Thursday, 16 January 2014

திருமண பொருத்தம் - நட்சத்திரம், ராசி பார்க்கலாமா?



ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவர் வீட்டிற்கு போயிருந்தேன். அவர் மக்கள் சமூகப் பணிகளில் ஆர்வம் மிக்கவர். நான் போயிருந்த சமயம் பேராசிரியர் வீட்டில் இரண்டு வயதான தம்பதினர் இரண்டு ஜோடிகள் வந்து இருந்தனர். தங்கள் பிள்ளைகளுக்கு வரன் தேடி , பேராசிரியரிடம் சொல்லிவிட்டு போக வந்தவர்கள். இதுபோல் அடிக்கடி நிறையபேர் அவர் வீட்டிற்கு வந்து, தங்கள் பிள்ளைகளைப் பற்றிய விவரம் தந்துவிட்டு போவார்கள். பேராசிரியர் வீட்டில் ஆண் , பெண் என்று நிறைய வரன்கள் அடங்கிய பைல்கள் இரண்டு இருந்தன. வந்தவர்கள் அவற்றில் இருந்த விவரங்களைப் பார்த்துவிட்டு நட்சத்திரப் பொருத்தம் இல்லை என்று சொல்லிவிட்டு சென்றனர். பேராசிரியர் இந்த திருமண தகவல் சேவையை சமுதாயப் பணியாக இலவசமாக, ஒரு அறக்கட்ட்ளைக்காக  செய்து வருகிறார். நான் அவரிடம் எல்லாவற்றையும் கம்ப்யூட்டரில் ஏற்றி இலவசமாக எல்லோரும் பார்க்கும் வண்ணம் வலைத்தளம் ஒன்றைத் தொடங்கியும் தருவதாகச் சொன்னேன். அவரும் சரி என்றார்.

என்ன பொருத்தம் ஆகா என்ன பொருத்தம்:

அவர் வீட்டில் இருந்த இரண்டு பைல்களையும் எனது வீட்டிற்கு எடுத்து வந்தேன். தேவையான தகவல்கள் மட்டும் கொண்ட பொதுவான PROFILE ஒன்றை உருவாக்கிவிட்டு அதன்படி எல்லா வரன்களின் விவரத்தையும் கம்ப்யூட்டரில் ஏற்றத் தொடங்கினேன். டாக்டர்கள், சிவில் என்ஜீனியர்கள், சாப்ட்வேர் என்ஜீனியர்கள், அரசு வேலையில் இருப்பவர்கள், தனியார் நிறுவனத்தில் பணி புரிபவர்கள் என்று நிறையபேர். ஒவ்வொருவரும் தங்கள் பிள்ளைகளின் விவரத்தோடு , எது இருக்கிறதோ இல்லையோ கட்டு கட்டாக ஜாதகத்தைத்தான் முக்கியமாக இணைத்து இருந்தார்கள். அதிலும் சிலர் தங்கள் பிள்ளைகளின் ஜாதகத்தோடு இன்ன நட்சத்திரம், இன்ன ராசி உள்ளவைகளே பொருத்தம் என்று குறிப்பிட்டு இருந்தனர்.

வரன் விவரங்கள் அடங்கிய பைல்கள் என்னிடம் இருந்த படியினால், பேராசிரியர் தனது வீட்டிற்கு வருபவர்களை என்னிடம் அனுப்பி வைத்தார். வந்தவர்கள் பேராசிரியர் அவர்களிடம் கொடுக்க இருந்த வரன் விவரங்களை என்னிடம்  கொடுத்துவிட்டு , என்னிடம் கொடுக்கப்பட்ட பைல்களில் இருந்து தேவையான வரன்களின் குறிப்புகளை குறித்துக் கொள்வார்கள். பெரும்பாலும் எல்லோரும் வெளியில் எடுத்துப் போய் ஸிராக்ஸ் போட்டுக் கொள்வார்கள். வருபவர்கள் எல்லோரும் பிள்ளைகளின் பெற்றோர்தான். அவர்கள் பிறந்த தேதி, பிறந்த இடம், வயது, படிப்பு, வேலை, போட்டோ எல்லாம் பார்ப்பார்கள். பிடித்து இருக்கும். இருந்தாலும் கடைசியில் நட்சத்திரம், ராசியில் வந்து நின்று விடுவார்கள். பொருத்தம் இல்லை என்பார்கள். அதிலும் பெண் பிறந்த நட்சத்திரங்களில், குறிப்பிட்ட சில நட்சத்திரங்கள் (அவற்றை இங்கு குறிப்பிடத் தேவையில்லை) என்றால் கேட்கவே வேண்டாம்.

அனைத்து வரன்களையும் டைப் செய்து முடிந்ததும், ஒரு இலவச திருமண தகவல் வலைத்தளத்தை, அறக்கட்டளை ஒன்றினுக்கு உருவாக்கிவிட்டு, பைல்கள் இரண்டையும் பேராசிரியரிடம் ஒப்படைத்து விட்டேன். இனிமேல் அவர் பார்த்துக் கொள்வார்.

பொருத்தம் பார்க்கலாமா? வேண்டாமா?

திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள். பெண்பார்க்கும் விஷயத்தில் மாப்பிள்ளை வீட்டார் செருப்பு தேயத்தேய அலைந்து விசாரிக்க வேண்டும் என்று கூட அப்பொழுது சொல்வார்கள். முப்பது வயதுக்கு மேல் ஆகி விட்டாலே நட்சத்திரம், ராசி பொருத்தம் பார்க்கத் தேவையில்லை என்றும் சொல்கிறார்கள் திருமணப் பொருத்தம் பத்து என்றால் அதில் ஆறு பொருத்தமாக இருந்தால் கூட போதும் என்று சொல்பவர்களும் உண்டு.. ஆனாலும் எல்லோரும் 10/10  ஜாதகப் பொருத்தம் பார்க்கிறார்கள்.

 சுயம்வரம்என்ற பெயரில் திருமண தகவல் மையம் ஒன்று  வரன்தேடும் நிகழ்ச்சி ஒன்றை ஒரு கல்யாண மண்டபத்தில் நடத்தினார்கள். அங்கும் இதே நிலைமைதான். ஒவ்வொரு பெற்றோரும் மேடையில். தமது பிள்ளைகளின், பிறந்த தேதி, பிறந்த இடம், வயது, படிப்பு, வேலை என்று சொல்லிவிட்டு இன்ன நட்சத்திரம் உள்ள வரன்தான்  வேண்டும் என்று முடித்தார்கள். ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி ஒருவர் மேடையில் தனது டாக்டர் மகனோடு மேடைக்கு வந்தார். மகனின் விவரங்களை மட்டும் சொல்லிவிட்டு, ராசி, நட்சத்திரம் சொல்லவில்லை. உடனே கூட்டத்தில் இருந்தவர்கள்  பையனின் ராசி, நட்சத்திரம் சொல்லச் சொன்னார்கள். அவர் “ நான் எனக்கு மருமகளாக வருபவருக்கு ராசி, நட்சத்திரம் பார்ப்பதில்லை. ஆனாலும் பெண் வீட்டார் இதனைப் பார்த்துக் கொள்வதில் ஆட்சேபனை இல்லை. பையனை பிடித்து இருந்தால் தொடர்பு கொள்ளவும் “ என்று சொன்னார்.

