Saturday, 12 November 2011

திருச்சி : கவிமாமணி சாந்த.முத்தையாதிருச்சியில் வங்கிக் கிளை ஒன்றில் கணக்கு தொடங்க வந்த போது ஓய்வு பெற்ற பொதுப்பணித் துறை பொறியாளராகவே அவர் அறிமுகம் ஆனார். அழைப்பின் பேரில், அவர் பங்கேற்ற இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டேன். அப்போதுதான் அவருக்குள் இருந்த கவிதை வேகம், தமிழ் மீது கொண்ட காதல் எனக்கு தெரிய வந்தது. ஒரு சிலரைப் போல வார்த்தைகளை வெட்டி,ஒட்டி,மடக்கி எதுகை மோனை யோடு எழுதினாலே கவிதை என்று எழுதவில்லை. நல்ல கவிதைகளை உணர்வு பூர்வமாக வாசித்தார். 1936-இல் பிறந்த சாந்த. முத்தையா அவர்கள் இந்த வயதிலும் எழுதிக் கொண்டே இருக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரைச் சந்திக்க அவரது இல்லம் சென்றபோது அவர் எழுதிய கவிதை நூல்களைத் தந்தார். அந்த நூல்களிலிருந்து .. ..

கவிஞர் தான் கண்ட இயற்கையை இவ்வாறு வர்ணிக்கிறார்.

ஆற்றோரம் கரைதனிலே நடந்து சென்றேன்!
  அணியணியாய் தென்னைகளோ அடர்ந்து நிற்கும்!
நாற்புறமும் வேலியிட்ட தோட்டத் திற்குள்
  நல்லினிப்புப் பலாக்கனிகள் மரத்தில் தொங்கும்!
மேற்புறத்தே படர்ந்திருக்கும் மாம ரத்தின்
  மஞ்சள்செவ் வண்ணமாங் கனிகள் தொங்கும்!
நூற்றுக்கணக் கானகொய்யா நிறைந்து தொங்கும்!
  நன்மாது ளைகள்தா லாட்டம் ஆடும்!
                                                        (ஆற்றங் கரையினிலே, பக்கம் 1)

பாரதியார், பாரதிதாசன் என்று எல்லோரையும் பாராட்டிய கவிமாமணி அவர்கள் கண்ணதாசனை,

நல்ல தமிழ்ப்பாட்டை நாட்டில் திரைப்படத்தில்
மெல்லப் புகுத்தியவன் ; முத்தமிழில் சொல்லியவன்
பண்கள் பரிந்தொலிக்கும் பாடல்கள் பாடியவன்
கண்ணதாசன் நீதான் கவி!
                          (ஆற்றங் கரையினிலே,பக்கம் 38)
                              
என்று உச்சி முகர்கிறார்.அவரது நூல்கள் எங்கும் நல்ல தமிழ் விளையாடுகின்றது. மேலும் கவிஞர் தனது வாழ்க்கை அனுபவங் களையும், சீர்திருத்தக் கருத்துக்களையும், தலைவர்கள் பற்றியும்
கவிதைகளால் வார்த்துள்ளார்.

கவிஞர் சாந்த.முத்தையா அவர்கள் ஒரு பொறியாளர். அவர் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் “தூணக்கடவு அணை கட்டுமானப் பணியில் இருந்தபோது எழுதிய வரிகள் இதோ...

இரவுக் குளிரில் தொடர்ந்து போடும்
  கான்கிரீட்டையும் கலவி
  கான்கிரீட்டையும் நின்று
துரிதமாகப் போட வைத்து
  தளத்தை நிரப்பு வோம் உயர்
  தரத்தை  நிறுத்து வோம்!
                                     (மகிழ மலர்கள், பக்கம்.41)

கவிமாமணி சாந்த.முத்தையா எழுதிய நூல்களில் “அம்பேத்கார் காவியம் “ என்ற நூல் சிறப்பானது ( Master Piece ) ஆகும். பணியிலி ருந்து ஓய்வு பெற்றதும் இதனை எழுதியுள்ளார். அதில்,

ஊருக்கு வெளிப்புறத்தே ஒதுக்கி வைத்த
   ஊர்ச்சேரி யில்மட்டும் உறைதல் வேண்டும்!
ஊருக்குப் பொதுவான கோவி லுக்குள்
   உட்புகாமல் வெளிநின்றே வணங்க வேண்டும்!
ஊரிருக்கும் பள்ளியிலோ படிக்கச் சென்றால்
   ஓரத்து மூலையில்தான் அமர்தல் வேண்டும்!
ஊரிறந்த மாடுதூக்கிப் புதைத்தல் வேண்டும்!
   உழவாரக் கூலியென உழைத்தல் வேண்டும்!

என்று அக்கால தீண்டாமை குறித்து கண்ணீர் வடிக்கின்றார்.
(பக்கம் 2 ) நூல் முழுதும் டாக்டர் அம்பேத்கரின் வரலாறு. அம்பேத்கர் இறப்பை தாங்க மாட்டாதவராய்

தீண்டாதார் வாழ்வு யர்த்த
  தமது வாழ்க்கை யை-முற்றத்
  துறந்தவரின் மூச்சு காற்றில்
  தோய்ந்து விட்டதே1

என்று அரற்றுகிறார்.(பக்கம் 150)

கவிஞரின் நூல்கள் :
1.ஐந்தாண்டுத் திட்டத்தின் சாதனைகள்(1961) 2.சோலைப் பூக்கள் 3.காவிரி நீர் வெள்ளத்தடுப்பு பணிகளும் நீர்மேலாண்மையும் 4.மகிழ மலர்கள் 5.அம்பேத்கார் காவியம் 6.மலரும் நினைவுகள்
7.ஆற்றங்கரை தனிலே

கவிஞரின் முகவரி:
கவிஞர் Er.சாந்த.முத்தையா, 33/20 மல்லிகை இல்லம், கீதா நகர், அல்லித்துறை சாலை, திருச்சி 620 017. செல் எண்: 9843510447


No comments:

Post a Comment