Wednesday, 26 November 2014

முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! - நூல் விமர்சனம்புதுக்கோட்டை ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்கள் பற்றிய அறிமுகம் தேவையில்லை. சிறந்த கவிஞர், பட்டிமன்ற பேச்சாளர். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் (தஞ்சை) விக்கிபீடியாவில் இவருக்கென்றே ஒரு கட்டுரையை தொகுத்து இருக்கிறார் என்றால், இவரைப் பற்றி அதிகம் இங்கு சொல்ல வேண்டியதில்லை. அண்மையில் புதுக்கோட்டையில் ஆசிரியர் நா.முத்துநிலவன் (05.10.2014, ஞாயிறு அன்று) எழுதிய மூன்று வெளியிடப்பட்டன.அவற்றுள் “முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!  என்ற நூலும் ஒன்று. நூல் முழுக்க கல்விச் சிந்தனைகள் நிறைந்த கட்டுரைகள்.

நூல் வெளியீட்டு விழா முடிந்தவுடனேயே, பல நண்பர்கள் தொடர்ந்து அவர் நூல்களைப் பற்றிய கட்டுரைகளை வலைப்பதிவில் வெளியிட்டனர். இப்போது நாமும் எழுதினால் சரியாக இருக்காது என்பதனால் அப்போது எழுதவில்லை.

(படம் மேலே)முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! நூல் வெளியீடு நன்றி: வளரும் கவிதை (http://valarumkavithai.blogspot.com/2014/10/blog-post_7.html)

கல்விமுறையும் பள்ளிகளும்:

அதிக மதிப்பெண் வாங்குவதற்காகவே மாணவர்கள் பள்ளிப் படிப்பில் படிக்கிறார்கள், படிக்க வைக்கப்படுகிறார்கள் என்பதனை சொல்லுகிறார்.. நமக்குத் தெரிந்தவரையில் பல பள்ளிகள் இந்த மதிப்பெண் போட்டியில், மாணவர் தேர்ச்சியில் அதிக சதவீதம் காட்ட  வேண்டும் என்பதற்காக, 9 ஆம் வகுப்பிலேயே 10 ஆம் வகுப்பு பாடங்களையும், 11 ஆம் வகுப்பிலேயே + 2 ( 12 ஆம்)  வகுப்பு பாடங்களையும் தொடங்கிவிடுகிறார்கள். தேறமாட்டார்கள் என்பவர்களை மாற்றுச் சான்றிதழ் (T.C) கொடுத்து அனுப்பி விடுகிறார்கள். தனது ஆதங்கத்தினை இவ்வாறு சொல்லுகிறார்

பெரும்பாலான தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும், சில அரசுப்பள்ளிகளிலும் கூட 9,11ஆம் வகுப்புகளை நடத்தும் வழக்கமே இல்லை! அந்தமாணவர்க்கு, முறையே10, 12ஆம் வகுப்புப் பாடங்களே இரண்டுவருடங்களும் நடத்தப்படுவது ஊரறிந்த ரகசியமாக உள்ளது! இரண்டு வருடமும் ஒரே புத்தகத்தை உருப்போட்டமாணவர்கள், தொழிற்கல்வி நுழைவுத் தேர்வுகளில் உருப்படாதமதிப்பெண் எடுக்கும் ரகசியமும் இதுதான்! அந்தந்த வயதிற்கும், உளவியல்- சொல்லாற்றல்-பொது கவனிப்புத் தன்மைக்கும் ஏற்றவாறு பாடங்கள் தயாரிக்கப்படுவது உண்மை யெனில், இந்தப்பள்ளிகள் இந்த வகுப்புகளையே புறக்கணித்துவிட்டு-ஒரே தாண்டாகத் தாண்டி-அடுத்த வகுப்புக்கு மாணவர்களைக் கடத்திகொண்டு போவது எப்படி அனுமதிக்கப் படுகிறது?  (பக்கம்.32)

வாழ்க்கையைக் கொடுக்கும் பாடங்களை மருந்துபோலத் தருகிறோம்! கல்வி சுமையாகிறது! வாழ்க்கையைக் கெடுக்கும் படங்களை விருந்துபோலத் தருகிறோம்! வாழ்க்கையே சுமையாகிறது! (பக்கம்.34)
               
ஆசிரியர்கள் படும்பாடு:

ஒரு மாணவன் அதிக மதிப்பெண் பெறுவதற்கு எவ்வளவோ சமூகக் காரணங்கள் உண்டு. ஆனால், இந்த மதிப்பெண் போட்டியில் ஆசிரியர்கள் மட்டுமே படும் தொல்லைகளைப் பட்டியலிட முடியாது. அரசுப் பள்ளிகளில் ஓடாத குதிரைகளை, போட்டியில் ஓட்டிக் காண்பிக்க வேண்டும். பல பள்ளிகளில் இந்த வகுப்பு ஆசிரியர்களுக்கு விடுப்பே கிடையாது. அதிலும் பல தனியார் பள்ளிகளில் கேட்கவே வேண்டாம்.ஓயாமல் படிப்பு, படிப்பு என்றால் மாணவர்களுக்கும் சரி, ஆசிரியர்களுக்கும் சரி மன அழுத்தம்தான் மிஞ்சுகிறது. பெற்றோர்களும் விதி விலக்கல்ல. இதனால் ஏற்படும் உரசல்கள், மோதல்கள் பற்றி அடிக்கடி பத்திரிகையில் காண்கிறோம். சென்னையில் உமா மகேஸ்வரி என்ற ஆசிரியை கொலையே செய்யப்பட்டு இருக்கிறார்.

“ஆசிரியர் உமாவைக் கொலை செய்தது யார்? என்று கேள்வி கேட்ட  நமது ஆசிரியர் சொல்லும் பதில்,  அல்ல அல்ல குற்றச்சாட்டு  இது. ( ஆசிரியர் என்பது பொதுப்பால் சொல் என்பது இவரது கருத்து. )

 அந்தச் சகோதரியின் உடலில் கத்திக் குத்து மீண்டும் மீண்டும் விழ விழக் கத்திக் கதறிய கதறலில், பொங்கிப் பெருகிய ரத்தத்துளியின் கறைபட்டு யார் யாரெல்லாம் குற்றவாளிகளாகி நிற்கிறார்கள் தெரியுமா? நாம் எல்லாரும்தான்! இது, உண்மை வெறும் இகழ்ச்சி இல்லை! (பக்கம்.23)

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக இருந்தவர் அல்லவா? இன்னும் வெளிப்படையாகவே தனது மனக்குமுறல்களை சொல்கிறார்.

நூறு விழுக்காடு தேர்ச்சிக்காகப் பல தனியார் பள்ளிகளும் சில அரசுப்பள்ளிகளும் கூட எடுக்கும் நடவடிக்கைகளை மனச்சாட்சியுள்ள ஆசிரியர் எவரேனும் தட்டிக் கேட்டால் கல்வித்துறை பேரைச் சொல்லியே அவர்களை ஓரங்கட்டி விட்டு மாணவர்களைப் படுத்தும்பாடு கொஞ்சமா நஞ்சமா? காலை 4மணிக்கே எழுப்பி விட்டு வீட்டுப்பாடம், பிறகு தனிப்பயிற்சிக்கு ஓடி, பிறகு வந்து பள்ளிக்கூடம் ஓடி, பிறகு மாலை பள்ளியிலிருந்து வந்ததும் எதையோ வாயில் கொட்டிக் கொண்டே உடைமாற்றிக் கொண்டு, மீண்டும் தனிப் பயிற்சிக்கு ஓடி, இரவு 8மணிக்கு மேல் வீட்டுக்கு வந்து மீண்டும் மாடுபோல அன்று நடந்த, முந்திய நாள்களில் படிக்க விட்டுப்போன பகுதிகளை அசைபோட்டு- இரவு படுக்க 11மணி யாகிவிடும் குழந்தைக்கு வயது 15! "ஓடி விளையாடு பாப்பா" என்ற பாரதி பாட்டைப் படித்து ஒப்பிக்காமல் விளையாடப்போன குழந்தைக்கு கடுமையான தண்டனை தரும் நமது பள்ளிக் கூடங்களால் மனஅழுத்தம் வராதா என்ன? அந்த அழுத்தம் கட்டாயப் படுத்தி சிரித்துக்கூடப் பேசாத ஆசிரியரால்- அதிகமாகாதா என்ன? (பக்கம்.25 26)

விருதுகளும், மாணவன் தந்த விருதும்:

பல பொதுத்துறை மற்றும் அரசு அலுவலகங்களில் தணிக்கை (Audit) நடந்து முடிந்தவுடன், தணிக்கைச் சான்றிதழ் (Inspection Report) தரும்போது,  சான்றிதழோடு சில ஊழியர்களுக்கு, வேலைத் திறமை, சேவை மனப்பான்மை இவற்றின் அடிப்படையில் நற்சான்றிதழ் (Good Report). கொடுப்பார்கள். பெரும்பாலும் நிர்வாகத்தில் காக்காய் பிடிப்பவர்களுக்கே இந்த சான்றிதழ் கொடுக்கப்படும்

முன்பெல்லாம் அரசு விருதுகள் எல்லாம் தகுதி பார்த்து தேடிப் பிடித்து தந்தார்கள். பணிக் காலத்திலேயே விருது, வாழ்நாளிலேயே விருது என்பது எல்லோருக்கும் மகிழ்ச்சியைத் தரும். ஆனால் விருது என்பது இப்போது அரசியலாகி விட்டது. அதிலும் கேட்டுப் பெற வேண்டும். இதுபற்றி ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்கள் என்ன சொல்லுகிறார்?

தமிழக அரசு தரும் நல்லாசிரியர்’ விருது ஒவ்வோராண்டும் செப்டம்பர்-5ஆம் தேதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளில் அவரது பெயராலேயே வழங்கப்படுகிறது. இந்த விருது மட்டுமன்றி,  கலைமாமணி   விருது பற்றிய செய்திகளும் வரும்போதெல்லாம் ‘அட இவருக்கா இந்த விருது?’ எனச் சிலர் பெயர்களைப் பார்த்து ஆச்சரியப் படுவதும்சில பெயர்களைப் பார்த்து அதிர்ச்சி அடைவதும் தொடர்கதையாகிவிட்டது! இதனால்இவ்விருதுகள் வரவர கேலிக்கூத்தாகிவிருது பெற்றவர்க்கும்,-ஏன்விருதுக்குமே கூட- மரியாதையற்ற நிலை உருவாகி வருகிறது! அரசுகள் மாறலாம்கட்சி-அரசியல் மாறலாம்ஆனால் மரபுசார்ந்த சிலமாண்புகளைக் காப்பாற்றும் பொறுப்பு நம் அனைவருக்குமே உண்டு. (பக்கம்.48)

பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜனைத் தொடர்ந்து எஸ்.பி.பால சுப்பிரமணியனும் பத்மஸ்ரீ விருது பெற்றுவிட்டார். சுசிலாம்மா பத்மவிபூஷன் விருதே பெற்றுவிட்டார். இவர்களின் தகுதியறிந்து அந்த விருதுகளைத் தந்த மத்தியஅரசுஇவர்களுக்கு முன்னோடியான எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு ஏன் இன்னும் பத்மஸ்ரீ விருதுகூடத் தரவில்லை எனும் கேள்வி எழுவது நியாயம் தானேபாவம், அவர் இந்த “விருது வாங்கும்தொழில் நுட்பம் தெரியாதவரோ என்னவோ? (பக்கம்.52)

நமது ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டதா இல்லையா என்று தெரியவில்லை. இவரிடம் படித்த மாணவன் ஒருவன் “சுட்டி விகடன்என்ற வார இதழில் எனக்குப் பிடித்த ஆசிரியர் என்ற கட்டுரையில் நமது ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்களைக் குறிப்பிட்டு எழுதி இருக்கிறான். ஆசிரியரின் பெருமித வரிகள் இதோ ... ...

இதைவிட அரசு தரும் நல்லாசிரியர்விருது பெரிதா என்ன?
இது போதும்பா... நாம் விதைத்த விதைகள் வீணாவதில்லை... சரியான நிலத்தில் சரியானபடி விழுந்தது ஆங்காங்கே வளர்ந்து கொண்டுதான் இருக்கிறது...  நம் உழைப்பு வீணாகிவிட வில்லை என்று மனசின் ஓரத்தில் சிறு கசிவு... என் பிள்ளைகள் புரிந்து கொண்டுதான் இருக்கிறார்கள்... வேறு யாரும் புரிந்துகொண்டால் என்ன? புரியாவிட்டால் என்ன? என் தலையில் டர்பன் தலைப்பாகை முளைத்திருந்தது. (பக்கம். 138)

நூலின் தலைப்பு:

நூலின் தலைப்பாக உள்ள முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! “ என்ற கட்டுரையில் சில வாழ்வியல் சிந்தனைகள் பற்றிய கருத்துக்களை தருகிறார். குறிப்பாக செல்போன், கம்ப்யூட்டர், பேஸ்புக் மற்றும் தொலைக்காட்சி பற்றியெல்லாம் சொல்லுகிறார். அதில் சில வரிகள்.

முகநூலில் கிடைக்கக் கூடிய மகிழ்ச்சியை விட, முகம்தெரியாத அல்லது முகத்தை மாற்றிக்கொண்ட யாரோ ஒருவரிடம் ஏமாந்துவிடக் கூடிய ஆபத்தும்உள்ளது என்பதை எந்தநேரத்திலும் மறந்துவிடக் கூடாது மகளே! உன்மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நீ கவனமாகத்தான் இருப்பாய்! இருக்க வேண்டும். (பக்கம்.61)

எனது ஆசை:

கல்வி என்றால் என்ன, அந்த கல்வியை எப்படி திட்டமிட வேண்டும் என்ற அனுபவமிக்க ஒரு ஆசிரியரின் அனுபவப் பிழிவே இந்த நூல் எனலாம். இன்னும் இந்த நூலில் சமச்சீர் கல்வி, தமிழில் சரியாக எழுதுதல், தாய்மொழிக் கல்வி, தனது ஆசிரியர் பணி அனுபவங்கள் என்று நிறையவே சொல்லி இருக்கிறார். அவற்றையெல்லாம் விரித்து எழுதினால் இந்த கட்டுரையைப் படிக்கும் அன்பருக்கு சலிப்பு ஏற்பட்டுவிடும் என்பதனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். எல்லோருடைய வீட்டு நூலகங்களிலும், தமிழ்நாட்டில் எல்லா நூலகங்களிலும் இந்த நூல் இடம்பெற வேண்டும், இன்னும் இவரது மற்றைய நூல்களைப் பற்றியும் நான் எழுத வேண்டும் என்பது எனது ஆசை.

(படம் - மேலே) ஆசிரியர் முத்துநிலவன் அவர்களுடன் நான்)

நூலின் பெயர்: முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!
நூலாசிரியர்: நா. முத்துநிலவன்
நூலின் விலை ரூபாய் 120/=  - பக்கங்கள் : 157
வெளியீடு: அகரம், மனை எண்.1, நிர்மலா நகர்,
           தஞ்சாவூர் -613 007 போன்: 04362 239289

31 comments:

 1. அன்புடையீர் வணக்கம்! ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, நாளை (27.11.2014) காலை நான் திண்டுக்கல் செல்வதால், இங்கே வந்த கருத்துரைகளுக்கு (COMMENTS) நாளைக்குப் (27 ஆம் தேதி) பின்னர்தான், என்னால் , மறுமொழிகள் எழுத இயலும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 2. ஐயாவைப்பற்றி சொல்லவும் வேண்டுமா ? அவசியம் சமூகத்திற்க்கு வேண்டிய விசயங்களைத்தான் சொல்லிருக்கிறார் என்பது தங்களின் பதிவில் தென்படுகிறது கண்டிப்பாக வாங்குவேன் நன்றி நண்பரே.....

  ReplyDelete
 3. நல்ல விரிவான விமர்சனம்! நானும் இந்த நூலை படிக்க வேண்டும்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 4. அருமையான விமரிசனம் சார்.

  ReplyDelete
 5. நல்ல விமர்சனம் ஐயா
  நானும் படித்து மகிழ்ந்தேன் ஐயா

  ReplyDelete
 6. அருமையான நூல் அறிமுகம் விமர்சனம்
  நன்றி அய்யா..

  ReplyDelete
 7. அய்யா வணக்கம். எனது நூல் பற்றிய தங்களின் அறிமுகத்திற்கு எனது பணிவான நன்றி. இவற்றில் பெரும்பாலானவை, தினமணி, தீக்கதிர், ஜனசக்தி மற்றும் பல்வேறு சிறப்பு மலர்களில் வெளிவந்தவை.
  நூலில் உள்ள 16கட்டுரைகளில், 5,6 கட்டுரைக்கு மேல் எடுத்துக் காட்டித் தாங்கள் எழுதியதோடு, அவற்றில் முத்தாய்ப்பாக நான் சொன்ன செய்திகளையும் சரியாகவே எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். தங்கள் அன்பிற்கும், நேரம் ஒதுக்கி இதுபற்றித் தனித்தொரு பதிவிட்டமைக்கும் எனது வணக்கம் கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதனை எடுத்து எனது தளத்தில் வெளியிட அனுமதிக்க வேண்டுகிறேன்.

  ReplyDelete
 8. பத்துப் புத்தகங்களை வைத்துக்கொண்டு ஒரு நூலுக்கான கருத்துகளைச் சரடு கட்டி எழுதும் இந்தக் காலத்தில், கல்வி சார் பட்டறிவின் பலனால் எழுந்த நூல் இது என்பதை
  அதன் ஒவ்வொரு பக்கமும் காட்டிச்செல்லும்.
  முதல் மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே என்று சொல்லும் துணிவற்றவர்கள் நிச்சயம் படித்தாகவேண்டிய புத்தகம்!
  அத்துணிவுள்ளவர்கள் படித்துவிட்டு தங்களின் கருத்துகளை ஆசிரியருக்கு எழுதிப் போடலாம்.
  பகிர்வுக்கு நன்றி அய்யா!
  த ம 3

  ReplyDelete
 9. விமர்சனம் மிகவும் சிறப்பு ஐயா...

  தங்களை சந்திக்க காத்திருக்கிறேன்...

  ReplyDelete
 10. // இந்த கட்டுரையைப் படிக்கும் அன்பருக்கு சலிப்பு ஏற்பட்டுவிடும் என்பதனால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.//

  கவிஞர், பேச்சாளர், எழுத்தாளர் என்ற பன்முகத்திறமை கொண்ட திரு முத்து நிலவன் அவர்களின் ‘முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே!’ என்ற நூல் பற்றிய தங்களது மதிப்புரை நிச்சயம் சலிப்பை ஏற்படுத்தவில்லை. மாறாக அதை படிக்கவேண்டும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டதென்றே சொல்லவேண்டும்.நிச்சயம் அந்த நூலை வாங்கி படிப்பேன். தங்களது நூல் மதிப்புரைக்கு நன்றி! திரு முத்துநிலவன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. சிறப்பான இவ் விமர்சனம் பலரையும் சென்றடைய வாழ்த்துக்கள் ஐயா .

  ReplyDelete
 12. ஐயாவைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமோ?! அவரது வலைத்தளமே அதைச் சொல்லிவிடுகின்றதே!

  அவரது நூல் கருத்துக்கள் அனைத்தும் உண்மையே! ஆசிரியர் அல்லவா...அனுபவம் பேசுகின்றது. நல்ல அருமையான விமர்சனமும் கூட தங்களது விமர்சன்ம்.

  ஐயா சொல்லுவது போல..நல்லாசிரியர் விருதுகள் இப்போது லகேலிக்கூத்துத்தான் ஐயா. ஆசிரியர் விருதுகள் மட்டுமல்ல, நம் நாட்டு விருதுகள் எல்லாமே கேலிக் கூத்துத்தான். மெய்சிலிர்க்க வைப்பது அல்ல. ஆசிரிய விருது என்பது மாணவர்களின் மனதில் இடம் பிடிப்பதுதான் ஐயா அவர்கள் சொல்லியிருப்பது போல....அதற்குஈடு உண்டா? வாழ்நாள் முழுவதும் மகிழ்வு தரக் கூடிய ஒன்று. நம்மால் எத்தனை குழந்தைகள் வளர்ச்சி அடைந்துள்ளார்கள், மறவாது தரும் அந்த நேசமும், அன்பும், நன்றியும் ...அதுதான் தலையாய விருது.

  மிகச் சிறந்த இடுகை ஐயா!

  ReplyDelete
 13. ஆசான் விஜு அவர்களின் கருத்தையும் வழிமொழிகின்றோம்.

  ReplyDelete
 14. நூலின் தலைப்பே புதுமை ! தங்கள் விமர்சனம் அதற்கு அருமை!

  ReplyDelete
 15. அருமையாக நூலை விமர்சனம் செய்து இருக்கிறீர்கள்.

  சமூக நலனில் அவர் காட்டும் அக்கரை பாராட்டப்படவேண்டிய விஷயம்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 16. மறுமொழி > KILLERGEE Devakottai said...

  சகோதரர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களது கருத்துரைக்கு நன்றி. அவசியம் இந்த நூலை வாங்கி படியுங்கள்.

  ReplyDelete
 17. மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...

