Tuesday 6 May 2014

கவிஞர் கண்ணதாசனும் விமர்சனங்களும்



கவிஞர் கண்ணதாசன் ஊரறிந்த சிறந்த தமிழ் கவிஞர். அவரைப் பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. அவரது தமிழ் திரைப்படப் பாடல்கள் மூலம் அவர் பிரபலம் ஆகியிருந்த போதிலும் மரபுக் கவிதைகளையும் படைப்பதில் வல்லவர். அவருடைய கவிதைத் தொகுப்புகளில் இந்த மரபுக் கவிதைகளையும் காணலாம். அவர் எல்லோருக்கும் நண்பர். அதே சமயம் பலருடனும் தனது வெளிப்படையான விமர்சனங்களால் வீண் மனக் கசப்பை ஏற்படுத்திக் கொண்டவர். இதனால் பல வீண் சர்ச்சைகள். இருந்த போதும் அவர் மீது வைத்த தமிழ்க் காதலால் அவர் பிறரைப் பற்றி பேசியதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.

கண்ணதாசனும்  தி.மு.க.வும், எம்.ஜி.ஆரும்:

கண்ணதாசன் ஆரம்பத்தில் தி.மு.க வில் இருந்தார். மேல்மட்ட, இரண்டாம் மட்ட தலைவர்களோடு நல்ல நெருக்கம். எனவே அப்போதைய அவரது பாடல்கள் தி.மு.க பிரசாரப் பாடல்களாகவே இருந்தன. அப்போதைய திமுக கூட்டங்களில்

                      அச்சம் என்பது மடமையடா
             அஞ்சாமை திராவிடர் உடமையடா
              ஆறிலும் சாவு நூறிலும் சாவு
              தாயகம் காப்பது கடமையடா
              தாயகம் காப்பது கடமையடா (அச்சம்)
             - பாடல்: கவிஞர் கண்ணதாசன்
                         (படம்: மன்னாதி மன்னன்)  
             
என்ற பாடல் அமர்க்களப்படும். அப்போதெல்லாம் தி.மு.கவில் கவிஞர் உயர்ந்த இடத்தில் வைத்து பேசப்பட்டார். தி.மு.க எதிர்ப்பாளர்கள் கவிஞரை நாத்திகன் என்று வசைபாடினர். மேலே சொன்ன பாடல் தமிழக வானொலிகளில் தடை செய்யப் பட்டு இருந்தது. இலங்கை வானொலியில் மட்டும் அடிக்கடி ஒலிபரப்பானது.

கவிஞரின் ராசி அவருக்கும் தி.மு.க விற்கும் ஒத்து வரவில்லை. கட்சி மாறி காங்கிரசுக்கு போனார். வழக்கம்போல அவர்கள் இவரை கடுமையாக விமர்சனம் செய்ய இவரும் அவர்களை காய்ச்சினார். “அண்ணன் காட்டிய வழியம்மா இது அன்பால் விளைந்த பழியம்மா“ என்று பாடினார். தி.மு.கவில் இருந்தபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வனவாசம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். சிலர் இந்த நூலை வைத்துக் கொண்டு கருணாநிதிக்கும் கவிஞருக்கும் இடையில் ஏதோ பெரிய பகைமை போல் பேசுவார்கள். தி.மு.கவை விட்டு விலகியதும் நடந்த சம்பவங்களை “மனவாசம்” என்று எழுதினார்.

அவர் எம்.ஜி.ஆரைப் பற்றியும் கடுமையாக விமரிசித்து தொடர் ஒன்றை எழுதி இருக்கிறார். காங்கிரஸ்காரர் சின்ன அண்ணாமலையின் பாராட்டைப் பெற்ற இந்த தொடர் பின்பு புத்தகமாக வந்தது.. நூலின் பெயர் “எம்.ஜி.ஆரின் உள்ளும் புறமும்”.  பின்னர் இரண்டாம் பாகம் எழுதுவதாக இருந்தார். ஏனோ எழுதவில்லை.

போதைப் பழக்கம்:

கவிஞர் கண்ணதாசனுக்கு முதலில் மதுப் பழக்கம் மிதமிஞ்சி இருந்தது. அந்த பழக்கத்தை விட்டுவிட பின் போதை ஊசிக்கு அடிமையானார். ஒரு படத்திற்காக இவர் எழுதிய வரிகள், இவருக்கு அப்படியே பொருந்தும்.  

ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
ஒரு கோல மயில் என் துணையிருப்பு
இசை பாடலிலே என் உயிர் துடிப்பு
நான் காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு
                   - (படம்: ரத்தத்திலகம்)
  
அவருக்கு வேண்டாதவர்கள் கவிஞரை குடிகாரன் என்று பேசினார்கள், எழுதினார்கள். இவ்வாறு விமர்சனம் செய்தவர்கள் பலபேர் குடிகாரர்கள். பின்னாளில் அந்த பழக்கங்களை விட்டொழித்த பின்னர் மற்றவர்களுக்கு குடிக்காதே என்று அறிவுரை சொன்னார். இதனையும் கிண்டலடித்தனர். இதற்கு அவர், மதுப் பழக்கம் உள்ள ஒருவனே மதுவினால் விளையும் தீமைகளைத் தெளிவாக எடுத்துரைக்க முடியும்.என்று பதில் சொன்னார்.

