Friday 15 May 2015

நரகமும் பாவமன்னிப்பு சீட்டும்


(இப்போது தினசரி செய்திகளாக கோர்ட், வழக்கு, வாய்தா, சாட்சி, தீர்ப்பு என்று படித்ததன் விளைவாக மனத்துள் எழுந்த கட்டுரை இது)    

முன்பெல்லாம், நான் பள்ளி மாணவனாக இருந்த காலத்தில் திருச்சி பெரிய கடைவீதியில், எல்லா ஞாயிறும், பெரும்பாலும் எல்லா கடைகளுக்கும் விடுமுறையாக கடைகள் மூடியே இருக்கும். அந்நாட்களில் மாலை வேளைகளில் அந்த கடைகளின் வாசலில் பழைய புத்தகங்கள், காலண்டர் வியாபாரம் செய்பவர்கள் தரைக்கடை வியாபாரம் செய்வார்கள். காலண்டர் வியாபாரிகள் ஒன்றிரண்டு படங்களை கடைகளை மூடியிருக்கும் ஷட்டர்களில் (அனுமதியோடுதான்) தொங்க விட்டு இருப்பார்கள். அவற்றுள் ஒன்று, இறந்த பிறகு, மனிதனுக்கு நரகத்தில் கிடைக்கும், அவன் செய்த பாவங்களுக்கான தண்டனைகள் பற்றியது. அதிலுள்ள தண்டனைகளைப் பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கும். இந்த மாதிரி படங்களை யாரும் வாங்கி வீட்டில் மாட்டியதாகத் தெரியவில்லை. இப்போதும் இதுமாதிரி படங்கள் விற்பனைக்கு வருகின்றனவா என்றும் தெரியவில்லை.

கிட்டத்தட்ட எல்லா மதத்திலும் பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் என்ற நம்பிக்கைகள் உள்ளன; “அவரவர் செய்த பாவங்களுக்கு ஏற்ப கடவுளின் தண்டனை உண்டு; பாவம் செய்தவர்கள் நரகத்தை அடைந்து தாங்க முடியாத துன்பங்களை அடைவார்கள் என்ற நம்பிக்கை உண்டு. பாவம் புண்ணியம் பற்றி கவிஞர் கண்ணதாசன் தனது அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலில் விரிவாகவே சொல்லி இருக்கிறார். இந்த பாவங்களெல்லாம் மன்னிக்கக் கூடியவைகளே என்று சொல்லி, ஐரோப்பாவில்  பாவமன்னிப்பு சீட்டுக்கள் விற்று காசு பார்த்த காலமும் உண்டு.

நரக நம்பிக்கை:

இந்த நரகத்தைப் பற்றி சொல்லும் போது கிட்டத்தட்ட எல்லோரும் ஒரே மாதிரிதான் சொல்கிறார்கள். அதாவது இது ஒரு தனி உலகம். இறந்து போன ஆத்மாககளில் பாவம் செய்த ஆத்மாககளை  தனியாக அடைத்து தண்டிக்கும் உலைக்கூடம்.  கிட்டத்தட்ட ஒரு பிருமாண்டமான சிறைச்சாலை.. முள் கட்டையால் அடித்தல், சூலம் போன்ற ஆயுதங்களால் குத்துதல், கொதிக்கும் எண்ணெய்க் கொப்பறையில் போட்டு எடுத்தல், அக்னி குண்டத்தில் வாட்டுதல் போன்ற காரியங்கள் செய்தல். எல்லாமே கற்பனைதான். இப்படி பயங்கரமாக சொன்னாலும், இன்றைய மக்கள் யாரும் பயந்த மாதிரிதான் தெரியவில்லை. அவரவர் தெரிந்தும் தெரியாமலும் பாவங்களை செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இருந்தாலும் நரகம் சம்பந்தப்பட்ட, இண்டர்நெட்டில் பார்த்த சில படங்களை இங்கு தந்துள்ளேன்.


நரகம் என்றதும் எனக்கு சட்டென்று நினைவுக்கு வருவது ஸ்ரீ கருட புராணம். இந்த புராணத்தை வாங்கியதிலிருந்து மூன்று தடவை படித்து இருக்கிறேன். இந்த புராணம் பற்றி, அதிகம் சொல்ல வேண்டியது இல்லை. ஏனெனில், விக்ரம் நடித்த ‘அந்நியன் திரைப்படம் வந்த பிறகு இந்த புராணம், தமிழ் கூறு நல்லுலகில் பிரசித்தமாகி விட்டது. இந்த நூலில் 28 வகை நரகங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளன.

1. பிறன் பொருள் கொள்ளை அடிப்போர்க்கு தாமிஸிர நரகம்.
2.
கணவன் (அ) மனைவியை வஞ்சித்து வாழ்வோர்க்கு அநித்தாமிஸ்ர நரகம்.
3.
சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் அடைவது ரௌரவ நரகம்.
4.
குரு என்னும் அகோரமான்கள் பாவிகளைத் துன்புறுத்தும் நரகம் மஹா ரௌரவம்.
5.
தன் சுவைக்காக உயிர்க்கொலை, சித்திரவதை செய்வோர்க்கு கும்பீபாகம்.
6.
பெற்றோர், மற்ற பெரியோர்களைத் துன்புறுத்துவோர்க்கு கால சூத்திரம்.
7.
தெய்வ நிந்தனை, தன் தர்மத்தை விடுத்தோர்க்கு அசிபத்திரம்.
8.
கொடியர், அநீதியாளர், அக்கிரமக் காரர்களுக்குப் பன்றி முகம்.
9.
துரோகம், கொலை, சித்திரவதைச் செய்வோர்க்கான நரகம் அந்த கூபம்.
10.
நல்லொழுக்கம் நீக்கி, கிருமிகள் போல் பிறரைத் துளைப்போர்க்கானது கிருமிபோஜனம்.
11.
பிறர் பொருளை அபகரிப்போர், பலாத்காரம் செய்வோர்க்கு அக்கினி குண்டம்.
12.
கூடா ஒழுக்கம் கொண்ட மோக வெறியர்களுக்கு வஜ்ர கண்டகம்.
13.
தரங்கெட்டு எல்லோருடனும் பழகித் திரியும் மோகாந்தகாரப் பாவிகள் பெறும் நரகம் சான்மலி.
14.
அதிகார வெறி, கபட வேஷம், நயவஞ்சகம் செய்யும் அதர்மிகளுக்கு வைதரணி.
15.
ஒழுங்கின்றி இழிமகளைக் கூடி லட்சியமின்றி விலங்குகளைப் போல் திரிவோர்க்கான நரகம் பூபோதம்.
16.
பிராணிகளைத் துன்புறுத்தல், கொல்லுதல் செய்வோர்க்கு பிராணி ரோதம்.
17.
டம்பத்திற்காக யாகம் புரியும் பித்தலாட்டக்காரர்களுக்கு விசஸனம்.
18.
இல்லாளை விபரீத இச்சைக்கு வற்புறுத்துவோர்க்கானது லாலா பக்ஷம்.
19.
தீ வைத்தல், சூறையாடல், விஷமூட்டல், குடிகளைக் கொல்வோர்க்கு சாரமேயாதனம்.
20.
பொய்ச் சாட்சி கூறுவோர், அகம்பாவம் கொண்டோர்க்கானது அவீசி.
21.
மது, போதைப் பொருள், குடியுள்ள குடிகேடர்களுக்கு பரிபாதளம்.
22.
தானே பெரியோன் எனப் பறை சாற்றிப் பிறரை மதியாதவர்க்கு க்ஷரகர்த்தமம்.
23.
நரமேதயாகம், நரமாமிசம் உண்ணல், பிராணிகள் வதை ஆகியவற்றுக்கு ரக்ஷணம்.
24.
தற்கொலை, நயவஞ்சகக் கொலை, நம்பிக்கைத் துரோகம் செய்த பாவிகளுக்கு சூலரோதம்.
25.
தீமை புரிந்த தீயோர், துரோகிகளுக்கானது தந்த சூகம்.
26.
உயிர்க்கொலை செய்வோர்க்கு வடாரோதம்.
27.
விருந்தினரை வெறுத்தோர், சுயநல வாதிகளுக்கானது பர்வாவர்த்தகைம்.
28.
செல்வம், செல்வாக்கால் கர்வம், அநியாயமாகப் பொருள் ஈட்டல், பதுக்கி வைத்தல் போன்றவை செய்வோர்க்கு சூசி முகம்.

(நன்றி: தினமலர்)

                                                                 
இதில் கூறப்பட்டவை அனைத்தும் நடக்குமா என்று எனக்கு தெரியாது.  

பாவமன்னிப்பு சீட்டு:


ஐரோப்பாவில் ஒரு காலத்தில் ( 11 தொடங்கி 15, 16 ஆம் நூற்றாண்டுகளில்) INDULGENCES எனப்படும் பாவமன்னிப்பு சீட்டுகள் கிறிஸ்தவ ஆலயங்களில் விற்கப்பட்டன. இதன்படி ஒவ்வொரு பாவத்திற்கும் ஒரு விலை நிர்ணயிக்கப்பட்து. இதன்படி அந்த பாவமன்னிப்பு சீட்டை வாங்கினால் (எந்த பாவத்திற்காக வாங்கினாரோ)  அவர் செய்த அந்த பாவம் அவரை விட்டு நீங்கி விடும். பாவம் செய்யும் ஒவ்வொரு தடவையும் வாங்க வேண்டும். எனவே பாவம் செய்த ஒவ்வொருவரும இவற்றை வாங்கியவுடன் அவர்கள் செய்த பாவம் அவர்களை விட்டு நீங்கி விடும்; பாவமன்னிப்பு பெற்று புனிதமடைந்து விடுவார்கள் என்ற கருத்து பரப்பப் பட்டது. ரோமில் இருந்த St. Peter's Basilica  போன்ற  கிறிஸ்தவ ஆலயங்களை புதுப்பிப்பதற்கும் , தேவாலய செலவுகளுக்கும் என்று இவை விற்கப்பட்டாலும், அந்நாளைய கிறிஸ்தவ பாதிரிமார்களின் ஆடம்பர செலவுகளுக்கே அதிகம் செலவழிக்கப்பட்டது. அப்புறம் காலப்போக்கில் இந்தமுறை நீங்கி விட்டது.


இந்த விவகாரத்தில் JOHANN TETZEL (1465 -1519) என்ற ஜெர்மானிய பாதிரியாரின் பெயர் நிரம்பவும் அடிபட்டது. இவர் ஊர் ஊராகச் சென்று பாவமன்னிப்பு சீட்டுக்களை பொது இடங்களில் விற்றார். இந்த பாவமன்னிப்பு சீட்டுக்களை வாங்குவதன் மூலம், மூடநம்பிக்கை மிகுந்தவர்கள், தாங்கள் நரகத்திற்கு செல்ல மாட்டோம் என்று நம்பினார்கள். இன்னும் சிலர் இந்த சீட்டுக்களை இறந்து போன தங்கள் உறவினர்களுக்காகவும் வாங்கி அவர்களது பாவங்களைப் போக்கினார்கள்.

இந்த முறையைக் கடுமையாகக் கண்டித்தவர் மார்ட்டின் லூதர் (MARTIN LUTHER (1483 - 1546) எனப்படும் சீர்திருத்தவாதி. இதுபற்றி இவர் எழுதிய ‘Ninety-Five Theses என்ற நூலில் இவரது கருத்துக்களைக் காணலாம்.

பெரியார் சொன்ன குட்டிக்கதை:

இந்த பாவமன்னிப்பு சீட்டு சம்பந்தமாக பெரியார் சொன்ன ஒரு சின்னக் கதையும் உண்டு.அதன் சுருக்கம் இங்கே.

ஒரு பாதிரியார் பாவங்களைப் போக்கும் பாவமன்னிப்பு சீட்டுக்களை விற்று வந்தார். அவரிடம் ஒருவன் தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரமாக பாவமன்னிப்பு சீட்டுக்களை வாங்கி வந்தான். ஒருநாள் அவன் அந்த பாதிரியிடம் “அய்யா இதுநாள் வரை நான் செய்த பாவங்களுக்கு மட்டும் பாவமன்னிப்பு சீட்டு வாங்கி வந்தேன். இனிமேல் நான் செய்யப் போகும் பாவங்களுக்கும் முன் கூட்டியே சீட்டுக்கள் வாங்கிக் கொள்ளலாமா? என்று கேட்டான். அதற்கு பாதிரியாரும் சம்மதம் தெரிவித்தார். உடனே பணம் கொடுத்து சில சீட்டுக்களை வாங்கிக் கொண்டான். அவன் ஒரு திருடன். திருடுவது அவன் தொழில். எனவே அவன் சிலநாள் கழித்து, இரவில் அந்த பாதிரியின் வீட்டிலேயே நுழைந்து, கத்தியைக் காட்டி இருக்கும் பணம் எல்லாவற்றையும் கொடுக்கும்படி மிரட்டினான். பாதிரியார் “நீ நரகத்திற்குத்தான் செல்வாய் என்று அலறினார். அந்த திருடனோ சாவகாசமாக அதற்காகத்தான் முன் கூட்டியே உங்களிடமிருந்து பாவமன்னிப்பு சீட்டுகள் வாங்கி விட்டேன் என்று , அந்த சீட்டுக்களை காட்டிவிட்டு, அவரிடமிருந்த பணம் யாவற்றையும் கொள்ளையடித்து சென்று விட்டான்.

இந்த பாவமன்னிப்பு சீட்டுகளும் இப்போதும் பரிகாரம் என்ற பெயரில் சிலரால் செய்யப்படும் பணம் பறிக்கும் சமாச்சாரங்களும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருக்கின்றன.


                          (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)

கட்டுரை எழுத உதவியவை(நன்றியுடன்):
Wikipedia  (English & Tamil)
ஸ்ரீ கருட புராணம் (பிரேமா பிரசுரம்,சென்னை)
தினமலர் மற்றும் விடுதலை


29 comments:

  1. நல்ல உதாரணங்கள். அருமையான புகைப்படங்கள். நல்ல அலசல். நீதிக்கதையாகக் கூறினாலும் சரி, மிரட்டினாலும் சரி அவரவர்கள் திருந்தினால்தான் நல்ல வழி பிறக்கும். ஆனால் அதற்கு இப்போதைய சூழலில் வழி இல்லை. இவை போன்ற கதைகள் நம்மை பக்குவப்படுத்துவனவாகவே உள்ளன. கொஞ்சம் மனசாட்சி உள்ளவர்கள் இதுபோன்ற கதைகளையோ, நிகழ்வுகளையோ படிக்கும்போது சற்று திருந்த வாய்ப்பு உண்டு. மற்றவர்களை எந்தக் கணக்கிலும் எடுத்துக்கொள்ளமுடியாது.

    ReplyDelete
  2. அடப் பாவமே ,பாவ மன்னிப்பு சீட்டா ,இப்படியுமா மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள் :)

    ReplyDelete
  3. பாவ மன்னிப்புச் சீட்டும்
    கோவிலில் செய்யப்படுகின்ற பரிகாரங்களும்
    ஒன்றாகத்தான் இருக்கிறது ஐயா
    ஆனால் தவறு செய்கிறவர்கள் யார் பயப்படுகிறார்கள்
    தவறு செய்யாதவர்கள்தான் பயந்து பயந்து வாழ வேண்டியிருக்கிறது
    நன்றி ஐயா
    தம 2

    ReplyDelete
  4. கடவுள் பேரில் பக்தியும், பெரியவர்கள் பேரில் மதிப்பும் முன்பு இருந்ததால் பாவ புண்ணியம் பற்றியும் சொர்க்கம் மற்றும் நரகம் போன்றவைகளையும் நம்பினார்கள். அதனால் குற்றம் செய்ய தயங்கினார்கள். இப்போது நிலைமையே வேறு.
    கடவுளின் பேரை சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றுவோர் மகிழ்ச்சியாய் வாழ்வதை பார்த்து பலருக்கு நம்பிக்கையே போய்விட்டது என நினைக்கிறேன்.

