Friday, 31 January 2014

நகரவாசியைக் கிண்டலடிக்கும் கிராமவாசி



நகரத்தில் இருப்பவர்கள் கிராமவாசியைக் கிண்டலடிப்பதற்கு எவ்வளவோ விஷயங்கள். சுத்த பட்டிக்காடு, பட்டிக்காட்டான், வேப்பெண்ணை, முண்டாசு என்று எவ்வளவோ பெயர் சூட்டல்கள். “பட்டிக் காட்டான் ஆனையைப் பார்த்தாற் போல”, “பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையைப் பார்த்தது போல”, என்று நிறைய வார்த்தைகள். நீர்க்குமிழி என்று ஒரு திரைப்படம். பாலச்சந்தர் இயக்கியது. அதில் மருத்துவமனைக்கு வரும் ஒரு கிராமத்தானைக் காட்டி நையாண்டி செய்து இருப்பார். இன்னொரு தமிழ் திரைப் படத்தின் தலைப்பு “பட்டிக்காடா பட்டணமா”. ராமராஜன் எங்க ஊரு பாட்டுக்காரன்என்ற படத்தில் டவுசர் போட்ட கிராமத்து ஆசாமியாக ( செண்பகமே, செண்பகமே என்று பாடி ) வருவார். அதற்குப் பிறகு அவரை டவுசர் என்றே கிண்டலடித்தாரகள், ந்மது ரசிகர்கள். இப்படி நிறைய.  நாட்டு எலியும் நகரத்து எலியும்என்று ஒரு கதையே இருக்கிறது. அம்புலிமாமா கதைகளில் வரும் கிராமத்து ஆசாமிகள் ஒன்றுமே தெரியாத அப்பாவியாய் இருப்பார்கள். அதில் வரும் வண்ணப் படங்களும் அப்படியே காட்டும். நாம் இப்படி கிண்டலடிக்க கிராமத்து ஆசாமிகளும் நம்மை (நகர வாசிகளை) கிண்டலடிக்கும் விதமே தனிவிதமாக இருக்கும். அதிகம் படித்தவன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.; “ கெட்டும் பட்டணம் சேர் இவை கிராமத்தார் பழமொழிகள்.
  
என்னுடைய தாத்தா:

பள்ளி பருவத்தில் தொடர் விடுமுறை நாட்களில் எனது அம்மாவின் கிராமத்த்திற்கு சென்று விடுவேன். அங்கே போனால் அவர் கேட்கும் முதல் கேள்வி “ மேட்டூர் அணையில் தண்ணீர் எவ்வளவு இருக்கிறது?  என்பதுதான்.  நாம டவுனில் பேப்பரில் இதையெல்லாம் எங்கே பார்க்கிறோம்? எனவே “தெரியாதுஎன்பேன். உடனே   இந்த பட்டணத்து பிள்ளைங்களே இப்படித்தான் “ என்பார்.

காலையில் மேயச் சென்ற ஆடு , மாடுகள் மாலையில் திரும்பும்போது அவைகளைப் பிடித்துக் கட்ட வேண்டும். ஆடுகளைப் பிடித்து கட்டுவதில் பிரச்சினை ஏதும் இருக்காது. ஆனால்  மாடுகளை கட்டுவதுதான் சிரமம். புதியவர்களுக்கு போக்கு காட்டும். எங்கள் தாத்தாவிடம் வலிய வந்து அவை அவை கட்ட வேண்டிய இடங்களில் சரியாக வந்து நின்று தலையை நீட்டும். ஆனால் புதியவனாக நான் கட்டும்போது போதும் போதும் என்று ஆகிவிடும். என்னுடைய தாத்தா அப்போது சொல்லும் வார்த்தை. “ என்னா படிச்சிருக்கே? மாட்டை புடிச்சி கட்ட தெரியலே “ என்பார். படிப்புக்கும் மாட்டை பிடித்துக் கட்டுவதற்கும் என்ன சம்பந்தம் என்று அவரிடம் கேட்க முடியாது.

ஒருமுறை இரட்டை மாட்டுவண்டியில் நெல்மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பக்கத்து ஊரில் உள்ள அரிசி மில்லுக்கு போக வேண்டி இருந்தது. நானும் மூட்டைகள் மீது உட்கார்ந்து கொண்டு கூட சென்றேன். தாத்தாவும் வந்தார் மாட்டு வண்டியை எங்களது சொந்தக்கார பையன் ஓட்டினான். மாடுகள் அவைபாட்டுக்கு சென்றன. இடையில் நான் வண்டியை ஓட்ட ஆசைப்பட்டேன். வண்டிக்காரப் பையன் அவர் இடத்தைக் கொடுத்து, என்னை மாட்டு வண்டியை ஓட்டச் சொன்னார். அதுவரை வேகமாக சென்ற மாடுகள், கயிற்றைப் பிடித்து  நான் ஓட்ட ஆரம்பித்ததும் கொஞ்சதூரம் சென்று நின்றுவிட்டன. நான் எவ்வளவோ குரல் கொடுத்தும், அதட்டியும் அவை நகர மறுத்து விட்டன. வண்டிக்காரப் பையனும், தாத்தாவும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். பழையபடி நான் நெல் மூட்டைகள் மீது வந்து உட்கார்ந்து விட்டேன்.


