Sunday, 12 January 2014

வைகுண்ட ஏகாதசி - ஸ்ரீரங்கன் தரிசனம்பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச்செங்கண்
அச்சுதா! அமரேறே! ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே.  
                                                                 - தொண்டரடிப்பொடியாழ்வார்  

நேற்று (11.12.2014) ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழா. நான் இந்த திருவிழாவுக்கு அடிக்கடி சென்றதில்லை. வங்கியில் வேலைக்கு சேர்ந்த புதிதில், முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எனது நண்பர் A R பாலசுப்ரமண்யன் என்பவரோடு இரண்டு தடவை காலையில் பரமபத வாசல் வழியே சென்று இருக்கிறேன். நேற்று நான் மட்டும் தனியே மாலை ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றேன்.

பஸ் ஸ்டாண்டில்:

திருச்சி மத்திய பேருந்து நிலையம் சென்றேன். ஸ்ரீரங்கம் செல்லும் பஸ் ஒவ்வொன்றும் நிரம்பியே சென்றன. ஸ்ரீரங்கம் பஸ் நிலையம் வந்து இறங்கியவுடன் ராஜகோபுரத்தினை படம் எடுத்துக் கொண்டேன். எங்கு பார்த்தாலும் மக்கள் வெள்ளம் மற்றும் கட்டுப்படுத்தும் வழிகாட்டும் போலீசார். இன்னொரு இடத்தில், பஸ் ஸ்டாப் கூரையின் கீழ் வட இந்தியர்கள் கும்பலாக அமர்ந்து இருந்தனர்.  

(படங்கள் - ஸ்ரீரங்கம் ராஜகோபுரம். 

(படம் - மேலே) வைகுண்ட ஏகாதசிக்கு வந்து இருந்த வட இந்தியர்கள்.

ராஜகோபுரம் வழியாக:

பின்னர் ராஜகோபுரம் வழியாக ஸ்ரீரங்கம் கோயில் நோக்கி நடந்தேன். வழியில் சில காட்சிகள். முன்பெல்லாம் சாலை எங்கும் அன்னதானம், குடிநீர் பாக்கெட்டுகள் வழங்குதல் நடைபெறும். இப்போது அனுமதி பெற்றுத்தான் இவற்றை செய்ய வேண்டும். இது பற்றிய விவரங்கள் அடங்கிய ப்ளக்ஸ் பேனர்கள் ஆங்காங்கே அம்மா படத்துடன் அரசுத்துறை சார்பாக  வைக்கப்பட்டு இருந்தன. மற்றும் காவல்துறை அறிவிப்பு பேனர்களும் இருந்தன. மேலும் ஒவ்வொரு சின்ன கோபுரத்தின் அருகிலும்  பழைய செருப்புகள் நிறைய குவிந்து கிடந்தன. (கோயிலுக்கு வரும் பல பக்தர்கள் தாங்கள் அணிந்து வந்த செருப்புகளை, அப்படியே விட்டு விட்டு, வெறுங் காலுடன் கோயிலுக்குச் செல்வார்கள். தரிசனம் முடிந்ததும் வெளியே கடைகளில் புதிதாக வாங்கிக் கொள்வார்கள்)

(படம் மேலே) உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அறிவிப்பு.

(படம் - மேலே) கடை வீதியில்

(படம் மேலே) ராஜகோபுரம் நுழைவு வாயில்


(படம் மேலே) உள் கோபுரங்கள்

ரெங்கா கோபுரம் வெள்ளை கோபுரம்:

ரெங்கா கோபுரம் நுழைவு அருகே நிறைய போலீஸ். ஏகப்பட்ட கெடுபிடிகள்.. போலீசார் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பும், திரும்ப கிடைத்தவர்கள் பற்றிய அறிவிப்பும் செய்து கொண்டே இருந்தனர். பாராட்டப்பட வேண்டிய விஷயம். ரெங்கா கோபுர வாசலில் யாரையும் நிற்க விடவில்லை. பரமபத வாசல் செல்ல நீண்ட வரிசை. மூங்கில் கம்புகளைக் கொண்டு தடுப்புகள். மேற்கில் செல்லும் வரிசையைப் பார்க்கச் சென்றேன். அந்த வரிசையில் சென்றுவர அரைநாள் ஆகி விடும்போல் இருந்தது.

