எனக்கு ஜெயகாந்தன்
என்றாலே அன்றைய காலத்து அச்சகங்களில் இருந்த டிரெடில் எந்திரமும் அதன் ஓசையும்
தான் ஞாபகம் வரும். காரணம் அந்த தலைப்பில் அவர் எழுதிய சிறு கதையோடு ஒன்றிப் போய்
படித்தேன். ஒரு காலத்தில் இந்த டிரெடில் எந்திரம் இயக்கும் அச்சக வேலையாள்
பணியையும் ஜெயகாந்தன் செய்து இருக்கிறார் என்பதனை பிற்பாடு தெரிந்து கொண்டேன்.
என்.சி.பி.எச்
புத்தகக் கடையில்:
நான் கல்லூரி
மாணவனாக இருந்தபோது திருச்சி சிங்கார தோப்பில் இருந்த NCBH எனப்படும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸிற்கு
அடிக்கடி போவது வழக்கம். அன்றைய தினம் அங்கே பணி புரிந்த தோழர்கள் எனக்கு நல்ல
பழக்கம். எனவே அங்கு போவதோடு அவர்கள் நடத்தும் புத்தக கண்காட்சிகளுக்கும்
செல்வதுண்டு. அப்போது அங்கேயே உட்கார்ந்து நிறைய புத்தகங்களை படித்து எனது இலக்கிய
தாகத்தை தணித்துக் கொண்டேன். அங்கே தொடர்ந்த வாசிப்பு பழக்கம் இன்றும் எனக்குள் தொடர்கிறது.
அந்த NCBH புத்தகக கடையில் அவர்கள் வெளியிட்ட
நூல்களோடு கம்யூனிஸ்டு புத்தகங்கள் மற்றும் சோவியத் ரஷ்யாவிலிருந்து வந்த
தமிழாக்கம் செய்யப்பட்ட ருஷ்ய நூல்கள் மட்டுமே இருக்கும். மற்றைய பதிப்பகங்களின்
நூல்கள் விற்க அனுமதி இல்லை. ஆனாலும் விதி விலக்காக மீனாட்சி புத்தக நிலையம்,
புதுக்கோட்டை வெளியிட்ட எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய நூல்களை மட்டும்
அனுமதித்து இருந்தார்கள். காரணம் தோழர்களுடன் அவருக்கு இருந்த தொடர்புதான்.அந்த
வகையில் ஜெயகாந்தன் நூல்களில் பெரும்பாலானவற்றை ரசித்து படிக்கும் வாய்ப்பு
கிடைத்தது. இந்த புத்தகக் கடையுடன் எனக்கு ஏற்பட்ட தொடர்பு
குறித்து நானும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸும்!
என்ற தலைப்பில் http://tthamizhelango.blogspot.com/2012/07/blog-post_16.html ஒரு பதிவும் எழுதியுள்ளேன்.
ஜெயகாந்தன்
காலம்:
ஜெயகாந்தன் தனது
எழுத்துக்களை எழுதிய காலம் என்றால், அப்போதுதான் இந்தியா சுதந்திரம் அடைந்து
கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டு இருந்த நேரம். சாதாரண தொழிலாளர்கள் கம்யூனிச தொழிற்சங்களில்
இணைந்து உணர்வுப் பூர்வமாக பாட்டாளி வர்க்கமாக இயங்கிய காலம். இன்றைய காலம் போன்று
டீவி, செல்போன், இண்டர்நெட், பேஸ்புக், ட்விட்டர் போன்ற குறுக்கீடுகள் மக்களுக்கு
இல்லாத காலம். சினிமா பார்த்தல், பத்திரிகைகளில் வரும் சிறுகதைகள், தொடர்
நாவல்கள், புத்தகங்கள் வாசித்தல் என்று வாசிப்பில் மக்கள் பொழுது போக்கிய காலம்.
எனவே ஜெயகாந்தன் படைத்திட்ட சாதாரண கதாபாத்திரங்கள் மக்களைப் பெரிதும் கவர்ந்தன.
பாத்திரப்
படைப்புகள்:
சாதாரணமாக மற்ற
எழுத்தாளர்கள் வந்தது, போனது என்று குடும்பக் கதைகளை எழுதிக் கொண்டு இருந்த
நேரத்தில் இவர் சமுதாய சிக்கல்களை மய்யமாக வைத்து எழுதிய கதைகள் வாசகர்கள்
மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டன. உதாரணமாக யாருக்காக அழுதான்? , கோகிலா என்ன செய்துவிட்டாள்?, சில நேரங்களில் சில மனிதர்கள், பாவம், இவள் ஒரு பாப்பாத்தி , ஒரு மனிதனும் சில எருமை மாடுகளும், உன்னைப் போல் ஒருவன் – போன்ற நாவல்களைச் சொல்லலாம். இன்னும் சொல்லிக் கொண்டே
போகலாம். (இந்த நாவல்களின்
கதைச் சுருக்கங்களை மற்றவர்களைப் போல மீண்டும் மீண்டும் சொல்லி உங்களுக்கு அலுப்பு
உண்டாக்க விரும்பவில்லை). தன்னுடைய படைப்புகளுக்கும் வித்தியாசமான தலைப்புகளையே வைத்து வாசகர்களைக் கவர்ந்தார்.
ஜெயகாந்தன் வீட்டை
விட்டு வெளியேறிய நாளில் ஆரம்ப காலத்தில் பேப்பர் விற்கும் பையன் ,கடைச் சிறுவன்,
அச்சக தொழிலாளி என்று பல வேலைகளை செய்து இருக்கிறார். மேலும் கம்யூனிஸ்டு
தோழர்களிடமும் பழக்கம். எனவே அவரது பாத்திரப் படைப்புகளில் கொஞ்சம் சிவப்பு நெடி
வீசியது. இவரது சில பாத்திரப் படைப்புகள்,
எழுத்தாளர் புதுமைப் பித்தனின் கதைகளை நினைவு படுத்தின.( உதாரணம் புதுமைப்
பித்தனின் பொன்னகரம்)
டிரெடில் என்ற சிறு கதை, ஒரு சிறிய அச்சகத்தில் கம்பாஸிட்டர், பைண்டர், மெஷின்மேன் என்று எல்லா வேலைகளையும் பார்க்கும் வினாயக
மூர்த்தி என்ற தொழிலாளியின் நிலைமையோடு, அந்தக் கால பிரிண்டிங் பிரஸ் இருந்த
காலத்து சமூக சூழலையும் காட்டுகிறது.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்று ஒரு சிறுகதை. நந்தவனம் எனப்படும் சுடுகாட்டில் ஒரு குடிசை போட்டுக்
கொண்டு, மயான வேலைகள் பார்த்த ஆண்டி மற்றும் அவனது மனைவி முருகாயி பற்றிய கதை இது.
அடுத்தவர் பிணங்கள் வரும்போதெல்லாம், காரணம் புரியாமலேயே
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி."
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி."
என்ற பாடலைப்
பாடுவான்; அழக்கூட மாட்டான். தனது கருமத்திலேயே கண்ணாக இருப்பான். அவனுக்கு தனது
மகன் இருளனின் இறப்புக்குப் பிறகுதான் இறப்பின் சோகம் வலிக்கிறது. அப்போது முதல் ஒவ்வொரு பிணமும் மயானத்திற்கு வரும்
போதெல்லாம் அழத் தொடங்கியவன், அழுது கொண்டே இருக்கிறான்.
கீழ்ஜாதி
என்றழைக்கப்பட்ட ஜாதியில் பிறந்த அம்மாசி என்ற கிழவனிடம், ஒரு பிராமணப் பெண் தனது
குழந்தையை ஒப்படைத்து விட்டு இறந்து போகிறாள். அவன் அந்த குழந்தையை ஏற்றுக் கொண்டு
அவளுக்கு செய்ய வேண்டிய காரியங்களைச் செய்கிறான். ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில் என்ற கதை சொல்லும் கதை இது.
அக்கினிப்
பிரவேசம் என்ற கதையில், தனது
கெட்டுப் போன (அறியாத பருவம்) மகளை, அவள் தலையில் தண்ணீரை ஊற்றி, தூய்மைப்
படுத்திவிட்டு ஜீரணித்துக் கொள்ளும் ஒரு தாய் அப்போது பரபரப்பாக பேசப்பட்டாள்.
ஜெயகாந்தனின்
அரசியல்:
காம்ரேடுகளிடம்
இருந்தாலும் இவர் கம்யூனிஸ்டு இயக்கத்தில் முழுமையாக தன்னை ஒரு முழுநேரத் தொண்டனாக
ஈடுபடுத்திக் கொண்டு கட்சி மேடைகளில் பேசியதாக எனக்குத் தெரியவில்லை. ஆனாலும்
காம்ரேடுகள் இவரது எழுத்துக்களில் உள்ள ஈர்ப்பின் காரணமாக அவரை அங்கீகரித்தனர்
என்பதே உண்மை. இவர் அணிந்த ஆடை, கண்ணாடி மற்றும் இவரது முரட்டுத்தனமான மீசை இவரை
வித்தியாசமாகவே காட்டின. எனக்குத் தெரிந்து ஒரு கல்லூரி பேராசிரியர் ஒருவர்,
இவரைப் போலவே தோற்றம் நடை உடை பாவனையோடு இவரைப் போலவே நீண்ட மீசையும் வைத்து இருந்தார்.
ஆரம்பத்தில்
இருந்தே ஜெயகாந்தனுக்கு திராவிட அரசியல் என்றால்
கொஞ்சமும் பிடிக்காது. எனவே அவ்வப்போது தி.மு.க தலைவர்களைப் பற்றி
சர்ச்சையான தனது கருத்துக்களை வெளிப்படையாகவே சொல்லுவார். ஒரு கட்டத்தில்
காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டபோது ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டே (கண்ணதாசனுக்கும் இவருக்கும் இந்த
விஷயத்தில் ரொம்பவே ஒற்றுமை ) திமு.கவை
எதிர்த்தார். குறிப்பாக ”சினிமாவுக்குப் போன சித்தாளு” என்ற நூல் எம்ஜிஆர் ரசிகர்களை மிகவும்
கோபப்பட வைத்தது. இந்த நாவலில் வாத்தியார் என்ற பாத்திரப் படைப்பின் பெயரில் கடுமையான விமர்சனங்கள். (பின்னாளில் கலைஞர்
மு.கருணாநிதியும் இவரும் பகைமை இல்லாது நண்பர்களாக மாறியது எல்லோருக்கும் தெரிந்த
விஷயம்தான்) ஜெய
ஜெய சங்கர..., ஹர ஹர சங்கர – என்ற நூல்கள்
இவர் முற்றிலும் ஆத்திகத்திற்கு மாறியதை உணர்த்துபவை.
ஜெயகாந்தன் என்றால் ஒரு கம்பீரமான எழுத்தாளர் என்பதில் ஐயமில்லை. இன்றைக்கும் என்னிடம் இருக்கும் ஜெயகாந்தன் எழுதிய படைப்புகளை சில சமயம் மீள் வாசிப்பு செய்வதுண்டு. அண்மையில் நான் வாங்கிய நூல் ஆனந்த விகடன் வெளியிட்ட “ஜெயகாந்தன் கதைகள்”
( PICTURES - COURTESY: “ GOOGLE IMAGES )
அருமையான விளக்கவுரை ஜெயகாந்தன் கடைசிவரை யாருக்கும் படப்படாத சிம்ம சொப்பனமாகவே வாழ்ந்தார் 80 உண்மை.
ReplyDeleteதமிழ் மணம் இணைப்புடன் 1
ஜெயகாந்தனைப் பற்றிய நல்ல மதிப்பீடு. அக்கினிப் பிரவேசம் சிறுகதையின் தொடர்ச்சியாகவும் அதன் அடுத்த பகுதியாகவும்தான் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவலை எழுதினார். ஜெயகாந்தனின் சிறுகதைகளைப் போலவே அவரது முன்னுரைகளும் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டவை. அவருடைய ஒவ்வொரு நூலின் முன்னுரைகளிலும் அவருடைய ஆளுமை மிளிரும்.
ReplyDeleteவணக்கம் நலமா
ReplyDeleteஜெயகாந்தன் பல்வேறு மேடைகளில் தோழர்க்ளளுக்காக சிவப்பு பேசினார் ...
ஆச்சர்யமான தகவல் ஒன்று... புதுகை மீனாட்சி பதிப்பகம் ஜெயகாந்தன் கதைகளை வெளியிட்டது என்பது...
மகிழ்வாக இருந்தது...
வாய்ப்பிருந்தால் அவர்களிடம் விசாரிக்கிறேன்...
தகவலுக்கு நன்றி அய்யா
வணக்கம்
ReplyDeleteஐயா
நான் நேசிக்கும் ஒரு எழுத்தாளர்.. அவரின் மறைவு எல்லோருக்கும் ஒரு இழப்புத்தான். அவர் மறைந்தாலும் அவரின் தடயங்கள் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும் அருமையாக சொல்லியுள்ளீர்கள் த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களின் பார்வையில் ஜெயகாந்தன் அவர்களை என்னாலும் நன்கு இதில் வாசித்துப் புரிந்துகொள்ள முடிந்தது. அருமையான அலசல்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2014/08/blog-post.html இந்த என் பதிவினில் உள்ள கோபாலி எனச் செல்லமாக அழைக்கப்பட்டுவரும் ’தஞ்சாவூர் கவிராயர்’ அவர்களின் முகத்தோற்றம், மூக்குக்கண்ணாடி, மீசை போன்றவற்றை முதன்முதலாக நான் பார்த்தபோது, அசப்பில் இவர் ஜெயகாந்தன் போலவே இருக்கிறாரே என நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன். அவரும் அந்தக்கூட்டத்தில் பேசும்போது இதையே ஒத்துக்கொண்டதுபோல குறிப்பிட்டுச்சொன்னதும் எனக்கு மேலும் வியப்பாக இருந்தது.
ReplyDeleteமறுமொழி > KILLERGEE Devakottai said...
ReplyDelete// அருமையான விளக்கவுரை ஜெயகாந்தன் கடைசிவரை யாருக்கும் படப்படாத சிம்ம சொப்பனமாகவே வாழ்ந்தார் 80 உண்மை. தமிழ் மணம் இணைப்புடன் 1 //
நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி. ஜெயகாந்தன் அவர்கள் தனது மாற்றுக் கருத்துக்களை வெளிப்படையாக சிம்மமாக கர்ஜித்தார்.
மறுமொழி > Amudhavan said...
ReplyDeleteஅய்யா அமுதவன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும், நன்றி.
// ஜெயகாந்தனைப் பற்றிய நல்ல மதிப்பீடு. அக்கினிப் பிரவேசம் சிறுகதையின் தொடர்ச்சியாகவும் அதன் அடுத்த பகுதியாகவும்தான் 'சில நேரங்களில் சில மனிதர்கள்' நாவலை எழுதினார். ஜெயகாந்தனின் சிறுகதைகளைப் போலவே அவரது முன்னுரைகளும் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டவை. அவருடைய ஒவ்வொரு நூலின் முன்னுரைகளிலும் அவருடைய ஆளுமை மிளிரும். //
என்னில் மூத்த தாங்கள் ஜெயகாந்தன் எழுத்துக்களை நிறையவே படித்து இருப்பீர்கள். தகவலுக்கு நன்றி.
ReplyDeleteமறுமொழி > Mathu S said...
