Thursday 24 April 2014

நானும் ஓட்டு போட்டேன்



முன்பெல்லாம் தேர்தல் என்றால் ரொம்பவும் ஆர்வமாக இருக்கும்.. கட்சியாவது கிட்சியாவது என்பவர்கள் கூட, தேர்தல் நாள் நெருங்க நெருங்க ஏதாவது ஒரு கட்சியின் பக்கம் ஈர்க்கப்பட்டு விடுவார்கள் ஆனால் இந்த தடவை நடந்த தேர்தலில் எனக்கு ஆர்வமில்லை. யாருக்கு வாக்களிப்பது என்பதிலும் குழப்பம். காரணம் உண்மையாகவே இப்போது எனக்கு எந்த கட்சியிலும் ஈர்ப்பும் ஆர்வமும் இல்லை.

ஒரு கிராமத்திற்கு சென்றபோது:

நேற்று , புதன் கிழமை, தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் அருகே உள்ள ஒரு சின்ன கிராமத்தில் பெரிய காரியம். இறந்தவர் நெருங்கிய உறவினர் என்பதால் செல்லும்படி ஆயிற்று. திருச்சியிலிருந்து, தஞ்சாவூர், பாபநாசம் வழியே பஸ்ஸில் கபிஸ்தலம் சென்றேன். வழியில் வழ்க்கம் போல ஊர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டும் மக்களின் அன்றாட நிகழ்வுகளை பார்த்துக் கொண்டும் சென்றேன். முன்பெல்லாம் தேர்தல் என்றால் ஒரே பரபரப்பாக இருக்கும். ஒவ்வொரு ஊரிலும் கட்சி கொடிகள், தோரணங்கள் , கட்சிப் பாடல்கள் , சவுண்டு சர்வீஸ்கள் அலறல் என்று அமர்க்களப்படும். தேர்தல் ஆணையம் வகுத்த கட்டுப்பாடுகள் காரணமாக இந்த தேர்தலில் அவைகள் இல்லை. பஸ்சில் கூட காரசாரமாக அரசியல் பேசும் ஆட்களையும் காண இயலவில்லை. வெயில் வேறு வறுத்துக் கொண்டு இருந்தது. எல்லா ஊர்களும் ஒரே அமைதியாகவே இருந்தன.. 

செல்ல வேண்டிய கிராமம் சென்று, சம்பிராதயங்களை முடித்துக் கொண்டு பந்தலில் அமர்ந்து இருந்தேன். சிலர் அரசியல் பேசிக் கொண்டு இருந்தார்கள். அப்போது அவர்கள் அவரவர் ஊர்களில் தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடா முடிந்து விட்டதாகச் சொன்னார்கள். அவரவர் கட்சிக்காரர்களுக்கு மாறாமல் இருப்பதற்காகவும், கோயில் திருவிழா போன்ற காரியங்களுக்காகவும், மற்றும் இப்படி அப்படி என்று ஊசலாடுபவர்களுக்கும் பட்டுவாடா நடந்ததாகச் சொன்னார்கள். ரொம்பவும் கெடுபிடிகள் இருக்கின்றனவே என்று கேட்டதில், அவைகள் எல்லாம் உங்கள் டவுனுக்குத்தான்; எங்கள் கிராமங்களுக்கு இல்லை என்றார்கள். உண்மையிலேயே பணம் பட்டுவாடா நடந்ததா இல்லை எல்லோரையும் போல கேள்விப் பட்டதைச் சொன்னார்களா என்று தெரியவில்லை. ஏனெனில் அங்கிருந்த யாரும் பணம் வாங்கியதாகச் சொல்லவில்லை.ஆக இந்த விஷயத்தில் எல்லா அரசியல்வாதிகளுக்கும், ஊர் மக்களுக்கும் இடையில் கட்சி பாகுபாடின்றி ஒரு புரிதல் (UNDERSTANDING)  இருக்கிறது.

இணையதளத்தில் பார்வை:

ஒரு வாரத்திற்கு முன்பே, எங்கள் பகுதிக்கு என்று நியமனம் செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுக்கான வாக்காளர் அடையாள சீட்டுகளை கொடுத்து விட்டனர். எனது அப்பாவும், அம்மாவும் நகரின் இன்னொரு இடத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு அடையாள சீட்டுகளை யாரும் கொடுக்கவில்லை என்று இன்று காலை (24.04.14) போன் செய்தார்கள். நான் உடனே தேர்தல் ஆணையத்தின் இணையதளம் சென்று அவர்கள் இருவரது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வாக்குச்சாவடி விவரங்களை குறித்துக் கொண்டுபோய் கொடுத்தேன். அப்படியே எங்கள் விவரத்தினையும் சரி பார்த்துக் கொண்டேன்.

நானும் ஓட்டு போட்டேன்:

இன்று (24.04.2014) வியாழக்கிழமை, நானும் எனது மனைவியும் மகனும், நாங்கள் இருக்கும் புறநகர்ப் பகுதியில் ஓட்டு போட ஒரு நடுநிலைப் பள்ளிக்கு சென்றோம். அந்த பள்ளியில் ஐந்து வாக்கு சாவடிகள்.. நிழலுக்கு சாமியான பந்தல்கள் போட்டு இருந்தனர்.

நாங்கள் சென்ற நேரம் எங்கள் வாக்கு சாவடியில் மட்டும் நிறையபேர் இருந்தனர் எங்கள் ஏரியாவில் தொண்டு நிறுவனங்கள் நடத்தும் சேவை ஆசிரமங்கள் நிறைய உண்டு. ஒரு தொண்டு நிறுவனத்திலிருந்து பார்வை இழந்தவர்களை ஓட்டு போட அழைத்து வந்து உட்கார வைத்து இருந்தார்கள். நூற்று ஐம்பது பேருக்கும் அதிகமானவர்கள் இருப்பார்கள். பார்வையற்ற அவர்கள் ஓட்டு போட உதவியாக சில இளைஞர்கள். அவர்கள் அந்த தொண்டு நிறுவன தலைவர் யாருக்கு வாக்களிக்கச் சொல்லி இருந்தாரோ அந்த கட்சிக்கு , பார்வையற்றோர் சார்பாக ஓட்டு போடும் இயந்திரத்தில் உள்ள பட்டனை அமுக்கியதாக தகவல். சிந்தாமல் சிதறாமல் அவ்வளவு ஓட்டும் ஒரு கட்சிக்கு போடப்பட்டது. இதேபோல் ஒவ்வொரு தொண்டு நிறுவனத்திலும் உள்ள பார்வையற்றோர் வாக்குகள் இவ்வாறுதான் போடப் படுகின்றன. இருந்தாலும் அந்த தொண்டு நிறுவனங்கள், அந்த பார்வையற்றோர்களை வைத்து காப்பாற்றும், அந்த நல்ல எண்ணத்திற்காகவும் அவர்கள் மீது உள்ள பரிவு எண்ணம் காரணமாகவும், இதனை பெரிதுபடுத்த வேண்டியதில்லை என்றுதான் நினைக்கிறேன். இதனை எழுதியதும் ஒரு தகவலுக்காகத்தான்.

முதலில் அவர்களில் நான்கு பேரையும், பின்னர் வரிசையில் உள்ளவர்களில் நான்கு பேரையும் வரிசையாக அனுப்பிக் கொண்டு இருந்தார்கள். திடீரென்று அவர்கள் அனைவரும் ஓட்டு போட்ட பின்னர்தான் மற்றவர்களை அனுமதிக்க முடியும் என்றார்கள். மேலும் பார்வையற்றோர்கள் சிலரிடம் சரியான ஆவணங்கள் இல்லை. தொண்டு நிறுவனத்தில் மாற்றி கொடுத்து இருந்தனர்.  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் வந்தவர்கள் காத்து இருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பிரச்சினை அதிகமாகவே அவர்களை சரியான ஆவணங்களோடு வரச் சொல்லிவிட்டு வரிசையில் வந்தவர்களை அனுமதித்தார்கள். ஒரு வழியாக நானும் எனது குடும்பத்தினரும் வாக்களித்து விட்டு வந்தோம். 

தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பிரவீண் குமார், எடுத்த சில கடுமையான நடவடிக்கைகள் காரணமாக , இந்த தேர்தலில் ஜாதிக் கலவரம் போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.




29 comments:

  1. இங்கும் அப்படியே கப்சிப்... காவல்துறையினரின் வேலையை பாராட்ட வேண்டும்... மேற்படி "புரிதலும்" அமைதியே...

    ReplyDelete
  2. வணக்கம்

    தங்களின் சனநாயக கடமையை சரியாக செய்துள்ளீர்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  3. ஜனநாயகக் கடமையைச் செய்ததிற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. முன்பெல்லாம் தேர்தலின்போது கலவரங்கள் நடப்பதுண்டு... இப்போது தேர்தல் ஆணையம் போட்ட கிடுக்கிப்பிடியால் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது எனலாம். நல்ல விஷயம்.

    ReplyDelete
  5. //தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பிரவீண் குமார், எடுத்த சில கடுமையான நடவடிக்கைகள் காரணமாக , இந்த தேர்தலில் ஜாதிக் கலவரம் போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை//

    ஆனால் பணப்பட்டுவாடா தங்குதடையின்றி காவலர் முன்னிலையில் நடைபெற்றிருக்கிறதே.

    ‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.’ என பட்டுக்கோட்டையார் சொன்னது போல வேட்பாளர்களும் வாக்காளர்களும் தங்களுக்குள்ளே ஒரு சுயக்கட்டுப்பாடு ஏற்படுத்திக்கொண்டாலொழிய இந்த சட்ட திட்டங்கள் வெறும் ஏட்டளவில் மட்டும் இருக்கும்.

    ReplyDelete
  6. நல்லதொரு குடிமகனாக - தமது கடமையை நிறைவேற்றியமைக்கு மகிழ்ச்சி..
    சென்ற தேர்தலில் வாக்களித்தது தான். இப்போது - இருப்பு குவைத்தில்.

    நெஞ்சு பொறுக்குதில்லை - என்பதால் - இணைய தளத்தில் தேர்தல் செய்திகளைப் படிக்கக் கூட விருப்பம் இல்லை.

    நீர் ஆதாரங்களை முற்றிலுமாகக் கெடுத்து விட்டு, பொன் விளைந்த பூமியை மலடாக்கி, மனைப் பிரிவாய் பிளந்து விட்டு - நாட்டை வளமான பாதைக்கு இட்டுச் செல்வேன் என்று கூசாமல் பொய்.

    குற்றப் பின்னணிகளின் கொடி பிடித்த கோலாகலம்..

    பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது என்பார்கள். ஆனால் அவர்கள் நன்றாக இருக்கின்றார்கள். அப்பாவி மக்கள் தான் நாசமாகப் போய் விட்டார்கள்.

    அறம் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகுமாமே!.. அது எப்போது?..

    ReplyDelete
  7. நானும் ஓட்டுப் போட்டாச்சு தமிழ் சார். தேர்தல் இந்த முறை அமைதியாய் அருமையாய் நடந்து விட்டது.

    ReplyDelete
  8. கூட்டத்தைக் தவிர்க்க காலையிலேயே சென்று ஓட்டு போட்டுவிட்டேன். ஆனால் முடிவு தெரிந்து கொள்ள நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டி இருக்கிறது

    ReplyDelete
  9. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // இங்கும் அப்படியே கப்சிப்... காவல்துறையினரின் வேலையை பாராட்ட வேண்டும்... மேற்படி "புரிதலும்" அமைதியே... //

    எல்லாம் கண்கட்டு வித்தையாக இருக்கிறது.

    ReplyDelete
  10. மறுமொழி > 2008rupan said...

    // வணக்கம் தங்களின் சனநாயக கடமையை சரியாக செய்துள்ளீர்கள் //

    சகோதரர் கவிஞர் ரூபனின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  11. மறுமொழி > அபயாஅருணா said...

    // ஜனநாயகக் கடமையைச் செய்ததிற்கு வாழ்த்துக்கள் //

    சகோதரிக்கு நன்றி!

    ReplyDelete
  12. மறுமொழி > ஸ்கூல் பையன் said..

    ஸ்கூல் பையனின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // முன்பெல்லாம் தேர்தலின்போது கலவரங்கள் நடப்பதுண்டு... இப்போது தேர்தல் ஆணையம் போட்ட கிடுக்கிப்பிடியால் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது எனலாம். நல்ல விஷயம். //

    தேர்தல் முடிந்த பின்பு கலவரங்கள் நிகழ அதிக வாய்ப்புகள் உள்ளன. கவனமாக இருக்கவும்.

    ReplyDelete
  13. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    அய்யா வே.நடனசபாபதி அவர்களின் கருத்துரைக்கு நன்றி!


    //தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பிரவீண் குமார், எடுத்த சில கடுமையான நடவடிக்கைகள் காரணமாக , இந்த தேர்தலில் ஜாதிக் கலவரம் போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை//
    -----
    // ஆனால் பணப்பட்டுவாடா தங்குதடையின்றி காவலர் முன்னிலையில் நடைபெற்றிருக்கிறதே. //

    தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைத்தான் இது காட்டுகிறது. வருத்தப்பட வேண்டிய விஷயம்.

    // ‘திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது.’ என பட்டுக்கோட்டையார் சொன்னது போல வேட்பாளர்களும் வாக்காளர்களும் தங்களுக்குள்ளே ஒரு சுயக்கட்டுப்பாடு ஏற்படுத்திக்கொண்டாலொழிய இந்த சட்ட திட்டங்கள் வெறும் ஏட்டளவில் மட்டும் இருக்கும். //

    திருடர்கள் எந்த காலத்திலும் அவர்களாய் திருந்தியதாக தெரியவில்லை. சுயகட்டுப்பாடு என்பதனை இந்திய அரசியலில் எதிர்பார்க்க இயலாதுதான்.

    ReplyDelete
  14. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் ஆதங்கமான கருத்துரைக்கு நன்றி!

    // நல்லதொரு குடிமகனாக - தமது கடமையை நிறைவேற்றியமைக்கு மகிழ்ச்சி.. சென்ற தேர்தலில் வாக்களித்தது தான். இப்போது - இருப்பு குவைத்தில். //

    வினையே ஆடவர்க்கு உயிரே! - எனவே வருத்தம் வேண்டாம்.


    // நெஞ்சு பொறுக்குதில்லை - என்பதால் - இணைய தளத்தில் தேர்தல் செய்திகளைப் படிக்கக் கூட விருப்பம் இல்லை. //

    எங்கிருந்தபோதும் நாட்டு நடப்பை தெரிந்து கொள்ளாமல் இருக்காதீர்கள்.

    // நீர் ஆதாரங்களை முற்றிலுமாகக் கெடுத்து விட்டு, பொன் விளைந்த பூமியை மலடாக்கி, மனைப் பிரிவாய் பிளந்து விட்டு - நாட்டை வளமான பாதைக்கு இட்டுச் செல்வேன் என்று கூசாமல் பொய். குற்றப் பின்னணிகளின் கொடி பிடித்த கோலாகலம்.. பொய் சொன்ன வாய்க்குப் போஜனம் கிடைக்காது என்பார்கள். ஆனால் அவர்கள் நன்றாக இருக்கின்றார்கள். அப்பாவி மக்கள் தான் நாசமாகப் போய் விட்டார்கள். அறம் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகுமாமே!.. அது எப்போது?.. //

    உங்கள் ஆதங்கமும், அறச்சீற்றமும் புரிகின்றது.

    ReplyDelete
  15. மறுமொழி > rajalakshmi paramasivam said...

    // நானும் ஓட்டுப் போட்டாச்சு தமிழ் சார். தேர்தல் இந்த முறை அமைதியாய் அருமையாய் நடந்து விட்டது. //

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி! நான் பணியில் இருந்தபோது எனக்கு பல விஷயங்களை சொல்லிக் கொடுத்த, எங்களது வங்கி கம்ப்யூட்டர் அதிகாரி ஒருவர் என்னை அடிக்கடி “ என்ன தமிழ் சார் “ என்று அழைப்பார். நீங்கள் தமிழ் சார் என்று சொன்னதும் எனக்கு அவரது நினைவு வந்தது.

    ReplyDelete
  16. மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

    சகோதரர் மூங்கில் காற்று டி என் முரளிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  17. //தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையர் பிரவீண் குமார், எடுத்த சில கடுமையான நடவடிக்கைகள் காரணமாக , இந்த தேர்தலில் ஜாதிக் கலவரம் போன்ற வன்முறை சம்பவங்கள் நடைபெறவில்லை என்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.//

    எந்த அசம்பாவிதமோ, அலம்பலோ, ஆர்பாட்டங்களோ இல்லாமல் மிகவும் அமைதியாக நடைபெற்றுள்ளது ஆச்சர்யமே. தேர்தல் கமிஷனரைப் பாராட்டத்தான் வேண்டும்.

    ReplyDelete
  18. உங்களுக்கு வாக்குப் போட்ட அடையாள மை இடது கை ஆட்காட்டி விரலில் என்றால் இங்கு பெங்களூரில் அடையாள மை இடது கை கட்டை விரலில்....!

    ReplyDelete
  19. துணை இராணுவத்தினரின் வருகையால் இப்போதெல்லாம் தேர்தல் தினத்தன்று நடைபெறும் கலவரங்கள் நடைபெறுவதில்லை. ஆனால் என்னுடைய அபிப்பிராயம் என்னவென்றால் தேர்தல் அலுவல்களில் ஈடுபடுத்தப்படும் அரசு ஊழியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துக்கொடுத்தால் அவர்களுடைய ஒத்துழைப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.

    ReplyDelete
  20. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    அய்யா V.G.K அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  21. மறுமொழி > G.M Balasubramaniam said...

    அய்யா G.M.B அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // உங்களுக்கு வாக்குப் போட்ட அடையாள மை இடது கை ஆட்காட்டி விரலில் என்றால் இங்கு பெங்களூரில் அடையாள மை இடது கை கட்டை விரலில்....! //

    பெங்களூரில் ஓட்டு போட்ட வலைப்பதிவர் சகோதரி ரஞ்சனி நாராயணன் சொல்வது

    // சமீபத்தில் நடந்த பஞ்சாயத்துத் தேர்தல்கள் காரணமாக இந்த முறை இடது கைப்பெருவிரலில் மை தடவப்பட்டது.//
    http://thiruvarangaththilirunthu.blogspot.com/2014/04/blog-post_24.html

    ReplyDelete
  22. மறுமொழி > டிபிஆர்.ஜோசப் said...

    அய்யா டிபி.ஆர்.ஜோசப் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!


    ReplyDelete
  23. வாக்குச் சாவடி முதன்மை அலுவலராகப்பணியாற்றிவிட்டு, இன்று காலைதான் வீடு திரும்பினேன் ஐயா.
    அமைதியான தேர்தல்தான் ஐயா

    ReplyDelete
  24. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...

    // வாக்குச் சாவடி முதன்மை அலுவலராகப்பணியாற்றிவிட்டு, இன்று காலைதான் வீடு திரும்பினேன் ஐயா.
    அமைதியான தேர்தல்தான் ஐயா //

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
    அமைதியான தேர்தல்தான்
    நாங்களெல்லாம் ஓட்டு போட்டோம் வந்து விட்டோம். ஆனாலும் உங்கள் பணி மகத்தானது. தேர்தல் பணி என்றாலே, நிறையபேர் ஒதுங்கி விடும் இந்நாளில், வீடு வாசல் மறந்து பணியாற்றிய உங்களுக்கு ஆயிரமாயிரம் நன்றி!

    ReplyDelete
  25. வாழ்த்துகள்.... எனது ஓட்டு தில்லியில் தான்.... ஏனோ தேர்தல் ஆணையம் எனது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து எடுத்து விட்டது... மீண்டும் சேர்க்க வேண்டும்!

    ReplyDelete
  26. ஓட்டுப்போடச்சென்ற பள்ளியில் சுற்றிச்சுற்றி மஞ்சள் சரக்கொன்றை மரங்கள் பூத்து சொரிந்துகொண்டிருந்தன..ஆர்வத்துடன் ரசித்து ஓட்டுப்போட்டு வந்தோம்..

    ReplyDelete
  27. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    // வாழ்த்துகள்.... எனது ஓட்டு தில்லியில் தான்.... ஏனோ தேர்தல் ஆணையம் எனது பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து எடுத்து விட்டது... மீண்டும் சேர்க்க வேண்டும்! //

    நீங்கள் தலைநகர் டில்லியில் இருந்தும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதபடியினால், ஓட்டு போடமுடியாதது வருத்தமான விஷயம்தான். மீண்டும் சேர்த்து விடுங்கள்.

    ReplyDelete
  28. மறுமொழி > karthik sekar said...

    சகோதரர் கார்த்திக் சேகரின் அன்பான ஆலோசனைக்கு நன்றி!

    ReplyDelete
  29. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!

    // ஓட்டுப்போடச்சென்ற பள்ளியில் சுற்றிச்சுற்றி மஞ்சள் சரக்கொன்றை மரங்கள் பூத்து சொரிந்து கொண்டிருந்தன.. ஆர்வத்துடன் ரசித்து ஓட்டுப்போட்டு வந்தோம்.. //.

    நீங்கள் ஆன்மீகப் பதிவர் என்பதால் , அங்கும் சிவபெருமானின் கொன்றை மலர்கள் உங்களை மனம் கவர்ந்து இருக்கின்றன.




    ReplyDelete