எனவே தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்யும்போது நட்சத்திரம், ராசி பார்ப்பது என்பது அவரவர் நம்பிக்கையைப் பொறுத்தது.
  
உறவுக்குள் நடக்கும் திருமணம்:

அந்த காலத்தில் மாமன் மகனையும், மாமன் மகளையும், உற்வுக்காரர்களுக்குள் திருமணம் முடித்தபோது ரொம்பவும் நுணுக்கமாக பார்த்ததாகத் தெரியவில்லை.. என்னுடைய அப்பா அம்மா திருமணம் நட்சத்திரம் , ராசி பார்த்து நடக்கவில்லை. உறவுமுறைக் கல்யாணம்தான். என்னுடைய திருமணத்தில் நான் எதுவும் பார்க்கவில்லை. ஆனால் பெண் வீட்டில் பார்த்துக் கொளவதில் ஆட்சேபனை இல்லையென்று சொல்லி விட்டேன்.

இன்று  எத்தனையோ காதல் திருமணங்கள் நடக்கின்றன. குறிப்பாக நகர்ப்புறத்தில் நிறையவே நடக்கின்றன. நட்சத்திரம், ராசி பார்ப்பதில்லை. நன்றாகவே இருக்கிறார்கள். இங்கு மனப் பொருத்தம் மட்டுமே! ஒரு சில திருமணங்கள் தோல்வியில் இருக்கலாம். காதல்மணத்தைப் பற்றி காதலும் ஜாதியும் http://tthamizhelango.blogspot.com/2012/11/blog-post_23.html என்ற தலைப்பில் ஏற்கனவே பதிவு ஒன்றில் நான் எழுதியிருப்பதால் அதனைப் பற்றி விவரிக்கவில்லை.

நாள், நட்சத்திரம், ராசி பார்த்து இருவீட்டாரும், நடத்திய  திருமணங்களிலும் தோல்விகள் உண்டு. இன்றைக்கு குடும்பநல கோர்ட்டுகளில் அதிகம் இழுவையில் இருப்பவை எல்லாம் பார்த்து நடந்தவைதான். திருமணத்திற்கு முன் யோக்கியமாக இருக்கும் ஒருவர் திருமணத்திற்குப் பின் பிறழ்ந்து போனால் என்ன செய்ய முடியும். எல்லாம் பார்த்து தாலி கட்டப் போகும் சமயத்தில் நின்று போன திருமணங்களும் உண்டு.

ஒவ்வொரு சமூகத்திலும் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள் திருமண ரேஸில் நின்று கொண்டு இருக்கிறார்கள். இதில் நிறையபேர் முதிர் கன்னிகள் மற்றும் முதிர் கண்ணன்கள். ஜாடிக்கு ஏற்ற மூடி என்று, ஆணுக்கு பெண், பெண்ணுக்கு ஆண் என்று பார்த்தாலே போதும். நிறையபேருக்கு திருமணம் நடந்துவிடும். எந்த மணமாக இருந்தாலும் இருமனம் ஒத்தால் திருமணத்திற்குப் பின் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். இனிக்கிற வாழ்வே கசக்கும். கசக்கிற வாழ்வே இனிக்கும்.

மக்களைப் பெற்ற மகராசி “ என்ற படத்தில் “ ஒன்றுசேர்ந்த அன்பு மாறுமா? “ என்று தொடங்கும் பாடலை வீடியோவில் கண்டு கேட்டு மகிழ கீழே க்ளிக் செய்யவும். ( பாடல்: கவிஞர் கா மு ஷெரீப்  பாடியவர்கள்: P B ஸ்ரீனிவாசன் & சரோஜினி, இசை: கே வி மகாதேவன் )


 
( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )


 



60 comments:

  1. வணக்கம் ஐயா,

    அருமையானதோர் அலசல். நல்ல பகிர்வு.

    இதில் எனக்கு நிறைய சொந்த அனுபவங்களும், கருத்துக்களும் மனதில் உள்ளன. ஆனால் இப்போது என்னால் எல்லாவற்றையும் இங்கு எழுத முடியாத நிலையில் நான் உள்ளேன்.

    பகிர்வுக்குப்பாராட்டுக்கள், நன்றிகள்.

    ReplyDelete
  2. பொருத்தம் பார்தும் பொருந்தா மனமும் உண்டு பார்காதோர் மகிழ்ச்சியாய் வாழ்வதுமுண்டு

    ReplyDelete
  3. இறைவனிடம் நம்பிக்கை உள்ளவர்கள், ஒருவருடைய வாழ்க்கையை மாற்றி எழுதமுடியாது என்று நம்பவேண்டும். அப்படிப்பட்டவர்கள் ஜோதிடம் பார்ப்பது என்பது தேவையில்லை. ஜோதிடத்தால் மாற்றமுடியும் என்று நம்புபவர்கள் இறைவனையும் நம்புவதில்லை என்றாகிவிடுகிறது. நல்ல கட்டுரை. நன்றி.

    ReplyDelete
  4. இன்றைய கால் நிலைமைக்கு ஏற்ற கட்டுரை. எள்றும் இப்பொழுது சதாம் பார்த்தே தீருவது என்கிற முடிவில் இருக்கிறார்கள். எனக்குத்ட் ஹீரிந்த ஒரு பையனின் அம்மா " மூன்று ஜோசியர்களிடம் காட்ட வேண்டும் . மென்று பேரும் ஜாதகம் ஒத்துப் போட்டு என்று சொன்னால் மட்டுமே என் பையனிற்கு அந்தப் பெண்ணை மணமுடிப்பேன் " என்று சொல்லி நான்கு வ்ர்டங்கலாக பெண் பார்த்து வருகிறார். முப்பந்தைந்து வயதை எட்டிக் கொண்டிருக்கும் அந்தப் பையனைப் பார்க்க பாவமாய் இருக்கிறது.
    சமூகம் மாறினால் நல்லது தான் .

    ReplyDelete
  5. இன்றைய சூழலுக்கு அவசியமான கட்டுரை
    ஆழ்மாக அலசியதோடு மட்டுமல்லாது ஒரு
    திட்டவட்டமான முடிவுடன் பதிவை முடித்திருந்தது
    மிகவும் பிடித்தது

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்களுள்
    இந்தப் பாடலும் ஒன்று
    கேட்டு மகிழ்ந்தேன்
    பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. ஜாதகம் பார்ப்பது அவரவர்கள் விருப்பம். ஆனால் அதைவிட மருத்துவ பொருத்தம் பார்ப்பது முக்கியம் என நினைக்கிறேன். குறிப்பாக இருவருடைய இரத்தத்தின் Group
    ஒன்றுக்கொன்று இசைவுடையதா (Compatible) எனப் பார்ப்பது நலம்.
    விரிவான பதிவிற்கு நன்றி!

    ReplyDelete
  7. மனப் பொருத்தம் ஒன்றே போதும்... இன்றைய நிலையில் திரு. வே. நடனசபாபதி அவர்கள் சொன்னதும் முக்கியம்...

    மிகவும் அருமையான பாடல்... + விளக்கங்களுக்கும் நன்றி...

    ReplyDelete
  8. What about money i.e. dowry? Here a lot of complications arise.

