Saturday, 22 February 2014

ராஜீவ் காந்தி கொலையான அன்றுமுன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்கள் 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் நாள் செவ்வாய்க் கிழமை அன்று படுகொலை செய்யப்பட்டார் அப்போது நாங்கள் திருச்சி அய்யப்ப நகரில் வாடகை வீட்டில் குடியிருந்தோம். அப்பாவும் அம்மாவும் என்னோடு இருந்தனர். எனது தங்கைக்கு ஜூன் முதல் வாரத்தில் திருமணம் என்பதால், அப்பா மட்டும் உறவினர்களுக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுப்பதற்காக, அன்றுதான் இரவு ரெயிலில் புறப்பட்டு சென்னைக்கு சென்று கொண்டு இருந்தார். நாங்கள் எல்லோரும் வழக்கம் போல எல்லா வேலைகளையும் முடித்து விட்டு தூங்கிவிட்டோம். நான் மறுநாள்  எப்போதும் போல காலை வேலைகளை முடித்து விட்டு மெயின் ரோட்டிற்கு சில பொருட்கள் வாங்க சென்றேன். ஒரு கடை கூட இல்லை. எல்லாம் அடைக்கப்பட்டு இருந்தன. ஒரே மயான அமைதி. கடைத் தெருவில் இருந்த திமுக பேனர்கள்,கொடிக் கம்பங்கள் சின்னா பின்னமாகக் கிடந்தன.  திமுகவின் சின்னமான உதயசூரியன் வடிவில் இருந்த டியூப் லைட்டுகள் யாவும் உடைக்கப்பட்டு கிடந்தன. ஏதோ கட்சி தகராறு என்று நினைத்தேன். ஒருவரிடம் கேட்ட போது விடுதலைப் புலிகள் ராஜீவ் காந்தியை குண்டு வைத்து கொன்று விட்டனர். திமுகதான் காரணம் என்று பேசிக் கொள்கிறார்கள் “ என்று  விஷயத்தை மெதுவாகச் சொன்னார். அப்புறம்தான் முதல்நாள் இரவில் (21.05.1991 அன்று) ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி அவர்கள் கொல்லப்பட்டார் என்பது தெரிந்தது. அப்போது தேர்தல் நேரம். அப்போதைய பிரதமர் சந்திரசேகர். மேலும் தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி நடந்து கொண்டு இருந்தது. அப்போது அதிமுக காங்கிரஸ் கூட்டணி இருந்தது குறிப்பிடத் தக்கது.


            
உடனே வீட்டிற்கு ஓடினேன். நாங்கள் இருந்த வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு நண்பர். ரெயில்வேக்காரர். அதிமுக அனுதாபி. அவரிடம் நான் பேசியபோது அவர் திமுகவையும், இலங்கைத் தமிழர்களையும் கடுமையாக திட்டிப் பேசினார். அப்போது இலங்கைத் தமிழர்கள் பலர் திருச்சியில் கருணாநிதி நகர், அய்யப்ப நகர், சீனிவாச நகர், குமரன் நகர் முதலான இடங்களில் வாடகைக்கு இருந்து வந்தனர். எங்கள் வீதியில் எனக்கு அறிமுகமான ஒரு இலங்கைத் தமிழர் குடும்பம் இருந்தனர். அவர்களுக்கு எங்களுக்கு முன்பே விஷயம் தெரிந்து இருந்தது. அவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அவர்களைப் பார்த்து கவனமாக இருங்கள் என்று சொன்னேன். இதுபோல் நிறையபேர் வெளியில் வராமல் இருந்தார்கள். எங்கள் பகுதியில் நடமாட்டம் இல்லை. வீதிகளில் போலீஸ் ஜீப்புகளின் ரோந்து அதிகமாக இருந்தது.  

நான் வேலைக்கு சென்றாக வேண்டும். எனது டிவிஎஸ் மொபட்டில் வங்கிக்கு சென்று வந்தேன். வங்கியில் வாடிக்கையாளர்களும் அதிகம் இல்லை. நிறைய பெண் ஊழியர்கள் விடுப்பில் இருந்து விட்டனர். சாலையில்.மக்கள் நடமாட்டம் இல்லை. பஸ் சர்வீஸ் இல்லை. ஒரு சில இடங்களில் கல்வீச்சு. ரெயில்கள் ஆங்காங்கே அப்படியே நிறுத்தப்பட்டதாக செய்திகள். காங்கிரஸ்காரர்களும் அதிமுகவினரும் பல இடங்களில் ராஜிவ் காந்தி படத்திற்கு மாலைகள் போட்டு ஊதுவத்தி ஏற்றி வைத்து இருந்தனர். வானொலியில் ஒரே சோகம். அப்போது சன் டீவி போன்ற தனியார் சேனல்கள் எதுவும் இல்லை. இருந்த ஒன்று தூர்தர்ஷன் மட்டுமே. அதிலும் இரங்கல் செய்திகள்; பஜனைப் பாடல்கள்.  

       
அன்று மாலையும் அடுத்தநாள் காலையும் பத்திரிகைகளில் செய்திகள் சுடச்சுட இருந்தன. டெல்லியில் இருந்த தமிழர்கள் , இந்திரா காந்தி கொலையுண்ட போது சீக்கியர்கள் மீது நடந்த தாக்குதல் போல நம் மீதும் தாக்குதல் வருமோ என்ற ஒருவித பயத்துடன் இருந்தததாக நண்பர்கள் சொன்னார்கள். நல்லவேளை அப்படி ஏதும் நடைபெறவில்லை. தமிழ்நாட்டில் பல அரசியல் தலைவர்கள் வெளியில் தலைகாட்டவில்லை. அரசியல் காரணமாக ராஜீவ் காந்தி கொலையின் முழு பழியும்  திமுகவின் மீது போடப்பட்டது. திமுகவினர் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் என்ற பிரச்சாரம் நடந்தது. பல இடங்களில் திமுகவினர் வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டன. இலங்கைத் தமிழர்கள் என்றாலே அவர்கள் விடுதலைப் புலிகள்தான் என்று எல்லோரையும் கருதத் தொடங்கி விட்டனர். ராஜீவ் காந்தி கொலை என்ற அனுதாப அலையால் காங்கிரஸ் அதிமுக கூட்டணி வென்றது. மத்தியில் நரசிம்மராவ் பிரதமர் ஆனார். தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதல்வர் ஆனார்.    

சென்னைக்கு ரெயிலில் சென்ற எனது தந்தையைப் பற்றி தெரிந்து கொள்ள இயலவில்லை. அப்போது செல்போன் புழக்கத்தில் இல்லாத நேரம். வீட்டிலும் போன் வசதி இல்லை.(சொந்த வீடு கட்டியதும் போன் வசதி வாங்கிக் கொள்ளலாம் என்று இருந்து விட்டோம்). அடுத்தநாள் மாலை சென்னையில் உள்ள மாமாவிடம் போனில் விசாரித்தபோது அப்பா இன்னும் வரவில்லை என்று சொன்னார். எங்களுக்கு ஒரே பதட்டம். இரண்டுநாள் கழித்து அப்பாவைப் பற்றிய தகவல் கிடைத்தது. விழுப்புரத்தில் நடு வழியில் வண்டி நிறுத்தப்பட்டு விட்டதால் ரெயில்வே குவாட்டர்சில் இருந்த சொந்தக்காரர் வீட்டில் இருந்து விட்டு சென்னைக்கு வந்துள்ளார்.சென்னையில் மேலும் இரண்டு நாட்கள் தங்கிவிட்டு இயல்புநிலை வந்த பிறகு வீட்டுக்கு வந்தார். எங்களுக்கும் நிம்மதி!

(PICTURES : THANKS TO  “ GOOGLE ”)47 comments:

 1. கிட்டத்தட்ட இதேமாதிரியான நிலைதான் அன்றைக்கு எங்களுக்கும்.

  திருச்சியில் எங்களைப் பார்க்கவந்துவிட்டு திருநெல்வேலிக்குப் பேருந்தில் புறப்பட்ட என் அப்பா அம்மாவும் மதுரையில் பேருந்து நிறுத்தப்பட்டு மறுநாள் மாலையில்தான் ஊர்சென்று சேர்ந்தார்கள். தகவல் கிடைக்கும்வரை ஏகப்பட்ட சங்கடம்.

  ReplyDelete
 2. அன்று நடந்தவைகளை அப்படியே கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள். நான் அப்போது தூத்துக்குடியில் இருந்தேன். மாடி வீட்டு வேலை பாதியில் நின்றிருந்தது. ராஜீவ் காந்தியின் தகனம் முடிந்தபிறகும் சகஜ நிலைக்கு வருவதற்கு பத்து தினங்களுக்கு மேல் ஆனது. வீட்டு வேலைக்காக விடுப்பில் இருந்த என்னால் வீட்டு வேலையையும் தொடரமுடியாமல் என் மனைவி வீட்டிலேயே அடங்கிக் கிடக்க வேண்டிய சூழல். சென்னை முழுவதுமே அரண்டு போயிருந்தது என்று திரும்பி வந்தபிறகுதான் தெரிந்துக்கொண்டேன்.

  ReplyDelete
  Replies
  1. ஜோசப் ஐயா அருமையான பொருளாதார பதிவுகள் உட்பட தமிழில் எழுதி வந்தார்கள். அவர் இப்போது எழுதாதது எனக்கு வருத்தம்.

   Delete
 3. பயங்கரவாதிகளால் தமிழகத்தில் அன்று ஏற்பட்ட நிலமையை உங்கள் அனுபவம் ஊடக அறிந்து கொண்டேன். நன்றி.

  ReplyDelete
 4. அன்று எங்கும் இதுபோல் "பரபர" தான்...

  ReplyDelete
 5. \\தெருவில் இருந்த திமுக பேனர்கள்,கொடிக் கம்பங்கள் சின்னா பின்னமாகக் கிடந்தன. திமுகவின் சின்னமான உதயசூரியன் வடிவில் இருந்த டியூப் லைட்டுகள் யாவும் உடைக்கப்பட்டு கிடந்தன.\\ அது அப்போ.........!! அதுக்கப்புறம் சோனியா அம்மா தாத்தாவுக்கு மஞ்சள் துண்டு போர்த்திவிட, தத்தா பதிலுக்கு சால்வை போர்த்திவிட இரண்டு கட்சிகளும் அடுத்த மூன்று தேர்தலில் கூட்டணி வைத்தது தான் அரசியல் என்றால் எத்தனை கேவலமானது என்பதை புரிய வைத்தது!!

  ReplyDelete
 6. மறுமொழி > சுந்தரா முத்து said...

  // கிட்டத்தட்ட இதேமாதிரியான நிலைதான் அன்றைக்கு எங்களுக்கும். திருச்சியில் எங்களைப் பார்க்கவந்துவிட்டு திருநெல்வேலிக்குப் பேருந்தில் புறப்பட்ட என் அப்பா அம்மாவும் மதுரையில் பேருந்து நிறுத்தப்பட்டு மறுநாள் மாலையில்தான் ஊர்சென்று சேர்ந்தார்கள். தகவல் கிடைக்கும்வரை ஏகப்பட்ட சங்கடம். //

  சகோதரர் எழுத்தாளர் சுந்தரா முத்து அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! அப்போது இப்போது இருப்பது போல தகவல் தொடர்பு வசதிகள், குறிப்பாக செல்போன் வசதி இல்லை. இதனால் ரொம்பவும் பதட்டமாக இருந்தது.

  ReplyDelete
 7. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...

  அன்புள்ள அய்யா டிபிஆர்.ஜோசப் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  // சென்னை முழுவதுமே அரண்டு போயிருந்தது என்று திரும்பி வந்தபிறகுதான் தெரிந்துக்கொண்டேன். //

  நன்றாகச் சொன்னீர்கள்! சென்னை மட்டுமல்ல, தமிழகமே அன்று அரண்டுதான் கிடந்தது.

  ReplyDelete
 8. மறுமொழி > வேகநரி said...

  தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 9. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...

  // இங்கும் அதே நிலைதான்! //

  புலவர் அய்யா அவர்களுக்கு வணக்கம்! தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 10. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

  // அன்று எங்கும் இதுபோல் "பரபர" தான்... //

  சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 11. மறுமொழி > Jayadev Das said...

  சகோதரர் ஜெயதேவ் தாஸ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  \\தெருவில் இருந்த திமுக பேனர்கள்,கொடிக் கம்பங்கள் சின்னா பின்னமாகக் கிடந்தன. திமுகவின் சின்னமான உதயசூரியன் வடிவில் இருந்த டியூப் லைட்டுகள் யாவும் உடைக்கப்பட்டு கிடந்தன.\\ அது அப்போ.........!!

  நானும் இப்போது அப்போது நடந்ததை மட்டுமே எழுதியுள்ளேன். அதன் பின்னர் நடந்தவற்றை இங்கு எழுதவில்லை..

  //அதுக்கப்புறம் சோனியா அம்மா தாத்தாவுக்கு மஞ்சள் துண்டு போர்த்திவிட, தத்தா பதிலுக்கு சால்வை போர்த்திவிட இரண்டு கட்சிகளும் அடுத்த மூன்று தேர்தலில் கூட்டணி வைத்தது தான் அரசியல் என்றால் எத்தனை கேவலமானது என்பதை புரிய வைத்தது!! //

  அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை என்ற எழுதப்படாத ஒரு விதியைச் சொல்லிக் கொண்டே எதையும் செய்வார்கள் இந்த அரசியல்வாதிகள். நாம்தான் முட்டாள்கள். வாஜ்பாயிக்கும் மஞ்சள் துண்டு போர்த்தி அசத்தியவர் நம் தாத்தா. முரசொலி மாறன் தகனம் வரை பிஜேபியோடு கூட்டணியில் இருந்தார். படு கில்லாடி!  ReplyDelete
 12. #ரெயில்வே குவாட்டர்சில் இருந்த சொந்தக்காரர் வீட்டில் இருந்து விட்டு சென்னைக்கு வந்துள்ளார்.#
  உங்கள் நல்ல நேரம் தங்க வீடு கிடைத்து இருக்கிறது .எத்தனை பேர் எவ்வளவு கஷ்டப் பாடு இருப்பார்கள் ?பயணிகளுக்கு இப்படி ஒரு நிலை வரவே கூடாது !
  த ம 4

  ReplyDelete
 13. இன்றைய அரசியல் இளைஞர்கள் பலருக்கு தெரியாத பலவற்றைத் தந்துள்ளீர்கள். இன்றைய அரசியலுக்கும் ராஜீவ் உதவுகிறார்.

  ReplyDelete
 14. இதைப் படித்த போது, அரசியல் கொலைகள் அதன் பின் அரங்கேறும் கலவரங்களால் சாமானியன் படும் துயர் தெளிவாகத் தெரிகிறது.
  கொலைகள் தீர்வல்ல! எனக் கருதுபவன் அதனால் ராஜீவ் கொலையானபோது நான் இங்கிருந்து, ஊடக வாயிலாக அறிந்து, தலையில் அடிக்கவே முடிந்தது.
  83 இலங்கைக் கலவரத்தில் சிங்களப் பகுதியில் கடமைபுரிந்ததால் சிக்க நேர்ந்தது.
  இதை எழுத வேண்டுமென என் தலையில் எழுதியிருந்ததால், எப்படியோ தப்பினேன்.
  கலவரம் தொடங்கி 2ம் நாள் முகாம், 5 நாள் மட்டக்களப்புச் சென்று 7ம் நாள் யாழ் /வீடு -கடைசியாகக் கட்டியிருந்த லுங்கியுடன் சென்றேன். வீட்டாருக்குத் தகவல் சொல்ல வழி இருக்கவில்லை.அவர்களும் அதிஸ்டமிருந்தால் வருவேன். என நம்பி இருந்துள்ளார்கள்.
  அது தவிர அவர்களுக்கும் வழி ஏதும் இல்லை.

  ReplyDelete
 15. அன்று இருந்த பதட்ட நிலையை அழகாக படம் பிடித்துக் காட்டிவிட்டீர்கள். நேற்று நடந்தது போலத்தான் நம் மனதில் உள்ளது. விளையாட்டுப்போல அதற்குள் 23 ஆண்டுகள் ஓடிவிட்டன. !!!!!! நேற்றைய வரலாறு நாளைய சரித்திரம் என்பது உண்மை தான்.

  ReplyDelete
 16. மும்பையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடக்குமோ என்று எங்களை நாங்களே பாதுகாக்க ஆயத்தமான நாள், மறக்கமுடியாத பதட்டம் !

  ReplyDelete
 17. //யோகன் பாரிஸ்(Johan-Paris) said... கொலைகள் தீர்வல்ல! எனக் கருதுபவன் அதனால் ராஜீவ் கொலையானபோது நான் இங்கிருந்துஇ ஊடக வாயிலாக அறிந்துஇ தலையில் அடிக்கவே முடிந்தது.//
  திரு யோகன் பாரிஸ், உங்களக்கு தலை வணங்குகிறேன். நல்ல பல இலங்கையர்களை நான் ஏற்கெனவே அறிந்துள்ளேன்.

  ReplyDelete
 18. அன்று இருந்த பட்ட னியாலி என் மனதிலும் ஓடியது. நீங்கள் சொல்வது போல் அப்பொழுது இன்டர்நெட் ,இல்லை, போன் வசதி இல்லை. அதனால் காலி எப்பொழுதும் போல் வெளியே வந்து பேப்பரை எடுத்துக் கொண்டு போய் அவரிடம் கொடுத்த போது தான் பார்த்தேன். தலைப்பு செய்தியை. அதிர்ச்சியாய் இருந்தது. எல்லோரும் முடங்கி விட்டோம் வீட்டில். தூர் தர்ஷன் மட்டும் வைத்துக் கொண்டு அன்றைய பொழுதை ஓட்டினோம்.
  உங்கள் பதிவு பழைய நினைவுகளை மீட்டெடுத்தது சார்.

  ReplyDelete
 19. தங்கள் பதிவை படித்தபோது, யாருக்கும் வெட்கம் இல்லை என்ற சொற்றொடர் எனக்கு நினைவுக்கு வருகிறது. நம் மக்களின் மறதி அரசியல்வாதிகளுக்கு சௌகரியமாக இருக்கிறது என்பது வேதனைக்கு உரியது.பழைய நிகழ்வை நினைவுக்கு கொண்டு வந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 20. மறுமொழி > Bagawanjee KA said...

  சகோதரர் பகவன்ஜீ K A அவர்களின் அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  // உங்கள் நல்ல நேரம் தங்க வீடு கிடைத்து இருக்கிறது .எத்தனை பேர் எவ்வளவு கஷ்டப் பாடு இருப்பார்கள் ?பயணிகளுக்கு இப்படி ஒரு நிலை வரவே கூடாது !
  த ம 4 //

  அப்பா தனது டைரியில் அவசரத்திற்கு என்று எழுதி வைத்த உறவினர் விலாசம் அவருக்கு தக்க சமயத்தில் உதவியது. நிறைய பயணிகள் விழுப்புரம் ரெயில் நிலையத்திலேயே தங்கி விட்டதாக அப்பா சொன்னார். தமிழ்நாட்டில் யாரேனும் முக்கிய புள்ளி இறந்தால் இவ்வாறான சங்கடங்கள் நிகழ்வது வாடிக்கை ஆகிவிட்டது.

  ReplyDelete
 21. மறுமொழி > வர்மா said...

  சகோதரர் வர்மா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 22. மறுமொழி > யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

  சகோதரர் யோகன் பாரிஸ் அவர்களின் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி! சில விஷயங்களை வெளிப்படையாக வலைப்பதிவில் எழுதுவது என்பது கத்தி மேல் நடப்பது போன்றது என்பதால் நான் எழுதவில்லை.

  ReplyDelete
 23. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

  அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!
  // அன்று இருந்த பதட்ட நிலையை அழகாக படம் பிடித்துக் காட்டிவிட்டீர்கள். நேற்று நடந்தது போலத்தான் நம் மனதில் உள்ளது. விளையாட்டுப்போல அதற்குள் 23 ஆண்டுகள் ஓடிவிட்டன. !!!!!! நேற்றைய வரலாறு நாளைய சரித்திரம் என்பது உண்மை தான்.//

  எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அன்றைய பதட்டம் என்பது 1977 புயல் வெள்ளம் போல, 2004 சுனாமி போல மறக்க முடியாத நிகழ்வாகும்.

  ReplyDelete
 24. மறுமொழி > MANO நாஞ்சில் மனோ said...

  // மும்பையில் தமிழர்கள் மீது தாக்குதல் நடக்குமோ என்று எங்களை நாங்களே பாதுகாக்க ஆயத்தமான நாள், மறக்கமுடியாத பதட்டம் ! //

  சகோதரர் நாஞ்சில் மனோ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 25. மறுமொழி > வேகநரி said... ( 2 )

  வேகநரி அவர்களின் இரண்டாம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 26. மறுமொழி > rajalakshmi paramasivam said...

  சகோதரி ராஜலஷ்மி பரமசிவம் அவர்களின் விரிவான கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 27. மறுமொழி > வே.நடனசபாபதி said...

  அய்யா வே நடனசபாபதி அவர்களின் வருகைக்கும் நீண்ட அரசியல் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 28. இப்படியான பரபரப்பு நிலையில் நாமும் வாழ்ந்துள்ளோம்.
  தமிழ் சிங்கள பரபரப்பு நிலை அது.
  மறுபடி அதை நினைக்கவே விருப்பம் இல்லை. ஆனால் நிலைமை புரிகிறது.
  இனிய வாழ்த்து அனுபவத்தைத் தந்ததற்கு.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
 29. J[[[ayadev Das said...\\தெருவில் இருந்த திமுக பேனர்கள்,கொடிக் கம்பங்கள் சின்னா பின்னமாகக் கிடந்தன. திமுகவின் சின்னமான உதயசூரியன் வடிவில் இருந்த டியூப் லைட்டுகள் யாவும் உடைக்கப்பட்டு கிடந்தன.\\ அது அப்போ.........!! அதுக்கப்புறம் சோனியா அம்மா தாத்தாவுக்கு மஞ்சள் துண்டு போர்த்திவிட, தத்தா பதிலுக்கு சால்வை போர்த்திவிட இரண்டு கட்சிகளும் அடுத்த மூன்று தேர்தலில் கூட்டணி வைத்தது தான் அரசியல் என்றால் எத்தனை கேவலமானது என்பதை புரிய வைத்தது!!]]]
  தாஸ்:
  இது எப்படி கேவலம்? திமுக ராஜீவை கொன்றது என்ற பொய்யை ஊடங்கங்கள் சொல்லி அதிமுகவை ஆட்சியை புடிக்கவைத்து. ஊடகங்கள் விளையாட்டு புரிந்தது. அப்புறம் முக சோனியா கூட்டு . இதில் என்ன கேவலம்?

  பண்டார கட்சி முகவோட கூட்டு வைச்சா ஒகே! முக சோனியாவோட கூட்டு வச்சா கேவலம். அதேமாதிரி அதிமுக சோனியாவுடன் கூட்டு வச்சாலும் ஓகே! பண்டார கட்சியோட கூட்டு வச்சாலும் ஒகே! இது என்ன அரசியலோ!?

  அது எப்படி இப்படி அப்பட்டமா biased -ஆ பேச முடியுது?

  ReplyDelete
 30. மறுமொழி > kovaikkavi said...

  சகோதரி கவிஞர் வேதா. இலங்காதிலகம். அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

  // இப்படியான பரபரப்பு நிலையில் நாமும் வாழ்ந்துள்ளோம்.
  தமிழ் சிங்கள பரபரப்பு நிலை அது. மறுபடி அதை நினைக்கவே விருப்பம் இல்லை. ஆனால் நிலைமை புரிகிறது. இனிய வாழ்த்து அனுபவத்தைத் தந்ததற்கு.//

  வாழ்க்கையில் சிலசமயம் நமக்கு வாய்க்கும் சில அனுபவங்களை நினைக்க விருப்பம் இல்லையென்றாலும் , மற்றவர்களுக்கு அதனைத் தெரியப்படுத்த நினைக்கத்தான் வேண்டி உள்ளது.

  ReplyDelete
 31. மறுமொழி > நம்பள்கி said... ( 1, 2 )

  நம்பள்கி அவர்களின் அரசியல் ரீதியான தங்களது கருத்துரைக்கு நன்றி! அரசியலில் தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொருவரும் ஒரு கட்சியை ஆதரிக்கவோ வெறுக்கவோ செய்கின்றனர்.

  ReplyDelete
 32. அன்று நடந்தவைகளை அப்படியே கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள்

  ReplyDelete
 33. இதுபோல எல்லோருக்கும் அனுபவம் ஏற்பட்டிருக்கும். எனது அனுபவங்களையும் எழுத இருக்கிறேன். அன்றைக்கும் தி.மு.க. பலிகடா. இன்றைக்கும் தி.மு.க. பலிகடாதான்.....

  ReplyDelete
 34. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said... (1,2)

  // அன்று நடந்தவைகளை அப்படியே கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள் //

  சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயகுமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

  ReplyDelete
 35. மறுமொழி > கவிப்ரியன் ஆர்க்காடு said...

