Monday 6 January 2014

ஸ்ரீரங்கம் கோயில் ஆண்டாள் யானையைக் காப்பாற்றுங்கள்!



யானை என்றாலே எல்லோருக்கும் அதனை பார்ப்பதில் ஒரு சந்தோஷம்தான். அதிலும் கோயில் யானை என்றால் கேட்க வேண்டியதில்லை. ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் செல்லும் போதெல்லாம் அந்த கோயில் யானையைப் பார்த்து இருக்கிறேன். எட்ட இருந்துதான் பார்ப்பேன் (நான் சிறுவனாக இருக்கும்போது திருச்சி மலைக்கோட்டை யானை ஒரு சமயம் கடை வீதியில், கோபமாக இங்கும் அங்கும் ஓட பார்த்தது. எல்லோரும் பயந்து ஓடினார்கள். அவர்களில் நானும் ஒருவன். அன்றிலிருந்து எனக்கு யானை என்றால் பயம்.) ஸ்ரீரங்கம் கோயில் யானையின் பெயர் பெயர் ஆண்டாள். பெரும்பாலும் கோயிலின் உட்புறம் , ஸ்ரீராமானுஜர் சந்நிதிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் கட்டப்பட்டு இருக்கும். கூடவே அதனுடைய பாகன் ஸ்ரீதர்.( இப்போது உள்ளூர் சேனல்களில் பத்திரிகைகளில் அவர் பெயர் அடிக்கடி வருவதால் தெரிந்து கொள்ள முடிந்தது )  அவர் மண்டபத்தில் யானைக்கு வேண்டியவற்றை செய்து கொண்டு கூடவே இருப்பார்.

கோடை காலங்களில் காவிரியில் நடு ஆற்றில் தண்ணீர் ஓடைபோல ஓடும். அப்போது சிந்தாமணி பகுதியில் இருக்கும் நாங்கள் தினமும் அந்த பகுதிக்குச் சென்று குளிப்போம். எதிரே அம்மா மண்டபம். அங்கே யானையக் குளிப்பாட்டுவார்கள். அதை வேடிக்கை பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும். அம்மா மண்டபத்தில் காவிரி ஆற்றில் இருந்து கோயிலுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் போது அந்த மணடபத்தின் உள்ளே வேகமாக விறுவிறு என்று அந்த யானை வரும். யானையின் மேலே பூசைக்குரிய நீர்க் குடத்துடன் பாகனுடன் ஒருவர் வருவார் (சித்தி சீரியலில் டைட்டில் பாட்டின்போது வருவது ஆண்டாள் யானைதான் என்று நினைக்கிறேன். ) நவராத்திரி சமயம் தாயார் சன்னதியில் இந்த ஆண்டாள் யானை சாமரம் வீசும், ; மவுத் ஆர்கான் வாசிக்கும் என்று சொல்வார்கள். கோயிலின் பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளிலும் இந்த ஆண்டாளையும் பாகனையும் சேர்ந்தே பார்க்கலாம்.

ஆண்டாள் யானை இந்த கோவிலுக்கு வந்து 25 ஆண்டுகளுக்கும் மேல் இருக்கும். இதற்கு முன் ஒரு யானை இருந்தது. அது இறந்து விட்டது. ஆண்டாள் யானை இங்கு வந்ததிலிருந்து அதற்கு பாகனாக இருந்து வருபவர் ஸ்ரீதர். சமீபகாலமாகவே கோயில் நிர்வாகம், அரசு அதிகாரிகள் உத்தரவு என்று பாகன் ஸ்ரீதருக்கு பிரச்சினைகள். இந்த செய்திகள் உள்ளூர் பத்திரிகைகளிலும் டீவி சேனல்களிலும் வந்தது. இப்போது ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள், தேக்கம்பட்டியில், தமிழக அரசு நடத்தும் யானைகள் புத்துணர்வு முகாமில் இருக்கிறது.