    ReplyDelete
  5. மார்டின் துவங்கியது தான் ப்ராடேஸ்ட்டன்ட் பிரிவு...
    அருமையான பதிவு
    தம +
    இணைப்புடன் வாட்சப்பில் போடுகிறேன் ..

    ReplyDelete
  6. இப்போதும் இந்த பாவ மன்னிப்பு நாடகங்கள் நடந்து கொண்டுதானே இருக்கின்றன.

    ReplyDelete
  7. அனைத்திலும் பணம்...!

    குட்டிக்கதை ஹா... ஹா...

    ReplyDelete
  8. பணம்தான் அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கும் பாவ மன்னிப்புச் சீட்டு!
    விரிவான அலசல் பதிவு!

    ReplyDelete

  9. ஐரோப்பாவில் INDULGENCES எனப்படும் பாவமன்னிப்பு சீட்டுகளை விட பாவம் – புண்ணியம் பற்றி கவிஞர் கண்ணதாசன் தனது ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ என்னும் நூலில் விரிவாக உரைத்திருப்பதே மெய். இந்நிலை உணர்ந்தும் புண்ணியம் செய்வோர் குறைந்து பாவம் செய்வோர் பெருகி வருகின்றனரே!

    ReplyDelete
  10. படிப்பதற்கு எல்லாம் சுவாரசியமாகவே இருக்கிறது how you gonna feel about the things you;ll say on the judgement day என்ற கிருத்தவர்களின் பாட்டு ஒன்று நினைவில் ஓடியது

    ReplyDelete
  11. பாவ புண்ணியங்கள், பாவ மன்னிப்பு போன்றவை பற்றிய மிகவும் சுவையான பல தகவல்களைத் திரட்டிக் கொடுத்துள்ளீர்கள். கடுமையான உழைப்புக்குப் பாராட்டுகள்.

    ReplyDelete
  12. பொருத்தமான படங்களாக திரட்டித்தந்துள்ளது பதிவுக்கு மேலும் மெருகூட்டியுள்ளது. :)

    ReplyDelete
  13. மறுமொழி > சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

    அய்யா Dr B.ஜம்புலிங்கம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    // நல்ல உதாரணங்கள். அருமையான புகைப்படங்கள். நல்ல அலசல். //

    தங்கள் பாராட்டிற்கு நன்றி.

    // நீதிக்கதையாகக் கூறினாலும் சரி, மிரட்டினாலும் சரி அவரவர்கள் திருந்தினால்தான் நல்ல வழி பிறக்கும். ஆனால் அதற்கு இப்போதைய சூழலில் வழி இல்லை. இவை போன்ற கதைகள் நம்மை பக்குவப்படுத்துவனவாகவே உள்ளன.//

    ஆமாம் அய்யா! இவை போன்ற கதைகள் நம்மைப் போன்றவர்கள் மனதை பக்குவப்படுத்துவனவாக உள்ளன

    // கொஞ்சம் மனசாட்சி உள்ளவர்கள் இதுபோன்ற கதைகளையோ, நிகழ்வுகளையோ படிக்கும்போது சற்று திருந்த வாய்ப்பு உண்டு. மற்றவர்களை எந்தக் கணக்கிலும் எடுத்துக்கொள்ளமுடியாது. //

    எல்லா காலத்தும் பழி, பாவம் போன்ற எதற்கும் அஞ்சாத ஆசாமிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

    ReplyDelete
  14. மறுமொழி > Bagawanjee KA said...

    // அடப் பாவமே ,பாவ மன்னிப்பு சீட்டா ,இப்படியுமா மக்களை ஏமாற்றி இருக்கிறார்கள் :) //

    இதுவும் ஒருவகை சீட்டு மோசடிதான். கருத்துரை தந்த சகோதரர் கே.ஏ. பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  15. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...

