காலையில் எழுந்து
பல்துலக்கி , முகம், கை, கால் கழுவியவுடன் சூடாக ஒரு டம்ளர் காபி
சாப்பிட்டால்தான் எனக்கு மற்ற வேலைகள் ஓடும். எனவே வீட்டில் கொஞ்சம் தாமதம் ஆகி
விட்டாலும் சிரமம் பாராது வெளியே காபி கடைக்கு சென்று சாப்பிட்டு வந்து விடுவேன்.
பேப்பர் பையன் வர நேரம் ஆகும் என்பதால், அதுவரை இண்டர்நெட்தான். காபி சாப்பிட்டுக்
கொண்டே தமிழ்மணம் போன்ற திரட்டிகள் பார்ப்பது பின்னூட்டம் எழுதுவது என்று நேரம்
நகர்ந்து விடும்.
இப்போதெல்லாம் வலைப்
பூக்களில் காபியை (Coffee)
குறிப்பிடும் போதெல்லாம் சிலர், குறிப்பாக கவிஞர்கள், குளம்பி என்ற பெய்ரால் குறிப்பிடுகின்றனர். அது
என்ன குளம்பி? குழப்பமாக இருக்கிறது. அதே போல பிளாஸ்டிக் (Plastic) என்பதற்கு ஞெகிலி என்ற சொல்லை
பயன்படுத்துகின்றனர். அது என்ன ஞெகிலி? நெகிழும் தன்மையைக் குறிப்பது என்றால்
நெகிழி என்றல்லவா வரவேண்டும். அதேபோல ஐஸ்கிரீமை (Ice Cream) பனிக் கூழ் என்றும் பனிக்களி என்றும் சொல்லுகிறார்கள்.
பயணம் செய்து என்று
எழுதுவது மரபு. ஆனால் பயணித்து என்று ( ஜனித்து என்பதைப் போல) எழுதுகிறார்கள்.
இளம் பெண்களை இளஞி என்று குறிக்கின்றார்கள். இது தவறு.
தனித்தமிழ்:
சுமார் 90
வருடங்களுக்கு முன்னர் மறைமலையடிகள் தலைமையில் தனித்தமிழ் இயக்கம் தோன்றியது.
அவரோடு பெருஞ்சித்திரனார், தேவநேயப் பாவாணர் போன்ற பெருமக்களும் இணைந்து கொண்டனர்.
தமிழில் பேச வேண்டும் எழுத வேண்டும் என்ற உணர்வு தோன்றியது. தங்களது பெயர்களையும்
தூய தமிழில் மாற்றிக் கொண்டனர். பிறந்த குழந்தைகளுக்கும் தமிழிலேயே பெயர்
சூட்டினர். தமிழில் புழக்கத்தில் இருந்த பல பிறமொழிச் சொற்களுக்கு காரணத்தோடு தமிழ்
வடிவம் சொல்லப்பட்டது. இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஆட்சித்துறைத்
தமிழ் என்ற நிர்வாகத்தை அமைத்து செவ்வனே செய்து வந்தனர். இப்போது முன்பு இருந்த
ஆர்வம் மற்றும் செயல்பாடுகள் இல்லை
மக்கள் தீர்ப்பு:
என்னதான் தமிழ்
மக்கள் மத்தியில் தமிழில் பேச வேண்டும் எழுத வேண்டும் என்ற உணர்வு இருந்தாலும் சில பொருட்களை அல்லது சில
பெயர்களை அதன் மூலச் சொல்லிலேயே அழைக்கப்படுவதை விரும்புகின்றனர்.
சென்னை கிறிஸ்தவக்
கல்லூரி தமிழ்த் துறைத் தலைவராக இருந்த, வி.கோ.சூரிய நாராயண சாஸ்திரி என்பவர் நல்ல
தமிழறிஞர். தமிழ்ப்பற்றின் காரணமாக தனது பெய்ரை பதிமாற் கலைஞர் என்று மாற்றிக்
கொண்டார்.. மேலும் இதனாலேயே மாக்சுமுல்லரை 'மோட்சமூலப் பட்டாசாரியார் என்றும் ஷேக்ஸ்பியரை 'ஜெகப்பிரியர்' என்றும் அழைத்தார். இதுபோன்ற தமிழ்ப்படுத்தல் மக்களிடம்
எடுபடவில்லை.
தமிழர்கள்
பழக்கத்தில் கொள்ளாத சில தமிழாக்க சொற்களை இங்கு பட்டியலிட்டுள்ளேன்.
AEROPLANE - விமானம்
BANK - வங்கி
BUS
- பேருந்து
CAR -
CIGARETTE - வெண்சுருட்டு
COFFEE
-
COMPUTER – கணினி
CONDUCTOR - நடத்துநர்
CYCLE
- மிதி வண்டி
DRIVER
- ஓட்டுநர்
FOOTBALL – உதைபந்து
HELICOPTER - வானூர்தி
ICE - பனிக்கட்டி
INTERNET - இணையம்
OXYGEN - பிராணவாயு
PAPER
- காகிதம்
PENCIL -
PLASTIC
-
PLATFORM - நடைமேடை
RADIO
- வானொலி
RAIL
- புகைவண்டி
SOAP -
TEA
- தேநீர்
TELEVISION - தொலைக்காட்சி
TICKET
- பயணச்சீட்டு
TOILET - கழிவறை
TOKEN
- அடையாள வில்லை
மோட்டார் உதிரி
பாகங்களை எடுத்துக் கொண்டால் ஆக்ஸிலேட்டர், கியர், பிரேக், சைலன்சர் என்று இன்னும்
நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். ஒரு பொருளை அல்லது செயலைக் குறிப்பிட்டால், அந்த
சொல் அதன் வடிவத்தை சட்டென்று நினைவுக்கு கொண்டு வரவேண்டும். எனவே, தமிழுக்கு,
தமிழ்நாட்டிற்கு புதுமையான அதேசமயம் உலகளாவிய கண்டுபிடிப்புகளை அதே பெயரால்
அழைப்பதில் தவறில்லை. அதே
சமயம் இருக்கும் தமிழ்ச் சொற்களை புறக்கணித்துவிட்டு அதற்கு மாற்றாக அயல்மொழிச்
சொற்களைப் பயன்படுத்துதலும் கூடாது. (உதாரணம் முடி (HAIR), புத்தகம் (BOOK), தண்ணீர் (WATER),அடுக்களை அல்லது சமையலறை (KITCHEN) போன்றவற்றைச் சொல்லலாம்)
உடனே நீ தமிழனா?
உனக்கு தமிழ் மீது பற்று இருக்கிறதா என்று கேட்காதீர்கள். எனக்கு தாய்மொழி தமிழின்
மீது பற்று உண்டு. ஆனால் வெறி கிடையாது. இது எனது தனிப்பட்ட கருத்து. நீங்கள் என்ன
நினைக்கிறீர்கள்.
(ALL PICTURES THANKS
TO “GOOGLE IMAGES” )
தங்கள் பதிவின் மூலமாக பல புதிய சொற்களைப் பற்றியும், பயன்பாட்டைப் பற்றியும் அறிந்துகொண்டேன். முடிந்த வரை தாங்கள் சொன்ன உத்தியையே எனது எழுத்துக்களில் பயன்படுத்த முயற்சி செய்துவருகிறேன். இவ்வாறான உணர்வு நியாயமானதே. வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களது விளக்கவுரை சரியானதே... நண்பரே.
ReplyDeleteநல்ல முயற்சி அருமையான தகவல்கள் அய்யா
ReplyDeleteத ம ஒன்று
வணக்கம்
ReplyDeleteஐயா.
அற்புதமான தகவலை மிகவும் எளிதாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா த.ம 2
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
எனது தளத்தில் நண்பர் துளசிதரன் ஜி ,கைம்பெண்ணுக்கு எதிர்ப்பதமாக கைம்ஆண் (கைம்மாண்)என்று சொல்லலாமே என்று யோசனைக் கூறியுள்ளார் !>>>http://www.jokkaali.in/2014/11/blog-post_48.html">ஏக'ப்பட்ட' பத்தினி விரதனா பட்டிமன்ற பேச்சாளர் ?
ReplyDeleteத ம 3
சிந்தக்கத்தூண்டும் பதிவுதான்!
ReplyDeleteதமிழர்கள் பழக்கத்தில் கொள்ளாததாகத் தாங்கள் குறிப்பிடும் சில சொற்களை பாமரர்கள் வழக்கில் கொள்ளக் கண்டிருக்கிறேன்.
தற்சமம், தற்பவம் எனத் தமிழ் விதிகூறி வைத்திருப்பதையும் “ வடசொற்கிளவி வடவெழுத் தொரீஇ யெழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே“ என்று தொல்காப்பியத்தமிழும் இவ்வேற்று மொழிகள் தமிழில் எவ்வாறு வரல் வேண்டும் என்பதற்கு விதி கூறிச் சென்றிருக்கின்றன.
தாங்களின் தனிப்பட்ட கருத்தும் முன்னோர் கருத்தும் ஒன்றே!
நல்ல தமிழை உருவாக்க அடித்தளம் அமைக்கும் இது போன்ற முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை!
