Monday, 24 November 2014

மார்ச்சு மாதம் சம்பளம் இல்லைஉனக்கென்னப்பா ஒண்ணாம் தேதி வந்தால் கையில் டாண்ணு சம்பளம் வந்திடும் -  வார்த்தையில் கொஞ்சம், கூட குறைச்சல் இருக்கலாம். உத்தியோகத்தில் இல்லாதவர்களில் இந்த வார்த்தையை சொல்லாதவர்கள் குறைவு. மாத சம்பளக்காரர்கள் அனைவரும் அடிக்கடி கேட்டு இருப்பார்கள். ஆனால் மாதச் சம்பளக்காரர்கள் பலபேருக்கு மார்ச்சு மாதம் சம்பளம் இல்லை என்ற விஷயம் எத்தனை பேருக்கு தெரியும்.

வருமானவரி:

ஒவ்வொரு சம்பள உயர்வின் போதும் தனியார் ஊழியராகஇருந்தாலும்  சரி, அரசு ஊழியராக இருந்தாலும் சரி அவர்களுக்கு அப்படியே அள்ளி கொடுத்து விடுவதில்லை. எப்போதுமே சம்பள உயர்வு என்பது 10 சதவீதத்திற்கு மேல் போவதில்லை. இவர்கள் விலைவாசி உயர்வை காரணம் காட்டி சம்பள உயர்வு பெறுவார்கள்; அதற்கு அடுத்த நாளே இவர்கள் சம்பள உயர்வை காரணம் காட்டி அவர்கள் ஏற்றி விடுவார்கள். நிறைய பேருக்கு போனஸ் உச்சவரம்பு சட்டத்தின்படி போனஸே கிடையாது. ஆனால் வெளியில் எல்லோருக்கும் போனஸ் கிடைப்பது போன்ற செய்தி வெளிவரும். இப்படியே கண்ணாமூச்சி நடைபெறும்.

பெயருக்குத்தான் சம்பள உயர்வு. சம்பளம் உயர உயர, அதில் கால்வாசி அந்த வரி, இந்த வரி, வருமானவரி என்று போய்விடும். அரசு ஆணைப்படி சம்பளம் வாங்கும் அன்றே அந்தந்த மாதத்தில் வருமானவரி பிடித்துவிட வேண்டும். சிலபேர் மட்டும் மாதம்தோறும் வருமானவரியை சம்பளத்தில் பிடித்துக் கொள்ளச் சொல்லி எழுதி கொடுத்து விடுவார்கள். ஆனால் பலபேர் வருமான வரியை மார்ச்சு மாதத்தில் மொத்தமாகவோ அல்லது ஜனவரி மாதத்தில் இருந்து மூன்று தவணைகளாகவோ கட்டிவிடுவதாகச் சொல்வார்கள். இன்னும் சிலர் வருமானவரியை தவிர்ப்பதற்காக அரசு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய பார்ப்பார்கள். அதிலும் உச்சவரம்பு உண்டு. எனவே ஒரு கட்டத்தில் வருமான வரியிலிருந்து தப்பிக்க முடியாது.

மூன்றுமாத கஷ்டம்:

எனவே ஒவ்வொரு நிதி ஆண்டும் (Financial Year), முதல் ஒன்பது மாதங்கள் வாழ்க்கைச் சக்கரம் சராசரியாக இருக்கும். ஜனவரி வந்து விட்டாலே பதட்டம்தான். சம்பளம் குறையத் தொடங்கிவிடும். சிலபேருக்கு கடைசி இரண்டு மாதங்கள் (பிப்ரவரி, மார்ச்) சம்பளமே இருக்காது. எனவே சமாளிக்க இயலாதவர்கள் வெளியில் கடன் வாஙக ஆரம்பித்து விடுவார்கள். வட்டி தொழில் நடத்துபவர்களுக்கு இந்த மாதங்களில் நல்ல தொழில் இருக்கும். சிலபேருடைய கழுத்தில், காதில், கையில் இருந்தவைகள் பள்ளிக்கூடம் போய்விடும். சில இடங்களில் இலஞ்சம் பெற்றுக் கொண்டு ஆகும் காரியங்களும் நிறையவே நடக்கும்.