    கருத்துரை தந்த கரந்தை ஆசிரியர், சகோதரர் ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.

    // பாவ மன்னிப்புச் சீட்டும் கோவிலில் செய்யப்படுகின்ற பரிகாரங்களும் ஒன்றாகத்தான் இருக்கிறது ஐயா
    ஆனால் தவறு செய்கிறவர்கள் யார் பயப்படுகிறார்கள்
    தவறு செய்யாதவர்கள்தான் பயந்து பயந்து வாழ வேண்டியிருக்கிறது நன்றி ஐயா தம 2 //

    தவறு செய்ய அஞ்சாதவர்கள்; அதனால்தான் அரசியல்வாதி ஆகிறார்கள். அதிகாரத்திற்கு வர ஆசைப்படுகிறார்கள்.

    ReplyDelete
  16. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    கருத்துரை தந்த V.N.S அவர்களுக்கு நன்றி.

    // கடவுள் பேரில் பக்தியும், பெரியவர்கள் பேரில் மதிப்பும் முன்பு இருந்ததால் பாவ புண்ணியம் பற்றியும் சொர்க்கம் மற்றும் நரகம் போன்றவைகளையும் நம்பினார்கள். அதனால் குற்றம் செய்ய தயங்கினார்கள். //

    ஆம் அய்யா! உண்மையான தெய்வ நம்பிக்கை என்பது வேறு. இது மாதிரியான சில கதைகள், மக்கள் தீயவழியில் செல்ல அச்சத்தை உண்டு பண்ணின. ஆனலும் மூட நம்பிக்கை கதைகள் என்று ஒதுக்கப்பட்டன.

    // இப்போது நிலைமையே வேறு. கடவுளின் பேரை சொல்லிக்கொண்டு மக்களை ஏமாற்றுவோர் மகிழ்ச்சியாய் வாழ்வதை பார்த்து பலருக்கு நம்பிக்கையே போய்விட்டது என நினைக்கிறேன். //

    இப்போது எந்தக் கதை சொன்னாலும் யாரும் பயப்படுவதில்லை. சட்டத்திற்கும் பயப்படாத காலம். ஆனாலும் தெய்வம் தண்டிக்கும் என்ற தர்மநீதி எண்ணம் இன்னும் முற்றிலும் மறையவில்லை.

    ReplyDelete
  17. மனிதன் தன்னுடைய தவறுகளால் குற்றம் செய்துவிட்டோமோ எனும் உணர்விலிருந்து விடுவித்துக் கொள்ள பயன்படுத்தியதுதான் இறப்புக்குப் பின் தண்டனை என்பதும் பாவ மன்னிப்பு போன்ற கருத்தாளுமைகள்..... உங்கள் கட்டுரையைப் படித்த பின் தோன்றியது நரகம்னு ஒன்று இருந்தா நன்றாக இருக்கும்...

    ReplyDelete
  18. மறுமொழி > Mathu S said...

    ஆசிரியர் எஸ்.மது அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    // மார்டின் துவங்கியது தான் ப்ராடேஸ்ட்டன்ட் பிரிவு...
    அருமையான பதிவு தம + இணைப்புடன் வாட்சப்பில் போடுகிறேன் .. //

    நீங்கள் வாட்ஸ் அப் – இல் போட்ட பின்பு யார் யார், எப்படி எப்படி வாட்டுவார்கள் என்று தெரியவில்லை. (நான் இன்னும் வாட்ஸ் அப் – இல் பதிவு செய்து கொள்ளவில்லை)

    ReplyDelete
  19. மறுமொழி > பழனி. கந்தசாமி said...

    கருத்துரை தந்த முனைவர் அவர்களுக்கு நன்றி.

    // இப்போதும் இந்த பாவ மன்னிப்பு நாடகங்கள் நடந்து கொண்டுதானே இருக்கின்றன. //

    ”இந்த நாடகம் அந்த மேடையில் இன்னும் எத்தனை நாளம்மா?” – என்ற திரைப்படப் பாடல் வரி (படம்: பாலும் பழமும்) நினைவுக்கு வந்தது.