  // இதுபோல எல்லோருக்கும் அனுபவம் ஏற்பட்டிருக்கும். எனது அனுபவங்களையும் எழுத இருக்கிறேன். அன்றைக்கும் தி.மு.க. பலிகடா. இன்றைக்கும் தி.மு.க. பலிகடாதான்..... //

  சகோதரர் ஆர்க்காடு கவிப்ரியன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! நீங்களும் உங்கள் அனுபவங்களைப் பதிவு செய்யுங்கள். பின்னாளில் அவைகளே வரலாற்று ஆவணங்களாக மாற வாய்ப்பு உண்டு.

  ReplyDelete
 36. சென்னையில் இருந்து காரைக்குடி ஆம்னி பேரூந்தில் அன்று இரவு திரும்பிக் கொண்டிருந்தேன். ராஜீவ் காந்தி இறந்த இடத்திற்கு மிக அருகில் எங்கள் வண்டி நிறுத்தப்பட்டு இருந்தது. முன்னாலும் பின்னாலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள். அன்று இரவு செங்கல்பட்டில் இருந்து அதிகாலை மூன்று மணிக்கு விடப்பட்ட ரயில் மூலம் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்தேன். ரயில் நிலையத்தில் இருந்த செய்தி தாளின் மூலம் ராஜிவ் படுகொலையைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது. அங்கே இருந்து வில்லிவாக்கம் நடந்தே சென்றேன்.

  ReplyDelete
 37. //இது எப்படி கேவலம்? திமுக ராஜீவை கொன்றது என்ற பொய்யை ஊடங்கங்கள் சொல்லி அதிமுகவை ஆட்சியை புடிக்கவைத்து. ஊடகங்கள் விளையாட்டு புரிந்தது. //
  நம்பள்கி:
  ராஜீவ் கொலைக்கு திமுக தான் காரணம் என்று எந்தெந்த ஊடககங்களில் வெளிப்படையாக வந்தன. கொஞ்சம் தகவல் தர முடியுமா?

  ReplyDelete
 38. மறுமொழி > ஜோதிஜி திருப்பூர் said...

  சகோதரர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 39. மறுமொழி > குட்டிபிசாசு said...
  குட்டிப் பிசாசு அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete
 40. Packirisamy N has left a new comment on your post "ராஜீவ் காந்தி கொலையான அன்று":

  அந்நாளைய பதற்றத்தை அழகாக எழுதியிருக்கிறீர்கள். இன்றுவரை கொலையாளிகளின் தொடர்புகள், உள் நாட்டுத் தொடர்புகள் சரிவர வெளிவரவில்லை. தினம் ஒரு கதை கட்டுகிறார்கள்.

  ReplyDelete
 41. மறுமொழி > Packirisamy N said...

  // அந்நாளைய பதற்றத்தை அழகாக எழுதியிருக்கிறீர்கள். இன்றுவரை கொலையாளிகளின் தொடர்புகள், உள் நாட்டுத் தொடர்புகள் சரிவர வெளிவரவில்லை. தினம் ஒரு கதை கட்டுகிறார்கள். //

  இந்த பதிவினில், அப்போது எனக்கும், மற்றவர்களுக்கும் ஏற்பட்ட அனுபவத்தை மட்டுமே சொன்னேன். மற்றைய விவகாரங்களில் நுழைய விரும்பவில்லை. சகோதரர் என் பக்கிரிசாமி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!


  ReplyDelete
 42. அந்த நாள் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. நான் தில்லி வந்து ஒரு மாதம் தான் ஆகி இருந்தது.....

  பதட்டமான சூழ்னிலையை உங்கள் எழுத்திலும் உணர முடிந்தது.

  ReplyDelete
 43. மறுமொழி >வெங்கட் நாகராஜ் said...

  // அந்த நாள் எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது. நான் தில்லி வந்து ஒரு மாதம் தான் ஆகி இருந்தது..... பதட்டமான சூழ்னிலையை உங்கள் எழுத்திலும் உணர முடிந்தது. //

  ஆமாம் அன்றைய தினம் மட்டுமல்லாது தொடர்ந்து தமிழகத்தில் (தேர்தல் சமயம் வேறு) பல நாட்கள் பதட்டமாகவே இருந்தன. சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும்.

  ReplyDelete