இந்த மண்டபங்களையும் பார்த்து விடுவோம் என்று, நேற்று (21.02.16 -  ஞாயிறு) அங்கு சென்று வந்தேன்.
                  (படம் – மேலே – நன்றி : http://honeylaksh.blogspot.in/2016/02/2016.html )

கண்ணதாசன் மணிமண்டபம்:

நேற்று காலை திருச்சியிலிருந்து பஸ்ஸில் கிளம்பி புதுக்கோட்டை சென்றேன். அங்கே பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள ஹோட்டல் ஒன்றில் காலை உணவு முடித்துக் கொண்டு காரைக்குடி பயணம் ஆனேன். காரைக்குடி புதிய பேருந்து நிலையம் வந்து இறங்கியதும், அருகில் இருந்த கண்ணதாசன் மணிமண்டபம் சென்றேன். நான் கவிஞர் சம்பந்தப்பட்ட நூல்களை காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்து இருப்பார்கள் என்று எண்ணி இருந்தேன். ஆனால் மண்டபத்தின் உள்ளே நுழைந்தவுடன், அரசு அலுவலகங்களில் இருப்பது போன்ற இரண்டு பெரிய கண்ணாடிக் கூண்டு அறிவிப்பு பலகைகள் மட்டுமே இருந்தன. அவற்றுள் கண்ணதாசன் புகைப்படங்கள், வாழ்க்கை குறிப்பு ஸிராக்ஸ் நகல்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தன. நான் எதிர்பார்த்தபடி சிறப்பாக வேறு ஒன்றும் இல்லை. மண்டபத்தின் மேலே செல்ல அனுமதி இல்லை. மண்டபத்தின் வாசலில் கவியரசரின் சிலை. அங்கே மண்டபத்தில் என்னால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. (கீழே)

                                                                                                                                                                   
                                                                                                                                                                   
                                                                                                                                             
'' நான் எப்படி வாழ்ந்தேனோ அப்படி வாழாதீர்கள்; நான் கூறியபடி வாழுங்கள்'' – கவிஞர் கண்ணதாசன் (சுய பிரகடனம்)

புத்தகத் திருவிழா:

காரைக்குடி புதிய பேருந்து நிலையத்திலிருந்து  சற்று தூரத்தில்தான் (பெரியார் சிலை அருகில்)  புத்தகக் கண்காட்சி. எனவே அங்கிருந்து நடந்தே கம்பன் மணிமண்டபம் சென்றேன். உள்ளே மண்டபத்தின் தெற்கே தமிழ்த்தாய் கோவில் இருந்தது. பூட்டி இருந்தபடியால் அந்த பக்கம் செல்லவில்லை. பின்னர் மண்டபம் சென்றேன். மண்டபம் முழுதும் புத்தக ஸ்டால்கள். மதியவேளை என்பதால் மக்கள் வரவு அதிகம் இல்லை.. வந்ததற்கு அடையாளமாக சில புத்தகங்கள் வாங்கினேன். (தேனம்மையின் நூல்களைத் தேடினேன்; கண்ணில் படவில்லை. திருச்சியில் வாங்கிக் கொள்ள வேண்டியதுதான்) 

இயேசு காவியம் – கவிஞர் கண்ணதாசன்
இந்தியப் பயணங்கள் – ஏ.கே.செட்டியார்
ஓர் இந்திய கிராமத்தின் கதை – தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை (தமிழில் ச.சரவணன்.)

புத்தகக் கண்காட்சியில் எடுத்த சில படங்கள் இங்கே. (கீழே)

                                                                                                                                                              

                                                                                                                                                             
பழைய புத்தகக் கடை:

மெயின் ரோட்டிலிருந்து கம்பன் மணிமண்டபம் இருக்கும் வீதியில் நுழையும் முன்பு ஒரு பழைய புத்தகக் கடையைப் பார்த்தேன். இரண்டு தம்பிகள் , அந்த பகல் உச்சி வெயிலிலும், கருமமே கண்ணாக புத்தகங்களை வகைப்படுத்திக் கொண்டு இருந்தனர். சற்று வித்தியாசமாக இருந்த அந்த புத்தகக் கடையும் நமது கேமராவுக்குள்.



இன்னொருநாள் சாவகாசமாக இங்கு வந்து சில பழைய நூல்களைத் தேட வேண்டும். ஏனெனில் நாட்டுக்கோட்டைப் பக்கம் புத்தகம் வாசிக்கும் பழமை விரும்பிகள் அதிகம். சில அரிய நூல்கள் இந்த பழைய புத்தகக் கடையில் இருக்கலாம். 

பின்னர் புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே இருந்த ஒரு ஹோட்டலில் , மதிய உணவை முடித்துக் கொண்டு ஊர் திரும்பினேன்.