Wednesday 12 November 2014

சாப்பிட்டுக் கொண்டே படித்தல்



எனக்கு எப்படி அந்த பழக்கம் வந்தது என்றே தெரியவில்லை. சிறுவயதில் இந்த பழக்கம் இருந்ததில்லை. உயர்நிலைப் பள்ளி சென்றதும் பாட புத்தகம் அல்லாத மற்ற புத்தகங்களைப் படிக்கும் ஆர்வம் வந்தது. அப்புறம் வாசிப்பு என்பது நம்ம வலைப்பதிவர் வெங்கட்நாகராஜ் சார் சொல்வதைப் போல சுவாசிப்பாகவே மாறி விட்டது. இதனால் எனக்கு பிடித்துப் போன நூல்களை இரண்டு அல்லது மூன்று முறை படித்த அனுபவமும் உண்டு. இந்த வாசிப்பு பழக்கத்தில் சாப்பிடும் போதும் எதையாவது படித்துக் கொண்டே சாப்பிடும் பழக்கம் ஏற்பட்டு விட்டது. படித்துக் கொண்டே சாப்பிட்டால்தான் அந்த உணவை சாப்பிட்ட திருப்தி ஏற்படுகிறது. எனது அப்பா இந்த பழக்கத்தை விடச் சொல்லிச் சொல்லி  பார்த்தார். அப்புறம் எனது அப்பா வேலை பார்த்த ரெயில்வே அலுவலகத்திலும் என்னைப் போலவே சாப்பிட்டுக் கொண்டே படிக்கும் ஒருவரைப் பார்த்து இருக்கிறார். அப்புறம் எப்படியோ போ என்று என்னைக் கண்டிப்பதை விட்டு விட்டார்.

                     Picture Thanks to  http://theyearofwritingdangerously.blogspot.in
 
புத்தகமும் ருசியும்:

இந்த பழக்கம் நல்லதா என்றால் இல்லை என்பதுதான் எனது பதில். ஆனாலும் மற்றைய சில பழக்கங்களைப் போல (பீடி, சிகரெட் புகைத்தல்) மோசமானது இல்லை. புத்தகம் படிக்கும் சுவாரஸ்யத்தில் கருவேப்பிலை குச்சி போன்ற ஏதேனும் ஒன்றை விழுங்கி விடக் கூடாது என்பதற்காக சாப்பிடுவதற்கு முன்னரே அவற்றைக் கண்டு எடுத்து விடுவது வழக்கம். இப்போது இந்த பழக்கம் அவ்வளவாக இல்லை. காரணம்,  டீவிதான் என நினைக்கிறேன். இருந்தாலும் செய்தித்தாள்களை சாப்பிட்டுக் கொண்டே படித்தால்தான் நிறைவு.

                          Picture Thanks to  http://outracheousreflections.blogspot.in

இதில் ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் , இப்போதும் எனது வீட்டில் உள்ள சில புத்தகங்களை மீண்டும் படிக்கும் போது முதன்முதல் இந்த புத்தங்களைப் படித்தபோது என்ன சாப்பிட்டுக் கொண்டு இருந்தேனோ அந்த ருசி கூடவே ஞாபகம் வந்து விடுகிறது. உதாரணத்திற்கு விக்கிரமாதித்தன் கதைகள் என்றால் புளிரசம், பஞ்சதந்திரக் கதைகள் என்றால் சுவையான அதிரசம், இந்திரஜால் காமிக்ஸ் என்றால் இட்லி - சாம்பார்  என்று வாயில் ருசி தோன்றி  விடும். நம்ப வலைப் பதிவர் அய்யா ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அவர்களது “ஆரண்யநிவாஸ்என்ற புத்தகத்தை கையில் எடுத்தால் கூடவே திருச்சி ஆதிகுடி கிளப்பின், சூடான அசோகா அல்வாவையும், மொரமொரப்பான பட்டணம் பகோடாவையும் நாக்கு நினைவு படுத்தும். இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். சொன்னால், நமது வலைப் பதிவர்களின் கேலியும் கிண்டலும் ஒரேசமயத்தில் அதிகமாகிவிடும்.

உலகம் முழுக்க:

சரி, இங்கு நமக்கு மட்டும்தானா இந்த பழக்கம்? நம்ம நாட்டை விட்டு வேறு தேசத்தில் யாருக்கெனும் இந்த பழக்கம் உண்டா, இதற்கும் ஏதேனும் போபியா கீபியா என்று பெயர் சூட்டி இருக்கிறார்களா என்று தேடினேன். வேறு எங்கே, வழக்கம் போல நமது கூகிளில்தான். நிறையபேர் நம்ப பக்கம் இருப்பதாகத் தெரிகிறது.

Yahoo Answers - என்ற பகுதியில் ஒரு கேள்வி. Whats your favorite snacks while reading a book?  காபி, சாக்லேட் சாய் மில்க், டாக்டர் பெப்பர், பாப்கார்ன், குக்கீஸ், கார்ன் சிப்ஸ், பீப் ஜெர்க்கி என்று ஒவ்வொருவரும் அவர்களுக்கு விருப்பமானதைச் சொல்லி இருக்கிறார்கள். இதுவாவது பரவாயில்லை. இன்னும் சிலர் படித்துக் கொண்டே சாப்பிடும்போது என்னென்ன சாப்பிடலாம் என்று பட்டியல் போட்டு பதிவுகளை எழுதி இருக்கிறார்கள். GARY SOTO என்பவர் சாப்பிட்டுக் கொண்டே படித்தலைப் பற்றி ஒரு கவிதையையே எழுதி வைத்து இருக்கிறார். குழந்தைகளுக்கான பாடல் அது. அந்தக் கவிதை இதுதான்


                                                           Eating While Reading
                                                                   By Gary Soto

What is better
Than this book
And the churn of candy
In your mouth,
Or the balloon of bubble gum,
Or the crack of sunflower seeds,
Or the swig of soda,
Or the twist of beef jerky,
Or the slow slither
Of snow cone syrup
Running down your arms?
What is better than this sweet dance
On the tongue,
And this book
That pulls you in?
It yells, “Over here!”
And you hurry along with a red, sticky face.

From G. Soto & A. Nelson, (1995), Canto Familiar, Harcourt Children's Books: San Diego, CA.

என்னங்க? சாப்பிட்டுக் கொண்டே படிக்கலாமா? அல்லது படித்துக் கொண்டே சாப்பிடலாமா? இரண்டுமே ஒன்றுதான் என்கிறீர்களா? அதுவும், சரிதான்.

                                            Picture Thanks to  http://mommylife.net


34 comments:

  1. இப்போ வலைத்தளத்தை மேய்ந்துகொண்டே சாப்பிடும் வழக்கம் எனக்கு வந்து விட்டது .இதுவும் நல்லது போன்றே தோன்றுகிறது ,ஆர்வக்கோளாறால் அரை வயிறுக்குத்தான் சாப்பிட முடிகிறது :)
    த ம 1

    ReplyDelete
  2. வணக்கம் அருமையான தகவல்.
    எங்கள் வீட்டில் பலர் இம்மாதிரிப் பழக்கம் உள்ளவர்கள்.
    தட்டு ஒருபக்கம் புத்தகம் ஒரு பக்கம் ...
    தம இரண்டு

    ReplyDelete
  3. கவலைப்படாதீர்கள்!நானும் உங்களை மாதிரி தான்! ருசியான சாப்பாடு அல்லது பலகாரங்கள் இருந்தால் பக்கத்தில் சுவார்சியமான புத்தகங்கள் இருக்கும்போது அவை இன்னும் ருசியாக மாறி விடும்! சாப்பிடும்போது பேசிக்கொன்டு சாப்பிட்டால் எனக்கு சீக்கிரத்தில் புரையேறி விடும். அதனால் என் வீட்டினரே 'பேசாமல் புத்தகத்தைப்படித்துக்கொண்டே சாப்பிடு' என்று சொல்லி விடுவார்கள்.

    எப்போதும் என் கைப்பையில் ஒரு ஆங்கில நாவலும் தமிழ் நாவலும் நிச்சயம் இருக்கும். மருத்துவரைப்பார்க்கச் சென்றால்கூட் இப்படித்தான். மருத்துவரே ' இப்போது என்ன புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்கும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன!

