Friday, 25 August 2017

கில்லர்ஜியின் - தேவகோட்டை தேவதை தேவகி



தமிழ் வலைப்பதிவர்கள் மத்தியில், கில்லர்ஜி என்றால் அந்த மீசையும் அவருடைய ஊரான தேவகோட்டையும் தான் சட்டென்று மனதில் நிழலாடும்.. இவருடைய அப்பாவும் இந்த நூலின் உள்ளே உள்ள புகைப்படத்தில் முறுக்கு மீசையோடுதான் இருக்கிறார். நண்பர் கில்லர்ஜி,  மீசையை முறுக்குவதில் மட்டுமல்லாது, தனது ’பூவைப் பறிக்கக் கோடலி எதற்கு’ என்ற வலைப்பதிவில் http://killergee.blogspot.com நியாயமான சமூக காரணங்களுக்காகவும் கேள்விக் கணைகளை தொடுப்பதிலும், நகைச்சுவை மிளிர எழுதுவதிலும் வல்லவர். (எனக்கும் அவரைப் போல நகை உணர்வோடு எழுத ஆசைதான்; ஆனால் எனக்கு எப்படி பார்த்தாலும் கட்டுரை போலத்தான் அமைந்து விடுகிறது)

கில்லர்ஜியின் கனவு

கில்லர்ஜியை, புதுக்கோட்டையில் ஆசிரியர் முத்து நிலவன் அய்யா அவர்களது இல்லத்தில், முதன்முதல் சந்தித்தபோது, தனது எழுத்துக்களை நூல்வடிவில் கொண்டுவரும் முயற்சியில் இருப்பதாகச் சொன்னார். சொன்னபடியே அவருடைய கனவை நிறைவேற்றி இருக்கிறார்
.

சென்ற ஆண்டு (2016) புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் பொறியியல் கல்லூரியில், கணிணித் தமிழ்ச் சங்கம் நடத்திய, இணையத் தமிழ் பயிற்சி ஒருநாள் முகாமில் அவரைச் சந்தித்தபோது. தான் வெளியிட்டுள்ள ’ தேவகோட்டை தேவதை தேவகி’ என்ற நூலை அன்பளிப்பாக அளித்தார்.. நூலை உடனே படிக்க இயலவில்லை. வாங்கி வைத்ததோடு சரி. இப்போதுதான் படிக்க முடிந்தது. நான் முதலில் இது ஒரு நாவலாக அல்லது சிறுகதைத் தொகுதியாகவே இருக்கும் என்று எண்ணினேன். எடுத்து படிக்கும் போதுதான், இவை அனைத்தும் அவருடைய வலைப்பதிவில் வந்த அவருடைய பதிவுகள் என்று தெரிய வந்தது. கம்ப்யூட்டர் மற்றும் இண்டர்நெட் உதவியின்றி, மீண்டும் அவருடைய எழுத்துக்களை, அதே சுவாரஸ்யத்தோடு படித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.

நூலைப் பற்றி

நூலின் வடிவையும், அதன் நேர்த்தியையும் பார்க்கும் போது, அவர் ரொம்பவே மெனக்கெட்டு இருப்பது புரிகின்றது.. நூலிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் தேவகோட்டை, எமனேஸ்வரம், பெரியகுளம், வள்ளியூர், குரும்பூர் என்று ஊர்களின் பெயரை முன்னிருத்தியே செல்கின்றன. இப்படியே மொத்தம் 60 கட்டுரைகள். ஆங்காங்கே இவருடைய ஆதங்கங்களும், நகைச்சுவை உணர்வுகளும் இணைந்து வெளிப்படுகின்றன. பெரும்பாலும் கேள்வி – பதில், உரையாடல் பாணியிலேயே இருக்கின்றன. ஏமாறுவோர் உள்ளவரை, ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள் என்பதனை உணர்த்தும் பல சம்பவங்கள் காட்டப் பட்டுள்ளன.

மற்றவர்களது கருத்துரைகள்

நூலின் உள்ளே நுழைந்தவுடன் நமது அன்பிற்குப் பாத்திரமான வலைப் பதிவர்கள் முனைவர் பா.ஜம்புலிங்கம்,  தஞ்சை ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார், ஆசிரியர் வே.துளசிதரன் மற்றும் வலைச்சித்தர் பொன்.தனபாலன் ஆகியோரது கருத்துரைகள் வரவேற்கின்றன.        
                                                                                                                                                        
முனைவர் பா.ஜம்புலிங்கம் (உதவிப்பதிவாளர் (பணி நிறைவு), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்) அவர்கள் இந்த நூலை பக்கத்துக்குப் பக்கம் ரொம்பவே, ரசித்து எழுதியுள்ளார்.