திரைப்படப் பாடல்கள்

பழைய இலக்கியக் கருத்துக்களை கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் எடுத்தாளுவது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம் போன்ற காப்பியங்களிலும் மற்றைய தமிழ் இலக்கிய நூல்களிலும் திருக்குறள் வரிகள், கருத்துக்கள் கையாளப்பட்டு இருப்பதைக் காணலாம். அவ்வாறே கவிஞர் கண்ணதாசனும் கையாண்டார். இதனையும் அவருக்கு வேண்டாதவர்கள் “கண்ணதாசன் காப்பி அடிக்கிறார் “ என்றார்கள். கண்ணதாசன் பெருந்தன்மையாக தனது பாடல்களில் பழைய இலக்கியக் கருத்துக்கள் இருப்பதனை ஒத்துக் கொண்டதோடு இதில் தவறு ஏதும் இல்லை என்றும் த்க்க பதில் தந்தார். உதாரணத்திற்கு

அத்திக்காய் காய்காய்காய்! ஆலங்காய் வெண்மதியே!
இத்திக்காய்க் காய்ந்துனக் கென்னபயன் - சற்றுமென்மேல்
பற்றற் றவரைக்காய்! பாவைக்காய்க் கோவைக்காய்
சொற்றக்காய் தூதுளங் காய்!        -  தனிப்பாடல்

என்பது தனிப்பாடல். இதனை ஒட்டி கவிஞர் கண்ணதான் எழுதிய வரிகள்:

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவோ?
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னுயிரும் நீயல்லவோ?
என்னுயிரும் நீயல்லவோ?
அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே..
                                                                          (படம்: பலே பாண்டியா)

பட்டினத்தாரின் தத்துவப் பாடல்களில் கவிஞருக்கு அதிக ஈடுபாடு உண்டு. அர்த்தமுள்ள இந்துமதம் என்ற நூலில் ஞானம் பிறந்த கதைஎன்ற பகுதியில் பட்டினத்தார் , பத்திரகிரியார் இருவரைப் பற்றியும் சிறப்பித்து எழுதி இருக்கிறார்.

அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே, விழி அம்பு ஒழுக
மெத்திய மாதரும் வீதிமட்டே, விம்மி விம்மி இரு
கைத்தலம் மேல் வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே
பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே.
                                       - பட்டினத்தார்

என்ற பட்டினத்தார் பாடலுக்கு விளக்கமாக அமைந்த கண்ணதாசன் பாடல் வரிகள்:

ஆடிய ஆட்டம் என்ன பேசிய வார்த்தை என்ன?
தேடிய செல்வம் என்ன திரண்டதோர் சுற்றம் என்ன?
கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?

வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?
                         - படம்: பாத காணிக்கை

கவிஞரின் சில திரைப்பட பாடல் வரிகளும் சர்ச்சைக்கு உள்ளாக்கப்பட்டன. படம் : அனுபவி ராஜா அனுபவி. இந்த படத்தில் நாகேஷ்  சென்னை வாசிகளைக் கிண்டலடித்து பாடுவது  போல ஒரு பாடல். “ மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்று தொடங்கும் இந்த பாடலில் வந்த,

ஊரு கெட்டுப் போனதுக்கு
மூரு மாருக்கெட்டு அடையாளம்
நாடு கெட்டுப் போனதுக்கு
மெட்ராஸு நாகரிகம் அடையாளம்

என்ற வரிகளை நீக்கச் சொல்லி சென்னை மூர் மார்க்கெட் வியாபாரிகள் குரல் எழுப்பினார்கள்.

படத்தின் பெயர் குமரிப்பெண். 1966 இல் வெளிவந்தது. ரவிச்சந்திரன் ஜெயலலிதா நடித்தது. இந்த படத்தில் பங்களா வாசலில் நிற்கும் கூர்க்காவை ரவிச்சந்திரன் கிண்டல் செய்வது போல் ஒரு பாடல்.

ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீதான் ராஜா
ஜாவ்ரே ஜா அந்த வீட்டுக்கு நான்தான் ராஜா
ஜாவ்ரே ஜா இந்த கேட்டுக்கு நீதான் ராஜா
ஜாவ்ரே ஜா அந்த வீட்டுக்கு நான்தான் ராஜா
தினம் தினம் இரவினில் தூங்கிவிட்டு
திருடரைத் திருடிக்கொண்டோட விட்டு
தினம் தினம் இரவினில் தூங்கிவிட்டு
திருடரைத் திருடிக்கொண்டோட விட்டு
அகப்பட்ட மனுஷனைப் பிடிக்கிற வேலைக்கு
ஆர்ப்பாட்டம் என்ன ராஜா?

இந்த பாடலைக் கேட்டு தமிழ்நாட்டில் இருந்த கூர்க்காக்கள் சங்கத்தினர் கவிஞருக்கு எதிராக அறிக்கை வெளியிட்டார்கள். வானொலியில் ஒலிபரப்ப தடை போட்டார்கள். ஆனாலும் இலங்கை வானொலியில் இந்த பாடலை ஒலிபரப்பிக் கொண்டுதான் இருந்தார்கள்.

ஒரு குட்டிக்கதை:

கவிஞர் கண்ணதாசன் சொல்லும் குட்டி கதை ஒன்றினைக் கேளுங்கள்.


ஒரு சபைக்கு நான் போயிருந்தேன். பெரியபெரிய அறிஞரெல்லாம் வந்திருந்தார்கள். அவர்களையெல்லாம் சாதாரணமாக நினைத்து, ஓர் அரை குறைப் படிப்பாளி, ஆணவத்தோடு பேசிக்கொண்டு இருந்தார். அவரது ஆணவத்தைப் பார்த்து அவர் பேசியதிலிருந்த தவறுகளைக்கூட யாரும் திருத்தவில்லை.ஒவ்வொரு வரியையும் முடிக்கும்போது, “எப்படி நான் சொல்வது?” என்று கேட்டுக் கொண்டே இருந்தார். நான் ஆத்திரம் தாங்காமல், “ஒரு குழந்தை எப்படிச் சொல்லுமோ, அப்படியே சொல்கிறீர்கள்என்றேன்.தெளிவில்லாதவன்விவேகமற்றவன்என்பதை நயமாகவும், நளினமாகவும் சொன்னேன். சில கவியரங்கங்களிலும் இந்த அனுபவம் எனக்குக் கிடைத்திருக்கிறது. இலக்கண மரபோ, இலக்கியச் சுவையோ தெரியாத சிலரும், அந்த அரங்கங்களில் தோன்றிவிடுவார்கள். என்னைத் தாக்கிவிட்டால் தாங்கள் பெரிய கவிஞர்கள் என்ற எண்ணத்தில், அசிங்கமாகத் தாக்குவார்கள். நான் அடக்கத்தோடும் பயத்தோடும் உட்கார்ந்திருப்பேன். திரும்ப அவர்களைத் தாக்கமாட்டேன். காரணம், கிருபானந்தவாரியார் சொன்ன ஒரு கதை.

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக்கொண்டு சுத்தமாக வந்துகொண்டிருந்ததாம்.
ஓர் ஒடுக்கமான பாலத்தில் அது வரும்போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்ததாம்.
யானை ஓர் ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழிவிட்டதாம்.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்துவிட்டது!என்று சொல்லிச் சிரித்ததாம்.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா! நீ பயந்துவிட்டாயா?” என்று கேட்டதாம்.

அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னதாம்.
நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்துவிடக் கூடாதே என்று ஒதுங்கினேன். நான் ஏறி மிதித்தால் அது துவம்சமாகிவிடும்; ஆனால் என் கால் அல்லவா சேறாகிவிடும்.

இந்தக் கதையின்படி சிறியவர்களின் ஆணவத்தைக் கண்டு, நான் அடக்கத்தோடு ஒதுங்கி விடுவது வழக்கம். முன்னேற விரும்புகிற எவனுக்கும் ஆணவம் பெருந்தடை. ஆணவத்தின் மூலம் வெற்றியோ லாபமோ கிடைப்பதில்லை; அடிதான் பலமாக விழுகிறது.

(நன்றி: அர்த்தமுள்ள இந்துமதம்கவியரசு கண்ணதாசன் http://newindian.activeboard.com/t46467841/topic-46467841 )

வருவதை எதிர் கொள்ளடா:

கவிஞரின் அர்த்தமுள்ள இந்துமதமும் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது. கவிஞர் கண்ணதாசன் தன்னைப் பற்றிய விமர்சனங்களைப் பற்றிக் கவலைப்பட்ட்தாகத் தெரியவில்லை. அவர் நடத்திய கண்ணதாசன் இலக்கிய இதழின் முகப்பில்  இருந்த அவரது கவிதை வரிகள் இவைகள்.

போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரித்
தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்
ஏற்றதோர் கருத்தைஎன துள்ளம் என்றால்
எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன் அஞ்சேன்
                                                        - கவிஞர் கண்ணதாசன்



(PICTURES THANKS TO “GOOGLE”)


48 comments:

  1. மிகச் சிறப்பான ஆக்கம் கவிஞர் கண்ணதாசனின் படைப்பினைப் பற்றி இதுவரை
    அறியாத பல விமர்சனங்கள் ! இறுதியில் உறுதியான மனம் படைத்த கவிஞரின்
    உள்ளத்தை வெளிக்காட்டி பாடல் ஒன்றினையும் பகிர்ந்து இன்றைய ஆக்கத்திற்கு
    பெருமை சேர்த்துள்ளீர்கள் .வாழ்த்துக்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்விற்கு .

    ReplyDelete
  2. வண்க்கம்
    ஐயா.

    கவிஞர் கண்ணதாசன் பற்றிஅறிய முடியாத தகவல்கள் அறிக்கிடைத்துள்ளது அத்தோடு அவரின் உன்னத ஆற்றினால் எழுதிய பாடல்கள் கவிவரிகள்... மற்றும் இறுதியில் சொன்ன யானைக்கதை மிக நன்றாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. வணக்கம்
    ஐயா

    த.ம 2வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் இருந்திருக்கலாம்... ஆனால் அதனால் தனக்குள் ஒரு மாற்றம் வந்திருக்கும்... அதனால் தான் அனுபவ அறிவுரைகள் பாடலாக...

    சிறு கதை அருமை...

    ReplyDelete
  5. போதை பழக்கத்திற்கு அடிமை ஆகாமல் இருந்து இருந்தால் இன்னும் உயரத்தை தொட்டு இருப்பார் !
    த ம 4

    ReplyDelete
  6. ///போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரித்
    தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்
    ஏற்றதோர் கருத்தைஎன துள்ளம் ஏற்றால்
    எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன் அஞ்சேன்///
    கண்ணதாசன் கண்ணதாசன்தான் ஐயா
    அருமையானப் பதிவு
    நன்றி ஐயா

    ReplyDelete
  7. கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பலருடனும் தனது வெளிப்படையான விமர்சனங்களால் வீண் மனக் கசப்பை ஏற்படுத்திக் கொண்டவர் என்று நீங்கள் சொன்னது சரியே. அவர் மட்டும் சமரசம் செய்துகொண்டு இருந்தால் அவருக்கு ‘எதிரிகள்’ இருந்திருக்கமாட்டார்கள். ஆனால் நமக்கு அருமையான கவிதைகள் கிடைத்திருக்காது. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. திரு. கண்ணதாசன் அவர்களின் அர்த்தமுள்ள இந்து மதம் தொடரினை - தினமணிக் கதிரில் படித்ததும், அவரது திரைப்பட பாடல்களில் காணப்படும் இலக்கியச் சுவையினை ரசித்து நண்பர்களுக்குள் விவாதித்ததும் - இன்றும் பசுமையாக இருக்கின்றது.

    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
    நிலையிலும் எனக்கு மரணமில்லை!..

    - அது அவருக்கே பொருத்தமான வரிகள்..

    ReplyDelete
  9. கவிஞர் கண்ணதாசன் அவர்களைப்பற்றிய மிகச்சிறப்பான அலசல்கள். நன்கு ரஸித்தேன். பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
  10. நான் அறிந்த செய்திதான்! என்றாலும் சொல்லியுள்ள விதம் சுவைபட உள்ளது! இளங்கே!

    ReplyDelete
  11. திரு. கண்ணதாசன் அவர்கள் ஒரு பிறவி கலைஞர் என எனது தந்தை அடிக்கடி கூறுவதுண்டு. பேனா எடுத்தவரெல்லாம் கவிஞர் ஆகும் இன்றைய தினத்தில், அனுபவத்தாலும், ஆற்றலினாலும், உணர்ச்சி ததும்பும் பாடல்களை எழுத திரு. கண்ணதாசனுக்கு நிகர் அவரே. தி.மு கழகத்திலிருந்து பிறிந்து சென்றவுடன் அவர் எழுதிய "போய் வருகிறேன்" எனற அவரின் புத்தகம் பற்றியும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அரசியல் வாழ்வில் அடிபட்டு நொத்து கிடந்த கவிஞனின் உணர்ச்சிமிக்க வரிகள் கொண்ட நூல், "போய் வருகிறேன்".. கண்ணதாசன் அவர்களை விரும்புவோரும், விமர்சிப்போரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் அது. அவர் பிறவிக்கவிஞன் ஆயிற்ரே..

    ReplyDelete
  12. கண்ணதாசன் பாடல்களின் அருமையான அலசல். அத்திக்காய் என்று ஆரம்பிக்கும் தனிப்பாடல் அறிந்துகொண்டேன் நன்றி

    ReplyDelete
  13. கவிஞர் கண்ணதாசனைப் பற்றி எழுத ஆரம்பித்தால் தொடர்போல் நீண்டுக்கொண்டே போகும். அவர் இறப்பதற்கு முன்பு அவர் கடைசியாய் செய்த ஒரு நல்ல செயல் ஏசுவின் வரலாறை 'யேசு காவியம்' என்ற தலைப்பில் கவிதையாய் வடித்தது. அதற்கு கைமாறாக அவர் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை. அவர் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது அவருடைய இந்த நற்செயலைப் பற்றி கேள்விப்பட்ட அந்த மருத்துவமனை அவருடைய சிகிச்சைக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கவில்லையாம். இப்போதுள்ளதுபோன்று புரிந்துக்கொள்ள முடியாத வார்த்தைகள் ஏதும் இல்லாமல் எளிமையாய் பாமரனும் புரிந்துக்கொள்ளும் வகையில் அவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் காலத்திற்கும் அழியாதவை.

    ReplyDelete
  14. மிக்க நன்றி சார்.
    அர்த்தமுள்ள இந்துமதம் படிக்க லிங்க் கொடுத்ததர்க்கு.

    உங்கள் பதிவின் மூளம் கவிஞர் பற்றி சில தகவல் தெரிந்து கொல்ல முடிந்தது.

    ReplyDelete
  15. காலத்தை வென்ற கவிஞரின் படைப்புகளை மீண்டும் வாசிக்க வாயப்பளித்தீர்கள் நண்பரே. நல்ல பகிர்வு.

    ReplyDelete
  16. கண்ணதாசன் பற்றி சிறப்பான ஒரு பார்வை. பல விஷயங்கள் முன்னரே படித்தது என்றாலும் மீண்டும் படிக்கும் போதும் ஒரு சுவை.

    ReplyDelete
  17. கவிஞரைப் பற்றிய சிறிய அறிமுக உரைபோன்றதுதான் உங்கள் பதிவு. 'அச்சம் என்பது மடமையடா'வை விடவும் திமுக கூட்டங்களில் அதிகம் இசைக்கப்பட்ட பாடல் ''எங்கள் திராவிடப் பொன்னாடே, கலைவாழும் தென்னாடே'தான். தமிழ்நாட்டின் கடந்த கால பெருமைமிகு வரலாற்றை ஒரு பாடலிலேயே அடக்கியிருப்பார் கவிஞர். தமிழ்ப் பற்றாளர்கள் அவ்வளவுபேரும் மனப்பாடம் பண்ணிய பாடல் இது. இதுவும் வானொலியால் தடை செய்யப்பட்ட பாடல்தான். ஆனால் தமிழகத்தின் ஒரு தெரு பாக்கியில்லாமல் முழங்கித் தீர்த்துவிட்டது.
    திமுகவை விட்டுப் பிரிந்தபோதுகூட அதனைத் தமக்கேயுரிய அழகியல் மொழியில் சொன்னார்.
    'ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
    அருள்மொழிகூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
    உன் இறைவன் அவனே அவனே எனப்பாடும் மொழிகேட்டேன்
    உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழிகேட்டேன்'- அதனால் என் தலைவனைத் தேடிப் போய்ச்சேர்ந்தேன் என்றார்.

    \\ஒரு படத்திற்காக இவர் எழுதிய வரிகள், இவருக்கு அப்படியே பொருந்தும். \\ என்று 'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு' பாடல் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள். அது அப்படி அல்ல. இவருக்காக இவரே எழுதிய வரிகள் அவை. அந்தப் படமும்(ரத்தத் திலகம்) இவர் தயாரித்ததே. அந்தப் படத்தில் இவரே வந்து பாடுவதுமாதிரியான காட்சியில் தம்மை அடையாளப்படுத்தியே இவர் பாடுவார். பாடல் மொத்தமும் கண்ணதாசனைக் குறிப்பிடுவதே.
    இவரது அரசியல் வாழ்க்கையையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் பிரதிபலித்தே இவரது பாட்டுப் பயணம் அமைந்திருந்தது. அது அவர் பங்குகொள்ளும் எல்லாப் படங்களிலுமே பிரதிபலிக்கும். எம்ஜிஆரோ சிவாஜியோ கூட அதற்கு மறுப்புச் சொன்னதில்லை.
    காரணம் கவிஞரின் 'ஆளுமை' திரையுலகில் அத்தகையதாய் அமைந்திருந்தது. இப்படியொரு 'ஆளுமை' இனிமேல் எந்தக் கவிஞருக்கும், எந்த மொழியிலும் வரப்போவதில்லை.

    ReplyDelete
  18. மறுமொழி > அம்பாளடியாள் வலைத்தளம் said...

    // மிகச் சிறப்பான ஆக்கம் கவிஞர் கண்ணதாசனின் படைப்பினைப் பற்றி இதுவரை அறியாத பல விமர்சனங்கள் ! இறுதியில் உறுதியான மனம் படைத்த கவிஞரின்
    உள்ளத்தை வெளிக்காட்டி பாடல் ஒன்றினையும் பகிர்ந்து இன்றைய ஆக்கத்திற்கு பெருமை சேர்த்துள்ளீர்கள் .வாழ்த்துக்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்விற்கு . //

    சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  19. மறுமொழி > 2008rupan said... ( 1, 2)

    // வண்க்கம்! ஐயா. கவிஞர் கண்ணதாசன் பற்றி அறிய முடியாத தகவல்கள் அறிக்கிடைத்துள்ளது அத்தோடு அவரின் உன்னத ஆற்றினால் எழுதிய பாடல்கள் கவிவரிகள்... மற்றும் இறுதியில் சொன்ன யானைக்கதை மிக நன்றாக உள்ளது பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா //

    கவிஞர் ரூபன் அவர்களுக்கு வணக்கம்! கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  20. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    // விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் இருந்திருக்கலாம்... ஆனால் அதனால் தனக்குள் ஒரு மாற்றம் வந்திருக்கும்... அதனால் தான் அனுபவ அறிவுரைகள் பாடலாக...
    சிறு கதை அருமை... //

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  21. மறுமொழி > Bagawanjee KA said...

    // போதை பழக்கத்திற்கு அடிமை ஆகாமல் இருந்து இருந்தால் இன்னும் உயரத்தை தொட்டு இருப்பார் ! த ம 4 //

    அதனால்தான் அய்யா அவரால் பாட முடிந்தது. அவருடைய பலம், பலவீனம் இரண்டுமே அதுதான். சகோதரர் பகவான்ஜீ K.A அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  22. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...

    - -- --
    ///போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரித்
    தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்
    ஏற்றதோர் கருத்தைஎன துள்ளம் ஏற்றால்
    எடுத்துரைப்பேன் எவர்வரினும் நில்லேன் அஞ்சேன்///

    - - - -
    // கண்ணதாசன் கண்ணதாசன்தான் ஐயா அருமையானப் பதிவு
    நன்றி ஐயா //

    உண்மைதான் அய்யா! சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  23. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    // கவிஞர் கண்ணதாசன் அவர்கள் பலருடனும் தனது வெளிப்படையான விமர்சனங்களால் வீண் மனக் கசப்பை ஏற்படுத்திக் கொண்டவர் என்று நீங்கள் சொன்னது சரியே. அவர் மட்டும் சமரசம் செய்துகொண்டு இருந்தால் அவருக்கு ‘எதிரிகள்’ இருந்திருக்கமாட்டார்கள். ஆனால் நமக்கு அருமையான கவிதைகள் கிடைத்திருக்காது. நல்ல பதிவு. வாழ்த்துக்கள்! //

    அய்யா வே.நடனசபாபதி அவர்களின் கருத்துரைக்கு நன்றி! அவரை யாருமே ஒரு கடுமையான எதிரியாகப் பாவித்ததாகத் தெரியவில்லை.

    ReplyDelete
  24. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // திரு. கண்ணதாசன் அவர்களின் அர்த்தமுள்ள இந்து மதம் தொடரினை - தினமணிக் கதிரில் படித்ததும், அவரது திரைப்பட பாடல்களில் காணப்படும் இலக்கியச் சுவையினை ரசித்து நண்பர்களுக்குள் விவாதித்ததும் - இன்றும் பசுமையாக இருக்கின்றது.//

    நானும் தினமணிக் கதிரில் வாராவாரம் தொடர்ச்சியாகப் படித்து இருக்கிறேன்.

    // நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த
    நிலையிலும் எனக்கு மரணமில்லை!..

    - அது அவருக்கே பொருத்தமான வரிகள்.. //

    உண்மைதான் சகோதரரே!

    ReplyDelete
  25. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    // கவிஞர் கண்ணதாசன் அவர்களைப்பற்றிய மிகச்சிறப்பான அலசல்கள். நன்கு ரஸித்தேன். பகிர்வுக்கு நன்றிகள், ஐயா. //

    அய்யா திரு V.G.K அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  26. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...

    // நான் அறிந்த செய்திதான்! என்றாலும் சொல்லியுள்ள விதம் சுவைபட உள்ளது! இளங்கே! //

    புலவர் அய்யாவின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! கண்ணதாசனைப் பற்றிய இலக்கிய அனுபவங்கள், செய்திகள் எப்போதுமே ரசனையானவைதான் அய்யா!

    ReplyDelete
  27. மறுமொழி > இல. விக்னேஷ் said...

    // திரு. கண்ணதாசன் அவர்கள் ஒரு பிறவி கலைஞர் என எனது தந்தை அடிக்கடி கூறுவதுண்டு. பேனா எடுத்தவரெல்லாம் கவிஞர் ஆகும் இன்றைய தினத்தில், அனுபவத்தாலும், ஆற்றலினாலும், உணர்ச்சி ததும்பும் பாடல்களை எழுத திரு. கண்ணதாசனுக்கு நிகர் அவரே. தி.மு கழகத்திலிருந்து பிறிந்து சென்றவுடன் அவர் எழுதிய "போய் வருகிறேன்" எனற அவரின் புத்தகம் பற்றியும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். அரசியல் வாழ்வில் அடிபட்டு நொத்து கிடந்த கவிஞனின் உணர்ச்சிமிக்க வரிகள் கொண்ட நூல், "போய் வருகிறேன்".. கண்ணதாசன் அவர்களை விரும்புவோரும், விமர்சிப்போரும் அவசியம் படிக்க வேண்டிய நூல் அது. அவர் பிறவிக்கவிஞன் ஆயிற்ரே..//

    சகோதரர் இல.விக்னேஷ் அவர்களின் நினைவூட்டலுக்கு நன்றி! நானும் இந்த நூலை படித்து இருக்கிறேன்!

    ReplyDelete
  28. மறுமொழி > rajalakshmi paramasivam said...

    // கண்ணதாசன் பாடல்களின் அருமையான அலசல். அத்திக்காய் என்று ஆரம்பிக்கும் தனிப்பாடல் அறிந்துகொண்டேன் நன்றி //

    சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி! மற்ற தனிப் பாடல்களையும் படியுங்கள். இலக்கிய பதிவு எழுத உதவியாக இருக்கும்.

    ReplyDelete
  29. எம்.ஜி.ஆரைப் பற்றி அப்படி அவதூறு செய்தும் கவிஞருக்கு, எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆனதும் அரசவைக் கவிஞர் என்ற அந்தஸ்து கொடுத்து கௌரவித்தார். அப்போது கவிஞர் சொன்னது, ''நான் இன்னா செய்தேன், அவர் இனியது செய்தார், பணிந்து போவதுதானே அரசியல் மரபு''.

    ReplyDelete
  30. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...

    // கவிஞர் கண்ணதாசனைப் பற்றி எழுத ஆரம்பித்தால் தொடர்போல் நீண்டுக்கொண்டே போகும். அவர் இறப்பதற்கு முன்பு அவர் கடைசியாய் செய்த ஒரு நல்ல செயல் ஏசுவின் வரலாறை 'யேசு காவியம்' என்ற தலைப்பில் கவிதையாய் வடித்தது. அதற்கு கைமாறாக அவர் எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. அவர் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது அவருடைய இந்த நற்செயலைப் பற்றி கேள்விப்பட்ட அந்த மருத்துவமனை அவருடைய சிகிச்சைக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கவில்லையாம். இப்போதுள்ளதுபோன்று புரிந்துக்கொள்ள முடியாத வார்த்தைகள் ஏதும் இல்லாமல் எளிமையாய் பாமரனும் புரிந்துக்கொள்ளும் வகையில் அவர் எழுதிய பாடல்கள் அனைத்தும் காலத்திற்கும் அழியாதவை. //

    இயேசு காவியம் பற்றிய சில செய்திகளைத் தந்த அய்யா டிபிஆர்.ஜோசப் அவர்களுக்கு நன்றி! இந்த நூலை நான் இதுவரை வாசித்ததில்லை. நூல் முதன்முதல் வெளிவந்த சமயம் கடைகளில் வாங்கப் போனபோது விற்று தீர்ந்து விட்டது என்றார்கள். உங்கள் கருத்துரை அந்த நூலை வாங்கும் எண்ணத்தை மனதில் மறுபடியும் தூண்டி விட்டது.

    ReplyDelete
  31. மறுமொழி > mahesh said..
    .
    // மிக்க நன்றி சார். அர்த்தமுள்ள இந்துமதம் படிக்க லிங்க் கொடுத்ததர்க்கு. உங்கள் பதிவின் மூளம் கவிஞர் பற்றி சில தகவல் தெரிந்து கொல்ல முடிந்தது.//

    தம்பி விழியின் ஓவியம் மகேசின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  32. மறுமொழி > முனைவர் இரா.குணசீலன் said...

    // காலத்தை வென்ற கவிஞரின் படைப்புகளை மீண்டும் வாசிக்க வாயப்பளித்தீர்கள் நண்பரே. நல்ல பகிர்வு. //

    பேராசிரியர் முனைவர் இரா.குணசீலன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!


    ReplyDelete
  33. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    // கண்ணதாசன் பற்றி சிறப்பான ஒரு பார்வை. பல விஷயங்கள் முன்னரே படித்தது என்றாலும் மீண்டும் படிக்கும் போதும் ஒரு சுவை. //

    சகோதரரின் கருத்துரைக்கு நன்றி! கண்ணதாசனைப் பற்றி எத்தனை முறை படித்தாலும் சலிப்பு தட்டாது.

    ReplyDelete
  34. கண்ணதாசனைப் பற்றிய அரியதொரு புத்தகத்தைப் படித்தது போலும் உணர்வைத் தந்துவிட்டீர்கள் அய்யா. அவனது பெருமைகளைச் சொல்லச் சொல்லத் தமிழே துள்ளும் அவரது “அர்த்தமுள்ள இந்துமதம்“ நூல்தான், தமிழில் திருக்குறள் பாரதியார் பாரதிதாசன் பாடல்களுக்கு அடுத்தபடியாக அதிகப் பதிப்புக்கண்டு இன்றும் குறையாமல் விற்றுக்கொண்டிருக்கும் நூல். சமயவிளக்கம் என்பதைவிடவம் அவரது எளிய தமிழிலான வாழ்வியல் விளக்கம் என்பதே காரண்ம் என்பது என் கருத்து. அரசியலைப் பொறுததவரை உங்கள் கட்டுரையில் வரும் “குழந்தை“தான் அவர்! நல்லவேளை அவர் முழுநேர அரசியல்வாதியாகாமல் தமிழ் காப்பாற்றிக்கொண்டது. தமிழத்திரைப்படங்களுக்கு அதிகமான தலைப்புத்தந்தது கண்ணதாசனின் பாடல்வரிகள்தான்! அதனால்தான் அவர் இன்றும் கவியரசு! அதனால்தான் அவரைப் பற்றி நான் தினமணியில் எழுதிய கட்டுரைக்கு “காலங்களில் அவன் வசந்தம்” என்று அவரது பாடலிலிருந்தே தலைப்பெடுத்தேன். அந்தக் கட்டுரையை பதிவிட உங்கள் கட்டுரை என்னைத் தூண்டிவிட்டது. நன்றி அய்யா. இதுபோலும் உங்கள் தமிழ்ப் பதிவுகளை அதிகம் எதிர்பார்க்கிறேன். பாராட்டுகள் நன்றி.

    ReplyDelete
  35. ஆத்திகராக இருந்து நாத்திகராக மாறியவர் உண்டு. அவ்வாறே நாத்திகராக இருந்து ஆத்திகராக மாறியவரும் உண்டு. கண்ணதாசன் இரு நிலையிலும் உச்சத்திற்குச் சென்றவர். அவருடன் கருத்து வேறுபாடு கொண்டவர்கூட அவரது பாடலை ரசிப்பர். அவ்வாறே அவரது அர்த்தமுள்ள இந்துமதம் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய நூல். ஆழமான செய்திகளுக்கும், அருமையான பகிர்வுக்கும் நன்றி.

    ReplyDelete
  36. கவிஞர் என்றுமே மிக வெளிப்படையான ஒரு மனிதர். அவர் வாழ்ந்த வாழ்க்கை சுதந்திரம் நமக்கெல்லாம் கிடைக்காது என்றே கூறலாம.

    அந்தக் கால நிகழ்வுகளை மிக அழகாக பதிவு செய்து இருக்கின்றீர்கள்.
    வாழ்த்துகள்!.

    ReplyDelete
  37. கண்ணதாசன் மீது கருத்து மாறுபாடு கொண்டோர்கூட அவரை வெறுக்க முடியவில்லை. காரணம் அவரது கவிதை.

    ReplyDelete
  38. மறுமொழி > Amudhavan said...
    அய்யா அமுதவன் அவர்களின் வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி!

    // கவிஞரைப் பற்றிய சிறிய அறிமுக உரைபோன்றதுதான் உங்கள் பதிவு. 'அச்சம் என்பது மடமையடா'வை விடவும் திமுக கூட்டங்களில் அதிகம் இசைக்கப்பட்ட பாடல் ''எங்கள் திராவிடப் பொன்னாடே, கலைவாழும் தென்னாடே'தான். தமிழ்நாட்டின் கடந்த கால பெருமைமிகு வரலாற்றை ஒரு பாடலிலேயே அடக்கியிருப்பார் கவிஞர். தமிழ்ப் பற்றாளர்கள் அவ்வளவுபேரும் மனப்பாடம் பண்ணிய பாடல் இது. இதுவும் வானொலியால் தடை செய்யப்பட்ட பாடல்தான். ஆனால் தமிழகத்தின் ஒரு தெரு பாக்கியில்லாமல் முழங்கித் தீர்த்துவிட்டது.//

    நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். கவிஞர் கண்ணதாசன் பற்றிய எனது கட்டுரை ஒரு சிறு துளிதான் ஏனெனில் 1962 இற்குப் பிறகு (அப்போது எனக்கு வயது எட்டு ) நடந்த அரசியல் நிகழ்வுகள் மட்டுமே எனக்கு ஞாபகம்..

    // திமுகவை விட்டுப் பிரிந்தபோதுகூட அதனைத் தமக்கேயுரிய அழகியல் மொழியில் சொன்னார்.

    'ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்
    அருள்மொழிகூறும் பறவைகள் ஒலி கேட்டேன்
    உன் இறைவன் அவனே அவனே எனப்பாடும் மொழிகேட்டேன்
    உன் தலைவன் அவனே அவனே எனும் தாயின் மொழிகேட்டேன்'-
    அதனால் என் தலைவனைத் தேடிப் போய்ச்சேர்ந்தேன் என்றார்.//

    கவிஞர் கண்ணதாசன் எப்போதுமே அரசியல் அடிதடியை விரும்பாதவர். தானுண்டு தன் வேலையுண்டு இருந்தவர். சம்பத் போன்றவர்களால் திமுகவுக்கு எதிராக மனம் மாறியவர்.

    - - - -

    \\ஒரு படத்திற்காக இவர் எழுதிய வரிகள், இவருக்கு அப்படியே பொருந்தும். \\ என்று 'ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு' பாடல் பற்றிக் குறிப்பிடுகிறீர்கள். அது அப்படி அல்ல. இவருக்காக இவரே எழுதிய வரிகள் அவை. அந்தப் படமும்(ரத்தத் திலகம்) இவர் தயாரித்ததே. அந்தப் படத்தில் இவரே வந்து பாடுவதுமாதிரியான காட்சியில் தம்மை அடையாளப்படுத்தியே இவர் பாடுவார். பாடல் மொத்தமும் கண்ணதாசனைக் குறிப்பிடுவதே. //

    அய்யா அவர்களின் தகவலுக்கு நன்றி!

    // இவரது அரசியல் வாழ்க்கையையும், தனிப்பட்ட வாழ்க்கையையும் பிரதிபலித்தே இவரது பாட்டுப் பயணம் அமைந்திருந்தது. அது அவர் பங்குகொள்ளும் எல்லாப் படங்களிலுமே பிரதிபலிக்கும். எம்ஜிஆரோ சிவாஜியோ கூட அதற்கு மறுப்புச் சொன்னதில்லை. காரணம் கவிஞரின் 'ஆளுமை' திரையுலகில் அத்தகையதாய் அமைந்திருந்தது. இப்படியொரு 'ஆளுமை' இனிமேல் எந்தக் கவிஞருக்கும், எந்த மொழியிலும் வரப்போவதில்லை.//

    ஆமாம் அய்யா! கவிஞர் கண்ணதாசன் எல்லோருக்கும் நல்லவராக இருக்க விரும்பிய அதே வேளையில் தனது சுயமரியாதையையும் விட்டுக் கொடுக்காதவர்.

    ReplyDelete
  39. மறுமொழி > கவிப்ரியன் கலிங்கநகர் said...

    // எம்.ஜி.ஆரைப் பற்றி அப்படி அவதூறு செய்தும் கவிஞருக்கு, எம்.ஜி.ஆர். முதலமைச்சர் ஆனதும் அரசவைக் கவிஞர் என்ற அந்தஸ்து கொடுத்து கௌரவித்தார். அப்போது கவிஞர் சொன்னது, ''நான் இன்னா செய்தேன், அவர் இனியது செய்தார், பணிந்து போவதுதானே அரசியல் மரபு''. //

    சகோதரர் கவிப்ரியன் கலிங்கநகர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  40. மறுமொழி > நா.முத்துநிலவன் said...

    கவிஞர் நா.முத்துநிலவன் அவர்களின் நீண்ட கருத்துரைக்கு நன்றி!

    // கண்ணதாசனைப் பற்றிய அரியதொரு புத்தகத்தைப் படித்தது போலும் உணர்வைத் தந்துவிட்டீர்கள் அய்யா. அவனது பெருமைகளைச் சொல்லச் சொல்லத் தமிழே துள்ளும் அவரது “அர்த்தமுள்ள இந்துமதம்“ நூல்தான், தமிழில் திருக்குறள் பாரதியார் பாரதிதாசன் பாடல்களுக்கு அடுத்தபடியாக அதிகப் பதிப்புக்கண்டு இன்றும் குறையாமல் விற்றுக்கொண்டிருக்கும் நூல். சமயவிளக்கம் என்பதைவிடவம் அவரது எளிய தமிழிலான வாழ்வியல் விளக்கம் என்பதே காரண்ம் என்பது என் கருத்து. //
    // அரசியலைப் பொறுததவரை உங்கள் கட்டுரையில் வரும் “குழந்தை“தான் அவர்! நல்லவேளை அவர் முழுநேர அரசியல்வாதியாகாமல் தமிழ் காப்பாற்றிக்கொண்டது. //

    நீங்கள் சொல்வது முற்றிலும் சரிதான் அய்யா!

    // தமிழத்திரைப்படங்களுக்கு அதிகமான தலைப்புத்தந்தது கண்ணதாசனின் பாடல்வரிகள்தான்! அதனால்தான் அவர் இன்றும் கவியரசு! அதனால்தான் அவரைப் பற்றி நான் தினமணியில் எழுதிய கட்டுரைக்கு “காலங்களில் அவன் வசந்தம்” என்று அவரது பாடலிலிருந்தே தலைப்பெடுத்தேன். அந்தக் கட்டுரையை பதிவிட உங்கள் கட்டுரை என்னைத் தூண்டிவிட்டது. நன்றி அய்யா. இதுபோலும் உங்கள் தமிழ்ப் பதிவுகளை அதிகம் எதிர்பார்க்கிறேன். பாராட்டுகள் நன்றி. //

    தாங்கள் தினமணியில் எழுதிய “காலங்களில் அவன் வசந்தம்” என்ற கட்டுரையை தங்கள் வலைப் பதிவில் வெளியட வேண்டும் எனறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


    ReplyDelete
  41. மறுமொழி > Dr B Jambulingam said...

    // ஆத்திகராக இருந்து நாத்திகராக மாறியவர் உண்டு. அவ்வாறே நாத்திகராக இருந்து ஆத்திகராக மாறியவரும் உண்டு. கண்ணதாசன் இரு நிலையிலும் உச்சத்திற்குச் சென்றவர். அவருடன் கருத்து வேறுபாடு கொண்டவர்கூட அவரது பாடலை ரசிப்பர். அவ்வாறே அவரது அர்த்தமுள்ள இந்துமதம் ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய நூல். ஆழமான செய்திகளுக்கும், அருமையான பகிர்வுக்கும் நன்றி. //

    அய்யா முனைவர் B ஜம்புலிங்கம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி! நானும் முதலில் ஆத்திகனாக இருந்து நாத்திகனாக மாறினேன். பின்பு மீண்டும் ஆத்திகன் ஆனேன். நீங்கள் சொல்வது போல, கவிஞர் கண்ணதாசனின் ”அர்த்தமுள்ள இந்துமதம்” ஒவ்வொருவரும் படிக்கவேண்டிய நூல்.

    ReplyDelete
  42. மறுமொழி > -தோழன் மபா, தமிழன் வீதி said...

    // கவிஞர் என்றுமே மிக வெளிப்படையான ஒரு மனிதர். அவர் வாழ்ந்த வாழ்க்கை சுதந்திரம் நமக்கெல்லாம் கிடைக்காது என்றே கூறலாம. //

    //அந்தக் கால நிகழ்வுகளை மிக அழகாக பதிவு செய்து இருக்கின்றீர்கள். வாழ்த்துகள்!. //

    சகோதரர் இதழியலாளர் தோழன் மபா, தமிழன் வீதி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  43. மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

    // கண்ணதாசன் மீது கருத்து மாறுபாடு கொண்டோர்கூட அவரை வெறுக்க முடியவில்லை. காரணம் அவரது கவிதை. //

    சகோதரர் மூங்கில் காற்று - டி.என்.முரளிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  44. கவிஞர் குறித்து
    ஒரு கவித்துவமான அற்புதமான பதிவு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் ரமணி அய்யாவின் வருகைக்கும் சுருக்கமான கருத்துரைக்கும் நன்றி.

      Delete