(படம் மேலே) பரமபத வாசல் செல்ல நீண்ட வரிசை

எனவே ஸ்ரீரங்கத்தில் இருந்த எனது நண்பர் சங்கர் என்பவருக்கு செல்போனில் விவரத்தைச் சொல்லி யோசனை கேட்டேன். அவர் “ இன்று பரமபத வாசல் வழியாக செல்ல வேண்டாம். இன்னொரு நாள் செல்லுங்கள். வெள்ளை கோபுரம் வழியாக ஆயிரங்கால் மணடபம் செல்லுங்கள். அங்கே மண்டபத்தில் பெருமாளின் ரத்னாங்கி சேவை. பெருமாள் தரிசனம் உண்டுஎன்றார். செருப்புகளை அருகே இருந்த கடையில் போட்டுவிட்டு டோக்கன் வாங்கிக் கொண்டேன். அவர் சொன்னபடியே வெள்ளை கோபுரம் நோக்கி செல்லத் தொடங்கினேன். இதற்கிடையே கிழக்கிலிருந்து ஒரு 108 ஆம்புலன்ஸ் சைரனோடு கோபுர வாசலில் வந்து நின்றது. யாரையும் அங்கு நிற்கவிடாமல் விரட்டினார்கள். படம் எடுக்க முடியவில்லை. நான் வெள்ளை கோபுரம் நோக்கி நகர்ந்தேன். வழியில் நாமம் போட்ட யானை ஒன்றை வைத்து ஆசீர்வாதம் தந்து காசு வாங்கிக் கொண்டு இருந்தார் ஒரு பாகன். ( கோயில் யானை ஆண்டாளை புத்துணர்வு முகாமிற்கு அனுப்பி விட்டார்கள். கோயில்களில் முக்கியமான விழாக்கள் நடைபெறும் மார்கழியில் கோயில் யானைகளுக்கு இது மாதிரி முகாம் தேவையா?)

(படம் மேலே) வெள்ளை கோபுரம்

(படம் மேலே) இதுவும் வெள்ளை கோபுரம்


 (படம் மேலே) வெள்ளை கோபுரம் அருகே யானயும் பாகனும் 

ஆயிரங்கால் மண்டபம்

உள்ளே ஆயிரங்கால் மண்டபத்தின் வாசலில் பல பக்தர்கள் அசதியினால் தூங்கிக் கொண்டு இருந்தனர். இன்னொரு பக்கம் கோயில் பிரசாதம் விற்பனை நடந்து கொண்டு இருந்தது. உணவுப் பொருட்களின் விலை விவரத்தினை கீழே உள்ள படத்தில் காணலாம்..

(படம் மேலே) கோயில் பிரசாதம் விற்பனை 

(படம் மேலே) பிரசாதம் விலைப் பட்டியல்

(படம் மேலே) ஆயிரங்கால் மண்டபத்தின் வாசலில் பக்தர்கள்(படங்கள் மேலே) அரங்கன் தரிசனம்

ஸ்ரீ ராமானுஜர் சன்னதி:

நான் எப்போது ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்றாலும் அங்குள்ள ஸ்ரீ ராமானுஜர் சன்னதி தவறாமல் செல்லுவேன். இந்த தடவை சன்னதிக்குள் நுழைய முடியவில்லை. அவ்வளவு கும்பல். 

(படங்கள் மேலே) இன்னும் சில காட்சிகள்

(படம் மேலே) ஸ்ரீ ராமானுஜர் சன்னதி


பின்னர் கருடாழ்வார் அருகே வந்தபோது, சிலர் அங்கே ஸ்ரீமத் பகவத் கீதை (தமிழ் மூலம் பொழிப்புரை) புத்தகத்தை இலவசமாகத் தந்தார்கள். எனக்கும் இரண்டு தந்தார்கள். (நான் ஏற்கனவே படித்ததுதான்)


வெளியில் வந்து பஸ் ஏறி வீடு வந்து சேர்ந்தேன்.

