Friday 4 August 2017

தமிழகம் - நள்ளிரவு அரசியல்



நேற்று (03.08.17) காலை இண்டர்நெட்டில் தமிழ்செய்திகளை வாசித்துக் கொண்டு இருந்தேன். ’சென்னை மெரினா கடற்கரை அருகே வைக்கப்பட்டிருந்த நடிகர் சிவாஜி கணேசன் உருவச் சிலை, போக்குவரத்திற்கு இடைஞ்சலாக இருந்த படியினால், இரவோடு இரவாக அகற்றப்பட்டது. மீண்டும் அவரது நினைவு மண்டபத்தில் வைக்கப்படும் (4 மணி நேரத்திற்கு முன்பு) என்று செய்தி வந்தது. ஒரு காலத்தில் சிவாஜிக்கும், எம்ஜிஆருக்கும் இருந்த ரசிகர் கூட்டம் இன்று அறுபது அல்லது எழுபது வயதை கடந்தவர்களாகவே இருப்பார்கள். பாதிப்பேர் மறைந்தும் போயிருக்கலாம். எனவே சிவாஜி சிலையை அகற்றும் போது, அவரது ரசிகர்களால் பிரச்சினை ஏதும் எழ வாய்ப்பில்லை. ஆனாலும் போக்குவரத்தை முன்னிட்டு இரவோடு இரவாக இதனை செய்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

இது மட்டுமல்ல, நள்ளிரவில் நமது இந்தியா சுதந்திரம் பெற்றதாலோ என்னவோ, பல நிகழ்வுகள், நமது நாட்டில் இரவுநேரக் காட்சிகளாகவே அமைந்து விட்டன. அண்மையில் பாராளுமன்றத்தில் ஜீஎஸ்டி சட்டம் இரவுநேர பார்லிமெண்ட் கூட்டத்தில்தான் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் எம்ஜிஆர் மரணம், கலைஞர் கைது, சங்கராச்சாரியார் கைது, ஜெயலலிதா மரணம் என்று பல நிகழ்வுகள் மனத்திரையில் வந்தன.

மக்கள் திலகம் எம்ஜிஆர் மரணம் (1987)

விடிந்தால் கிறிஸ்துமஸ். காலை எழுந்தவுடன் கேட்ட செய்தி , நேற்று (24.12.1987) எம்.ஜி.ஆர் மரணம் என்பதுதான். எதிர்பார்த்த மரணம்தான். ஏனெனில் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்து கொண்ட, எம்.ஜி.ஆர் நீண்ட நாட்களாக ஆஸ்பத்திரியில் இருந்தார். அவர் இறந்தவுடன் எம்.ஜி.ஆர் குடும்பத்தினரின் ஒப்புதலோடு, அதிகாலையிலேயே கலைஞர் கருணாநிதி ராமாவரம் சென்று எம்.ஜி.ஆர் உடலுக்கு அஞ்சலி செய்தார் என்று ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல் உண்டு. அதேபோல அந்த நள்ளிரவில் எம்.ஜி.ஆர் மறைவு செய்தி கேள்விபட்டு ஜெயலலிதா அங்கு வந்ததாகவும், உள்ளே செல்ல அனுமதி மறுக்கப் பட்டதாகவும் ஒரு தகவல் உண்டு.

எம்.ஜி.ஆர் இறந்த போது தமிழ்நாட்டில் பெரும் கலவரம். ஏதோ கருணாநிதியே எம்.ஜி.ஆரை கொன்று விட்டது போன்று தி.மு.கவினரது இருப்பிடங்கள் கடைகள் மீது தாக்குதல் நடத்தினார்கள். தமிழ்நாட்டில் இருந்த ஒரே கருணாநிதி சிலை அடியோடு அடித்து நொறுக்கப்பட்டது. சிலையின் நெஞ்சில் கடப்பாரையை வைத்து இடிப்பது போல் ஒரு படம் வெளியானது.அப்போதும் கலைஞர் கருணாநிதி ஒரு கவிதை எழுதினார்.