பெரிய இடத்துப் பெண் “என்ற படத்தில் படத்தில் (1963) பட்டிகாட்டு ஆசாமியாக எம்ஜிஆர் குடுமியோடு நடித்து இருப்பார். இந்த படத்தில் எம்ஜிஆர் மாட்டு வண்டி ஓட்டியபடி “பாரப்பா பழனியப்பா பட்டணமாம் பட்டணம்“ என்று பாடியபடி வருவார். இந்த பாடலில் நகரவாசிகளைக் கிண்டலடிக்கும் கருத்துக்களைக் காணலாம். பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.

படிச்சவனுக்கு மூணு:

கிராமத்தில் அங்கங்கே ஆட்டுச் சாணம் , மாட்டுச் சாணம் கிடக்கும். கிராமத்தார்கள் மிதித்து விட்டால், மிதித்த காலை தரையில் அழுத்தி தேய்த்துவிட்டு போய்க் கொண்டே இருப்பார்கள். இந்த விஷயத்தில் நகரவாசிகள் எப்படி? “படிச்சவனுக்கு மூணு இடத்தில் ஞானம் என்று அவர்கள் கிண்டலடிப்பார்கள். இங்கு படிச்சவன் என்று அவர்கள் குறிப்பிடுவது நகரவாசியைத்தான்.  அது என்ன, மூணு இடம்.? படிச்சவன் முதலாவதாக தான் மிதித்தது என்னவாக இருக்கும் என்று யோசிப்பானாம். அப்புறம் மிதித்த காலை தூக்கி பார்ப்பானாம். அப்படியும் சந்தேகம் தீராமல் மிதித்ததை மோந்தும் பார்ப்பானாம். இது எப்படி இருக்கு?

பொது இடங்களில்:

கிராமத்து ஆட்கள், டவுனுக்கு வந்தால் பஸ் நிலையத்தில் “ இந்த பஸ் எங்கே போவுது “ என்று ஒவ்வொரு பஸ்சாக கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால் அவர்கள் எங்கே போக வேண்டும் என்று சொல்லவே மாட்டார்கள். அவர்களே கொஞ்சம் பெரிய கிராமங்களில் உள்ள சிறிய பஸ் ஸ்டாண்டில் கிண்டலடிக்கும் வாசகம் “இந்த படிச்சவனுங்களே இப்படித்தான்! யாரையும் கேட்க மாட்டார்கள். கவுரவம் கொறஞ்சியா போய் விடும்

பொது ஆஸ்பத்திரி, தாசில்தார், கோர்ட் அலுவலகங்களில் பணிபுரிபவர்கள் பக்கத்து நகரங்களிலிருந்து வருபவர்களாக இருக்கும். சில சமயம் வருவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகிவிடும். அப்போது அந்த கிராமத்து ஆட்கள் அடிக்கும் கிண்டலுக்கு அளவே இருக்காது. “ தொரை இன்னும் ஏந்திரிச்சு இருக்க மாட்டார்” : “ தொரை இன்னும் பல்லே விளக்கி இருக்க மாட்டார்என்பார்கள்.  

நடிகர் நாகேஷ் அனுபவி ராஜா அனுபவி என்ற படத்தில் கிராமத்து ஆளாக நடித்து இருப்பார். அதில் மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்என்று பாடியபடி வரும் பாடலில் நகரவாசிகளைக் கிண்டலடிக்கும் கருத்துக்களைக் காணலாம். ( படம்: அனுபவி ராஜா அனுபவி பாடல்: கண்ணதாசன் பாடியவர்: T M சௌந்தரராஜன்  ) (1967)  
  
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

மெதுவாப் போறவுக யாருமில்லே
இங்கே  சரியாத் தமிழ் பேச ஆளுமில்லே
ஆம்பிள்ளைக்கும் பொம்பிள்ளைக்கும்
வித்யாசம் தோணல்லே
அநியாயம் ஆத்தாடியோ

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

சீட்டுக்கட்டுக் கணக்காக
இங்கே வீட்டக் கட்டி இருக்காக
வீட்டக் கட்டி இருந்தாலும்
சிலர் ரோட்டு மேலே படுக்காக
பட்டணத்துத் தெருக்களிலே
ஆளு நிக்க ஒரு நிழலில்லையே
வெட்டவெளி நிலமில்லையே
நெல்லுக் கொட்ட ஒரு இடமில்லையே
அடி சக்கே
வைக்கேலாலே கன்னுக் குட்டி
மாடு எப்போ போட்டுது
கக்கத்திலே தூக்கி வச்சாக்
கத்தலையே என்னது
ரொக்கத்துக்கு மதிப்பில்லையே - இங்கு
வெக்கத்துக்கு விலையில்லையே

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்

ஊரு கெட்டுப் போனதுக்கு
மூரு மாருக்கெட்டு அடையாளம்
நாடு கெட்டுப் போனதுக்கு
மெட்ராஸு நாகரிகம் அடையாளம்
தேராட்டம் காரினிலே
ரொம்பத் திமிரோடு போறவரே
எங்க ஏரோட்டம் நின்னு போனா
உங்க காரு ஓட்டம் என்னவாகும்?
ஹேஹே
 
காத்து வாங்க பீச்சுப் பக்கம்
காத்து நிக்கும் கூட்டமே
நேத்து வாங்கிப் போன காத்து
என்ன ஆச்சு வூட்டிலே
கெட்டுப்போன புள்ளிகளா
வாழப் பட்டணத்தில் வந்தீகளா?