இப்போது யானைப் பாகன் தனது வேலையை ராஜினாமா செய்து விட்டு , யானையிடமும் அதன் மொழியில் சொல்லிவிட்டு, ஸ்ரீரங்கம் வந்துவிட்டதாகச் சொல்லுகிறார்கள். இதனால் பாகனைப் பிரிந்த ஆண்டாள் இரண்டு நாட்களாகச் சாப்பிடாமல் இருக்கிறது ; சமாதானப் படுத்தும் புதிய பாகனையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அரசு ஆணைப்படி கோயில் நிர்வாகம் உதவி பாகன் ஒருவரை நியமனம் செய்ததாகவும்,  அதில் பாகன் ஸ்ரீதருக்கு உடன்பாடில்லை என்றும் சொல்கிறார்கள். இதுபற்றி பத்திரிகையாளர்களிடம் பேசிய ஸ்ரீதர் “ நான் இல்லாததால் முகாமில் யானை சரியாக சாப்பிடாமல் அடம் பிடிப்பதாக கேள்விப்பட்டேன். நேற்று முன்தினம் சென்று உணவு கொடுத்து விட்டு வந்தேன். மீண்டும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகிற 4.2.2014 அன்று யானை வருகிறது. மீண்டும் ஆண்டாள் யானைக்கு பாகனாக இருந்து பணியாற்ற விரும்புகிறேன் - என்று சொல்லி இருக்கிறார். (நன்றி : மாலைமலர்)

கோயில் யானைக்கு பாகன், உதவிப் பாகன் என்று ஆரம்ப காலத்திலேயே நியமனம் செய்து இருக்க வேண்டும். 25 வருடங்களுக்கும் மேலாக பாகன் ஒருவரிடம் இருந்த யானையை இன்னொரு புதிய பாகனிடம் மட்டும் ஒப்படைப்பது சிக்கலான விஷயம்தான். பழைய பாகனை மறக்க முடியாத அந்த யானைக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்படலாம். மேலும் மனநிலை பாதிக்கப் பட்டால் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தீங்கு ஏற்படலாம். எது எவ்வாறு இருப்பினும் ஸ்ரீரங்கம் கோயில் யானை ஆண்டாள் நலனை முன்னிட்டு அரசு அதிகாரிகள், கோயில் நிர்வாகம், யானைப் பாகன் ஸ்ரீதர் இணைந்து ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். அரசு உத்தியோகத்தில் எத்தனையோ பேருக்கு பதவி நீட்டிப்பைச் செய்யும் தமிழக அரசு யானைப் பாகன் ஸ்ரீதருக்கும் தனி சலுகை அளிக்கலாம். யானைப் பாகன் ஸ்ரீதரும் கோயில் நிர்வாகத்திற்கு உதவியாக உதவிப் பாகனையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்ற கோயில்களில் பாகன்கள் விஷயத்தில் இல்லாத அரசியல் இங்கு என்னவென்று தெரியவில்லை. எது எப்படி இருப்பினும்,  ஸ்ரீரங்கம் கோயில் ஆண்டாள் யானையைக் காப்பாற்றுங்கள்!


( PHOTOS THANKS TO  PANORAMIO and  THE HINDU )
 



32 comments:

  1. //எது எப்படி இருப்பினும், ஸ்ரீரங்கம் கோயில் ஆண்டாள் யானையைக் காப்பாற்றுங்கள்!//

    ஆம் இவர்கள் செய்யும் அரசியலால் அந்த ஆண்டாள் யானை பாதிக்கக்கூடாது. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் இருதரப்பும் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தி சுமுகமான நல்ல தீர்வினை எட்ட வேண்டும்.

    ஸ்ரீதர் என்பவரின் சொந்தக்காரர் ஒருவருக்கு மட்டுமே, அந்த உதவியாளர் என்ற பதவி தரப்பட வேண்டும் என ஸ்ரீதர் என்பவர் வலியுறுத்தி வருவதாகவும் செய்திகள் வந்தன.

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.

    சேயும் தாயும் பிரிந்த கதைபோலதான் உள்ளது ஐயா... மிக அருமையாக எழுதியுள்ளீர்கள்....வாழ்த்துக்கள்..ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. மறுமொழி> வை.கோபாலகிருஷ்ணன் said...

    அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! எனது மனதில் பட்டதை எழுதினேன்! தங்களின் மேலான கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  4. மறுமொழி > 2008rupan said...

    கவிஞர் ரூபன் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  5. கோவில்களில் கட்டி வைத்து பாராமரிக்கும் (வதைக்கும்) யானைகள் யாவற்றையும் சுதந்திரமாக காட்டில் வாழ அனுமதியுங்கள், நிச்சயம் இதைச் செய்து புண்ணியம் தேடுங்கள். திரு அரங்கப் பெருமான் , ரங்கநாயகியுடன் இருக்கும் போது, ஆண்டாள் எத்தனை காலம் தனிமையில் வாடுவது..யானைகள் சுற்றம் சூழ வாழும் விலங்கு, நாம் பக்தி எனும் பெயரில் பெரும் கொடுமை செய்கிறோம்.
    உயிர்களைக் கொல்வதிலும்,உயிருடன் வதைப்பது மிகப் பெரிய பாவம்.

    ReplyDelete
  6. மனிதர்களின் தன்முனைப்பால்(Ego) ஒரு வாயில்லா ஜீவன் கஷ்டபப்டுவதை அறிந்து வருத்தம் ஏற்பட்டது. விரைவில் ஒரு நல்ல முடிவு ஏற்பட்டு அந்த யானை நலமுடன் இருக்க வேண்டுகிறேன்.

    ReplyDelete
  7. இளங்கோ!
    யானை, ரயில், விமானம்--இவைகளை என்றுமே பார்த்து ரசிக்கலாம்!
    நான் சைவன்; இந்த கோவில் யானைக்கு போட்டது தென்கலை நாமமா அல்லது வடகலை நாமமா?

    தெரிந்தால் நலம்--இது காஞ்சி கோவில் நாமப் பிரச்சினையை தீர்க்க உதவும்!

    இந்த பதிவிற்க்கு..தமிழ்மணம் +1

    ReplyDelete
  8. மறுமொழி > யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

    சகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // கோவில்களில் கட்டி வைத்து பாராமரிக்கும் (வதைக்கும்) யானைகள் யாவற்றையும் சுதந்திரமாக காட்டில் வாழ அனுமதியுங்கள், நிச்சயம் இதைச் செய்து புண்ணியம் தேடுங்கள். திரு அரங்கப் பெருமான் , ரங்கநாயகியுடன் இருக்கும் போது, ஆண்டாள் எத்தனை காலம் தனிமையில் வாடுவது.. //

    நீங்கள் இந்தப் பதிவின் மய்யக் கருத்தை விட்டு விலகிச் செல்வதாகத் தெரிகிறது. ஒவ்வொரு மதத்திலும் சில கதைகள், சில நம்பிக்கைகள். ஒவ்வொருவருக்கும் அவர் மதமே பெரியது. அதற்காக மற்ற மதத்தினரை வம்புக்கு இழுப்பது என்பது சரியாகாது.

    // யானைகள் சுற்றம் சூழ வாழும் விலங்கு, நாம் பக்தி எனும் பெயரில் பெரும் கொடுமை செய்கிறோம். உயிர்களைக் கொல்வதிலும்,உயிருடன் வதைப்பது மிகப் பெரிய பாவம். //

    எல்லோரும் கவனிக்க வேண்டிய விஷயம்.

    ReplyDelete
  9. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    // ஆண்டாள் பாவம் தான்..... //

    சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  10. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    // மனிதர்களின் தன்முனைப்பால்(Ego) ஒரு வாயில்லா ஜீவன் கஷ்டபப்டுவதை அறிந்து வருத்தம் ஏற்பட்டது. விரைவில் ஒரு நல்ல முடிவு ஏற்பட்டு அந்த யானை நலமுடன் இருக்க வேண்டுகிறேன். //

    அய்யா வே நடன சபாபதி அவர்களின் கருத்துரைக்கு நன்றி! ஆண்டாள் யானைக்கு நல்லதே நடக்க வேண்டும்

    ReplyDelete
  11. மறுமொழி >நம்பள்கி said...

    நம்பள்கி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி

    // இளங்கோ! யானை, ரயில், விமானம்--இவைகளை என்றுமே பார்த்து ரசிக்கலாம்! //

    ரசிக்க வேண்டியவற்றில் விண்ணையும், கடலையும், மலையையும் விட்டு விட்டீர்கள்.

    // நான் சைவன்; இந்த கோவில் யானைக்கு போட்டது தென்கலை நாமமா அல்லது வடகலை நாமமா? தெரிந்தால் நலம்--இது காஞ்சி கோவில் நாமப் பிரச்சினையை தீர்க்க உதவும்! //

    நீங்களும் இந்தப் பதிவின் மய்யக் கருத்தை விட்டு விலகிச் செல்வதாகத் தெரிகிறது. ஒவ்வொரு மதத்திலும் சில கதைகள், சில நம்பிக்கைகள். ஒவ்வொருவருக்கும் அவர் மதமே பெரியது.

    நாங்களும் சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள்தான். எனது தந்தை அடிக்கடி சொல்லும் வாசகம் “ தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! “. நானும் ஒரு காலத்தில். எனது வாலிப வயதில் நாத்திகனாக இருந்து ஆத்திகன் ஆனவன்தான். எம்.ஏ தமிழ் இலக்கியம் பயின்றபோது கம்பராமாயணம் முழுவதையும் ரசித்துப் படித்ததில் இருந்து வைணவமும் தமிழும் அறிந்தவன். எனக்கு இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம் என்று சமய வேறுபாடு இல்லை.

    அமெரிக்காவில் இருந்து கொண்டு எத்தனையோ விஷயங்களைப் பற்றி எழுதும் உங்களுக்கு ஸ்ரீரங்கத்து யானை போட்டு இருப்பது என்ன நாமம் என்று தெரியவில்லை என்பது ஆச்சரியமான விஷயம்தான். உங்களைப் போல நானும் ஒரு முகமூடி போட்டுக் கொண்டு எழுதுவதாக இருந்தால் எவ்வளவோ எழுதலாம்.

    // இந்த பதிவிற்க்கு..தமிழ்மணம் +1 //

    தங்களின் அன்பான வருகைக்கும் வாக்களிப்பிற்கும் நன்றி!

    ReplyDelete
  12. மிகவும் வருத்தப்பட வைக்கிறது... விரைவில் அரசு ஆவண செய்ய வேண்டும்...

    ReplyDelete
  13. யானைக்குப் புத்துணர்ச்சி தருவதற்காக யானைமுகாம் என்கிறார்கள். ஆனால் அதுவே அதன் மனச் சோர்வுக்குக் காரணமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேட்டுப்பாளையம் அருகே யானை முகாமில் இரண்டு யானைகள் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டதாகச் செய்தி அறிந்தேன். அந்த யானைகளுக்கு என்ன பிரச்சனையோ?.யானையை யார் காப்பாற்ற வேண்டும் என்கிறீர்கள். ?

    ReplyDelete
  14. ஆண்டாள் யானை பாகனைப் பிரிந்து , உண்ணாமல் இருப்பதும், கஷ்டப்படுவதும் மிகவும் வருத்தத்திற்குரியது. சீக்கிரமே இதற்கு ஒரு தீர்வு வந்தாலே நலமே!

    ReplyDelete
  15. ஆண்டாளை யோசித்து எல்லோரும் ஒன்றுகூடி நல்ல முடிவெடுத்தால் நன்றாக இருக்கும்..

    ReplyDelete
  16. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    // மிகவும் வருத்தப்பட வைக்கிறது... விரைவில் அரசு ஆவண செய்ய வேண்டும்... //

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  17. மறுமொழி > G.M Balasubramaniam said...

    // யானைக்குப் புத்துணர்ச்சி தருவதற்காக யானைமுகாம் என்கிறார்கள். ஆனால் அதுவே அதன் மனச் சோர்வுக்குக் காரணமாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். //

    மூத்த பதிவர் GMB அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // மேட்டுப்பாளையம் அருகே யானை முகாமில் இரண்டு யானைகள் ஆக்ரோஷமாக மோதிக் கொண்டதாகச் செய்தி அறிந்தேன். அந்த யானைகளுக்கு என்ன பிரச்சனையோ?.//

    இந்த ஆண்டு யானைகள் புத்துணர்வு முகாமிலிருந்து வரும் செய்திகள் பயமாகத்தான் இருக்கின்றன.

    // யானையை யார் காப்பாற்ற வேண்டும் என்கிறீர்கள். ? //

    வேறு யார் இந்து அறநிலையத் துறையும், கோவில் நிர்வாகமும்தான் காப்பாற்ற வேண்டும்.


    ReplyDelete
  18. மறுமொழி > rajalakshmi paramasivam said...

    // ஆண்டாள் யானை பாகனைப் பிரிந்து , உண்ணாமல் இருப்பதும், கஷ்டப்படுவதும் மிகவும் வருத்தத்திற்குரியது. சீக்கிரமே இதற்கு ஒரு தீர்வு வந்தாலே நலமே! //

    நல்ல தீர்வு வரவேண்டும். சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  19. மறுமொழி > ADHI VENKAT said...

    // ஆண்டாளை யோசித்து எல்லோரும் ஒன்றுகூடி நல்ல முடிவெடுத்தால் நன்றாக இருக்கும்.. //

    இந்தவார வலைச்சர ஆசிரியை ஆதி வெங்கட் அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  20. I think that elephant mahout is doing emotional black mail by using the temple elephant as a tool.

    ReplyDelete
  21. //வவ்வால் said...
    I think that elephant mahout is doing emotional black mail by using the temple elephant as a tool.//

    Yes.... Yes.... I too feel the same thing, as what you say.

    ReplyDelete
  22. I have one small doubt,Varaha avatar is one of the perumal's incarnation,why don't these temples maintaine a pig as temples holy animal?

    ReplyDelete
  23. ஐந்தறிவு கொண்ட மிருகத்துக்கு இருக்கும் பாசம் மனிதனுக்கு இல்லையே? பாகனைக் காணாது பட்டினி இருக்கும் யானையை விட்டுவிட்டு இந்த மனிதரால் எப்படி இருக்க முடிகிறது?

    ReplyDelete

  24. மறுமொழி > வவ்வால் said... ( 1 )
    வவ்வாலுக்கு மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...
    மறுமொழி > வவ்வால் said... ( 2 )

    வவ்வால் சாருக்கும் , வை கோபாலகிருஷ்ணன் சாருக்கும் நன்றி!


    ReplyDelete
  25. மறுமொழி > Jayadev Das said...

    சகோதரர் ஜெயதேவ் தாஸ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // ஐந்தறிவு கொண்ட மிருகத்துக்கு இருக்கும் பாசம் மனிதனுக்கு இல்லையே? பாகனைக் காணாது பட்டினி இருக்கும் யானையை விட்டுவிட்டு இந்த மனிதரால் எப்படி இருக்க முடிகிறது? //

    ஆமாம் அய்யா! இதனால்தான் கவிஞர் கண்ணதாசன் “ நன்றியுள்ள உயிர்களெல்லாம் பிள்ளைதானடா! தம்பி! நன்றிகெட்ட மகனைவிட நாய்கள் மேலடா! “ – என்று எழுதி வைத்தார்.