பரவாயில்லை –                                                            
அந்த சின்னத்தம்பி                                              
நெஞ்சில்தான் குத்துகிறான்                                                  
முதுகில் குத்தவில்லை 

என்பதாக எனது நினைவு. அந்த போட்டோவையும், கவிதையின் முழு வடிவையும் ரொம்ப நாளாக இண்டர்நெட்டில் தேடினேன். கிடைக்கவில்லை.

ராஜீவ்காந்தி கொலை (1991)

முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் நாள் செவ்வாய்க் கிழமை இரவு, தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாடு வந்தபோது, ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். அப்போது நடந்த நிகழ்வுகளை, எனது அனுபவத்தை கீழ்க்கண்ட எனது பதிவினில் விவரமாக சொல்லி இருக்கிறேன்.

ராஜீவ் காந்தி கொலையான அன்று http://tthamizhelango.blogspot.com/2014/02/blog-post_22.html

கலைஞர் கருணாநிதி கைது (2001)

அன்று (30.06.2001) நள்ளிரவு நல்ல உறக்கத்தில் இருந்தபோது, நண்பரோ அல்லது உறவினரோ (சரியாக நினைவில் இல்லை) எனக்கு போன் செய்து கலைஞர் கருணாநிதி கைது என்று சொன்னார்கள். உடன் டீவியில் செய்திகளைப் பார்க்கத் தொடங்கினேன். மேம்பாலம் கட்டியதில் ஊழல் என்று, கருணாநிதி கைது பற்றிய செய்தியையும் அடுத்தடுத்து நடந்த காட்சிகளையும் சன் டிவியில் நேரலையாக காட்டிக் கொண்டு இருந்தார்கள். இடையிடையே கருணாநிதியின் கையை ஒரு போலீஸ் அதிகாரி, முரட்டுத்தனமாக அழுத்தி இருப்பதையும், கொல்றாங்கப்பா என்ற அலறலையும் அடிக்கடி காண்பித்தார்கள். அப்புறம் தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் மறியல் கண்டன ஊர்வலங்கள். பஸ் போக்குவரத்தே இல்லை. ஜெயலலிதா ஆட்சி என்பதால் தி.மு.கவினர் சற்று அடக்கியே வாசித்தார்கள்.

காஞ்சி சங்கராச்சாரியார் கைது (2004) 

அன்று (11.11.2004) நள்ளிரவு முடிந்து அடுத்தநாள் தீபாவளி தொடக்கம். எனவே சீக்கிரமே எழுந்து விட்டேன். டீவியை போட்டேன். ’முக்கிய செய்தி – சங்கரராமன் கொலை வழக்கில் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கைது ‘ என்று Breaking News ஓடிக் கொண்டு இருந்தது. என்னால் நம்பவே முடியவில்லை. அப்புறம் கூடவே இருந்த சின்ன சங்கராச்சாரியாரும் கைது என்றும் செய்தி வந்தது. ஜெயலலிதா ஆட்சியில்  காஞ்சி சங்கராச்சாரியார் கைது என்பதை ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. விடிந்ததும் முழு செய்தியும் வெளிவரத் தொடங்கியது. பா.ஜ.கவின் வட இந்தியத் தலைவர்கள் இந்த பிரச்சினையை ஆவேசமாக கண்டனம் செய்தனர். ஆனால் தமிழ்நாட்டிலோ அமைதியாகவே இருந்தனர். அப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டு இருந்தது. இதே நிகழ்வு கருணாநிதி ஆட்சியில் நடந்து இருந்தால் ஆட்சியையே கலைத்து இருப்பார்கள்.  