  சகோதரர் தளிர்’ சுரேஷ் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 18. மறுமொழி > rajalakshmi paramasivam said...

  சகோதரியின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 19. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... (1 , 2 )

  ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 20. மறுமொழி > Mathu S said... (1, 2 )

  ஆசிரியர் எஸ்.மது அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 21. மறுமொழி > Muthu Nilavan said...

  // அய்யா வணக்கம். எனது நூல் பற்றிய தங்களின் அறிமுகத்திற்கு எனது பணிவான நன்றி.//

  அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். தங்கள் அன்பான வருகைக்கு நன்றி.

  // இவற்றில் பெரும்பாலானவை, தினமணி, தீக்கதிர், ஜனசக்தி மற்றும் பல்வேறு சிறப்பு மலர்களில் வெளிவந்தவை. //

  இந்த செய்தியை எனது கட்டுரையில் தெரிவிக்க எண்ணி இருந்தேன். விட்டு போயிற்று.


  // நூலில் உள்ள 16கட்டுரைகளில், 5,6 கட்டுரைக்கு மேல் எடுத்துக் காட்டித் தாங்கள் எழுதியதோடு, அவற்றில் முத்தாய்ப்பாக நான் சொன்ன செய்திகளையும் சரியாகவே எடுத்துக்
  காட்டியிருக்கிறீர்கள். தங்கள் அன்பிற்கும், நேரம் ஒதுக்கி இதுபற்றித் தனித்தொரு பதிவிட்டமைக்கும் எனது வணக்கம் கலந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். //

  அய்யா அவர்களின் பாராட்டிற்கு நன்றி.

  // இதனை எடுத்து எனது தளத்தில் வெளியிட அனுமதிக்க வேண்டுகிறேன். //

  இந்த கட்டுரை உங்கள் நூலைப் பற்றியது. எனவே இதனை நகலெடுத்து, உங்களது தளத்தில் வெளியிட எனது அனுமதி தேவையில்லை. நீங்கள் வெளியிடலாம்.

  சிலநாட்களாகவே எங்களது கம்ப்யூட்டரில் NHM தமிழ் எழுதி LOAD ஆவதில் பிரச்சினையாகவே இருந்து வந்தது. நேற்று இரவு முதல், அது செயல் இழந்து விட்டது. அதனால் இன்று காலையிலேயே திண்டுக்கல்லுக்கு கிளம்புவதற்கு முன்னர் பதில் எழுத இயலாமல் போய்விட்டது. அதனால் தான் உங்களிடம் போனில் பேச நேரிட்டது. ஊரிலிருந்து வந்ததும், இப்போதுதான் NHM Tamil Writer ஐ சரிசெய்தேன்.


  ReplyDelete
 22. மறுமொழி > ஊமைக்கனவுகள். said...

  ஜோசப் அண்ணா என்று அன்பாக அழைக்கப்படும் ஆசிரியர் ஜோசப் விஜூ அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 23. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

  சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 24. மறுமொழி > வே.நடனசபாபதி said...

  அய்யா V.N.S அவர்களின் நீண்ட அன்பான கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 25. மறுமொழி > அம்பாளடியாள் said...

  சகோதரி அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 26. மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said... ( 1, 2 )

  அன்பு ஆசிரியர் தில்லைக்கது V. துளசிதரன் அவர்களின் கருத்துரைகளுக்கு நன்றி. எல்லோருக்கும் உண்டான நம்நாட்டு விருதுகள் பற்றிய தங்கள் கண்ணோட்டத்தினை அழகாகச் சொன்னீர்கள்.

  ReplyDelete
 27. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...

  புலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 28. மறுமொழி > கோமதி அரசு said...

  சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

  // அருமையாக நூலை விமர்சனம் செய்து இருக்கிறீர்கள்.
  சமூக நலனில் அவர் காட்டும் அக்கரை பாராட்டப்படவேண்டிய விஷயம். வாழ்த்துக்கள் //

  அவர் (நா. முத்து நிலவன் அவர்கள்) கவிஞர், ஆசிரியர், சமூக சேவகர், வலைப்பதிவர், பட்டிமன்ற பேச்சாளர் என்று பன்முகத் திறன் கொண்டவர்.

  ReplyDelete
 29. நல்ல நூலைப் பற்றி நல்ல விமர்சனம்..நன்றி அய்யா

  ReplyDelete