// ஒவ்வொரு வீட்டிலும் கணவன் மனைவி இயல்பாக எதிர்கொள்ளும் பிரச்னைகளை விவாதிக்கும் நிலை (தேவகோட்டை, தேவதை தேவகி), பகல் கனவில் வாழ்வினை நடத்தும் சுகம் (பெரியகுளம் பெரியவர் பெரியசாமி), பேச்சாற்றலால் அமையும் நல்ல வாழ்க்கை (சென்னை செம்மொழி செண்பகவள்ளி), நிருபரிடம் அளிக்கும் பேட்டிக்கு இயல்பான மறுமொழிகளைத் தரல் (எமமேஸ்வரம் எழுத்தாளர் எமகண்டன்), நடிகை எதிர்கொள்ளும் வாழ்க்கை (கண்ணூர் கண்ணகி கருப்பாயி), வேலைக்கு சிபாரிசு செய்வதால் எழும் சிக்கல்  (அரக்கோணம் அரைக்கேனம் மரைகானம்), குழப்பம் தரும் நபரிடம் சிக்கிக்கொள்ளும் மருத்துவர் (சங்ககிரி சகுனி சடையாண்டி), வித்தியாசமாக செருப்பு தயாரித்து அனாவசிய மருத்துவச்செலவில் மாட்டிக்கொள்ளல்  (செங்கல்பட்டு செங்கல்சூளை செங்கல்வராயன்), நண்பனுக்கு அறையில் இடம் கொடுத்து புதிய பிரச்னையை உண்டாக்கிக்கொள்ளல் (மாதவனூர் மாவுடியான் மாதவன்), மனைவி காட்டும் அதீத அன்பினால் நெகிழும் கணவன் (வெள்ளையபுரம் வெள்ளந்தி வெள்ளையம்மாள்) என்ற நிலையில் ஒவ்வொரு கதையையும் வித்தியாசமான கோணத்தில் அமைத்துள்ள விதம் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது. //

நூல் விவரம்:

நூலின் பெயர்: தேவகோட்டை தேவதை தேவகி
ஆசிரியர்: கில்லர்ஜி , சாஸ்தா இல்லம், ஸ்ரீசக்தி திருமண மண்டபம் அருகில், எண்.3, தேனம்மை ஊரணி வீதி, தேவகோட்டை 630302
நூலின் விலை: ரூ 125/= ( முதற் பதிப்பு செப்டம்பர் 2016)       
பக்கங்கள்: 162 
நூல் பெற தொடர்புக்கு: K.விவேக் செல்போன் 9600688726  


பிற்சேர்க்கை (26.08.17 காலை 6.47)

இந்நூலின் ஆசிரியர் திரு கில்லர்ஜி அவர்கள், கருத்துரைப் பெட்டியில் ஒரு திருத்தம் சொல்லி இருக்கிறார்.

// நண்பருக்கு... ஒரு திருத்தம் இதில் உள்ள 60 கதைகளில் பகுதிக்கு மேல் நான் வலைப்பூவில் வெளியிடாதவையே... நூலில் வெளிட்டதால் இன்றுவரை அவைகளை வலைப்பூவில் இடாமல் இருக்கிறேன்.
மீண்டும்
கணினியில் வருவேன் கில்லர்ஜி  KILLERGEE DevakottaiSaturday, August 26, 2017 6:20:00 am //

 
               

                  (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)
 


35 comments:

  1. புத்தகம் போடும் அளவுக்கு நிறைய அவர் எழுதி இருக்கிறார் என்பதே ,அவர் திறமைக்கு எடுத்துக்காட்டு ,வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
    Replies
    1. தோழரின் கருத்துரைக்கு நன்றி. உங்களுடைய நகைச்சுவைத் துணுக்குகளும் ஒரு நூலாக அல்லது மின்னூலாக வரவேண்டும் என வாழ்த்துகிறேன்.

      Delete
  2. எழுத்து நிலையில் மிகவும் பக்குவமாகி வருகிறார் திரு கில்லர்ஜி என்பதை அவருடைய இந்த நூலைப் படிக்கும்போது உணர்ந்தேன். அவருடைய முயற்சி பாராட்டத்தக்கதாகும். தொடர்ந்து அவர் நூல்களை வெளியிட மனம் நிறைந்த வாழ்த்துகள். பகிர்ந்த உங்களுக்கு மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

      Delete
  3. நண்பருக்கு...
    ஒரு திருத்தம் இதில் உள்ள 60 கதைகளில் பகுதிக்கு மேல் நான் வலைப்பூவில் வெளியிடாதவையே...