    ReplyDelete
  26. [[அமெரிக்காவில் இருந்து கொண்டு எத்தனையோ விஷயங்களைப் பற்றி எழுதும் உங்களுக்கு ஸ்ரீரங்கத்து யானை போட்டு இருப்பது என்ன நாமம் என்று தெரியவில்லை என்பது ஆச்சரியமான விஷயம்தான். உங்களைப் போல நானும் ஒரு முகமூடி போட்டுக் கொண்டு எழுதுவதாக இருந்தால் எவ்வளவோ எழுதலாம]]

    இளங்கோ!
    மையக் கருத்தில் இருந்து மாறியதற்கு என்னை மன்னிக்கவும்; அந்த பின்னூட்டத்தை நீங்கள் எடுத்து விடலாம்.

    இங்கு ஆங்கிலத்தில் நான் எழுதும் எல்லாமே என் சொந்தப் பேரில் தான் வரும்; வருகிறது. இது ஜனநாயக நாடு அதானால்! இந்தியா?.

    இந்தியா ஒரு சர்வாதிகார நாடு (உங்களுக்கு ஒட்டு போட மட்டும் தான் உரிமை; உங்களால் (தமிழர்கள் என்று அர்த்தம் கொள்க!) ஒரு கார்பரேஷன் வார்டு கவுன்சிலருக்கு கூட கருப்புக்கொடி கூட காட்ட முடியாது!

    ஜெர்மனியில் ஒரு ஹிட்லர்; இந்தியாவில் ஒரு கோடி ஹிட்லர்கள்; ஒவ்வொரு அரசியல்வாதியும் ஒரு ஹிட்லர்.

    ReplyDelete
  27. நம்பள்கி அவர்களின் இரண்டாம் வருகைக்கு நன்றி!

    // இளங்கோ! மையக் கருத்தில் இருந்து மாறியதற்கு என்னை மன்னிக்கவும்; அந்த பின்னூட்டத்தை நீங்கள் எடுத்து விடலாம்.//

    உங்கள் பின்னூட்டம், எனது மறுமொழி எல்லாமே இருந்துவிட்டு போகட்டும். என்னைப் பற்றியும் கொஞ்சம் சுய விளம்பரம். இதனால் ஒன்றும் பாதகம் இல்லை!

    // இங்கு ஆங்கிலத்தில் நான் எழுதும் எல்லாமே என் சொந்தப் பேரில் தான் வரும்; வருகிறது. இது ஜனநாயக நாடு அதானால்! இந்தியா?. இந்தியா ஒரு சர்வாதிகார நாடு (உங்களுக்கு ஒட்டு போட மட்டும் தான் உரிமை; உங்களால் (தமிழர்கள் என்று அர்த்தம் கொள்க!) ஒரு கார்பரேஷன் வார்டு கவுன்சிலருக்கு கூட கருப்புக்கொடி கூட காட்ட முடியாது! //

    // ஜெர்மனியில் ஒரு ஹிட்லர்; இந்தியாவில் ஒரு கோடி ஹிட்லர்கள்; ஒவ்வொரு அரசியல்வாதியும் ஒரு ஹிட்லர். //

    நீங்கள் சொல்வது சரிதான். கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  28. ஆண்டாள் யானையைப்பற்றிய இடுகை மிக நெகிழ்ச்சி. அதிலும் என் ஊர் கோயில் யானை அது...

    ReplyDelete
  29. மறுமொழி > ஷைலஜா said...
    // ஆண்டாள் யானையைப்பற்றிய இடுகை மிக நெகிழ்ச்சி. அதிலும் என் ஊர் கோயில் யானை அது //

    நீண்ட இடைவெளிக்குப் பின் கருத்துரை தந்த சகோதரி ஷைலஜா அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  30. ஆண்டாள் பாவம் தான் ஐயா.

    ReplyDelete
  31. மறுமொழி > தனிமரம் said...

    // ஆண்டாள் பாவம் தான் ஐயா.//

    சகோதரரின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete