Wednesday 1 February 2012

கட்டாய ஹெல்மெட்: போலீசாரின் கெடுபிடிகள் தேவையற்றது.


முன்பெல்லாம் ஒரு துறை சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு அந்தந்த அமைச்சர்களைத் தவிர வேறு யாரும் வெளியில் பேட்டி தர மாட்டார்கள். மாவட்ட கலெக்டர்கள் கூட வாய் திறக்க மாட்டார்கள். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு வலுவானதாக இருந்தது. தி.மு.க ஆட்சி காலம் தொடங்கி இப்போது தலை கீழாகப் போய்விட்டது. இப்போதெல்லாம் காவல் துறையினர்தான் பேட்டி கொடுக்கிறார்கள். உள்ளூரில் சில பெரிய மனிதர்கள்! நடத்தும் கடை திறப்புவிழா , காது குத்தும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதோடு அரசாங்க அறிவிப்புகளும் செய்கிறார்கள்.  மாவட்ட நிர்வாகத்தினர் யாரும் கருத்து சொல்வதில்லை. இதற்கு ஒரு உதாரணம் கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமுல்படுத்துவதில் போலீசார் காட்டும் அதிக ஆர்வம் மற்றும் கெடுபிடிகள்.

பல மாவட்ட கலெக்டர்கள் யாரும் புதிதாக வரும்போது எந்த அதிரடி அறிவிப்பும் செய்வதில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு காவல் அதிகாரி பதவி ஏற்கும்போதும் தவறாமல் சொல்லும் வாசகம் “ ஒண்ணாம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும்என்பதுதான். உடனே ஹெல்மெட் வியாபாரம் சூடு பிடித்து விடும். ஆங்காங்கே பதினெட்டு வயது நிரம்பாத பள்ளி மாணவ, மாணவியரைக் கொண்டு விழிப்புணர்வு என்ற பெயரில் ஊர்வலங்கள் விடுவார்கள்.  அவ்வாறு ஹெல்மெட் போடாமல் வண்டி ஓட்டும் எல்லோரையும் பிடித்து அபராதம் போடுகிறார்களா என்றால் அதிலும் பாரபட்சம்தான்.  அப்பாவிகள்தான் மாட்டுகிறார்கள். இதிலும் சிலர் காசு பார்த்து விடுகின்றனர்.

நமது நாட்டில் தொட்டதெற்கெல்லாம் இரு சக்கர வண்டியைத் தான் பயன்படுத்த வேண்டியுள்ளது. பிள்ளைகளைப் பள்ளி கல்லூரி அழைத்துச் செல்ல, அலுவலகம் செல்ல , அவசர பொருட்கள் வாங்க என்று எல்லாவற்றிற்கும் தேவைப் படுகிறது. நமது நாட்டில் பஸ் கட்டணத்தையும் கும்பலையும் பார்த்தால் பயணம் செய்ய யோசிக்க வேண்டியுள்ளது. பஸ்ஸில் சென்று வருவதற்குள் ஒரு நாள் ஆகிவிடுகிறது. பஸ் வசதியும் அடிக்கடி கிடையாது. இரு சக்கர வண்டியை எடுத்தால் ஹெல்மெட் போட்டாயா என்று கேள்வி. ஹெல்மெட் போடுவது குறித்து இரு வேறு கருத்துக்கள் உள்ளன.

வெளியூர் பயணத்திற்கு செல்லும் முன் இரு சக்கர வண்டிகளை ஸ்டாண்டில் விடும்போது ஹெல்மெட்டைப் பத்திரப் படுத்துவதற்கு படாதபாடு பட வேண்டியுள்ளது. சில ஸ்டாண்டுகளில் ஹெல்மெட் வைக்க தனி கட்டணம் வேறு வசூல் செய்கிறார்கள். சில ஸ்டாண்டுகளில் ஹெல்மெட்டை வைக்க அனுமதிப்பதில்லை. வண்டியை வைத்துவிட்டு கையோடு எடுத்துச் செல்லும்படி சொல்கிறார்கள். பிச்சைப் பாத்திரம் போன்று எங்கு சென்றாலும் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.  ஹெல்மெட் அணிவதால் பின்பக்கம் வரும் வண்டிகளின் சத்தம் கேட்பதில்லை. பலருக்கு ஹெல்மெட் அணிவதால் தலை சுற்றல், முடி உதிர்தல், தலை அரிப்பு போன்ற பிரச்சினைகள். இரு சக்கர வண்டி ஓட்டும் பெண்கள் ஹெல்மெட் அணிவதால் உண்டாகும் சங்கடங்கள் சொல்லவே முடியாது. அவ்வள்வு கஷ்டம். இவ்வளவு பிரச்சினைகளுக்கு இடையில் ஹெல்மெட் அணிந்தால் மட்டுமே விபத்தில் இருந்து தப்பிக்க முடியுமா? ஹெல்மெட் அணிந்தவர்களே விபத்தில் சிக்கி உயிர் இழப்பதை செய்திகளாக பார்க்கிறோம். இப்போது புதிதாக ஹெல்மெட் அணிந்த குற்றவாளிகள் வேறு  உருவாகியுள்ளனர்.

சாலையில் நின்று கொண்டு ஹெல்மெட் போடாதவர்களை ஏதோ தீவிரவாதிகளை துரத்துவது போல் பிடிக்கிறார்கள். அரை பாடி மணல் லாரியில் லைசென்ஸ் இல்லாமல் வேகமாகச் செல்லும் கிளீனர்கள், கறுப்புக் கண்ணாடியை ஏற்றிக் கொண்டு விரைந்து செல்லும் கார்கள், சிக்னலை மதிக்காமல் செல்லும் அரசு அதிகாரிகளின் கார்கள், நான்கு வழிச் சாலையில் விதிகளை மதிக்காத வாகனங்கள், இரவில் பிரகாசமான விளக்குகளில் வரும் வாகனங்கள், செல் போனில் பேசிக் கொண்டு வண்டி ஓட்டுதல் இவைகளைக் கண்டு கொள்வதே கிடையாது. சாலைகளில் ஒழுங்கான பராமரிப்பு இல்லை. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம் டிபார்ட்மெண்ட்டிற்கு கேஸ் பிடிக்க வேண்டும் என்பதுதான். உண்மையிலேயே அவர்களுக்கு போக்குவரத்தில் அக்கறை இருந்தால் எல்லாவற்றையும் செய்ய வேண்டும். சுலபமான வழி இரண்டு சக்கர வண்டியில் செல்பவனைப் பிடி என்பதுதான்.  அவன் பாவம் செய்தவன். மன்னிப்பே கிடையாது.

சென்ற பொதுத் தேர்தலில் இளைஞர்கள் பல்ரும் திமுகவிற்கு எதிராக வாக்களித்தற்கு முக்கிய காரணம் இந்த ஹெல்மெட் சட்டத்தில் போலீசார் செய்த கெடுபிடிதான். ஏனெனில் கட்டாய ஹெல்மெட் விஷயத்தில் ஆட்சியாளர்கள் அமைதியாக இருந்தாலும் இவர்கள் சும்மா இருப்பதில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் நாங்கள்தான் என்பதைப் போல உள்ளது. கட்டாய ஹெல்மெட் விஷயத்தில் அரசின் நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

குடி குடியைக் கெடுக்கும் என்று சொல்லிக் கொண்டே சாராயக் கடைகள். புகை பிடித்தல் தீமையானது என்று சொல்லிக் கொண்டே பீடி, சிகரெட் வியாபாரம். அவற்றின் மீது அரசாங்க வரிகள்.   இவைகளைவிட ஹெல்மெட் போடுவதை  மட்டும் ஏன் கட்டாயப் படுத்த வேண்டும்? உண்மையில் இதில் சட்டத்தின் பின்னால்  ஒளிந்திருப்பது நிர்வாகத்தில் யார் பெரியவர் என்ற “ஈகோதான்.

(  Picture  thanks to GOOGLE )













6 comments:

  1. விரிவான அருமையான பதிவு
    தெருவுக்கு தெரு பார்களைத் திறந்துவைத்துவிட்டு
    குடிப்பதும் குடிக்காததும் அவனவன் தலையெழுத்து என
    புறங்கைகட்டி நிற்கும் அரசு இதில் மட்டும்
    அதிக அக்கறை கொள்வதேன்
    அதிக சாலை விப்த்துக்குக் காரணம்
    மோசமான சாலைகளும் குடிபோதையும்தான்
    இதற்கு முதலில் நடவடிக்கை எடுக்கட்டும்
    எடுத்துக் கொண்ட விஷயமும்
    சொல்லிச் செல்லும் விதமும் மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. //Ramani said... //

    வணக்கம்! ரமணி சார்! தங்கள் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  3. சென்னை சாலைகளில் 3 வயது குழந்தையை பெட்ரோல் டேங்கின் உட்கார்த்திவைத்து அது சாலை தூசியை மூக்கிலும் இழுத்து கண்ணில் விழும் தூசியை துடைக்கமுடியாமல் திண்டாடும் பாருங்கள் செம ஜோரா இருக்கும். அப்படியே வண்டியை நிப்பாட்டி ஓட்டுபவனை பொளேர் என்று அறையனும் போலும் தோனும், என்ன செய்வது நாம் ஜனநாயக நாட்டில் இருக்கோமே, இவர்கள் இப்படி செய்வதற்கு அரசாங்கமும் ஒரு காரணம் என்பது தெரிகிறதே.சென்னை சாலைகள் அதன் போக்குவரத்துக்கள் தினமும் சர்க்கஸ் காட்சிகள் தான்.
    ஒரு ஹெல்மெட் அதை முறைப்படுத்த நாம் எவ்வளவு தகினித்தோம் போடுகிறோம் என்று பார்க்கும் போது ஒன்று மட்டும் தோனுகிறது....நாம் போக வேண்டிய தூரம் வெகு அதிகமாக இருக்கிறது.

    நம் நடத்தை தான் நம் சந்ததியருக்கு வழிகாட்டி, இதை உணர்ந்தால் ஹெல்மெட் ஒரு பிரச்சனையில்லை.

    ReplyDelete
  4. ஹெல்மெட் போடுவதில் உள்ள நீங்கள் சொன்ன சிரமங்கள் அனைத்தும் உண்மை. அதற்காக ஹெல்மெட் போடும்படி கட்டாயப்படுத்தக்கூடாது என்பது சரியில்லை. தலையில் அடிபட்டு உயிர் போவதை தடுக்க ஹெல்மெட் போடுவது கட்டாயம் செய்ய வேண்டும். அதில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் வழிகளை கண்டு பிடிக்க வேண்டும்.
    அதே போல, மற்ற பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் இதை மட்டும் கவனிப்பது ஏன் என்பதும் சரியில்லை. நீங்கள் அணுகுவது ஹெல்மெட் பிரச்சனையை மட்டுமே தவிர மற்றவை அல்ல. அப்படி பார்த்தால் உணவில்லாமல் தவிக்கும் மக்களை தான் முதலில் கவனிக்க வேண்டும். மற்றவை யாவுமே அந்த அளவு பெரிய பிரச்சனையை அல்ல!.

    ReplyDelete
  5. Reply to வடுவூர் குமார் said...
    //ஒரு ஹெல்மெட் அதை முறைப்படுத்த நாம் எவ்வளவு தகினித்தோம் போடுகிறோம் என்று பார்க்கும் போது ஒன்று மட்டும் தோனுகிறது....நாம் போக வேண்டிய தூரம் வெகு அதிகமாக இருக்கிறது.//

    வணக்கம்! முன்பு சைக்கிளில் டபுள்ஸ் வருபவர்களைப் பிடித்தார்கள். சைக்கிள் ஓட்டுபவனிடம் சைக்கிளில் மணி இருக்கிறதா, பிரேக், விளக்கு இருக்கிறதா என்று கேட்டு அபராதம் போட்டார்கள். பல பேரிடம் காசு வாங்கிக் கொண்டு கேஸ் போடவில்லை. எம்ஜிஆர் தனது ஆட்சிக் காலத்தில் சைக்கிளில் செல்பவர்கள் ( குறிப்பாக நடுத்தர மக்கள் ) கஷ்டம் போக்க அந்த சட்டத்தையே நீக்கினார். இப்போது கட்டாய ஹெல்மெட் விஷயம். போலீஸாரின் தவறான மற்றும் பாரபட்சமான அணுகுமுறை அன்று போல் இன்றும் உள்ளது. தங்கள் வருகைக்கும் நல்ல கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  6. Reply to bandhu said...

    வணக்கம்! நமது நாட்டிலுள்ள சாலைகளின் நிலைமை வாகனங்கள் அதிக வேகமாக செல்ல ஏற்றவை அல்ல. நமது நாட்டில் அதி வேக இரு சக்கர வண்டிகளை போட்டி போட்டுக் கொண்டு கம்பெனிகள் உற்பத்தி செய்கின்றன. விளம்பரம் செய்கின்றன. இளைஞர்கள் இதில் கவரப்படுகிறார்கள். அதி வேக இரு சக்கர வண்டிகள் உற்பத்திக்கு தடை போட வேண்டும். இதைச் செய்தாலே பாதி விபத்துக்களை குறைக்கலாம். இங்கு கட்டுரையின் பிரதான நோக்கமே கட்டாய ஹெல்மெட் கெடுபிடிகள் பற்றித்தான்.

    // ஹெல்மெட் போடுவதில் உள்ள நீங்கள் சொன்ன சிரமங்கள் அனைத்தும் உண்மை. அதற்காக ஹெல்மெட் போடும்படி கட்டாயப்படுத்தக்கூடாது என்பது சரியில்லை. தலையில் அடிபட்டு உயிர் போவதை தடுக்க ஹெல்மெட் போடுவது கட்டாயம் செய்ய வேண்டும். அதில் உள்ள சிக்கல்களை தீர்க்கும் வழிகளை கண்டு பிடிக்க வேண்டும். //

    என்ற மனித நேயத்தோடான தங்கள் கருத்துரைக்கு நன்றி! விபத்தில் சிக்கும் ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இன்சூரன்ஸ் பணம் கிடையாது என்று சட்ட திருத்தம் செய்யலாம். அதிலும் ஹெல்மெட் போட்டு இருந்தாரா இல்லையா என்று சான்றிதழ் தருவதில் காசு பார்த்து விடுவார்கள். மேலும் ஹெல்மெட் போடுவது குறித்து இரண்டு விதமான கருத்துக்களும் உள்ளன.
    எனது வலைப் பதிவிற்கு வந்தமைக்கும் கருத்துரை சொன்னமைக்கும் மீண்டும் நன்றி!

    ReplyDelete