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
அடி ஆத்தாடியோ

( பாடல் வரிகள்: Thanks to  www.thamizhisai.com )

பாடலைக் கண்டு கேட்டு மகிழ கீழே க்ளிக் செய்யவும்


( PICTURES & VIDEO Link :  THANKS TO  “ GOOGLE ” )


51 comments:

  1. ஆஹா.. நல்ல அமர்க்களமான பதிவு!.. சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் - ஒரு வார இதழ் (இன்றைக்கு தமிழகத்தில் குடும்பம் குட்டியோடு(!?) தழைத்து இருக்கின்ற அது அன்று தனிக்கட்டை ) துணுக்கு சிறப்பிதழ் என்று வெளியிட்டு தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த துணுக்குகளுக்கு பற்பல பரிசுகளை வழங்கியது.
    அதில் - பரிசு பெற்ற ஒன்றை மட்டும் இன்னும் மறக்கவே முடியவில்லை.

    கிராமவாசி - குங்குமப்பூ இருக்குங்களா?..
    கடைக்காரர் - இருக்கே!..
    கிராமவாசி - அப்ப ஒரு முழம் கொடுங்க!..

    என்ன ஒரு எகத்தாளம்!.. அகங்காரம்!..
    இத்தனைக்கும் அவர்களும் இந்த கிராமத்தில் இருந்து நகர்ந்து போனவர்கள் தானே!..
    நீங்கள் சொல்லியது போல அவர்களுக்கு மூணு இடம்!..

    ReplyDelete
  2. "மூணு இடத்தில் ஞானம்" ஒன்றே போதாதா...? பெரிய ந(கர)ரகத்தில் இருந்தாலே, (படிப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும்) தானாகவே ஒருவித திமிர் வந்து அழிந்து போனவர்கள் பல பேர் உண்டு... ஆனாலும் சிலர் பிறந்த கிராமத்தை பழிப்பதே இல்லை...

    அன்றைய கண்ணதாசன் வரிகள் இன்றைக்கும் எவ்வளவு பொருந்துகிறது பாருங்கள்... (நாடு கெட்டுப் போனதுக்கு மெட்ராஸு நாகரிகம் அடையாளம்)

    இரண்டு பாடலும் அருமையான பாடல்கள்...

    ReplyDelete
  3. இன்று உண்மை என்றே சொல்லத்தோன்றுகிறது காரணம் நகரத்தில் உள்ளவர்கள் அவர்களுக்காக மட்டுமே வாழ்கிறார்கள் ஆனால் கிராமத்தான் ஊருக்காக உறவுக்காக வாழ்கிறவர்கள் என்பது முற்றிலும் உண்மையே

    ReplyDelete
  4. படித்தவர்க்ளை விட படிக்காதவர்கள் எவ்வளவோ தேவலை. ஏமாத்த மாட்டாங்க. அதிகம் ஆசைப்படமாட்டாங்க. பின்விளைவுகளை யோசிக்காம உதவி செய்வாங்க

    ReplyDelete
  5. கிராமத்தில் இருக்கும் வசதிகள் எதுவும் நகரத்தில் கிடையாது. நகரங்கள் பெரும்பாலும் நரகமே! ஆனாலும் கிராமம் என்றாலே நக்கல் தான் பலருக்கு,. அதை நன்றாகவே படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள்.

    ReplyDelete
  6. கிராமங்கள் இருக்கும் வரையிலும் அடிப்படை மனித பண்புகள் இருக்கும்.

    ReplyDelete
  7. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    // ஆஹா.. நல்ல அமர்க்களமான பதிவு!.. //

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ – அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    // கிராமவாசி - குங்குமப்பூ இருக்குங்களா?..
    கடைக்காரர் - இருக்கே!..
    கிராமவாசி - அப்ப ஒரு முழம் கொடுங்க!.. //

    முப்பது வருடத்திற்கு முந்தைய ஜோக் ... – நல்ல நினைவாற்றல் உங்களுக்கு. நானும் ரசித்தேன் . நன்றி!

    ReplyDelete
  8. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // "மூணு இடத்தில் ஞானம்" ஒன்றே போதாதா...? பெரிய ந(கர)ரகத்தில் இருந்தாலே, (படிப்பு இருந்தாலும், இல்லாவிட்டாலும்) தானாகவே ஒருவித திமிர் வந்து அழிந்து போனவர்கள் பல பேர் உண்டு... ஆனாலும் சிலர் பிறந்த கிராமத்தை பழிப்பதே இல்லை...//

    நானும் இன்னும் எங்கள் கிராம உறவுகளை விட்டு விலகியதில்லை!

    // அன்றைய கண்ணதாசன் வரிகள் இன்றைக்கும் எவ்வளவு பொருந்துகிறது பாருங்கள்... (நாடு கெட்டுப் போனதுக்கு மெட்ராஸு நாகரிகம் அடையாளம்) இரண்டு பாடலும் அருமையான பாடல்கள்... //

    அதனால்தான் கவிஞர் கண்ணதாசன் “ நான் நிரந்தரமானவன் “ என்று பாடினார்.

    ReplyDelete
  9. மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...

    சகோதரர் கவிஞர் கவியாழி கண்ணதாசன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // இன்று உண்மை என்றே சொல்லத்தோன்றுகிறது காரணம் நகரத்தில் உள்ளவர்கள் அவர்களுக்காக மட்டுமே வாழ்கிறார்கள் ஆனால் கிராமத்தான் ஊருக்காக உறவுக்காக வாழ்கிறவர்கள் என்பது முற்றிலும் உண்மையே //

    இப்போது தொலைக்காட்சி தொடர்களால் கிராமமும் மாறி வருகிறது என்பது வருத்தப்பட வேண்டிய ஒன்று.

    ReplyDelete
  10. மறுமொழி > ராஜி said...

    சகோதரி ராஜி அவர்களுக்கு நன்றி!

    // படித்தவர்க்ளை விட படிக்காதவர்கள் எவ்வளவோ தேவலை. ஏமாத்த மாட்டாங்க. அதிகம் ஆசைப்படமாட்டாங்க. பின் விளைவுகளை யோசிக்காம உதவி செய்வாங்க //

    நீங்கள் சொல்வது அந்தக்காலம். இப்போது எல்லாமே மாறி வருகிறது.

    ReplyDelete
  11. மறுமொழி > rajalakshmi paramasivam said...

    சகோதரி ராஜலஷ்மி பரமசிவம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // கிராமத்தில் இருக்கும் வசதிகள் எதுவும் நகரத்தில் கிடையாது. நகரங்கள் பெரும்பாலும் நரகமே! ஆனாலும் கிராமம் என்றாலே நக்கல் தான் பலருக்கு,. அதை நன்றாகவே படம் பிடித்துக் காட்டி விட்டீர்கள். //

    இன்னும் பல கிராமங்களில் பொது சுகாதாரம் என்பது ரொம்பவும் மோசமாகவே இருக்கிறது. இதனாலேயே சில ஊர்களுக்கு நல்லது கெட்டதுக்காக காலையில் சென்றால் மாலையிலேயே திரும்ப வேண்டி உள்ளது.

    ReplyDelete
  12. சுவாரஸ்யமான ஒப்பீடு ..
    பாடல் பகிர்வுகள்..ரசிக்கவைத்தன..!

    ReplyDelete
  13. முன்பு படித்த ஞாபகம்..
    ஒரு நகரவாசி கிராமத்துக்கு காரில் வருவார்.
    கிராமத்து சாலை குண்டும் குழியுமாக இருக்கும்.
    ஒரு இடத்தில், குழியில் தண்ணீர் நிரம்பி இருக்கும்.
    குழி ஆழமாக இருக்குமோ என்ற சந்தேகத்தில்
    அருகில் வாத்துக்கள் மேய்த்து கொண்டு இருக்கும் ஒரு கிராமத்தானிடம்,
    இந்த குழி ஆழமான குழியா என்று கேட்பார்.
    அந்த வாத்து மேய்ப்பவன்.. அப்படி ஒன்றும் ஆழம் இல்லை போகலாம் என்பார்.
    நகரவாசி காரை செலுத்தியவுடன், கார் பாதி குழியில் மூழ்கி விடும்.
    தட்டு தடுமாறி காரில் இருந்து இறங்கி வந்த நகரவாசி , கோபமாக கிராமத்தாரை பார்பார்.
    உடனே கிராமத்தான்.. மன்னிச்சிடுங்க சாமி..
    என் வாத்துக்கள் இங்குதான் நீந்தும். அப்போது அதன் உடல்களில் பாதி கூட நீரில் மூழ்காது. அதனால், ஆழமான குழிகள் இல்லை என்று நினைத்தேன் என்று அப்பாவியாக கூறுவாராம்.. :) )

    ReplyDelete
  14. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

    சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // கிராமங்கள் இருக்கும் வரையிலும் அடிப்படை மனித பண்புகள் இருக்கும். //

    நாம் இன்னும் அந்த கால நினைப்பிலேயே இன்னும் இருக்கிறோம். இப்போது டீவி புண்ணியத்தில் எல்லாமே தலைகீழாக மாறி வருகிறது.

