Sunday, 19 February 2012

புதுக் கவிதையின் வடிவம்.


அப்போது கவிதையை செய்யுள் என்று அழைத்தனர். நேர் நேர் என்றும் நிரை நிரை என்றும் இலக்கண உத்திகளை பார்த்து பார்த்து எழுதவில்லை. தளை தட்டாமல் எல்லாம் இயல்பாகவே முன்பெல்லாம் கவிதை பாடுவது என்றால், மரபுக் கவிதைதான். வந்தது. காரணம் இசையோடு இணைந்து பாடல்கள் புனையப் பட்டதுதான். இப்போது நாம் கணிணியில் தட்டச்சு செய்கிறோம். கணிணிப் பணிகளைச் செய்கிறோம். இவைகள் பழக்கத்தின் காரணமாக இயல்பாக வருகின்றன. அதே போன்று அப்பொழுது மரபுக் கவிதைகளின் இலக்கணம் எது என்பதனை யோசித்து, யோசித்து எழுதாமல் பழக்கத்தின் காரணமாக இயல்பாக எழுதினர்.

பெரும்பாலும் வார்த்தைகளை நீட்டியும் மடக்கியும் எதுகை மோனையோடு ஒரு கருத்தை உள்ளடக்கி சொல்லும்போது புதுக் கவிதை தோன்றி விடுகிறது. உணர்ச்சிகளை உள்ளபடியே கொட்டுவது புதுக்கவிதை.  புதுக் கவிதைகளை வசன கவிதைகள் என்றும் சொல்கிறோம்.  எல்லா புதுக் கவிதைகளையும் ராகத்தோடு பாட முடிவதில்லை. இசை அமைத்து பாடும்போது தட்டுகின்றன. மரபுக் கவிதைக்கும் புதுக் கவிதைக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். இலக்கணம் உள்ளது மரபுக் கவிதை. இலக்கணம் மீறியது புதுக் கவிதை. அரசியலில் மேடைப் பேச்சிற்கு கவர்ச்சி அதிகம் தேவைப் பட்ட போது புதுக்கவிதைகள் பட்டி மண்டபம் வரை புது அவதாரம் எடுத்தன.

மகா கவி சுப்ரமண்ய பாரதியார் இரண்டிலும் வல்லவர். கவிஞர்கள் கண்ணதாசன், வாலி போன்றவர்களது  பாடல்கள் இன்னும் நிலைத்து நிற்கக் காரணம் நல்ல இசையமைப்பு தான். அவர்களும் இசையமைப்பதற்கு தகுந்தாற் போல தங்கள் பாடல் வரிகளில் திருத்தங்கள் செய்தனர். மேலும் இருவரும் இசைப் புலமையும் உள்ளவர்கள்.

மக்களின் வாழ்க்கையோடு இணைந்த இலக்கியத்திலிருந்து தோன்றியதுதான் இலக்கணம். “பழையன கழிதலும் புதியன புகுதலும் “ ( நன்னூல்) என்ற வாக்கியத்தின்படி தமிழ் இலக்கியத்தில் புதுக் கவிதையின் தாக்கத்தினை ஏற்றுக் கொள்வோம். பெரும்பாலும் புதுக் கவிதைகள் அகவற்பா எனப்படும் ஆசிரியப்பா வகையின் மறு வடிவங்களாகத்தான் உள்ளன. சங்க இலக்கியமான குறுந்தொகைப் பாடல்களின் வடிவமும் இன்றைய புதுக் கவிதைகளின் வடிவமும் ஒன்று போலவே இருக்கும். எடுத்துக் காட்டாக கீழே உள்ள பாடல்.

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

                                                                    -  செம்புலப்பெயனீரார்.

(தலைவன் தன்னை விட்டுப் பிரிந்து விடுவானோ என்று தலைவி அஞ்சுகிறாள். அவளது முகக் குறிப்பினை உணர்ந்த தலைவன் கூறிய பாடல்)

முன்பெல்லாம் பத்திரிக்கைகளுக்கு கவிதை எழுதி அனுப்பினால் நமது கவிதைகளை வெளியிடுவார்களா என்ற ஏக்கம் இருக்கும். அப்படியே வந்தாலும் அதன் ஆசிரியர் கைவண்ணத்தில் எடிட்  செய்துதான் வரும். இப்போது வலைப் பதிவில் கவிஞர்களின் புதுக் கவிதைகள் சுடச் சுட வந்துவிடுகின்றன. அவைகளில் சிலவற்றை காணலாம்.  ( புதுக் கவிதை பிதாமகர்களின் கருத்துக்களையோ கவிதைகளையோ இங்கு எழுத ஆரம்பித்தால் கட்டுரை நீண்டு விடும் என்பதால் எழுதவில்லை)

தொடர் பயணம்  என்ற  தலைப்பில்  வாழ்க்கையைப் பற்றி மதுரைக் கவிஞர் எழுதிய வரிகள் ---

  தேடலும் பயணிப்பதுமே
  வாழ்க்கையேயன்றி
  ஒன்றை அடைதலும் இல்லை
  ஒன்றில் அடைதலும் இல்லை
  இதில்  எனக்கு எவ்வித குழப்பமுமில்லை

-         கவிஞர் ரமணி (தீதும் நன்றும் பிறர்தர வாரா)

பனிமூடும் மார்கழியின் பின்னே என்ன வரும்? இதற்கு விடை தருகிறார் திருவரங்கத்தில் பிறந்த கவிஞர் ஒருவர்.

  பனிமூடும் மார்கழியின் பின்னே-பொங்கல்
  பரிசாகத்தான் இங்கு வருமே பெண்ணே!
  இனிதான தமிழர்திருநாளாம் இதற்கு
  ஈடுண்டோ வேறேதும் சொல்வாய் பெண்ணே!

-         கவிஞர் ஷைலஜா (எண்ணிய முடிதல் வேண்டும்)

பெரும்பாலும் கவிஞர்களுக்கு தனது ஊர்ப் பெருமை பற்றி பேச பிடிக்கும் நானும் எனது ஊரும் என்ற தலைப்பில்  பாரதிதாசன் வழியில் அழகின் சிரிப்பாய் ஒரு கவிஞர் -
  
    மாமரத்து குயில் ஓசை,
    மஞ்சு விரட்டிய மைதானம்,
    மலர் தேடும் வண்டுகள்,
    ஊஞ்சல் ஆடி விழுந்த ஆலமரம்,
    ஒரே ஒரு முறை ஊருக்குள் வந்து
    போகும் ஒற்றை பேருந்து!
          
                                                 - கவிஞர் சசிகலா ( தென்றல் )
      

சொல் மனமே சொல் என்ற தலைப்பில் மனதை ஆற்றுப் படுத்துகிறார் ஒரு கவிஞர் -

    சரியோ..
  தவறோ
  எதுவாயினும்
  சொல் மனமே சொல்
  நடப்பவை யாவும் நன்மைக்கே என்று

         - கவிஞர் யசோதா காந்த் ( இதமான தென்றல்)


குழந்தைகள் இல்லாத வீடு எப்படி இருக்கும்? சுத்தமும் அமைதியுமே எனக்கு நரகம் என்ற தலைப்பில் நெஞ்சில் ஒரு முள்ளாய், கனத்த இதயத்தோடு  கவிதை வரிகள்.

  வீடு முழுக்க சுத்தமும்
  அறைகள் தோறும் அமைதியுமே
   நரகமாய் இருந்தது
   குழந்தைகள் இல்லாத
   என் வீடு            - கவிஞர் கவிதைவீதி சௌந்தர்


ஒரு  பெண் குழந்தையை அதன் தாய் கொஞ்சுவதற்கும் தந்தை கொஞ்சுவதற்கும் நிரம்ப வித்தியாசம் உண்டு. தாயுள்ளத்தோடு குழந்தையை கொஞ்சும் பெண் கவிஞரின் வார்த்தைகளைப் பாருங்கள்!

  குட்டை வண்ணச் சட்டையிலே
  குதித்திரு கைதட்டி
  கும்மாளம் இடுகையிலே எனதுள்ளம்
  குதிக்குதடி விண்ணோக்கி

  கட்டி அணைக்கையிலே கள்ளி! நீ தந்த
  கன்னத்து முத்தமதில்
  என்னுள்ளம் கொள்ளை போகுதடி
  உள்ளமெல்லாம் துள்ளல் கொள்ளுதடி
          
               - கவிஞர் சந்திரகௌரி ( Kowsy Blog )

மதுரை சரவணன் கல்விச் சிந்தனை கொண்ட ஆசிரியர். அவர் தனது கிறுக்கல்கள் என்ற கவிதையில்

எத்தனை முறை வெள்ளையடித்தாலும்
கழிப்பறை சுவர்கள்
ஏதோ ஒரு மாணவனின்
மனக்குமுறலுக்கான
கிறுக்கலுக்காக
காத்துக்கிடக்கின்றன….           மதுரை சரவணன்
  
தாள ஸ்வரங்கள் “ என்ற தலைப்பில் ஒரு கவிஞர், தெருவில்
தோல் கருவியை இசைத்து வித்தைகள் செய்து காசு கேட்கும் சிறுவர்கள் குறித்து …….

காலிவயிற்றின் உறுமல்களை
எதிரொலித்த வாத்தியங்களும்
தன்னிலை மறந்து
தாளமிட்ட கால்களும்
ஓய்வெடுக்கும்
சிலஇடைக்காலத்துளிகளில்,
மெல்லியதாய் முனகிக்கொள்கின்றன
தட்டில்விழும் வட்ட நாணயங்கள்;
ஸ்வரம் தப்பாமல்
இறைஞ்சும் குரலுடன் இழைந்து..

                             -    கவிஞர் அமைதிச் சாரல் (கவிதை நேரமிது)

மேலே சொன்ன கவிதைகளின் வடிவம் அகவற்பா  அதாவது ஆசிரியப்பா வடிவிலேயே அமைந்துள்ளன.( நேர், நிரை எனப்படும் தளைகள் மாறுபடலாம்.) எனது இந்தக் கருத்தில் மற்றவர்கள் மாறுபடலாம்.

இளம்வயது மாணவனாக  இருந்தபோது தமிழார்வம் காரணமாக மரபுக் கவிதைகளையும், புதுக் கவிதைகளையும் பக்கம் பக்கமாய்  எழுதியது ஒரு காலம். அவை போன இடம் தெரியவில்லை. இப்போது ஒன்றிரண்டு புதுக் கவிதைகள் வலைப் பதிவில் எழுதுகின்றேன், எனது ஆத்ம திருப்திக்காக.

    குழந்தையின் மனதில் நிகழ் காலம்!
    இளைஞனின் மனதில் எதிர் காலம்!
    முதியவனின் மனதில் கடந்த காலம!
    எந்த காலம் என்றாலும்
    நம்பிக்கையில்தான் நமது காலம்
    நகர்ந்தே செல்கின்றது! 
               
                    -  வாழ்க்கையே போராட்டமாய்! (  எனது எண்ணங்கள் )




18 comments:

  1. கவிதை எழுதும் நல்ல பதிவர்களை புதுமாதிரியாக
    தங்கள் பதிவில் அறிமுகம் செய்தமைக்கு வாழ்த்துக்கள்
    யாதோ என்கிற பெயரில் ஏதோ எழுதும்
    என்னையும் அறிமுகம் செய்தமைக்கு
    மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  2. வாசித்துக்கொண்டிருக்கிறேன் விரைவில் வந்து கருத்திடுகிறேன் மிக்க நன்றி

    ReplyDelete
  3. நல்லதொரு சிந்த்னையில் வடிக்கப்பட்டுள்ள கட்டுரை இது .மரபுக்கவிதை காலத்தால் அழியாதது. ஆனால் கால மாறுபாட்டில் புதுக்கவிதைகள் பலரைக்கவர்ந்துள்ளன மரபின் இலக்கணம் புள்ளிகளுக்குள் கட்டுப்பட்ட கட்டான கோலம் புதுக்கவிதைகள் கற்பனைகளை இலக்கணவிதிமுறைகளைமீறி விரித்துப்பறந்து சொற்களை அடுக்கும் நவீன கட்டிடக்கலை! கோபுரங்களும் ரசிக்கப்படுகின்றன அடுக்குமாட்டிக்கட்டிடங்களும் கவர்கின்றன ஆனால் கோபுரம் கோபுரம்தானே?!
    சங்ககாலக்கவிதைகள் குறுந்தொகை ஏன் திருவாசகம் பாசுரங்கள் வாசித்தபிறகு நானும் கவிதை எதற்கு எழுதுகிறேன் என்று என்னை நானே நினைத்து மருகியதுண்டு! ஆனாலும் பயிற்சிக்காக எழுதிக்கொண்டிருக்கவேண்டிய சூழ்நிலை:)
    இன்றைய புதுக்கவிதைகள் பல நீங்கள் இங்கே அளித்திருப்பவைகளையும் சேர்த்து மனசை உலுக்கும் சக்தி கொண்டவைகளாகவும் உள்ளன.குழந்தைகள் இல்லாதவீடு என்னை ரொம்பவே பாதித்தது இங்கே!அனைத்தையும் வாசித்து தங்களின் மேலான கருத்தோடு இங்கு அளித்துப்பெருமைப்படுத்திய தங்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  4. Reply to // Ramani said //

    வணக்கம்! கவிஞர் ரமணி அவர்களே நீங்கள் ஏதோ என்று கவிதை எழுதவில்லை. உள்ளத்தில் உள்ளதை ,சில சமயம் வார்த்தைகளின் உணர்ச்சிப் பெருக்கில் சிக்ககுண்டவராக நன்றாகவே படிக்கின்றீர். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  5. தென்றலின் அறிமுக வாரமிது போலும் , நன்றிங்க
    அருமையான ஒரு பதிவு . வாழ்க்கையே போராட்டமாய் முடித்த விதம் அருமை . மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் கட்டுரை .

    ReplyDelete
  6. Reply to // ஷைலஜா சொன்னது //

    வணக்கம்! சகோதரி ஷைலஜா அவர்களே! புதுக்கவிதை தொடங்கிய காலம் முதல் இன்றுவரை உள்ள மரபுக் கவிதை – புதுக்கவிதை பற்றிய இலக்கிய சர்ச்சையை, தங்களின் இலக்கிய அனுபவம் காரணமாக சில வரிகளில், ஆணித் தரமான “ கோபுரம் கோபுரம்தானே” என்ற கருத்துடன், விமர்சனமாகத் தந்துள்ளீர்கள்! இன்னிசையாய் செந்தமிழாய் இருப்பவன் இறைவன் என்பதனை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  7. Reply to // SASIKALA said //

    வணக்கம்! சகோதரி சசிகலா அவர்களே! தங்கள் வருகைக்கும் மேலான கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  8. திரு .விமலன் அவர்கள் இரண்டாவது முறையாக தென்றலுக்கு பகிர்ந்த விருதை தங்களுக்கு பகிர்ந்துள்ளேன் . தென்றலுக்கு வருகை தரவும் .

    ReplyDelete
  9. // Reply to சசிகலா said //

    வணக்கம்! எனக்கு விருது தந்த சகோதரி தென்றல் சசிகலா அவர்களுக்கு நன்றி. உலவு.காம் இணைய தளத்தில் ஏதோ தொழில் நுட்ப கோளாறு போல் இருக்கிறது. அதில் இணைந்தவர்களது வலைப் பதிவின் உள்ளே செல்ல இயலவில்லை. எனவே உங்களுக்கும் உங்கள் பதிவின் மூலம் உடன் பதில் சொல்ல இயலவில்லை. பின்னர் எழுதுகிறேன். மன்னிக்கவும்! வருகைக்கும் விருது செய்தியை தெரியப் படுத்தியமைக்கும் மீண்டும் நன்றி!

    ReplyDelete
  10. வள்ளுவரையும் இளங்கோவையும், பாரதியையும் மேற்கோள் காட்டுகின்ற உலகத்திலே வாழ்ந்துகொண்டிருக்கும் எழுத்தாளர்களையும் இனம் காட்டிய உங்கள் பண்புக்கு முதலில் தலை வணங்குகின்றேன். 2 வாரங்களாக இணையம் தொழிற்படாத காரணத்தினால் உங்கள் பக்கம் வரமுடியவில்லை. என்னையும் அறிமுகப்படுத்தி மேலும் சில அறிமுகங்களையும் தந்தமைக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  11. நல்லதொரு பகிர்வு நண்பா..
    நானறிந்த
    நான் வியந்த வலையுலகக் கவிஞர்களின் கவிதைகளை ஒரே இடத்தில் படிக்கும் வாய்ப்பளித்தமை எண்ணி மகிழ்ந்தேன்..

    ReplyDelete
  12. Reply to // சந்திரகௌரி said//

    வணக்கம்! மின்வெட்டின் காரணமாக முன்பு போல் வலைப் பதிவின் பக்கம் செல்ல இயலவில்லை. தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  13. Reply to // Guna thamizh said //

    வணக்கம்! பேராசிரியர் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

    ReplyDelete
  14. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!
    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,
    தங்களது தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!
    வருக!
    வலைச்சரத்தில் கருத்தினை தருக!
    http://blogintamil.blogspot.fr/
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  15. வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

    இணைப்பு : http://blogintamil.blogspot.in/2015/03/blog-post_17.html

    ReplyDelete
  16. மறுமொழி > yathavan nambi said...

    இன்றைய வலைச்சரத்தில், எனது இந்த பதிவினை அறிமுகம் செய்து, நான் மேலும் தொடர்ந்து எழுதிட ஊக்கம் அளித்த அன்புச் சகோதரர் குழல் இன்னிசை - யாதவன் நம்பி (புதுவை வேலு) அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete
  17. மறுமொழி > திண்டுக்கல் தனபாலன் said...

    இந்த இனிய செய்தியினைத் தந்த சகோதரர் வலைச் சித்தர் – திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete