Showing posts with label நகரம். Show all posts
Showing posts with label நகரம். Show all posts

Friday, 31 January 2014

நகரவாசியைக் கிண்டலடிக்கும் கிராமவாசி



நகரத்தில் இருப்பவர்கள் கிராமவாசியைக் கிண்டலடிப்பதற்கு எவ்வளவோ விஷயங்கள். சுத்த பட்டிக்காடு, பட்டிக்காட்டான், வேப்பெண்ணை, முண்டாசு என்று எவ்வளவோ பெயர் சூட்டல்கள். “பட்டிக் காட்டான் ஆனையைப் பார்த்தாற் போல”, “பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்தது போல”, என்று நிறைய வார்த்தைகள். நீர்க்குமிழி என்று ஒரு திரைப்படம். பாலச்சந்தர் இயக்கியது. அதில் மருத்துவமனைக்கு வரும் ஒரு கிராமத்தானைக் காட்டி நையாண்டி செய்து இருப்பார். இன்னொரு தமிழ் திரைப் படத்தின் தலைப்பு “பட்டிக்காடா பட்டணமா”. ராமராஜன் எங்க ஊரு பாட்டுக்காரன்என்ற படத்தில் டவுசர் போட்ட கிராமத்து ஆசாமியாக ( செண்பகமே, செண்பகமே என்று பாடி ) வருவார். அதற்குப் பிறகு அவரை டவுசர் என்றே கிண்டலடித்தாரகள், ந்மது ரசிகர்கள். இப்படி நிறைய.  நாட்டு எலியும் நகரத்து எலியும்என்று ஒரு கதையே இருக்கிறது. அம்புலிமாமா கதைகளில் வரும் கிராமத்து ஆசாமிகள் ஒன்றுமே தெரியாத அப்பாவியாய் இருப்பார்கள். அதில் வரும் வண்ணப் படங்களும் அப்படியே காட்டும். நாம் இப்படி கிண்டலடிக்க கிராமத்து ஆசாமிகளும் நம்மை (நகர வாசிகளை) கிண்டலடிக்கும் விதமே தனிவிதமாக இருக்கும். அதிகம் படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.; “ கெட்டும் பட்டணம் சேர் இவை கிராமத்தார் பழமொழிகள்.
  
என்னுடைய தாத்தா:

பள்ளி பருவத்தில் தொடர் விடுமுறை நாட்களில் எனது அம்மாவின் கிராமத்த்திற்கு சென்று விடுவேன். அங்கே போனால் அவர் கேட்கும் முதல் கேள்வி “ மேட்டூர் அணையில் தண்ணீர் எவ்வளவு இருக்கிறது?  என்பதுதான்.  நாம டவுனில் பேப்பரில் இதையெல்லாம் எங்கே பார்க்கிறோம்? எனவே “தெரியாதுஎன்பேன். உடனே   இந்த பட்டணத்து பிள்ளைங்களே இப்படித்தான் “ என்பார்.

காலையில் மேயச் சென்ற ஆடு , மாடுகள் மாலையில் திரும்பும்போது அவைகளைப் பிடித்துக் கட்ட வேண்டும். ஆடுகளைப் பிடித்து கட்டுவதில் பிரச்சினை ஏதும் இருக்காது. ஆனால்  மாடுகளை கட்டுவதுதான் சிரமம். புதியவர்களுக்கு போக்கு காட்டும். எங்கள் தாத்தாவிடம் வலிய வந்து அவை அவை கட்ட வேண்டிய இடங்களில் சரியாக வந்து நின்று தலையை நீட்டும். ஆனால் புதியவனாக நான் கட்டும்போது போதும் போதும் என்று ஆகிவிடும். என்னுடைய தாத்தா அப்போது சொல்லும் வார்த்தை. “ என்னா படிச்சிருக்கே? மாட்டை புடிச்சி கட்ட தெரியலே “ என்பார். படிப்புக்கும் மாட்டை பிடித்துக் கட்டுவதற்கும் என்ன சம்பந்தம் என்று அவரிடம் கேட்க முடியாது.

ஒருமுறை இரட்டை மாட்டுவண்டியில் நெல்மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பக்கத்து ஊரில் உள்ள அரிசி மில்லுக்கு போக வேண்டி இருந்தது. நானும் மூட்டைகள் மீது உட்கார்ந்து கொண்டு கூட சென்றேன். தாத்தாவும் வந்தார் மாட்டு வண்டியை எங்களது சொந்தக்கார பையன் ஓட்டினான். மாடுகள் அவைபாட்டுக்கு சென்றன. இடையில் நான் வண்டியை ஓட்ட ஆசைப்பட்டேன். வண்டிக்காரப் பையன் அவர் இடத்தைக் கொடுத்து, என்னை மாட்டு வண்டியை ஓட்டச் சொன்னார். அதுவரை வேகமாக சென்ற மாடுகள், கயிற்றைப் பிடித்து  நான் ஓட்ட ஆரம்பித்ததும் கொஞ்சதூரம் சென்று நின்றுவிட்டன. நான் எவ்வளவோ குரல் கொடுத்தும், அதட்டியும் அவை நகர மறுத்து விட்டன. வண்டிக்காரப் பையனும், தாத்தாவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். பழையபடி நான் நெல் மூட்டைகள் மீது வந்து உட்கார்ந்து விட்டேன்.


பெரிய இடத்துப் பெண் “என்ற படத்தில் படத்தில் (1963) பட்டிகாட்டு ஆசாமியாக எம்ஜிஆர் குடுமியோடு நடித்து இருப்பார். இந்த படத்தில் எம்ஜிஆர் மாட்டு வண்டி ஓட்டியபடி “பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணம்“ என்று பாடியபடி வருவார். இந்த பாடலில் நகரவாசிகளைக் கிண்டலடிக்கும் கருத்துக்களைக் காணலாம். பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

படிச்சவனுக்கு மூணு:

கிராமத்தில் அங்கங்கே ஆட்டுச் சாணம் , மாட்டுச் சாணம் கிடக்கும். கிராமத்தார்கள் மிதித்து விட்டால், மிதித்த காலை தரையில் அழுத்தி தேய்த்துவிட்டு போய்க் கொண்டே இருப்பார்கள். இந்த விஷயத்தில் நகரவாசிகள் எப்படி? “படிச்சவனுக்கு மூணு இடத்தில் ஞானம் என்று அவர்கள் கிண்டலடிப்பார்கள். இங்கு படிச்சவன் என்று அவர்கள் குறிப்பிடுவது நகரவாசியைத்தான்.  அது என்ன, மூணு இடம்.? படிச்சவன் முதலாவதாக தான் மிதித்தது என்னவாக இருக்கும் என்று யோசிப்பானாம். அப்புறம் மிதித்த காலை தூக்கி பார்ப்பானாம். அப்படியும் சந்தேகம் தீராமல் மிதித்ததை மோந்தும் பார்ப்பானாம். இது எப்படி இருக்கு?

பொது இடங்களில்:

கிராமத்து ஆட்கள், டவுனுக்கு வந்தால் பஸ் நிலையத்தில் “ இந்த பஸ் எங்கே போவுது “ என்று ஒவ்வொரு பஸ்சாக கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அவர்கள் எங்கே போக வேண்டும் என்று சொல்லவே மாட்டார்கள். அவர்களே கொஞ்சம் பெரிய கிராமங்களில் உள்ள சிறிய பஸ் ஸ்டாண்டில் கிண்டலடிக்கும் வாசகம் “இந்த படிச்சவனுங்களே இப்படித்தான்! யாரையும் கேட்க மாட்டார்கள். கவுரவம் கொறஞ்சியா போய் விடும்

பொது ஆஸ்பத்திரி, தாசில்தார், கோர்ட் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் பக்கத்து நகரங்களிலிருந்து வருபவர்களாக இருக்கும். சில சமயம் வருவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகிவிடும். அப்போது அந்த கிராமத்து ஆட்கள் அடிக்கும் கிண்டலுக்கு அளவே இருக்காது. “ தொரை இன்னும் ஏந்திரிச்சு இருக்க மாட்டார்” : “ தொரை இன்னும் பல்லே விளக்கி இருக்க மாட்டார்என்பார்கள்.  

நடிகர் நாகேஷ் அனுபவி ராஜா அனுபவி என்ற படத்தில் கிராமத்து ஆளாக நடித்து இருப்பார். அதில் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்என்று பாடியபடி வரும் பாடலில் நகரவாசிகளைக் கிண்டலடிக்கும் கருத்துக்களைக் காணலாம். ( படம்: அனுபவி ராஜா அனுபவி பாடல்: கண்ணதாசன் பாடியவர்: T M சௌந்தரராஜன்  ) (1967)  
  
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

மெதுவாப் போறவுக யாருமில்லே
இங்கே  சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
அநியாயம் ஆத்தாடியோ

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

சீட்டுக்கட்டுக் கணக்காக
இங்கே வீட்டக் கட்டி இருக்காக
வீட்டக் கட்டி இருந்தாலும்
சிலர் ரோட்டு மேலே படுக்காக
பட்டணத்துத் தெருக்களிலே
ஆளு நிக்க ஒரு நிழலில்லையே
வெட்டவெளி நிலமில்லையே
நெல்லுக் கொட்ட ஒரு இடமில்லையே
அடி சக்கே
வைக்கேலாலே கன்னுக் குட்டி
மாடு எப்போ போட்டுது
கக்கத்திலே தூக்கி வச்சாக்
கத்தலையே என்னது
ரொக்கத்துக்கு மதிப்பில்லையே - இங்கு
வெக்கத்துக்கு விலையில்லையே

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

ஊரு கெட்டுப் போனதுக்கு
மூரு மாருக்கெட்டு அடையாளம்
நாடு கெட்டுப் போனதுக்கு
மெட்ராஸு நாகரிகம் அடையாளம்
தேராட்டம் காரினிலே
ரொம்பத் திமிரோடு போறவரே
எங்க ஏரோட்டம் நின்னு போனா
உங்க காரு ஓட்டம் என்னவாகும்?
ஹேஹே
 
காத்து வாங்க பீச்சுப் பக்கம்
காத்து நிக்கும் கூட்டமே
நேத்து வாங்கிப் போன காத்து
என்ன ஆச்சு வூட்டிலே
கெட்டுப்போன புள்ளிகளா
வாழப் பட்டணத்தில் வந்தீகளா?

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
அடி ஆத்தாடியோ

( பாடல் வரிகள்: Thanks to  www.thamizhisai.com )

பாடலைக் கண்டு கேட்டு மகிழ கீழே க்ளிக் செய்யவும்


( PICTURES & VIDEO Link :  THANKS TO  “ GOOGLE ” )