    Manapporuththam poothum! OK.

    How to find that in arranged marriages where the boy and the girl do not know each other?

    Only in a love marriage, they know each other.

    Apart from these unanswered questions, I appreciate your general outlook of doing away with vexatious hurdles like Stars etc.

    ReplyDelete
  9. நீங்க கொடுத்த விளக்கம் நன்றாயிருந்தது.

    ReplyDelete
  10. நெருக்கமான தொடர்பு இல்லாத உறவு முக்கியம். குறிப்பிட்ட காலத்திற்குள்ளாவது தங்களை புரிந்து கொண்டு வாழ மனம் சார்ந்த பொருத்தங்கள் மிக மிக முக்கியம். மற்றது எல்லாமே அப்புறம் தான்.

    ReplyDelete
  11. பதிவு அருமை!

    நீங்கள் சொல்வது போல ஜாதகங்கள் பார்க்காமல் நடந்த திருமணங்களில் மணமக்கள் சிறந்து வாழத்தான் செய்கிறார்கள். ஜாதகம், பொருத்தம் பல பார்த்து நடந்த திருமண‌ங்களில் திருமணத்தன்றே பிரச்சினைகள் ஏற்படுவ்தும் திருமண வாழ்க்கை கசந்து போவதும் நடக்கத்தான் செய்கிறது. ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது?

    ஜாதக நம்பிக்கை இல்லாத நாங்கள்,என் மகனுக்கு திருமனாம் செய்வதற்குள் நொந்து நூலாகி விட்டோம்! ஒரு தகவல் நிலைய உரிமையாளர் தனியே அழைத்தே சொன்னார், " அழகு, படிப்பு, செல்வம் எல்லாமிருந்தும் நீங்கள் ஜாதகத்தை இணைக்காததால் பெண் வீட்டார் உங்கள் ம்கனைப்பற்றிய விபரங்களை எடுத்துப்பார்ப்பதேயில்லை' என்று!!

    சமுதாய மாற்ற‌ங்களும் ஒருமித்த முன்னேற்றங்களும் பல விதங்களில் ஏற்பட்டிருக்கிறது, இந்த திருமண‌ விஷயங்களைத்தவிர‌!!

    ReplyDelete
  12. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    // வணக்கம் ஐயா,அருமையானதோர் அலசல். நல்ல பகிர்வு.
    இதில் எனக்கு நிறைய சொந்த அனுபவங்களும், கருத்துக்களும் மனதில் உள்ளன. ஆனால் இப்போது என்னால் எல்லாவற்றையும் இங்கு எழுத முடியாத நிலையில் நான் உள்ளேன். //

    அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம். எனக்கும் இந்த விஷயத்தில் நிறைய சொந்த அனுபவங்களும், கருத்துக்களும் உள்ளன. ஆனாலும் சுருக்கமாகவே சொன்னேன்! தாங்கள் கூட ஒரு பதிவினில் இதுபற்றி சொல்லி இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.

    // பகிர்வுக்குப்பாராட்டுக்கள், நன்றிகள். //

    தங்கள் அன்பான கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  13. மறுமொழி > கவியாழி கண்ணதாசன் said...

    // பொருத்தம் பார்தும் பொருந்தா மனமும் உண்டு பார்காதோர் மகிழ்ச்சியாய் வாழ்வதுமுண்டு //

    கவிஞரின் கருத்துரைக்கு நன்றி! நீங்கள் சொல்வது சரியே! இரண்டு பக்கமும் இரண்டிற்கும் (நல்லதுக்கும், கெட்டதற்கும்) உதாரணம் உண்டு.

    ReplyDelete
  14. மறுமொழி > Packirisamy N said...

    // இறைவனிடம் நம்பிக்கை உள்ளவர்கள், ஒருவருடைய வாழ்க்கையை மாற்றி எழுதமுடியாது என்று நம்பவேண்டும். அப்படிப்பட்டவர்கள் ஜோதிடம் பார்ப்பது என்பது தேவையில்லை. ஜோதிடத்தால் மாற்றமுடியும் என்று நம்புபவர்கள் இறைவனையும் நம்புவதில்லை என்றாகிவிடுகிறது. நல்ல கட்டுரை. நன்றி. //

    என். பக்கிரிசாமி அவர்களுக்கு வணக்கம்! நான் இறைநம்பிக்கை உள்ளவன்தான். ஆனாலும் எனது வாழ்க்க்கையில் நாள், நட்சத்திரம், ராசி போன்றவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.

    நாள் என் செய்யும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த
    கோள் என் செய்யும் கொடும் கூற்று என்செயும் குமரேசன் இரு
    தாளும், சிலம்பும், சதங்கையும், தண்டையும் சண்முகமும்
    தோளும், கடம்பும், எனக்கு முன்னே வந்து தோன்றிடினே.
    - குமரகுருபரர் (கந்தர் அலங்காரம்)

    இருந்தாலும் எனது மகள் திருமணம் போன்ற விஷயங்களில் சிலவற்றை விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று.

    உங்கள் வலைப்பதிவில் நான் படிக்காமல் விட்டுப்போன உளவியல் கட்டுரைகளை படிக்க வேண்டும்.

    ReplyDelete
  15. மறுமொழி > rajalakshmi paramasivam said...

    // எனக்குத் தெரிந்த ஒரு பையனின் அம்மா " மூன்று ஜோசியர்களிடம் காட்ட வேண்டும் .மூன்று பேரும் ஜாதகம் ஒத்துப் போகிறது என்று சொன்னால் மட்டுமே என் பையனிற்கு அந்தப் பெண்ணை மணமுடிப்பேன் " என்று சொல்லி நான்கு வ்ருடங்களாக பெண் பார்த்து வருகிறார். முப்பந்தைந்து வயதை எட்டிக் கொண்டிருக்கும் அந்தப் பையனைப் பார்க்க பாவமாய் இருக்கிறது. //

    சகோதரி ராஜலஷ்மி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. ஆண் – பெண் இருவருக்கும் 30 வயதிற்கு மேல் நட்சத்திரம், ராசி என்று திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டியதில்லை என்று சொல்கிறார்கள். உங்களுக்குத் தெரிந்த அந்த அம்மாவிடம் சொல்லுஙகள்.

    // சமூகம் மாறினால் நல்லது தான் //

    நமது சமூகம் முந்தைக்கு இப்போது கொஞசம் கொஞ்சமாக மாறி வருகிறது. ( உதாரணம்: குழந்தைத் திருமணம் ஒழிப்பு, விதவைத் திருமணம், ஜாதி மறுப்பு திருமணம், பல குடும்பங்களில் பையன்களே வரதட்சணையை எதிர்ப்பது ... போன்றவை)

    ReplyDelete

  16. மறுமொழி > narayanandorai said...

    // very nice article. It admires me //

    சகோதரரின் பாராட்டிற்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  17. ஜாதகம் பார்க்காமல் மனம் ஒத்துப் போய் திருமணம் செய்தால் பரவாயில்லை, ஜாதகம் பார்க்க என்று போன பின்னர் பின்வாங்கக் கூடாது. முன்னர் காலத்தில் பெற்றோர்களாகப் பார்த்து செய்து வைத்த திருமணங்கள் இன்றைய காதல் திருமணங்களை விட சிறப்பாக இருந்தன என்பது எனது தாழ்மையான கருத்து. கலப்புத் திருமணங்களை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலைக்கு இன்னமும் நம் சமூகம் வரவில்லை என்றே நினைக்கிறேன், இது அனுபவத்தில் கண்டது, மற்றபடி கலப்புத் திருமணத்திற்கு நாம் எதிரி அல்ல!!

    ஜாதகப் பொருத்தம் இருப்பதாலேயே திருமணம் வெற்றியடையும் என நிச்சயமில்லை, இறுதியில் வாழ்க்கையை தீர்மானிப்பது விதி, அது சரியில்லாதபோது கஷ்டப் படவேண்டிய இரண்டு பேர் ஜாதகம் பொருந்தி வரும், கல்யாணம் பண்ணி அனுபவிக்க வேண்டியதுதான்.

    ReplyDelete
  18. ஜாதகத்தின் அத்தனைப் பொருத்தங்களும் இருந்தும், மனப் பொருத்தம் இல்லாவிட்டால், வாழ்வு என்னாவது.
    மனமே வாழ்வின் வெற்றியின் மந்திரம்
    நன்றி ஐயா

    ReplyDelete
  19. 'ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?' கருத்தாழமும் கனிவான இசையும் கொண்ட அந்தப் பாடலை மறக்க முடியுமா? நம்பியார் எம் என் ராஜம் இருவர் நடிப்பும் அந்த இனிய பாடலுக்கு மிக பொருத்தமாக இருக்கும். கே.வி. மகாதேவனின் டாப் 50 இல் ஒன்று!

    ReplyDelete
  20. மறுமொழி > Ramani S said... ( 1 , 2 )

    // இன்றைய சூழலுக்கு அவசியமான கட்டுரை
    ஆழ்மாக அலசியதோடு மட்டுமல்லாது ஒரு திட்ட வட்டமான முடிவுடன் பதிவை முடித்திருந்தது மிகவும் பிடித்தது //

    அந்த பேராசிரியரிடம இருக்கும் பைல்களில் குறிப்பிட்டு இருக்கும் வரன்களுக்குள்ளேயே அவர்களுக்கு தேவையான வரன்கள் இருந்தும் தேடிக் கொண்டே இருக்கிறார்கள்.

    // எனக்கு மிகவும் பிடித்த பாடல்களுள் இந்தப் பாடலும் ஒன்று
    கேட்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நல்வாழ்த்துக்கள் //

    எனக்கும் பழைய பாடல்களில் பிடித்ததில் இதுவும் ஒன்று. முன்பு இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலிபரப்புவார்கள்.

    கவிஞர் ரமணி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  21. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    // ஜாதகம் பார்ப்பது அவரவர்கள் விருப்பம். ஆனால் அதைவிட மருத்துவ பொருத்தம் பார்ப்பது முக்கியம் என நினைக்கிறேன். குறிப்பாக இருவருடைய இரத்தத்தின் Group ஒன்றுக்கொன்று இசைவுடையதா (Compatible) எனப் பார்ப்பது நலம். விரிவான பதிவிற்கு நன்றி! //

    இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற அன்பான முக்கியமான கருத்துரை சொன்ன அய்யா வே நடனசபாபதி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  22. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    // மனப் பொருத்தம் ஒன்றே போதும்... இன்றைய நிலையில் திரு. வே. நடனசபாபதி அவர்கள் சொன்னதும் முக்கியம்... மிகவும் அருமையான பாடல்... + விளக்கங்களுக்கும் நன்றி... //

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  23. எந்த மணமாக இருந்தாலும் இருமனம் ஒத்தால் திருமணத்திற்குப் பின் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.

    ஆக்கபூர்வமான பகிர்வுகள்...பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  24. காதலர்களாக இருந்தாலும் மனப்பொருத்தமின்மையை திருமணத்திற்குப் பிறகே உணர்வார்கள். அதன் பின் வாழ்க்கை வெற்றியாக அமைவது குறைந்த பட்சம் யாராவது ஒருவரின் விட்டுக் கொடுத்தலில்தான் அமைகிறது. இது ஜாதகம் பார்த்து திருமணம் செய்பவருக்கும் பொருந்தும். பெண் பார்க்கும்போது அவ்வளவாக பிடிக்காமல போனாலும் பின்னாளில் அவற்றை மறந்து மகிழ்ச்சியோடு வாழ்பவர் பலர்.
    முதலில் அத்தனை பொருத்தமும் அமைய வேண்டும் என்று ஜாதகம் பார்ப்பவர்கள் நீண்ட நாட்கள் தேடியும் அப்படி கிடைக்காத பட்சத்தில் வேறு வழியின்றி பொருத்தங்களில் சில வற்றை விட்டுக் கொடுக்க தயங்குவதில்லை.
    நல்ல அலசல் ஐயா!

    ReplyDelete
  25. எங்கள் இருவரின் ஜாதகத்தை இப்போது பார்க்கும் ஜோதிடர்கள் ,இது பொருந்தா ஜாதகமாச்சே என்கிறார்கள் .இரு குழந்தைகளுடன் நாங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம் !
    குறிப்பாக நான் எப்போதும் சிரிப்புடனே உள்ளேன் ,அடுத்தவரை சிரிக்க வைக்கிறேனா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும் !
    +1

    ReplyDelete
  26. [[சகோதரி ராஜலஷ்மி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. ஆண் – பெண் இருவருக்கும் 30 வயதிற்கு மேல் நட்சத்திரம், ராசி என்று திருமணப் பொருத்தம் பார்க்க வேண்டியதில்லை என்று சொல்கிறார்கள். உங்களுக்குத் தெரிந்த அந்த அம்மாவிடம் சொல்லுஙகள்.]]

    இது மாதிரி நிறைய இடைசெருகல்கள் உள்ளன. முதிர்கன்ன்களும் கன்னிகளும் அதிகமா போனால், அப்புறம் தொழில் எப்படி? சுருக்கு கயிரை தளரவிடுவது வியாபாபார தந்திரம். பரிகாரமும் அப்படித்தான்---இந்த தோஷத்துக்கு இவ்வளவு கோவில் வெட்டு..

    முப்பது வருடம் முன்பு நீங்க சொன்ன விதி இல்லை; இந்த விதியை சொன்னது யார். ஏதாவது உண்டா?

    அன்றைய கல்யாணம் உடையாமல் இருந்தால் மனைவி அடிமை; இன்று அம்மிக்கல்லி எடுத்து தலையில் போடுகிறார்கள். கள்ளத் தொடார்பு மனைவிக்கு இருக்கு என்று கண்டித்த கணவன் இரவில் நிம்மதியாக தூங்க முடியுமா? கடைசி பத்தி தாசுக்கு..

    ReplyDelete
  27. மறுமொழி > Anonymous said... ( 1 )

    அன்புள்ள Anonymous அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // What about money i.e. dowry? Here a lot of complications arise. //

    வலைப் பதிவில் ஒருபக்கக் கட்டுரையாக எழுதுவதால் நட்சத்திரம், ராசி பார்ப்பது மட்டுமே இங்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மற்ற விஷயங்களை அலசவில்லை. dowry எனப்படும் வரதட்சணை பற்றி ஒரு தனி பதிவே எழுதலாம்.

    // Manapporuththam poothum! OK. How to find that in arranged marriages where the boy and the girl do not know each other? //

    பெற்றவர்கள் பார்த்து செய்யும் திருமணத்தில் மனப்பொருத்தம் என்பது -
    மாப்பிள்ளை பெண்பார்க்கும் சமயத்தில் பெண்ணைப் பெற்றவர்கள் , பெண்ணிடம் தனியே பையன் பிடித்து இருக்கிறதா என்று கேட்டுக் கொள்வார்கள். அதேபோல பையனிடம், பையனைப் பெற்றவர்கள் பெண் பிடித்து இருக்கிறதா என்று கேட்டுக் கொள்வார்கள். இரு வீட்டாருமே பெண்ணிடமும், பையனிடமும் நேரில் கேட்டுக் கொளவதும் ஒரு சம்பிரதாயம். எனவே ஒவ்வொரு பெற்றோரும் இதனைச் செய்ய வேண்டியது அவசியம். நான் சொன்னால் கேட்டுக் கொள்ள வேண்டும் எனும்போதுதான் சிக்கல்.

    // Only in a love marriage, they know each other. Apart from these unanswered questions, I appreciate your general outlook of doing away with vexatious hurdles like Stars etc. //

    எனது பொதுவான கருத்தைச் சொன்னேன். கீழே சகோதரர் ஜெயதேவ் தாஸ் அவர்களுக்கு சொன்ன எனது மறுமொழியையும் அவசியம் காணவும்.

    ReplyDelete
  28. மறுமொழி > வேகநரி said...

    // நீங்க கொடுத்த விளக்கம் நன்றாயிருந்தது. //

    வேகநரி அவர்களின் வேகமான கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  29. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

    // நெருக்கமான தொடர்பு இல்லாத உறவு முக்கியம். குறிப்பிட்ட காலத்திற்குள்ளாவது தங்களை புரிந்து கொண்டு வாழ மனம் சார்ந்த பொருத்தங்கள் மிக மிக முக்கியம். மற்றது எல்லாமே அப்புறம் தான். //

    சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  30. மறுமொழி > Jayadev Das said...

    // ஜாதகம் பார்க்காமல் மனம் ஒத்துப் போய் திருமணம் செய்தால் பரவாயில்லை, ஜாதகம் பார்க்க என்று போன பின்னர் பின்வாங்கக் கூடாது. //

    நான் திருமண பொருத்தத்தில் ஜாதகம், நட்சத்திரம், ராசி முதலானவற்றைப் பார்ப்பதை குறை சொல்லவில்லை. இது அவரவர் மதம், சமூகம் சார்ந்த நம்பிக்கை. வயது, படிப்பு, வேலை என்று எல்லா பொருத்தங்களும் இருந்தும், இந்த நட்சத்திரம், ராசியில் வந்து நின்று விடுகிறார்களே என்ற ஆதங்கம்தான்.

    எல்லாவற்றிற்கும் ஜோதிடத்தில் பரிகாரம் உண்டு. ஜோசியர்கள் திருமணப் பொருத்தத்தில் சங்கடங்களை மட்டுமே சொல்கிறார்கள். பரிகாரங்களைச் சொல்வதில்லை. உதாரணத்திற்கு ஒருவருக்கு ( சொந்தத்தை விட்டு சொத்து போகக் கூடாது என்பதால் ) தனது சொந்தக்கார பெண்ணையே திருமணம் செய்ய விருப்பம். ஜாதகப்படி அவருக்கு தாரம் இரண்டு. அவர் அந்த பெண்ணுக்கு தாலி கட்டுவதற்கு முன் ( திருமணத்திற்கு சிலநாள் முன்பு) ஒரு வாழைமரத்தை பெண்ணாக நினைத்து தாலி கட்டச் செய்தார்கள். இது ஒரு பரிகாரம்.

    // முன்னர் காலத்தில் பெற்றோர்களாகப் பார்த்து செய்து வைத்த திருமணங்கள் இன்றைய காதல் திருமணங்களை விட சிறப்பாக இருந்தன என்பது எனது தாழ்மையான கருத்து. கலப்புத் திருமணங்களை ஏற்றுக்கொள்ளும் சூழ்நிலைக்கு இன்னமும் நம் சமூகம் வரவில்லை என்றே நினைக்கிறேன், இது அனுபவத்தில் கண்டது, மற்றபடி கலப்புத் திருமணத்திற்கு நாம் எதிரி அல்ல!! //

    எல்லா திருமணங்களும் அந்தந்த காலச் சூழலுக்கு ஏற்ப ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. அல்லது மறுக்கப் படுகின்றன.

    // ஜாதகப் பொருத்தம் இருப்பதாலேயே திருமணம் வெற்றியடையும் என நிச்சயமில்லை, இறுதியில் வாழ்க்கையை தீர்மானிப்பது விதி, அது சரியில்லாதபோது கஷ்டப் படவேண்டிய இரண்டு பேர் ஜாதகம் பொருந்தி வரும், கல்யாணம் பண்ணி அனுபவிக்க வேண்டியதுதான். //

    வள்ளுவரே விதியின் பிடியிலிருந்து தப்பவில்லை. ஊழியல் என்றே பேசுகிறார்.

    வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
    தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது – குறள் 377

    ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
    சூழினுந் தான்முந் துறும் – குறள் 380

    ReplyDelete
  31. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... ( 1, 2)

    // ஜாதகத்தின் அத்தனைப் பொருத்தங்களும் இருந்தும், மனப் பொருத்தம் இல்லாவிட்டால், வாழ்வு என்னாவது.
    மனமே வாழ்வின் வெற்றியின் மந்திரம்
    நன்றி ஐயா //

    அன்பு சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி! ஜாதகத்தில் சாதகமும் உண்டு. பாதகமும் உண்டு.

    ReplyDelete
  32. மறுமொழி > கே. பி. ஜனா... said...

    // 'ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?' கருத்தாழமும் கனிவான இசையும் கொண்ட அந்தப் பாடலை மறக்க முடியுமா? நம்பியார் எம் என் ராஜம் இருவர் நடிப்பும் அந்த இனிய பாடலுக்கு மிக பொருத்தமாக இருக்கும். கே.வி. மகாதேவனின் டாப் 50 இல் ஒன்று! //

    சிறுகதை எழுத்தாளர் கே பி ஜனா அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  33. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

    சகோதரி இராஜராஜேஸ்வரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  34. மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

    சகோதரர் மூங்கில் காற்று டி என் முரளிதரன் அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி!

    // ஜாதகம் பார்ப்பவர்கள் நீண்ட நாட்கள் தேடியும் அப்படி கிடைக்காத பட்சத்தில் வேறு வழியின்றி பொருத்தங்களில் சில வற்றை விட்டுக் கொடுக்க தயங்குவதில்லை.
    நல்ல அலசல் ஐயா! //

    நீங்கள் மேலே சொல்லும் விஷயம்தான் பெரும்பாலும் நடக்கிறது. முதலில் பெண்ணின் ஜாதகம் பொருந்தவில்லை என்று சொன்னவர்கள், பின்னர் அதே பெண்ணைக் கேட்டு அலைந்த கதைகளும் உண்டு.

    ReplyDelete
  35. மறுமொழி > Bagawanjee KA said...

    // எங்கள் இருவரின் ஜாதகத்தை இப்போது பார்க்கும் ஜோதிடர்கள் ,இது பொருந்தா ஜாதகமாச்சே என்கிறார்கள் .இரு குழந்தைகளுடன் நாங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம் ! //

    பகவன்ஜீ கே ஏ அவர்களுக்கு நன்றி! காலத்தை வென்றவன் நீ! காவியமானவன் நீ! – என்று பாடத் தோன்றுகிறது.

    // குறிப்பாக நான் எப்போதும் சிரிப்புடனே உள்ளேன் ,அடுத்தவரை சிரிக்க வைக்கிறேனா என்பதை நீங்கள்தான் சொல்லவேண்டும் ! +1 //

    குட்டி குட்டி பதிவுகளாக நல்ல நகைச்சுவையாகவே எழுதுகிறீர்கள். தொடர்ந்து என்னால் படிக்கத்தான் முடிகிறது. கருத்துரை தொடர்ந்து எழுத முடியாமல் போய் விடுகிறது. நன்றி!

    ReplyDelete
  36. மறுமொழி > நம்பள்கி said...

    நம்பள்கி அவர்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி!
    // முப்பது வருடம் முன்பு நீங்க சொன்ன விதி இல்லை; இந்த விதியை சொன்னது யார். ஏதாவது உண்டா? //
    நம்பள்கி நல்ல கேள்வி கேட்டீர்கள். ” முப்பது வயதுக்கு மேல் ஆகி விட்டாலே நட்சத்திரம், ராசி பொருத்தம் பார்க்கத் தேவையில்லை என்றும் சொல்கிறார்கள்” என்பது விதி இல்லை. கேள்விப்பட்டதுதான். நான் ஜோதிடத்தில் பாண்டித்யம் பெற்றவன் இல்லை. எல்லாம் கேள்வி ஞானம்தான். இருந்தாலும் உங்களுக்கு மறுமொழி கொடுப்பதற்காக, கூகிளில் தேடியபோது கிடைத்தது ஒரு பதிவு.

    தலைப்பு : பிராமணர்களும் தாமதத் திருமணங்களும்
    http://www.brahmintoday.org/magazine/2010_issues/bt77-0702_brahmins.php
    அதில் சொல்லப்பட்ட சில கருத்துக்கள். (சென்று பார்க்கவும்.)

    // ஏதோ சில காரணங்களுக்காக எப்போதோ நம்மிடம் வந்து ஒட்டிக்கொண்ட இந்த நடைமுறை, ஜாதகப் பொருத்தம் ஆகும். அரேபியக் கூடாரத்தில் மூக்கை நுழைத்துப் பின்பு அதை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்ட ஒட்டகமாக ஜாதகக் கட்டங்கள் நம்மைப் பாடுபடுத்துகின்றன. எல்லாமே வந்தும் இன்னும் வராதிருக்கும் குரு திசையால் தள்ளியே நிற்கும் நமது திருமணங்கள் கொஞ்சம் விட்டுக் கொடுத்தால் நல்ல பயன்கள் விளையுமே. முப்பது வயதிற்கு மேல் ஜாதகமே பார்க்கத் தேவை இல்லை என்ற சாஸ்திர பிராமாணம், 20 ஜோசியர்கள் ஒரு ஜாதகத்தைப் பார்த்தால் 30 வகை வியாக்கியானங்கள், தோண்டி தோண்டிப் பார்த்தாலும் கடைசியில் ஒரு துப்பும் கிடைக்காத நீண்ட பெரும் ஜோதிட முயற்சிகள் ஆகியவை எல்லாம் தாமதத் திருமணங்களைத் தாங்கிப் பிடிக்கும் தாண்டவராயன்களாக நம் சமூகத்தில் உளா வருகின்றனர். //

    ReplyDelete
  37. சகோதரி மனோ சாமிநாதன் அவர்களின் பாராட்டிற்கு நன்றி!

    // நீங்கள் சொல்வது போல ஜாதகங்கள் பார்க்காமல் நடந்த திருமணங்களில் மணமக்கள் சிறந்து வாழத்தான் செய்கிறார்கள். ஜாதகம், பொருத்தம் பல பார்த்து நடந்த திருமண‌ங்களில் திருமணத்தன்றே பிரச்சினைகள் ஏற்படுவ்தும் திருமண வாழ்க்கை கசந்து போவதும் நடக்கத்தான் செய்கிறது. ஆனால் பூனைக்கு யார் மணி கட்டுவது? //

    எல்லோருக்கும் நன்றாகத் தெரிகிறது. இருந்தாலும், பிள்ளைகள் மேல் உள்ள அன்பின் காரணமாக, திருமணத்தில் நிலவும் ஒரு நம்பிக்கையை விட்டு விட பயப்படுகிறார்கள்.

    // ஜாதக நம்பிக்கை இல்லாத நாங்கள்,என் மகனுக்கு திருமனாம் செய்வதற்குள் நொந்து நூலாகி விட்டோம்! ஒரு தகவல் நிலைய உரிமையாளர் தனியே அழைத்தே சொன்னார், " அழகு, படிப்பு, செல்வம் எல்லாமிருந்தும் நீங்கள் ஜாதகத்தை இணைக்காததால் பெண் வீட்டார் உங்கள் ம்கனைப்பற்றிய விபரங்களை எடுத்துப்பார்ப்பதேயில்லை' என்று!! //

    தங்கள் அனுபவ பகிர்விற்கு நன்றி! வெளியில் சீர்திருத்தம் பேசுபவர்களும் வீட்டில் கேட்கிறார்கள், சொந்தக்காரர்கள் கேட்கிறார்கள் என்று மழுப்பல் செய்கின்றனர்.

    // சமுதாய மாற்ற‌ங்களும் ஒருமித்த முன்னேற்றங்களும் பல விதங்களில் ஏற்பட்டிருக்கிறது, இந்த திருமண‌ விஷயங்களைத் தவிர‌!! //

    நானும் உங்கள் கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.





    ReplyDelete
  38. சரியான அலசல்.. அவசியமான பகிர்வு... நன்றி..

    ReplyDelete
  39. நல்ல அலசல்......

    எந்த தளத்தில் திருமணத்திற்கு காத்திருக்கும் ஆண்/பெண் விவரங்களை சேகரித்து பகிர்ந்து கொண்டீர்கள் என்று சொல்லி இருக்கலாமே.....

    ReplyDelete
  40. மறுமொழி > ADHI VENKAT said...

    // சரியான அலசல்.. அவசியமான பகிர்வு... நன்றி.. //

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  41. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    // நல்ல அலசல்...... //

    சகோதரருக்கு நன்றி!

    // எந்த தளத்தில் திருமணத்திற்கு காத்திருக்கும் ஆண்/பெண் விவரங்களை சேகரித்து பகிர்ந்து கொண்டீர்கள் என்று சொல்லி இருக்கலாமே..... //

    அந்த பேராசிரியரிடம் இருந்த ஆண்/பெண் விவரங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவை என்பதால் அதுபற்றி இங்கு தெரிவிக்கவில்லை.

    ReplyDelete
  42. என்னதான் பத்துக்குப் பத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்தாலும் மனப் பொருத்தம் இல்லையெனில் மணவாழ்க்கை நரகமே... எனக்குத் தெரிந்து நிறைய பேர் எந்தப் பொருத்தமும் பாராமல் திருமணம் செய்து நன்றாகத்தான் இருக்கிறார்கள். நல்ல விரிவான அலசல்களும் பின்னூட்டங்களும்....

    ReplyDelete
  43. ஐயா வணக்கம்.சில நாட்களாக வலைத் தளத்துக்கே வர முடியாத சூழ்நிலை. உங்கள் பதிவின் தலைப்பு ஈர்த்தது. நானும் பல மாதங்களுக்கு முன் எழுதி இருக்கிறேன். என் தனிப்பட்ட கருத்துக்களோடு வலை மக்கள் ஒத்துப்போல மாட்டார்கள்.இருந்தாலும் நடைமுறையோடு நம் கருத்தையும் சேர்த்துக் கொடுப்பதே முறை என்று கருதி ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். gmbat1649.blogspot.in/2012/06/blog-post_23.html

    ReplyDelete
  44. மறுமொழி > ஸ்கூல் பையன் said...

    // என்னதான் பத்துக்குப் பத்து பொருத்தம் பார்த்து திருமணம் செய்தாலும் மனப் பொருத்தம் இல்லையெனில் மணவாழ்க்கை நரகமே... //

    சந்தர்ப்பம் அமையும்போது, ” மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்று தொடங்கும் பாடலை கேட்டுப் பார்க்கவும்.

    //எனக்குத் தெரிந்து நிறைய பேர் எந்தப் பொருத்தமும் பாராமல் திருமணம் செய்து நன்றாகத்தான் இருக்கிறார்கள். நல்ல விரிவான அலசல்களும் பின்னூட்டங்களும்.... //

    சகோதரர் ஸ்கூல் பையன் அவர்களின் அன்பான கருத்துரைக்கும், பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  45. மறுமொழி > G.M Balasubramaniam said...

    // ஐயா வணக்கம்.சில நாட்களாக வலைத் தளத்துக்கே வர முடியாத சூழ்நிலை. உங்கள் பதிவின் தலைப்பு ஈர்த்தது. நானும் பல மாதங்களுக்கு முன் எழுதி இருக்கிறேன். //

    அய்யா GMB அவர்களுக்கு வணக்கம்! வலையுலகில் சில நாட்களாக உங்கள் இல்லை. இன்னும் கொஞ்ச நாட்கள் இருந்து பார்த்துவிட்டு, உங்களோடு தொடர்பு கொள்ளலாம் என்று இருந்தேன்.

    // என் தனிப்பட்ட கருத்துக்களோடு வலை மக்கள் ஒத்துப்போல மாட்டார்கள்.இருந்தாலும் நடைமுறையோடு நம் கருத்தையும் சேர்த்துக் கொடுப்பதே முறை என்று கருதி ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். gmbat1649.blogspot.in/2012/06/blog-post_23.html //

    எனக்கும் உங்கள் அனுபவம் உண்டு. இதனால் சில கட்டுரைகளுக்கு மாற்று சிந்தனைக் கட்டுரை என்றே குறிப்பிட்டதும் உண்டு.
    திருமணங்கள்...... http://gmbat1649.blogspot.in/2012/06/blog-post_23.html என்ற தலைப்பினில் தாங்கள் எழுதிய வலைப்பதிவை ஏற்கனவே படித்து இருக்கிறேன். ( மீள் பதிவாகவும் எழுதியதாக நினைவு) இப்பொழுது மீண்டும் படித்தேன். உங்களது கட்டுரையில் எனக்கு பிடித்த சில கருத்துக்கள் .... ....

    // என்னைப் பொறுத்தவரை பொருத்தங்கள் பார்ப்பது அவசியம் ஆனால் ஜாதகம் மூலம் பார்ப்பது என்பது எனக்கு உடன்பாடில்லை. என் திருமணம் ஜாதகம் பார்த்து நடந்ததல்ல. என் மக்களுக்கும் நான் ஜாதகம் பார்க்கவில்லை.எல்லாம் விசாரித்து அறிந்தபின் வரன் கேட்டு வந்தவர்கள் ஜாதகம் பார்க்க வேண்டும் என்றனர். அவர்களுக்கு அது திருப்தி தரும் என்றால் எனக்கு ஆட்சேபணை இல்லை என்று கூறி என் மக்களது பிறந்த விவரங்கள் கொடுத்தோம்.மூத்தவனுக்கு முதலிலேயே ஜாதகம் பொருந்த எந்த தடையும் இல்லாமல் திருமணம் நடந்தது. இளையவனுக்கு ஜாதகம் பார்க்கச் சென்ற பெண்ணின் பெற்றோர் முதலில் பொறுந்தவில்லை என்று கூறிச் சென்றவர் வேறு ஒரு சோதிடரிடம் காட்டி பொருத்தம் இருப்பதாகக் கூறி திரும்பி வந்தனர். நாங்கள் ஜாதகம் பற்றி கவலையே படாததால் திருமணம் இனிதே நிகழ்ந்தது. மூத்தவன் மணம் முடிந்து இருபது ஆண்டுகளும் இளையவன் திருமணம் முடிந்து பதினேழு ஆண்டுகளும் ஓடிவிட்டன. அவர்களது இல்லற வாழ்க்கை இனிதாகவே இருக்கிறது.//



    ReplyDelete
  46. வணக்கம் ஐயா. இன்றைய 21.01.2014 வலைச்சரத்தில் தங்களின் அருமையான படைப்பு ஒன்று அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்ப்பட்டுள்ளது ஐயா. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஐயா. அதற்கு என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள் ஐயா. இணைப்பு இதோ: http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_21.html

    நான் நேற்று இரவு 8.01க்கு ஓர் புதிய பதிவு வெளியிட்டுள்ளேன், ஐயா. அது ஏனோ டேஷ்-போர்டில் தெரியவில்லை. இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2014/01/108108.html அதில் தங்களுக்கு 2 பங்களாக்கள் + 2 கார்கள் [கற்பனையில் தான்] பரிசளிக்கப்பட்டுள்ளன.

    பொதுவாக சமீப காலமாக நான் தங்களுக்கு கொடுக்கும் மெயில்களுக்கும் தங்களிடமிருந்து பதில்கள் வருவது இல்லை. மெயில் இன்பாக்ஸ் பக்கம் போகிறீர்களா இல்லையா என எனக்கு சந்தேகமாக உள்ளது.

    அன்புடன் VGK

    ReplyDelete
  47. வணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_21.html

    ReplyDelete
  48. சாதாரணமாக கிறிஸ்துவர்கள் இந்த நட்சத்திர பொருத்தத்தை பார்ப்பதில்லை. இவ்வளவு ஏன், என்னுடைய குடும்பத்தில் சாதி மதம் எதையுமே கூட பார்த்ததில்லை. ஆனால் அனைவருமே மகிழ்ச்சியுடந்தான் வாழ்கிறோம். இது சரியா தவறா என்று ஆய்வு செய்வதில் பலன் இல்லை. அவரவர் மனதைப் பொருத்தது.