    வாசிப்பது சுவாசிப்பதைப்போல என்பது மிகப்பெரிய உண்மை! நீங்களும் என் கட்சியில் இருப்பது மிகவும்மகிழ்ச்சியைத்தருகிறது!!

    ReplyDelete
  4. எனது சகோதரிக்கு இந்தப்பழக்கம் உண்டு...கண்டிப்பாக புத்தகமோ..செய்தித்தாளோ...வேண்டும். நாம் தான் அவர்களை பார்த்துக் கொண்டே சாப்பிட வேண்டும்.

    ReplyDelete
  5. நண்பர் பகவான்ஜியின் நிலைதான் எனக்கும்.

    ReplyDelete
  6. :) தலைப்பை பார்த்ததும் சிரிப்பு வந்து விட்டது :) ஏனென்றால் முன்பு நான் இப்படித்தான் இப்போ அந்த பழக்கம் அப்படியே என் மகளுக்கு வந்து விட்டது ..இதனால் என்ன சாப்பிட்டா என்று கூட தெரியாது அவளுக்கு ..நேற்று என்னிடம் சொல்கிறாள் //அம்மா எனக்கு ஊட்டி விடுங்க அப்போ புக் படிக்க ஈசியா இருக்கும் :)))//
    அவளுக்கு வாசிப்பது என்பது அவ்ளோ பிரியம் ..வெளியில் தூர பயணம் என்றால் முதலில் பையில் இவள் பாக் செய்வது புக்ஸ்தான் ..இப்போ அந்த இடத்தை tablet ஆக்கிரமித்து விட்டது ஆனாலும் வாரமொரு புக் வாங்கும் பழக்கம் இன்னும் அவள் கைவிடவில்லை :)
    நம்மைப்போல ,மகளைப்போல இன்னொருவர் என்று சந்தோஷமாக இருக்கு இந்த பதிவை வாசிக்கும்போது

    ReplyDelete
  7. சாப்பிட்டுக்கொண்டே படிப்பதால் சரியாக சாப்பிடமுடியாது என்பது ஒரு புறம் இருக்க உணவின் சுவையையும் இரசிக்க முடியாது, படிப்பதையும் ஊன்றி படிக்கமுடியாது என்பது என் கருத்து. சாப்பிட்டுக் கொண்டே படித்தலைப் பற்றிய கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  8. சிறு வயதில் ஏற்படும் பழக்கம்..
    இது இயல்பானது என்கின்றார்கள்..
    அருமையாக அலசி ஆராய்ந்து பதிவில் வழங்கியிருக்கின்றீர்கள்.. இனிய பகிர்வு..

    ReplyDelete
  9. எனக்கும் அப்படித்தான் சாப்பிடும் போது புத்தகம் வாசிக்கும் பழக்கம் உண்டு.
    நம் முன்னோர்கள் ( நம் அம்மா) சாப்பிடும் போது என்ன புத்தகம் படிக்கிறது? அதை தூர வைத்துவிட்டு சாப்பிடு முதலில் என்றுதான் சொல்வார்கள்.
    நல்ல பகிர்வு.

    ReplyDelete
  10. எனக்கு படிப்பது என்றால் அதோடு கூட எந்த தொந்ததரவும் இருக்கக்கூடாது என நினைப்பேன். சாப்பிடுவது கூட...அவரவர்க்கு ஒரு இயல்பு.

    ReplyDelete
  11. மறுமொழி > Bagawanjee KA said...

    சகோதரர் பகவான்ஜீக்கு நன்றி!

    // இப்போ வலைத்தளத்தை மேய்ந்துகொண்டே சாப்பிடும் வழக்கம் எனக்கு வந்து விட்டது .இதுவும் நல்லது போன்றே தோன்றுகிறது ,ஆர்வக்கோளாறால் அரை வயிறுக்குத்தான் சாப்பிட முடிகிறது :) த ம 1 //

    சாப்பிட்டுக் கொண்டே படித்தல் > டீவி பார்த்தல் > கம்யூட்டர் பார்த்தல் > டேப்ளட் பிசி பார்த்தல் – என்று உலகம் போய்க் கொண்டு இருக்கிறது என நினைக்கிறேன்.

    ReplyDelete
  12. மறுமொழி > Mathu S said...