    ReplyDelete
  15. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
    // சுவாரஸ்யமான ஒப்பீடு .. பாடல் பகிர்வுகள்..ரசிக்க
    வைத்தன..! //

    சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  16. மறுமொழி > kambathasan said...
    // முன்பு படித்த ஞாபகம்.. .... //

    ஒரு நல்ல நகைச்சுவை காட்சியைச் சொன்ன சகோதரர் கம்பதாசனுக்கு நன்றி! நாமும் ரசித்தேன்!

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
  18. \\படிச்சவனுக்கு மூணு: \\\இதை வேற மாதிரி எங்கப்பா சொல்லுவார்!! அது மாட்டு சாணம் அல்ல, மனிதனுடையது. படிக்காதவன் மெதித்தாலும் தரையில் தேய்த்துவிட்டு போய் விடுவான், ஒரு இடத்தில் தான் அவனுக்கு படும். படித்தவன் காலில் படும், பின்னர் அதை தொடுவான், கையில் படும், அதன் பின்னர் முகர்ந்து பார்க்க மூக்கினருகில் கொண்டு செல்லுவான் மூக்கிலும் ஒட்டிக் கொள்ளும். மூணு இடத்தில் அவனுக்கு மனித சாணம்!!

    ReplyDelete
  19. பட்டம் எவ்வளவு உயரப் பறந்தாலும்
    பிடி தரையில் என்பதைப்போல
    நம் தலைமுறை வரை கிராமத்துத்
    தொடர்பு நினைவுகள் இருக்கும் என நினைக்கிறேன்
    மனம் கடந்த காலம் சென்று மகிழ்ந்து திரும்பியது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. அருமையான அலசல். எப்போது நகரத்தில் வசிப்பவர்களுக்கு கிராமவாசி என்றால் இளக்காரம்தான் தான். ஆனால் கிராமவாசிகள் மனதால் போடும் கணக்குகளை அன்றும் இன்றும் என்றும் நகரவாசிகளால் போடமுடியாது என்பது நிதர்சனம்.

    நகரவாசிகளைப் பற்றி கிண்டல் செய்யும் பாட்டான எங்கள் வீட்டு மகாலக்ஷ்மி என்ற திரைப்படத்தில் உடுமலை நாராயண கவி எழுதிய ‘பட்டணம்தான் போகலாமடி பொம்பளை, பணம் காசு சேர்க்கலாமடி’ என்பதை விட்டுவிட்டீர்களே. அதில் சென்னையைப் பற்றி இவ்வாறு கிண்டலடித்திருப்பாரே கவிஞர்.

    வேலை ஏதுங்க? கூலி ஏதுங்க?
    வெட்கக் கேட்டை சொல்றேன் கேளுங்க
    அங்கே வேலை ஏதுங்க? கூலி ஏதுங்க?
    வெட்கக் கேட்டை சொல்றேன் கேளுங்க
    காலேஜு படிப்பு காப்பி ஆத்துதாம்
    பி.ஏ. படிப்பு பெஞ்சு துடைக்குதாம்
    ஆளை ஏய்ச்சி ஆளும் பொழைக்குதாம்
    அஞ்சிக்கி ரெண்டு கஞ்சிக்கலையுதாம்
    மேலே போனது நூத்திலே ஒண்ணாம்
    மிச்சம் உள்ளது லாட்ரி அடிக்குதாம்

    ReplyDelete
  21. மறுமொழி > Jayadev Das said...
    சகோதரர் ஜெயதேவ் தாஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
    நீங்கள் சொன்னது போன்றுதான் , கிராமத்தில் இந்தக் கதையைச் சொல்வார்கள். இடக்கரடக்கல் – கருதி நான் அவ்வாறு இங்கு எழுதவில்லை.

    ReplyDelete
  22. மறுமொழி > Ramani S said... ( 1, 2 )

    கவிஞர் ரமணி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி1

    // பட்டம் எவ்வளவு உயரப் பறந்தாலும் பிடி தரையில் என்பதைப்போல நம் தலைமுறை வரை கிராமத்துத்
    தொடர்பு நினைவுகள் இருக்கும் என நினைக்கிறேன் //

    கவிஞர் அவர்களே நீங்கள் சொன்னது சரிதான்! நான் இருக்கும் வரை இந்த கிராமத்து உறவுகளும், நினைவுகளும் இருக்கும் போல் தெரிகிறது. எனக்குப் பின் இவை தொடருமா என்று தெரியவில்லை. வருத்தமான விஷயம்தான்.

    // மனம் கடந்த காலம் சென்று மகிழ்ந்து திரும்பியது
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள் //

    கவிஞருக்கு நன்றி!



    ReplyDelete
  23. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    அய்யா வே நடனசபாபதி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // அருமையான அலசல். எப்போது நகரத்தில் வசிப்பவர்களுக்கு கிராமவாசி என்றால் இளக்காரம்தான் தான். ஆனால் கிராமவாசிகள் மனதால் போடும் கணக்குகளை அன்றும் இன்றும் என்றும் நகரவாசிகளால் போடமுடியாது என்பது நிதர்சனம். //

    உண்மைதான் அய்யா! அவர்களைப் போல நகரவாசிகளால் மனக் கணக்குகளை போட இயலாது. பேப்பர், பென்சிலை தேடுவார்கள். இந்த தலைமுறை கால்குலேட்டரை தேடுவார்கள்.

    // நகரவாசிகளைப் பற்றி கிண்டல் செய்யும் பாட்டான எங்கள் வீட்டு மகாலக்ஷ்மி என்ற திரைப்படத்தில் உடுமலை நாராயண கவி எழுதிய ‘பட்டணம்தான் போகலாமடி பொம்பளை, பணம் காசு சேர்க்கலாமடி’ என்பதை விட்டுவிட்டீர்களே. அதில் சென்னையைப் பற்றி இவ்வாறு கிண்டலடித்திருப்பாரே கவிஞர். //

    அருமையான பாடல்! நானும் ரசித்து இருக்கிறேன்! நினைவூட்டலுக்கு நன்றி!



    ReplyDelete
  24. ரசிக்க வைத்த பதிவு !
    த.ம 6

    ReplyDelete
  25. ஒருவர் கோழிகள் வளர்த்து வந்தாராம் ( நகர வாசி ) கோழிகள் சுருண் டு வீழ்ந்து கால்கள் ஆகாயம் நோக்கி இருந்தன.நகர வாசி மிருக் வைத்தியரை நாடப் போனானாம். அருகில் இருந்த கிராமவாசி கோழிகள் வானம் பார்த்துவிட்டன. குழம்பு செய்து சாப்பிடுங்கள் என்றாராம்....! . ஒருவருக்கு அடுத்தவர் இளைத்தவர் போல. தோன்றும்

    ReplyDelete
  26. நல்லதொரு ஒப்பீடு... கிராமத்து மனிதர்களைப் பற்றியும் நகரத்து மனிதர்களைப் பற்றியும்... ஆனால் நிறை குறை எல்லா இடத்திலும் தான் உண்டு...

    ReplyDelete
  27. அழகாக கிராமத்தையும் , நகரத்தையும் ஒப்பிட்டிருக்கிறீர்கள்.... ஆனால் இப்பவெல்லாம் கிராமங்கள் தங்கள் கிராமியத்தை இழந்து வருகிறதெனத் தோன்றுகிறது.

    ReplyDelete
  28. மறுமொழி > Bagawanjee KA said...
    // ரசிக்க வைத்த பதிவு ! த.ம 6 //

    பகவான்ஜீ K A அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  29. பகவான்ஜீ K A அவர்களுக்கு நன்றி!

    மறுமொழி > G.M Balasubramaniam said...
    அய்யா GMB அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // கோழிகள் வானம் பார்த்துவிட்டன. குழம்பு செய்து சாப்பிடுங்கள் //

    நல்ல நகைச்சுவை! ருசித்தேன்!


    ReplyDelete
  30. மறுமொழி > ADHI VENKAT said..

    சகோதரி ஆதி வெங்கட் கருத்துரைக்கு நன்றி! .

    // நல்லதொரு ஒப்பீடு... கிராமத்து மனிதர்களைப் பற்றியும் நகரத்து மனிதர்களைப் பற்றியும்... ஆனால் நிறை குறை எல்லா இடத்திலும் தான் உண்டு... //

    நெல்லுக்கு உமியுண்டு! நீருக்கு நுரையுண்டு! எல்லோர் இடத்திலும் ஒரு குறை உண்டு!

    ReplyDelete
  31. மறுமொழி > ezhil said...

    சகோதரி எழில் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // அழகாக கிராமத்தையும் , நகரத்தையும் ஒப்பிட்டிருக்கிறீர்கள்.... ஆனால் இப்பவெல்லாம் கிராமங்கள் தங்கள் கிராமியத்தை இழந்து வருகிறதெனத் தோன்றுகிறது. //

    நீங்கள் சொன்னதைப் போல, கிராமங்களில் நிறையவே மாற்றங்கள்.

    ReplyDelete
  32. அருமையான பதிவு என்பது பின்னூட்டங்களில் தெரிகிறது..பக்கத்து வீட்டக் காரனே யாரென்று தெரியாத பட்டணத்து படித்தவர்கள் ரொம்பப் பாவம்....

    ReplyDelete
  33. சகோதரர் புதுச்சேரி கலியபெருமாள் கருத்துரைக்கு நன்றி!

    // அருமையான பதிவு என்பது பின்னூட்டங்களில் தெரிகிறது..பக்கத்து வீட்டக் காரனே யாரென்று தெரியாத பட்டணத்து படித்தவர்கள் ரொம்பப் பாவம்....//

    ReplyDelete
  34. நகரம் கிராமம் அலசல். அருமை ஐயா! கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்தவர்கள் கிராம வாழ்க்கையை மறக்காமல் இருந்தாலும் இப்போது போய் கிராமத்தில் இருக்க சொன்னால் அவர்களால் முடியாது. ஒரு வாரத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது. கிராமத்தில் இருக்கும்போது ஒரு பண்பும் நகரத்திற்கு வந்தபின்பு வேறு பண்பும் உடையவர்களாக மாறி விடுகிறார்கள். பல்வேறு வசதிகளுக்காக பல்வேறு சமரசங்களை செய்து கொள்ள யாரும் தயங்குவதில்லை. விவசாயத்திற்கு உரிய மரியாதை கிடைத்தால் கிராமங்கள் செழிப்புறும்.
    கிராமங்களும் தங்கள் அடையாளங்களை இழந்து வருகின்றன என்றே நினைக்கிறேன்.

    ReplyDelete
  35. கிராமங்கள் இப்பொழுதெல்லாம், நகரங்களைப்போல மாறிவிட்டன. சிறுவர்கள் எப்பொழுதும் தெருவில் விளையாடலாம். எந்த ட்ராஃபிக்கும் அவர்களுக்கு தொந்தரவாக இருக்காது. தண்ணீர் பிரச்சனை இருக்காது. குளத்திலோ, ஆற்றிலோ, மடுவிலோ எங்காவது எப்பொழுதும் தண்ணீர் இருக்கும். அனைத்து ஆசிரியர்களுக்கும் பெற்றொரை நன்கு தெரிந்திருக்கும். ஊர் முழுவதும் ஒருவருக்கொருவர் தெரிந்திருக்கும். இப்பொழுது அத்தகைய கிராமங்கள் அருகிவிட்டன. அவரவர்கள் அவரவர்களுடைய காரியங்களைப் பார்க்கவே நேரம் சரியாக உள்ளது. அந்தக் காலத்தில் கிராமங்களிலிருந்து வந்தவர்கள் எழுதிய பாடல்களைப்போல இனிவரும் காலங்களில் யாரும் எழுத அத்தகைய அனுபவங்கள் இருக்காது என்று நினைக்கிறேன். நன்றி.

    ReplyDelete
  36. மறுமொழி> டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

    சகோதரர் மூங்கில் காற்று முரளிதரன் வருகைக்கு நன்றி!

    // நகரம் கிராமம் அலசல். அருமை ஐயா! கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வந்தவர்கள் கிராம வாழ்க்கையை மறக்காமல் இருந்தாலும் இப்போது போய் கிராமத்தில் இருக்க சொன்னால் அவர்களால் முடியாது. ஒரு வாரத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது. //

    நீங்கள் சொவது சரிதான் முரளிதரன்.

    // கிராமத்தில் இருக்கும்போது ஒரு பண்பும் நகரத்திற்கு வந்தபின்பு வேறு பண்பும் உடையவர்களாக மாறி விடுகிறார்கள். பல்வேறு வசதிகளுக்காக பல்வேறு சமரசங்களை செய்து கொள்ள யாரும் தயங்குவதில்லை.//

    அப்படி எல்லோரும் இருப்பதில்லை அய்யா!

    // விவசாயத்திற்கு உரிய மரியாதை கிடைத்தால் கிராமங்கள் செழிப்புறும். //

    விவசாயிகளை விவசாயிகளே ஒருவருக்கொருவர் அனுசரித்துக் கொள்வதில்லை.

    // கிராமங்களும் தங்கள் அடையாளங்களை இழந்து வருகின்றன என்றே நினைக்கிறேன். //

    மற்ற எது மாறினாலும், ஜாதீய அணுகுமுறை இன்னும் மாறவில்லை என்பதே உண்மை.


    ReplyDelete
  37. மறுமொழி > Packirisamy N said...

    சகோதரர் N பக்கிரிசாமி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
    // கிராமங்கள் இப்பொழுதெல்லாம், நகரங்களைப்போல மாறிவிட்டன. //
    .
    // இப்பொழுது அத்தகைய கிராமங்கள் அருகிவிட்டன. அவரவர்கள் அவரவர்களுடைய காரியங்களைப் பார்க்கவே நேரம் சரியாக உள்ளது. அந்தக் காலத்தில் கிராமங்களிலிருந்து வந்தவர்கள் எழுதிய பாடல்களைப்போல இனிவரும் காலங்களில் யாரும் எழுத அத்தகைய அனுபவங்கள் இருக்காது என்று நினைக்கிறேன். நன்றி. //

    ஆமாம் அய்யா! நாம் இப்பொழுது பழைய நினைப்பில் இன்றைய கிராமங்களை அணுக முடியாது.



    ReplyDelete
  38. கிராமம் என்கிறோம். சமீபத்தில் வேளாங்கண்னி சென்றுவிட்டு அங்கிருந்து திருத்துறைப் பூண்டி வழியாக தஞ்சைக்கு காரில் சென்றோம். சென்னை தெருக்களை தூக்கிச் சாப்பிட்டுவிடும் அளவுக்கு அருமையான தார் சாலைகள். சுமார் பதினைந்து ஆண்டுகளில் வழியெங்கும் அடியோடு மாறிப் போயிருக்கும் கிராமங்கள். அன்றைய கிராமவாசி இப்போது நகரவாசியை விடவும் மாடர்னாகிவிட்டான். தடுக்கு விழுந்தால் ATM பூத்துகள், மொபைல் டவர்கள்... கையில் செல்ஃபோன் இல்லாதவர்களே இல்லை என்னும் அளவுக்கு வயல்வெளிகளில் வேலை செய்பவர்களும் மாடு மேய்ப்பவர்களும் செல்ஃபோனில் உரையாடிக்கொண்டிருப்பதை வழியெங்கும் காண முடிந்தது. இது ஒரு மவுனப் புரட்சியாகவே தென்படுகிறது.

    ReplyDelete
  39. ஒப்பீடு அருமை. பாடல்கள் அனைத்தும் அர்த்தமுள்ளவை. இனிமையானவை. வாத்யார் படத்தில் வரும் அருமையான பாடலுடன் அழகான பதிவு. பொருத்தமான படத்தேர்வுகள்.

    பாராட்டுக்கள் + வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  40. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...

    அய்யா திரு டிபிஆர் ஜோசப் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // கிராமம் என்கிறோம். சமீபத்தில் வேளாங்கண்னி சென்றுவிட்டு அங்கிருந்து திருத்துறைப் பூண்டி வழியாக தஞ்சைக்கு காரில் சென்றோம். சென்னை தெருக்களை தூக்கிச் சாப்பிட்டுவிடும் அளவுக்கு அருமையான தார் சாலைகள். சுமார் பதினைந்து ஆண்டுகளில் வழியெங்கும் அடியோடு மாறிப் போயிருக்கும் கிராமங்கள்.//

    ஆமாம் அய்யா! கிராமத்தில் கிடைக்கும் பல சலுகைகள், வசதிகள் ந்கரத்தில் கிடைப்பதில்லை.

    // அன்றைய கிராமவாசி இப்போது நகரவாசியை விடவும் மாடர்னாகிவிட்டான். தடுக்கு விழுந்தால் ATM பூத்துகள், மொபைல் டவர்கள்... கையில் செல்ஃபோன் இல்லாதவர்களே இல்லை என்னும் அளவுக்கு வயல்வெளிகளில் வேலை செய்பவர்களும் மாடு மேய்ப்பவர்களும் செல்ஃபோனில் உரையாடிக் கொண்டிருப்பதை வழியெங்கும் காண முடிந்தது. இது ஒரு மவுனப் புரட்சியாகவே தென்படுகிறது. //

    இன்றைய காங்கிரஸ் கூட்டணி அரசு செய்த இந்த மவுனப் புரட்சி அவர்கள் செய்த பல குளறுபடிகளால் மறக்கப் பட்டு விட்டன.

    ReplyDelete
  41. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    திரு VGK அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!


    ReplyDelete
  42. இப்போதைய தமிழகத்தில் கிராமமே இல்லை என நினைக்கிறேன். அந்தக் காலம் கடந்துவிட்டது.

    ReplyDelete
  43. மறுமொழி > குட்டிபிசாசு said...

    // இப்போதைய தமிழகத்தில் கிராமமே இல்லை என நினைக்கிறேன். அந்தக் காலம் கடந்துவிட்டது. //

    மை டியர் குட்டி பிசாசுவின் கருத்தும் சரிதான். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!


    ReplyDelete
  44. சிறப்பான பகிர்வு.... பல கிராமவாசிகள் மிகத் திறமையானவர்கள். நகரவாசிகள் ஏதோ தனக்குத்தான் எல்லாம் தெரிந்தது போல காண்பித்துக் கொண்டாலும் கிராமவாசிகளுக்குத் தெரிந்த பல விஷயங்கள் தெரியாது! :)

    பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  45. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  46. நகரவாசி கிராமவாசிகளுக்கிடையேயான மாறுபட்ட பார்வையும் பாடல்களும் ரசிக்கவைக்கின்றன. தங்களுடைய சிறுவயது அனுபவம் பதிவுக்குக் கூடுதல் சுவை. சில கணங்கள் கிராமத்துக்கு சென்றுவந்தாற்போன்றதொரு உணர்வு. பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
  47. மறுமொழி > கீத மஞ்சரி said...

    // நகரவாசி கிராமவாசிகளுக்கிடையேயான மாறுபட்ட பார்வையும் பாடல்களும் ரசிக்கவைக்கின்றன. தங்களுடைய சிறுவயது அனுபவம் பதிவுக்குக் கூடுதல் சுவை. சில கணங்கள் கிராமத்துக்கு சென்றுவந்தாற்போன்றதொரு உணர்வு. பாராட்டுகள் ஐயா. //

    சகோதரி கீதமஞ்சரி அவர்களின் பாராட்டுக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  48. நகரத்தில் உள்ளவர்கள் அவர்களுக்காக மட்டுமே வாழ்கிறார்கள் ஆனால் கிராமத்தான் ஊருக்காக உறவுக்காக வாழ்கிறவர்கள் என்பது முற்றிலும் உண்மையே
    நன்றி ஐயா

    ReplyDelete
  49. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார்

    ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. தாமதமான எனது மறுமொழிக்கு மன்னிக்கவும்.

    ReplyDelete