பி.ஏ. படிக்கும்போதும், எம்.ஏ. படிக்கும் போதும் ஐந்து ஆண்டுகள் கல்லூரிகளுக்குப் போக, வர தினமும் ரெயில் பயணம்தான். திருச்சி ஜங்ஷனில் இறங்கி கொஞ்சம் தொலைவில் உள்ள கல்லூரிகளுக்கு நடைதான். அப்புறம் வேலை கிடைத்த பிற்பாடும், வேலை கிடைத்த முதல் மூன்று ஆண்டுகள் திருச்சியைத் தாண்டி மணப்பாறை வரை தினமும் ரெயில் பயணம் தொடர்ந்தது.
ரெயில்வே ஜங்ஷனில் விதம் விதமான நபர்களை சந்திக்கலாம். ஆனால் எல்லோரும் பரபரப்பாக இருப்பார்கள். அதிலும் பிளாட்பாரத்தில் வண்டி நுழையும் போதும் வண்டி கிளம்பும் வரையும் அதிக பரபரப்பும், அதிக இரைச்சலும் இருக்கும். வண்டி புறப்பட்டுச் சென்றதும் கொஞ்சநேரம் அமைதிக்குப் பின் அடுத்த வண்டியின் பரபரப்புக்கு பிளாட்பாரம் தயாராகிவிடும்.
இவ்வளவு இரைச்சல் பரபரப்புக்கும் இடையில் எதைப் பற்றியும் கவலைப் படாமல் சிலர் பிளாட்பாரத்தின் ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டும் நின்றுகொண்டும் தனக்குத் தானே பேசிக் கொண்டும் இருப்பார்கள். அல்லது யாரேனும் ஏதாவது தின்பதற்கு தரமாட்டார்களா என்று பரிதாபமான விழிகளோடு பிளாட்பார கேண்டீன் அருகே நின்று கொண்டு இருப்பார்கள். என்னைப் போன்றவர்கள் அவர்களுக்கு ஏதேனும் தின்பதற்கு வாங்கிக் கொடுப்போம் . அங்கு வரும் துப்புரவுத் தொழிலாளி அவர்களை விரட்டிக் கொண்டு இருப்பார். அவர்கள் பைத்தியங்கள். பெரும்பாலும் பெண்கள். இதில் குறிப்பிடத் தக்க விஷயம் என்ன என்றால் அந்தப் பைத்தியமான பெண்கள் பெரும்பாலும் வட இந்திய உடை அணிந்த நாற்பது அல்லது ஐம்பது வயதைக் கடந்த பெண்களாகவே இருப்பார்கள். நாம் சொல்லுவது அவர்களுக்கு புரியாது. அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதனை நம்மால் புரிந்து கொள்ளவும் முடியாது. அந்தப் பக்கம் வரும் வட இந்திய பயணிகளும் இந்தி தெரிந்தவர்களும் நமக்கேன் வம்பு என்று ஒதுங்கிச் சென்று விடுவார்கள்.
ஒருமுறை அங்கு பணிபுரியும் தொழிலாளி ஒருவரை விசாரித்ததில் அவர் சொன்ன தகவல். ” வட இந்தியாவில் இருந்து வரும் சில பயணிகள், வீட்டில் தொந்தரவாக இருக்கும் வயதான பைத்தியம் பிடித்த பெண்களையும் அழைத்து வருவார்கள். அந்த மன நோயாளிப் பெண்களை வீட்டில் வைத்து பராமரிக்க இயலாத சூழ்நிலை அல்லது மருத்துவ செலவு செய்ய முடியாத நிலை இருக்கும். வைத்தியம் பார்த்தாலும் குணம் ஆகாது. ஊரில் கோயில் குளம் அழைத்துச் செல்வதாகச் சொல்லி அழைத்து வருவார்கள். பின்பு, அவர்களை இராமேஸ்வரம் போன்ற கோயில் உள்ள ஊர்களிலோ அல்லது வழியில் இதுபோன்ற பெரிய ரெயில்வே நிலையங்களிலோ விட்டுவிட்டுப் போய்விடுவார்கள். சொந்த ஊரில் போய் காணாமல் போய்விட்டதாகவும், எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்றும் பொய் சொல்லி விடுவார்கள். நாங்கள் இதுபோன்ற பெண்களை விரட்டவும் முடியாது. சமூக தொண்டு செய்யும் ஆட்களிடம் கொண்டு போய் விடவும் முடியாது. இவர்களிடம் தப்பாக நடந்து கொள்ளும் ஆசாமிகளும் இருக்கிறார்கள். ஒருவர் போனால் இன்னொரு மனநோயாளி வந்து கொண்டே இருப்பார். எனவே இரவில் கடைசி நேர பாசஞ்சர் ரெயில் எங்கு செல்கிறதோ அதில் ( பெரும்பாலும் இராமேஸ்வரம் ரெயிலில் ) ஏற்றி விட்டுவிடுவோம். அவ்வாறு போனவர்களில் சிலர் மறுபடியும் இங்கேயே வந்து விடுவதும் உண்டு. என்ன பண்ணுவது.” என்றார்.
இப்போதும் ரெயில்வே நிலையங்களிலோ அல்லது அதன் அருகிலுள்ள பேருந்து நிலையங்களிலோ இதுமாதிரி வயதான, வட இந்திய அல்லது மொழி தெரியாத பைத்தியம் பிடித்த பெண்களைப் பார்க்க முடிகிறது. பரிதாபமாக உள்ளது. அந்த ஊழியர் அன்று, முப்பது வருடங்களுக்கு முன்பு சொன்ன அன்றைய நிலைமை இப்போதும் உள்ளது போல் தெரிகிறது.
நீங்கள் சொல்வது சரி
ReplyDeleteஇங்கு எங்களூரில் இரயில் நிலையங்களில் திரிபவர்கள்
அதிகம்பேர் வட நாட்டவர்களாய்த்தான் இருக்கிறார்கள்
இதற்கு என்ன தீர்வு எனத்தான் புரியவில்லை
Reply to // Ramani said... //
ReplyDeleteவணக்கம்! வட இந்தியர்கள் சுற்றுலா அதிகம் வரும் மதுரை, இராமேஸ்வரம் போன்ற கோயில் நகரங்களில்தான் இவர்கள் அதிகம். இதற்கு தீர்வு சமூக நல அதிகாரிகள் அரசுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!
Tha.ma 1
ReplyDelete