    ReplyDelete
  49. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    // வணக்கம் ஐயா. இன்றைய 21.01.2014 வலைச்சரத்தில் தங்களின் அருமையான படைப்பு ஒன்று அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்ப்பட்டுள்ளது ஐயா. மிக்க மகிழ்ச்சியாக உள்ளது ஐயா. அதற்கு என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள் ஐயா. இணைப்பு இதோ: http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_21.html //

    அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்! சகோதரி கீதமஞ்சரி அவர்கள், இன்றைய வலைச்சரத்தில் எனது தளத்தினை அறிமுகப்படுத்தியதை முதல் தகவலாக தெரிவித்த தங்களுக்கு நன்றி!

    // நான் நேற்று இரவு 8.01க்கு ஓர் புதிய பதிவு வெளியிட்டுள்ளேன், ஐயா. அது ஏனோ டேஷ்-போர்டில் தெரியவில்லை. இணைப்பு இதோ: http://gopu1949.blogspot.in/2014/01/108108.html அதில் தங்களுக்கு 2 பங்களாக்கள் + 2 கார்கள் [கற்பனையில் தான்] பரிசளிக்கப்பட்டுள்ளன.//

    இனிமேல்தான் சென்று பார்க்க வேண்டும்.

    // பொதுவாக சமீப காலமாக நான் தங்களுக்கு கொடுக்கும் மெயில்களுக்கும் தங்களிடமிருந்து பதில்கள் வருவது இல்லை. மெயில் இன்பாக்ஸ் பக்கம் போகிறீர்களா இல்லையா என எனக்கு சந்தேகமாக உள்ளது. //

    அன்புள்ள VGK சார்! நீங்கள் சொல்வது உண்மைதான். எனக்கு கடுமையான முதுகுவலி. இதனால் கம்ப்யூட்டரில் அதிகநேரம் தொடர்ந்து உட்காருவதில்லை. (டாக்டரிடம் சென்று வந்த பிறகு, இப்போது பரவாயில்லை) எனவே வலைப்பதிவில் படிப்பதோடு சரி! எல்லாவற்றிற்கும் உடனுக்குடன், முன்புபோல் கருத்துரை எழுத முடிவதில்லை. எனது பதிவில் மறுமொழி எழுதுவது மட்டும்தான். இன்னும் கொஞ்சநாளில் எல்லாம் சரியாகிவிடும்.

    இதுவும் கடந்து போகும் (THIS TOO SHALL PASS )



    ReplyDelete
  50. மறுமொழி > கீத மஞ்சரி said...
    // வணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்கள் தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
    http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_21.html //

    இந்த வாரம் – வலைச்சரம் ஆசிரியை பொறுப்பேற்று , இன்றைய பதிவினில் எனது வலைத்தளத்தை அறிமுகம் செய்ததோடு, தகவலையும் எனக்குச் சொன்ன சகோதரி கீதமஞ்சரி அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  51. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...

    // சாதாரணமாக கிறிஸ்துவர்கள் இந்த நட்சத்திர பொருத்தத்தை பார்ப்பதில்லை. இவ்வளவு ஏன், என்னுடைய குடும்பத்தில் சாதி மதம் எதையுமே கூட பார்த்ததில்லை. ஆனால் அனைவருமே மகிழ்ச்சியுடந்தான் வாழ்கிறோம். இது சரியா தவறா என்று ஆய்வு செய்வதில் பலன் இல்லை. அவரவர் மனதைப் பொருத்தது. //

    ஆமாம் அய்யா! நீங்கள் சொல்வது சரிதான்! அந்த பேராசிரியரிடம் கிறிஸ்தவ சகோதரர்கள் கொடுத்துள்ள வரன்களில் நட்சத்திரம், ராசி பற்றிய தகவல்கள் கிடையாது. நான் இதனை எனது கட்டுரையில் தெரிவிக்கவில்லை. காரணம் ஒவ்வொரு மதத்திலும் சில நம்பிக்கைகள் உள்ளன. ஒரு மதத்தின் நம்பிக்கைகளோடு இன்னொன்றை ஒப்பிடுவது போல ஆகிவிடும், இங்கு ஒப்புவமை தேவையில்லை என்பதுதான்.

    தங்கள் வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் நன்றி!





    ReplyDelete
  52. சரியான ஜோதிடரிடம் கலந்தாலோசித்தால் சரியான வழிகாட்டுதல் நிச்சயம் கிடைக்கும். ஜாதகம் பார்க்காமலே இருப்பதைவிட, பார்த்துவிட்டு அதன் சாதக பாதகங்களைத் தெரிந்துகொள்வது சிறந்தது. பரிகாரங்கள் செய்வதும் செய்யாததும் அவரவர் விருப்பம். செய்துதான் தீரவேண்டும்-அதுவும் தன் மூலமாகவே-என்று ஜோதிடர்கள் வற்புறுத்துதல் தவறு.

    ReplyDelete
  53. மறுமொழி > Chellappa Yagyaswamy said...

    // சரியான ஜோதிடரிடம் கலந்தாலோசித்தால் சரியான வழிகாட்டுதல் நிச்சயம் கிடைக்கும்.//

    நல்ல யோசனை அய்யா! ஜாதகத்தில் சாதகமும் உண்டு; பாதகமும் உண்டு. பரிகாரங்களை யாரும் சொல்வது கிடையாது. ஒரு நட்சத்திரம் ஆகாது என்றால் அந்த பெண் கடைசிவரை திருமணம் ஆகாமலேயே இருந்து விட வேண்டியது இல்லை. அதற்கும் பரிகாரம் உண்டு.
    // ஜாதகம் பார்க்காமலே இருப்பதைவிட, பார்த்துவிட்டு அதன் சாதக பாதகங்களைத் தெரிந்துகொள்வது சிறந்தது. பரிகாரங்கள் செய்வதும் செய்யாததும் அவரவர் விருப்பம். செய்துதான் தீரவேண்டும்-அதுவும் தன் மூலமாகவே-என்று ஜோதிடர்கள் வற்புறுத்துதல் தவறு.//

    ஆமாம் அய்யா! நீங்கள் சொல்வது சரிதான்! அவரவர் விருப்பம். கவிஞர் இராய.செல்லப்பா அவர்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!


    ReplyDelete
  54. மனம் ஒத்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்துக் கொள்ளுவது இயற்கை. ஆணோ அல்லது பெண்ணோ மற்ற உறவுகளைவிட தனது துணையைத்தான் சுயமாக தேர்ந்தெடுக்க முடியும். மற்ற உறவுகள் தானாக அமைவது. இதில் சோதிடம் என்பது பெற்றோர் தமது பிள்ளைகள் மேல் கொண்ட அக்கரையால் விளைவது.
    அதை வைத்து பணம் பண்ணுவதும், பலரின் வாழ்வை கெடுப்பதுமான செயல்களைதான் நாம் தடுக்கவேண்டும்.

    இத்தகைய ஆக்கபூர்வமான முயற்சிகள் நிச்சயம் பலன் தரும். வாழ்த்துகள் அய்யா.

    ReplyDelete
  55. மனப்பொருத்தம் முக்கியம்,மற்றவை தேவையில்லை..

    ReplyDelete