அன்பு சகோதரர் ஆசிரியர் S. மது அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
// வணக்கம் நலமா ஜெயகாந்தன் பல்வேறு மேடைகளில் தோழர்களுக்காக சிவப்பு பேசினார் ... ஆச்சர்யமான தகவல் ஒன்று... புதுகை மீனாட்சி பதிப்பகம் ஜெயகாந்தன் கதைகளை வெளியிட்டது என்பது... மகிழ்வாக இருந்தது... வாய்ப்பிருந்தால் அவர்களிடம் விசாரிக்கிறேன்... தகவலுக்கு நன்றி அய்யா //
ஜெயகாந்தன் பல்வேறு மேடைகளில் தோழர்களுக்காக சிவப்பு பேசினார் – இதனை விசாரித்து சொல்லவும்.
மறுமொழி > ரூபன் said...
ReplyDeleteகவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கமும் நன்றியும். அவர் தமிழ் இலக்கியத்திற்கு செய்த பணியினை மறக்கவோ மறுக்கவோ இயலாது.
நிதானமாக எழுதியிருக்கிறீர்கள். சிறப்பு.
ReplyDeleteசினிமாவுக்குப் போன சித்தாளு எம் ஜீ ஆரை மிகவும் மட்டமாக நேரடியாகவே சித்தரித்து நகையாடி இழிவுசெய்து மகிழ்ந்தது. அதைப்படிப்போர் எம் ஜீ ஆர் இரசிகர்களாக இருக்கவேண்டுமென்பதில்லை. ஒரு பாமர சிந்தனையாளனையும் இப்படிப்பட்ட எழுத்தாளரிடமிருந்து இப்படிப்பட்ட தரங்கெட்ட சரக்கா என்றுதான் கேடக வைக்கும். கருநாநிதியும் எம் ஜீ ஆரை தாக்கி (அதாவது இதே தீமைவைத்து) ஒரு பாக்கெட் நாவல எழுதியிருக்கிறார். ஆனால் அதை வாசித்தோர் எவருமில்லர். தற்செயலாக ஒருவரிடம் எப்போதோ பார்த்த ஞாபகம். அதில் வரும் கதாநாயகன் பெயர் இன்பசாகரன். கருநாநிதி எனவே ஜெயகாந்தனின் தோளில் கைபோட்டது பொருத்தமே. இறுதிவரை அந்த நடிகரைத்தாக்கியதற்கு நன்றி என்பது போலவே உதவியும் செய்தார்.
எம் ஜீ ஆர் எம் ஜீ ஆராகவே வாழ்ந்து போனார். அவரை ஏளனமும் இழிவும் செய்து இவர்கள் மடிந்துவிட்டார்கள். அதாவது இவர்களது எண்ணம் நிறைவேறவேயில்லை. ஜெயகாந்தனின் நற்பெயரை இந்த சிறு நாவல் கெடுத்துக்கொண்டேயிருக்கும்.
செகப்பிரியர் சொல்வார்: ஒருவர் இறந்த பின் அவன் என்ன நல்லது செய்தான் என்று உலகம் நினைவில் வைத்துக்கொள்வதில்லை. அவன் ஏதாவது கெட்டது செய்திருந்தால் அதைப்பற்றிப் பேசிக்கொண்டேயிருக்கும்.
அதைப்போல சி.போ. சித்தாளு செய்த கலங்கம் ஜெயகாந்தனின் மேல் ஒட்டிக் கொண்டேயிருக்கும்.
செகப்பிரியரின் வாக்கை அவரின் ஆங்கிலத்திலேயே கீழே எழுதியிருக்கிறேன்:
//The evil that men do lives after them; the good is oft interred with their bones.//
William Shakespeare in Julius Ceaser
இவண்
பால சுந்தர விநாயகம்
நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது 'அக்னிப் பிரவேசம்' கதையை படித்திருக்கிறேன். அந்த சிறுவயதிலே என்னை பாதித்த கதை இது. அதன் பின் வெகு காலம் கழிந்து நான் பிளஸ் 2 படிக்கும் போது 'நந்தவனத்தில் ஓர் ஆண்டி' கதை தமிழ் துணைப் பாடத்தில் வந்திருந்தது. அந்த கதையும் என்னை மிகவும் பாதித்தது. ஆனால் அவரது வேறு கதைகள் எதையும் நான் படிக்கவில்லை. இந்த இரண்டு கதைகளுமே என் மனதில் அவரை சிம்மாசனம் போட்டு உட்கார வைத்துவிட்டது.
ReplyDeleteஅழகான பதிவு!
எனது ஆறாம் வகுப்பு காலத்திலிருந்து - அதாவது- விகடனில் ஜெயகாந்தன் எழுத ஆரமித்த நாளில் இருந்து அவரது எல்லா நூல்களையும் நான் வாசித்திருக்கிறேன். He was always ahead of his time. கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்து, மதுரை டாக்டர் எஸ் ராமகிருஷ்ணன், பாலதண்டாயுதம் போன்ற பெரியவர்களிடமிருந்து கட்சி அறிவும், தமிழ் அறிவும், எழுதும் வகையும், ஆங்கிலத்தில் தேர்ச்சியும் பெற்றவர். அவரை எழுத்துலகிற்குக் கொண்டுவந்ததில் மணியனுக்குப் பெரும்பங்கு உண்டு. கம்யூனிசம் தமிழ்நாட்டில் போணியாகாது என்ற நிலைமை வந்தபோது அவர் காமராஜரைச் சார்ந்துகொண்டார். ஜெயகாந்தன், கண்ணதாசன், குமரி அனந்தன் ஆகிய மூவரும் காமராஜரின் தலைமைக்கு இளைஞர்களைப் பெரிய எண்ணிக்கையில் கொண்டுவந்து சேர்த்தனர். ஆனால் இவர்களை காமராஜர் உரிய கௌரவத்துடன் நடத்தவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும். காமராஜர் மறைவுக்குப் பிறகு கலைஞரை நாடித் தனக்கு அண்ணாநகரில் ஒரு பிளாட் அளிக்கப் பெற்றுக்கொண்டார். அதாவது, கற்பனையில் சிறகடித்த அதே சமயம், உலகியல் ஞானத்தையும் அவர் விட்டுவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விகடனும் மணியனும் இல்லையென்றால் அவர் வெறும் சிற்றிதழ் எழுத்தாளராகவே முடிந்திருக்கக் கூடும் அபாயம் நேர்ந்திருக்கும். அதே சமயம், எழுத்தை விடவும் சினிமா என்ற களத்தில் பெயரெடுக்கவேண்டும் என்னும் பேராசை அவரை உந்தித்தள்ளிக்கொண்டே இருந்தது. இன்னொரு சத்யஜித் ரெயாக மாறவேண்டும் என்னும் லட்சியம் அவரிடம் ஆழமாக வேர் கொண்டிருந்தது. அவர் எடுத்த சில படங்களில் அதற்கான வித்தைக் காண முடியும். ஒரு பல்துறை வித்தகராக விளங்கிய ஜெயகாந்தன், என்றென்றும் தனது எழுத்துக்காகவே நினைக்கப்படுவார் என்பது உறுதி. - இராய செல்லப்பா, சென்னை
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநல்ல பதிவு .ஜெயகாந்தனின் "இது என்ன பெரிய விஷயம்" என்ற கதை எனக்கு பிடித்த கதைகளில் ஒன்று பள்ளி வயதில் நூலகத்தில் படித்த அதனை மீண்டும் படிக்க இணையத்தில் தேடினேன்.கிடைக்கவில்லை
ReplyDeleteஜெயகாந்தன் பற்றிய செய்திகளை உங்கள் அனுபவத்தையும் இழையோட விட்டுச் சொல்லிய விதம் சிறப்பு.
ReplyDeleteத ம கூடுதல் 1
ஜெயகாந்தன் கம்பீர எழுத்தாளர்தான் ஐயா
ReplyDeleteஅவரது பல சிறுகதைகளைப் படித்துப் படித்து வியந்திருக்கிறேன்
நன்றி ஐயா
தம +1
பொருள் பொதிந்த எழுத்துக்கள், ஆழமான கருத்துக்கள், திடமான வெளிப்பாடு இவை போன்ற பன்முகப்பரிமாணம் கொண்ட சிங்கமே ஜெயகாந்தன். கருத்துரீதியாக அவருடன் உடன்பாடு இல்லாதவர்கள்கூட அவரது எழுத்தை நேசிப்பார்கள். அதுதான் ஜெயகாந்தனின் வெற்றிக்குக் காரணம்.
ReplyDeleteஉங்களை கவர்ந்த / பாதித்த விசயத்தையும் சொன்னது அருமை ஐயா...
ReplyDeleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteஜெயகாந்தன் பற்றி மிக அருமையாக சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுகள்... வாழ்த்துகள்.
நன்றி.
த.ம. 11.
பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே ‘சரஸ்வதி’ என்ற பத்திரிகையில் வந்த ஜெயகாந்தன் அவர்களின் எழுத்துக்களை படித்து அவரது கதை சொல்லும் பாணியால் ஈர்க்கப்பட்டவன் நான். என் அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள் திரு ஜெயகாந்தன் அவர்களின் தீவிர இரசிகர் மற்றும் நண்பர் என்பதால் அவரிடம் இருந்த ஜெயகாந்தன் அவர்களின் பெரும்பாலான கதைகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரது தனிப்பட்ட குணத்தை தவிர்த்து அவரது எழுத்துக்களை மட்டும் பார்த்தால், துணிச்சலாக, எதையும் நேராக, உள்ளது உள்ளதுபடி சொல்லும் ஒரு எழுத்தாளர் அவர் என்பதை யாவரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அவரது மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஒரு பேரிழப்பே!
ReplyDeleteமறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said... (1, 2)
ReplyDeleteஅன்புள்ள V.G.K அவர்களுக்கு வணக்கம். தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் பாராட்டிற்கும், நன்றி.
// http://gopu1949.blogspot.in/2014/08/blog-post.html இந்த என் பதிவினில் உள்ள கோபாலி எனச் செல்லமாக அழைக்கப்பட்டுவரும் ’தஞ்சாவூர் கவிராயர்’ அவர்களின் முகத்தோற்றம், மூக்குக்கண்ணாடி, மீசை போன்றவற்றை முதன்முதலாக நான் பார்த்தபோது, அசப்பில் இவர் ஜெயகாந்தன் போலவே இருக்கிறாரே என நான் எனக்குள் நினைத்துக்கொண்டேன். அவரும் அந்தக்கூட்டத்தில் பேசும்போது இதையே ஒத்துக்கொண்டதுபோல குறிப்பிட்டுச்சொன்னதும் எனக்கு மேலும் வியப்பாக இருந்தது. //
நான் ஏற்கனவே தஞ்சாவூர் கவிராயர் அவர்களது புகைப் படத்தினை இண்டர்நெட்டில் பார்த்து இருக்கிறேன். இப்போது மீண்டும் நீங்கள் தந்த இணைப்பின் வழியே உங்கள் தளத்தில் இருக்கும் படத்தினை மீண்டும் பார்த்தேன். அச்சு அசப்பில் இவர் ஜெயகாந்தன் போலவே இருப்பது ஆச்சரியமான விஷயம்தான்.
மறுமொழி > When it is high time said...
ReplyDelete// நிதானமாக எழுதியிருக்கிறீர்கள். சிறப்பு. //
சகோதரர் பால சுந்தர விநாயகம் அவர்களின் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி.
// சினிமாவுக்குப் போன சித்தாளு எம் ஜீ ஆரை மிகவும் மட்டமாக நேரடியாகவே சித்தரித்து நகையாடி இழிவுசெய்து மகிழ்ந்தது. அதைப்படிப்போர் எம் ஜீ ஆர் இரசிகர்களாக இருக்கவேண்டுமென்பதில்லை. ஒரு பாமர சிந்தனையாளனையும் இப்படிப்பட்ட எழுத்தாளரிடமிருந்து இப்படிப்பட்ட தரங்கெட்ட சரக்கா என்றுதான் கேடக வைக்கும். கருநாநிதியும் எம் ஜீ ஆரை தாக்கி (அதாவது இதே தீமைவைத்து) ஒரு பாக்கெட் நாவல எழுதியிருக்கிறார். ஆனால் அதை வாசித்தோர் எவருமில்லர். தற்செயலாக ஒருவரிடம் எப்போதோ பார்த்த ஞாபகம். அதில் வரும் கதாநாயகன் பெயர் இன்பசாகரன். கருநாநிதி எனவே ஜெயகாந்தனின் தோளில் கைபோட்டது பொருத்தமே. இறுதிவரை அந்த நடிகரைத்தாக்கியதற்கு நன்றி என்பது போலவே உதவியும் செய்தார்.//
சினிமாவுக்குப் போன சித்தாளு, ”மெட்ராஸ் தமிழ்” நடையில் மெட்ராஸ் சினிமா ரசிகர்கர்களைப் பற்றிய நாவல் ஜெயகாந்தன் வாசகர்களில் ஒருவனாக இருந்தபோதும், எம்ஜிஆர் ரசிகனாக (சினிமா பைத்தியம் எனக்கு கிடையாது) இருந்த படியினால், இந்த நாவலில் இப்படி எழுதி விட்டாரே என்று யோசித்தது உண்டு. ஆனாலும் அப்போதைய அரசியலில் இது சகஜம் என்றே எடுத்துக் கொண்டேன். (கருணாநிதி Vs எம்ஜிஆர் அரசியல் இன்று மறு பரிமாணம் எடுத்து கருணாநிதி Vs ஜெயலலிதா என்று வந்து நிற்கிறது.)
மறுமொழி > S.P. Senthil Kumar said...
ReplyDeleteசகோதரர் S.P. செந்தில் குமார் அவர்களுக்கு நன்றி.தங்களுடைய, வேதனை பதிவினையும், அதனைச் சார்ந்த தங்கள் புள்ளி விவர பதிவினையும் அண்மையில்தான் படித்தேன்.
ஜெயகாந்தனின் மற்றைய சிறுகதைகளையும், நாவல்களையும் நேரமிருப்பின் படித்து பார்த்து, ஒரு ஜர்னலிஸ்ட் என்ற முறையில் உங்கள் விமர்சனங்களையும் எழுதவும்.
மறுமொழி > Chellappa Yagyaswamy said...
ReplyDeleteநீண்ட நாட்களுக்குப் பிறகு, எனது வலைத்தளம் வந்து, நீண்டதொரு கருத்தினை தந்திட்ட அய்யா இராய செல்லப்பா அவர்களுக்கு நன்றி.
// எனது ஆறாம் வகுப்பு காலத்திலிருந்து - அதாவது- விகடனில் ஜெயகாந்தன் எழுத ஆரமித்த நாளில் இருந்து அவரது எல்லா நூல்களையும் நான் வாசித்திருக்கிறேன். He was always ahead of his time. கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இருந்து, மதுரை டாக்டர் எஸ் ராமகிருஷ்ணன், பாலதண்டாயுதம் போன்ற பெரியவர்களிடமிருந்து கட்சி அறிவும், தமிழ் அறிவும், எழுதும் வகையும், ஆங்கிலத்தில் தேர்ச்சியும் பெற்றவர்.//
ஆமாம் அய்யா அவரது ஆரம்பகால வாழ்க்கை கம்யூனிஸ்டுகளிடம் தான் தொடங்கியது.
// அவரை எழுத்துலகிற்குக் கொண்டுவந்ததில் மணியனுக்குப் பெரும்பங்கு உண்டு. //
ஆனந்த விகடன் வெளியிட்டுள்ள “ஜெயகாந்தன் கதைகள்” என்ற நூலுக்கு , ஜெயகாந்தன் எழுதியுள்ள அணிந்துரையில் “ஆனந்த விகடனில் எழுதத் தூண்டிய நண்பர்கள் சாவி, மணியன் ஆகியோர் இன்று இல்லாதது எனக்கு வருத்தம் தருகிறது “ என்றே குறிப்பிட்டுள்ளார்.
// கம்யூனிசம் தமிழ்நாட்டில் போணியாகாது என்ற நிலைமை வந்தபோது அவர் காமராஜரைச் சார்ந்துகொண்டார். ஜெயகாந்தன், கண்ணதாசன், குமரி அனந்தன் ஆகிய மூவரும் காமராஜரின் தலைமைக்கு இளைஞர்களைப் பெரிய எண்ணிக்கையில் கொண்டுவந்து சேர்த்தனர். ஆனால் இவர்களை காமராஜர் உரிய கௌரவத்துடன் நடத்தவில்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும்.
//காமராஜர் மறைவுக்குப் பிறகு கலைஞரை நாடித் தனக்கு அண்ணாநகரில் ஒரு பிளாட் அளிக்கப் பெற்றுக்கொண்டார். அதாவது, கற்பனையில் சிறகடித்த அதே சமயம், உலகியல் ஞானத்தையும் அவர் விட்டுவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விகடனும் மணியனும் இல்லையென்றால் அவர் வெறும் சிற்றிதழ் எழுத்தாளராகவே முடிந்திருக்கக் கூடும் அபாயம் நேர்ந்திருக்கும்.//
// அதே சமயம், எழுத்தை விடவும் சினிமா என்ற களத்தில் பெயரெடுக்கவேண்டும் என்னும் பேராசை அவரை உந்தித்தள்ளிக்கொண்டே இருந்தது. இன்னொரு சத்யஜித் ரெயாக மாறவேண்டும் என்னும் லட்சியம் அவரிடம் ஆழமாக வேர் கொண்டிருந்தது. அவர் எடுத்த சில படங்களில் அதற்கான வித்தைக் காண முடியும். ஒரு பல்துறை வித்தகராக விளங்கிய ஜெயகாந்தன், என்றென்றும் தனது எழுத்துக்காகவே நினைக்கப்படுவார் என்பது உறுதி. - இராய செல்லப்பா, சென்னை //
ஜெயகாந்தன் பற்றிய மேல் அதிக தகவல்கள் தந்த அய்யா இராய செல்லப்பா, சென்னை அவர்களுக்கு நன்றி.
மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...
ReplyDeleteசகோதரர் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. நீங்கள் குறிப்பிடும், இது என்ன பெரிய விஷயம்" என்ற கதை பற்றின விவரம் கிடைப்பின் தங்களுக்கு தெரியப் படுத்துகிறேன்.
மறுமொழி > ஊமைக்கனவுகள். said...
ReplyDeleteஆசிரியர் ஜோசப் விஜூ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
மறுமொழி > Dr B Jambulingam said...
ReplyDeleteகருத்துரை தந்த முனைவர் அவர்களுக்கு நன்றி.
மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...
ReplyDeleteசகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
மறுமொழி > manavai james said...
ReplyDeleteசகோதரர் ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
மறுமொழி > வே.நடனசபாபதி said...
ReplyDeleteஅய்யா V.N.S அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
// பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போதே ‘சரஸ்வதி’ என்ற பத்திரிகையில் வந்த ஜெயகாந்தன் அவர்களின் எழுத்துக்களை படித்து அவரது கதை சொல்லும் பாணியால் ஈர்க்கப்பட்டவன் நான். என் அண்ணன் திரு சபாநாயகம் அவர்கள் திரு ஜெயகாந்தன் அவர்களின் தீவிர இரசிகர் மற்றும் நண்பர் என்பதால் அவரிடம் இருந்த ஜெயகாந்தன் அவர்களின் பெரும்பாலான கதைகளை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.//
நீங்களும் ஜெயகாந்தன் வாசகர் வட்டத்தில் ஒருவர் என்பது குறித்து மிக்க மகிழ்ழ்ச்சி.
// அவரது தனிப்பட்ட குணத்தை தவிர்த்து அவரது எழுத்துக்களை மட்டும் பார்த்தால், துணிச்சலாக, எதையும் நேராக, உள்ளது உள்ளதுபடி சொல்லும் ஒரு எழுத்தாளர் அவர் என்பதை யாவரும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். அவரது மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஒரு பேரிழப்பே! //
அவருடைய தனிப்பட்ட குணம் என்றால் எழுத்து கர்வம் மிக்கவர் என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அந்நாளைய இளைய தலைமுறை வாசகர்களுக்கு வாசிப்பினில் ஆர்வம் உண்டாக காரணமானவர். நீங்கள் குறிப்பிடுவது போல ” அவரது மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கு ஒரு பேரிழப்பே! “
ஆனந்த விகடனில் ஜெயகாந்தனின் முத்திரைக் கதைகள் சில வாசித்திருக்கிறேன் ஒரு சில திரைப் படங்களும் நினைவுக்கு வருகிறது மற்றபடியாருடைய எழுத்திலும் ஒன்றிப் போனதெல்லாம் கிடையாதுஆனந்த விகடனின் ஆதரவு இருந்திராவிட்டால் நாம் ஜெய காந்தனைப் பற்றி இவ்வளவு பேசமாட்டோம்
ReplyDeleteவாருங்கள் பதிவினை காண்பதற்கு!
ReplyDelete"பாரிசில் பட்டிமன்ற தர்பார்" http://kuzhalinnisai.blogspot.com/2015/04/blog-post_20.html
வாக்கோடு வருகை தர வேண்டுகிறேன்.
நட்புடன்,
புதுவை வேலு
சிறப்பான பார்வை! ஜெயக்காந்தன் கதைகள் ஆனந்தவிகடன் வெளியீட்டை புத்தக கண்காட்சியில் பார்த்தேன்! பட்ஜெட் உதைத்தமையால் வாங்கவில்லை! வாங்கிபடிக்க வேண்டும். நன்றி!
ReplyDeleteஜெயகாந்தன் பெரிய எழுத்தாளர் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் இவர் ஆரம்பித்த பழக்கம் ஒன்று பிடிக்காதது " எழுத்தாளர்கள் அறிவாளிகள் அவர்களுக்கு தெரியாதது எதுவும் இல்லை, யாரையும் மதிக்காமல் எடுத்து எரிந்து பேசுவது" போன்ற நல்ல பழக்க வழக்கம் இன்றைய எழுத்தாளர்க்கு கற்று கொடுத்துள்ளார். இவர் எடுத்த " யாருக்காக அழுதான்" பார்த்தால் இனி மேல் சினிமா வாழ்க்கையில் பார்க்க மாட்டிர்கள்.
ReplyDeleteமறுமொழி > G.M Balasubramaniam said...
ReplyDeleteஅன்புள்ள அய்யா G.M.B அவர்களுக்கு வணக்கம்!
// ஆனந்த விகடனில் ஜெயகாந்தனின் முத்திரைக் கதைகள் சில வாசித்திருக்கிறேன் ஒரு சில திரைப் படங்களும் நினைவுக்கு வருகிறது மற்றபடியாருடைய எழுத்திலும் ஒன்றிப் போனதெல்லாம் கிடையாதுஆனந்த விகடனின் ஆதரவு இருந்திராவிட்டால் நாம் ஜெய காந்தனைப் பற்றி இவ்வளவு பேசமாட்டோம் //
ஆமாம் அய்யா நீங்கள் சொல்வது சரிதான். ஆனந்த விகடன் வெளியிட்டுள்ள “ஜெயகாந்தன் கதைகள்” என்ற நூலுக்கு , ஜெயகாந்தன் எழுதியுள்ள அணிந்துரையில் “ஆனந்த விகடனில் எழுதத் தூண்டிய நண்பர்கள் சாவி, மணியன் ஆகியோர் இன்று இல்லாதது எனக்கு வருத்தம் தருகிறது “ என்று சொல்லி விட்டு,
ஆனந்தவிகடன் தனது முத்திரைக் கதைகள் வெளியிட்டமைக்கு நன்றி தெரிவித்தும் எழுதியுள்ளார்.
மறுமொழி > yathavan nambi said...
ReplyDeleteசகோதரர் புதுவை வேலு அவர்களின் வருகைக்கு நன்றி. விரைவில் உங்கள் வலைத்தளம் வருகிறேன்.
மறுமொழி > ‘தளிர்’ சுரேஷ் said...
ReplyDeleteசகோதரர் ‘தளிர்’ சுரேஷ் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.
மறுமொழி > Anonymous said... (1)
ReplyDeleteஅனானிமஸ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
// ஜெயகாந்தன் பெரிய எழுத்தாளர் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் இவர் ஆரம்பித்த பழக்கம் ஒன்று பிடிக்காதது " எழுத்தாளர்கள் அறிவாளிகள் அவர்களுக்கு தெரியாதது எதுவும் இல்லை, யாரையும் மதிக்காமல் எடுத்து எரிந்து பேசுவது" போன்ற நல்ல பழக்க வழக்கம் இன்றைய எழுத்தாளர்க்கு கற்று கொடுத்துள்ளார். இவர் எடுத்த " யாருக்காக அழுதான்" பார்த்தால் இனி மேல் சினிமா வாழ்க்கையில் பார்க்க மாட்டிர்கள். //
எல்லோரும் ஜெயகாந்தன் ஒரு சிறந்த எழுத்தாளர் என்ற அன்பின் காரணமாக, அவரிடம் இருந்த எடுத்தெரிந்து பேசும் என்ற இந்த குணத்தை பெரிதுபடுத்தவில்லை. பெரும்பாலும் நல்ல நாவல்கள் தமிழ் சினிமாவாக உருவெடுக்கும் போது தோல்வியில்தான் முடின்றன. நீங்கள் சொன்ன "யாருக்காக அழுதான்" மட்டுமல்ல, நான் பார்த்த “ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்” என்ற படமும்தான்.
நல்ல எழுத்தாளர். அவரது மறைவு ஒரு பெரிய இழப்பு தான்....
ReplyDeleteஅவர் பற்றிய உங்கள் கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...
ReplyDeleteசகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் சுருக்கமான கருத்துரைக்கு நன்றி.
நல்ல எழுத்தாளர். தங்களது பார்வையும் சிறப்பாக இருக்கின்றது. அவரது சில கதைகள் வாசித்திருக்கின்றோம். பகிர்வுக்கு மிக்க நன்றி ஐயா!
ReplyDeleteமறுமொழி > Thulasidharan V Thillaiakathu said...
ReplyDeleteஆசிரியர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
என் அனுபவத்தில் ஒரு எழுத்தாளருக்கு இறந்த பின்பு ஊடக வெளியில் கிடைத்த மகத்தான அங்கீகாரம் இவருக்கு மட்டுமே.
ReplyDelete