வாழ்த்துகள் அய்யா!
நன்றி
மறுமொழி> Dr B Jambulingam said...
ReplyDeleteமுனைவர் அய்யா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
// தங்கள் பதிவின் மூலமாக பல புதிய சொற்களைப் பற்றியும், பயன்பாட்டைப் பற்றியும் அறிந்துகொண்டேன். முடிந்த வரை தாங்கள் சொன்ன உத்தியையே எனது எழுத்துக்களில் பயன்படுத்த முயற்சி செய்துவருகிறேன். இவ்வாறான உணர்வு நியாயமானதே. வாழ்த்துக்கள். //
உங்களைப் போலவே நானும் எனது கட்டுரைகளில் எழுதியும் வருகிறேன். சில நண்பர்கள் தமிழ்ப்படுத்துகிறேன் என்று தமிழைப் படுத்தியதால் எழுந்த ஆதங்கம்தான் இந்த சிறிய கட்டுரை.
மறுமொழி> KILLERGEE Devakottai said...
ReplyDelete// தங்களது விளக்கவுரை சரியானதே... நண்பரே. //
அன்பு நண்பர் தேவகோட்டை கில்லர்ஜியின் கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி> Mathu S said...
ReplyDelete// நல்ல முயற்சி அருமையான தகவல்கள் அய்யா
த ம ஒன்று //
சகோதரர் ஆசிரியர் எஸ்.மது அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இந்த குளத்தில் கல்லை விட்டெறிந்து இருக்கிறேன். பார்ப்போம்.
மறுமொழி> ரூபன் said...
ReplyDeleteகவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கமும், நன்றியும்.
மறுமொழி> Bagawanjee KA said...
ReplyDeleteசகோதரர் கே.ஏ. பகவான்ஜி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
// எனது தளத்தில் நண்பர் துளசிதரன் ஜி ,கைம்பெண்ணுக்கு எதிர்ப்பதமாக கைம்ஆண் (கைம்மாண்)என்று சொல்லலாமே என்று யோசனைக் கூறியுள்ளார் !>>>http://www.jokkaali.in/2014/11/blog-post_48.html">ஏக'ப்பட்ட' பத்தினி விரதனா பட்டிமன்ற பேச்சாளர் ?
த ம 3 //
உங்கள் வலைத்தளம் சென்று பார்த்தேன்.நண்பர் துளசிதரன் ஜி , அவர்கள் கைம்பெண்ணுக்கு எதிர்ப்பதமாக கைம்ஆண் (கைம்மாண்) என்று (கைம்மாண்) சொன்ன சொல் பொருத்தமானதா என்று தெரியவில்லை. ஆனால் கணவனை இழந்த பெண்ணுக்கும் (WIDOW), மனைவியை இழந்த ஆணுக்கும் (WIDOWER) பொதுவான “கம்மனாட்டி” என்ற ஒரு பெயர்ச் சொல் தமிழில் உண்டு. நமது தமிழ்நாட்டு கிராமங்களில் மக்கள் இந்த சொல்லை சர்வ சாதாரணமாக் புழங்குவார்கள். இடக்கடரடக்கல் கருதி யாரும் எழுதுவதில்லை.
தங்களுடைய யோசனைகள் மிகவும் பயனுள்ளவை ஐயா. பேசும்போது ஆங்கில வார்த்தைகளை உபயோகித்தாலும் கூடுமானவரை எழுத்தில் அவற்றைத் தவிர்க்கவே விரும்புகிறேன். பிழையில்லாமலும் ஆங்கிலம் கலவாமலும் எழுத முயல்கிறேன். அதே சமயம் தாங்கள் குறிப்பிடுவது போல் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வலிந்து புதிய கலைச்சொற்களை உருவாக்காமல் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வது மொழியின் வளர்ச்சிக்கு உதவும். இப்படிதானே ஆங்கிலம் வளர்ந்து இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறது.
ReplyDeleteகுளம்பி குறித்த ஐயத்துக்கு... காப்பிக்கொட்டையின் வடிவம் குளம்புகளை ஒத்திருப்பதால் அவற்றை குளம்பி என்று குறிப்பிடுவதாக எங்கோ வாசித்த நினைவு.
ஐயா முடிந்தவரை , பிற மொழிச் சொற்கள் கலக்காத வகையில் பேசுதலும் எழுதுதலும் நன்றே
ReplyDeleteஅதே நேரத்தில் சொற்கள் யாருக்கும் குழப்பம் விளைவிக்காத வகையிலும் இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன்
நன்றி ஐயா
மாற்றம் பெற்றோர்கள் மனதில் முதலில் வர வேண்டும்...
