Tuesday, 29 April 2014

நானும் சைவசித்தாந்தம் பயின்றேன்!



ஒரு கல்லூரி விரிவுரையாளராக ஆக வேண்டும் என்ற ஆசையில் , திருச்சி நேஷனல் கல்லூரியில் எம்.ஏ தமிழ் இலக்கியத்தை விருப்ப பாடமாக எடுத்து சேர்ந்தேன். (1975 1977) அப்போது அந்த கல்லூரியில் எம்.ஏ தமிழ் இலக்கியத்தில் இலக்கணத்தோடு கம்பராமாயணம் மற்றும் சைவசித்தாந்தம் இரண்டையும் முக்கிய பாடங்களாக (MAIN SUBJECTS) வைத்து இருந்தார்கள். ஏற்கனவே பி.ஏ தமிழ் இலக்கியம் படித்து இருந்தபடியினால்  இலக்கியம், இலக்கண்ம் இவற்றில் எனக்கு பிரச்சினையில்லை.ஆனால் சைவசித்தாந்தம் எனக்கு புதிது. கடினமான பாடம். கல்லூரிகளில் பாடத்திட்டத்தின் கீழ் உள்ள தத்துவ இயல்தான் (PHILOSOPHY) சைவசித்தாந்தம் ( SAIVA SIDDHANTHA PHILOSOPHY ) என்பதும். ஆர்வத்துடன் புரிந்து கொண்டு படித்தால் எளிமையாக விளங்கும்.

குருவாக வந்த நண்பர்

அப்போதெல்லாம் இப்போது இருக்கும் இண்டர்நெட் வசதி கிடையாது. சைவசித்தாந்தம் படிப்புக்கு நோட்ஸும் கிடையாது. பல புத்தகங்களை படித்து குறிப்புகள் எடுத்துதான் படிக்க வேண்டும். கல்லூரி நூலகத்தில் நாம் தேடும் புத்தகங்களை யாரேனும் எடுத்து போயிருப்பார்கள். மாவட்ட மைய நூலகத்திலும் இதே கதைதான். நல்லவேளையாக பி.ஏ படிக்கும் போது எனக்கு சீனியராக இருந்த நண்பர் ஒருவர் நான் படித்த கல்லூரியிலேயே இரண்டாம் ஆண்டு எம்.ஏ தமிழ் படித்துக் கொண்டு இருந்தார்.

அவர் பெயர் சு.பாலகிருஷ்ணன். அவருடைய சொந்த ஊர் திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள எசனைக்கோரை ஆகும். சிறந்த சிவபக்தர். அவர் தினமும் வாளாடி என்ற ரெயில் நிலையத்தில் வண்டியேறி திருச்சி வந்து கல்லூரிக்கு வருவார். அவர் ரெயில் பெட்டியில் ஏறியதுமே அவருக்கென்று உட்கார இடம் கொடுத்து விடுவார்கள். வாளாடியிலிருந்து திருச்சி வரும் வரை இலக்கியம், சைவ சம்பந்தப்பட்ட ஒரு பட்டி மண்டபமே அங்கு நடக்கும். அவரை சின்ன வாரியார் என்று அன்பாக அழைத்தவர்களும் உண்டு.

அவர் சைவசமயம் சம்பந்தமாக நிறைய நூல்களை வைத்து இருந்தார். எனக்கு சீனியராகவும் நண்பராகவும் இருந்த அவரையே சைவ சித்தாந்தம் பாடத்திற்கு குருவாக ஏற்றுக் கொண்டேன். அவர் தான் எடுத்த குறிப்புகளையும்  நூல்களையும் கொடுத்து உதவினார். மேலும் சைவசித்தாந்தம் என்றால் என்ன என்பதனையும் விளக்கினார். (அவர் பின்னாளில் பட்டினத்தார் பாடல்களை தனது பி.எச்.டி ஆராய்ச்சி படிப்புக்காக எடுத்தவர்; சர்க்கரை நோய் காரணமாக இளமையிலேயே இறந்து போனார்)

சில சமயம் எப்போதாவது நாம் தேடும் புத்தகங்கள்   நூலகத்தில் கிடைக்கும். எல்லாவற்றையும் எழுதி எழுதி படித்தேன். எனவே முக்கியமான பாடல்கள் அப்போது மனப்பாடம் ஆயின.

திருக்கோயில்கள் சுற்றுலா

சைவசித்தாந்தத்தை பாடமாக எடுத்து இருந்தபடியினால் கல்லூரியில் திருக்கோயில்கள் சென்று வர ஏற்பாடு செய்து இருந்தார்கள். மாணவர்களும் ஆசிரியர்களுமாக தஞ்சை மாவட்டத்தில் இருந்த சில (சீர்காழி,வைத்தீஸ்வரன் கோயில் போன்ற ) சைவ திருக்கோயில்கள் மற்றும் பூம்புகாரையும் கண்டோம். எங்களுக்கு காலை உணவு, மதிய உணவு வழங்கும் பொறுப்பை திருவாவடுதுறை மடம் மூலம் ஏற்பாடு செய்து இருந்தார்கள். திரும்பும் போது, தென்னிலக்குடி என்ற் ஊரில் எங்கள் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் திருமேனி அவர்கள் வீட்டு தென்னந் தோப்பில் இருந்த இளநீர்கள் தாகம் தீர்த்தன.

சைவ சித்தாந்தம் என்பது:




இந்த தத்துவத்தை விளக்க ஒரு கையில் உள்ள ஐந்து விரல்களே போதும். ஐந்து விரல்களில் கட்டை விரல் இறைவனைக் குறிக்கும். சுட்டுவிரல் என்பது ஆன்மா. நடுவிரல் என்பது ஆணவம்.. மோதிர விரல் என்பது கன்மம் (அதாவது கருமம்). ஐந்தாவதாக உள்ள சுண்டு விரல் மாயை. சுட்டுவிரலானது (ஆன்மா) எப்போதும் மற்றைய மூன்று விரல்களுடன் (பாசம் எனப்படும் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றுடன் ) சேர்ந்தே இருக்கும். அது கட்டைவிரலை (இறைவன்) அடைய வேண்டுமானால் அந்த மூன்றையும் (பாசத்தை) விட்டு விலகினால்தான் முடியும். அதைப் போலவே இறைவனை அடைய ஆன்மாவானது ஆணவம்,கன்மம்,மாயை என்ற பாசமாகிய மூன்றையும் விட்டு விலக வேண்டும். பதி,பசு,பாசம்  எவ்வாறு என்று விளக்குவதே சைவ சித்தாந்தம்.
  
இதில் இறைவன் என்றால் என்ன என்பது குறித்து பல பாடல்கள். அப்புறம் ஆன்மா என்றால் என்ன என்பது குறித்தும் ஆணவம், கன்மம், மாயை மூன்றினைக் குறித்தும் பல பாடல்கள். இவ்வாறு பல பாடல்களை தலைப்பு வாரியாக படித்ததால் சைவசித்தாந்தம் என்ற தத்துவ இயல் குறித்து அறிந்து கொள்ள முடிந்தது. மேலும் பாடத் திட்டத்தின்படி சைவசமய வரலாறு, சைவசமய இலக்கியம் ஆகியவற்றிற்கும் குறிப்புகள் எடுக்க வேண்டி இருந்தது. இதனால் சைவசமயம் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள முடிந்தது.

      ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
      நன்றே நினைமின் நமனில்லை நாணாமே
      சென்றே புகுங்கதி இல்லை நும் சித்தத்து
      நன்றே நிலைபெற நீர் நினைநதுய்மனே
                                - திருமந்திரம்

  
( குறிப்பு: இங்கு எனது படிப்பு (சைவ சித்தாந்தம்) சம்பந்தமான அனுபவத்தை மட்டுமே நான் சுருக்கமாக பதிந்துள்ளேன் சைவசித்தாந்தம் என்பது பற்றி ஒரு பதிவினில் விளக்கிட முடியாது. விவாதத்தை தொடங்கினால் நீண்டு கொண்டே போகும். ஆர்வம் உள்ளவர்கள் அது சம்பந்தமான நூல்களைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்,)





43 comments:

  1. அதென்ன நானும் ?நானை மறக்கச் சொல்லவில்லையா சைவ சித்தாந்தம் ?
    த ம 1

    ReplyDelete
  2. //சைவ சித்தாந்தம் சம்பந்தமான அனுபவத்தை மட்டுமே நான் சுருக்கமாக பதிந்துள்ளேன்//

    அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். தங்களின் அனுபவத்தால் ஓரளவு நாங்களும் இதுபற்றி இப்போது தெரிந்துகொள்ள முடிந்ததில் மகிழ்ச்சியே.

    பகிர்வுக்கு நன்றிகள், ஐயா. - அன்புடன் VGK

    ReplyDelete
  3. //அதென்ன நானும் ?நானை மறக்கச் சொல்லவில்லையா சைவ சித்தாந்தம் ?//
    பகவான்ஜி.. நெத்தியடியாய் கலக்கறீங்க! எவ்வளவு சுருக்கமாக சுட்டு விரலை மற்ற மூன்று விரல்களிடமிருந்து பிரித்து கட்டை விரலை அடைவது எப்படி என்று சுருக்கமாக சொல்லிவீட்டீர்கள்!

    ReplyDelete
  4. மறுமொழி > Bagawanjee KA said...

    // அதென்ன நானும் ?நானை மறக்கச் சொல்லவில்லையா சைவ சித்தாந்தம் ? த ம 1 //

    சகோதரர் பகவான்ஜீ K.A அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ஒரு காலத்தில் சைவசித்தாந்த சாத்திரங்கள் என்பவை ஆதீனங்கள் மற்றும் மடங்களில் மட்டுமே குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழிவழியாக சொல்லப்பட்டு வந்தது. அச்சுக்கலை மூலம் அவை நூல்களாக வந்த பிறகும், பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப்பட்ட பிறகும் இந்த சாத்திரங்கள் சாதி மத பேதமின்றி எல்லோரையும் சென்றடைந்தன. இதனைக் கருத்தில் கொண்டே “நானும்” என்று குறிப்பிட்டேன்.

    நான் என்பது சிலசமயம் அகங்காரம் என்ற பொருள் தரும். நானும் ( I am also a ) என்னும் போது பத்தோடு ஒன்றாக நான் பதினொன்றாவதாக எளியவன் ஆகி விடுகிறேன்.

    உதாரணம் : நானும் ஒரு தொழிலாளி
    நானும் ஒரு பெண்

    தமிழ் இலக்கணத்தில் இதனை எண்ணும்மை என்பார்கள்.

    ReplyDelete
  5. மறுமொழி > வை.கோபாலகிருஷ்ணன் said...

    அன்புள்ள VGK அவர்களுக்கு வணக்கம்!

    // அருமையாகச் சொல்லியுள்ளீர்கள். தங்களின் அனுபவத்தால் ஓரளவு நாங்களும் இதுபற்றி இப்போது தெரிந்துகொள்ள முடிந்ததில் மகிழ்ச்சியே. பகிர்வுக்கு நன்றிகள், ஐயா. - அன்புடன் VGK //

    உங்களைப் போன்றவர்கள் தரும் ஊக்கத்தினால்தான் நான் இது போன்ற கட்டுரைகளை எழுத முடிகிறது. தங்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  6. மறுமொழி > bandhu said...

    சகோதரர் Bandhu அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // //அதென்ன நானும் ?நானை மறக்கச் சொல்லவில்லையா சைவ சித்தாந்தம் ?// பகவான்ஜி.. நெத்தியடியாய் கலக்கறீங்க! //

    இதில் நெற்றியடி ஏதும் இல்லை. சகோதரர் பகவான்ஜீ K.A அவர்களுக்கு தந்த மறுமொழியைக் காணவும்.

    // எவ்வளவு சுருக்கமாக சுட்டு விரலை மற்ற மூன்று விரல்களிடமிருந்து பிரித்து கட்டை விரலை அடைவது எப்படி என்று சுருக்கமாக சொல்லிவீட்டீர்கள்! //

    தர்க்க ரீதியான விளக்கங்கள் சொல்லும்போது எளிமையாகச் சொல்லப்படும் உவமான உவமேயம்தான் இது. இதுதான் சுருக்கமான விளக்கம். கை படத்தினை PHOTOSCAPE மூலம் எடிட் செய்து முடிந்தவரை விளக்கம் தந்துள்ளேன். சின் முத்திரை விளக்கமும் இதுதான்



    ReplyDelete
  7. அறியாதன அறிந்தேன்
    எளிமையாகச் சொல்லியவிதம் மனம் கவர்ந்தது
    தொடந்து பதிவிடுவீர்கள் என நினைக்கிறேன்
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. தங்கள் விளக்கம் அருமை. நெற்றியடி என்று அவர் சுருங்க சொன்னதை குறித்து சொன்னேன்.

    ReplyDelete
  9. சுருக்கமாக கோடிட்டுக் காட்டி இருக்கிறீர்கள். எளிமையான வடிவத்தில் தந்தால் நிறையப் பேர் படிப்பார்கள் என்றுநம்புகிறேன்.

    ReplyDelete
  10. பல விஷயங்களைத் தன்னகத்தே கொண்டது.... ஒரு பதிவில் விளக்கிட முடியாதது - உண்மை தான்.

    படிக்க ஆவலுண்டு.... எப்போது படிக்க முடியும் என்பது பெரிய கேள்விக்குறி...

    ReplyDelete
  11. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  12. ஐந்து விரல்கள் கொண்டு சொன்ன விதம் சுருக்கமாக இருந்தாலும் எளிமை... ( I am also a ) விளக்கமும்...

    ReplyDelete
  13. நானும் ஒரு பதிவர் என்பதால் எண்ணும்மை எனும் உண்மையை தெரிந்து கொண்டேன் .திரு .பந்து அவர்களே ,சுட்டும் விரலால் குற்றம் கூறுகையில் மற்றும் மூன்று விரல்கள் என்னை நோக்குவதை உணரச் செய்ததற்கு நன்றி !

    ReplyDelete
  14. என் கணவரும் நானும் பேரூரில் நடைபெற்ற
    சைவ சித்தாந்த வகுப்புகளில் கலந்துகொண்டோம்..

    தங்கள் பகிர்வுகள் அருமையான விளக்கமாக அமைந்தது..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  15. மறுமொழி > Ramani S said... (1, 2)

    கவிஞர் ரமணி அவர்களின் கருத்துரைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி!

    // அறியாதன அறிந்தேன் எளிமையாகச் சொல்லியவிதம் மனம் கவர்ந்தது தொடந்து பதிவிடுவீர்கள் என நினைக்கிறேன் பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் //

    எனக்கு நேரம் கிடைக்கும் போது, எனக்குத் தெரிந்தவரை தொடர்ந்து எழுதுகிறேன்.


    ReplyDelete
  16. மறுமொழி > bandhu said...

    சகோதரர் Bandhu அவர்களின் இரண்டாம் வருகைக்கு நன்றி!

    // தங்கள் விளக்கம் அருமை. நெற்றியடி என்று அவர் சுருங்க சொன்னதை குறித்து சொன்னேன். //

    நான் தங்களை தவறாகப் புரிந்து கொண்டமைக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். மன்னிக்கவும்!

    ReplyDelete
  17. மறுமொழி > டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

    சகோதரர் மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // சுருக்கமாக கோடிட்டுக் காட்டி இருக்கிறீர்கள். எளிமையான வடிவத்தில் தந்தால் நிறையப் பேர் படிப்பார்கள் என்று நம்புகிறேன். //

    நான் முழுநேர ஆன்மீகப் பணியாளன் இல்லை எனவே நேரம் கிடைக்கும்போது, என்னால் முடிந்ததை எழுதுகிறேன்.


    ReplyDelete
  18. மறுமொழி > வெங்கட் நாகராஜ் said...

    சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!
    // பல விஷயங்களைத் தன்னகத்தே கொண்டது.... ஒரு பதிவில் விளக்கிட முடியாதது - உண்மை தான். படிக்க ஆவலுண்டு.... எப்போது படிக்க முடியும் என்பது பெரிய கேள்விக்குறி... //

    உங்களுக்கும் உரிய நேரம் வரும். நிச்சயம் படிப்பீர்கள்.


    ReplyDelete
  19. மறுமொழி > நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம் said...

    வணக்கம்! தங்கள் ஆலோசனைக்கு நன்றி! நினைவில் வைத்துள்ளேன்!

    ReplyDelete
  20. ஒருமுறை நூலகத்தில் எடுத்துப் பார்த்தேன்.. எடுத்த வேகத்தில் வைத்து விட்டேன்.. சித்தர் பாடல்கள் மீது ஆர்வம் உண்டு.. படிக்க ஆரம்பிக்க வேண்டும் :-)

    ReplyDelete
  21. சைவ சித்தாந்தங்களும் நெறிமுறைகளும் தமிழ் இலக்கியத்துக்கு செய்து வந்துள்ள தொண்டுகள் ஏராளம். நான் சொல்வது சரியா ஐயா.?.

    ReplyDelete
  22. அருமையான பதிவு! எத்தனை அழகாக விரல்களின் தத்துவங்களை எழுதியிருக்கிறீர்கள்!

    கல்லூரி நினைவுகளின் தாக்கம் தமிழ் இலக்கிய மணத்துடன் அழகான பதிவாக உருவாகி இருக்கிறது. சைவ சித்தாந்தத்தை தங்களுக்கு புரிய வைத்த அந்த நண்பர் இளமையில் மரணித்தது ஒரு நிமிடம் மனதை கனக்கச் செய்தது.

    ReplyDelete
  23. சுருக்கமாக - அதிலும் தெளிவாக முதல் நிலையினைக் கூறி இருக்கிறீர்கள். மகிழ்ச்சி..

    எனக்கும் இதில் ஆர்வம் உண்டு.. சில ஆண்டுகளுக்கு முன் சைவ சித்தாந்தங்களைப் பயில முயன்றேன். ஆனால் சூழ்நிலைகளின் காரணமாக இயலவில்லை.

    காலம் கைகூடி வரும் அதுவரை சிவாய நம என்று சிந்தித்திருப்போம்!..

    ReplyDelete
  24. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    // ஐந்து விரல்கள் கொண்டு சொன்ன விதம் சுருக்கமாக இருந்தாலும் எளிமை... ( I am also a ) விளக்கமும்... //

    சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  25. மறுமொழி > Bagawanjee KA said...

    // நானும் ஒரு பதிவர் என்பதால் எண்ணும்மை எனும் உண்மையை தெரிந்து கொண்டேன் .திரு .பந்து அவர்களே ,சுட்டும் விரலால் குற்றம் கூறுகையில் மற்றும் மூன்று விரல்கள் என்னை நோக்குவதை உணரச் செய்ததற்கு நன்றி ! //

    சகோதரர் பகவான்ஜீ K.A அவர்களின் இரண்டாம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  26. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...

    // என் கணவரும் நானும் பேரூரில் நடைபெற்ற சைவ சித்தாந்த வகுப்புகளில் கலந்துகொண்டோம்.. தங்கள் பகிர்வுகள் அருமையான விளக்கமாக அமைந்தது..பாராட்டுக்கள்..! //

    சகோதரி அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி! பேரூர் ஆதினம் சார்பாக நடைபெறும் சைவ சித்தாந்த வகுப்புகளைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன்.

    ReplyDelete
  27. தங்களுடைய கல்லூரி நினைவுகளையும் சைவசித்தாந்தம் பற்றிய அறிமுகத்தையும் சுவைபடத் தந்துள்ளீர்கள். நன்றி ஐயா.

    ReplyDelete
  28. மறுமொழி > சீனு said...

    // ஒருமுறை நூலகத்தில் எடுத்துப் பார்த்தேன்.. எடுத்த வேகத்தில் வைத்து விட்டேன்.. சித்தர் பாடல்கள் மீது ஆர்வம் உண்டு.. படிக்க ஆரம்பிக்க வேண்டும் :-) //

    சைவசித்தாந்தம் முழுக்க முழுக்க தத்துவ இயல்தான். எனவே புதிதாக படிப்பவர்களுக்கு முதலில் அப்படித்தான் தோன்றும். சித்தர்களின் வரலாற்றோடு சித்தர்கள் பாடல்களைப் படித்தால் அவற்றை ஆர்வமாகப் படிக்கலாம்.

    ReplyDelete
  29. மறுமொழி > G.M Balasubramaniam said...

    // சைவ சித்தாந்தங்களும் நெறிமுறைகளும் தமிழ் இலக்கியத்துக்கு செய்து வந்துள்ள தொண்டுகள் ஏராளம். நான் சொல்வது சரியா ஐயா.?. //

    அய்யா G.M.B அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி! நீங்கள் சொல்வது சரிதான் அய்யா! தமிழ் இலக்கிய வரலாற்றில் சமயங்களின் பங்கினைப் பற்றி சொல்லும்போது “சைவமும் தமிழும்” என்றே ஒரு பகுதி உண்டு.

    ReplyDelete
  30. மறுமொழி > மனோ சாமிநாதன் said...

    // அருமையான பதிவு! எத்தனை அழகாக விரல்களின் தத்துவங்களை எழுதியிருக்கிறீர்கள்! //

    சகோதரியின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி! கைவிரல்கள் விளக்கப் படத்துடன் சின்முத்திரை படத்தினையும் நான் இணைத்து இருக்க வேண்டும்.

    // கல்லூரி நினைவுகளின் தாக்கம் தமிழ் இலக்கிய மணத்துடன் அழகான பதிவாக உருவாகி இருக்கிறது. சைவ சித்தாந்தத்தை தங்களுக்கு புரிய வைத்த அந்த நண்பர் இளமையில் மரணித்தது ஒரு நிமிடம் மனதை கனக்கச் செய்தது. //

    ஆமாம் சகோதரி! அந்த நண்பர் இறந்தது எனக்கு மட்டுமல்ல, தமிழ் இலக்கிய உலகிற்கும் பேரிழப்புதான்.


    ReplyDelete
  31. நீங்கள் திருமேனி அவர்கள் மாணவரா?
    நேஷனல் கல்லூரியில் 1955 முதல் தமிழ் பேராசிரியர் ராதாகிருஷ்ணனை அறிவீர்களா ?
    அவர் எனது குடும்ப நண்பர். எனக்கு தமிழ் ஆசான்.

    ஹிந்தி பிரசார சபா வில் , நான் பிரவீன் படித்த போது
    அது 1955 அல்லது 1956 என நினைக்கிறேன்.

    பிரவீன் என்னும் இறுதி தேர்வில், பிராந்திய மொழிக்கு ஒரு
    பிரிவு செமஸ்டர் இருந்தது. தமிழ் இலக்கியம் பிரிவில் மாலை வகுப்பு நடைபெறும். பெரும்பாலும் கல்லூரி பேராசிரியர்கள் தான் இந்த வகுப்புகளுக்கு வந்து பாடம் நடத்துவார்கள்.

    அதில் கம்ப ராமாயணம் மற்றும் சிலப்பதிகாரம் நான் படிக்கையிலே
    இலக்கிய படிப்பில் அமைந்தது.

    கம்ப இராமாயண வகுப்புகளை திரு. ராதா கிருஷ்ணன் அவர்கள் நடத்தினார்கள்.

    சைவ சித்தாந்த வகுப்புகளை புலவர் ஆறுமுகம் நடத்துவார்கள்.

    அந்தக் காலத்தை நினைவு கூர வைத்தமைக்கு நன்றி பல.

    திருச்சிக்கு வரும்போது தங்களையும் பார்க்கவேண்டும்

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
  32. மறுமொழி > துரை செல்வராஜூ said...

    // சுருக்கமாக - அதிலும் தெளிவாக முதல் நிலையினைக் கூறி இருக்கிறீர்கள். மகிழ்ச்சி.. //

    சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    //எனக்கும் இதில் ஆர்வம் உண்டு.. சில ஆண்டுகளுக்கு முன் சைவ சித்தாந்தங்களைப் பயில முயன்றேன். ஆனால் சூழ்நிலைகளின் காரணமாக இயலவில்லை. காலம் கைகூடி வரும் அதுவரை சிவாய நம என்று சிந்தித்திருப்போம்!.. //

    உங்கள் ஆர்வம் ஒருநாள் நிறைவேறும் அய்யா!

    ReplyDelete
  33. மறுமொழி > கீத மஞ்சரி said...

    // தங்களுடைய கல்லூரி நினைவுகளையும் சைவசித்தாந்தம் பற்றிய அறிமுகத்தையும் சுவைபடத் தந்துள்ளீர்கள். நன்றி ஐயா. //

    சகோதரியின் கருத்துரைக்கு நன்றி!


    ReplyDelete
  34. மறுமொழி > sury Siva said...

    சுப்பு தாத்தா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    // நீங்கள் திருமேனி அவர்கள் மாணவரா? நேஷனல் கல்லூரியில் 1955 முதல் தமிழ் பேராசிரியர் ராதாகிருஷ்ணனை அறிவீர்களா ? அவர் எனது குடும்ப நண்பர். எனக்கு தமிழ் ஆசான். //

    ஆமாம் அய்யா! பேராசிரியர் கு.திருமேனி அவர்கள் அப்போது எங்கள் தமிழ்த்துறையின் தலைவராக (H.O.D) இருந்தார். அவரோடு எனது அப்பாவிற்கும் தொடர்பு உண்டு. அவரது மாணவர்களில் நானும் ஒருவன்.

    தமிழ் பேராசிரியர் ராதாகிருஷ்ணன் அவர்களும் அப்போது எங்களுக்கு இலக்கண வகுப்பு எடுத்தார். பேராசிரியர் சோ.சத்தியசீலனும் ஒன்றிரண்டு பாடங்கள் எடுத்து இருக்கிறார். இவர்கள் இருவரும் அந்நாளைய பட்டிமன்ற சிறப்பு சொற்பொழிவாளர்கள்.

    // ஹிந்தி பிரசார சபா வில் , நான் பிரவீன் படித்த போது
    அது 1955 அல்லது 1956 என நினைக்கிறேன். பிரவீன் என்னும் இறுதி தேர்வில், பிராந்திய மொழிக்கு ஒரு பிரிவு செமஸ்டர் இருந்தது. தமிழ் இலக்கியம் பிரிவில் மாலை வகுப்பு நடைபெறும். பெரும்பாலும் கல்லூரி பேராசிரியர்கள் தான் இந்த வகுப்புகளுக்கு வந்து பாடம் நடத்துவார்கள். //

    நீங்கள் பிரவீன் படித்த 1955 ஆம் ஆண்டுதான் நான் பிறந்தேன். அந்தக் கால வகுப்புகளை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி!

    // அதில் கம்ப ராமாயணம் மற்றும் சிலப்பதிகாரம் நான் படிக்கையிலே இலக்கிய படிப்பில் அமைந்தது. கம்ப இராமாயண வகுப்புகளை திரு. ராதா கிருஷ்ணன் அவர்கள் நடத்தினார்கள்.
    சைவ சித்தாந்த வகுப்புகளை புலவர் ஆறுமுகம் நடத்துவார்கள்.
    அந்தக் காலத்தை நினைவு கூர வைத்தமைக்கு நன்றி பல.
    திருச்சிக்கு வரும்போது தங்களையும் பார்க்கவேண்டும் //

    புலவர் ஆறுமுகம் யார் என்று எனக்கு தெரியவில்லை. நானும் உங்களை சந்திக்க ஆவலாக இருக்கிறேன்!



    ReplyDelete
  35. ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
    தமிழின் பெருமையினைக் கூட இவ்வரி ஒன்றே போதும் ஐயா.

    மிகவும் எளிமையாக சுருக்கமாக விளக்கி உள்ளீர்கள் ஐயா.
    இதைப் போல, தமிழறிஞர்கள் அன்றே எழுதியிருந்தால்
    தமிழ் இன்று உச்சத்தில் இருந்திருக்கும் ஐயா
    நன்றி

    ReplyDelete
  36. சைவ சித்தாந்தம் குறித்து நல்ல அறிமுகம். இங்கே சைவ சித்தாந்த மாநாட்டுக்கு ஒருமுறை சென்றிருந்தேன். புரிந்தும், புரியாததாக இருந்தது. ஒன்றும் பிடிபடவில்லை. நன்றி.

    ReplyDelete
  37. மறுமொழி > கரந்தை ஜெயக்குமார் said...

    சகோதரர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  38. மறுமொழி > Packirisamy N said...

    சகோதரர் பக்கிரிசாமி.N அவர்களின் கருத்துரைக்கு நன்றி!

    // சைவ சித்தாந்தம் குறித்து நல்ல அறிமுகம். இங்கே சைவ சித்தாந்த மாநாட்டுக்கு ஒருமுறை சென்றிருந்தேன். புரிந்தும், புரியாததாக இருந்தது. ஒன்றும் பிடிபடவில்லை. நன்றி. //

    சைவசித்தாந்தம் என்பது தத்துவ இயல். உவமான உவமேயங்கள், கதைகள் மூலம் சொன்னால் கேட்பவருக்கு ஆர்வமாக இருக்கும். ஆனால் சொல்பவர் நேரடியாக சரியை, கிரியை என்று ஆரம்பித்தால் எழுந்து போகத்தான் தோன்றும்.


    ReplyDelete
  39. சித்தாந்தம் நான் புலவர் (வித்துவான்) படித்தபோது எனக்குப் பாடமாக இல்லை! மேலும் எனக்கு அதில் அவ்வளவு ஈடுபாடு இல்லை! உங்கள் சுருக்கமான விளக்கம் அருமை!

    ReplyDelete
  40. மறுமொழி > புலவர் இராமாநுசம் said...

    புலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி!

    ReplyDelete
  41. சுருங்கச்சொன்னாலும் விளக்கமாக சொல்லிவிட்டீர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  42. மறுமொழி > வே.நடனசபாபதி said...

    // சுருங்கச்சொன்னாலும் விளக்கமாக சொல்லிவிட்டீர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி! //

    அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி ( இன்று வேறொரு விஷயமாக இந்த பதிவினுக்கு வந்த போது, உங்கள் கருத்துரைக்கு மறுமொழி தராததை அறிந்து , இப்போது நன்றி சொன்னேன். கால தாமதத்திற்கு மன்னிக்கவும்)

    ReplyDelete