    சகோதரர் மகிழ்தரு மது அவர்களுக்கு நன்றி!

    // வணக்கம் அருமையான தகவல். எங்கள் வீட்டில் பலர் இம்மாதிரிப் பழக்கம் உள்ளவர்கள். தட்டு ஒருபக்கம் புத்தகம் ஒரு பக்கம் ... தம இரண்டு //

    அப்ப உங்க வீட்டில் எல்லோருக்குமே வாசித்தலில் சுவாசிப்பு இருக்கிறது.


    ReplyDelete
  13. மறுமொழி > மனோ சாமிநாதன் said...

    சகோதரிக்கு நன்றி!

    // கவலைப்படாதீர்கள்!நானும் உங்களை மாதிரி தான்! ருசியான சாப்பாடு அல்லது பலகாரங்கள் இருந்தால் பக்கத்தில் சுவார்சியமான புத்தகங்கள் இருக்கும்போது அவை இன்னும் ருசியாக மாறி விடும்! சாப்பிடும்போது பேசிக்கொன்டு சாப்பிட்டால் எனக்கு சீக்கிரத்தில் புரையேறி விடும். அதனால் என் வீட்டினரே 'பேசாமல் புத்தகத்தைப்படித்துக்கொண்டே சாப்பிடு' என்று சொல்லி விடுவார்கள்.

    எப்போதும் என் கைப்பையில் ஒரு ஆங்கில நாவலும் தமிழ் நாவலும் நிச்சயம் இருக்கும். மருத்துவரைப்பார்க்கச் சென்றால்கூட் இப்படித்தான். மருத்துவரே ' இப்போது என்ன புத்தகம் படித்துக்கொண்டிருக்கிறீர்கள்?' என்று கேட்கும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன! //

    உங்களது அனுபவங்களைக் கேட்க, இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

    // வாசிப்பது சுவாசிப்பதைப்போல என்பது மிகப்பெரிய உண்மை! நீங்களும் என் கட்சியில் இருப்பது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது!! //

    இந்த கட்சியில் நிறைய பேர் இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  14. மறுமொழி > R.Umayal Gayathri said...

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    // எனது சகோதரிக்கு இந்தப்பழக்கம் உண்டு...கண்டிப்பாக புத்தகமோ..செய்தித்தாளோ...வேண்டும். நாம் தான் அவர்களை பார்த்துக் கொண்டே சாப்பிட வேண்டும். //

    வீட்டுக்கு ஒருவருக்காவது இந்த பழக்கம் இருக்கும் என்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  15. மறுமொழி > KILLERGEE Devakottai said...

    சகோதரர் தேவகோட்டை கில்லர்ஜிக்கு நன்றி!

    // நண்பர் பகவான்ஜியின் நிலைதான் எனக்கும். //

    மதுரை வலைப்பதிவ்ச்ர் சந்திப்பிற்குப் பிறகு நீங்கள் இருவரும் “இணைந்த கைகள்“

    ReplyDelete
  16. சாப்பிட்டுக்கொண்டே படித்தல் தவறான பழக்கம் என்றாலும் நூலின் சுவாரஸ்யம் இதை ஊக்குவிக்கிறது! நூற்சுவையில் நாம் சாப்பிடும் பொருளின் சுவை மறந்துபோவது வேறுவிஷயம்! அருமையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  17. மறுமொழி > Angelin said...

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! பொதுவாகவே சாப்பிட்டுக் கொண்டே படிக்கும் இந்த பழக்கமானது, யாரையும் பார்த்து வருவதில்லை. அனிச்சையாக வ்ந்து விடுகிறது என்று நினைக்கிறேன். வீட்டை விட்டு வெளியில் பழக ஆரம்பித்த பிறகுதான் நம்மைப் போல பலர் இருப்பதைத் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  18. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // சாப்பிட்டுக்கொண்டே படிப்பதால் சரியாக சாப்பிடமுடியாது என்பது ஒரு புறம் இருக்க உணவின் சுவையையும் இரசிக்க முடியாது, படிப்பதையும் ஊன்றி படிக்கமுடியாது என்பது என் கருத்து. சாப்பிட்டுக் கொண்டே படித்தலைப் பற்றிய கவிதையை பகிர்ந்தமைக்கு நன்றி! //

    நீங்கள் சொல்லும் கருத்துரையை அப்படியே ஒத்துக் கொள்கிறேன். பள்ளி மற்றும் கல்லூரி மாணவனாக இருந்தபோது இருந்ததை விட , அவசரமான இந்த உலகில் இப்போது இந்த பழக்கம் எனக்கு குறைந்து விட்டது.

    ReplyDelete
  19. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    // நீங்களுமா ஐயா.....?! //

    நீங்களுமா என்று கேட்ட கேள்வியில் தொக்கி நிற்கும் அர்த்தத்தைப் பார்க்கும் போது நீங்களும் இந்த வரிசையில் உண்டு என்று தெரிகிறது. சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  20. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    // சிறு வயதில் ஏற்படும் பழக்கம்.. இது இயல்பானது என்கின்றார்கள்.. அருமையாக அலசி ஆராய்ந்து பதிவில் வழங்கியிருக்கின்றீர்கள்.. இனிய பகிர்வு.. //

    ஆமாம் சகோதரரே! தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் – என்பது சரியாகத்தான் இருக்கிறது. சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  21. மறுமொழி > கோமதி அரசு said...

    நீங்களும் நம்ம வரிசையில் தான் வருகிறீர்கள் போலிருக்கிறது. சகோதரி அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  22. மறுமொழி > Sasi Kala said...

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  23. மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...

    சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!

    // சாப்பிட்டுக்கொண்டே படித்தல் தவறான பழக்கம் என்றாலும் நூலின் சுவாரஸ்யம் இதை ஊக்குவிக்கிறது! நூற்சுவையில் நாம் சாப்பிடும் பொருளின் சுவை மறந்துபோவது வேறுவிஷயம்! அருமையான பகிர்வு! நன்றி! //

    ஒரு முக்கியமான விஷயம்! சாப்பிட்டுக் கொண்டே படிக்கும் இந்த பழக்கத்தில் எதுவும் ( உணவின் ருசி, மற்றும் நூலின் கருத்து) எதுவும் மறந்து போவதில்லை. இன்றைக்கும் அன்றைக்கு படித்த கருத்துக்கள் எந்த நூலில் எந்த அத்தியாயத்தில் இருக்கும் என்பது நினைவில் உள்ளன. இதே பழக்கம் உள்ள யாரைக் கேட்டாலும் இதனைச் சொல்லுவார்கள்.



    ReplyDelete
  24. சாப்பாடு என்பதைவிட எதாவது நொறுக்குத் தீனிகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே படிப்பது சுகம்தான் ஐயா

    ReplyDelete
  25. ஆஹா... நானும் தான்!
    ஒரு தடவை தி.ஜானகிராமனின் மரப் பசுவை மடியில் வைத்துக் கொண்டு
    பருப்பு பொடி என்று ஹார்லிக்ஸை சாததில் போட்டு பிசைந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.!

    ReplyDelete
  26. நானும் சில நேரங்களில் இதுபோலச் செய்வதும்/செய்ததும் உண்டு.

    இருப்பினும் அருமையான சாப்பாட்டை, ருசித்து விரும்பி சாப்பிட்டுவிட்டு, துளிர் திண்டுக்கல் வெற்றிலையில் இரண்டை நீரில் நனைத்து அலம்பிவிட்டு, அவற்றின் காம்பையும் அடியையும் கிள்ளி எறிந்துவிட்டு, லேஸாக வாசனை ரோஸ்கலர் சுண்ணாம்பினை நரம்புகளில் தடவிவிட்டு, ரக்ஷிக்லால் பாக்குடன் சேர்த்து வாயில் குதப்பியவாறே, ஒரு புத்தகத்தைக் கையில் பிடித்துக்கொண்டு, திண்டுடன் உள்ள திண்ணையில் சாய்ந்தவாறே படித்துக்கொண்டே, அந்தபுத்தகத்தை முகத்தில் விரித்து, மூக்கால் அதன் வாசனையை முகர்ந்தவாறே இருக்கும்போது ஓர் தூக்கம் கண்களைத் தழுவுமே, அதன் சுகமே தனி சுகம், ஐயா. :)))))

    தூக்கம் வருவதற்காகவே சில சமயங்களில் சில புத்தகங்களைப் படித்ததும் உண்டு.

    சில விறுவிறுப்பான புத்தகங்களால் என் தூக்கம் கலைந்ததும் உண்டு.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  27. ஜில்லென்ற ஏ.ஸி. ரூமில், கும்மென்ற ஜிம்மென்ற படுக்கையில் ஏகாந்தமாய் புரண்டு படுத்துக்கொண்டு, கையில் ஓர் அருமையான கதை புத்தகமும், அருகே டீ பாயில் ஒரு தட்டு நிறைய சூடான சுவையான வெங்காய தூள் பக்கோடா தொடர்ந்து சப்ளை ஆகிக்கொண்டேயும் இருந்துவிட்டால் போதுமே கிடுகிடுவென புத்தகமும் படித்து முடிக்கப்படும் அதே சமயம் சூடான சுவையான தூள் பக்கோடாக்களும் காலியாகுமே !
    இது ஒருவிதமான சுகானுபவம்

    அதுபோல நல்ல காற்றுவரும் வேப்பமரத்தடியில் கயிற்றுக்கட்டிலில் படுத்தவாறு கையில் ஓர் நல்ல கதைப்புத்தகமும் இருந்தால் அதுவும் ஒரு தனி சுகமே. சாப்பாட்டைவிட நொறுக்குத்தீனிகளுடன் [நிறைய தலையணிகளுடன்] படுத்தபடி படிப்பதில் எனக்கு ஓர் தனி பிரியமுண்டு. :)))))

    ReplyDelete
  28. படித்துக்கொண்டே சாப்பிடுவதும்
    சாப்பிட்டுக்கொண்டே படிப்பதும்
    அந்தக்கணம் நிறைவு தரலாம்
    ஆனால்,
    படித்தது நினைவில் இருக்காதே!

    ReplyDelete
  29. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // சாப்பாடு என்பதைவிட எதாவது நொறுக்குத் தீனிகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டே படிப்பது சுகம்தான் ஐயா
    தம 5 //

    எதனை வைத்துக் கொண்டு சாப்பிட்டாலும் அங்கே ஆர்வம் என்பதே முக்கியமான விஷயம்.

    ReplyDelete
  30. மறுமொழி > ”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

    // ஆஹா... நானும் தான்! ஒரு தடவை தி.ஜானகிராமனின் மரப் பசுவை மடியில் வைத்துக் கொண்டு பருப்பு பொடி என்று ஹார்லிக்ஸை சாததில் போட்டு பிசைந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.! //

    நீங்களும் நம்ப கட்சிதான். உங்கள் அனுபவம் நல்ல நகைச்சுவை! தங்கள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  31. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1, 2, )

    வெளிநாடு செல்ல அதற்கான பணிகளில் ஈடுபட்டிருக்கும் தாங்கள், பல்வேறு பணிகளுக்கு இடையிலும் இங்கே வந்து நீண்ட கருத்துரைகள் தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  32. மறுமொழி > Yarlpavanan Kasirajalingam said...

    // படித்துக்கொண்டே சாப்பிடுவதும் சாப்பிட்டுக் கொண்டே படிப்பதும் அந்தக்கணம் நிறைவு தரலாம் ஆனால், படித்தது நினைவில் இருக்காதே! //

    கருத்துரை தந்த சகோதரருக்கு நன்றி! அப்படி எல்லாம் இல்லை. தளிர் சுரேஷ் அவர்களுக்கு நான் தந்த மறுமொழியைக் காணவும்.

    ” ஒரு முக்கியமான விஷயம்! சாப்பிட்டுக் கொண்டே படிக்கும் இந்த பழக்கத்தில் எதுவும் ( உணவின் ருசி, மற்றும் நூலின் கருத்து) எதுவும் மறந்து போவதில்லை. இன்றைக்கும் அன்றைக்கு படித்த கருத்துக்கள் எந்த நூலில் எந்த அத்தியாயத்தில் இருக்கும் என்பது நினைவில் உள்ளன. இதே பழக்கம் உள்ள யாரைக் கேட்டாலும் இதனைச் சொல்லுவார்கள்.”
    .

    ReplyDelete