ஜெயலலிதா மரணம் (2016)

சென்ற ஆண்டு, செப்டம்பர், 22, 2016 அன்று இரவு அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள், 75 நாட்களாக அங்கு இருந்தார். ஒவ்வொரு நாளும் ஒரு செய்தி அவ்வப்போது அவர் இறந்து விட்டதாக வதந்தி வரும். இல்லை இல்லை அவர் நன்றாகவே இருக்கிறார், இட்லி சாப்பிட்டார், தயிர்சாதம் சாப்பிட்டார் என்று சொல்லுவார்கள். அவ்வாறே ஒருநாள் (05.12.2016) மாலை அவர் இறந்து விட்டதாகவே ஒரு டீவி சேனலில் செய்தி வாசித்தார்கள். அப்புறம் மறுத்தார்கள். ஆனால் அன்று இரவே அவரது இறப்பை ஊர்ஜிதம் செய்தார்கள். அதிரடி அரசியலுக்கு பெயர் போன ஜெயலலிதாவின் மரணமே அரசியல் ஆகிப் போனது. அவரது மரணத்தில் நிறையவே சந்தேகங்கள் என்று அவரது அரசியல் சகாக்களே சொல்லுகின்றனர்.

முதல்நாள் சென்னைக்கு புறப்பட்டுச் சென்ற எனது மகளும் அவரது குடும்பத்தினரும் பத்திரமாக ஊர் போய் சேர்ந்தார்களா என்ற கவலையில், போனில் விசாரித்தேன். இப்போதுதான் வீடு வந்து சேர்ந்தோம்; அசதியாக இருக்கிறது தூங்கப் போகிறோம் என்றவுடன் விஷயத்தை சொன்னேன். அப்புறம்தான் அவர்களுக்கே விஷயம் தெரியும்.  

     

32 comments:

  1. எம்ஜிஆர் கொலை செய்யப்படவில்லை இயற்கை மரணத்திற்கு கருணாநிதி காரணம் என்றவர்கள்.

    ஜெயலலிதா கொலை செய்யப்பட்டது அறிந்தும் கலவரம் செய்யவில்லை காரணம் இப்போது அ.தி.மு.க.வில் உண்மையான தொண்டர்கள் இல்லை.

    நள்ளிரவில் நாடகங்கள் அரங்கேறுவதற்கு காரணம் தமிழர்களின் மன ஓட்டத்தை அறிந்தவர்கள் அரசியல்வாதிகள்.

    அரசியல் தலைவனின் மரணத்தைகூட ஏற்க மறுப்பவன் தமிழன்.

    இது பிற மாநிலத்தவர்களால் இழிவாக பேசப்படுவது தமிழனுக்கு தெரியாது.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      // அரசியல் தலைவனின் மரணத்தைகூட ஏற்க மறுப்பவன் தமிழன். //

      ஒரு அருமையான கருத்தை தெரிவித்து இருக்கிறீர்கள்.

      Delete
    2. அரசியல் தலைவனின் மரணத்தைகூட ஏற்க மறுப்பவன் தமிழன்.
      - கில்லர்ஜி
      உள்ளது அல்லது இல்லை என்தை கூட ஏற்க மறுப்பவர்கள்.
      இலங்கை எல்டிடிஈ தலைவர் உயிருடன் உள்ளார் என்று தெரிவித்தவர்கள் திராவிட பகுத்தறிவாளர்கள்.

      Delete
  2. நள்ளிரவில் நடந்ததில் பாதிதான் வந்திருக்குண்ணே

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்தினுக்கு நன்றி. இன்னும் எழுதலாம் தான். ஆனால் கட்டுரை அதிகப் பக்கம் வந்து, படிப்பவரை சலிப்புறச் செய்து விடும்.

      Delete
  3. தமிழன் செண்டிமெண்டல் இடியட்ன்னு சும்மாவா சொல்லுறாய்ங்க

    ReplyDelete
  4. பாதிப்பின் தாக்கத்தைக் குறைப்பதற்காக இவ்வாறான செயல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  5. பல மர்மங்களும் இருட்டைப் போல...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாணியில் சொல்வதானால், இருட்டினில் வாழும் இதயங்களே கொஞ்சம் வெளிச்சத்தில் வாருங்கள் என்று பாட வேண்டியதுதான். (உங்களுக்கு சொன்ன மறுமொழியை, புலவர் அய்யா கருத்துரைக்கு தவறுதலாக Copy/Paste செய்து விட்டேன்.)