பொது சுகாதாரம்:

முப்பது வருடத்திற்கு முன்பு ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வைகுண்ட ஏகாதசி அன்று வந்தால் ஊரையே நாறடித்து இருப்பார்கள். அவசரத்திற்கு ஒதுங்க இடம் இருக்காது. எனவே கோயிலுக்கு போவதென்றால் அதிகம் சாப்பிடாமல், அதிகம் தண்ணீர் அருந்தாமல், வயிறு விஷயத்தில் கவனத்தோடும் செல்வேன். இப்போதும் அப்படியே சென்றேன். இந்த தடவை ஆங்காங்கே மாநகராட்சியின்  இலவச கழிப்பிடங்களையும், மொபைல் டாய்லெட்டுகளையும் மற்றும் தனியார் நடத்திய கட்ட்ணக் கழிப்பிடங்களையும் காண முடிந்தது. சுகாதார அடிப்படையில் இது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

குறிப்பு: இங்கு மேலே உள்ள அனைத்து படங்களும்  கேனான் டிஜிட்டல் கேமரா (CANON POWERSHOT A800) வினால் எடுக்கப்பட்டவை.44 comments:

 1. வைகுண்ட ஏகாதசி - ஸ்ரீரங்கன் தரிசனம் சிறப்பாக தரிசனம்
  செய்துவைத்தமைக்கு இனிய நன்றிகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
 2. அனைத்துப்படங்களும் பதிவும் மிக அருமை ஐயா. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். தங்களால் இவற்றை இன்றும் தரிஸிக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 3. வைகுந்த ஏகாதசி தரிசனம் தங்கள் பதிவின் மூலம் கிடைத்ததில் மகிழ்ச்சி..
  மூன்றாண்டுகளுக்கு முன் ஏகாதசிக்கு மறுதினம் தரிசனம் செய்துள்ளேன்!.. அப்போதைக்கு இப்போது கூட்டம் குறைவாக இருப்பது போல தெரிகின்றது.

  ReplyDelete
 4. நானும் உங்களுடன்
  திருவரங்கத்தில் அரங்கனை சேவித்த
  மகிழ்ச்சி ஏற்பட்டது.

  நன்றி.

  சக்கரை பொங்கல் வாழ்த்துக்கள்.

  சுப்பு தாத்தா.
  www.menakasury.blogspot.com

  ReplyDelete
 5. வணக்கம்
  ஐயா.
  தங்களின் பதிவின் மூலம் ஆலய தரிசனம் கிடைத்துள்ளது... பதிவு மிக அருமை படங்களும் மிக அழகு வாழ்த்துக்கள் ஐயா.

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 6. இறை தரிசனம் அருமை. படங்களும் மிக நன்றாக இருந்தது.
  மிக்க நன்றி. நேரில் சென்ற உணர்வு தந்தது.
  இனிய பொங்கல் வாழ்த்து.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 7. உங்கள் மூலம் ரங்கன் தரிசனம் கண்ட மகிழ்ச்சி ஐயா.

  ReplyDelete
 8. பள்ளி கல்லூரி படிக்கும் காலங்களில் ஒவ்வொரு கோடைக்கும் திருச்சி வருவது உண்டு. என் கூட வளர்ந்த நண்பர்கள் தகப்பனார்கள ஒருவர் மாற்றி ஒருவர் திருச்சியில் வசித்தது வழக்கம்.

  அவர்கள் நண்பர்களின் அம்மாக்கள் (என்ன வயது 40 -க்குள்ளே தான் இருக்கும்) நடக்க அஞ்சி நடுங்கும் இடம் மெயின் கார்ட் கேட், மலைக்கோட்டை கீழே ; எந்த வயது பெண்களும் கிண்டலுக்கு தப்ப முடியாது என்று சொல்வார்கள்.

  மாலை காங்கை ஆளைக் கொல்லும்; கந்தக பூமி மற்றும் மலைக்கோட்டை விடும் உஷ்ணமும் காரணம்.