ReplyDelete
ReplyDeleteதமிழர்கள் பழக்கத்தில் கொள்ளாத சில தமிழாக்க சொற்கள் என கீழேயுள்ள சொற்களை குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் இவைகளில் சில பேச்சு வழக்கில் இல்லாவிட்டாலும் எழுதும்போது இவைகள் உபயோகப்படுத்துகின்றன.
‘விமானம்,வங்கி, பேருந்து, கணினி, நடத்துநர், ஓட்டுநர், இணையம், வானொலி, தேநீர், தொலைக்காட்சி’
எல்லாவற்றையும் தமிழில் மொழிமாற்றம் செய்யவேண்டாம். ஆனால் எங்கெங்கு முடியுமோ அங்கு செய்யலாமே. நான் கேரளாவில் 7 ஆண்டுகள் பணியாற்றியபோது அங்கு வெளியாகும் ஒரு பிரபல நாளேட்டின் நிருபர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது ‘தமிழர்களாகிய நீங்கள், நூலகம், பேருந்து நிலையம் என்றும் கணினி என்றும் இணையம் என்றும் தமிழில் ஆங்கிலத்துக்கு இணையான சொற்களை உபயோகப்படுத்தி எதிர்காலத்தில் உங்களது மொழி மறைந்து போகாமல் இருக்க வழி செய்துகொண்டு இருக்கிறீர்கள். ஆனால் நாங்களோ Mixed School, Photo studio. Sweet Stall என்ற ஆங்கில சொற்களை மொழிபெயர்க்காமல் அப்படியே ஒலிபெயர்ப்பு (Transliterate) செய்து எழுதிவருகிறோம். இப்படியே போனால் எங்களது பிள்ளைகள் மலையாளம் என் எண்ணி ஆங்கிலத்தை பேசிக்கொண்டு இருக்கப்போகிறார்கள்.’ என்றார்.
எனவே வழக்கத்தில் எளிதாக பயன்படுத்தக் கூடிய சொற்களை கண்டுபிடித்து எழுதலாமே? நம்மைப் போன்றோர் வலைப்பதிவுகளில் கூடியவரை தமிழில் (தூய தமிழில் அல்ல) எழுதலாமே?
மறுமொழி> ஊமைக்கனவுகள். said...
ReplyDeleteசகோதரர் ஆசிரியர் ஜோசப் விஜு அவர்களின் வருகைக்கும் நீண்ட அன்பான கருத்துரைக்கும் நன்றி.
// சிந்தக்கத்தூண்டும் பதிவுதான்! தமிழர்கள் பழக்கத்தில் கொள்ளாததாகத் தாங்கள் குறிப்பிடும் சில சொற்களை பாமரர்கள் வழக்கில் கொள்ளக் கண்டிருக்கிறேன். //
பாமரர்கள் கையாளும் அந்த சொற்களை எடுத்துக்காட்டி தாங்களும் ஒரு பதிவு எழுத வேண்டும் என்பது எனது ஆசை.
// தற்சமம், தற்பவம் எனத் தமிழ் விதிகூறி வைத்திருப்பதையும் “ வடசொற்கிளவி வடவெழுத் தொரீஇ யெழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே“ என்று தொல்காப்பியத்தமிழும் இவ்வேற்று மொழிகள் தமிழில் எவ்வாறு வரல் வேண்டும் என்பதற்கு விதி கூறிச் சென்றிருக்கின்றன.//
தமிழ் இலக்கண வகுப்பில் படித்த தற்சமம், தற்பவம் இரண்டினையும் எனக்கு நினைவூட்டியமைக்கு நன்றி.
// தாங்களின் தனிப்பட்ட கருத்தும் முன்னோர் கருத்தும் ஒன்றே!
நல்ல தமிழை உருவாக்க அடித்தளம் அமைக்கும் இது போன்ற முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை! வாழ்த்துகள் அய்யா! நன்றி //
தங்கள் பாராட்டிற்கு நன்றி. எனது கட்டுரைகளில் தங்களுக்கு மாற்றுக் கருத்து இருந்தாலும் தெரியப்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். அது என்னை திருத்திக் கொள்ள உதவும்.
மறுமொழி> கீத மஞ்சரி said...
ReplyDeleteசகோதரி கீதா மதிவாணன் அவர்களின் நீண்ட அன்பான கருத்துரைக்கு நன்றி.
// தங்களுடைய யோசனைகள் மிகவும் பயனுள்ளவை ஐயா. பேசும்போது ஆங்கில வார்த்தைகளை உபயோகித்தாலும் கூடுமானவரை எழுத்தில் அவற்றைத் தவிர்க்கவே விரும்புகிறேன். பிழையில்லாமலும் ஆங்கிலம் கலவாமலும் எழுத முயல்கிறேன். //
உங்களுடைய கவிதை, கட்டுரை மற்றும் தமிழாக்கங்களை ட்படித்து வரும் வாசகர்களில் நானும் ஒருவன். உங்கள் தமிழ்ப் பற்றும் தமிழ்த் தொண்டும் வாழ்க.
// அதே சமயம் தாங்கள் குறிப்பிடுவது போல் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வலிந்து புதிய கலைச்சொற்களை உருவாக்காமல் அவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வது மொழியின் வளர்ச்சிக்கு உதவும். இப்படிதானே ஆங்கிலம் வளர்ந்து இன்று இந்த நிலையை அடைந்திருக்கிறது. //
ஆம் சகோதரி. நானும் உங்கள் கருத்தினில் உடன்படுகின்றேன்.
//குளம்பி குறித்த ஐயத்துக்கு... காப்பிக்கொட்டையின் வடிவம் குளம்புகளை ஒத்திருப்பதால் அவற்றை குளம்பி என்று குறிப்பிடுவதாக எங்கோ வாசித்த நினைவு. //
குளம்பி என்றவுடன் உங்கள் மனத்திரையில் என்ன தோன்றுகிறது என்பதனையும், காபி என்றவுடன் என்ன வருகிறது என்பதனையும் நினைத்துப் பாருங்கள்.
மறுமொழி> கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2 )
ReplyDeleteசகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
// ஐயா முடிந்தவரை , பிற மொழிச் சொற்கள் கலக்காத வகையில் பேசுதலும் எழுதுதலும் நன்றே அதே நேரத்தில் சொற்கள் யாருக்கும் குழப்பம் விளைவிக்காத வகையிலும் இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றேன் நன்றி ஐயா //
உங்கள் கருத்துக்கு மாற்று கருத்து ஏதும் இல்லை அய்யா.
மறுமொழி> திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDelete// மாற்றம் பெற்றோர்கள் மனதில் முதலில் வர வேண்டும்... //
சகோதரர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
மறுமொழி> வே.நடனசபாபதி said...
ReplyDeleteநீண்ட கருத்துரை தந்த அய்யா வே.நடனசபாபதி அவர்களுக்கு நன்றி. முடிந்தவரை பிறமொழிச் சொற்கள் கலவாத உங்களது பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவர்களில் நானும் ஒருவன்.
// தமிழர்கள் பழக்கத்தில் கொள்ளாத சில தமிழாக்க சொற்கள் என கீழேயுள்ள சொற்களை குறிப்பிட்டுள்ளீர்கள். ஆனால் இவைகளில் சில பேச்சு வழக்கில் இல்லாவிட்டாலும் எழுதும்போது இவைகள் உபயோகப்படுத்துகின்றன.
‘விமானம்,வங்கி, பேருந்து, கணினி, நடத்துநர், ஓட்டுநர், இணையம், வானொலி, தேநீர், தொலைக்காட்சி’ //
உங்கள் கருத்துக்கு மாற்று கருத்து ஏதும் இல்லை அய்யா.
பொதுவாகவே எல்லா மொழிகளிலும் சில சந்தர்ப்பங்களில், பேச்சுமொழி (Spoken language) ஒன்றாகவும் எழுத்துமொழி (Written language) பிறிதொன்றாகவும் இருப்பது நடைமுறை. நமது தமிழிலும் அவ்வாறே உள்ளது. நமது தமிழில், ஆங்கிலேயர் ஆண்டதன் விளைவாகவும், புதிய கண்டுபிடிப்புகள் காரணமாகவும் பேசும்போது ஆங்கிலத்திலும் எழுதும்போது தமிழிலும் எழுதுகிறோம். தமிழ் திரைப்படங்களை எடுத்துக் கொண்டால் சமூகப் படங்களில் வசனங்கள் முழுக்க. பேச்சுத்தமிழ்தான் அதேசமயம் ராஜாராணி கதைகள், புராணப் படங்கள் என்றால் வலிந்து செயற்கையான வசனங்களால் எழுதப்படுகின்றன.
// எல்லாவற்றையும் தமிழில் மொழிமாற்றம் செய்யவேண்டாம். ஆனால் எங்கெங்கு முடியுமோ அங்கு செய்யலாமே.//
ஆமாம் அய்யா! நம்மால் முடிந்ததை நிச்சயம் செய்ய வேண்டும்.
// நான் கேரளாவில் 7 ஆண்டுகள் பணியாற்றியபோது அங்கு வெளியாகும் ஒரு பிரபல நாளேட்டின் நிருபர் என்னிடம் பேசிக்கொண்டிருக்கும்போது ‘தமிழர்களாகிய நீங்கள், நூலகம், பேருந்து நிலையம் என்றும் கணினி என்றும் இணையம் என்றும் தமிழில் ஆங்கிலத்துக்கு இணையான சொற்களை உபயோகப்படுத்தி எதிர்காலத்தில் உங்களது மொழி மறைந்து போகாமல் இருக்க வழி செய்துகொண்டு இருக்கிறீர்கள். ஆனால் நாங்களோ Mixed School, Photo studio. Sweet Stall என்ற ஆங்கில சொற்களை மொழிபெயர்க்காமல் அப்படியே ஒலிபெயர்ப்பு (Transliterate) செய்து எழுதிவருகிறோம். இப்படியே போனால் எங்களது பிள்ளைகள் மலையாளம் என் எண்ணி ஆங்கிலத்தை பேசிக்கொண்டு இருக்கப்போகிறார்கள்.’ என்றார். //
கேரள மக்கள் இனவுணர்வோடு மண்ணின் மைந்தர்களாக இருந்தாலும் மலையாளமொழி தனது தனித்தன்மையை இழந்து வருவது கண்கூடு.
// எனவே வழக்கத்தில் எளிதாக பயன்படுத்தக் கூடிய சொற்களை கண்டுபிடித்து எழுதலாமே? நம்மைப் போன்றோர் வலைப்பதிவுகளில் கூடியவரை தமிழில் (தூய தமிழில் அல்ல) எழுதலாமே? //
உங்களுடைய இந்த யோசனையை வலைப்பதிவில் நானும் நிச்சயம் கடைபிடிக்க முயற்சிக்கிறேன் அய்யா.
நண்பரே பகவான்ஜியின் பதிவில் நான் சொல்லியிருப்பது....
ReplyDeleteவிதவைக்கு எதிர்ப்பதம் ‘’விதவன்’’ என்றும், பத்தினிக்கு எதிர்ப்பதம் ‘’பத்தன்’’ என்று சொல்லலாமே... அரபு மொழியில் கூட விதவை பெண்களை ‘’அர்மலஹ்’’ என்றும், ஆண்களை ‘’அர்மல்’’ என்றும் சொல்கிறார்கள்.
பெண்கள் அர்மலஹ் ( ارمـــلـة )
ஆண்கள் அர்மல் ( ارمـل )
அன்புடன்
கில்லர்ஜி.
பதிவுகளைப் பயனுள்ளதாகவும்
ReplyDeleteமிகச் சிறப்பாகவும் தருதல் தங்கள் பாணி
என்பதற்கு இந்தப் பதிவும் ஒரு நல்ல உதாரணம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
ஹலோ! நண்பரே !
ReplyDeleteஇன்று உலக ஹலோ தினம்.
(21/11/2014)
செய்தியை அறிய
http://www.kuzhalinnisai.blogspot.com
வருகை தந்து அறியவும்.
நன்றி
புதுவை வேலு
தமிழ் மொழி ஒரு complicated மொழி. தமிழ் சரியாகத் தெரியாதவர்கள் அதை உபயோகிப்பதில் சிக்கல்கள் உண்டு. எல்லா சப்தங்களையும் வரிவடிவில் கொண்டு வரமுடியாது உ-ம் BHADHRINATH என்னும் பெயரை பத்ரிநாத் என்று எழுதுகிறோம். அப்படியே வாசித்தால் பெயரே சிதைந்து விடும் மொழியின் limitations களை உணர்வதும் அவசியம். ‘யாரது தமிழ் எழுதும் போது ஆங்கில வார்த்தைகளைக் கையாளுவது.?” என்னும் கண்டனக் குரல் கேட்கிறது.
ReplyDeleteஎனக்கு நீங்கள் எழுதியப் பின்னுட்டத்திலேயே உங்களின் ஆதங்கம் தெரிந்தது. அதை ஒருப் பதிவாகவே வெளியிட்டு விட்டீர்கள். நீங்கள் சொல்வது போல் சில கலைசொற்கள் மொழியின் வளர்ச்சிக்கு உதவலாம். சிந்திக்கத் தூண்டும் பதிவு.
ReplyDeleteவாழ்த்துக்கள்.......
அய்யா வணக்கம். அருமையான சிந்தனை. இதுபோலும் சிநதனை பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள், பாவாணமர், பெருஞ்சித்திரனார் போலும் பெரியோர்க்கு எழுந்த விளைவே தனித்தமிழியக்கம். உங்கள் ஊரின் ஈவெரா கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற திருமாறன் அ்யயா அவர்கள் எழுதிய “தனித்தமிழியக்கத்தின் அரசியல் பின்னணி“ படித்தால் இதுபற்றிய ஏராளமான தகவல்கள் கிடைக்கும். இதை அடியொற்றியே தனித்தமிழை வற்புறுத்தித் தினமணியில் எழுதிய அமைச்சர் தமிழ்க்குடிமகனார்க்கு நான் தினமணியிலேயே எழுதிய மறுப்புக் கட்டுரைதான் “இருமுனைத் தவறுகள்“ எனது “முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே“ நூலின் 17ஆவது கட்டுரை அது. அன்புகூர்ந்து படிக்க வேண்டுமாயத் தங்களை அன்புடன் அழைக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள் அ்ய்யா. பாராட்டுகளும் நன்றியும் வாழ்த்துகளும். வணக்கம்.
ReplyDeleteமறுமொழி> KILLERGEE Devakottai said...
ReplyDeleteநண்பர் தேவகோட்டை கில்லர்ஜியின் இரண்டாம் வருகைக்கும் அரபுச் சொற்கள் மேற்கோள்களோடு சொன்ன கருத்துரைக்கும் நன்றி.
// நண்பரே பகவான்ஜியின் பதிவில் நான் சொல்லியிருப்பது....
விதவைக்கு எதிர்ப்பதம் ‘’விதவன்’’ என்றும், பத்தினிக்கு எதிர்ப்பதம் ‘’பத்தன்’’ என்று சொல்லலாமே... அரபு மொழியில் கூட விதவை பெண்களை ‘’அர்மலஹ்’’ என்றும், ஆண்களை ‘’அர்மல்’’ என்றும் சொல்கிறார்கள். பெண்கள் அர்மலஹ் ( ارمـــلـة ) ஆண்கள் அர்மல் ( ارمـل ) //
ஓவ்வொரு மொழிக்கும் பல சிறப்புகள் உண்டு. ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழியின் வளர்ச்சிக்கு தம்மால் முடிந்ததைச் செய்ய வேண்டும். ஆனைக்கு அர்ரம் என்றால் குதிரைக்கு குர்ரம் என்று மட்டும் போய்விடக் கூடாது. மேலே பகவான்ஜி அவர்களுக்கு சொன்ன மறுமொழியையே இங்கும் பார்க்கவும்.
மறுமொழி> Ramani S said... ( 1 , 2 )
ReplyDelete//பதிவுகளைப் பயனுள்ளதாகவும் மிகச் சிறப்பாகவும் தருதல் தங்கள் பாணி என்பதற்கு இந்தப் பதிவும் ஒரு நல்ல உதாரணம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள் //
கவிஞர் எஸ்.ரமணி அவர்களின் பாராட்டுரைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
மறுமொழி> yathavan nambi said...
ReplyDeleteஹலோ! நண்பரே ஏற்கனவே உங்கள் வலைத்தளம் வந்து ஹலோ சொல்லி விட்டேன் நன்றி!
மறுமொழி> G.M Balasubramaniam said...
ReplyDelete// தமிழ் மொழி ஒரு complicated மொழி. தமிழ் சரியாகத் தெரியாதவர்கள் அதை உபயோகிப்பதில் சிக்கல்கள் உண்டு. எல்லா சப்தங்களையும் வரிவடிவில் கொண்டு வரமுடியாது உ-ம் BHADHRINATH என்னும் பெயரை பத்ரிநாத் என்று எழுதுகிறோம். அப்படியே வாசித்தால் பெயரே சிதைந்து விடும் மொழியின் limitations களை உணர்வதும் அவசியம். ‘யாரது தமிழ் எழுதும் போது ஆங்கில வார்த்தைகளைக் கையாளுவது.?” என்னும் கண்டனக் குரல் கேட்கிறது. //
அய்யா G.M.B அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி! தமிழ் மொழி ஒரு சிக்கலான மொழி (COMPLICATED) அல்ல; எளிமையான மொழி என்பதே எனது கருத்து. த்மிழில் என்ன எழுதுகிறோமோ (வரி வடிவம்) அதன் ஒலிவடிவத்தை அப்படியே உச்சரிக்கிறோம். உதாரணமாக அம்மா என்ற வரிவடிவத்தினை அப்படியே அம்மா என்றே உச்சரிக்கிறோம். ஆனால் ஆங்கிலத்தில் AMMA எழுத்தினை ஏஎம்எம்ஏ (அல்லது ஏஎமெமே) என்றல்லவா உச்சரிக்க வேண்டும். இதுபற்றி எழுதினால், இந்த கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாது நீண்டுவிடும். தனியே ஒரு பதிவாகத்தான் எழுத வேண்டும்.
தமிழில் எழுதும் போது தேவைப்படின், ஆங்கில வார்த்தைகளைக் கையாளுவதில் தவறு ஏதும் இல்லை.
மறுமொழி> rajalakshmi paramasivam said...
ReplyDelete// எனக்கு நீங்கள் எழுதியப் பின்னுட்டத்திலேயே உங்களின் ஆதங்கம் தெரிந்தது. அதை ஒருப் பதிவாகவே வெளியிட்டு விட்டீர்கள். நீங்கள் சொல்வது போல் சில கலைசொற்கள் மொழியின் வளர்ச்சிக்கு உதவலாம். சிந்திக்கத் தூண்டும் பதிவு.
வாழ்த்துக்கள்....... //
ஆமாம் சகோதரி. வேறு ஒருவருடைய பதிவுக்கு செல்ல வேண்டிய கருத்துரையை தவறுதலாக உங்களுக்கு அனுப்பி விட்டேன். அதுவும் நன்மைக்கே என்றபடி ஒரு பதிவே இப்போது உருவாகி விட்டது. சகோதரி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி!
மறுமொழி> Muthu Nilavan said...
ReplyDeleteஅன்புள்ள கவிஞர் ஆசிரியர் நா. முத்துநிலவன் அவர்களுக்கு வணக்கமும் நன்றியும்.
// அய்யா வணக்கம். அருமையான சிந்தனை. இதுபோலும் சிநதனை பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள், பாவாணமர், பெருஞ்சித்திரனார் போலும் பெரியோர்க்கு எழுந்த விளைவே தனித்தமிழியக்கம். உங்கள் ஊரின் ஈவெரா கல்லூரியில் தமிழ்த்துறைத்தலைவராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற திருமாறன் அ்யயா அவர்கள் எழுதிய “தனித்தமிழியக்கத்தின் அரசியல் பின்னணி“ படித்தால் இதுபற்றிய ஏராளமான தகவல்கள் கிடைக்கும்.//
நீங்கள் குறிப்பிடும் பேராசிரியர் கு.திருமாறன் அவர்களின் மாணவர்களில் நானும் ஒருவன். திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில், நான் இளங்கலை (தமிழ் இலக்கியம்) பயின்றபோது எனக்கு அவர் இலக்கண ஆசிரியர். இப்போது எங்கள் வீட்டின் அருகேதான் (கருணாநிதி நகர்) உள்ளார். அவரை நேரில் போய் பார்க்கிறேன்.
// இதை அடியொற்றியே தனித்தமிழை வற்புறுத்தித் தினமணியில் எழுதிய அமைச்சர் தமிழ்க்குடிமகனார்க்கு நான் தினமணியிலேயே எழுதிய மறுப்புக் கட்டுரைதான் “இருமுனைத் தவறுகள்“ எனது “முதல்மதிப்பெண் எடுக்கவேண்டாம் மகளே“ நூலின் 17ஆவது கட்டுரை அது. அன்புகூர்ந்து படிக்க வேண்டுமாயத் தங்களை அன்புடன் அழைக்கிறேன். //
உங்கள் நூல் வெளியீட்டு விழா முடிந்தவுடனேயே, பல நண்பர்கள் தொடர்ந்து உங்கள் நூல்களைப் பற்றிய கட்டுரைகளை வலைப்பதிவில் வெளியிட்டனர். இப்போது நாமும் எழுதினால் சரியாக இருக்காது என்பதனால் உங்கள் நூல்கள் பற்றிய கட்டுரையை எழுதவில்லை. இனி வரும்.
// தொடர்ந்து எழுதுங்கள் அ்ய்யா. பாராட்டுகளும் நன்றியும் வாழ்த்துகளும். வணக்கம். //
புதுக்கோட்டையில் வலைப் பதிவர்களுக்கான ஆக்கமும் ஊக்கமும் தந்து வரும், உங்களது வாழ்த்துக்களுக்கு நன்றி! உங்கள் தலைமையில் அடுத்து நடக்க இருக்கும் வலைப்பதிவர்கள் சந்திப்பு மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்.
பயனுள்ள செய்திகள் ..!
ReplyDeleteமறுமொழி > Manimaran said...
ReplyDelete// பயனுள்ள செய்திகள் ..! //
சுருக்கமான கருத்துரை தந்த சகோதரருக்கு நன்றி. (சில சமயம் சூழ்நிலை காரணமாக மறுமொழி கொடுக்க தாமதம் அல்லது மறந்து விடுகிறேன். மன்னிக்கவும்)