    நூலில் வெளிட்டதால் இன்றுவரை அவைகளை வலைப்பூவில் இடாமல் இருக்கிறேன்.

    மீண்டும் கணினியில் வருவேன் - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. நூலாசிரியர் நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி. நீங்கள் சொன்ன இந்த திருத்தம் குறித்த கருத்துரையை, மேலே பதிவினில் பிற்சேர்க்கையாக இணைத்துள்ளேன்.

      Delete
    2. நண்பருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
      நான் எழுதுவது சற்று மிகையாக தோன்றலாம் இருப்பினும் நிதர்சனமான உண்மை.

      நேற்றிரவு உறங்கும் பொழுது நாம் யார், யாருக்கு நூல் கொடுத்தோம் என்று நினைவு கூறும் பொழுது அவ்வரிசையில் நீங்களும் வந்தீர்கள் முனைவர் திரு. பி, ஜம்புலிங்கம் அவர்களது தளத்தில் நீங்களும் விமர்சனம் எழுதுவதாக சொல்லி இருந்ததும் நினைவில் வந்தது கூடவே அவர் ஏன் இன்னும் எழுதில்லை ? என்ற சிந்தையும்...

      காலையில் ஆறு மணிக்கு எனது செல்லில் முதலில் கண்டது தங்களது விமர்சனமே,,, இன்னும் எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது

      எனது கருத்தையும் பதிவில் இணைத்தமைக்கு மனம் நிறைந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

      அன்புடன்
      கில்லர்ஜி தேவகோட்டை

      Delete
    3. நண்பர் கில்லர்ஜி அவர்களின் மீள் வருகைக்கு நன்றி; நாம் ஒருவரை நினைத்துக் கொண்டு இருப்போம்; அவரே திடீர் விருந்தாளியாக நமது வீட்டிற்கு வருவார். நாம் ஆச்சரியமாக அவரிடம் “ உங்களுக்கு ஆயுசு நூறு; இப்போதுதான் உங்களை நினைத்தேன்” என்போம். இதுபோல் நிறையவே சொல்லலாம். இதனை ஆங்கிலத்தில் டெலிபதி (telepathy) என்று சொல்லுகிறார்கள்.

      மறைமலை அடிகள் அவர்கள்,இந்த டெலிபதி பற்றி ஒருநூலை, ‘தொலைவிலுணர்தல்’ என்ற தலைப்பில் பல எடுத்துக் காட்டுகளுடன் எழுதி உள்ளார். வாய்ப்பு கிடைத்தால் இந்த நூலை படித்துப் பாருங்கள்.

      Delete
  4. வாழ்த்துகளும், பாராட்டுகளும் கில்லர்ஜி. பகிர்வுக்கு நன்றி தமிழ் இளங்கோ ஸார்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களுக்கு நன்றி.

      Delete
  5. அருமையானநூல் ஐயா
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அவர்களுக்கு நன்றி.

      Delete
  6. அருமையான விமர்சனம்! வாழ்த்துகள்! பாராட்டுகள்! கில்லர்ஜி அவர்களுக்கு. மேன்மேலும் படைத்திடவும் வாழ்த்துகள்! தங்களுக்கும் எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளுடன் நன்றியும்!

    துளசி, கீதா

    ReplyDelete
    Replies
    1. நண்பர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  7. கில்லர்ஜிக்குப் பாராட்டுகள். நல்ல விமரிசனம். வாழ்த்துகள். த ம

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.

    சகோ தமிழ் இளங்கோ ,அருமையான விமர்சனம் .
    இருவருக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. நூல்களைப் பெற்றவர்கள் படித்துக் கருத்திடுவார் என்னும்நம்பிக்கையே பல நூல் வெளியிடுபவருக்கும் ஆனால் என் செய்ய பலமுறை ஏமாற்றமே மிஞ்சுகிறது எனக்குக் கிடைக்கும் நூல்கள் பல வாசிக்கப்படாமலேயே இருக்கிறது நான் எப்படிக்குறை பட்டுக் கொள்ள முடியும் அதனால்தானோ என்னவோ நான் மின்னூல்களாக வெளியிட்டுள்ளேன்

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் ஜீஎம்பி அவர்களது வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி. கடந்த சில மாதங்களாக என்னால் முழுமையாக எழுதவோ, படிக்கவோ இயலாத குடும்ப சூழ்நிலை. நீங்கள் எனக்கு அன்பளிப்பாக தந்த மின்னூல் நினைவில் இருக்கிறது அய்யா. விரைவில் படித்து விடுவேன்.

      Delete
  10. வாழ்த்துகள் கில்லர்ஜி. இன்னும் படிக்கக் கிடைக்கவில்லை.... தமிழகம் வரும் போதுதான் வாங்க வேண்டும்....

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  11. 'பதிவில் வராதவை' சுவாரசியத்தைக் கூட்டுகிறது. புத்தகத்தைப் படிக்கத் தூண்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய மூன்றாம்சுழி அப்பாத்துரை அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  12. கில்லர்ஜியின் எழுத்துக்கள் அருமையான உண்மையான பல சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது என எண்ணுகிறேன். மிக அருமையாகவும் அதே சமயம் நகைச்சுவை உணர்வு குறையாமலும் எழுதுவார். புத்தக வெளியீடு குறித்து ஏற்கெனவே படித்தேன். புத்தக விமரிசனமும் அருமை! புத்தகம் விற்பனை ஆகவும் வாழ்த்துகள். நல்லதொரு விமரிசனம்.

    ReplyDelete
  13. கில்லர்ஜி க்கு வாழ்த்துக்கள். எங்கள்புளொக்கில் கில்லர்ஜி யின் படத்தோடு இப்போஸ்ட் பார்த்ததும் கில்லர்ஜி தான் நியூ போஸ்ட் போட்டிருக்கிறார்.. எனக்கு காட்டவில்லையே ஏன் என எண்ணியவாறே திறந்தேன்ன்.. ஹா ஹா ஹா இங்கு கொண்டு வந்து விட்டு விட்டது.. பார்த்ததும் கொமெண்ட் போடாமல் போக மனம் வரவில்லை.

    வெரி சோரி:) ஒரு திருத்தம் கில்லர்ஜி க்கு முறுக்கு மீசை இல்லை:).. ஹா ஹா ஹா மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்:).

    ReplyDelete
    Replies
    1. எங்கள் ப்ளாக் வழியே வந்து கருத்துரை தந்த சகோதரி அவர்களுக்கும் வழி சொன்ன எங்கள் ப்ளாக்கிற்கும் எனது நன்றி.

      // வெரி சோரி:) ஒரு திருத்தம் கில்லர்ஜி க்கு முறுக்கு மீசை இல்லை:).. ஹா ஹா ஹா மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்:). //

      பொதுவாகவே பெரிய மீசையை வைத்து இருப்பவர்கள், அந்த மீசை மேல் நோக்கி இருந்தாலும், கீழ்நோக்கி இருந்தாலும் முறுக்கிக் கொண்டுதான் இருப்பார்கள். ( பெரிய தாடி வைத்து இருப்பவர்கள், அதனை எப்போதும் தடவிக் கொண்டும் இழுத்துக் கொண்டும் இருப்பதைப் போல) கில்லர்ஜி மீசையும் அப்படித்தான் தெரிகிறது. (ஓரளவு சமாளித்து பதில் சொல்லி விட்டேன் என்று நினைக்கிறேன்)

      இதற்கு கில்லர்ஜிதான் பதில் சொல்ல வேண்டும்.

      Delete
  14. தேவக்கோட்டை திரு கில்லர்ஜி அவர்களின் ‘தேவக்கோட்டை தேவதை தேவகி’ என்ற நூலை அறிமுகம் செய்ததற்கு நன்றி. திரு கில்லர்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள்!நானும் இந்த நூல் பற்றி மதிப்புரை எழுத நினத்தேன். என்னவோ தெரியவில்லை. அந்த பணி தள்ளிப்போய் விட்டது அந்த குறையை தாங்கள் பூர்த்தி செய்துவிட்டீர்கள். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் V.N.S அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  15. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. எழுத்தாளர் விமலன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  16. எழுத்தாளர் ஆரண்ய நிவாஸ் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  17. "தேவக்கோட்டை தேவதை தேவகி" என்னும் இந்நூல் எனக்கும் பரிசாக கிடைத்தது. நண்பர் கில்லர்ஜி அவர்களே எனக்கு பரிசாக அனுப்பி வைத்தார்கள்... பார்த்தேன்.... படித்தேன்... பரவசம் கொண்டேன்.... வாழ்த்துக்களுடன்... நண்பர் சிவா

    ReplyDelete