  சொர்க்க வாசல் திறக்கும் நேரம் சொல்ல முடியாத அளவு கூடாம் இருக்கும். வைவனர்கள் விரும்பும் தலம்.
  உங்கள் உழைப்புக்கு தமிழ் மனம் +1

  ReplyDelete

 9. நானும் திருவரங்கம் சென்று வந்தேன், உங்களின் பதிவின் மூலம்! பகிர்ந்தமைக்கு நன்றி! புகைப்படங்கள் நேர்த்தியாக இருந்தன. தாங்கள் ஒரு தேர்ந்த புகைப்படக்கலைஞர் என்பதை உங்கள் படங்கள் சொல்லுகின்றன. வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
  // வைகுண்ட ஏகாதசி - ஸ்ரீரங்கன் தரிசனம் சிறப்பாக தரிசனம்
  செய்துவைத்தமைக்கு இனிய நன்றிகள்..பாராட்டுக்கள்..! //

  சகோதரிக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete


 11. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

  // அனைத்துப்படங்களும் பதிவும் மிக அருமை ஐயா. பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். தங்களால் இவற்றை இன்றும் தரிஸிக்க முடிந்ததில் மிக்க மகிழ்ச்சி. //

  அன்புள்ள திரு VGK அவர்களுக்கு வணக்கம்! தங்கள் பாராட்டிற்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 12. மறுமொழி > துரை செல்வராஜூ said...
  // வைகுந்த ஏகாதசி தரிசனம் தங்கள் பதிவின் மூலம் கிடைத்ததில் மகிழ்ச்சி.. மூன்றாண்டுகளுக்கு முன் ஏகாதசிக்கு மறுதினம் தரிசனம் செய்துள்ளேன்!.. அப்போதைக்கு இப்போது கூட்டம் குறைவாக இருப்பது போல தெரிகின்றது. //
  தஞசையம்பதி துரை செல்வராஜு அவர்களின் கருத்துரைக்கு நன்றி! நீங்கள் சொன்னது சரிதான். அப்போதைக்கு இப்போது கூட்டம் குறைவுதான். முன்பெல்லாம் வைகுந்த ஏகாதசி தொடங்கி முடியும் மட்டும் மக்கள் வெள்ளம் ஸ்ரீரங்கத்திலும், திருச்சி பஸ் நிலையங்களிலும் இருக்கும். நான் ஏகாதசி அன்று மாலைதான் சென்றேன். சொர்க்கவாசல் திறப்புக்கு என்று வருபவர்கள் காலையிலேயே வந்து சென்று விட்டதாகத் தெரிகிறது.

  ReplyDelete
 13. மறுமொழி > sury Siva said...
  // நானும் உங்களுடன் திருவரங்கத்தில் அரங்கனை சேவித்த
  மகிழ்ச்சி ஏற்பட்டது. //

  மகிழ்ச்சி அய்யா!

  // சக்கரை பொங்கல் வாழ்த்துக்கள்.//

  நன்றி அய்யா! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. மறுமொழி > 2008rupan said...

  எப்போதும் என்னிடம் அன்பு காட்டும் கவிஞர் ரூபன் அவர்களின் வருகைக்கும், கருத்துரைக்கும், பாராட்டிற்கும் நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. மறுமொழி > kovaikkavi said...

  // இறை தரிசனம் அருமை. படங்களும் மிக நன்றாக இருந்தது.
  மிக்க நன்றி. நேரில் சென்ற உணர்வு தந்தது. //

  சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம். அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

  //இனிய பொங்கல் வாழ்த்து.//

  மீண்டும் நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. அருமையான படங்களின் மூலம் நாங்களும் உடன் பயணித்த மகிழ்ச்சி... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 17. அருமையான படங்கள்..விரிவான பதிவாக அமைந்தது...நாங்களும் சொர்க்கவாசல் கண்ட திருப்தி...இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா...

  ReplyDelete
 18. மறுமொழி > தனிமரம் said...
  // உங்கள் மூலம் ரங்கன் தரிசனம் கண்ட மகிழ்ச்சி ஐயா. //

  தனிமரம் அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 19. மறுமொழி > நம்பள்கி said...

  நம்பள்கி அவர்களின் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும், மலரும் நினைவலைகள் பகிர்வுக்கும் நன்றி!

  ReplyDelete

 20. மறுமொழி > வே.நடனசபாபதி said...

  // நானும் திருவரங்கம் சென்று வந்தேன், உங்களின் பதிவின் மூலம்! பகிர்ந்தமைக்கு நன்றி! புகைப்படங்கள் நேர்த்தியாக இருந்தன. தாங்கள் ஒரு தேர்ந்த புகைப்படக்கலைஞர் என்பதை உங்கள் படங்கள் சொல்லுகின்றன. வாழ்த்துக்கள்! //

  அய்யா வே நடனசபாபதி அவர்களின் கருதுரைக்கும், பாராட்டிற்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி! ” நானும் ஒரு புகைப்படக் கலைஞன்” என்று என்னை தாங்கள் என்னை பாராட்டியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நீங்களும் போட்டோக் கலையைக் கற்றுக் கொள்ளுங்கள்.

  ReplyDelete

 21. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
  // அருமையான படங்களின் மூலம் நாங்களும் உடன் பயணித்த மகிழ்ச்சி... நன்றி ஐயா... வாழ்த்துக்கள்... //

  வலைப்பதிவர்களால் DD என்று அன்புடன் அழைக்கப்படும் சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

  ReplyDelete
 22. மறுமொழி > kaliaperumalpuducherry said...

  // அருமையான படங்கள்..விரிவான பதிவாக அமைந்தது...நாங்களும் சொர்க்கவாசல் கண்ட திருப்தி...இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ஐயா... //

  சகோதரர் கலியபெருமாள் புதுச்சேரி அவர்களுக்கு நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 23. மிக அழகான பயணம் ஐயா. மிக சிறப்பாக பகிர்ந்த விதம் ரசிக்க வைக்கிறது. படங்கள் ஒவ்வொன்றும் மிக அழகு திருவரங்கத்தின் அழகை மிக அழகாக காட்சி படுத்தியுள்ளீர்கள். கூடவே பயணித்த அனுபவம் ஏற்படுகிறது. மிக்க நன்றி ஐயா.
  ------------
  தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும். வாழ்வு கரும்பைப் போல் இனிக்கட்டும். நன்றி..

  ReplyDelete
 24. நான் போக முடியவில்லை. எனது மனக்குறை உங்கள் புகைப்படங்கள் மூலம் வெகுவாகக் குறைந்தது.
  இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள், இளங்கோ ஸார்!

  ReplyDelete
 25. மறுமொழி > அ. பாண்டியன் said...

  அரும்புகள் மலரட்டும் அ பாண்டியன் அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 26. மறுமொழி > Ranjani Narayanan said...

  நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கருத்துரை தர வந்த சகோதரி ரஞ்சனி நாராயணனுக்கு நன்றி!


  ReplyDelete
 27. நேரடியாக உடன் வந்து தரிசித்த திருப்தி
  பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
 28. படங்களும் பகிர்வும் மனதைக் கவர்ந்து செல்கிறது ! உங்களுக்கும்
  உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய பொங்கல்
  திரு நாள் வாழ்த்துக்கள் ஐயா .

  ReplyDelete
 29. தைப் பொங்கல் திரு நாளில் தங்கள் தளத்தைத் தொடர்வதில்
  நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கின்றேன் ஐயா .

  ReplyDelete
 30. வைகுந்த ஏகாதசியை தரிசித்த பலன் கிடைத்தது.

  ReplyDelete
 31. Pictures are good, some [especially those taken inside the mandapams] are shaken.

  ReplyDelete
 32. தங்களின் பதிவின் மூலம் ஆலய தரிசனம் கிடைத்துள்ளது... பதிவு மிக அருமை படங்களும் மிக அழகு வாழ்த்துக்கள் ஐயா.

  ReplyDelete
 33. மறுமொழி > Ramani S said... ( 1, 2 )

  கவிஞர் ரமணி அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 34. மறுமொழி > அம்பாளடியாள் வலைத்தளம் said... ( 1 )
  // படங்களும் பகிர்வும் மனதைக் கவர்ந்து செல்கிறது ! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள் ஐயா //
  அன்புச் சகோதரி அம்பாளடியாள் அவர்களின் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!

  ReplyDelete
 35. மறுமொழி > அம்பாளடியாள் வலைத்தளம் said... ( 2 )

  // தைப் பொங்கல் திரு நாளில் தங்கள் தளத்தைத் தொடர்வதில்
  நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கின்றேன் ஐயா //

  சகோதரிக்கு நன்றி! நானும் தங்கள் தளத்தினை எனது READING LIST இல் தொடர்கிறேன். ! தமிழ்மணத்தில் உங்கள் கவிதைகளை அடிக்கடி படிப்பதுண்டு. அதிகம் விமர்சனம் செய்ததில்லை. இனி அடிக்கடி எனது கருத்துரையை எழுதுவேன். மிக்க மகிழ்ச்சி!

  ReplyDelete
 36. மறுமொழி > வர்மா said...

  // வைகுந்த ஏகாதசியை தரிசித்த பலன் கிடைத்தது. //

  அன்பு சகோதரர் வர்மாவின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 37. மறுமொழி > Jayadev Das said...

  // Pictures are good, some [especially those taken inside the mandapams] are shaken.//

  சகோதரர் ஜெயதேவ் அவர்களுக்கு நன்றி. அன்றைக்கு மண்டபத்தில் போலீஸ் கெடுபிடி அதிகம். விரட்டிக் கொண்டே இருந்தார்கள். இதனால் சரியாக படம் எடுக்க இயலவில்லை. மன்னிக்கவும்.

  ReplyDelete
 38. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2)

  அன்பு சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 39. தி.தமிழ் இளங்கோ சார்,

  தமிழ்ப்புத்தாண்டு மற்றும்பொங்கல்,&உழவர்திருநாள் வாழ்த்துக்கள்!

  # அவ்ளோ கூட்டத்திலும் அசராம படம் எடுத்தீங்களே,கில்லாடி தான்!!!

  ReplyDelete
 40. மறுமொழி > வவ்வால் said...

  // தி.தமிழ் இளங்கோ சார், தமிழ்ப்புத்தாண்டு மற்றும்பொங்கல்,&உழவர்திருநாள் வாழ்த்துக்கள்! //

  வவ்வால் சாருக்கு வணககம்! பொங்கல் வாழ்த்துக்கள்! நான் சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு தொடக்கம் என்று நினைப்பவன். இங்கிருந்து சென்ற (சித்திரை to பங்குனி என்பது). தமிழர் பண்பாட்டுக் கோலம் அது சென்ற ஆண்டு கூட நான் எனது கருத்தினை உங்களது கருத்துரைக்கு மறுமொழியாக எழுதியதாக நினைவு! சென்று பார்க்க வேண்டும்.

  // # அவ்ளோ கூட்டத்திலும் அசராம படம் எடுத்தீங்களே,கில்லாடி தான்!!! //

  தங்களின் பாராட்டிற்கு நன்றி! கோயிலில் திருவிழாக் காலங்களில், கும்பலில் கேமராவினால் போட்டோ எடுக்கவே அனுமதிக்க மாட்டார்கள். எடுத்துக் கொண்டே நகர்ந்து விடவேண்டும். திருவிழா சமயம் கோயிலில் செல்போனில் போட்டோ எடுப்பது ரொம்பவும் சுலபம்.
  ReplyDelete
 41. அருமையான புகைப்படங்கள்......

  வைகுண்ட ஏகாதசி முடிந்து சில நாட்கள் வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்... அதனால் பொதுவாகவே நான் வைகுண்ட ஏகாதசி அன்று கோவிலுக்குச் செல்வதில்லை!

  ReplyDelete
 42. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

  // அருமையான புகைப்படங்கள்...... /

  சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் பாராட்டுக்கு நன்றி!

  // வைகுண்ட ஏகாதசி முடிந்து சில நாட்கள் வரை சொர்க்கவாசல் திறந்திருக்கும்... அதனால் பொதுவாகவே நான் வைகுண்ட ஏகாதசி அன்று கோவிலுக்குச் செல்வதில்லை! //

  நீங்கள் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு , ஏதேனும் ஒரு பெருமாள் கோயில் பற்றிய பதிவு எழுதுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்.

  ReplyDelete