Sunday, 26 January 2014

ஷேக்ஸ்பியரின் - மாக்பெத் (MACBETH)



ஷேக்ஸ்பியர் ( SHAKESPEARE) எழுதிய மாக்பெத் (MACBETH) -  இது ஒரு துன்பியல் நாடகம் ஆகும். நான் இளங்கலை படித்தபோது எங்கள் கல்லூரி  நூலகத்தில் இந்த நாடக நூலை எடுத்து படித்ததாக நினைவு. எங்கள் கல்லூரியில், ஷேக்ஸ்பியர் பற்றி சொல்லும்போது திருச்சி பேராசிரியர்கள் எம்.எஸ்.நாடார், C S கமலபதி ஆகியோர் ஷேக்ஸ்பியர் நாடகங்களை பாடம் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று சொல்வார்கள். அப்போது அவர்கள் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் பணிபுரிந்து வந்தனர். அதிலும் எம்.எஸ்.நாடார் அவர்கள் பாடம் எடுக்கும்போது, ஷேக்ஸ்பியராகவே மாறி நடித்துக் காட்டுவார் என்றெல்லாம் சொன்னார்கள். படிக்கும்போது அந்த நாடகத்தை ஆழ்ந்து படிக்க இயலவில்லை. பின்னாளில் வேலைக்குச் சென்று சேர்ந்த பிறகுதான் மாக்பெத்தை ரசித்துப் படிக்க நேரம் கிடைத்தது.

மாக்பெத் நாடகத்தின் கதை:

சூனியக்காரிகள், அரண்மனை ரகசியம், அரசியல் சதி, நம்பிக்கைத் துரோகம், கொலை, ஆட்சி கவிழ்ப்பு இப்படி நிறைய விஷயங்கள் கொண்ட நாடகம் “மாக்பெத். அனைத்துக்கும் காரணம் ஒரு பெண். அவள் ஸ்காட்லாந்து நாட்டின் தளபதி மாக்பெத் (MACBETH) என்பவனது மனைவி, லேடி மாக்பெத் (LADY MACBETH)

ஸ்காட்லாந்தின் மன்னன் டங்கன்   (DUNCAN). அவனுக்கு இரண்டு மகன்கள். மால்கம் மற்றும் டொனால்பைன். டங்கன் ஒரு உள்நாட்டு கலவரைத்தை அடக்க தனது நாட்டின் தளபதி மாக்பெத் (MACBETH) தலைமையில் படைகளை அனுப்புகிறான். அவனும்,  தனது நண்பனும் இன்னொரு தளபதியுமான பேங்க்வோ (BANQUO)வுடன் போர்முனைக்குச் சென்று எதிரிகளை அழித்துவிட்டு திரும்புகிறான். வரும் வழியில் மாக்பெத்தும் பேங்க்வோவும் மூன்று சூனியக்காரிகளை (Three Witches) எதிர்பாரத விதமாக சந்திக்கின்றனர். அந்த மூன்றுபேரும் மாக்பெத், பேங்க்வோ இருவரது வாழ்க்கையிலும் நடைபெறப் போகும் நிகழ்ச்சிகளை சொல்கின்றனர். அவர்கள் மாக்பெத்தை அரசனாவாய் என்றும், பேங்க்வோவிடம் நீ அரசனாக ஆகாவிட்டாலும் அரசர்களின் தந்தையாவாய் ‘ என்று சொல்லுகின்றனர். பின்னர் மறைந்து விடுகின்றனர்.

மாக்பெத் அரசனாகவேண்டும் , தான் அரசியாக வேண்டும் என்பதற்காக டங்கனை கொல்லச் சொல்கிறாள் லேடி மாக்பெத். 


அரசன் டங்கன் கொல்லபபடுகிறான். பின்னர் அவன் அரசனாக இருக்க இடைஞ்சலாக இருப்பவர்கள் தீர்த்துக் கட்டப்படுகிறார்கள். பேங்கோவும் கொல்லப்படுகிறான். பேங்கோவின் பிள்ளைகள் தப்பி விடுகின்றனர். உயிருக்கு பயந்து டங்கனின் மகன்கள் இருவரும் தப்பி ஓடி விடுகின்றனர்.

நாடகத்தின் முடிவில் மாக்பெத் கொல்லப்படுகிறான். லேடி மாக்பெத் தற்கொலை செய்து கொள்கிறாள். மால்கம் ஆட்சிக்கு வருகிறான்.

மாக்பெத் கதையில் நிறைய கதை மாந்தர்கள். எனவே எங்கே யார் என்று புரிந்து கொள்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். 

சிறப்பான வசனங்கள் :

ஷேக்ஸ்பியரின் ஒவ்வொரு நாடகத்திலும் சிறப்பான மேற்கோள் காட்டத்தக்க வசனங்கள் உண்டு. அந்த வகையில் “மாக்பெத் நாடகத்திலிருந்து சில வசனங்கள்.

பாலைவனப் பகுதி. ஓரிடத்தில் மூன்று சூனியக் காரிகள் ஒன்று சேர்கின்றனர். அப்போது மூவரும் ஒருமித்த குரலில் சொல்லும் வாசகம்.

நல்லதெல்லாம் தீயது. தீயது எல்லாம் நல்லது.
Fair is foul, and foul is fair.

போரில் வெற்றி பெற்ற மாக்பெத் தனது நண்பனும் இன்னொரு தளபதியுமான பேங்கோவுடன் ஒரு தரிசு நிலத்தை கடக்கிறான். அப்போது அவன் மனதில் இன்னதென்று இனம் புரியாத கலக்கம்
மாக்பெத் தன் நண்பனிடம் சொன்னது.

நல்லதும் கெட்டதும் கலந்த இதுபோன்ற ஒருநாளை நான் இதுவரை பார்த்ததில்லை.
So foul and fair a day I have not seen.


மாக்பெத் தனது மனைவிக்கு கடிதம் எழுதுகிறான். அதில் மூன்று சூனியக்காரிகள் சொன்ன  வார்த்தைகளையும், அவற்றுள் பலித்தவைகளையும் குறிப்பிட்டு இருந்தான். அதனைப் படித்ததும் லேடி மாக்பெத்திற்கு தனது கணவன் அரசனாக வேண்டும், தான் மகாராணியாக வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறது. இருந்தாலும் தனது கணவன் காரியத்தைக் கெடுத்து விடுவானோ என்ற எண்ணம் ஏற்பட தனக்குள் பேசும் வசனம்:

அவர்கள் சொன்னபடியே நீங்கள் அரசன்  ஆக வேண்டும். இருந்தாலும் உங்களுக்குள் இருக்கும் அன்பான குணத்தைக்  கண்டு அஞ்சுகிறேன். உங்களுக்கு அரசன் ஆக வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. ஆனாலும் குறுக்கு வழியை நாட மாட்டீர்கள். நல்லவனாக இருந்தால் உயர் நிலையை அடைவது எங்ஙனம்? எதற்காக பயப்படுகிறீர்களோ அதனை நீகக வேண்டும். அதனை நான் செய்வேன்.

Glamis thou art, and Cawdor; and shalt be
What thou art promised. Yet I do fear thy nature;
It is too full o' the milk of human kindness
To catch the nearest way; thou wouldst be great,
Art not without ambition; but without
The illness should attend it; what thou wouldst highly,
That thou wouldst holily; wouldst not play false,
And yet wouldst wrongly win.

அரசன் டங்கன் மாக்பெத்தின் அரண்மனைக்கு விருந்தாளியாக வருகிறான். அவனுக்கு மாக்பெத்தும் அவனது மனைவியும் உபசரிக்கிறார்கள். லேடி மாக்பெத்தின் சூழ்ச்சியை அறியாத அரசன் டங்கன் அவளிடம் சொல்லும் வார்த்தை இது

நம்மைத் தொடரும் அன்பானது சிலசமயம் தொல்லையாக உள்ளது. இருந்தாலும் அது அன்பு என்பதால் நாம் நன்றியறிதல் செய்கிறோம். உனக்கு நான் தரும் அன்புத் தொல்லைகளுக்கு இறைவன் நல்ல வெகுமதியளிக்க வேண்டிக் கொள்க “


அரசன் டங்கனைக் கொலை செய்ய மாக்பெத்திற்கு மனமில்லை. அவன் தனது மனைவியிடம்

“ அன்பே! அமைதியாயிரு! என்னால் ஒரு மனிதனாக எல்லா காரியத்தையும் செய்ய முடியும். அதற்குமேல்  யார் என்ன செய்வார்கள்? “


என்று சொல்லுகிறான். கடைசியில் லேடி மாக்பெத்தின் சொல்லுக்கு கட்டுப்பட்டு அரசனைக் கொலை செய்ய முடிவு செய்கிறான். அப்போது அவன் சொல்லும் வார்த்தை

“ தீய இதயத்தில் தோன்றும் தீய எண்ணத்தை தீய முகம் மறைக்க வேண்டும் 


கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்! தீயவர்களை நல்லவர்களாகவும் , எதிரிகளை நண்பர்களாகவும் மாற்றும் மனிதர்களையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்! 

God's benison go with you; and with those
That would make good of bad, and friends of foes!

டங்கன் கொலையானதும் டங்கனின் மகன்கள் டொனால்பெயின் ( DONALBAIN ), மால்கம் ( MALCAM ) இருவரும் குதிரைகளில் தப்புகின்றனர். அப்போது டொனால்பெயின் சொல்லும் வாசகம் இது.

நான் அயர்லாந்து செல்கிறேன். இங்கே நெருங்கிய உறவிலும் மனிதர்களின் புன்முறுவலிலும் கொடிய வாள் மறைந்து இருக்கிறது.


லேடி மாக்பெத் மன்னன் டங்கனைக் கொன்ற பிறகு மனம் அமைதியற்றவள் ஆகி தனக்குத்தானே பேசுகிறாள். தூக்கத்தில் நடக்கிறாள். ஒரு கட்டத்தில் தன் கைகளில் டங்கனின் இரத்தக் கறைகள் இன்னும் இருப்பதாகக் கற்பனை செய்து கொண்டு கழுவுகிறாள். அப்போது சொல்லப்படும் வசனம் ....

இங்கே இன்னும் இரத்த வாடை வீசுகிற்து. அரேபிய வாசனைத் தைலங்கள் அனைத்தாலும் இதனை நீக்க முடியாது. ஓ .. ஓ ..ஓ



         (படம் மேலே லேடி மாக்பெத் தூக்கத்தில் நடத்தல்)


ஒரு குகை. அதன் உள்ளே நடுவில் ஒரு கொப்பரை. அதில் சிலவற்றை கொதிக்க வைத்து இருக்கிறார்கள். இடி இடிக்கும் ஓசை, சூனியக்காரிகள் மூவரும் அங்கே தோன்றுகின்றனர். மூவரும் ஒருவருகொருவர் பேசிக் கொள்கின்றனர். அப்போது ஒருத்தி சொல்லும் வசனம்

எனது கட்டை விரல்கள் அரிக்கின்றன. எனவே ஏதோ ஒரு கெட்டது இந்த வழியில் வருகிறது.
By the pricking of my thumbs,
Something wicked this way comes.


டன்சினேன் கோட்டை. அங்கே மாக்பெத். ஒரு அழுகுரல் கேட்கிறது. என்ன அழுகை என்று கேட்கிறான். லேடி மாக்பெத் இறந்து விட்டதாக செய்தி. அப்போது மாக்பெத் சொல்லும் வசனம்.

ஒவ்வொரு நாளும், நாளை நாளை நாளை என்றே நாட்கள் நகர்ந்து நேற்றைய நாட்களாக மாறி விடுகின்றன. நமமை முட்டாளாக்கி மரணத்தையே காட்டின.. மெழுகுவர்த்தியே! அணைக! அணைக! வாழ்க்கை என்பது ஒரு நடக்கும் நிழல்! மேடையில் நடிக்கும் பரிதாபமான நடிகன். முட்டாளால் சொல்லப்பட்ட வெற்றுக் கூச்சல் கொண்ட ஒன்றுமில்லாத கதை.  




இது போன்று நிறைய வசனங்கள். சொல்லிக் கொண்டே போகலாம்.

( PICTURES :  THANKS TO  “ GOOGLE ” )



36 comments:

  1. ரசித்துப் படித்தேன் ஐயா... நன்றி...

    கட்டை விரல்கள் அரித்தால் கெட்டது வரும் - இப்படிப்பட்ட நம்பிக்கையும் (வசனம்...?) இருந்திருக்கிறது...!

    ReplyDelete
  2. வணக்கம்
    ஐயா.
    தொடக்கம் முதல் முடிவு வரை மிக நன்றாக உள்ளது கதை.. அதிலும் சில இடங்களில் எடுத்துக்காட்டாக சொல்லிய வார்த்தைகள் எம்மை ஒரு கனம் சிந்திக்க வைக்கிறது... ஐயா.. அதில் ஒன்றுதான் இது.
    .....................................................................................................................................................................
    ஒவ்வொரு நாளும், நாளை நாளை நாளை என்றே நாட்கள் நகர்ந்து நேற்றைய நாட்களாக மாறி விடுகின்றன. நம்மை முட்டாளாக்கி மரணத்தையே காட்டின..
    மெழுகுவர்த்தியே! அணைக! அணைக! வாழ்க்கை என்பது ஒரு நடக்கும் நிழல்!
    மேடையில் நடிக்கும் பரிதாபமான நடிகன். முட்டாளால் சொல்லப்பட்ட வெற்றுக் கூச்சல் கொண்ட ஒன்றுமில்லாத கதை
    ...................................................................................................................................................................
    மனித வாழ்வியல் நிகழ்வை மிக அழகாக படம் பிடித்து காட்டியுள்ளிர்கள்...இந்த கருத்து சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா.

    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. ஆய்வுக்கட்டுரை போல கலக்கீட்டீங்களே.

    ReplyDelete
  5. ///இங்கே நெருங்கிய உறவிலும் மனிதர்களின் புன்முறுவலிலும் கொடிய வாள் மறைந்து இருக்கிறது.”///
    எத்துனை பெரிய உண்மை
    மாக்பெத் படித்ததில்லை ஐயா.
    இருப்பினும் தங்களின் பதிவினைப் படித்தவுடன்
    மாக்பெத் படித்ததைப் போன்ற ஓர் நிறைவு
    நன்றி ஐயா

    ReplyDelete
  6. நான் , இதுவரை இதனைப் படித்ததில்லை!

    ReplyDelete
  7. கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்! தீயவர்களை நல்லவர்களாகவும் , எதிரிகளை நண்பர்களாகவும் மாற்றும் மனிதர்களையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்! //

    முதியவர் சொல்லும் வசனம் மிக அருமை.


    ReplyDelete
  8. 1. நான் படித்த போது கிங் லியர் மச் அடோ அபொட் நதிங் இரண்டு நாடகங்கள்.

    பேராசிரியர். ஃபாதர் சிக்வேரா. கிங் லியர் எடுத்தார்.என நினைவு. ஒரு வேளை ப்ரொஃபசர் ஆரோக்கியசாமி இருக்கலாம். நான் செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தேன்.

    2. என் அண்ணன் நேஷ்னல் கல்லூரியில் படித்தபோது 1957 அல்லது 1958 இந்த நாடகம் கல்லூரி ஆண்டு விழா அன்று
    மாணவர்களால் நடித்துக்காட்டப்பட்டது. அது எனக்கு இன்னமும் நினைவு இருக்கக் காரணம் , நீங்கள் சொல்லும் மூன்று கோஸ்டில் ஒன்றாக என் அண்ணன் நடித்ததுதான்.

    டேய் !! உனக்கு இந்த வேஷப்பொருத்தம் ரொம்ப பிரமாதம் என்று அவனை கலாய்த்ததும் நினைவு இருக்கிறது.

    நாம் படித்ததை எல்லாம் அல்லது படித்து புரிந்துகொள்ளத் தவறியதை எல்லாம் இப்போது படிக்கும்போது புதுப்புது அர்த்தங்கள் தோன்று கின்றன.

    இது ஆங்கில இலக்கியத்துக்கு மட்டுமல்ல. தமிழ் இலக்கியத்திற்கும் பொருந்துகிறது.

    அழகாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  9. விரிவான அலசல் ஐயா...வசனங்கள் அருமை..

    ReplyDelete
  10. டங்கன் கொலையாவதும் அவனுடைய மகன்கள் தப்பிச் செல்வதும் பாடப்பகுதியில் வந்ததாக நினைவு.
    இருப்பினும் தங்களின் பதிவினைப் படித்தவுடன் மாக்பெத் நாடகத்தை - படிக்க வேண்டும் என்று விருப்பம் தோன்றுகின்றது.

    ReplyDelete
  11. ஷேக்ஸ்பியரின் பயங்கர ரசிகர் என்று புரிகிறது. இத்தனை விரிவாக மேக்பெத்தைக் கண் முன் கொண்டு வந்து நிருத்ஹ்டி விட்டீர்கள். மீண்டும் கல்லூரிக்கு சென்று ஷேக்ஸ்பியரை ரசித்துப் அப்டிக்கும் ஆவள் உண்டாகிறது. நன்றி.

    ReplyDelete
  12. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
    // ரசித்துப் படித்தேன் ஐயா... நன்றி... //

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி!
    // கட்டை விரல்கள் அரித்தால் கெட்டது வரும் - இப்படிப்பட்ட நம்பிக்கையும் (வசனம்...?) இருந்திருக்கிறது...!//

    ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நம்பிக்கைகள்!

    ReplyDelete
  13. மறுமொழி > 2008rupan said...

    // வணக்கம் ஐயா. தொடக்கம் முதல் முடிவு வரை மிக நன்றாக உள்ளது கதை.. அதிலும் சில இடங்களில் எடுத்துக்காட்டாக சொல்லிய வார்த்தைகள் எம்மை ஒரு கனம் சிந்திக்க வைக்கிறது... ஐயா.. //
    // த.ம 2வது வாக்கு //
    கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி!

    //மனித வாழ்வியல் நிகழ்வை மிக அழகாக படம் பிடித்து காட்டியுள்ளிர்கள்...இந்த கருத்து சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா.//

    மாக்பெத் சம்பந்தப்பட்ட எல்லாப் புகழும் ஷேக்ஸ்பியருக்கு

    ReplyDelete
  14. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

    // ஆய்வுக்கட்டுரை போல கலக்கீட்டீங்களே. //

    சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களுக்கு நன்றி! உங்கள் பழைய பதிவுகளை நேரம் கிடைக்கும் போதெல்லாம் மீண்டும் படித்துக் கொண்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  15. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...

    // மாக்பெத் படித்ததில்லை ஐயா. இருப்பினும் தங்களின் பதிவினைப் படித்தவுடன் மாக்பெத் படித்ததைப் போன்ற ஓர் நிறைவு நன்றி ஐயா //
    // த.ம.5 //

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமாருக்கு நன்றி!

    ReplyDelete
  16. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...

    // நான் , இதுவரை இதனைப் படித்ததில்லை! //

    புலவர் அய்யாவின் வருகைக்கு நன்றி!

    ReplyDelete
  17. மறுமொழி > கோமதி அரசு said...

    // கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்! தீயவர்களை நல்லவர்களாகவும் , எதிரிகளை நண்பர்களாகவும் மாற்றும் மனிதர்களையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்! //

    //முதியவர் சொல்லும் வசனம் மிக அருமை.//

    ஷேக்ஸ்பியருக்கு நன்றி!

    ReplyDelete
  18. மறுமொழி > sury Siva said...
    // 1. நான் படித்த போது கிங் லியர் மச் அடோ அபொட் நதிங் இரண்டு நாடகங்கள். பேராசிரியர். ஃபாதர் சிக்வேரா. கிங் லியர் எடுத்தார்.என நினைவு. ஒரு வேளை ப்ரொஃபசர் ஆரோக்கியசாமி இருக்கலாம். நான் செயின்ட் ஜோசப் கல்லூரியில் படித்தேன்.//

    நீங்கள் உங்கள் திருச்சி வாழ்க்கை அனுபவங்களையும் எழுதலாம் அய்யா!

    //2. என் அண்ணன் நேஷ்னல் கல்லூரியில் படித்தபோது 1957 அல்லது 1958 இந்த நாடகம் கல்லூரி ஆண்டு விழா அன்று
    மாணவர்களால் நடித்துக்காட்டப்பட்டது. அது எனக்கு இன்னமும் நினைவு இருக்கக் காரணம் , நீங்கள் சொல்லும் மூன்று கோஸ்டில் ஒன்றாக என் அண்ணன் நடித்ததுதான்.

    டேய் !! உனக்கு இந்த வேஷப்பொருத்தம் ரொம்ப பிரமாதம் என்று அவனை கலாய்த்ததும் நினைவு இருக்கிறது. //

    சுவையான நினைவு அய்யா! அப்போதெல்லாம் இலக்கிய சம்பந்தமான நாடகங்களை கல்வி நிறுவனங்களில் நடித்துக் காட்டினார்கள். இப்போதெல்லாம் அர்த்தமற்ற சினிமா பாடல்களுக்கு ஏறப கையையும் காலையும் தூக்குகிறார்கள்.

    // நாம் படித்ததை எல்லாம் அல்லது படித்து புரிந்துகொள்ளத் தவறியதை எல்லாம் இப்போது படிக்கும்போது புதுப்புது அர்த்தங்கள் தோன்று கின்றன. இது ஆங்கில இலக்கியத்துக்கு மட்டுமல்ல. தமிழ் இலக்கியத்திற்கும் பொருந்துகிறது. //

    வாழ்க்கை நாளை நாளை என்றே ஒவ்வொரு நாளும் ஒரு புது அர்த்தத்தோடு ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.

    // அழகாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள். //

    சுப்பு தாத்தாவின் வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி!

    ReplyDelete
  19. மறுமொழி > கலியபெருமாள் புதுச்சேரி said...

    // விரிவான அலசல் ஐயா...வசனங்கள் அருமை..//

    சகோதரருக்கு நன்றி!

    ReplyDelete
  20. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    // டங்கன் கொலையாவதும் அவனுடைய மகன்கள் தப்பிச் செல்வதும் பாடப்பகுதியில் வந்ததாக நினைவு. இருப்பினும் தங்களின் பதிவினைப் படித்தவுடன் மாக்பெத் நாடகத்தை - படிக்க வேண்டும் என்று விருப்பம் தோன்றுகின்றது. //

    தஞ்சையம்பதி துரை செல்வராஜு அவர்களுக்கு நன்றி!


    ReplyDelete
  21. ஷேக்ஸ்பியரின் 'மாக்பெத்' நாடகத்தை நான் படித்ததில்லை. ஆனால் கதையை சொல்ல கேட்டிருக்கிறேன். நாடகத்தின் முக்கிய உரையாடல்களைத் தந்து, அந்த நாடகத்தையே பார்த்தது போன்ற பிரமையை ஏற்படுத்திவிட்டீர்கள். நன்றி!

    ReplyDelete
  22. நானும் இவரது நாடகத்தை படித்ததில்லை சிறப்பான வசனங்களை கலரில் கொடுத்து அசத்தி இருக்கிங்க... இது போன்ற பகிர்வுகளை , நிறைய பேர் படித்திறாத விஷயங்களை பகிர்வதில் நீங்கள் முதலிடம் என்றே நான் சொல்வேன். பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  23. அருமையான நாடகம் பற்றிய அழகிய பதிவு!

    ReplyDelete
  24. மறுமொழி > rajalakshmi paramasivam said...
    // ஷேக்ஸ்பியரின் பயங்கர ரசிகர் என்று புரிகிறது. இத்தனை விரிவாக மேக்பெத்தைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்கள். மீண்டும் கல்லூரிக்கு சென்று ஷேக்ஸ்பியரை ரசித்துப் படிக்கும் ஆவல் உண்டாகிறது. நன்றி. //

    ஷேக்ஸ்பியரின் ஒன்றிரண்டு நாடகங்களை மட்டுமே முழுமையாகப் படித்து இருக்கிறேன். நான் பி.ஏ, எம்.ஏ – இரண்டிலும் தமிழ் இலக்கியத்தைப் பாடமாக எடுத்து படித்ததால் ஷேக்ஸ்பியர் முழுவதையும் படிக்க நேரம் இல்லாமல் போய் விட்டது. சகோதரியின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி!


    ReplyDelete
  25. மறுமொழி > வே.நடனசபாபதி said...
    // ஷேக்ஸ்பியரின் 'மாக்பெத்' நாடகத்தை நான் படித்ததில்லை. ஆனால் கதையை சொல்ல கேட்டிருக்கிறேன். நாடகத்தின் முக்கிய உரையாடல்களைத் தந்து, அந்த நாடகத்தையே பார்த்தது போன்ற பிரமையை ஏற்படுத்திவிட்டீர்கள். நன்றி! //

    அய்யா வே நடனசபாபதி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! அவசியம் படியுங்கள். இக்கால அரசியல் சூழ்ச்சி என்பது ஒன்றும் புதிதல்ல என்பதனை மாக்பெத் கதையினால் அறிந்து கொள்ளலாம்.

    ReplyDelete
  26. மறுமொழி > Sasi Kala said...
    // நானும் இவரது நாடகத்தை படித்ததில்லை சிறப்பான வசனங்களை கலரில் கொடுத்து அசத்தி இருக்கிங்க... இது போன்ற பகிர்வுகளை , நிறைய பேர் படித்திறாத விஷயங்களை பகிர்வதில் நீங்கள் முதலிடம் என்றே நான் சொல்வேன். பகிர்வுக்கு நன்றிங்க. //

    சகோதரி கவிஞர் தென்றல் சசிகலா அவர்களின் கருத்துரைக்கு
    நன்றி! கவிஞரான உங்களுக்கு நிச்சயம் ஷேக்ஸ்பியரை பிடிக்கும்.

    ReplyDelete
  27. மறுமொழி > கே. பி. ஜனா... said...
    // அருமையான நாடகம் பற்றிய அழகிய பதிவு! //
    சிறுகதை எழுத்தாளர் கே பி ஜனா அவர்களுக்கு நன்றி!

    ReplyDelete
  28. படிப்பதற்கு இனிமையாக எழுதியுள்ளீர்கள். நாங்கள் இதையெல்லாம் படித்ததில்லை. ஷேக்ஸ்பியர் ஆங்கிலம் படித்தாலும் புரியாது. சுலபமான ஆங்கிலத்தில் தேடிப்படிக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுத்துவிட்டீர்கள். நன்றி.

    ReplyDelete
  29. ஷேக்ஸ்பியர் நாடகங்களை விரும்பி வாசித்ததுண்டு..

    கல்லூரியில் எங்கள் ஆசிரியை ஷேக்ஸ்பியராகவே மாறி நாடகத்தை நடித்துக்காட்டுவார்.

    அறிஞர் அண்ணாவிற்கு தென்னாட்டின் ஷேக்ஸ்பியர் என்கிற பெயரும் உண்டு.

    ஷேக்ஸ்பியர் நாடகத்தின் தழுவலே..மனோகரா என்னும் சிவாஜி கணேசன் நடித்த படமும் ..

    ReplyDelete
  30. மறுமொழி > Packirisamy N said...
    // படிப்பதற்கு இனிமையாக எழுதியுள்ளீர்கள். நாங்கள் இதையெல்லாம் படித்ததில்லை. //

    சகோதரர N பக்கிரிசாமி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! நேரம் கிடைக்கும்போது படிக்கவும். இலக்கியம் என்பதும் கிட்டத்தட்ட ஒரு உளவியல் மருத்துவர் போலத்தான். பின்னாளில் உதவும்

    // ஷேக்ஸ்பியர் ஆங்கிலம் படித்தாலும் புரியாது. சுலபமான ஆங்கிலத்தில் தேடிப்படிக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொடுத்துவிட்டீர்கள். நன்றி. //

    மாணவர் பருவத்தில் பள்ளி மற்றும் கல்லூரி நூலகங்களில் எடுத்துப் படித்த ஷேக்ஸ்பியர் கதைகள் இந்த நாடகத்தை படிக்க உதவின.

    ReplyDelete
  31. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

    சகோதரி இரார்ஜராஜேஸ்வரி அவர்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி!

    // ஷேக்ஸ்பியர் நாடகங்களை விரும்பி வாசித்ததுண்டு..
    கல்லூரியில் எங்கள் ஆசிரியை ஷேக்ஸ்பியராகவே மாறி நாடகத்தை நடித்துக்காட்டுவார்.//

    இப்போது அது மாதிரி இலக்கியதோடு ஒன்றிப்போய் கம்பனாக, ஷேக்ஸ்பியராக மாறி பாடம் நடத்துபவர்கள் இல்லை. அதனால்தான் இன்றைய தலைமுறைக்கு இலக்கிய நாட்டம் இல்லை.

    // அறிஞர் அண்ணாவிற்கு தென்னாட்டின் ஷேக்ஸ்பியர் என்கிற பெயரும் உண்டு.//

    அறிஞர் அண்ணாவை ”இந்நாட்டு இங்கர்சால். தென்னாட்டு பெர்னாட்ஷா “ என்று அழைப்பார்கள். அண்ணாவை ஷேக்ஸ்பியரோடு ஒப்பிட்டதில்லை. ஆனாலும் அவருடைய பேச்சுக்களில், எழுத்துக்களில் ஷேக்ஸ்பியர் கருத்துக்களைச் சொல்லுவார்.

    // ஷேக்ஸ்பியர் நாடகத்தின் தழுவலே..மனோகரா என்னும் சிவாஜி கணேசன் நடித்த படமும் .. //

    ஆமாம் சகோதரி! ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட் என்ற நாடகத்தின் தழுவல்தான் பம்மல் சம்பந்த முதலியாரின் மனோகரா நாடகம் அதற்கும் கலைஞர் கருணாநிதி எழுதிய மனோகராவுக்கும் நிறைய வித்தியாசம் என்று கேளிவிப்பட்டு இருக்கிறேன்.




    ReplyDelete
  32. எங்களுக்கும் கல்லூரியில் பாடமாக இருந்தாலும் இத்தனை ரசித்து படித்ததில்லை. உங்கள் பகிர்வினை படித்த பிற்கு மீண்டும் படிக்கத் தோன்றுகிறது.

    நல்லதோர் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  33. எதைப் பற்றியும் உங்களால் அருமையாக எழுத முடியும் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  34. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி!

    // எங்களுக்கும் கல்லூரியில் பாடமாக இருந்தாலும் இத்தனை ரசித்து படித்ததில்லை. உங்கள் பகிர்வினை படித்த பிற்கு மீண்டும் படிக்கத் தோன்றுகிறது. //

    வாய்ப்பு கிடைத்தால் படித்து மகிழுங்கள்!

    // நல்லதோர் பகிர்வுக்கு நன்றி. //

    சகோதரரின் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  35. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...

    அய்யா அவர்களுக்கு வணக்கம்!

    //எதைப் பற்றியும் உங்களால் அருமையாக எழுத முடியும் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணம். வாழ்த்துக்கள். //

    கல்லூரிப் பருவத்தில் நீண்ட கட்டுரைகளை எழுதிய அனுபவம் இங்கு வலைப் பதிவில் கைகொடுக்கிறது. எனக்குத் தெரிந்ததை, ரசித்ததை எழுதுகிறேன். உங்களைப் போன்றோர் பாராட்டு இன்னும் எழுத ஊக்கம் தருகிறது. நன்றி!

    ReplyDelete