திட்டமிடுதல்:

சரியாகத் திட்டமிடுதல் மூலம் இந்த மூன்றுமாத கால பதற்றத்தை தவிர்க்கலாம். 1.எப்படி இருந்தாலும் கட்ட வேண்டிய வருமான வரியை கட்டித்தானே ஆகவேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள், நம்ப காசு நமக்கில்லை என்று நினைத்துக் கொண்டு மாதம்தோறும் வருமானவரியை சம்பளத்தில் பிடித்துக் கொள்ளச் சொல்லி விடலாம். அதனால் சுமை தெரியாது. 2. வருமான வரியை சேமிப்பாக மாற்ற நினைப்பவர்கள் வரிவிலக்கு தரும் PPF ( Public Provident Fund) Scheme இல் சேர்ந்து கொண்டு மாதாமாதம் கட்டலாம். இதேபோன்று R.D ( Recurring Deposit) எனப்படும், மாதாந்திர கணக்கைத் தொடங்கி , முதிர்வுத் தொகையை  வரிவிலக்கு தரும் அரசு சேமிப்பு பத்திரங்களில் முத்லீடு செயலாம். இந்த கணக்கை பிப்ரவரி மாதம் முடியுமாறு தொடங்க வேண்டும்.

ஆடம்பரத்தை தவிர்ப்பீர்:

முன்பெல்லாம் எல்லோரும் வருவாய்க்குத் தக்க செலவு செய்தார்கள். வருவாய்க்குத் தககவாறு ஆசைப் பட்டார்கள். வீட்டில் உள்ள்வர்களும் நமது குடும்பத்தில் இவ்வளவுதான் செய்யமுடியும், இவ்வளவுதான் எதிர்பார்க்க முடியும் என்று பொறுப்போடு இருந்தார்கள் இப்போதோ பலரும் கடன்பட்டாவது பகட்டான வாழ்க்கையை நடத்த ஆசைப்படுகின்றனர். ஒரு சாதாரண ஊழியராக இருப்பவர் தனது வருமானத்திற்கு தக்கவாறு வாழ ஆசைப்படுவதில்லை. தானும் ஒரு உயர் அதிகாரியைப் போன்றே வாழ்க்கையை நடத்த வேண்டும் என்று நினைக்கிறார். பிள்ளைகளை அரசு பள்ளிகளிலோ அல்லது கட்டணம் அதிகம் இல்லாத அரசு உதவி பெறும் பள்ளிகளிலோ சேர்ப்பதில்லை. வசதி படைத்தவர்கள் பிள்ளைகள் படிக்கும் அதிகக் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்த்து விட்டு அல்லாடுகிறார்கள். அவர்கள் சொல்லும் பதில் இதுதான் “ ஏன் எங்கள் பிள்ளைகள் மட்டும் அங்கு படிக்கக் கூடாதா? “ என்பதுதான்.


              தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
             
அம்மா பெரிதென் றகமகிழ்க - தம்மினும்
             
கற்றாரை நோக்கிக் கருத்தழிக கற்றதெல்லாம்
             
எற்றே யிவர்க்குநா மென்று  
                                               (நீதி நெறி விளக்கம் 14 (குமரகுருபரர்)

இதன் பொருள்: நம்மை விட செல்வத்தில் குறைந்து இருப்பவர்களைப் பார்த்து நமது செல்வம் “ அம்மா பெரிது என்று மகிழ்ச்சி அடையுங்கள். அதேசமயம் நம்மைவிட அதிகம் படித்தவர்களைப் பார்த்து இவருக்கு முன் நாம் எம்மாத்திரம் என்று கர்வத்தை விடுங்கள்.


ALL PICTURES THANKS TO “GOOGLE”36 comments:

 1. மாதாமாதம் வரியினைப் பிடித்தம் செய்து வருவதே சிறந்தது ஐயா
  நான் அவ்வாறுதான் செய் து வருகின்றேன். இதனால் பிப்ரவரி மாதச் சுமை இல்லாமல் இருக்கின்றது
  நீதி நெறி விளக்கப் பாடல் அருமை ஐயா
  நமது தமிழறஞர்கள் தொடத துறையே இல்லை
  சொல்லாத கருத்தே இல்லை
  என்பதை எண்ணும் போது மனம் மகிழ்கின்றது ஐயா
  நன்றி

  ReplyDelete
 2. வணக்கம்
  ஐயா

  யாவரும் அறியும் படி நல்ல சிந்தனையுள்ள கருத்தை முன்வைத்துள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி
  த.ம2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 3. அரசுப் பணியில் சிலர் வரி கட்டக்கூடாது என்றே வேலைகளைப் பார்க்கிராகள்..
  ஆனால் இது எவ்வளவு மூடத்தனம் என்று ஒரு ஆடிட்டர் விளக்கியபோது வியந்தேன்.
  நல்ல பதிவு ...