    ReplyDelete
  20. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    கருத்துரை தந்த சகோதரருக்கு நன்றி.

    // அனைத்திலும் பணம்...! குட்டிக்கதை ஹா... ஹா... //

    உங்கள் பாணியில் சொல்வதானால் “காசேதான் கடவுளப்பா! அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா”

    ReplyDelete
  21. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...

    // பணம்தான் அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கும் பாவ மன்னிப்புச் சீட்டு! விரிவான அலசல் பதிவு! //

    ஆனாலும் பணம் அனைவருக்கும் தேவைப் படுகிறதே. புலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  22. மறுமொழி > Yarlpavanan Kasirajalingam said...

    கவிஞர் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    ReplyDelete
  23. அய்யா G.M B அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

    // படிப்பதற்கு எல்லாம் சுவாரசியமாகவே இருக்கிறது how you gonna feel about the things you;ll say on the judgement day என்ற கிருத்தவர்களின் பாட்டு ஒன்று நினைவில் ஓடியது //

    நீங்கள் சொன்ன பாடலை கூகிளில் தேடினேன். ஒரே பாடல் வரியில் நிறைய பாடகர்கள். Metrolyrics - இல் முழு பாடல். ரசிக்கும்படி இருந்தது. (கீழே சில வரிகள்) சொன்னதற்கு நன்றி.

    Hard to find a way to get through, it's a tragedy
    Pulling at me like the stars do, you're like gravity
    Even if the wind blows
    It makes it hard to believe
    How you gonna love, how you gonna feel?
    How you gonna live your life like the dream you have is real?
    If you lost your way, I will keep you safe
    We'll open up all the world inside, see it come alive tonight

    - www.metrolyrics.com/safe-lyrics-westlife.html

    ReplyDelete
  24. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... ( 1 , 2)

    அன்புள்ள V.G.K அவர்களின் கருத்துரைக்கு நன்றி. கால் காயத்துடன், கட்டுடன் வீட்டிலேயே எவ்வளவு நாள்தான் அடைந்து கிடப்பது? எனவே என்னால் முடிந்ததை எழுதி வருகிறேன்.

    ReplyDelete
  25. மறுமொழி > ezhil said...

    // மனிதன் தன்னுடைய தவறுகளால் குற்றம் செய்து விட்டோமோ எனும் உணர்விலிருந்து விடுவித்துக் கொள்ள பயன்படுத்தியதுதான் இறப்புக்குப் பின் தண்டனை என்பதும் பாவ மன்னிப்பு போன்ற கருத்தாளுமைகள்..... உங்கள் கட்டுரையைப் படித்த பின் தோன்றியது நரகம்னு ஒன்று இருந்தா நன்றாக இருக்கும்... //

    சகோதரி அவர்களே நீங்களே, ”நரகம்னு ஒன்று இருந்தா நன்றாக இருக்கும்..” . என்று இப்படி சொன்னால் எப்படி? பெரும்பாலான (மேலே சொன்ன) இந்த பாவம் செய்பவர்கள், அனைவருமே இந்த ஆணாதிக்க நபர்களே, என்பதால் இப்படி வெறுத்து விட்டீர்கள் போலத் தெரிகிறது. ஒரு விதத்தில் இதுவும் சரிதான். இந்த நரக தண்டனையும், இப்போது இருப்பவர்களுக்கு தெரியும்படி இருந்தால் இன்னும் நல்லது.

    ReplyDelete
  26. பாவ மன்னிப்பு சீட்டா ...பாவமன்னிபு டே என்று ஒரு நாள் சர்ச்சுகளில் நடக்கும். அங்கு ஒரு கூண்டுக்குள் ஒரு பாதிரியார் அமர்ந்திருப்பார். அதில் இருக்கும் ஒரு காப்வழியாக மண்டியிட்டு நாம் செய்த பாவங்களை வரிசைப்படுத்தி ரகசியம் கூறுவது போல் பக்தர்கள் கூறுவார்கள். யேசு பிரான் மன்னிப்பார்...இறைவனிடம் மன்றாடுகின்ரேன் என்று பாதிரியார் சொல்லி நெற்றியில் சிலுவை வரைவார். இது நமது பரிகாரகங்கள் போலத்தான் என்றாலும்...இது ஒரு மன உளைச்சலிலிருந்து விலக உதவும் ஒரு உத்தியே. நாம் செய்த தவறுகளை ஒரு இறைவனை பூஜிக்கும் புனிதராகக் கருதும் ப்ரீஸ்டிடம் சொன்னால் நமது சுமையை இறக்க்கி வைத்து அவர் பார்த்துக் கொள்வார் என்ற ஒரு ரிலீஃப். அவ்வளவெ.

    சொர்கம் நரகம் என்றொரு இடம் எல்லாம் கிடையாது. அது மக்கள் தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காஅவும், நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவும் சொல்லப்பட்ட மதங்களை, இறைவனைச் சம்பந்தப்படுத்தி சொன்னால் அதற்கு பலன் இருக்கும் என்று மக்களால் உருவாக்கப்பட்டதுதான் அல்லாமல் இவை எல்லாம் சுத்த ஹம்பக். நாம் நேர்வழியில் நல்ல மனதுடன் இருந்தாலே போதும்..

    நல்ல தகவல்களுடன் கூடிய புகைப்படங்களுடன் கூடிய அருமையான பதிவு ஐயா!

    ReplyDelete
  27. சகோதரர் ஜெயக்குமாரின் கருத்தை அப்படியே வழிமொழிகிறேன்! நல்லதொரு பதிவு!

    ReplyDelete
  28. மறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...

    கருத்துரை தந்த சகோதரருக்கு நன்றி. மறுமொழி சொல்ல தாமதம் ஆகி விட்டது மன்னிக்கவும்.

    // இது நமது பரிகாரகங்கள் போலத்தான் என்றாலும்...இது ஒரு மன உளைச்சலிலிருந்து விலக உதவும் ஒரு உத்தியே. நாம் செய்த தவறுகளை ஒரு இறைவனை பூஜிக்கும் புனிதராகக் கருதும் ப்ரீஸ்டிடம் சொன்னால் நமது சுமையை இறக்க்கி வைத்து அவர் பார்த்துக் கொள்வார் என்ற ஒரு ரிலீஃப். அவ்வளவெ.//

    ஆம் அய்யா! எல்லாம் மனித மனத்திற்கு ஒரு சாந்தி தரும் ஒரு உளவியல் வழிதான். என்றாலும் இறைவன் பெயரால் (In the name of God) என்று சொல்லி ஏமாற்றுவதை யார்தாம் ஏற்றுக் கொள்வார்கள்?

    // சொர்கம் நரகம் என்றொரு இடம் எல்லாம் கிடையாது. அது மக்கள் தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்பதற்காஅவும், நல்லது செய்ய வேண்டும் என்பதற்காகவும் சொல்லப்பட்ட மதங்களை, இறைவனைச் சம்பந்தப்படுத்தி சொன்னால் அதற்கு பலன் இருக்கும் என்று மக்களால் உருவாக்கப்பட்டதுதான் அல்லாமல் இவை எல்லாம் சுத்த ஹம்பக். நாம் நேர்வழியில் நல்ல மனதுடன் இருந்தாலே போதும்..//

    எனது எண்ணமும் இதுவேதான். உங்கள் கருத்தை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன்.

    // நல்ல தகவல்களுடன் கூடிய புகைப்படங்களுடன் கூடிய அருமையான பதிவு ஐயா!//

    உங்கள் பாராட்டிற்கு நன்றி!

    ReplyDelete
  29. மறுமொழி > மனோ சாமிநாதன் said...

    கருத்துரை தந்த சகோதரி அவர்களுக்கு நன்றி. மறுமொழி சொல்ல தாமதம் ஆகி விட்டது மன்னிக்கவும்.

    ReplyDelete