அன்பு நண்பர்களுக்கு வணக்கம்! இன்று எனக்கு பிறந்தநாள்
(01.03.1955). வயது 63 முடிந்து 64 தொடங்கியுள்ளது. நான் உயிரோடு இருக்கிறேனா என்பதனையே,
இன்று கண் விழித்த பிறகுதான் நிச்சயம் செய்து கொண்டேன். ஏனெனில், 10 நாட்களுக்கு முன்னர்
(19.02.18 திங்கட் கிழமை - காலை 9.15 மணி அளவில் எனக்கு கடுமையான மூச்சுத் திணறலும் மயக்க நிலையும் ஏற்பட்டு, ஆபத்தான நிலைமையில், ஒரு மருத்துவமனையின் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டேன். அங்கு உடனடியாக எனக்கு வேண்டிய
முதலுதவிகளை நன்றாகவே செய்து காப்பாற்றி விட்டார்கள். பல்வேறு சோதனைகளுக்குப் பின்னர்,
எனக்கு இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், உடனடியாக இதய அறுவை
சிகிச்சை (Open Heart
Surgery) செய்ய வேண்டும்
என்றும் சொல்லி 23.02.18 வெள்ளியன்று டிஸ்சார்ஜ் செய்தார்கள்; வீட்டுக்கு சென்றுவிட்டு
ஒருவாரம் கழித்து ஆபரேஷனுக்காக வரச் சொன்னார்கள்.
(நான் ஏற்கனவே வலது முழங்கையில் வந்த பெரிய கட்டிக்கு ஒரு அறுவை
சிகிச்சை, அப்புறம் ‘appendix’ ஆபரேஷன் மற்றும் அண்மையில் விபத்து காரணமாக இடது குதிகாலில்
அறுவை சிகிச்சை – என்று மூன்று அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டவன். எனவே மீண்டும் அறுவை
சிகிச்சையா என்று எனக்குள் ஒரு நடுக்கம்)
வீட்டுக்கு வந்தவுடன், எதற்கும் இன்னொரு டாக்டரிடம் (Second
Opinion) கேட்டுக் கொள்ளலாம் என்று, (27.02.18 செவ்வாய்க் கிழமை) மூத்த அனுபவம் வாய்ந்த
M.D.,D.M – Cardiologist ஒருவரிடம் சென்று முழு விவரத்தையும், எனது பயத்தினையும் சொன்னோம்.
அவரது மருத்துவ மனையில், எனக்கு ECG Scan,
BP, Urine மற்றும் Blood சோதனைகள், Echo Test மற்றும் Tread Mill Test ஆகியவை செய்யப்பட்டன
.
அதன் பிறகு மாலை 4.30 அளவில் டாக்டர் எங்களை அழைத்தார். அப்போது
அவர் // இதற்கு முன்பு நீங்கள் பார்த்த, மருத்துவ மனையில் கொடுத்துள்ள CD மற்றும் ரிப்போர்ட்டுகள்
அடிப்படையில் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருக்கின்றன. இதய அறுவை சிகிச்சை
(Bypass surgery) செய்து கொள்வதா வேண்டாமா என்பது குறித்து நீங்கள்தான் முடிவு எடுத்துக்
கொள்ள வேண்டும். அதேசமயம் இதய அறுவை சிகிச்சை செய்து விட்டதாலேயே, எல்லாம் சரியாகி
விட்டது என்று யாராலும் Guarantee தர முடியாது. யாரும் சொல்லவும் மாட்டார்கள், அறுவை
சிகிச்சைக்குப் பின்னரும் RISK மற்றும் உணவு கட்டுப்பாடு போன்றவை இருக்கத்தான் செய்யும்
// என்று சொன்னார். மேலும் இங்கு செய்த சோதனைகளிலும், உங்களுக்கு இதயத்தில் பிரச்சினைகள்
இருப்பதாகவே காட்டுகின்றன என்று சொன்னார்.
நான் எனது கருத்தாக // டாக்டர் எனக்கு இதய அறுவை சிகிச்சை செய்து
கொள்ள பயமாக இருக்கிறது; முடிந்தவரை அறுவை சிகிச்சை செய்து கொள்ளாமலேயே மருந்துகளை
எடுத்துக் கொள்ளவே விரும்புகிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்களோ, அதன்படியே செய்கிறேன்
// என்று தெரிவித்தேன்.
உடனே டாக்டர் // அப்படியானால், நீங்கள் உணவு எடுத்துக் கொள்ளுவதில்
மற்றும் பழக்க வழக்கங்களில், நீங்கள் கட்டுப்பாடுடன் இருந்து கொள்ள வேண்டும்; இந்த
முறையிலும் Guarantee கிடையாது. RISK இருக்கத்தான் செய்யும் // என்று சொன்னார். மேலும்
டாக்டர் என்னிடம் எந்த மாதிரியான உணவு எடுத்துக் கொள்ள வேண்டும், எப்படி எப்படி எல்லாம்
கட்டுப்பாடுகளுடன் இருக்க வேண்டும் என்று சொல்லி விட்டு, முப்பது நாட்களுக்கு மருந்துகள்
எழுதி கொடுத்துவிட்டு 15 நாட்கள் கழித்து வரச் சொல்லி இருக்கிறார்.
நானும் 27.02.18 செவ்வாய்க் கிழமை இரவிலிருந்து அவர் கொடுத்த மருந்தையே
எடுத்து வருகிறேன். எல்லாம் இறைவன் செயல் மற்றும் அருள் என்று நான் நம்புகிறேன். நம்பிக்கையே
வாழ்க்கை.
( இன்று (01.03.18) எனது ஃபேஸ்புக் பக்கம் நான் எழுதியது இது.
ReplyDeleteநலம் பெற பிரார்த்தனைகள் இளங்கோ சார்
நண்பர் அவர்கள் உண்மைகள் - மதுரைத் தமிழன் அவர்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி.
Deleteபதிவர் அகிலாவை தொடர்பு கொள்ளவும் இப்பதான் அவர் சிகிச்சை பெற்றார் நிச்சயம் நல்ல வழிகாட்டியாக இருப்பார்
ReplyDeleteநண்பரின் ஆலோசனைக்கு நன்றி. பதிவர் அகிலாவின் வலைத்தள முகவரியை தெரிவிக்கவும்.
Deleteஉடல்நலனை கவனியுங்கள் .அதிகம் ஸ்ட்ரெஸ் தரும் எவற்ற்றையும் தவிருங்கள் அண்ணா .
ReplyDeleteஇறைவன் துணையிருப்பார்
சகோதரி அவர்களுக்கு நன்றி.
Deleteஅன்பின் அண்ணா அவர்கள் பல்லாண்டு நலமுடன் வாழ வேண்டுகின்றேன்...
ReplyDeleteகவலை வேண்டாம்.. கடவுள் காத்து நிற்பார்..
சகோதரர் தஞ்சையம்பதி துரை செல்வராஜூ அவர்களுக்கு நன்றி. தாங்கள் நலமா?
Deleteஅய்யா வணக்கம். உடல்நலம் பெற்று வலைப்பக்கம் (முகநூல்வழியாக) வந்தது பற்றி மகிழ்ச்சி. விரைவில் பூரண குணமடைவீர்கள், வாழ்த்துகள்.
ReplyDeleteமுடிந்தால் இன்னொரு மருத்துவரிடமும் கருத்து (ஒபீனியன்) கேட்கலாம். என் துணைவியாருக்குத் தாங்கள் காட்டிய கே.எம்.சி.யில் காட்டி, அவர்கள் ப்ளாக் இருக்கிறதென்று சந்தேகப் படுத்தி, அதற்கான பரிசோதனைகளைச் செய்தபிறகு அறுவைச் சிகிச்சைதான் என்று சொல்லிவிட்டார்கள்! பின்னர் சென்னையில் இன்னொரு கருத்துக் கேட்டு, “டிரிபிள்எம்” மருத்துவமனை போய் மீண்டும் அனைத்துச் சோதனைகளையும் செய்தபிறகு அவர்கள், “ஒன்றுமில்லை போய்வாருங்கள்” என்று சொல்லி அனுப்பி இப்போது நலமாக உள்ளார்கள் அதன்பின் கண்புரை அறுவையும் செய்துவிட்டோம்!
எனவே, மற்றொரு மருத்துவரிடம் காட்டுவது நல்லதுதான். எனினும் தாங்கள் சொன்னபடி நம்பிக்கைதான் வாழ்க்கை. நீங்கள் இன்னும் நல்ல உடல்நலத்தோடு இன்னும் பல்லாண்டுகள் நலமுடன் வாழ்வீர்கள்.
இன்னும் நிறைய எழுத வேண்டியிருக்கு அல்லவா? ஆமா, உங்கள் புகைப்படக் கருவி நன்றாகத்தானே இருக்கிறது? படம் இல்லாமல் உங்கள் பதிவு… விரைவில் நல்ல நல்ல படங்களோடு அடுத்த பதிவிடுவீர்கள்! வணக்கம்.
ஆசிரியர் அவர்களின் ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி. நான் மருத்துவ மனையில் இருந்தபோது எனது மனைவி, நீங்கள் செல்போனில் அவரிடம் பேசிய விவரத்தை சொன்னார். மேலும் வாட்ஸ்அப் மூலம் நீங்கள் எனக்கு அளித்த தகவலையும் அறிந்து கொண்டேன்.
Deleteஅன்பு நண்பர் இளங்கோ அவர்களுக்கு, வணக்கம். தங்களுக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.
ReplyDelete’நம்பிக்கையே வாழ்க்கை’ என்ற தங்களின் இந்தத் தலைப்பு மிகவும் பொருத்தமாக உள்ளது. அதே நம்பிக்கையுடன் மனதை தைர்யமாக வைத்துக்கொள்ளுங்கள்.
தாங்கள் மற்றொரு டாக்டரிடம் SECOND OPINION னுக்காகச் சென்றது நல்லதுதான்.
இருதயத்தில் அடைப்பு இருப்பதாகச் சொல்வதும், OPEN HEART SURGERY செய்துகொள்ள வேண்டும் எனச் சொல்வதும், சம்பந்தப்பட்ட நபருக்கு நிச்சயமாகக் கவலை அளிக்கக் கூடியதாகவே இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.
இருப்பினும், எனக்குத் தெரிந்த நான்கு ஆண்கள் இந்த OPEN HEART SURGERY செய்துகொண்டுள்ளார்கள்.
அதில் நாகநாதன் என்ற ஒருவருக்கு சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இப்போது அவரின் வயது: 61+. தற்சமயம் சென்னையில் இருக்கிறார். அடிக்கடி தன் சொந்த ஊரான நம் திருச்சிக்கு வந்து போய்க்கொண்டு இருக்கிறார்.
அடுத்தவர் சங்கர் என்று பெயர். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு செய்து கொண்டார். அவருக்கு இப்போது வயது: 63+.
மூன்றாவது நபர் குமார் என்று பெயர். இவர் செய்துகொண்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது. இவரின் இப்போதைய வயது 62+.
சமீபத்தில் 3 மாதங்களுக்கு முன்பு செய்துகொண்டுள்ள பெரியவர் பெயர்: கிருஷ்ணமூர்த்தி. அவரின் வயது இப்போது 80+ ஆகிறது.
இதில் கடைசியாகச் சொல்லியுள்ள மூவரும் எங்கள் அடுக்கு மாடி குடியிருப்பில் தான் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருமே ஆகாரத்தில் இன்னமும் மிகவும் கட்டுப்பாடாக மட்டுமே இருந்து வருகிறார்கள். மற்றபடி ஏதும் அதிக சிரமம் இல்லாமல் நடமாடிக்கொண்டும், பேசிக்கொண்டும், வாக்கிங் + ஷாப்பிங் + கோயில்களுக்குப் போய்க்கொண்டும் இருக்கிறார்கள்.
அதனால் இந்த ஆபரேஷன் அவசியத் தேவைதான் என்று, ஒருவேளை டாக்டர்கள், வலியுறுத்திச் சொல்லிவிட்டால், தாங்களும் தைர்யமாகச் செய்துகொள்ளலாம் என்பது எனது சொந்தக் கருத்தாகும்.
இன்றைய நவீன மருத்துவ விஞ்ஞானத்தில் எல்லாவற்றிற்கும் ஓரளவுக்கு நல்ல தீர்வுகள் உள்ளன. அதனால் அதிகம் பயப்பட வேண்டாம். கடவுள் அருளால் தங்களுக்கும் எல்லாம் செளகர்யமாகும். நானும் தங்களுக்காகப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். ALL THE BEST, Sir.
அன்புடன் VGK
அன்புள்ள மூத்த வலைப்பதிவர் V.G.K அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.
Deleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் . நீங்கள் பூரண உடல் நலம் பெற்று மகிழ்வுடன் நீண்ட காலம் வாழ மனமார்ந்த பிரார்த்தனைகள் . - பாபு
ReplyDeleteவணக்கம் நண்பரே முதலில் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteதாங்கள் நலமுடன் வாழ எமது பிரார்த்தனைகள்.
நம்பிக்கையோடு இருங்கள்.
நன்றி நண்பரே!
Deleteபிறந்ததின வாழ்த்துக்கள்.முழுமையாக நலம்பெற வாழ்த்துக்கள்.பதிவு எழுதியது மகிழ்ச்சி.
ReplyDeleteஇதய அறுவை சிகிச்சையில்லாம stent பொருத்தும் முறை ஒன்று இருப்பதாக சிலர் சொன்னார்கள்.
நன்றி நண்பரே!
Deleteஇருதயப் பரிசோதனையில் இரத்தக்குழாய் அடைப்பு எத்தனை சதம் இருப்பதாகச் சொன்னார்கள்? 30 சதத்திற்கு குறைவாக இருந்தால் அறுவை சிகிச்சை தேவையில்லை. ஆகாரக் கட்டுப்பாடு, மருந்துகள் மற்றும் அமைஇயான வாழ்க்கை முறை ஆகியவற்றினால் நலமாக வாழலாம்.
ReplyDeleteஇன்னொன்றையும் சொல்ல விரும்புகிறேன். இன்றைய கார்ப்பரேட் மருத்துவக் கலாச்சாரத்தில் சிலபல சமயம் தேவையில்லாத-அல்லது அவசரமில்லாத அறுவை சிகிச்சைகளையும் செய்துகொள்ளத்தூண்டப்படுகிறோம். அதுவும் இருதய சம்பந்தப்பட்டது என்றால் நம்மைச்சுற்றி உள்ளவர்களே நம்மை மிகவும் அதைரியப்படுத்தி விடுவார்கள்.
ஒன்றுக்கு இரண்டு டாக்டர்களை கன்சல்ட் செய்து அவசியம் என்றால் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.
எதுவாக இருந்தாலும் பயப்படத்தேவையில்லை.
தாங்கள் இந்த இக்கட்டிலிருந்து நலமாக வெளிவர என் வாழ்த்துகள்.
முனைவர் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.
Deleteபிறந்தநாள் வாழ்த்துக்கள்... என்றும் நலமோடு நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
ReplyDeleteஇதுக்கெல்லாம் அதிகம் யோசிக்காதீங்கோ... இன்னும் ஒரு தடவை வேறு டொக்டரைப் பாருங்கோ.. ஒபரேஷன் செய்வது நல்லதெனில் செய்யுங்கோ.. இப்போ எல்லாம் பை பாஸ் ஒபரேசன் என்பது சும்மா சின்ன விசயம் போலாகி விட்டது.. மிக நல்ல முறைகள் வந்து விட்டன...
எனக்குத் தெரிந்து பலர் செய்து விட்டார்கள் நம் குடும்பங்களில் எங்கள் அம்மா கூட கிட்டடியில் பை பாஸ் செய்தா . எனக்கு தெரிஞ்சு சிலர் 80 வயதிலும் செய்து நல்ல உசாராக இருக்கினம்..
செய்யாமல் பயப்பிட்டுக் கொண்டிருப்பதைவிட செய்ய வேண்டும் எனில் வச்சிருக்காமல் செய்திடுங்கோ ஒன்றும் பயமில்லை.. ஒரு வாரட்த்ஹில் வீட்டுக்கு வந்திடலாம்... பினர் கொஞ்ச நாளைக்கு கவனமாக இருக்கோணும்.
சும்மா ஆரம்ப நிலை எனில் மட்டுமே உணவுக் கட்டுப்பாடு சரியாகும் .. தெரியவில்லை.. எதுக்கும் இன்னொரு தடவை டொக்டரைக் கலந்தாலோசியுங்கோ.. இதில் பயப்பட ஏதுமில்லை. நீங்க நலமே இருப்பீங்க.
சகோதரி அவர்களுக்கு நன்றி.
Deleteஉடல் நலத்தில் கவனம் வைக்கவும். சீக்கிரம் நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மருத்துவர் சொல்வதை கவனமுடன் பின்பற்றுங்கள்.
ReplyDeleteநண்பருக்கு நன்றி.
Deleteஎந்த மருத்துவரை அணுகினாலும் அவரப் பற்றிய நம்பிக்கை அவசியமிதய அறுவை சிகிச்சை என்பது இப்போது சாதாரணமாகி விட்டது எனக்குப் பல பேரைத்தெரியும் நன்றாகவே இருக்கிறார்கள்யாரும் எதற்கும் காரண்டி தர முடியாது மனதில் உறுதி வேண்டும் இப்போதெல்லாம் மருத்துவர்களுக்குள்ளேயே ஒத்த அபிப்பிராயமிருப்பதில்லை உடல் நம்முடையது நமக்கு எந்த மருத்துவர் நம்பிக்கையாகப் பதில் தருகிறாரோ அவரிடம்சிகிச்சை பெறு வதே நல்லது பயம் வேண்டாம் சீக்கிரமெ நலமாவீர்கள் என்னும் நம்பிக்கையுடன் இருங்கள்
ReplyDeleteமூத்த வலைப்பதிவர் G.M.B அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.
Deleteபேஸ்புக்கில் உங்கள் பதிவினைப் பார்த்தேன். உங்களின் உடல் நலனை கவனித்துக்கொள்ளுங்கள். அனாவசியமான சிந்தனைகள் வேண்டாம். அனைத்தும் நல்லதாகவே நடக்கும். எழுதுபவர்களுக்கும், வாசிப்பவர்களுக்கும் அவர்களுடைய எழுத்தே நின்று தைரியம் கொடுக்கும். விரைவில் நீங்கள் முழுமையாக நலம் பெற மனம் நிறைந்த வாழ்த்துகள்.
ReplyDeleteமுனைவர் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.
Deleteகவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்களின் கருத்தினை வழி மொழிகின்றேன் ஐயா
ReplyDeleteநம்பிக்கைதான் நம்மை காப்பாற்றும்
நம்பிக்கைதான் நம்மை வழிநடத்தும்
கவலை வேண்டாம்
தாங்கள் நலமோடு வாழ்வீர்கள்
ஆசிரியர் அவர்களுக்கு நன்றி. உங்களோடு செல்போனில் பேசிய பிறகு, சில விஷயங்களுக்கு வழிகாட்டுதல் கிடைத்தது.
Deleteரொம்ப நாளாக தளத்தில் உங்களைக் காணோமே என்று தோன்றிக்கொண்டிருந்தது. கோபு சார்.. அவருடைய தளத்தில் உங்களுக்கு உடல் நலமில்லை என்பதுபோல் எழுதியிருந்த மறுமொழி படித்த ஞாபகம் இருக்கிறது. உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்பவர்கள் பெரும்பாலும் இந்த மாதிரி பிரச்சனையை சந்திக்கவேண்டும். ஆனால் பயத்துக்கு ஒன்றுமில்லை. (சொல்கிறேனே தவிர,'நான் என் மனைவி இல்லாமல் மருத்துவரிடம் செல்ல மாட்டேன். வெளில செல்லும்போதும் அவளை சும்மாவானும் என்னுடன் வரச் சொல்லுவேன்)
ReplyDelete1. நம்மை பயமுறுத்துகிற மாதிரி எந்த மருத்துவரோ மருத்துவமனையோ சொன்னால், நிச்சயம் வேறு மருத்துவருடைய ஒபினியனைக் கேட்கவும்.
2. நமக்குப் பழக்கமான மருத்துவரே (அவர் ஜெனெரல் மருத்துவராக இருந்தாலும்) யாரிடம் கேட்கலாம் என்று சொல்லுவார். அவர்களுக்குத் தெரியும் யார், காசுக்காக பயமுறுத்தமாட்டார்கள் என்று.
3. எனக்குத் தெரிந்து இதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் நலமுடன் பல வருடங்கள் இருக்கிறார்கள். அதனால் பயம் ஒன்றும் இல்லை. ஆனால் உணவுப் பழக்கத்திலும் மாற்றம் இருக்கும், தினமும் கொஞ்சம் நடக்கும் பழக்கமும் வேண்டும்.
நலமுடன் இருப்போம் என்ற நம்பிக்கை கொள்ளுங்கள். நம் குடும்ப 'ஆயுள்' நம் ஆயுளுக்கு ஒரு இன்டிகேஷன். (அதாவது தந்தை 90 வயது, அம்மை 80 வயது இருந்தால், நாமும் கிட்டத்தட்ட அவ்வளவு இருக்கமுடியும் என்பதுபோல) என் உளமார்ந்த பிரார்த்தனைகள்.
நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் அன்ப்பான கருத்துரைக்கும், ஆலோசனைகளுக்கும் நன்றி.
Deleteதமிழ்! இப்பொழுது தான் வாசித்து விவரம் அறிந்தேன்.
ReplyDeleteஅயராத பணிகள், அலைச்சல் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
மனதை ஒரு நிலைப்படுத்தவும், உணவு முறை, வாழ்க்கை முறை (Life style)-யில் ஏதாவது மாற்றம் வேண்டி தேவைப்படின் அதற்கான மருத்துவ ஆலோசனை பெறவும். இறை நம்பிகை பெரிய தொரு சக்தியாக துணையிருக்கும். தாங்கள் நலம் பெறுவீர்கள்.
மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் அன்பான ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி.
Deleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎங்கள் சின்ன மாமனார் மகன், மற்றும் தெரிந்தவர்கள் அறுவை சிகிட்சை செய்து கொண்டு இருக்கிறார்கள். எல்லோரும் நலமாக இருக்கிறார்கள். (பல ஆண்டுகள் ஆகி விட்டது ஆப்ரேஷன் செய்து)
மனஉறுதியாக உண்வு கட்டுபாடு, எடுத்து கொண்டால் நலமாக இருக்கலாம்.
//அதனால் இந்த ஆபரேஷன் அவசியத் தேவைதான் என்று, ஒருவேளை டாக்டர்கள், வலியுறுத்திச் சொல்லிவிட்டால், தாங்களும் தைர்யமாகச் செய்துகொள்ளலாம் என்பது எனது சொந்தக் கருத்தாகும்.
இன்றைய நவீன மருத்துவ விஞ்ஞானத்தில் எல்லாவற்றிற்கும் ஓரளவுக்கு நல்ல தீர்வுகள் உள்ளன. அதனால் அதிகம் பயப்பட வேண்டாம். கடவுள் அருளால் தங்களுக்கும் எல்லாம் செளகர்யமாகும். நானும் தங்களுக்காகப் பிரார்த்தித்துக் கொள்கிறேன். ALL THE BEST, Sir.//
வை.கோ சார் சொல்வது போல் அவசியம் என்றால் ஆப்ரேஷன் செய்து கொள்ளுங்கள்.
தங்கள் உடல் நலத்திற்கு நாங்களும் பிரார்த்திக் கொள்கிறோம்.
கவலைபடாமல் இருங்கள்.
உங்களது அன்பான ஆறுதலான ஆலோசனைகளுக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி மேடம்.
Deleteமன உறுதி எத்தகைய சிக்கலையும் வெல்லும் திறன் படைத்தது. தாங்கள் மேலும் பல்லாண்டுகள் வாழ பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteநண்பர் மூங்கில் காற்று - முரளிதரன் - அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteமற்ற பதிவர்கள் சொன்னதுபோல இன்னொரு இதய நிபுணரிடம் ஆலோசனை பெற்று முடிவெடுங்கள். முழு நலம் பெற வாழ்த்துகள்!
ReplyDeleteமூத்த வலைப்பதிவர் V.N.S அவர்களின் அன்பான ஆலோசனைக்கு நன்றி.
Deleteஅன்புள்ள அய்யா திருமிகு.தமிழ்இளங்கோ அவர்களுக்கு வணக்கம்.
ReplyDeleteஅறுபத்து நான்கில் அடியெடுத்து வைக்கும் தங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதாக மருத்துவ அறிக்கை தெரிவித்ததைச் சுட்டிக்காட்டி இருந்தீர்கள். இதைப் பார்த்ததும் மனதுக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது.
எனது பெரியம்மா மகன் திரு.ஜான் ஜோசப் அவர்களுக்கு அய்ந்தாண்டுகளுக்கும் முன்பாக இருதயத்தில் அடைப்பு இருப்பதாக கே.எம்.சி.யில் ஆஞ்சியோ செய்து தெரிவித்தார்கள். அவரோடு கல்லூரியில் ஒரு சாலை மாணாக்கரான திருச்சி எம்.பி.சிவா அவர்கள் மருத்துவரை பார்த்து உண்மை நிலவரம் என்ன என்று கேட்டறிந்தார். அறுவை சிகிச்சை செய்தால் சரியாகலாம். அறுவை சிகிச்சை செய்வதில் காம்ளிகேட் இருக்கிறது என்று சொன்னார். நானும் அவர்களோடு இருந்தேன். அவரது மனைவியிடம் என்ன அறுவை சிகிச்சை செய்யச் சொல்லலாமா? என்று எம்.பி. அவர்கள் கேட்டார்கள். நீங்க பார்த்து என்ன சொல்கிறீர்களோ அப்படியே செய்யலாம் என்றார்.
எனது அண்ணனிடம் வந்தார் திருச்சி சிவா அவர்கள். “ஜான்… நான் டாக்டரிடம் கேட்டேன்…. ஒன்றும் பயப்படும்படி இல்லையாம்… மருந்து மாத்திரையில் சரி செய்துவிடலாம்“ என்று சொன்னதாகச் சொல்லிவிட்டு வேற எதும் உதவி வேண்டுமானால் தயங்காமல் என்னைத் தொடர்புகொண்டு கேளுங்கள் என்று சொல்லிச் சென்றார்.
‘பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின்.’ என்ற குறள் என் நினைவிற்கு வந்தது.
எனது அண்ணனின் முகத்தில் ஒரே சந்தோசம்.
வீட்டிற்கு வந்து மருந்து மாத்திரை எடுத்துக்கொண்டு வந்தார்.
லேசாக வலி வரவே மெட்ராஸ் அப்பலோ மருத்துவமனையில் சேர்ந்து ஓபன் ஹார்ட் ஆபரேசன் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தில் செய்து கொண்டார். சாப்பாடு கண்ட்ரோலாக இருக்கிறார். மிகவும் நன்றாக இருக்கிறார். அவரது குடும்ப நண்பரான திருச்சி சிவா அவர்களை அடிக்கடி வீட்டிற்குச் சென்று பார்த்து விட்டு வருகிறோம்.
எமது பள்ளியில் ஓவிய ஆசிரியராக இருந்த எடமலைப்பட்டி புதூருக்கருகில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் குடியிருக்கும் திரு. ஜெயபால் ஓய்வு பெற்ற அதே ஆண்டில்… இரண்டு ஆண்டிற்கு முன் திடீரென நெஞ்சுவலி ஏற்பட மனைவிக்குக்கூடத் தெரிவிக்காமல் ஆட்டோ பிடித்து கே.எம்.சி.க்கு வந்து விட்டார். அவருக்கு பைபாஸ் அறுவைசிகிக்சை செய்ய வேண்டும் என்று சொன்னதால்… அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்பொழுது நலமாக இருக்கிறார்.
இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டுமென்றால் எல்லாருக்கும் பயமாகத்தான் இருக்கும். தற்பொழுது மிகவும் நல்லமுறையிலே வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.
நிற்க.
தங்களைப் பற்றிய செய்தி அறிந்தவுடன்
என்னுடைய மாமா திரு.ராஜா அவர்களிடம் பேசினேன். எங்கள் ஊரில்தான் வசிக்கிறார். அவருக்கு இதயத்தில் அடைப்பு 56 விழுக்காடு இருந்தது. அவர் அறுவை சிகிச்சை செய்யாமலே குணமாக்கக்கூடிய மருத்துவரை பார்த்து மருத்துவம் செய்து மிகவும் நன்றாக இருக்கிறார். தினந்தோறும் நீண்ட தூரம் நடைபயிற்சி செய்கிறார்.
திருச்சி தென்னூர் பேங்க் ஸ்டாப் தென்புறம் உள்ள ‘NEOMET HOSPITAL’
டாக்டர் சிவபாலன் என்பவர் இருக்கிறாராம். அவரிடம்தான் இவர் மருத்துவம் பார்க்கிறார். சென்னையில் இருந்து மருத்துவர்கள் வருவார்களாம். மாதத்திற்கு இரணடு முறை டிர்ப் போடுவார்களாம். அறுவை சிகிச்சை செய்யாமலே குணமாக்குகிறார்கள் என்று சொன்னார்.
அவரை நீங்கள் பார்த்து மேலும் தகுந்த ஆலோசனைகளைப் பெறலாம். கவலை வேண்டாம். விரைவில் பூரண நலம் பெறுவீர்கள்.
வாழ்த்துகள்.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
அன்புள்ள ஆசிரியர் மணவை ஜேம்ஸ் அவர்களின் ஆலோசனைகளுடன் கூடிய அன்பான விரிவான கருத்துரைக்கு நன்றி.
Delete( நான் பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி, திருச்சியில் பி.ஏ தமிழ் இலக்கியம் பயிலும் போது, மரியாதைக்குரிய திருச்சி சிவா எம்.பி அவர்கள் பி.ஏ ஆங்கில இலக்கியம் பயின்று கொண்டு இருந்தார்; மொழிப் பாடங்களில் (Language Classes) தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு வகுப்புகளுக்கும், இரு இலக்கிய பிரிவு மாணவர்களுக்கும் ஒரே வகுப்பில் ( Combined Classes) நடைபெறும், அப்போதிருந்து அவரை எனக்கு தெரியும். அவர் M.A. ஆங்கில இலக்கியத்தை அங்கேயே தொடர்ந்தார்; நான் M.A தமிழ் இலக்கியம் படிக்க திருச்சி நேஷனல் கல்லூரி சென்று விட்டேன். அவர் தீவிர அரசியலுக்கு சென்று விட்டதால் அவருடன் எனக்கு தொடர்பு இல்லாமல் போய் விட்டது.அப்புறம் நான் பணிபுரிந்த வங்கிக்கு அவரது நண்பரைப் பார்க்க வரும்போது நானும் அவரோடு பேசுவேன் - இது ஒரு தகவலுக்காக மட்டுமே.)
நான் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தவுடன் உங்களைப் போலவே, நண்பர்கள் அவரவர் அல்லது மற்றவர்களது அனுபவங்களைச் சொன்னார்கள். உங்கள் ஆலோசனைக்கும் நன்றி. பார்ப்போம்.
பிறந்தநாள் வாழ்த்துகள். எந்தவகை சிகிச்சை செய்து கொண்டாலும் மன உறுதியுடன்,செய்து கொள்ளுங்கள். கடவுள் துணை இருப்பார். ஸைன்ஸ் முன்னேறியுள்ள காலம். பூரணமாக குணமடைவீர்கள். நம்பிக்கை குணமடையவைக்கும். நலம்பெற ஆசிகள். அன்புடன்
ReplyDeleteஅம்மா உங்கள் ஆசீர்வாதம். உங்கள் வாக்கு பலிக்கட்டும்.
Deleteஇப்போதுதான் பார்க்க நேரிட்டது. தங்களைக் காணவில்லையே என்று நினைத்துக் கொண்டோம்.
ReplyDeleteதங்களுக்கு எங்கள் தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள்! மற்றும் உடல்நலம் நன்றாகக் குணமடைந்திடவும் பிரார்த்தனைகள். பயம் தேவையில்லை. மருத்தவரின் அறிவுரைப்படி உணவுக்கட்டுப்பாடு தேவையான உடற்பயிற்சிகள் செய்து நலம்பெற வாழ்த்துகள்! எல்லாம் அவன் செயல் என்று நம்பிக்கையுடன் இருந்திடுங்கள்.
பிரார்த்தனைகளுடன்
ஆசிரியர் அவர்களின் ஆறுதலான வார்த்தைகளுக்கு நன்றி.
Deleteசிறிது ஒய்வு எடுத்து உடல் நலத்தை பேணுங்கள் ஐயா..
ReplyDeleteஇறை அருளால் அனைத்தும் நலம் பெறும்...
தங்களது அன்பான ஆதரவான வார்த்தைகளுக்கு நன்றி மேடம்.
Deleteமனது திடமாயிருந்தால் எந்த நோயும் தீவிரம் காட்ட பயப்படும். உங்கள் மனநலமும் உடல்நலமும் உங்கள் கையில். பல்லாண்டு மகிழ்வுடன் வாழ வாழ்த்துகள்.
ReplyDeleteநண்பரின் கருத்துரைக்கு நன்றி. இப்போது வீட்டில், மருந்துகளை எடுத்துக் கொண்டு ஓய்வில்தான் இருக்கிறேன்.
Deleteதமிழ்அருவி தானியங்கி திரட்டி தங்கள் பதிவுகளை தானாகவே திரட்டிக்கொள்ளும் திறன் பெற்றது.
ReplyDeleteதங்கள் Site/Blog இணைப்பதற்கு தமிழ்அருவி (http://www.tamilaruvi.in) தளத்தில் கணக்கு துவங்க வேண்டும்.
பிறகு உங்கள் Profile சரியாக நிரப்ப வேண்டும் அவ்வளவுதான்.
உங்கள் பதிவுகள் 48 மணி நேரத்திற்குள் தமிழ்அருவி தளத்தில் பட்டியலிடப்படும்.
நன்றி .
தமிழ்அருவி திரட்டி
விரைவில் நலம் பெறுவீர்கள். தாங்கள் நலமாக பல்லாண்டு வாழ பிரார்த்திக்கிறேன்.
ReplyDeleteஅன்புள்ள எழுத்தாளர் ஜனா அவர்களின், ஆதரவான கருத்துரைக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி.
Deleteஉண்மையான நண்பர்களை பெற்று இருக்கீங்க. ஒவ்வொரு பின்னூட்டமும் ஆத்மார்த்தமாக இருந்தது. நலமுடன் வாழ்க.
ReplyDeleteBorgata Hotel Casino & Spa - Mapyro
ReplyDeleteFind parking costs, 당진 출장샵 opening 부산광역 출장마사지 hours and a 화성 출장샵 parking map of Borgata Hotel 제주도 출장안마 Casino & 군포 출장마사지 Spa (New Jersey), in Atlantic City, NJ.