  ReplyDelete

 4. // எப்படி இருந்தாலும் கட்ட வேண்டிய வருமான வரியை கட்டித்தானே ஆகவேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள், நம்ப காசு நமக்கில்லை என்று நினைத்துக் கொண்டு மாதம்தோறும் வருமானவரியை சம்பளத்தில் பிடித்துக் கொள்ளச் சொல்லி விடலாம். அதனால் சுமை தெரியாது.//

  அதனால் தான் வங்கிகளில் ஏப்ரல் மாதத்திலேயே ஒவ்வொரு ஊழியரையும் எவ்வளவு சேமிக்க இருக்கிறார்கள் என்பதை எழுத்து மூலம் வாங்கிக்கொண்டு முழு ஆண்டுக்கான வரியை கணக்கிட்டு, அதை 12 ஆல் வகுத்து ஒவ்வொரு மாதமும் வரியை பிடித்தம் செய்து வருமான வரித்துறைக்கு செலுத்திவிடுவார்கள். திரும்பவும் அக்டோபர் மாதம் இரண்டாம் முறையாக வரியைக் கணக்கிட்டுஅதிகப்படியான வரி இருப்பின் மீதி உள்ள மாதங்களில் சமமாக வரியை பிடித்தம் செய்வார்கள். எனவே வங்கியில் பணிபுரிவோருக்கு இந்த மார்ச்சு மாதம் சம்பளம் இல்லை என்ற விஷயமே கிடையாது. இது நடப்பது அரசு மற்றும் சில தனியார் நிறுவனங்களில் தான். ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். வருமான வரி சட்டப்படி வருமான வரியை ஒவ்வொரு மாதமும் கட்டாமல் மார்ச் மாதத்தில் மொத்தமாகவோ அல்லது கடைசி மூன்று மாதங்களில் சமமாக கட்டினாலோ அதற்கு அபராதம் (Penalty) உண்டு என்பது தான்.

  எனக்கு மிகவும் பிடித்த குமரகுருபரரின் பாடலை சரியான இடத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 5. நீங்கள் சொன்ன திட்டமிடுதல் ஒன்றே சிறந்த வழி...

  ReplyDelete
 6. சிறப்பான யோசனைகள்... ;)))))

  Thanks for sharing, Sir.

  ReplyDelete
 7. மிகவும் அருமையான பதிவு! அறிவுரை வழங்கும் ஒன்றும் கூட. மாதாமாதம் பிடிப்பதுதான் நல்லது ஐயா! கரந்தையார் சொல்லி இருப்பது போல. இல்லைஎன்றால் இறுதியில் சுமை அழுத்தும்.

  சேமிப்பு பற்றிச் சொல்லியிருப்பதும் நல்ல கருத்து.

  ReplyDelete
 8. சம்பளம் உயருகின்றதோ இல்லையோ விலைவாசி போட்டி போட்டுக் கொண்டு உயருகின்றதே! அதை யாரும் மனதில் கொள்வதில்லை. உனக்கென்ன மாதம் பிறந்தால் சம்பளம் என்று சொல்வது....

  ReplyDelete
 9. இந்தப் பதிவு வருமானவரி கட்டும் மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களை நினைத்தே எழுதப் பட்டது என்று நினைக்கிறேன். மாத சம்பளம் வாங்கும் அனைவரும் வருமான வரி கட்டுபவர்களா?

  ReplyDelete
 10. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

  // சிறப்பான யோசனைகள்... //

  சகோதரி ஆன்மீகப் பதிவர் இராஜராஜேஸ்வரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 11. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... (1, 2 )

  சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 12. மறுமொழி > ரூபன் said...

  கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கமும், நன்றியும்.

  ReplyDelete
 13. மறுமொழி > Mathu S said... ( 1, 2 )

  ஆசிரியர் எஸ்.மது அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

  // அரசுப் பணியில் சிலர் வரி கட்டக்கூடாது என்றே வேலைகளைப் பார்க்கிராகள்.. ஆனால் இது எவ்வளவு மூடத்தனம் என்று ஒரு ஆடிட்டர் விளக்கியபோது வியந்தேன்.
  நல்ல பதிவு ... //

  ஒரு ஆடிட்டர் இவ்வாறு கூறியது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில், வருமான வரியை கட்டாமல் தவிர்ப்பது எப்படி என்று சொல்லிக் கொடுப்பதே அவர்கள்தான். மேலும் எந்த அரசு ஊழியரும் வரியை நினைத்துக் கொண்டே வேலை செய்வதில்லை. அந்த கடைசி மாதத்தில் அல்லாடுவார்கள் (எல்லோரும் அல்ல)

  ReplyDelete
 14. மறுமொழி > வே.நடனசபாபதி said...

  அய்யா அவர்களின் வருகைக்கும் நீண்ட, அன்பான கருத்துரைக்கும் நன்றி.

  // வங்கிகளில் ஏப்ரல் மாதத்திலேயே ஒவ்வொரு ஊழியரையும் எவ்வளவு சேமிக்க இருக்கிறார்கள் என்பதை எழுத்து மூலம் வாங்கிக்கொண்டு முழு ஆண்டுக்கான வரியை கணக்கிட்டு, அதை 12 ஆல் வகுத்து ஒவ்வொரு மாதமும் வரியை பிடித்தம் செய்து வருமான வரித்துறைக்கு செலுத்திவிடுவார்கள். திரும்பவும் அக்டோபர் மாதம் இரண்டாம் முறையாக வரியைக் கணக்கிட்டுஅதிகப்படியான வரி இருப்பின் மீதி உள்ள மாதங்களில் சமமாக வரியை பிடித்தம் செய்வார்கள். எனவே வங்கியில் பணிபுரிவோருக்கு இந்த மார்ச்சு மாதம் சம்பளம் இல்லை என்ற விஷயமே கிடையாது. இது நடப்பது அரசு மற்றும் சில தனியார் நிறுவனங்களில் தான். ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். //

  வங்கிகளிலும் சில ஊழியர்கள் தொழிற்சங்க செல்வாக்கினைப் பயன்படுத்தி மாதாமாதம் பிடித்தம் செய்வதைத் தடுத்து மார்ச் இறுதியில் கட்டுபவர்களும் உண்டு. தேசிய சேமிப்பு பத்திரத்தின் (N.S.C ) மேல் உடன் கடன் வாங்கும் வசதி வங்கி ஊழியர்களுக்கு உண்டு. ஏஜெண்டுகளும் இந்த வசதி இருப்பதால் உதவி செய்வார்கள்.

  // வருமான வரி சட்டப்படி வருமான வரியை ஒவ்வொரு மாதமும் கட்டாமல் மார்ச் மாதத்தில் மொத்தமாகவோ அல்லது கடைசி மூன்று மாதங்களில் சமமாக கட்டினாலோ அதற்கு அபராதம் (Penalty) உண்டு என்பது தான். //

  பொதுவாக மாதச் சம்பளக்காரர்களிடம் அபராதம் கட்டும் விஷயத்தில் அவ்வளாக யாரும் கண்டிப்பாக இல்லை.

  // எனக்கு மிகவும் பிடித்த குமரகுருபரரின் பாடலை சரியான இடத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி! //

  சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம், எனது மன ஆறுதலுக்கு நினைத்துக் கொள்ளும் பாடல்களில் இதுவும் ஒன்று. எழுத்தாளர் மகரம் அவர்கள் “ தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை அம்மா பெரிதென் றகமகிழ்க ” என்ற வரிகளுக்கு ஒரு அருமையான கட்டுரையே எழுதி இருக்கிறார். (நூலின் பெயர் நினைவில் இல்லை)

  ReplyDelete

 15. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

  சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 16. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

  அய்யா V.G.K அவர்களே நலமா? கருத்துரைக்கு நன்றி. வலைச்சரத்திலும் உங்கள் கருத்துரையைக் கண்டேன். வெளிநாட்டில் இருந்த போதிலும் வலைப் பதிவர்களை அன்புடன் தொடர்பு கொள்ளும் தங்களுக்கு நன்றி. திருச்சி திரும்பியதும் உங்கள் வெளிநாட்டு அனுபவங்களையும், படங்களையும் பதிவாகத் தாருங்கள்.

  ReplyDelete
 17. மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said... ( 1, 2 )

  சகோதரர் தில்லைக்கது வி. துளசிதரன் அவர்களின் நீண்ட கருத்துரைகளுக்கு நன்றி.

  ReplyDelete
 18. மறுமொழி > G.M Balasubramaniam said...

  // இந்தப் பதிவு வருமானவரி கட்டும் மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களை நினைத்தே எழுதப் பட்டது என்று நினைக்கிறேன். மாத சம்பளம் வாங்கும் அனைவரும் வருமான வரி கட்டுபவர்களா? //

  ஆம் அய்யா! மாத சம்பளம் வாங்கும் ஊழியர்களில் வருமானவரியை எதிர் நோக்குபவர்களை எண்ணியே இந்த கட்டுரை எழுதினேன். வருமானம் உயர்ந்த அளவுக்கு, வருமானவரி சலுகை அதிகம் உயரவில்லை. எனவே இப்போதெல்லாம் வரி கட்டும் ஊழியர்கள் அதிகம்.

  ReplyDelete
 19. ஓ!...புதிய தகவல்கள் அறிந்தேன்.
  இங்கெல்லாம் சம்பளத்திலேயே வரிப்பணம் கழித்தே வரும்.
  பல பெரிய முதலைகள் தவிர நாமெல்லாம் கட்டடுகிறோம்.
  மேலதிகமாகக் கழிபட்டால் வருட இறுதியில் மிகுதி வரிப்பணம்
  என்று நமக்கே திரும்ப வங்கியில் விழும் கடிதம் வரும்.
  நன்றி.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 20. பணியிலிருக்கையில் பட்ட அவதியை
  நினைவுறுத்திப் போனது தங்கள் பதிவு
  தலைப்பும் முடித்த விதமும் அருமை

  ReplyDelete
 21. வாழ்க்கைக்கு திட்டமிடல் மிக அவசியமானதே..
  நண்பரே இந்தப்பதிவை படித்தவுடன் எனக்கு ஷாக் அடித்ததுபோல் ஆகிவிட்டது காரணம் என்ன தெரியுமா ?
  நேற்று பதிவு ஒன்று எழுதிக்கொண்டு இருந்தேன் அவசியமான இடத்தில்
  குமரகுருபரரின்
  ‘’தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
  அம்மா பெரிதென் றகமகிழ்க’’
  இந்த இரண்டு வரிகளையும் மேற்கோள் காட்டி எழுதினேன் இப்பொழுது இதைப்பார்க்கவும் அதை சேர்ப்போமா ? வேண்டாமா ? எனக்குழம்பி இருக்கிறேன்.
  இதையே பாமரனுக்கும் விளங்குவது போல் கண்ணதாசன் எழுதினார்
  \\உனக்கும் கீழே உள்ளவர் கோடி
  நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு\\
  அருமையான பதிவு வாழ்த்துகள் நண்பரே,,,

  த.ம. 8

  ReplyDelete
 22. மறுமொழி > kovaikkavi said...

  சகோதரி கோவைக்கவி - வேதா. இலங்காதிலகம். அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இங்கும் பல நிறுவனங்களில், அரசு அலுவலகங்களில் சம்பள பட்டுவாடா என்பது வரி பிடித்தம் போகத்தான் வழங்கப்படும் சிலசமயம் இங்குள்ளவர்கள் விதிவிலக்குகளையே (Exceptions) விதியாக (Rules) மாற்றி விடுவார்கள்

  ReplyDelete
 23. மறுமொழி > Ramani S said... ( 1, 2 )

  கவிஞர் எஸ். ரமணி அய்யா அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

  // பணியிலிருக்கையில் பட்ட அவதியை நினைவுறுத்திப் போனது தங்கள் பதிவு தலைப்பும் முடித்த விதமும் அருமை //

  நானும் வேலையில் சேர்ந்த ஆரம்பத்தில் திட்டமிடாததாலும், சரியான வழிகாட்டல் இல்லாமையாலும் கஷ்டப்பட்டேன். அப்புறம் அனுபவங்கள் பெறப்பெற தொல்லைகளை தவிர்த்து விட்டேன். இந்த பதிவு முழுக்க முழுக்க எனது அனுபவங்களின் எதிரொலியே.


  ReplyDelete
 24. மறுமொழி > KILLERGEE Devakottai said...

  சகோதரர் தேவகோட்டை கில்லர்ஜிக்கு நன்றி.

  // வாழ்க்கைக்கு திட்டமிடல் மிக அவசியமானதே.. நண்பரே இந்தப்பதிவை படித்தவுடன் எனக்கு ஷாக் அடித்ததுபோல் ஆகிவிட்டது காரணம் என்ன தெரியுமா ? நேற்று பதிவு ஒன்று எழுதிக்கொண்டு இருந்தேன் அவசியமான இடத்தில் குமரகுருபரரின் ‘’தம்மின் மெலியாரை நோக்கித் தமதுடைமை
  அம்மா பெரிதென் றகமகிழ்க’’ இந்த இரண்டு வரிகளையும் மேற்கோள் காட்டி எழுதினேன் இப்பொழுது இதைப்பார்க்கவும் அதை சேர்ப்போமா ? வேண்டாமா ? எனக்குழம்பி இருக்கிறேன்.//

  கில்லர்ஜி சிலசமயம் இதுபோல் ஒத்தகருத்து என்பது இரு பதிவர்களுக்கு இடையில் தோன்றி விடுவதுண்டு. எனக்கும் இந்த அனுபவம் உண்டு. நீங்கள் உங்கள் பாணியில் இந்த பாடலை மேற்கோள் காட்டி இருப்பீர்கள். எனவே உங்கள் பதிவினில் சேர்க்கவும். நான் இந்த பாடலுக்கு எனக்குத் தெரிந்தவர எளிமையாக பொருள் சொல்லி இருக்கிறேன். அவ்வளவுதான். மேலும் நீதிநெறி விளக்கப் பாடல் எல்லோருக்கும் பொதுவானது.

  // இதையே பாமரனுக்கும் விளங்குவது போல் கண்ணதாசன் எழுதினார்

  \\உனக்கும் கீழே உள்ளவர் கோடி
  நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு\\

  அருமையான பதிவு வாழ்த்துகள் நண்பரே,,, த.ம. 8 //

  தங்கள் நீண்ட கருத்துரைக்கு நன்றி. மீண்டும் சந்திப்போம்.


  ReplyDelete
 25. #முன்பெல்லாம் எல்லோரும் வருவாய்க்குத் தக்க செலவு செய்தார்கள். வருவாய்க்குத் தககவாறு ஆசைப் பட்டார்கள்#
  ஆனால் ,இப்போது நாம் வேண்டாம் என்றாலும் ஆசை வார்த்தைகளைக் கூறி வங்கி கடன் அட்டைகளை நம் தலையில் கட்டி விடுகிறார்கள் ! இதுவும் அவஸ்தைக்கு காரணமாகி விடுகிறது !
  த ம 9

  ReplyDelete
 26. எங்கள் மனதில் உள்ளதையும், நாங்கள் எதிர்கொள்வதையும் அப்படியே எழுத்தாக்கிப் பதிவு செய்துள்ளீர்கள். என்ன செய்வது? அனைத்தையும் சமாளித்தாக வேண்டிய சூழலில்தானே இருக்கவேண்டியுள்ளது. பதிவைப் படித்ததும் ஏதோ எங்களது சுமையில் சிறிது குறைந்தது போல உள்ளது. நன்றி.

  ReplyDelete
 27. அருமையான யோசனை.
  திட்டமிடல் ஒவ்வொன்றிலும் அவசியம்.

  ReplyDelete
 28. நல்ல ஆலோசனைகள்! பிறரைப்பார்த்து வாழாமல் நம்மை உணர்ந்து வாழ்வதே சிறப்பு! இதை எல்லோரும் புரிந்துகொண்டால் நலம்! நன்றி!

  ReplyDelete
 29. மறுமொழி > Bagawanjee KA said...

  சகோதரர் கே ஏ பகவான்ஜீ அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

  // இப்போது நாம் வேண்டாம் என்றாலும் ஆசை வார்த்தைகளைக் கூறி வங்கி கடன் அட்டைகளை நம் தலையில் கட்டி விடுகிறார்கள் ! இதுவும் அவஸ்தைக்கு காரணமாகி விடுகிறது ! த ம 9 //

  வேண்டாம் என்று மனது வெளியே சொன்னாலும் , உள்ளுக்குள் ஆசை என்றுதானே பொருள்.

  ReplyDelete
 30. மறுமொழி > Dr B Jambulingam said...

  முனைவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி.

  // எங்கள் மனதில் உள்ளதையும், நாங்கள் எதிர்கொள்வதையும் அப்படியே எழுத்தாக்கிப் பதிவு செய்துள்ளீர்கள். என்ன செய்வது? அனைத்தையும் சமாளித்தாக வேண்டிய சூழலில்தானே இருக்கவேண்டியுள்ளது. பதிவைப் படித்ததும் ஏதோ எங்களது சுமையில் சிறிது குறைந்தது போல உள்ளது. நன்றி. //

  நீண்ட நாட்களாக இந்த விஷயத்தை எழுத வேண்டும் என்பது எனது ஆசை. இப்போதுதான் முடிந்தது.

  ReplyDelete
 31. மறுமொழி > கோமதி அரசு said...

  சகோதரியின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 32. மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...

  சகோதரரின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete