Wednesday, 9 November 2011

வங்கிகளில் வாடிக்கையாளர்கள் படும்பாடு


(Photo Thanks to Tribune photo by Sayeed Ahmed)

முன்பெல்லாம் வாடிக்கையாளர்கள் பணம் கட்டவோ, எடுக்கவோ வங்கிக்குச் சென்றால். பணம் வாங்க, பணம் பட்டுவாடா செய்ய என்று தனித் தனியே காசாளர்கள் இருப்பார்கள். அவ்வளவாக நேரம் ஆகாது. ஆனால் இப்போதோ ஒரு நூறு ரூபாய் கட்டு வதற்கு கூட மணிக் கணக்கில் வரிசையில் நின்று கொண்டிருக்க வேண்டியுள்ளது. குறிப்பாக நகர்ப் புறங்களில்  உள்ள வங்கிகளில் எப்போதும் காசாளர்கள் முன்பு கூட்டம்தான். சிலசமயம்  கவுண்ட ரில் ஒரே சத்தம். பின்னால் உள்ள ஊழியர்கள்,அதிகாரிகள் கண்டு கொள்ளவே மாட்டார்கள். வங்கிகளில் கம்ப்யூட்டர் வந்த பிறகு விரைவான சேவை என்றார்கள். முன்பை விட இப்போதுதான் அதிக தாமதம் ஏற்படுகிறது.. காரணம் என்ன?

முன்பு பழைய முறையில் பணம் வாங்க, கொடுக்க என்று தனித் தனியே கவுண்டர்கள் இருந்தன. பணம் பெற்றுக் கொள்ள ஒரு கவுண்டரில் டோக்கன் வாங்க வேண்டும். பணம் தரும் காசாளர் அழைத்ததும் டோக்கனைத் தந்து விட்டு பணத்தை (அது சிறிய தொகையாக இருந்தாலும், பெரியதொகையாக இருந்தாலும்) பெற்றுக் கொள்வார்.அதே போல் டிராஃப்ட் எடுக்க, கணக்குகளில் வரவு வைக்க, பிற கணக்குகளுக்கு மாற்றம் செய்ய பணத்தை காசாளாரிடம் கட்டிய வுடன் அவர், பணம் கட்டிய ரசீதை பின்னால் உள்ள ஊழியர்களுக்கு அனுப்பி வைப்பார். வேலை முடிந்துவிடும். கம்ப்யூட்டர் வந்த பிறகும் இது நடைமுறையில்  இருந்து வந்தது. வாடிக்கையாளர் சேவை என்பது நன்றாகவே இருந்தது.

ஆனால் இப்போது முன்னால் உள்ள ஒரே ஊழியரே அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும்.அதாவது வாடிக்கையாளர்கள் ஒரே இடத்தில் அனைத்துச் சேவையும் பெறுவர். காசாளரே பணம் வாங்கி, அவரே கணக்குப் புத்தகத்தையும் பதிவு செய்ய வேண்டும்.டிராஃப்ட் டிற்கு அவரே பணம் வாங்கி அவரே எல்லாவற்றையும் செய்ய வேண்டும். இதனால் ஒவ்வொரு வாடிக்கையாளரும் அந்த வேலை முடியும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. சில சமயம் CONNECTIVITY FAILURE என்று அறிவிப்பு பலகை மாட்டி விடுவார்கள். மணிக் கணக்கில் நின்று கொண்டு இருக்கும் ஒரு நூறு ரூபாய் கட்டுபவர் கோபப் படாமல் இருக்க முடியாது. நம் நாட்டில் எல்லா வங்கிகளிலும் இந்த ஒற்றைச் சாளர அமைப்பு ( SINGLE WINDOW SYSTEM ) நடைமுறையில் உள்ளது. அதாவது ஒருவரே பருத்தியில் பஞ்செடுத்து  நூல் நூற்று அவரே நெய்து அவரே சட்டை தைத்து கொடுப்பது போல.இதனால் கால விரயம்தான் அதிகம். இந்த முறையை மற்ற சில அலுவலகங்களும் பின்பற்றுகின்றன.

இப்போது வங்கி வாடிக்கையாளர்கள் அதிகமாகி விட்டனர். தனியார், அரசு என்று எல்லா ஊழியர்களுக்கும் வங்கி மூலம் தான் சம்பள பட்டுவாடா நடைபெறுகிறது. என்னதான் ATM மூலம் பணம் எடுத்தாலும் சில பண பரிமாற்றங்களுக்கு வங்கியின் கிளைக்கு போய்த்தான் ஆக வேண்டியுள்ளது. எனவே வாடிக்கை யாளரை அதிகம் சிரமப்படுத்தாத பழைய முறையையே கம்ப்யூட்டர் முறையில் வங்கியில் கொண்டு வந்தால் நல்லது. வாடிக்கையாளர்களும் ஒரு சிறிய தொகைக்காக அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. வேலையும் சுலபமாக முடியும்.

12 comments:

 1. ஒரு வங்கியில் பணியாற்றி இருக்கிறீர்கள்! தமிழ் இளங்கோ என்று பெயரும் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்!

  கறந்த பால் மடி புகா.

  இப்படி ஒரு மூதுரை இருப்பது தெரிந்திருக்க வேண்டுமே! வங்கித் துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும் அப்படித்தான்!திரும்பப் பழைய நிலைமைக்குப் போவதென்பது சாத்தியமே இல்லை!தவிர, வங்கிகள் செய்வது வியாபாரம்! வியாபாரம் என்பது சேவையை விற்கிற-அதை வாங்குகிற இருவருக்குமே ஆதாயத்தோடு இருந்தால் தான் நிலைக்கும்!இந்திரா காந்தி-ஜனார்த்தன பூஜாரி காலத்து சோஷலிச பாங்கிங் என்பது இனிமேல் அவர்கள் கனவில் கூட வராது.

  ஒற்றைச்சாளர முறை என்பது, ஒரு வாடிக்கையாளரை நன்கு புரிந்து கொண்டு, அவருடைய எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவது.இங்கே நீங்கள் சொல்லிக் கொண்டிருப்பது சாளேஸ்வரம்!வாடிக்கையாளர் எவர் முக்கியமானவர் என்பதும் தெரியாது, அவரது தேவைகள் என்ன, அதைத் தருவதில் நடைமுறைத் தேவைகள் என்ன என்பதும் தெரியாது. வாடிக்கையாளருக்கும் தன்னுடைய திருப்பிச் செலுத்தும் தகுதி, என்ன எதிர்பார்க்கிறோம் என்பதும் தெரியாது.அப்புறம் சிங்கிள் விண்டோ இருந்தால் என்ன, மல்டிபிள் விண்டோ இருந்தால் என்ன?

  இப்போதாவது விஷயத்தை அதன் முழுப்பரிமாணத்தில் இருந்து புரிந்துகொள்ள வேண்டுமானால் The Power of Ultimate Six Sigma, என்ற புத்தகம் Keki R.Bhote எழுதியது, கிடைத்தால் அதன் அறுபத்திரண்டாம் பக்கத்தைக் கொஞ்சம் பாருங்கள்! எந்த மாதிரியான வாடிக்கையாளரை ரீடெய்ன் செய்ய வேண்டும்,எந்த மாதிரியான வாடிக்கையாளர்கள் வேண்டவே வேண்டாம் என்று பகுக்கத் தெரிந்தால் மட்டுமே, இப்போதுள்ள கோர் பாங்கிங், நவீனமயம் கைகொடுக்கும்.சுருக்கமாக, நேற்றுவரை நீங்கள் தெரிந்து வைத்திருந்த சோஷலிச பாங்கிங் இனி எப்போதும் இல்லை!

  டெக்னாலஜியைக் குறை சொல்வதை விட்டு விட்டு அரசிடம் ஒரே ஒரு கேள்வியை மட்டும் கேட்டுப் பாருங்கள்! பொதுத்துறை வங்கிகள் நடத்துவது வணிகமா அல்லது தர்மச்சத்திரமா?

  அப்புறம்,

  டெபாசிட்டர்களின் பணத்தை, வழிப்பிள்ளையாருக்கு எடுத்து உடைப்பதுபோல, அரசு, அரசியல்வாதிகள் இஷ்டப்படி சூறையாட விடுவது எந்தவிதத்தில் சரி?

  ReplyDelete
 2. //எஸ். கிருஷ்ணமூர்த்தி said...//

  எஸ்.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வணக்கம்! எனது கட்டுரையில், வாடிக்கையாளர் சேவையில் பணம் கட்டுவதற்கும், பெறுவதற்கும் தனித் தனியே கவுண்டர்கள் இருந்தால் நல்லது என்ற ரீதியில்தான் எழுதியுள்ளேன். கட்டுரையில் நான் குறிப்பிடாத சோசலிச சித்தாந்தத்தைப் பற்றி கருத்து ஏதும் சொல்ல விரும்பவில்லை.தங்கள் வருகைக்கும், விமர்சனத்திற்கும் நன்றி.

  ReplyDelete
 3. டெக்னாலஜி மாறும்போதே, ஊழியர்கள் எண்ணிக்கையும், பயன்படுத்தப்படும் விதமும்சேர்ந்தே மாறுகிறது! அப்படி மாறுவதைப் புரிந்து கொண்டால்,அதற்கு, இதற்குத் தனிக் கவுண்டர் இருந்தால் தேவலையே என்ற கேள்வியே எழாது!முக்கியமாக, கோர் பாங்கிங் முறையில், இந்த வேலையை இன்னார்தான் செய்யவேண்டும் என்பது இல்லை. எவர் வேண்டுமானாலும் செய்யலாம்.அதற்குத் தயாராக இல்லாததில் யாரைக் குறை சொல்வீர்கள்?

  புதிய முறைக்கு வாடிக்கையாளர்களைத் தயார் செய்வதில், புதிய முறைகளைப் புரிந்துகொண்டு வேலை செய்வதில் ஏற்படும் சுணக்கமே நீங்கள் சொல்கிற குறைபாடுகள் பூதாகாரமாக தோன்றுவதற்கு முக்கியமான காரணம். சோஷலிச பாங்கிங் பற்றி நீங்கள் சொல்லவில்லை!இனிமேல் அந்தப் பழைய நினைப்பு எடுபடாது என்பதைத்தான் கொஞ்சம் விரிவாகவே சொன்னேன்,

  ReplyDelete
 4. It is unfortunate to read comments like this. I agree fully with the author that PSU banks can be little more responsive to customers. I find in Mumbai PNB bank people are standing in queue( only 50 tokens are given) to deposit in the account. I dont know CMD of PNB knows of this.

  ReplyDelete
 5. //Anonymous said...//
  தங்கள் வருகைக்கு எனது வணக்கமும் நன்றியும்.

  ReplyDelete
 6. //எஸ். கிருஷ்ணமூர்த்தி said... //
  தங்களது இரண்டாம் வருகைக்கு நன்றி கலந்த வணக்கம்!

  ReplyDelete
 7. அன்பின் தமிழ் இளங்கோ - ஒற்றைச் சாளர முறை வங்கிகளீல் அறிமுகப் படுத்தப் பட்ட பிறகு வாடிக்கையாளர்கள் சிரமப்படுகின்றனர். இம்முறை இன்னும் சரியான வகையில் அறிமுகப் படுத்தப் பட வில்லை. காலம் ஆகும் - சரியாகும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  ReplyDelete
 8. REPLY TO … … cheena (சீனா) said...

  அன்பின் ”வலைச்சரம்” சீனா அவர்களுக்கு வணக்கம்! ஒற்றைச் சாளர முறை என்றாலே வாடிக்கையாளர்களுக்கு கஷ்டம்தான். ரெயில்வேயில் ரிசர்வேசன் கவுண்டரிலும் இதனை உணரலாம்.தங்கள் வருகைக்கு நன்றி!

  ReplyDelete
 9. நடைமுறை சிரமங்களை அறியத்தந்த வலைச்சர பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

  ReplyDelete
 10. மறுமொழி > இராஜராஜேஸ்வரி said...
  // நடைமுறை சிரமங்களை அறியத்தந்த வலைச்சர பகிர்வுகள்..பாராட்டுக்கள்.. //

  எப்போதோ எழுதிய பதிவுக்கு, வலைச்சரம் அறிமுகம் மூலம் இந்த பதிவிற்கு வந்து கருத்துரை தந்த சகோதரிக்கு நன்றி1

  ReplyDelete
 11. அரசுடைமை பாங்குகளில் ஊழியர்களை குறை சொல்லி பிரயோஜனமில்லை, அவர்களை ஆட்டுவிக்கும் யூனியன்கள் சொல்வதை அவர்கள் கேட்டுத்தான் ஆகவேண்டும். இவர்களை ஆட்டுவிக்கும் யுனியன்களின் அட்டகாசத்தை கட்டுபடுத்தியாலே பொதுத்துறை வளரும்.

  ReplyDelete
 12. மறுமொழி > அஜீம்பாஷா said...

  சகோதரரின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி!

  ReplyDelete