Monday, 3 April 2017

முதுமை ஒரு சாபம்அன்று மாலை, எனது அப்பாவை ( வயது 91.) ஒரு தனியார் மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்று இருந்தேன். அங்கு வந்திருந்த நண்பர் அப்பாவைப் பற்றிய நலன் விசாரித்தார்.அப்போது அந்த நண்பர் ‘ வயதானால் பெரியவர்கள் மீண்டும் ஒரு குழந்தையாக மாறி விடுகிறார்கள்” என்றார். நான் அவருக்கு மறுமொழியாக ‘உண்மைதான். ஆனால் மனித வாழ்வில் முதுமை ஒரு சாபம்” என்றேன்.. அவரும் ”ஏன் அப்படி சொல்லுகிறீர்கள்?” என்று வினவ, நானும் ‘மற்ற உயிரினங்கள் நோயுற்றாலோ அல்லது முதுமை அடைந்தாலோ அவற்றை உணவாக உண்ணும் உயிரினங்கள் அவற்றின் உயிரைப் போக்கி இவ்வுலக கஷ்டத்திலிருந்து  விடுவித்து விடுகின்றன. ஆனால் மனிதன் முதுமை அடையும்போது படும் துன்பங்கள் சொல்லி முடியாது.” என்றேன் 

முதுமை என்பது

ஒருவர் 60 வயதை கடந்து விட்டாலேயே அவரை முதியவர்  என்று அழைக்கிறார்கள். பத்திரிகைகளிலும் அவ்வாறே குறிப்பிடுகின்றனர். இன்னும் கூடுதலாக மூத்த குடிமக்கள் ( Senior Citizens ) என்றும் அழைக்கிறார்கள். ஆனால் இன்றைய நவீன மருத்துவம் மற்றும் மருந்துகள் காரணமாக 60 வயதைக் கடந்தாலும் 90 வயதுக்கு மேலும் நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்தவர்களையும், வாழ்பவர்களையும் நான் பார்த்து இருக்கிறேன்.

முதுமையில் படும் கஷ்டங்கள்

ஆனாலும் முதுமை என்ற நோய் மனித வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக, வாழ்க்கையின் கடைசி அத்தியாயமாக இருக்கிறது. சிலருக்கு அறுபதில் வரலாம். அல்லது அறுபதிற்கு மேலும் வரலாம். பட்டிமன்றத்தில் வேண்டுமானால் முதுமை ஒரு வரம் என்று வாதாடலாம். ஆனால் நடைமுறையில் முதுமை என்பது ஒரு வரமல்ல; அது ஒரு சாபமே. சாபம் யார் கொடுத்தது என்றுதான் தெரியவில்லை. உள்ளம் இளமையாக இருந்தாலும், தளர்ச்சியின் காரணமாக உடல் அதற்கு ஒத்துழைக்க மறுக்கிறது. ஞாபக மறதியும், நோய்களும், வீண் பயமும் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.. நேற்றுவரை அதிகார தோரணையில் இருந்தாலும், இன்று கையில் காசு பணம் பவிசு என்று இருந்தாலும், பார்த்துக் கொள்ள ஆள் இருந்தாலும், ஒவ்வொன்றிற்கும் அடுத்தவர் துணையின்றி எதனையும் செய்ய முடியாத நிலைமை. நம்மால் மற்றவர்களுக்கு வீண் தொந்தரவு என்ற கவலை என்று சொல்லிக் கொண்டே போகலாம். 

எனது அப்பா

எனது அம்மா, அப்பா ( ரெயில்வே ஓய்வு ) இருவரும். வாடகைக்குப் பிடித்த, ஒரு தனிவீட்டில் வசித்து வந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எனது அம்மா ( 78 ) இறந்த பின்பும் தனியாகவே எனது தந்தை 90 வயது வரை நன்றாகவே தனது வேலைகளைத் தானே செய்து கொண்டும் தனியாகவும் அதே வீட்டில்  இருந்தார். என்னோடு அல்லது எனது தங்கை வீட்டிற்கு வந்து இருந்து கொள்ளுங்கள் என்று அழைத்த போதும் வரவில்லை. இப்போது முதுமை ஆட்கொண்டு, கடுமையான பல கஷ்டங்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் அவர் அடைந்ததால், எங்கள் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டோம். அவருக்கு இன்னும் தனியாக இருக்கவே விருப்பம். ( அவருக்கு 91 வயது முடிந்து 92 ஆவது வயதும் முடிய இன்னும் ஒரு மாதம்தான் இருக்கிறது ).இனிமேல் மருந்து மாயம் எதுவும் அவரிடம் செல்லாது. இருக்கும் வரை கவனித்துக் கொள்ள வேண்டும். அவரைப் பார்த்துக் கொள்ள வேறு யாரும் இல்லாததால் நானே அருகில் இருக்கும்படியான சூழ்நிலை

எனது மனைவி காலையில் வேலைக்கு சென்றால் மாலையில்தான் திரும்புவார். வேலை வாய்ப்பு கோச்சிங் கிளாஸ் சென்று வரும் எங்களது மகனும் அப்படியே. இவர்கள் இருவரும் திரும்ப வரும் வரையிலும் நான் எங்குமே செல்ல முடியாது. எனது அப்பாவிற்கு நான் அருகிலேயே இருக்க வேண்டும். கால் மணிக்கு ஒருமுறை அவரை டாய்லெட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். ( நண்பர்களும் உறவினர்களும், எனது தந்தைக்கு disposable diapers போட்டுவிடச் சொல்லுகிறார்கள்.) மீதி நேரமெல்லாம் ஒன்று சேரிலேயே உட்கார்ந்து இருப்பார் அல்லது தரையில் பாயிலேயே படுத்து இருப்பார். தூங்குகிறாரா அல்லது விழித்து இருக்கிறாரா என்றே தெரியாது. திடீரென்று 40 வருடத்திற்கு முந்தைய சங்கதியை நேற்று நடந்தது போல் சொல்லுவார். இந்தநிலையில்,நானும் ஒரு சீனியர் சிட்டிசன்.  இப்போது அவர் அடைந்து கொண்டு இருக்கும் துன்பங்கள், அவரையும் அறியாமல் அவர் செய்யும் தவறுகள் மற்றும் அவரால் எங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அவற்றை சமாளித்த விதம் யாவற்றையும் இப்போது இங்கே சொல்வது சரியாக இருக்காது  ( எனது நண்பர்கள் பலர் அவரை நல்ல ஹோம் ஒன்றில் சேர்க்கும்படி சொல்லுகிறார்கள். திடீர் இடமாற்றம் எனது தந்தைக்கு எப்படி ஒத்துப் போகும் என்று யோசனையாகவும் உள்ளது..)

கிராமப்புறமும் நகர்ப்புறமும்

எனக்குத் தெரிந்து கிராமத்தில் இருக்கும் தள்ளாத முதியவர்கள் ஒவ்வொரு நாளையும் எளிதாகவே கழித்து விடுகிறார்கள் என்பது எனது அபிப்பிராயம். அங்கு அவர்கள் யாருக்கும் தொந்தரவு தராத வகையில் ஒரு திண்ணையிலோ, அல்லது ஒரு கொட்டகையிலோ அல்லது ஒரு தோப்பிலோ  சுதந்திரமாக இருந்து கொண்டு காலத்தைக் கழித்து விடுகிறார்கள். எனது பெரியப்பா ஒருவர், தனது கிராமத்து வீட்டு கொல்லைப் புறத்தில் கோமணம் ஒன்றைக் கட்டிக் கொண்டு பகல் முழுக்க அங்கேயே இருப்பார். யாரேனும் வந்தால் அல்லது ஏதேனும் எடுப்பதற்கு என்றால் இடுப்பில் ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு வருவார். என்னுடைய தாத்தா தனது கடைசி காலத்தை திண்ணையிலேயே முடித்தார். இப்படியே கிராமத்து உறவுகள் பலர்.

பெரும்பாலும் கிராமத்தில் பெரியவர்களைக் கவனித்துக் கொள்ள என்று தனியே ஒரு ஆள் தேவைப் படுவதில்லை. வீட்டில் இருப்பவர்களும், அவ்வப்போது சுற்றி இருப்பவர்களும் தேவைப்படும் சமயத்தில் முதியவருக்கு தேவையான உதவிகளை செய்கிறார்கள். நடக்க முடிந்தவர்கள் ஒரு ஊன்றுகோலை ஊன்றிக் கொண்டு நடமாடுவார்கள். தங்கள் வயது நண்பர்களைச் சந்திக்கும் போது தங்கள் முதுமையை மறந்து விடுகிறார்கள்.. ( இதையேல்லாம் யோசித்து, அப்பா ரிடையர்டு ஆனதுமே, எனது அம்மாவையும் அப்பாவையும், எங்கள் சொந்த ஊருக்கோ அல்லது அம்மா வழி சொந்தங்கள் இருக்கும் ஊருக்கோ சென்று விடுங்கள்; அங்கே நல்ல வசதியுடன் வீடு ஒன்றை கட்டிக் கொள்ளலாம் என்று சொன்னேன். அவர்கள் கேட்கவில்லை )
 ஆனால் நகர்ப்புறத்தில் முதியவர்கள் வாழ்க்கை என்பது இதனிலிருந்து மாறுபட்டு விடுகிறது. ஒரு வராண்டாவிலோ அல்லது ஒரு அறையிலோ ஒரு குறுகிய வட்டத்தில் மன அழுத்ததுடனேயே முடிந்து விடுகிறது.

முதியோர் இல்லம்

ஒரு காலத்தில் முதியோர் இல்லத்தில், பெற்ற பிள்ளைகளே தங்கள் தாய் தந்தையரை சேர்த்தல் என்பது விமர்சனத்திற்கு உள்ளாக்கப் பட்டது. பாவச் செயலாகக் கருதப் பட்டது. ஆனால் இன்றைய சூழலில் அது தவிர்க்க இயலாத ஒன்றாக கருதப் படுகிறது. கிராமத்தில் அவர்களைத் தனியே விட்டுவிட்டு  சொந்த வேலைகளைப் பார்க்க நாம் சென்று விடலாம். ஆனால் நகர்ப்புறத்தில் அவ்வாறு விட்டு விட்டு செல்ல முடியாது. அவர்களைக் கவனித்துக் கொள்ள என்று தனியே ஒருவர் வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒரு துயரமான கதை உண்டு. நகர்ப் புறத்தில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு சென்று விடுகிறார்கள். அவர்களுடைய பிள்ளைகள் படிக்க சென்று விடுகிறார்கள். இப்போது பெற்றோரை விட்டு விட்டு வெளிநாடு சென்று விடுகிறார்கள். அப்போது வீட்டில் இருக்கும் முதியவர்களைக் கவனிக்க ஆள் தேவைப் படுகிறது. இது மாதிரியான சந்தர்ப்பங்களில் முதியோர் இல்லம் என்பது பாதுகாப்பானதாக தேவைப்படும் ஒன்றாக இருக்கிறது. (இந்த முதியோர் இல்லம் குறித்து தனியே ஒரு பதிவை எழுத வேண்டும்).

இந்த முதியோர் இல்லம் குறித்து இணையதளத்தில் தேடியபோது பல சுவாரஸ்யமான தகவல்கள். பல முதியோர் இல்லங்கள் கருணை இல்லங்களாக நன்கொடை எதிர்பார்த்து நடத்தப் படுகின்றன. சாதாரண கட்டணம் பெற்றுக் கொண்டு, ஒரு ஹாஸ்டல் போன்று நடக்கும் இல்லங்களும் உண்டு; கார்ப்பரேட் கணக்காக அபார்ட்மெண்ட் ஸ்டைலில் அதிகக் கட்டணம் பெற்றுக் கொண்டு நடக்கும் இல்லங்களும் உண்டு. 

முதியோர் இல்லம் என்றவுடன், வலைப்பதிவர் நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்கள் ’கனவில் வந்த காந்தி’ என்ற தொடர்பதிவு ஒன்றினை எழுதச் சொன்னபோது, நான் எழுதிய தொடர் பதிவும், அதிலுள்ள கேள்வியும் பதிலும் நினைவுக்கு வந்தது.
( http://tthamizhelango.blogspot.com/2014/11/blog-post_17.html கில்லர்ஜியின் கனவில் வந்த காந்தி – தொடர் பதிவு.  )

// 4. முதியோர்களுக்கு என்று ஏதாவது திட்டம் வைத்திருக்கின்றாயா?
முதியோர்கள் அனைவருக்கும் உண்ண உணவும் உடுக்க உடையும் இலவசமாக வழங்கப்படும். மூன்று வேளையும் அரசாங்கமே உணவளிக்கும். உணவு மற்றும் தங்கும் விடுதிகள் நாடெங்கும் தொடங்கப்படும். இதற்காக கையில் காசோ அல்லது அடையாள அட்டையோ தரப்பட மாட்டாது. வேண்டியதை எந்த விடுதியில் வேண்டுமானாலும் சாப்பிட்டுக் கொள்ளலாம். தங்கிக் கொள்ளலாம். //

                                                          xxxxxxxxxxxxxxxx

தொடர்புடைய எனது பிற பதிவுகள்:
                                                                                                                                                         

வாக்கிங் ஸ்டிக் மனிதர்கள்

http://tthamizhelango.blogspot.com/2013/12/blog-post_30.html

                                                                                                                                   

கருணைக் கொலையும் முதுமக்கள் தாழியும்

http://tthamizhelango.blogspot.com/2013/10/blog-post_16.html

 


59 comments:

 1. பதிவை முழுமையாகப் படித்தேன். பாதியிலேயே நின்றுவிட்டதுபோல் ஒரு எண்ணம். (ஒரு வேளை நீளம் காரணமாக நிறுத்தியிருக்கலாம்).

  பொதுவா, இந்த SUBJECT எழுதத் தயங்குவாங்க. 'முதுமை ஒரு சாபமே'. இதில் 'முதுமை' என்பது 60-65 வயது போன்று ஒரு அளவுகோல் வைக்க இயலாது. தன்னைத் தான் பார்த்துக்கொள்ளும் தகுதியையோ அல்லது தனியாக இருந்துகொள்ளும் தகுதியையோ இழப்போமென்றால் அதுவே 'முதுமை' அடைந்துவிட்டதன் அடையாளம். கூட்டுக் குடும்பத்தை விட்டு விலகிவிட்ட இந்தக் காலத்தில் (40 வருடங்களுக்கு மேலாகவே), ஒவ்வொரு குடும்பமும் தனித் தனித் தீவாக அமைந்துவிட்ட நிலைமையில் 'சாபம்'தான்.

  'முதியோர் இல்லம்' என்பது, கைவிடப்பட்ட முதியவர்களுக்கானது அல்ல. தன்னால் தன்னைப் பார்த்துக்கொள்ள இயலாத, அதே சமயம் தன்னைப் பார்த்துக்கொள்ளும் சூழலில் தன் குழந்தைகள் இல்லாதவர்களுக்கானது. 'SENTIMENT' எண்ணங்கள் நம்மைச் சூழ்ந்தபோதும், பெற்றோர்களைப் பார்த்துக்கொள்ள இயலாத சூழல் (முதியவர்களை) நிறைய பேருக்கு அமைந்துவிடுகிறது.

  ReplyDelete
  Replies
  1. நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் நீண்ட அன்பான கருத்துரைக்கு நன்றி.

   // பதிவை முழுமையாகப் படித்தேன். பாதியிலேயே நின்றுவிட்டதுபோல் ஒரு எண்ணம். (ஒரு வேளை நீளம் காரணமாக நிறுத்தியிருக்கலாம்). //

   நீங்கள் சொல்வது சரிதான். இந்த பதிவை கடந்த இருபது நாட்களாக அவ்வப்போது நேரம் கிடைக்கும் போது மட்டுமே எழுதினேன். நிறைய விஷயங்கள் மனத்தில் இருந்தாலும் முழுமையாக பதிய முடியவில்லை. ஒருவேளை முதியோர் இல்லத்தில் எனது தந்தையை சேர்த்து விட்டு, அந்த அனுபவங்களையும் சேர்த்து எழுதி இருந்தால் நிறைவடைந்த திருப்தி எனக்கும் வந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

   // பொதுவா, இந்த SUBJECT எழுதத் தயங்குவாங்க //

   நானும் இந்த பொருளில் எழுதுவதற்கு தயங்கினேன். காரணம் இந்த மாதிரியான பதிவு எழுதுவதில் குடும்ப கௌரவம், தனிநபர் ரகசியம் காத்தல் என்று பல விஷயங்கள் அடங்கியுள்ளன. மேலும் நான் இந்த வலையுலகை கவனித்த வரையில், பலரும் நோய், முதுமை, மரணம் சார்ந்த பதிவுகளை படிக்கவே விரும்புவதில்லை, அப்படியே படித்தாலும் கருத்துரை சொல்வதில் தயக்கமும் காட்டுவதாகவே தெரிகிறது. எனினும் பின்னாளில் இந்த பதிவும், இதில் உள்ள பின்னூட்டங்களும், எனது சூழ்நிலையில் உள்ள மற்றவர்களுக்கு வழிகாட்டலாம் என்ற எண்ணத்தில் வெளிப்படையாக எழுதி உள்ளேன். இதில் மாற்றுக் கருத்து இருக்கவும் வாய்ப்புண்டு.

   உங்கள் கருத்துரையின் முடிவில் நீங்கள் சொன்ன, முதியோர் இல்லம் குறித்த தங்களின் கருத்துதான் என்னுடையதும்.

   Delete
 2. வணக்கம் நண்பரே
  தாங்கள் அனுபவத்தை சொல்வதை ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இருப்பினும் சிலருக்கு இது தவிர்க்க முடியாத சூழல்.
  ஆனாலும் இன்றைய வாழ்க்கை அனைவருக்குமே வேகமாக ஓடக்கூடிய நிலைக்குள் அடைப்பட்டு ஓடுகிறோம்.

  எனது அம்மா பிறந்தநாள் முதல் பெருங்கூட்டத்தோடு வாழ்ந்தவர்கள் இன்று எவ்வளவோ சொல்லியும் தனியாக வாழ நினைக்கின்றார்கள் இதற்காக எனக்கு மேலும் செலவு மட்டுமல்ல, தினம் அவர்களைக் குறித்த கவலையும் அதிகரிக்கின்றது காரணம் வயதானவர்கள் நம்முடன் இருந்தால் பார்த்துக் கொள்ளலாம் ஆனால் அவர்களுக்கு இது புரியவில்லை என்ன செய்வது ?
  ஒவ்வொருவருக்கும் ஒரு சூழல்.
  த.ம.1

  ReplyDelete
  Replies
  1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. கூட்டுக் குடும்பமாக இருந்தாலும், தனிக்குடித்தனமாக இருந்தாலும், கடைசி காலத்தில் முதியோரை யார் பார்த்துக் கொள்வது என்பதில் ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொரு சூழ்நிலை.
   பொதுவாக வயதான காலத்தில் பெரியவர்களை தனியே விடக் கூடாது என்பதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் அவர்களோ ” நான் தனியாகவே இருந்து சமாளித்துக் கொள்வேன்; யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை “ என்றுதான் சொல்லுவார்கள். என்றாலும் நீங்கள், உங்கள் அம்மாவை பார்த்துக் கொள்ள என்று ஒருவர் இருக்குமிடத்தில் வைத்து பராமரிப்பது நல்லது.

   Delete
 3. இந்தியாவில் முதுமை ஒரு சாபமே மேலைநாடுகளில் அல்ல .மேலைநாடுகளில் வாழ்க்கை முறையே வேறு அதனால் 50 60 வயதலிலும் அவர்கள் தாங்கள் இளமையாக இருப்பதாகவே நினைக்கிறார்கள், அதுமட்டுமல்ல சிறு வயதில் இருந்தே இவர்கள் யாரையும் சாராமல் வாழ்வதால் இவர்கள் வயதானகாலத்தில் தனித்து வாழும்போது அதை மிக எளிதாக கடந்து செல்லுகிறார்கள். இங்கு சினியர் சிட்டிசங்களுக்கு ஒரு போன் இருந்தாலே போதுமானதாக இருக்கிறது

  ReplyDelete
  Replies
  1. மேலைநாட்டு முதியவர்கள் வாழ்க்கை முறையை இங்குள்ள நிலைமையோடு ஒப்பிட்டு சொன்ன, நண்பர் மதுரைத் தமிழன் ( ‘அவர்கள் உண்மைகள்’ ) அவர்களின் கருத்துரைக்கு நன்றி. முதியோர் நலம், முதியோர் மருத்துவம், முதியோர் இல்லம் என்று மேலைநாடுகளில் சிறப்பாக கவனிக்கப் படுவது போல், இந்தியாவில் இல்லை என்றே நினைக்கிறேன்.

   Delete
 4. முதுமை என்பது வரமா அல்லது சாபமா என்பதுபற்றி, தாங்கள் சொல்வதுபோல, நமக்கு நம்மாலேயோ அல்லது நம்மைச் சார்ந்த நெருங்கிய உறவினர்களாலேயோ எந்தவிதமான தொந்தரவுகளும் இல்லாதவரை, பட்டி மன்றப்பேச்சுக்களில் கேட்க மட்டுமே மிகவும் சுவாரஸ்யமாக இருக்கக்கூடும்.

  பிராக்டிகல் லைஃப் இல், இந்தக்கஷ்டங்களை நேரில் அன்றாடம் அனுபவிப்பவர்களுக்கும், அவர்களைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பில் இருப்பவர்களுக்கும் மட்டுமே, அதில் உள்ள கஷ்ட நஷ்டங்கள், வருத்தங்கள் ஆகியவைக் கண்கூடாகத் தெரியக்கூடும்.

  தங்கள் நிலைமையில் நான் என்னை வைத்தும் பார்த்தேன். தங்களின் இன்றைய தவிர்க்கவே முடியாத சிரமங்களை என்னால் நன்றாகவே உணர முடிகிறது.

  பாசம், பந்தம், பணம், ஆள்கட்டு, வசதி வாய்ப்புகள், வியாதிகள், இன்றைய நவீன மருத்துவ வசதிகள் ஆகிய இவை எல்லாவற்றையும் தாண்டி ஒருவரின் உயிர் பிரியும் நாள் என்பது யாராலேயும் உறுதியாகச் சொல்ல முடியாமல் உள்ளது என்பது மிகவும் ஆச்சர்யமாகத்தான் இருந்து வருகிறது.

  நம் பல்வேறு முயற்சிகளையும் எதிர்பார்ப்புகளையும் தாண்டி, எல்லாமே அவரவர்கள் அனுபவிக்க வேண்டிய விதிப்படியே நடக்கின்றன எனவும் நினைக்கத் தோன்றுகிறது.

  பொதுவாக, வயதான தன் கணவரை இழந்த மனைவிமார்கள்கூட எப்படியும் தங்களைத் தாங்களே கொஞ்சம் சமாளித்துக்கொண்டு போய் விடுகிறார்கள். இதே நிலைமை மனைவியை இழந்த கணவன்மார்களுக்கு ஏற்பட்டால், வயதாக வயதாக அது மிகவும் கொடுமையாகத்தான் இருந்து வருகிறது.

  ஏதோ ஒரு கடமையாக நினைத்து முடிந்தவரை சமாளித்துப்பாருங்கோ ஸார். சொல்வது மிகவும் எளிது. தாங்களும் சீனியர் சிடிஸனாக இருப்பதால் சமாளிப்பது மிகவும் கஷ்டம்தான். வேறு என்ன சொல்வது என்றே எனக்கும் புரியவில்லை.

  அவருக்கும் மேலும் மேலும் அதிக சிரமம் இல்லாமல், உங்களுக்கும் அவர் சிரமம் கொடுக்காமல் எல்லாம் நல்லபடியாக நடைபெற இறைவன் அருளட்டும். தங்களின் தந்தைக்காக நானும் பிரார்த்திக்கொள்கிறேன். தாங்களும் பிரார்த்தித்துக்கொள்ளவும்.

  நம் தாய் தந்தைக்கு, அவர்களின் கடைசி காலத்தில் நம்மால் செய்யப்படும் சரீர ஒத்தாசைகளால், நமக்கு மிகவும் புண்ணியம் கிடைக்கக்கூடும் என்பார்கள். அந்தப்புண்ணியம் நம் கடைசிகாலத்தில் நமக்கு அதிக சிரமங்கள் கொடுக்காமல் காக்கும் என நம்புவோம்.

  ReplyDelete
  Replies
  1. மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களூக்கு வணக்கம்.

   // தங்கள் நிலைமையில் நான் என்னை வைத்தும் பார்த்தேன். தங்களின் இன்றைய தவிர்க்கவே முடியாத சிரமங்களை என்னால் நன்றாகவே உணர முடிகிறது.//

   என்றுரைத்த தங்களின் அன்பான கருத்துரையில் நெகிழ்ந்து போனேன்.
   தங்களின் ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி. நான் தினமும் இறைவனிடம் வேண்டிக் கொண்டுதான் இருக்கிறேன்.

   Delete
 5. எனது தந்தை தனது கடைசிக் காலத்தில் பட்ட கஷ்டங்கள் நினைவுக்கு வருகின்றன. அவருக்கு ஒரு இடத்தில் இருந்தால் பிடிக்காது. சுற்றிக்கொண்டே இருப்பார். புத்தகங்கள் அப்பிடித்துக் கொண்டே இருப்பார். அப்படிப்பட்டவர் ஒரு கட்டிலில் ஆண்டுக் கணக்கில் மேலே சுவரைப் பார்த்தபடி படுத்துக் கிடப்பது என்ற கொடுமையான நிலையில் இருந்தார். பேச்சும் ஒழுங்காகப் பேசமுடியாமல் போனது. ஏனோ என்னை எனது கடைசிக் காலத்தை நினைத்துப் பார்க்க வைக்கும் இது மாதிரி நிலைகள்.

  ReplyDelete
  Replies
  1. நண்பர் ’எங்கள் ப்ளாக்’ ஸ்ரீராம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் தந்தை பட்ட கஷ்டங்களை, என் தந்தை படும் கஷ்டங்களோடு ஒப்பிட்டு பார்த்தேன். உங்கள் வீட்டார் காத்த பொறுமையை இறைவன் எனக்கு அளிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்கிறேன்.

   Delete
 6. முதுமை ஒரு சாபம் முதுமை ஒரு பரிசு என்று இருகோணங்களிலும் சிந்தித்துபதிவிட்டிருக்கிறேன் வயதான காலத்தில் தன் இணையைப் பிரியும் கொடுமை மிகவும் அதிகம் என்றே தோன்றுகிறது ஆண்டுகள் பல கூடவே இருந்து ஒருவருகுகு ஒருவர் என்று வாழ்ந்தவர்களந்த இணையைப் பிரிய நேர்ந்தால் அது கொடுமைதான் வாழ்க்கை என்பது உண்டு உடுத்து உறங்குவது மட்டுமல்ல அன்பு செலுத்த ஒரு ஜீவனும் வேண்டும் நிறையவே எழுதிக் கொண்டு போகலாம் உறவைக் கவனிக்க வேண்டி இருப்பவர்கள் எண்ணமே உங்சள் பதிவில் அதிகம் தெரிகிறது அதற்கு ஆளாகும் ஒருவர் சிந்தனையே வேறு கோணத்தில் இருக்கும்

  ReplyDelete
  Replies
  1. மூத்த வலைப்பதிவர் அய்யா ஜீஎம்பி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட உங்களுடைய பதிவினை நான் படித்து இருப்பதாக எனக்கு நினைவு.

   Delete
 7. உங்கள் பதிவு மனதில் பாரத்தை வெகுவாக ஏற்றியது.
  எப்படியாக இருந்தாலும் முதுமை ஒரு சாபம் தான். எல்லோரது வாழ்க்கையிலும் அதை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். நம் கொடுப்பினைகள், நாம் செய்த நல்லவைகள், பொருளாதார சூழ்நிலைகளுக்கேற்ப அந்த சாபத்தின் பலன்கள் கூடுகின்றன அல்லது குறைகின்றன, அவ்வளவு தான்!

  பெரியவர்களை எப்போதும் கவனித்துக்கொள்ள முடியாத அளவு தளர்ச்சியும் உடல், மன பலமின்மையும் நமக்கும் ஏற்படும்போது அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து இன்னும் நல்லபடியாக பார்த்துக்கொள்ளலாம் என்பதிலும் தவறில்லை.

  என் தாயாருக்கு 98 வயது. இன்றளவும் உற்சாகமாக என் சகோதரி வீட்டில் இருக்கிறார்கள். பொருளாதார பின்புலம் நன்றாக இருப்பதால் இன்னும் மனம் தளராமல் தன் வேலைகளை தானே பார்த்துக்கொண்டு [தன் கட்டிலுக்கு தானே பெட்ஷீட் போடுவது உள்பட ] புத்தகங்களைப்படித்துக்கொண்டு, என் சகோதரியையும் அதிகாரம் செய்து கொண்டு இருக்கிறார்கள்!! இதைத்தான் கொடுப்பினை என்று சொன்னேன்.

  மனத்தளர்ச்சி அடைந்து விடாதீர்கள். மிச்சமிருக்கும் இந்த வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக, உற்சாகமாக வாழப்பாருங்கள்!!

  ReplyDelete
  Replies
  1. மேடம் அவர்களின் அன்பான மற்றும் ஆறுதலான கருத்துரைக்கு நன்றி.

   // எப்படியாக இருந்தாலும் முதுமை ஒரு சாபம் தான். எல்லோரது வாழ்க்கையிலும் அதை அனுபவித்துத்தான் ஆக வேண்டும்.//

   உண்மைதான். இளமையை சந்தோசமாக கொண்டாடிய மனித மனம் முதுமையையும் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று இறைவன் விதித்து இருக்கிறான் என்றே நினைக்க வேண்டி இருக்கிறது.

   Delete
 8. மனசுக்கு கொஞ்சம் கஷ்டமாகிடுச்சி ..உங்களையும் உங்கள் தந்தையையும் நினைத்து .
  இங்கே வெளிநாட்டு வாழ்க்கையில் நான் பார்த்த 90 வயது மனிதர்கூட இன்னமும் கார் ஓட்டுகிறார் ..இங்கே வயது தடையில்லை ஆனா அவங்களுக்கு diabetes இருந்தா ஓட்ட தடை ..இங்கே பலர் தனி வீட்டில்தான் இருக்காங்க பிள்ளைங்க வாரமொருமுறை விசிட் செய்வாங்க ..இங்குள்ள முதியஇளையோருக்கு மன திடம் அதிகம் அது நம் நாட்டு முதியோருக்கு இல்லை எனலாம் வாழ்நாளெல்லாம் கணவனை மனைவியை பிறகு பிள்ளைகளை சார்ந்திருப்பதாலோ என்னவோ :(

  உங்கள் உடல்நலனையும் கவனியுங்கள் அண்ணா ..

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களின் ஆறுதலான கருத்துரைக்கு நன்றி.

   Delete
 9. மனம் கனக்கின்றது..

  ஆனாலும் தாங்கள் கூர்ந்து எழுதியதைப் போல நகரத்தில் மட்டுமே முதுமை சாபமாகி விடுகின்றது..

  வாழ்க்கைச் சூழலை மாற்றிக் கொண்ட சமுதாயம் நம்முடையது..

  முதியோர்களிடம் அன்பு காட்டினால் ஆகாதது ஒன்றுமில்லை..

  மதிப்புக்குரிய வை.கோ.அண்ணா அவர்களின் கருத்தையே வழிமொழிகின்றேன்..

  >>> நம் தாய் தந்தைக்கு, அவர்களின் கடைசி காலத்தில் நம்மால் செய்யப்படும் சரீர ஒத்தாசைகளால், நமக்கு மிகவும் புண்ணியம் கிடைக்கக்கூடும் என்பார்கள். அந்தப் புண்ணியம் நம் கடைசி காலத்தில் நமக்கு அதிக சிரமங்கள் கொடுக்காமல் காக்கும் என நம்புவோம்..<<<

  ReplyDelete
  Replies
  1. சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களின் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.

   Delete
 10. எதுவும் அவரவர்க்கு வந்தால்தான் தெரியும் என்பது வழக்கமாக நாம் பேசும்போது கூறுவதாகும். தாங்கள் கூறுவதுபோல முதுமை என்பது சாபமே. நம் நாட்டுச் சூழல், குடும்பச் சூழல், வளர்ப்பு நிலை, மனப்பக்குவம் என்பது அமையும் நிலைக்கு ஒப்ப நாம் வாழும்போது நம்மையும் அறியாமல் இவற்றை அனுபவிக்க வேண்டியுள்ளது. உங்களுடைய இப்பதிவு அனைவருக்கும் ஒரு பாடமாக அமையும் என்று நம்புகிறேன். இயல்பான வாழ்க்கையை உள்ளது உள்ளபடி ஏற்றுக்கொண்டு சற்று மன தைரியமாக இருந்தால் ஓரளவு எதிர்கொள்ளலாம் என்று எளிதாகக் கூறிவிடலாம். ஆனால் அதனை அனுபவிக்கும்போதுதான் உண்மை நிலை புரியும். நேரில் பேசும்போதுகூட பல முறை உங்கள் தந்தையைப் பற்றிக் கூறியுள்ளீர்கள். தந்தையைக் கவனிக்க நீங்கள் கொடுத்துவைத்துள்ளீர்கள் என்று பெருமைப்படுங்கள் ஐயா. பலருக்கு இது கிடைப்பதில்லை. உங்களுக்கு போதிய மன திடம் தர இறைவனை வேண்டுகிறேன். தந்தையாரின் சீரான நலத்திற்கு அவனைப் பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கும்,எனது தந்தையின் நலன் வேண்டிய இறைவனிடமான தங்களின் பிரார்த்தனைக்கும் நன்றி.

   Delete
 11. சிறு வயது முதல் துன்பங்களையே பார்த்து உழைத்து உழைத்து 76 வயதிலேயே 86 வயது சொல்லத்தக்க அளவு இருந்தார் என் அம்மா! அவர் பட்ட கஷ்டங்களை அருகே இருந்து பார்த்ததால் சொல்கிறேன் - இப்போது சிரமங்களாகத் தெரிபவை சிரமங்கள் அல்ல! பெற்றவருக்கு சேவை செய்ய கடவுள் கொடுக்கும் சந்தர்ப்பம்! வருங்கால சந்ததிக்கு முன்னுதாரணமாகத் திகழ வாய்ப்பு! திருப்தியுடன் செய்யுங்கள். என் ப்ரார்த்தனைகள்.

  ReplyDelete
  Replies
  1. சகோதரி அவர்களின் அனுபவப்பூர்வமான கருத்துரைக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி.

   Delete
 12. முதுமை ஒரு சாபம் - யார் கொடுத்த சாபம் என்று தான் தெரியவில்லை....

  பல சமயங்களில் கடினம் தான். தலைநகரில் இப்படி பல முதியவர்கள் - கிராமியச் சூழலில் இருந்தவர்கள் இங்கே படும் அவஸ்தைகள் சொல்ல முடிவதில்லை. கிராமத்தில் அவர்கள் சுதந்திரமாக இருந்தது போல நகரங்களில் இருக்க முடிவதில்லை.

  உங்கள் தந்தையின் நலம் சீரடைய எனது பிரார்த்தனைகள்....

  ReplyDelete
  Replies
  1. நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கும், பிரார்த்தனைக்கும் நன்றி.

   Delete
 13. முதுமை எல்லோருக்கும் வரும். அது ஒரு இயல்பான உயிரியல் மாற்றம். எனவே அதை சாபமாகவோ வரமாகவோ பார்க்கக்கூடாது. நமது பெற்றோர்களுக்கு வரும் முதுமை நமக்கும் வரும். எனவே இதற்காக கவலைப்படாது. நம்மால் முடிந்தவரை நமது பெற்றோர்களுக்கு உதவியாய் இருக்கலாம். நமது உடல் நிலை அதற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் வீட்டிலேயே ஒரு உதவிக்கு ஆளைப்போட்டு கவனித்துக்கொள்ளலாம். அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்ப்பது ஏனோ சரியாகப்படவில்லை.
  நாம் குழந்தைகளாக இருந்தபோது எவ்வளவு கஷ்டப்பட்டு நம்மை வளர்த்திருப்பார்கள். இப்போது அவர்கள் முதுமையால் குழந்தைகள் போல் நடந்துகொள்ளும்போது, நாம்தான் பெற்றோர்கள் போல் நடந்துகொள்ளவேண்டும். சொல்வது எளிது. செயல்படுத்துவது கடினம் என்றாலும் பெற்றோர்களை பார்த்துக்கொள்ளவேண்டியது நம் கடமை அல்லவா?

  தங்கள் தந்தையின் உடல் நலம் சீர்பெற விழைகின்றேன்.

  ReplyDelete
  Replies
  1. மூத்த வலைப்பதிவரும், வலைப்பதிவில் அவ்வப்போது எனக்கு அறிவுரை தருபவரும் ஆகிய அய்யா V.N.S அவர்களின் கருத்துரைக்கு நன்றி. கடந்த இருபது நாட்களாக, அப்பாவுடனேயே இருப்பதால் இன்றுவரை நான் எங்கும் வெளியே செல்ல முடியவில்லை; அதனால்தான் முதியோர் இல்லம் பற்றிய எனது அபிப்பிராயத்தை நெருடலுடனேயே எழுதினேன்.

   Delete
 14. முதுமையை ஒன்றும் செய்ய முடியாது அதை எல்லோரும் கடந்துதான் ஆக வேண்டும்.
  எனது மாமனார் 105 வயதுவரை இருந்தார்கள். மூன்று வருடம் நடக்க முடியாமல் வீல்சேர் , வீல்சேரிலிருந்து கட்டில் என்று இருந்தார்கள்.

  என் மாமியார் எல்லோரும் மஞ்சள் குங்குமத்துடன் போகவேண்டும் என்று நினைப்பார்கள் நான் அப்படி நினைக்கவில்லை கடைசி வரை அவர்களைப் பார்த்துக் கொண்டு அதன் பின் தான் போக ஆசை என்றார்கள். அது போல் மாமாவின் கடைசி காலம் வரை உதவிக்கு ஒரு ஆள் போட்டுக் கொண்டார்கள். ஐந்து மகன், மருமகள், பேரக்குழந்தைகள் எல்லோரும் ஊருக்கு போய் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டோம். அவர்கள் இறுதிபயணம் என் கணவர் கைகளில்.

  உங்களுக்கு முடியவில்லை என்றால் உதவிக்கு ஆள் வைத்துக் கொள்ளுங்கள் . கிராமத்து உறவினர்களை ஊரிலிருந்து வந்து அப்பாவிடம் பேசி பார்த்து போக சொல்லுங்கள்.
  பேச ஆள் இல்லை என்பதே கொடுமை. படுத்துவிட்டால் பாயும் பகையாகும் என்பார்கள். என்ன செய்வது?

  அப்புறம் இறைவன் விட்ட வழி.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் அனுபவத்தோடு, எனக்கு நல்ல நெறிமுறைகளையும் சொன்ன மேடம் அவர்களுக்கு நன்றி.

   // உங்களுக்கு முடியவில்லை என்றால் உதவிக்கு ஆள் வைத்துக் கொள்ளுங்கள் . கிராமத்து உறவினர்களை ஊரிலிருந்து வந்து அப்பாவிடம் பேசி பார்த்து போக சொல்லுங்கள்.//

   என்னோடு கூட பிறந்தவர் ஒரு தங்கை மட்டுமே. அவரும், அவரது வீட்டுக்காரரும் ( இருவருமே வங்கியில் பணி புரிபவர்கள் ) அடிக்கடி எனது வீட்டிற்கு வந்து எனது அப்பாவை கவனித்துக் கொள்கிறார்கள். வருடாந்திர (மார்ச்சு மாத ) பணி முடிந்ததும் இருவருமே லீவு எடுத்துக் கொண்டு, எனது தந்தையை கவனித்துக் கொள்வதாக சொல்லி இருக்கிறார்கள். நாங்கள் நகர்ப்புறத்தில் இருந்தாலும், இன்னும் கிராமத்து சொந்தங்களுடன் ஆன உறவு இருக்கிறது. அவர்களும் வந்து செல்கிறார்கள். கடந்த இருபது நாட்களாக இருந்த ‘டென்ஷன்’ சற்று குறைந்து இருக்கிறது.

   Delete
 15. முதியோர் இல்லத்தில் சேர்ப்பது என்பது நல்ல விஷயமே. மாதம் தோறும் பணம் செலுத்தும் வகையான இல்லத்தில் சேர்க்கலாம். அதில் வருந்துவதற்கோ, வெட்கப்படுவதற்கோ ஏதுமில்லை.முதியோர் இல்லம் வேறு; அநாதை விடுதி என்பது வேறு - என்பதே பெரும்பாலான மனிதர்களுக்கு புரிவதில்லை. நடமாடுவதற்கு போதிய இடம் இல்லாத அடுக்கு வீடுகளில் முதியவர்களை வைத்துப் பராமரிப்பது அவர்களுக்கும் கஷ்டமே. ஆனால், நம்மைப் பெற்றவர்கள் என்ற அளவில், நாம் செய்யவேண்டிய கடமை இருக்கிறது என்ற சிந்தனையோடு, நாமே அவர்களைப் பாதுகாப்பதுதான் சிறந்தது. அதற்காக இப்போது இருக்கும் வீட்டை மாற்றவேண்டும் என்றால் அதையும் செய்துதான் ஆகவேண்டும். எனக்குத்தெரிந்த பலர், சொந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, வசதியான பெரிய வாடகை வீட்டுக்கு இதனாலேயே குடிபெயர்ந்திருக்கிறார்கள். adult diaper பயன்படுத்துவது நல்லதே. இருசில நாட்களில் இது பழகிவிடும்.
  -இராய செல்லப்பா நியூஜெர்சி

  ReplyDelete
  Replies
  1. மூத்த வலைப்பதிவர் இராய செல்லப்பா அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

   // முதியோர் இல்லம் வேறு; அநாதை விடுதி என்பது வேறு - என்பதே பெரும்பாலான மனிதர்களுக்கு புரிவதில்லை.//

   என்ற உங்களுடைய கருத்து எனது மனதில் ஆழமாக பதிந்தது. உங்கள் கருத்துரை மூலம் எனக்குள் இருந்த சில கேள்விகளுக்கும் விடைகள் கிடைத்தன. மீண்டும் நன்றி.

   Delete
 16. பெரியவர்களை எப்போதும் கவனித்துக்கொள்ள முடியாத அளவு தளர்ச்சியும் உடல், மன பலமின்மையும் நமக்கும் ஏற்படும்போது அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்து இன்னும் நல்லபடியாக பார்த்துக்கொள்ளலாம் என்பதிலும் தவறில்லை.

  ஆனாலும் வீட்டில்நாம் பார்ப்பதைப் போல் பார்த்துக் கொள்வார்களா?
  நமக்கு அப்பா அவர்?
  ஆனால்அவர்களுக்கு?
  கடைசி காலத்தில், தொந்தரவுகள் அதிகரித்தாலும், தந்தையோடு இணைந்திருப்பதே
  நன்று என்று எண்ணுகின்றேன் ஐயா
  இது எனது தனிப் பட்ட எண்ணம் ஐயா

  ReplyDelete
  Replies
  1. நண்பர் ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

   Delete
 17. எனக்கோ ஐம்பதாகிறது
  அறுபது கடந்த கிழமானால்
  எப்படி இருப்பேன் என்பதை
  தங்கள் பதிவைப் படிக்கையில்
  உணர முடிகிறதே!

  ReplyDelete
  Replies
  1. கவிஞர் யாழ்பாவாணன் அவர்களின் சுருக்கமான கருத்துரைக்கு நன்றி. நூறாண்டு காலம் வாழ்க! நோய் நொடியில்லாமல் வாழ்க! – என்று உங்களை வாழ்த்துகிறேன்.

   Delete
 18. முதுமை வரம் என்ற சிந்தனையில் நான் எழுதிய

  http://www.gunathamizh.com/2011/10/blog-post.html

  பதிவுகளை இப்போது மீள் மதிப்பாய்வு செய்யும் நிலைக்குத் தங்கள் பதிவு உள்ளது நண்பரே. முதுமையின் தேவையென்ன? பணமா? பாசமா? பேச்சுத் துணையா? தனக்கு என்ன தேவையென்றே தெரியாத ஒரு குழந்தை நிலை அது. அந்நிலையில் தங்களைப் போல அவர்களைப் பார்த்துக்கொள்ளும் பிள்ளைகளைப் பெற்றால் அந்த முதுமை அவர்களுக்கு வரம்! என்னதான் நாம் நிறைவாகப் பார்த்தாலும் அவர்கள் படும் துன்பம் நமக்கு சாபம்!

  ReplyDelete
  Replies
  1. முனைவர் இரா.குணசீலன் அவர்களின் வருகைக்கும், அன்பான கருத்துரைக்கும் நன்றி. நீங்கள் சுட்டிய உங்கள் பதிவுகளைப் படித்தேன். நிலையாமை குறித்த குண்டலகேசி, திருக்குறள் மற்றும் தொடித்தலை விழுத்தண்டினார் பாடிய புறப்பாடல் ஆகியவற்றை மீண்டும் படிக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி. நீங்கள் குறிப்பிட்ட புத்தர் கதை எனக்கு புதியது.

   ஒருவருக்கு முதுமை என்பது வரமா அல்லது சாபமா என்ற கேள்விக்கு, மனித வாழ்வின் கடைசி அத்தியாயம் துன்பமாகவே முடிகிறது என்ற பொதுவான நிகழ்வை வைத்தே, முதுமை ஒரு சாபம் என்று எழுதினேன்.

   ஒருவருக்கு ஒரு நோய் வந்தால், வீட்டிலும் வைத்துப் பார்க்கிறோம். மருத்துவ மனையிலும் வைத்துப் பார்க்கிறோம். முதுமை என்பதும் ஒரு நோய்; தீர்க்க முடியாதது. இருந்தாலும், கடைசி காலத்தில் அந்த முதியவரை வீட்டில் வைத்து பார்க்க முடியாத சூழ்நிலையில், ( தாங்களும் கஷ்டப்பட்டுக் கொண்டு அவரையும் கஷ்டப்படுத்திக் கொண்டும் இருப்பதை விட ) ஒரு நல்ல முதியோர் இல்லத்தில் மருத்துவ வசதிகளோடு பார்ப்பதில் தவறில்லை என்பது எனது கருத்து. ( குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தையை வளர்ப்பதற்கும் (Counting starts), முதுமையில் குழந்தைத் தனமான ஒரு முதியவரை பாதுகாப்பதற்கும் (count down ) நிறையவே வித்தியாசம் உண்டு என்பது இங்கு கவனிக்கத் தக்கது )

   ( எங்களது அப்பா விஷயத்தில் நாங்கள் இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதை இங்கு சொல்லிக் கொள்கிறேன் )

   Delete
 19. ஒரு அனுபவம் நம்மைத் தாக்கும் போது அல்லது அதனுடன் நாம் நேரிடையாக சம்மந்தப்பட்டு அதனைப் பற்றி எழுதும் எந்த அளவுக்கு சிறப்பாக எழுத முடியும் என்பதற்கு இந்தப் பதிவு ஒரு உதாரணம். மிக மிக அற்புதம். இரண்டு முறை வாசித்தேன். நீங்கள் என் பதிவில் கொடுத்த விமர்சனத்தின் பொருட்டு ஒரு தொடர் போல எழுத வேண்டும் என்று நினைத்ததில் இதுவும் ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. மரியாதைக்குரிய நண்பர் ஜோதிஜி திருப்பூர் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. நான் பட்ட, கேட்ட, பார்த்த அனுபவங்களின் அடிப்படையில் இந்த பதிவினை எழுதியுள்ளேன்.

   Delete
 20. என் அம்மா 54 வயதிலேயே புற்றுநோயால் காலமானார்கள். அப்போது எங்கள் அனைவருக்குமே சிறிய வயது என்பதால் நன்றாகக் கவனிக்க முடிந்தது. அதே போல் மாமனாரும் நாங்கள் உடல்நலம் தெம்பாக இருக்கையிலேயே காலமானார். அவரையும் கடைசிவரை அருகே இருந்து கவனித்துக் கொண்டோம். அதே என் அப்பாவுக்கு எண்பது வயதைக் கடந்த சமயம் எங்களுக்கும் வயது ஆகி விட்டது. ஆகவே மாற்றி மாற்றித் தான் பார்த்துக் கொண்டோம். கடைசியில் என் பெரிய அண்ணாவிடம் கொண்டு விட்டோம். ஆறுமாதம் படுத்த படுக்கையாக இருந்து காலம் ஆனார்.

  ReplyDelete
 21. ஆனால் இப்போது 93 வயதான என் மாமியாரை அதே போல் எங்களால் பார்த்துக்கொள்ள முடியவில்லை! ஆள் போட்டுத் தான் பார்த்துக் கொண்டோம். மாற்றி மாற்றிப் போய் இருந்தோம். ஆனாலும் அவரைப் படுக்கையிலிருந்து எடுக்க, கழிவறைக்கு அழைத்துச் செல்ல எங்கள் யாராலும் முடியவில்லை. ஆள் தான் போட்டோம். என்றாலும் அவரை மருத்துவமனையில் சேர்த்துச் சித்திரவதைப்பட்டுத் தான் இறந்தார். அந்த வயதில் டயலிஸிஸ், ஸ்டென்ட் வைக்கிறதுனு எல்லாமும் பண்ணிட்டாங்க ஆஸ்பத்திரியில்! நாங்க எவ்வளவோ முயற்சித்தும் டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. கடைசியில் உண்ண உணவு கொடுக்க முடியாமலும், தாகத்துக்கு நீர் அருந்த முடியாமலும், அவங்களுக்கு மிகவும் பிடித்த காஃபியைக் குடிக்க முடியாமலும் அவங்க பறந்த பறப்பும், தவிப்பும் இன்னமும் வேதனையைத் தருகிறது. ஆகவே நீங்கள் வெளியே போகமுடியாமல் தவிக்க வேண்டாம். அவசியத்துக்கு வெளியே சென்று தான் ஆக வேண்டும். ஓர் நம்பிக்கையான ஆளை உங்கள் தகப்பனாரைப் பார்த்துக் கொள்ளப் போடுங்கள். மருத்துவமனைகளில் சொல்லி வைத்தாலே பயிற்சி பெற்ற செவிலியரை அனுப்பி வைப்பார்கள்.

  ReplyDelete
 22. இப்போதைக்கு எங்கள் இருவருக்கும் ஓரளவு தெம்பு இருக்கிறது. ஆகையால் தனியாக இருந்தாலும் எந்த நேரம் யாருக்கு எப்போதோ என்னும் எண்ணம் இருக்கத் தான் செய்கிறது. ஆகவே இப்போதே முதியோர் இல்லம் செல்லும் எண்ணமும் எங்களிடம் உண்டு. ஆனால் எங்கள் பிள்ளை இன்னமும் சம்மதிக்கவில்லை. என்றாலும் எங்களைப் பொறுத்தவரை அது தான் சரியான முடிவாகவும் தெரிகிறது! போகப் போகப் பார்க்க வேண்டும். இறைவன் கணக்கு என்னவோ!

  ReplyDelete
  Replies
  1. அனுபவம் உள்ளவர்களின் பின்னூட்டம் மிகுந்த கருத்தாழம் மிக்கது. எல்லோருக்கும் பயன் தரக் கூடியது. நல்ல அவசியமான பதிவை தமிழ் இளங்கோ அவர்கள் எழுதியிருக்கிறார்கள். நிறைய பயன் மிக்க பின்னூட்டங்களும் வாசிக்க நேர்ந்தது.

   Delete
  2. Adult diaper பயன்படுத்தலாம். தப்பில்லை. என் அப்பாவைக் கழிவறைக்குக் கூட்டிச் செல்வதற்குள்ளாக வழியெல்லாம் போய் விடுவார். ஆகவே டயபர் சிறந்ததே! என்ன ஒண்ணு! எங்க மாமியாருக்கு டயபர் கட்டியதில் அவங்களுக்கு அது பிடிக்காமலும், ஒத்துக்கொள்ளாமலும் நீர் கட்டிக் கொண்டு விடும். ரொம்பக் கஷ்டப்பட்டுப் போவார்கள்! அதையும் யோசிக்க வேண்டி இருக்கு! :(

   Delete
  3. மூத்த வலைப்பதிவர் மற்றும் எழுத்தாளரும் ஆன திருமதி கீதா சாம்பசிவம் அவர்களின் அனுபவப் பூர்வமான கருத்துரைக்கு நன்றி. உங்கள் கருத்துரை மூலம் எனக்கு வேண்டிய ஆலோசனையும் அப்பாவை கவனித்துக் கொள்வதில் சில வழிமுறைகளும் கிடைத்ததில் எனக்கு ஒரு ஆறுதல்.

   ( மீள் வருகை தந்து கருத்துரை சொன்ன நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களுக்கு நன்றி )

   Delete
 23. துளசி: என் அம்மா அப்பாவும் என்னுடன் தான் இறுதிவரை இருந்தார்கள். எங்களை விட வயதில் மிகப் பெரியவர்கள் என்பதால் நாங்கள் சிறியவர்களாக இருந்ததால் பார்த்துக் கொள்ள் முடிந்தது. அதாவது எங்கள் வயது அப்போது 40 களில்தான் இருந்தது.....இப்போது எனது அக்கா என்னுடன் தான் காதும் கேட்காது வாய் பேசவும் முடியாது. அவர் தான் வீட்டு வேலைகள் அனைத்தும் கவனித்துக் கொள்கிறார். வயது 60 க்கு மேல்...எங்களுக்கு உறு துணையாக நாங்கள் இருவரும் வேலைக்குச்செல்வதாலும் பல சமயங்களில் ஊருக்குச் செல்வதாலும் அவர் தான் பிள்ளைகளையும் வீட்டையும் கவனித்துக் கொள்கிறார். இப்படியே கடந்து செல்கிறது இறைவன் விட்ட வழி...என்று.

  கீதா: எனது மாமியாருக்கு 91 முடிந்து 92. மாமியார் தனது சொந்த வீட்டிலேயே, கடைசி மகனுடன் இருக்கிறார். மாற்றி ஒவ்வொரு வீட்டிலும் இருந்து கொள்வார். நடமாடுகிறார் கம்பு வைத்துக் கொண்டு. என் தந்தைக்கு 83 வயதாகிறது. தனியாகவே எல்லாம் செய்துகொள்கிறார் என்னுடன் இருந்தாலும். தனியாகவே ஊருக்குச் சென்று வந்து விடுவார்...நல்ல சுறு சுறுப்பு....

  என் மாமனாருக்கும் -90, என் பாட்டியும் -92 இறக்கும் வரை கடைசி நாட்களில் மாமனாருக்குமறதி நோய் இருந்ததால், ஒரு ஆள் உதவிக்கு வைத்துக் கொண்டு சமாளித்தோம். பாட்டி (என் அப்பாவின் அம்மா) என்னுடன் தான் இருந்தார். இறுதி 6 மாதங்கள் மறதி வந்து விட்டது. டயஃபர் போட்டு பார்த்துக் கொண்டோம். தம்பி வெளியூரில் இருந்ததால் அவன் பணம் அனுப்பிக் கொடுத்துக் கவனித்துக் கொண்டான். ஒரு ஆள் போட்டும் பார்த்துக் கொண்டோம்...

  நீங்களும் உதவிக்கு ஒரு ஆள் போட்டுக் கொள்ளலாம் சகோ...

  ஆனால் பதிவு அருமை. இனியுள்ள காலங்களில் யோசிக்க வைக்கும் ஒன்று...

  ReplyDelete
  Replies
  1. அன்பான ஆலோசனையும் கருத்துரையும் தந்த இரட்டையர்களுக்கு நன்றி.

   Delete
 24. உடலுக்கும் தனது எண்ணங்களுக்கும் மட்டுமே முதுமை ஏற்படுகிறது.ஆனால் செயல்களுக்கும் மனத்திற்கு முதுமை என்பது இல்லை.முதுமை என்பது சாபம் இல்லை.வாழ்க்கை தேடலில் ஒவ்வொரு அனுபவங்களின் புரிதலுக்கான காலமே இம்முதுமை காலம்.

  பெற்ற பிள்ளைகளால் முதியோர் இல்லத்தில் கைவிடும் போது தான் முதுமை ஒரு சாபமாகிறது என்பது மிகையாகும்.முதியவர்கள் இல்லை என்றால் வாழ்கையின் மிகப்பெரிய பொக்கிஷத்தை அழிப்பதற்கு சமம்.எனது வயதின் அனுபவத்தில் முதுமை குறித்த கருத்துகளை இவ்வளவுதான் தெரிவிக்க முடிந்தது ஐயா.

  முதுமையின் புரிதலை இளமையிலே தெரிந்துக் கொண்டேன் மிக்க நன்றி.

  ReplyDelete
  Replies
  1. எனது கட்டுரையை ஆர்வமாகப் படித்து கருத்துரை தந்த, இளம் வலைப்பதிவர் வைசாலி செல்வம் அவர்களுக்கு நன்றி. கணவன் – மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருந்தால், அவர்கள் தங்கள் குழந்தையை, குழந்தைகள் காப்பகத்தில் விட்டுச் செல்வது போன்றதுதான் ஒரு முதியவரை காப்பகத்தில் வைத்து கவனித்துக் கொள்வதும் என்று நினைக்கிறேன்.

   Delete
 25. மறுபடியும் ஒரு கருத்தைத் தெரிவிக்க இங்கு வந்தேன்.
  உங்களின் கருத்தை நானும் ஆமோதிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது.
  என் மூத்த சகோதரியின் மகனிடம் தான் என் மூத்த சகோதரியும் [ வயது 75] என் தாயாரும் [ வயது 98] இருக்கிறார்கள். என் மூத்த சகோதரிக்கு ஒரு மன‌நிலை பிறழ்ந்த மகனும் [ வயது 42] இருக்கிறார். நான் வெளி நாட்டில் வாழ்வதாலும் என் இளைய சகோதரி பல வேலைகளினால் எப்போதும் அலைச்சலிலேயே இருப்பதாலும் என் தாயாரின் விருப்பத்தாலும் என் மூத்த சகோதரியுடன் தான் என் தாயார் இருக்கிறார். இவர்கள் எல்லோரையும் என் சகோதரி மகனும் மருமகளும் தான் சமாளிக்கிறார்கள். இருவரும் அவரவர் பணிகளுக்குச் செல்வதால் தான் வாழ்க்கைப்பிரச்சினைகளை சமாளிக்க முடிகிறது. இப்போதைக்கு என் மூத்த சகோதரி தான் என் அம்மாவை கவனித்துக்கொள்கிறார். என் அம்மா ஆரோக்கியமாக இருக்கிரார். ஆனால் என் மூத்த சகோதரிக்கு சமீபத்தில் தான் இதய வால்வொன்று சரியாக வேலை செய்யவில்லை என்பதையும் UMBILICAL HERNIA என்ற கடுமையான குடலிறக்கம் இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது. அறுவை சிகிச்சை செய்யும் நிலைமையைத் தாண்டி விட்டதால் அதிகம் ஓய்வில் தான் இருக்கிறார்கள். அவர்கள் இனி எப்படி ஆரோக்கியமல்லாத ஒருவரை கவனித்துக்கொள்ள முடியும்? யாரையேனும் நம்பி இரு முதியவர்கள் இருக்கும் வீட்டில் வைக்க முடியுமா? கொலைகள் சர்வ சாதாரணமாக நடக்கும் இந்த காலத்தில்? இந்த மாதிரி சூழ்நிலைகளில் வயது ஏற ஏற ஏற்படும் உடல் சார்ந்த பிரச்சினைகள், மனத் தளர்ச்சி, உடல் தளர்ச்சி, இவற்றை அறுபது வய‌திலேயே சமாளிக்க முடியாமல் திணறும்போது, நம்மை விட பல வருடங்கள் தாண்டிய முதியவர்களை எங்ஙனம் தெம்புடன் கவனிக்க இயலும்? அங்கு தான் ஒரு சேவை மனப்பான்மையுடைய, கருணையுடன் கவனிக்கக்கூடிய, ஒரு முதியோர் இல்லம் வரமாகிறது.

  எங்களுடன் பல வருடங்கள் வெளி நாட்டில் கழித்த எங்கள் நண்பர்கள் கூட மகனிடமும் மகளிடமும் வேண்டிக் கேட்டுக்கொண்டு தற்போது முதியோர் இல்லத்தில் பணம் கொடுத்து வ‌யது முதிர்ந்த‌ காலத்தை அமைதியுடன் கழிக்கிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. மேடம் அவர்களின் மீள் வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றி.

   Delete
 26. ஒளிவு மறைவின்றி
  நல்ல நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வது போல
  பகிர்ந்த விதம் மனம் கவர்ந்தது

  அதனைப்போலவே பதிவர்களும்
  ஒரு வெளிப்படையான உண்மையான
  அக்கறையுடன்
  பின்னூடங்கள் இட்டிருந்தது
  இன்னும் சிறப்பாக இருந்தது

  ஒரு தனிப்பதிவு எழுதும் எண்ணமிருக்கிறது

  வாழ்த்துக்களுடன்...

  ReplyDelete
  Replies
  1. கவிஞர் S.ரமணி அய்யா அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. நீங்கள் எழுதப் போகும் தனிப்பதிவை ஆவலோடு எதிர் பார்க்கிறேன்.

   Delete
 27. ரீடரில் வாசித்தாலும் கருத்துரை இடவில்லை... (வியாபார பயணத்தில் இருந்ததால்)

  பல பின்னூட்டங்கள் மூலம், நண்பர்களின் ஆலோசனைகளும், அறிவுரைகளையும் அறிந்து கொள்ள முடிந்தது...

  சிரமமான காலகட்டத்தில் உள்ளீர்கள்... வருந்துகிறேன்...

  தாங்களே கவனித்துக் கொள்வதே சிறந்தது என்பது எனது கருத்து...

  ReplyDelete
  Replies
  1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி. இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில்தான் இருக்கிறேன்.

   Delete
  2. ஆனால் நடைமுறையில் முதுமை என்பது ஒரு வரமல்ல; அது ஒரு சாபமே. சாபம் யார் கொடுத்தது என்றுதான் தெரியவில்லை. உள்ளம் இளமையாக இருந்தாலும், தளர்ச்சியின் காரணமாக உடல் அதற்கு ஒத்துழைக்க மறுக்கிறது. ஞாபக மறதியும், நோய்களும், வீண் பயமும் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன.. நேற்றுவரை அதிகார தோரணையில் இருந்தாலும், இன்று கையில் காசு பணம் பவிசு என்று இருந்தாலும், பார்த்துக் கொள்ள ஆள் இருந்தாலும், ஒவ்வொன்றிற்கும் அடுத்தவர் துணையின்றி எதனையும் செய்ய முடியாத நிலைமை. நம்மால் மற்றவர்களுக்கு வீண் தொந்தரவு என்ற கவலை என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

   Delete
 28. எனது ஃபேஸ்புக் தளத்தில் www.facebook.com/tthamizhelango இந்த பதிவிற்கு வந்த கருத்துரைகள்

  David Jayakar Roy Nalla pathivu.
  Like • Reply • April 5 at 10:41am

  Asokan Ramalingam True
  Like • Reply • April 5 at 10:48pm

  Thamizh Elango T லைக் செய்த மற்றும் கருத்துரை தந்த, நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.
  Like • Reply • April 8 at 5:47am

  Devatha Tamil உண்மை சார்
  Like • Reply • April 8 at 6:12am

  Esther Sundersingh U don''t have patience to take of ur appa . It is not a curse. It is a blessing.
  Like • Reply • April 8 at 12:51pm

  ReplyDelete
 29. எல்லோரும் எப்படி சொல்வது என்று எழுதத் தயங்கும் விஷயங்களை மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்! படுக்கையில் இருந்த தன தாயாரை கவனித்துக் கொண்ட என் தோழி ஒருத்தி, "சில சமயம் நமக்கு முடியாமல் போய் கோபம் வருகிறது" என்றாள். உண்மைதான். எல்லோரும் மனிதர்கள்தானே? மனச் சோர்வை தவிர்க்க உதவிக்கு ஆள் வைத்துக் கொள்வதுதான் நலம்.

  ReplyDelete
  Replies
  1. மேடம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நமது நாட்டில் முதியோர் நலன் மற்றும் முதியோர் இல்லம் குறித்த விழிப்புணர்வு இன்னும் வரவில்லை என்றே நான் நினைக்கிறேன். தொடர்ந்து எனது தந்தையை எங்கள் வீட்டில் வைத்து, நான் அருகிலேயே இருந்து ( Diaper மாற்றுவது போன்ற ) எல்லா காரியங்களையும் பார்த்துக் கொண்டதில் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டது. சரியான அட்டெண்டரும் கிடைக்கவில்லை. ஹோமிலும் சேர்க்க மாட்டேன் என்கிறார்கள். எனவே அருகிலுள்ள எனது தங்கை, அவர்களது வீட்டிற்கு அப்பாவை அழைத்துச் சென்று இருக்கிறார்கள். இப்போதைக்கு எனக்கு கொஞ்சம் ஓய்வு.

   Delete
 30. ஓர் வருத்தமான செய்தி :(
  ============================

  நம் அன்புக்குரிய வலைப்பதிவர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களின் தந்தையான திருமழபாடி திரு. திருமுகம் (வயது: 92) அவர்கள் நேற்று 08.07.2017 சனிக்கிழமை மதியம் 12.45 மணி அளவில் இயற்கை எய்திவிட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் இங்கு பின்னூட்டமிட்டுள்ள அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.

  அவர்களின் இறுதி ஊர்வலம், திருச்சி கே.கே.நகர் பஸ் ஸ்டாப் அருகே நாகப்பா நகர் 3-வது கிராஸில் உள்ள அவரின் இல்லத்திலிருந்து, இன்று 09.07.2017 ஞாயிறு பகல் சுமார் 2 மணி அளவில் புறப்பட்டு விட்டது.

  அவரின் ஆன்மா சாந்தியடையவும், அவரின் மறைவினை நினைத்து வருந்தி வாடும் அவரின் குடும்பத்தாருக்கு மன நிம்மதி ஏற்படவும், நாம் அனைவரும் பிரார்த்தித்துக்கொள்வோமாக !

  ReplyDelete