      Delete
  6. அரசியல் நாடகங்கள்.

    ReplyDelete
  7. தொகுப்பு நன்று த ம 6

    ReplyDelete
  8. நள்ளிரவுச் செய்திகள். கலைஞர் கவிதை மிக அருமை. இங்கு ஒருவரைப் பாராட்டினாலேயே எதிரான இன்னொருவரை கீழிறக்கவேண்டும் என்பது பழகி விட்டது. நாட்டில் சிலைகள் பெருகுவதும் கொஞ்சம் கவலைக்குரிய விஷயம். நானும் சிவாஜி ரசிகன்தான். சிலையை வைத்துதான் அவரை மதிப்பிடவேண்டும் என்பதில்லை.

    ஒரு சுவாரஸ்யமான ஆராய்ச்சிப் பதிவு.

    ஏழாவது வாக்கு என்னுடையது!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி. நான் ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர் ரசிகன். அப்புறம் சிவாஜி, ஜெமினி, எம்.ஆர்.ராதா என்று இவர்கள் எல்லோரும் நடித்த பழைய படங்களைப் பார்த்த பின்னர் எல்லோருடைய ரசிகரும் ஆனேன்.

      Delete
  9. கருணாநிதியைக் கைது செய்தபோது நாங்கள் பயணத்தில் இருந்தோம் பேரூந்துகள் ஓட்டம் நிச்சயமாய் தெரியவில்லை திருச்சியிலிருந்து ஒரு வழியாகக் கும்பகோணம் சேர்ந்தோம் அன்றுதான் அங்கே கைலாச நாதர் கோவில் கும்பாபிஷேகம் என்று நினைவு

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் G.M.B அவர்களின் வருகைக்கும் கருத்தினுக்கும் நன்றி. தமிழ்நாட்டில் ஆ... ஊ .... என்றால் பஸ்சுகளை நிறுத்தி விடுகிறார்கள்.

      Delete
    2. அது கைலாச நாதர் கோவில் அல்ல காசி விஸ்வநாதர் கோவில் என்று இருக்க வேண்டும் எல்லாமே கன்ஃப்யூஷந்தான்

      Delete
  10. பல விஷயங்கள் நள்ளிரவில் - நம் ஊர் அரசியல் நாடகங்கள் பலவும் நள்ளிரவில்!

    நல்ல பகிர்வு.

    த.ம. ஒன்பதாம் வாக்கு!

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு நன்றி.

      Delete
  11. தேர்தல் முடிவுகளும் நள்ளிரவில் தான் அறிவிக்கப் படுகின்றன :)

    ReplyDelete
    Replies
    1. தோழரின் கருத்தினுக்கு நன்றி.

      Delete
  12. பல விசயங்கள் நள்ளிரவில்தான் நடக்கின்றன
    தம +1

    ReplyDelete
  13. முன்பு நாடகங்கள் இரவில்
    இருளில் நடக்கும்
    இப்போது அரசியல் நாடகங்கள்...
    தொகுத்துச் சொன்னவிதம் அருமை
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  14. சுதந்திரம் நமக்கு நள்ளிரவில் தான் வந்தது .மகிழ்வான விஷயங்களும் உண்டு

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களுக்கு நன்றி. நீங்கள் சொல்வதும் சரிதான். நல்லதையே நினைப்போம்.

      Delete
  15. கருணாநிதியின் கவிதை அருமை....

    தமிழர்கள் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுபவர்கள்...பிடித்தவர்களைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு.....

    பல நிகழவுகள்.....

    துளசி, கீதா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் இருவரது பாராட்டிற்கும் நன்றி.

      Delete
  16. நள்ளிரவில் நடந்த நிகழ்வுகளை அருமையாய் தொகுத்து தந்திருக்கிறீர்கள். பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete