Wednesday, 20 May 2015

நடிகர் எஸ்.வி.ரங்காராவ்



ஒரு நல்ல நாவலைப் படித்து முடிக்கும் போது, நம்மோடேயே இருந்த ஒருவர் நம்மை விட்டு பிரிவது போன்ற உணர்வு வரும். அதைப் போலவே குடும்பக் கதை கொண்ட பழைய தமிழ்ப் படங்களைப் பார்த்து முடிந்ததும்,நெடுநாள் பழகிய குடும்பம் ஒன்றை விட்டுப் பிரிவது போல் இருக்கும். மறைந்த குணச்சித்திர நடிகர் எஸ்.வி.ரங்காராவ் ஒரு படத்தில் அப்பா வேடத்தில் நடித்து இருந்தால், கேட்கவே வேண்டாம். படம் பார்த்து விட்டு, தியேட்டரை விட்டு வெளியேறும்போது சொந்த தந்தையை விட்டுப் பிரிவது போல இருக்கும். (எஸ்.வி.ரங்காராவ் 03.ஜூலை.1918 18.ஜூலை.1974)

இவர் படங்களைப் பார்க்கும்போது இவர் தெலுங்கு திரையுலகிலிருந்து வந்தவர் என்ற எண்ணமே வந்ததில்லை. நம்மில் ஒருவராகவே தோன்றினார். இவர் பெரும்பாலும் பல படங்களில் பாசக்கார அப்பாவாகவே வந்து இருப்பார். மகாபாரதம் போன்ற புராணக் கதைகள் சம்பந்தப்பட்ட படங்களில் மட்டும் வில்லனாகவே வருவார். இவருடைய உயரமும் கம்பீரமும் அப்படி. இவரைப் பற்றி வலைப்பதிவில் எழுத வேண்டும் என்பது வெகுநாள் ஆசை.

நான் பார்த்த படங்கள்::

இவர் தமிழ் படங்களில் நடிக்கத் தொடங்கிய போது நான் சிறுவன். எனவே இவரது அனைத்து படங்களையும் பார்த்ததில்லை. எல்லாம் பெரியவன் ஆன பிறகு, மீள் வெளியீடாக தியேட்டர்களில் வந்தபோது பார்த்ததுதான்.

மிஸ்ஸியம்மா அந்தக் கால இளமையான ஜெமினி கணேசன் சாவித்திரி ஜோடி, மற்றும் கே.சாரங்கபாணி, கே.ஏ.தங்கவேலு ஆகியோர் நடித்த நகைச்சுவை படம். எஸ்.வி.ரங்காராவிற்கு பள்ளிக்கூடம் நடத்தும், கண்ணியமான பணக்கார கனவான் வேடம். அவருக்கே உரிய ஜிப்பா, அங்கவஸ்திரம், கைத்தடியோடு வருவார். இவரது பள்ளியில் பிள்ளைகளுக்கு, பாடம் சொல்லிக் கொடுக்க பி.ஏ படித்த தம்பதியினர் வேண்டும் என்று விளம்பரம் செய்வார். வேலையில்லாத படித்த பட்டதாரிகளான ஜெமினியும், சாவித்திரியும் கணவன் மனைவி போல நடித்து வருவார்கள். ஆசிரியர் பணி செய்வார்கள். பின் நிஜமாகவே கல்யாணம் செய்து கொள்வார்கள். “வாராயோ வெண்ணிலாவே என்ற இந்த படத்தில் வரும் மறக்க முடியாத பாடல் காட்சியில் எஸ்.வி.ரங்காராவும் வருவார்.

இந்த பாடலை கண்டு கேட்டு ரசிக்க கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை கிளிக் செய்யுங்கள். (நன்றி: Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI)
   
எங்க வீட்டுப்பிள்ளைமக்கள் திலகம் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி நடித்த இந்த படத்தில் , சரோஜாதேவிக்கு பணக்கார அப்பாவாக வந்து அசத்துவார். தனது ஒரே செல்ல மகளான சரோஜாதேவியுடன் மாப்பிள்ளை பார்க்க எம்,ஜி.ஆர் வீடு வருவார்; நம்பியார் முன் வீட்டில் நடக்கும் கூத்துக்கள் சுவாரஸ்யமானவை. எம்.ஜி.ஆரை மாப்பிள்ளை, மாப்பிள்ளை என்று வாயார அழைப்பார்.

படிக்காத மேதை நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த படம் இந்த படத்தில் ரங்காராவ் கண்ணாம்பா தம்பதியினரின் பிள்ளைகளோடு,  ரங்கன் என்ற விசுவாசமுள்ள ஒரு வளர்ப்பு மகனாக சிவாஜி கணேசன் வருவார். வீட்டில் ஒரு வேலைக்காரனுக்கும் மேலாக உழைப்பார். எதனையும் எதிர்பாராத, பாரதி கண்ட “கண்ணன் என் வேலைக்காரன் என்ற பாடலின் பாத்திரப் படைப்பே இந்த ரங்கன் எனலாம். ஒரு சூழ்நிலையில் மற்றவர்கள் பேச்சைக் கேட்டு, சிவாஜியை, ரங்காராவே வீட்டை விட்டு வெளியேற்றி விடுவார். ஆனாலும் வெளியேறிய சிவாஜியை நினைத்து நினைத்து துடிப்பார். அந்த துயரத்திலேயே அவர் இறக்கும் காட்சியில் ரங்காராவ் காட்டும் முகபாவங்கள், நடிப்பை இன்னொருவர் செய்ய முடியாது. உள்ளத்தை உருக்கும் இந்த பாடல் “ எங்கிருந்தோ வந்தான் கண்ணன்.

இந்த பாடலை கண்டு கேட்டு ரசிக்க கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை கிளிக் செய்யுங்கள்.(நன்றி:Cinema Junction)
    
நானும் ஒரு பெண்   ஒரு பெண் கறுப்பாக பிறந்து விட்டதனாலேயே, இந்த சமூகத்தில் எவ்வளவு அவதிக்கு உள்ளாகிறாள் என்பதை உணர்த்தும் படம். கறுப்பு பெண்ணாக மேக்கப் போட்டு விஜயகுமாரி பாத்திரத்தோடு ஒன்றி நடித்த படம். விஜயகுமாரிக்கு பாசமுள்ள மாமனாராக எஸ்.வி.ரங்காராவ் நடித்தார். ஜனாதிபதி விருது பெற்ற படம். இதிலும் இவரது நடிப்பு சோடை போகவில்லை.  

மாயாபஜார் இன்றும் அதிக ரசிகப் பெருமக்களால் ரசிக்கப்படும் படம். மகாபாரத கிளைக்கதை ஒன்றினை வைத்து எடுக்கப்பட்டது. இதில் எஸ்.வி.ரங்காராவ் கடோத்கஜனாக நடித்து இருக்கிறார். இந்த படத்தில் வரும், கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம். என்ற பாடலை இன்றைய டீவி சேனல்களில் அடிக்கடி ஒளிபரப்ப்பக் காணலாம்.

இந்த பாடலை கண்டு கேட்டு ரசிக்க கீழே உள்ள யூடியூப் இணைய முகவரியை கிளிக் செய்யுங்கள். (நன்றி: kirubakaran soundararaj மாயா பஜார் திரைப்படத்தின் இப்பாடலுடன் தெலுங்கு வண்ணப்படம் கலவை செய்யப்பட்டுள்ளது.)


பக்த பிரகலாதா - கடவுள் உண்டா? இல்லையா? அன்று தொடங்கிய விவாதம் இன்றும் தொடர்கிறது. இந்த படத்தில் கடவுள் இல்லை என்ற இரணியகசிபு என்ற வேடத்தில் கம்பீரமாக நடித்து தனது திறமையைக் காட்டியவர் நடிகர் எஸ்.வி.ரங்காராவ் அவர்கள்.

அன்புச்சகோதரர்கள் என்று ஒரு படம். இதில் எஸ்.வி.ரங்காராவ் மூத்த சகோதரராக நடித்து இருப்பார்; தனது தம்பிகளுக்காக கல்யாணமே செய்து கொள்ளாத கேரக்டர். இளைய சகோதரர்களாக மேஜர் சுந்தர்ராஜன், ஏ.வி.எம்.ராஜன். ஜெய்சங்கர் ஆகிய மூவரும் நடித்து இருப்பார்கள். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த, இவர்களது குடும்பம் எப்படி சிதறுகிறது என்பது கதை. அண்ணன் தம்பிகள் பாசக் கதை. இதில் வரும்

முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக
அண்ணன் த்ம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக
அன்பாலே இணைந்து வந்தோம் ஒன்னுக்குள் ஒன்னாக 

என்ற (சகோதரர்கள் நால்வரும் பாடும்) பாடல் மறக்க முடியாத ஒன்று. படத்தின் பிற்பகுதி சோகம்னா சோகம், அவ்வளவு சோகம். எஸ்.வி.ரங்காராவ் தியேட்டரை விட்டு வெளியே வரும்போது, நெஞ்சை கனக்கச் செய்து விடுவார்.

ஒரு தெலுங்கு தமிழ் டப்பிங் படத்தில் இவரை ஒரு மந்திரவாதியாக பார்த்ததாக நினைவு. படத்தின் பெயர் ஞாபகம் இல்லை. இன்னும் நான் பார்த்த நடிகர் எஸ்.வி.ரங்காராவ் நடித்த படங்களைப் பற்றி பேசிக் கொண்டே போகலாம். படிக்கும் உங்களுக்கு “போர் அடிக்கலாம். எனவே இத்துடன் முடித்துக் கொள்கிறேன்.

சில தகவல்கள்:

எஸ்.வி.ரங்காராவ் அவர்களுக்கு, ஆந்திராவில் , விஜயவாடா நகரில் மார்பளவு சிலை வைத்துள்ளார்கள். நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தமது பேட்டி ஒன்றில் எஸ்.வி.ரங்காராவ் மாதிரி ஒரு நடிகர் அவருக்குப் பிறகு வரவில்லை. அவர் மாதிரி நடிகர்கள் வராதது வேதனையளிக்கிறது. எஸ்.வி.ரங்காராவ், நாகேஷ் மாதிரி ஆயிரம் பேர் உருவாக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.  

பழைய தமிழ் சினிமா குறித்து வலைத்தளத்தில் சுவாரஸ்யமாக எழுதுபவர் திரு R P ராஜநாயஹம் அவர்கள். அவர் இவ்வாறு குறிப்பிடுகிறார்.

 தன் வாழ்நாளில் முதுமையைப் பார்த்தறியாத ஒருவர் திரைப் படங்களில் இருபத்தைந்து வருடங்கள் (1950களில், 1960களில், 1970களின் முன்பகுதியில் ) நிறைய வயதான,முதிய கதாப் பாத்திரங்கள் செய்திருக்கிறார் என்பது விந்தை. எழுபது வயது மனிதராக சினிமா காட்டிய எஸ்.வி ரங்காராவ் அறுபது வயதை தன் வாழ்நாளில் கண்டதில்லை. 1974 ல் அவர் மறைந்த போது அவர் வயது 56 தான்

இந்தியா சினிமா 100 என்ற தலைப்பில் SUN NEWS”  தயாரித்த நிகழ்ச்சி யூடியூப்பில் வீடியோவாக வந்துள்ளது.  கண்ணதாசன், சின்னப்பா தேவர் தொடங்கி பலரது குறிப்புகள் அடங்கியது. இங்கே நடிகர் எஸ்.வி.ரங்காராவ் சம்பந்தப்பட்ட வீடியாவை  கண்டு கேட்டு ரசிக்க கீழே உள்ள இணைய முகவரியை கிளிக் செய்யுங்கள். (நன்றி:Sun News)



                               (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)


62 comments:

 1. வணக்கம்
  ஐயா.

  சினிமாவில் கொடிகட்டி பறந்த மற்றும் மக்கள் மனதில் குடிகொண்ட நடிகர் பற்றிய தகவலை தங்களின் பதிவு வழி நிறைய அறியக்கிடைத்துள்ளது... கேள்விப்பட்டிருக்கேன் ஆனால் அவரைப்பற்றிய சிறப்பைஇப்போதுதான் அறிந்தேன் த.ம1

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. குணச்சித்திர நடிகர் எஸ்.வி.ரெங்காராவ் அவர்களின் நடிப்பும், ஆஜானுபாகுவான அவரின் சரீர அமைப்பும் என்னையும் மிகவும் கவர்ந்தது உண்டு.

  >>>>>

  ReplyDelete
 3. தாங்கள் சொல்லியுள்ள படங்களில் எங்க வீட்டுப்பிள்ளை, படிக்காத மேதை, மாயாபஜார், நானும் ஒரு பெண் ஆகிய படங்களை நான் பலமுறை பார்த்து ரஸித்துள்ளேன்.

  இவை அனைத்திலும் அனைவர் நடிப்பும் மிகவும் அபாரமானவைகள் தான்.


  >>>>>

  ReplyDelete
 4. இனிமையான “வாராயோ வெண்ணிலாவே”; உள்ளத்தை உருக்கும் “எங்கிருந்தோ வந்தான் கண்ணன்”; ஜாலியான ”கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்.” போன்ற பாடல்கள் காலத்தினால் அழியாத காவியங்கள் அல்லவா ! :)

  ReplyDelete
 5. //ஒரு சூழ்நிலையில் மற்றவர்கள் பேச்சைக் கேட்டு, சிவாஜியை, ரங்காராவே வீட்டை விட்டு வெளியேற்றி விடுவார். ஆனாலும் வெளியேறிய சிவாஜியை நினைத்து நினைத்து துடிப்பார். அந்த துயத்திலேயே அவர் இறக்கும் காட்சியில் ரங்காராவ் காட்டும் முகபாவங்கள், நடிப்பை இன்னொருவர் செய்ய முடியாது.//

  //எங்க வீட்டுப்பிள்ளை – மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி நடித்த் இந்த படத்தில் , சரோஜாதேவிக்கு பணக்கார அப்பாவாக வந்து அசத்துவார். தனது ஒரே செல்ல மகளான சரோஜாதேவியுடன் மாப்பிள்ளை பார்க்க எம்,ஜி.ஆர் வீடு வருவார்; நம்பியார் முன் வீட்டில் நடக்கும் கூத்துக்கள் சுவாரஸ்யமானவை. எம்.ஜி.ஆரை மாப்பிள்ளை, மாப்பிள்ளை என்று வாயார அழைப்பார்.//

  இவையெல்லாம் மிக அருமையான எடுத்துக்காட்டுகள். மறக்கவே முடியாத காட்சிகள். இவற்றிற்காகவே தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள்.

  >>>>>

  ReplyDelete
 6. தாங்கள் கொடுத்துள்ள இணைப்புகளின் மூலம் அனைத்துப்பாடல்களையும் ஆசைதீர நானும் என் மனைவியும் ரஸித்துக்கேட்டு இன்புற்றோம். அதனால் இடைவெளிவிட்டு பின்னூட்டங்கள் தொடர நேர்ந்துள்ளது.

  >>>>>

  ReplyDelete
 7. //1974 ல் அவர் மறைந்த போது அவர் வயது 56 தான்//

  இது மிகவும் வருத்தமான செய்திதான். இவருக்குக் குடிப்பழக்கம் உண்டு எனக்கேள்வி. அதனாலும் இருக்கலாம். :(

  >>>>>

  ReplyDelete
 8. //எஸ்.வி.ரங்காராவ் அவர்களுக்கு, ஆந்திராவில் , விஜயவாடா நகரில் மார்பளவு சிலை வைத்துள்ளார்கள். //

  மகிழ்ச்சியான செய்தி.

  //நடிகர் கமல்ஹாசன் அவர்கள் தமது பேட்டி ஒன்றில் ”எஸ்.வி.ரங்காராவ் மாதிரி ஒரு நடிகர் அவருக்குப் பிறகு வரவில்லை. அவர் மாதிரி நடிகர்கள் வராதது வேதனையளிக்கிறது. எஸ்.வி.ரங்காராவ், நாகேஷ் மாதிரி ஆயிரம் பேர் உருவாக வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். //

  மிகச்சரியாகவே சொல்லியுள்ளார்.

  ReplyDelete
 9. //மறைந்த குணச்சித்திர நடிகர் எஸ்.வி.ரங்காராவ் ஒரு படத்தில் அப்பா வேடத்தில் நடித்து இருந்தால், கேட்கவே வேண்டாம். படம் பார்த்து விட்டு, தியேட்டரை விட்டு வெளியேறும்போது சொந்த தந்தையை விட்டுப் பிரிவது போல இருக்கும். //

  வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். அருமையான பதிவும் பகிர்வும். மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். ஓர் மிகச்சிறப்பான குணச்சித்திர கதா பாத்திர நடிகரைப்பற்றிய பகிர்வுக்கு நன்றிகள்.

  அன்புடன் VGK

  ReplyDelete

 10. முத்துக்கு முத்தாக
  சொத்துக்கு சொத்தாக
  அருமையான படைப்பை தந்தீர்
  கண்ணுக்கு கண்ணாக!

  மறைந்த குணச்சித்திர நடிகர் எஸ்.வி.ரங்காராவ் நல்ல நினைவூட்டல்
  வெகு சிறப்பு அய்யா! நன்றி!
  த ம +1
  நட்புடன்,
  புதுவை வேலு

  ReplyDelete
 11. எஸ்வி ரங்காராவ் அவர்களுக்கு முதல் ஹார்ட் அட்டாக் வந்த பிறகும், ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களில் வரிசையாக நடித்துக்கொண்டே இருந்தது தான் அவர் குறைந்த வயதிலேயே இறந்ததற்கு காரணம் எனப் படித்த ஞாபகம்.. என்ன ஒரு அற்புதமான நடிகர். அவரளவு திறமை வாய்ந்த நடிகர் தமிழில் யாருமே இல்லை என நினைக்கிறேன்.

  ReplyDelete
 12. அருமையான நினைவுக்கோவை. மிஸ்ஸியம்மா படம் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலம். பாட்டுகள் அனைத்தும் ஹிட்டானது. இப்போது அந்த மாதிரி குடும்பப் பாங்கான படங்கள் வருவது இல்லை. நானும் சினிமா பார்ப்பதை விட்டு விட்டேன். அதனால்தான் சினிமா உலகம் நஷ்டத்தில் ஓடுகிறது.

  ReplyDelete
 13. எஸ்.வி.ரங்காராவ் திரைப்படத்துறையில் ஒரு பெரிய முத்திரையைப் பதித்தவர். அவரைத் திரையில் பார்க்கும்போது நமக்கு ஒரு தந்தை போலவே தோன்றுவார். அவருடைய ஆஜானுபாவ உடம்பும் அவருடைய பேச்சும் அனைவரையும் ஈர்த்துவிடும். கதாபாத்திரங்களுடன் பேசும்போது ஏதோ நம்மிடமே பேசுவது போல தோன்றும். தற்போது இவரைப் போன்ற நடிகர்களையோ, சொல்லாடல்களையோ பார்க்கவோ கேட்கவோ முடியவில்லை என்பதே வேதனை.

  ReplyDelete
 14. எஸ்.வி.ரங்காராவ் என்றவுடனே நினைவுக்கு வருவது "எங்கிருந்தோ வந்தான் கண்ணன்" பாடல்...

  இவரைப் போல் ஒரு அற்புதமான அப்பாவை காண்பது அரிது...

  ReplyDelete
 15. வணக்கம் அய்யா,
  உண்மைதான் அய்யா, நான் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற தமிழ் சினிமா ஒரு நூற்றாண்டு எனும் 3 நாள் கருத்தரங்கிற்கு தகவல்கள் சேகரிக்கும் பொது தான் இவர் பற்றிய குறிப்புகள் என்னை ஆச்சிரியத்தில் முகழ்கடித்தன.
  இவரின் கல்யாண சமையல் ,,,,,,,,,,,,,, பாடல் மட்டும் கேட்டுள்ளேன், அருமையான பாடல். ஒரு கலைஞனின் கட்டுரையை அருமையாக கொடுத்த தங்களுக்கு என் நன்றிகள் நன்றி.

  ReplyDelete
 16. // ஒரு நல்ல நாவலைப் படித்து முடிக்கும் போது, நம்மோடேயே இருந்த ஒருவர் நமமை விட்டு பிரிவது போன்ற உணர்வு வரும். அதைப் போலவே குடும்பக் கதை கொண்ட பழைய தமிழ்ப் படங்களைப் பார்த்து முடிந்ததும்,நெடுநாள் பழகிய குடும்பம் ஒன்றை விட்டுப் பிரிவது போல் இருக்கும். மறைந்த குணச்சித்திர நடிகர் எஸ்.வி.ரங்காராவ் ஒரு படத்தில் அப்பா வேடத்தில் நடித்து இருந்தால், கேட்கவே வேண்டாம். படம் பார்த்து விட்டு, தியேட்டரை விட்டு வெளியேறும்போது சொந்த தந்தையை விட்டுப் பிரிவது போல இருக்கும். (எஸ்.வி.ரங்காராவ் 03.ஜூலை.1918 – 18.ஜூலை.1974)
  //
  என்ன ரசனைப்பா..
  வாழ்த்துக்கள்
  தம +

  ReplyDelete
 17. திரு. S. V. ரங்காராவ் அவர்களுக்கு நிகர் அவரே!..

  ஹிரண்யனின் கம்பீரம் ஆளுமை - வேறொருவரை நினைக்கவே முடியவில்லை.. அதிலும் - தூணிலிருந்து நரசிங்கம் தோன்றியதும் ஓடிவந்து மகனை (ரோஜாரமணி) கட்டிக் கொண்டு நன்றி சொல்லும் காட்சி இன்னும் கண்களுக்குள்!..

  இரும்புத்திரை, பார்த்திபன் கனவு, நம்நாடு - என பற்பல படங்களில் அவரது சிறப்பான நடிப்பைக் காணலாம்.

  எனது அபிமானத்துக்குரியவரைப் பற்றிய தகவல்களைக் கண்டு மகிழ்ச்சி..

  ReplyDelete
 18. அன்புள்ள அய்யா,

  குணச்சித்திர நடிகர் எஸ்.வி.ரங்காராவ் பற்றி புகைப்படங்களுடன் பல தகவல்களைத் தந்தது வியப்பூட்டுகிறது. ‘ மாயா பஜார்’ - கல்யாண சமையல் சாதம் மறக்க முடியுமா? அப்பா வேடம் என்றார் அவர்தான்... அசத்துவார். வயதானவராக நடித்தாலும் அவர் மறைந்த போது அவர் வயது 56 தான் என்கிறபொழுது ஆச்சர்யமாகத்தான் உள்ளது...!

  நன்றி.
  த.ம. 6

  ReplyDelete
 19. மிகை இல்லாத குணசித்திர நடிப்புக்கு அவருக்கு ஈடு அவர்தான்

  ReplyDelete
 20. படிக்காதமேதை படத்தின் கதாநாயகன் சிவாஜி என்றாலும் ரங்கராவின் பாத்திரமும் மனதை விட்டு நீங்கவில்லை. மிக இயல்பான் அவரது நடிப்பு நிஜம் போலவே இருக்கும்.பழையதை ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி
  அன்புடன்
  வர்மா

  ReplyDelete
 21. "தியேட்டரை விட்டு வெளியேறும்போது சொந்த தந்தையை விட்டுப் பிரிவது போல இருக்கும்."

  :-) உண்மை தான். இவருடைய படங்கள் அனைத்துமே ரசிக்கும்படி இருக்கும். ரொம்ப இயல்பான நடிப்பு.

  எனக்கு இவருடைய வாழையடி வாழை படம் ரொம்பப் பிடிக்கும் ரொம்ப நாட்களாக இதற்கு விமர்சனம் எழுதணும் என்று நினைத்து இருக்கிறேன்.

  இவர் நடிப்புக்காகவே பார்த்த படங்களின் எண்ணிக்கை அதிகம்.

  ReplyDelete
 22. மறுமொழி > ரூபன் said...

  கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 23. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (1 to 8 )

  வரிக்கு வரி கருத்துரை தந்து ஊக்கப்படுத்திய அன்புள்ள V.G.K அவர்களுக்கு நன்றி.

  // குணச்சித்திர நடிகர் எஸ்.வி.ரெங்காராவ் அவர்களின் நடிப்பும், ஆஜானுபாகுவான அவரின் சரீர அமைப்பும் என்னையும் மிகவும் கவர்ந்தது உண்டு. //

  பொதுவாகவே ஆந்திராக்காரர்கள் உயரமானவர்கள் என்று சொல்லுவார்கள். நடிகர் எஸ்.வி.ரங்காராவ் அவர்களும் அந்த வகையில் நல்ல உயரம்
  xxx

  // தாங்கள் சொல்லியுள்ள படங்களில் எங்க வீட்டுப்பிள்ளை, படிக்காத மேதை, மாயாபஜார், நானும் ஒரு பெண் ஆகிய படங்களை நான் பலமுறை பார்த்து ரஸித்துள்ளேன்.//

  நான் தியேட்டரில் ஒருமுறை பார்த்ததுதான். மற்றபடி டீவியில் அடிக்கடி பார்த்துள்ளேன்.

  // இவை அனைத்திலும் அனைவர் நடிப்பும் மிகவும் அபாரமானவைகள் தான்.//

  இப்போது அப்படி படத்தோடு ஒன்றி நடிப்பவர்கள் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

  xxxxx

  // இனிமையான “வாராயோ வெண்ணிலாவே”; உள்ளத்தை உருக்கும் “எங்கிருந்தோ வந்தான் கண்ணன்”; ஜாலியான ”கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்.” போன்ற பாடல்கள் காலத்தினால் அழியாத காவியங்கள் அல்லவா ! :) //

  இத்தனை ஆண்டுகள் ஆகியும் இன்றும் பழமை மாறாமல் இளமை குன்றாமல் இப்பாடல்கள் மக்கள் மனதில் இடம் பிடித்து உள்ளன.
  Xxxxx

  // இவையெல்லாம் மிக அருமையான எடுத்துக்காட்டுகள். மறக்கவே முடியாத காட்சிகள். இவற்றிற்காகவே தங்களுக்கு என் ஸ்பெஷல் பாராட்டுகள்.//

  தங்களின் பாராட்டிற்கு நன்றி.

  xxxxxxxx

  // தாங்கள் கொடுத்துள்ள இணைப்புகளின் மூலம் அனைத்துப்பாடல்களையும் ஆசைதீர நானும் என் மனைவியும் ரஸித்துக்கேட்டு இன்புற்றோம். அதனால் இடைவெளிவிட்டு பின்னூட்டங்கள் தொடர நேர்ந்துள்ளது.//

  மிக்க மக்ழ்ச்சி அய்யா. நான் அடிக்கடி எங்கள் வீட்டு கம்ப்யூட்டரில் பார்க்கும் இணையதளங்கள்தான் இவை.

  // அவர் மறைந்த போது அவர் வயது 56 தான் வருத்தமான செய்திதான். இவருக்குக் குடிப்பழக்கம் உண்டு எனக்கேள்வி. அதனாலும் இருக்கலாம். ://

  என்ன காரணம் என்று தெரியவில்லை. சிகரெட் பழக்கம் அவருக்கு உண்டு என்று தெரிகிறது.


  // வெகு அழகாகச் சொல்லியுள்ளீர்கள். அருமையான பதிவும் பகிர்வும். மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள். ஓர் மிகச்சிறப்பான குணச்சித்திர கதா பாத்திர நடிகரைப்பற்றிய பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் VGK //

  தங்களது பாராட்டிற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி அய்யா.

  ReplyDelete
 24. மறுமொழி > yathavan nambi said...

  சகோதரர் யாதவன் நம்பி (புதுவை வேலு) அவர்களது கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 25. குணசித்திர நடிகர் பதிவு நன்று
  சிறப்பு.

  ReplyDelete
 26. மறுமொழி > bandhu said...

  எஸ்.வி.ரங்காராவ் பற்றிய மேல் அதிக விவரமும், கருத்துரையும் தந்த சகோதரருக்கு நன்றி.

  ReplyDelete
 27. மறுமொழி > பழனி. கந்தசாமி said...

  கருத்துரை தந்த முனைவர் பழனி. கந்தசாமி அய்யா அவர்களுக்கு நன்றி.

  // அருமையான நினைவுக்கோவை. மிஸ்ஸியம்மா படம் அந்தக் காலத்தில் மிகவும் பிரபலம். பாட்டுகள் அனைத்தும் ஹிட்டானது. இப்போது அந்த மாதிரி குடும்பப் பாங்கான படங்கள் வருவது இல்லை.//

  இன்றும் மிஸ்ஸியம்மா படம் பார்க்கும்போது, அந்தக் கால படம் என்ற நினைவில் வருவதில்லை; அலுப்பு தட்டாமல் பார்க்க முடிகிறது.

  // நானும் சினிமா பார்ப்பதை விட்டு விட்டேன். அதனால்தான் சினிமா உலகம் நஷ்டத்தில் ஓடுகிறது. //

  முன்பு சினிமா தியேட்டர் செலவு என்றால், கட்டுப்பாட்டிற்குல் இருந்தது. இப்போது அங்கு நடக்கும் கொள்ளைகளைப் பார்க்கும்போது தியேட்டர் பக்கம் போகாமல் இருப்பதே நல்லது என்று படுகிறது.

  ReplyDelete
 28. மறுமொழி > Dr B Jambulingam said...

  முனைவர் அவர்களது கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 29. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

  // எஸ்.வி.ரங்காராவ் என்றவுடனே நினைவுக்கு வருவது "எங்கிருந்தோ வந்தான் கண்ணன்" பாடல்... இவரைப் போல் ஒரு அற்புதமான அப்பாவை காண்பது அரிது... //

  "எங்கிருந்தோ வந்தான் கண்ணன்" பாடல் என்றுமே மறக்க முடியாதது. சகோதரரின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 30. மறுமொழி > mageswari balachandran said...

  சகோதரி மகேஸ்வரி பாலசந்திரன் அவர்களது கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

  ReplyDelete
 31. மறுமொழி > Mathu S said...

  சகோதரர் ஆசிரியர் எஸ். மது அவர்களின் பாராட்டிற்கு நன்றி.

  ReplyDelete
 32. மறுமொழி > துரை செல்வராஜூ said...

  கருத்துரை தந்த சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 33. மறுமொழி > manavai james said...

  கருத்துரை தந்த ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 34. மறக்கக் கூடிய மனிதரா இவர்
  ஆனாலும் 56 வது வயதிலேயே இயற்கை எய்தினார் என்பது வியப்பைத் தருகிறது ஐயா
  நன்றி
  குடும்பத்தோடு ஒரு சிறு சுற்றுலா சென்று வந்தமையால், கடந்த சில நாட்களாக, வலையின் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க இயலவில்லை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன். இனி தொடர்வேன்

  ReplyDelete
 35. மறுமொழி > G.M Balasubramaniam said...

  கருத்துரை தந்த G.M B அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 36. மறுமொழி > வர்மா said...

  சினிமா செய்திகளில் உங்களைப் போல எனக்கு அதிக அனுபவம் இல்லை. உங்களுடைய சினிமா பதிவுகளை – குறிப்பாக பழைய படங்களைப் பற்றிய – செய்திகளை ஆர்வத்தோடு படிப்பவன் நான்.

  // படிக்காதமேதை படத்தின் கதாநாயகன் சிவாஜி என்றாலும் ரங்கராவின் பாத்திரமும் மனதை விட்டு நீங்கவில்லை. மிக இயல்பான் அவரது நடிப்பு நிஜம் போலவே இருக்கும்.பழையதை ஞாபகப் படுத்தியமைக்கு நன்றி//

  படிக்காதமேதை படத்தில் சிவாஜி கணேசனை விட நடிப்பில் விஞ்சி இருப்பார். இன்னும் எனக்கு அந்த படத்தில் அந்த பாடலில் வந்த எஸ்.வி.ரங்கராவின் தலை கலந்த கேசம், ஷேவிங் பண்ணிக் கொள்ளாத சோகமான முகம் நிழலாடுகின்றன. கருத்துரை தந்த வர்மா அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 37. மறுமொழி > கிரி said...

  கருத்துரை தந்த சகோதரர் கிரி அவர்களுக்கு நன்றி.

  // எனக்கு இவருடைய வாழையடி வாழை படம் ரொம்பப் பிடிக்கும் ரொம்ப நாட்களாக இதற்கு விமர்சனம் எழுதணும் என்று நினைத்து இருக்கிறேன்.இவர் நடிப்புக்காகவே பார்த்த படங்களின் எண்ணிக்கை அதிகம். //

  உங்கள் விமர்சனக் கட்டுரையை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

  ReplyDelete
 38. மறுமொழி > kovaikkavi said...

  சகோதரி சொன்ன கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 39. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...

  கருத்துரை தந்த சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி.

  // குடும்பத்தோடு ஒரு சிறு சுற்றுலா சென்று வந்தமையால், கடந்த சில நாட்களாக, வலையின் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க இயலவில்லை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன். இனி தொடர்வேன் //

  எனவே, தங்களது சுற்றுலா சம்பந்தப்பட்ட பதிவினை வண்ணப் படங்களுடன் எதிர்பார்க்கலாம். மிக்க மகிழ்ச்சி.

  ReplyDelete
 40. எனக்கும் பிடித்த நடிகர் இவர். பார்த்திபன் கனவு படத்தில் வைஜெயந்திமாலாவின் தந்தையாக வந்து 'அம்மா இல்லாமல் அப்பா வளர்த்த பெண் அம்மா நீ. உன் அம்மா இருந்திருந்தால் உன்னுடன் மனம் விட்டுப் பேசியிருப்பாள்' என்று கண்கலங்குவார். அருமையான குணச்சித்திர நடிப்பு. மாயாபஜார் படத்தில் வத்சலவாக (சாவித்திரி) 'டும்டும் என் கல்யாணம்' பாடலின் போது அவ்வப்போது கடோத்கஜனாக மாறி தன் பாட்டைத் தானே ரசிக்கும் காட்சியும் ரொம்பப் பிடிக்கும். எல்லா நடிகைகளுக்கும் அப்பாவாக வந்து நடிப்பில் புதிய பரிமாணங்களைக் காட்டியவர். எனக்குக் கூட இவரைப் பற்றி எழுத வேண்டும் என்கிற எண்ணம் உண்டு.
  பல மலரும் நினைவுகளை மீட்டுக் கொண்டுவந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!
  காலில் அடிபட்டது குணமாகியிருக்கும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 41. மறுமொழி > Ranjani Narayanan said...

  கருத்துரை தந்த சகோதரி அவர்களுக்கு நன்றி.

  // எல்லா நடிகைகளுக்கும் அப்பாவாக வந்து நடிப்பில் புதிய பரிமாணங்களைக் காட்டியவர். எனக்குக் கூட இவரைப் பற்றி எழுத வேண்டும் என்கிற எண்ணம் உண்டு. பல மலரும் நினைவுகளை மீட்டுக் கொண்டு வந்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்!//

  உங்கள் பாராட்டிற்கு நன்றி. நீங்கள் SVR அவர்களைப் பற்றி எழுதி இருந்தால், இன்னும் சுவாரஸ்யமாகவும், நல்ல நகைச்சுவையோடும் (உங்கள் எழுததுக்களில் இடையிடையே இழையோடும் நையாண்டி எனக்கு மிகவும் பிடிக்கும்) எழுதி இருப்பீர்கள். இப்பவும் எழுதலாம்.

  //காலில் அடிபட்டது குணமாகியிருக்கும் என்று நினைக்கிறேன். //

  எனக்கு ‘சுகர்’ பிரச்சினை இல்லை. தையல் பிரித்தாகி விட்டது. ஆனாலும் காயம் ஆழமாக இருந்த படியினால் இன்னும் முழு குணம் அடையவில்லை. இறைவன் அருளால் அடுத்த வாரம் எல்லாம் சரியாகி விடும் என்று நினைக்கிறேன். சகோதரியின் நலம் விசாரிப்பிற்கு நன்றி.

  ReplyDelete
 42. ரங்கராவின் கம்பீரமான தோற்ற‌ததையும் குரலையும் யாரால் மறக்க முடியும்? மலரும் நினைவுகளைத் த்ரும்பவும் கொண்டு வந்து விட்டீர்கள்! பார்த்திபன் கனவில் ' மகேந்திர பல்லவ‌னாக வந்து அசத்தியதையெல்லாம் ஒரு போதும் மறக்க இயலாது! அவரின் மிகச் சிறந்த நடிப்பு என்னவோ, 'கற்பகம்', 'குமுதம்' 'அன்புச் சகோதரர்கள்' தான்!

  ReplyDelete
 43. ‘பருப்பில்லாத கல்யாணமா?’ என்பது போல் அப்போதெல்லாம் திரு ரங்காராவ் இல்லாத திரைப்படமா என்ற அளவில் எல்லா படங்காளிலும் அண்ணனாக, தந்தையாக, மாமனாராக, வில்லனாக வந்து நம்மையெல்லாம் தனது நடிப்பால் கட்டிப்போட்டிருக்கிறார். அவரது தாய்மொழி தமிழல்ல என்று சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள். தமிழ்த் திரைப்பட உலகின் மறக்கமுடியாத நட்சத்திரத்தில் இவரும் ஒருவர். குணச்சித்திர நடிகர் திரு எஸ்.வி.ரங்கராவ் அவர்கள் பற்றிய தகவல்களை அருமையாக தொகுத்து தந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 44. நல்ல ஒரு கலைஞரை
  நினைவில் மீட்டு
  நல்லெண்ணங்களை வெளிப்படுத்திய
  சிறந்த ஒரு பதிவு

  ReplyDelete
 45. அருமையான ஒரு நடிகரைப் பற்றி அற்புதமான பதிவு! பிள்ளை பிரயத்திற்கு எங்களை அழைத்துப் போனதற்கு நன்றி!

  த ம 9

  ReplyDelete
 46. என்ன அய்யா காலில் பிரச்சனை என்று சொல்லியிருக்கீங்க..
  இப்போது நலம் என்றும் தெரிகிறது..
  உடல் நலம் பேணுக
  மணவை ஜேம்ஸ் அவர்களும் ஒரு விபத்தில் சிக்கியிருக்கிறார் என்று அறிகிறேன்..
  விரைவில் நலம் பெருக.

  ReplyDelete
 47. மறுமொழி > மனோ சாமிநாதன் said...

  // ரங்கராவின் கம்பீரமான தோற்ற‌ததையும் குரலையும் யாரால் மறக்க முடியும்? மலரும் நினைவுகளைத் த்ரும்பவும் கொண்டு வந்து விட்டீர்கள்! //

  சகோதரி அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

  // பார்த்திபன் கனவில் ' மகேந்திர பல்லவ‌னாக வந்து அசத்தியதையெல்லாம் ஒரு போதும் மறக்க இயலாது! அவரின் மிகச் சிறந்த நடிப்பு என்னவோ, 'கற்பகம்', 'குமுதம்' 'அன்புச் சகோதரர்கள்' தான்! //

  ’பார்த்திபன் கனவு’ படம் பார்க்கவில்லை; நேரம் இருக்கும் போது யூடியூப்பில்தான் பார்க்க வேண்டும்.

  ReplyDelete
 48. மறுமொழி > வே.நடனசபாபதி said...

  அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 49. மறுமொழி > Yarlpavanan Kasirajalingam said...

  கவிஞர் யாழ்பாவாணன் காசிராஜலிங்கம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

  ReplyDelete
 50. மறுமொழி > S.P. Senthil Kumar said...

  சகோதரர் எஸ்.பி.செந்தில் குமார் அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

  ReplyDelete
 51. மறுமொழி > Mathu S said...

  // என்ன அய்யா காலில் பிரச்சனை என்று சொல்லியிருக்கீங்க..
  இப்போது நலம் என்றும் தெரிகிறது.. உடல் நலம் பேணுக //

  ஆமாம் அய்யா! எனது அம்மாவின் திடீர் மறைவினால் எனக்கு ஏற்பட்ட சோகத்தினைத் தொடர்ந்து இன்னொரு சோகம். ஒரு சிறு விபத்தில் இடது குதி காலில் பெரிய காயம். இது பற்றி ஒரு பதிவும் எழுதி இருக்கிறேன்.

  // மணவை ஜேம்ஸ் அவர்களும் ஒரு விபத்தில் சிக்கியிருக்கிறார் என்று அறிகிறேன்.. //

  மணவை ஜேம்ஸ் அவர்களும் ஒரு விபத்தில் சிக்கியிருக்கிறார் என்பது குறித்து தகவல் ஏதும் எனக்கு யாரும் சொல்லவில்லை. இப்போதுதான் உங்கள் முல்லம் அறிகிரேன். நாளை காலை விசாரிக்கிறேன்.

  // விரைவில் நலம் பெருக. //

  இப்போது தேவலாம். குணமடைந்து வருகிறேன்; கொஞ்சம் சிரமப் பட்டாலும், இரண்டு கால்களாலும் நடக்க முடிகிறது. தங்களின் அன்பான நலம் விசாரிப்பிற்கு நன்றி.

  ReplyDelete
 52. மிக அருமையான அழுத்தமான பதிவு சார் !

  எனக்கும் மிகப் பிடித்தவர் ரங்காராவ். மைக்கேல் மதன காமராஜனிலும் எனக்கு இவர் நடிப்புப் பிடிக்கும்.

  நீங்கள் கூறியுள்ள அனைத்துப் படங்கள் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். சிலது பார்த்திருக்கிறேன். மாயா பஜார், முத்துக்கு முத்தாக பாடல்கள் கேட்டிருக்கிறேன். மொத்தத்தில் ரங்காராவ் அவர்களுக்கு அருமையான ட்ரிப்யூட் !

  ReplyDelete
 53. தமிழ் திரை உலகத்தில் கடோத்கஜா ஒரு படிமம்.

  ReplyDelete
 54. மறுமொழி > Thenammai Lakshmanan said...

  பல்வேறு பணிகளுக்கு இடையிலும், நீண்ட கருத்துரை தந்த சகோதரி அவர்களுக்கு நன்றி!

  ReplyDelete
 55. மறுமொழி > kadaisibench said...

  கருத்துரை தந்த ‘கடைசி பெஞ்ச்’ புதுக்கோட்டை பாண்டியன் அவர்களுக்கு நன்றி.

  ReplyDelete
 56. அன்புடையீர்,

  வணக்கம். தங்களின் வலைப்பதிவுகளில் சில, இன்றைய வலைச்சரத்தில், வலைச்சர ஆசிரியர் திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்களால் பாராட்டிப் புகழ்ந்து, அடையாளம் காட்டப்பட்டு சிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  பாராட்டுகள். வாழ்த்துகள்.

  இணைப்பு:http://blogintamil.blogspot.in/2015/06/3.html

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும்.

   Delete
 57. உங்களது பதிவுகளைத் தொடர்ந்து படித்துவருகிறேன். இன்று வலைச்சரத்தில் தங்களை ஜீஎம்பி ஐயா அறிமுகப்படுத்தியுள்ளதறிந்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.
  http://drbjambulingam.blogspot.com/
  http://ponnibuddha.blogspot.com/

  ReplyDelete
  Replies
  1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும்.

   Delete
 58. இன்றைய வலைச்சரத்தில் ஐயா GMB அவர்கள் - தங்களைக் குறிப்பிட்டு சிறப்பித்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி.. வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. சகோதரரின் கருத்துரைக்கு நன்றி. தாமதமான மறுமொழிக்கு மன்னிக்கவும்.

   Delete