Tuesday 9 January 2018

இராய செல்லப்பா அவர்களுடன் ஒரு சந்திப்பு



சென்ற மாதத்தில் ஒருநாள் மூத்த வலைப்பதிவர் திரு. இராய செல்லப்பா அவர்களிடமிருந்து செல்போன் அழைப்பு. தான் ஒரு வேலையாக திருச்சிக்கு வரப் போவதாகவும், அப்போது V.G.K (திரு வை.கோபால கிருஷ்ணன்) அவர்களையும், என்னையும் சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்தார். மகிழ்ச்சியான செய்தி. நானும் திரு V.G.K அவர்களிடம் இதுபற்றி செல்போனிலும், தெரிவித்து இருந்தேன். சொன்னது போலவே திருச்சிக்கு வந்திட்ட இராய செல்லப்பா அவர்கள், போன் செய்தார். நானும் திரு V.G.K அவர்களும் அவரை அவர் தங்கி இருக்கும் ஹோட்டல் அஜந்தாவில், 07.01.18 ஞாயிறு – மாலை சந்திப்பது என முடிவானது. 

இராய செல்லப்பா


வங்கி அதிகாரியாக பல முக்கிய நகரங்களில் பணி செய்து ஓய்வு பெற்றவர். டெல்லி தமிழ்ச்சங்கத்தில் சிறப்பான தமிழ்ப் பணிகளைச் செய்தவர்
.
செல்லப்பா தமிழ் டயரி ( http://chellappatamildiary.blogspot.com ) இமயத்தலைவன் ( http://imayathalaivan.blogspot.in

என்ற தனது வலைத்தளங்களில் எழுதி வருகிறார். இவர் எழுதிய  சொல்லட்டுமா கொஞ்சம்?, உண்மைக்குப் பொய் அழகு, அபுசி – தபசி (தொகுதி.1 மற்றும் தொகுதி.2 ), ஊர்க்கோலம் – ஆகிய மின்னூல்களை ‘புஸ்தகா’ வெளியிட்டுள்ளது. தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் என்ற நூலை அகநாழிகை வெளியிட்டுள்ளது.


ஹோட்டல் அஜந்தாவில்

அன்று (07.01.18 ஞாயிறு) மாலை நான் எனது இருப்பிடத்திலிருந்து, கே.கே.நகர் பஸ் ஸ்டாண்ட் சென்றேன். அன்று நடைபெற்றுக் கொண்டிருந்த அரசுப் பேருந்து ஊழியர் வேலை நிறுத்தம் காரணமாக ஒரு பஸ் கூட இல்லை. ஆட்டோவில் போகலாம் என்றால், ஆட்டோ ஸ்டாண்டே காலி. எல்லாமே சவாரிக்கு போய் விட்டன. நல்ல வேளையாக ஒரு தனியார் பஸ் வந்துவிட அதில் பயணம் செய்து சென்று விட்டேன். எனக்கு முன்னதாக திரு V.G.K அவர்கள் ஆட்டோவிலேயே ஆண்டார் தெருவிலிருந்து (சத்திரம் பேருந்து நிலையம்) ஹோட்டல் அஜந்தா வந்து விட்டார்.

ஹோட்டல் அஜந்தா அந்த காலத்து தங்கும் விடுதி என்றாலும், நவீன கால முறைக்கு ஏற்ப மாற்றம் செய்யப் பட்டது. காலை, மாலை, இரவு நேர டிபன் வசதியும் உண்டு. மதியச் சாப்பாடும் (மோர்க் குழம்பும், பாயாசமும் விஷேசம்) உண்டு. எல்லாமே நன்றாக இருக்கும். நான் இங்கு அடிக்கடி சாப்பிட்டு இருக்கிறேன். எனது மகள் திருமணத்திற்கு முன்னதான நிச்சயதார்த்தம்,. இங்குள்ள மினி ஹாலில்தான் நடைபெற்றது.) பெரிய திருமண மண்டபமும் உண்டு.

கலந்துரையாடல்

(படம் மேலே) திருப்பதி வெங்கடாசலபதி படம் முன் திரு V.G.K

(படம் மேலே)   திரு V.G.K மற்றும் இராய. செல்லப்பா

(படம் மேலே) திரு V.G.K ,இராய. செல்லப்பா மற்றும் நான்

அங்கிருந்த வரவேற்பு (Reception) ஹாலில் ஒரு பெரிய வெங்கடாசலபதி படம். அதன் அருகே கோபு சாரை (V.G.K) நிற்க வைத்து நான் படம் எடுத்துக் கொண்டு இருந்த சற்று நேரத்தில் .இராய செல்லப்பா அவர்கள் வந்து விட்டார். சிறிதுநேரம் கழித்து அவருடைய மனைவியும் வந்து விட்டார். அவர்கள் தங்கி இருந்த அறை சிறியது என்ற படியினால் ஹாலிலேயே எங்களது உரையாடல் தொடங்கியது.  வழக்கம் போல பரஸ்பரம் ஒருவரைப் பற்றி ஒருவர் விசாரித்துக் கொள்ளல், மற்றும் பரிசுப் பொருட்களை பகிர்ந்து கொள்ளல் என்று ஒரே மகிழ்ச்சி. .(நான் ஏற்கனவே புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பு மாநாட்டில் அய்யா இராய.செல்லப்பா அவர்களைச் சந்தித்து இருக்கிறேன்)

(படம் மேலே) திரு V.G.K அவர்கள் இராய.செல்லப்பாவுக்கு தந்த அன்பளிப்புகள்
(படம் மேலே) இராய.செல்லப்பா அவர்களுக்கு எனது பரிசுகள்

இராய செல்லப்பா அய்யா, எங்கள் இருவருக்கும் ஸ்வீட் காரம் அடங்கிய பைகளைத் தந்தார். நமது கோபு சார் (V.G.K) செல்லப்பா சாருக்கு பழங்களையும்,  தான் எழுதிய நூலையும் பரிசாகத் தந்தார். நான் ஒரு GOOD DAY பிஸ்கட் பாக்கெட்டினையும், ஆரண்ய நிவாஸ் (ஆசிரியர் ராமமூர்த்தி) என்ற சிறுகதைத் தொகுப்பையும் கூடவே 2018 ஆம் வருட தமிழ் டைரியையும் செல்லப்பா சாருக்கு என் அன்புப் பரிசாகக் கொடுத்தேன்.

இராய. செல்லப்பா அய்யா அவர்களிடம் பேசிக் கொண்டு இருந்த போது, தான் ஒரு முக்கியப் பணிக்காக திருச்சி நேஷனல் கல்லூரிக்கு வந்து இருப்பதாகவும், 11ஆம் தேதி வரை இங்கு இருக்கப் போவதாகவும் சொன்னார். மேலும் தான் சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழி பெயர்த்த ‘ஶ்ரீமந் நாராயணீயம்’ என்ற ஶ்ரீமத் பாகவத நூல் விரைவில் வெளிவரும் என்றும் குறிப்பிட்டார்.

அவர் தனது சொந்த ஊர் இராணிப்பேட்டை என்றும், கார்ப்பரேஷன் வங்கியில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்றும் சொன்னார். அவரது பெயரில் உள்ள ‘இராய’ என்பதன் விவரம் கேட்ட போது இரா என்பது இராணிப்பேட்டையையும்; ய என்பது தந்தையின் பெயரான யக்ஞசாமியையும் குறிக்கும் என்றார். அப்போது இராணிப்பேட்டைக்கு அப்பெயர் வந்ததன் காரணத்தையும் சொன்னார்.

செஞ்சியை ஆண்ட ராஜா தேசிங்குவின் மனைவி ராணிபாய். இவள் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்தவள். தேசிங்கு கபடமாகக் கொல்லப்பட்டதை அறிந்த, அவள் உடனே தீக்குளித்து மாண்டாள். அவள் பெயரால் இந்த ஊருக்கு இராணிப்பேட்டை என்று பெயர்.

இன்னொரு தகவலையும் சொன்னார். சென்னைக்கு வந்த பெரு வெள்ளத்தின் போது, அகநாழிகை பதிப்பகத்தில் இருந்த நிறைய புத்தகங்கள் சேறு படிந்து வீணாகி விட்டன என்றும், பதிப்பகத்திற்கு நிறையவே நஷ்டம் என்றும் சொன்னார். அவற்றுள் இவர் எழுதிய நூலின் பிரதிகளும் அடங்கும் என்றும் தெரிவித்தார்.

உணவு விடுதியில்



உரையாடல் முடிந்ததும் எங்கள் இருவரையும் அங்கிருந்த ரெஸ்டாரண்டிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு செல்லப்பா சார் சூடான சுவையான மொறுமொறு பக்கோடாவிற்கு ஆர்டர் தந்தார். சாப்பிட்டு முடிந்ததும் காபி வந்தது. எல்லாம் உண்டு முடிந்ததும் நானும் கோபு சாரும் அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டோம். 

 

44 comments:

  1. வை.கோ.சாரின் பதிவில் படித்திருந்தாலும், அங்கு காணப்பட்ட நிழற்படங்களே இங்கும் காணப்பட்டாலும், சில சுவையான துண்டுச் செய்திகளைச் சேர்த்து அசத்தியிருக்கிறீர்கள். குறிப்பாக இராணிப்பேட்டை ஊருக்கான பெயர்க் காரணம் மற்றும் 'இராய' என்பதற்கான விளக்கம்.

    எதை எழுதினாலும் தொய்வில்லாமல் வாசிப்பவர் தொடர்ந்து வாசிக்க எழுத்தில் சுவை சேர்க்கத் தெரிந்திருக்கிறது சிலருக்கு. அவர்களில் நீங்கள் ஒருவர்.


    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      // வை.கோ.சாரின் பதிவில் படித்திருந்தாலும், அங்கு காணப்பட்ட நிழற்படங்களே இங்கும் காணப்பட்டாலும், .... ... //

      திரு V.G.K அவர்கள் இந்த பதிவர் சந்திப்பைப் பற்றி எழுதி விட்ட படியினால் நானும் எழுதுவதற்கு யோசனையாகவே இருந்தது. ஆனால் அவர் நீங்களும் எழுதுங்கள் என்று சொன்னதாலும், அவர் பதிவு தமிழ் மணத்தில் வராது என்பதாலும் இந்த பதிவை சில செய்திகளச் சேர்த்து எழுதியுள்ளேன். என்ன இருந்தாலும் கோபு சாரின் (V.G.K) வாசகர் வட்டம் என்பது தனி; அவருக்கென்று அலாதியான வாசகர் வட்டம் உள்ளது. அந்த வட்டத்தில் நானும் ஒரு ரசிகந்தான்.

      எனது பதிவைப் பற்றிய தங்களது பாராட்டினுக்கு நன்றி.


      Delete
  2. சுவையான சந்திப்பு. அவர் பெயரில் இருக்கும் 'இராய' க்கான காரணம் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. எங்கள் ப்ளாக் ஶ்ரீராம் அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  3. செல்லப்பா தம்பதிகள் இருவரையும் சந்தித்து இருக்கிறேன் சுவாரசியமானவர்கள்

    ReplyDelete
    Replies
    1. அய்யா ஜீ.எம்.பி அவர்களின் கருத்தினுக்கு நன்றி.

      Delete
  4. உங்கள் மூவரின் சந்திப்பை இங்கும் படித்து மகிழ்ந்தேன். இராய செல்லப்பா சார் ஶ்ரீமத் நாராயணீயம் எப்படித் தமிழ்ப்படுத்தியிருக்கார் என்று அறிந்துகொள்ள ஆவல்.

    அஜந்தா சாப்பாடு அட்டஹாசம்னு சொல்றீங்க. வாய்ப்பு கிடைக்கும்போது அங்கு தங்கி திருவரங்கம் செல்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நீங்கள் திருச்சி வரும்போது சொல்லுங்கள். உங்களை சந்திக்கிறேன்.

      Delete
  5. பதிவர்கள் மூவரும் சந்தித்து அளவளாவியதை
    உங்களின் சுவாரசியமான பதிவு மிக அழகாக சொல்லுகிறது! மூவருடன் திருமதி.செல்லப்பா அவர்களையும் புகைப்படங்களில் காண பெரு மகிழ்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.

      Delete
  6. திரு. இராய.செல்லப்பா அவர்கள் சென்னை புலவர் திரு. இராமாநுசம் அவர்கள் வீட்டில் என்னை சந்திக்க வந்தார். விசயம் உள்ள நல்ல மனிதர்

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி

      Delete
  7. சுவாரஸ்யமான மினி பதிவர் சந்திப்பு .அவர் வீட்டருகேதான் இருந்தேன் . என்னுடைய பரபரப்பான பணி+வீடு வேலைகளில்( 7 மணிக்கு கிளம்பி 7 மணிக்கு வீட்டுக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த கால கட்டம் ) யாரிடமும் அவ்வளவாகப் பழகவில்லை . சென்னைப் பதிவர் சந்திப்பில் சந்தித்தேன்

    ReplyDelete
  8. இனிமையான சந்திப்பு. சேர்த்திருக்கும் செய்திகள் ஸ்வாரஸ்யம்.

    தொடரட்டும் சந்திப்புகள்....

    ReplyDelete
    Replies
    1. நண்பரின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  9. மூவரின் சந்திப்பினை இங்கு, உங்கள் பதிவிலும், கண்டதில் மகிழ்ச்சி. உங்களது நடையில் சற்றே வித்தியாசமாக இருந்தது ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      // உங்களது நடையில் சற்றே வித்தியாசமாக இருந்தது ரசித்தேன்.//

      உங்களின் இந்த கருத்தினைக் கண்டதும் மீண்டும் ஒருமுறை எனது பதிவைப் படித்து பார்த்தேன். நான் எப்போதும் போல இயல்பாக எழுதியது போல்தான் தோன்றுகிறது.

      Delete
  10. அழகிய அறிமுகம். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. மூவருக்கும் வாழ்த்துகள் நன்றி இளங்கோ!

    ReplyDelete
    Replies
    1. புலவர் அய்யா அவர்களுக்கு நன்றி.

      Delete
  12. Ex-employees of banks meet. As I see, many ex-employees of banks are in blog writing as also in FB writing. Time to open up your heart. A satisfying life of leisure after retire ment. Count your blessings. Let life be a continuous contentment. 'God's in His Heaven. Al's is right with the world' as Browning said.. The hero of this blog post writes from New Jersey also from his son's residence about which you've made no mention. He writes in comments in the Internet magazine www.puthu.thinnai.com where he introduces himself as a poet also. About his poetry also, no mention is made.

    ReplyDelete
    Replies
    1. திரு விநாயகம் அய்யா அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. மேலே பதிவர் சந்திப்பினில் திரு இராய.செல்லப்பா அவர்களும் நானும் மட்டுமே வங்கியில் பணி புரிந்தவர்கள். திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் திருச்சி பெல் (BHEL) நிறுவனத்தில் Cash Accountant ஆக பணி புரிந்தவர்.
      முன்னாள் வங்கி ஊழியர்கள் மட்டுமல்ல மற்ற துறைகளில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களும், இப்போது ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற குழுக்களில் இணைந்து கொள்வதை விரும்புகின்றனர். ஆனால் வலைப்பக்கம் எழுதுவதில் நாட்டம் உள்ளவர்கள் பணியில் உள்ள அல்லது ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் வங்கி ஊழியர்களே அதிகம் என்று நான் நினைக்கிறேன்.

      திரு இராய.செல்லப்பாவின் எழுத்துத் திறமை பற்றிய தங்களது மேல் அதிக விவரங்களுக்கும், நன்றி.

      Delete
    2. திண்ணை இணைய வார இதழைப்படியுங்கள்.

      திரு விநாயகம் அய்யா அவர்கள் - மூன்றடுக்கு பாதுகாப்பு போல. மூன்றடுக்கு மரியாதையா? 1. திரு 2. அய்யா 3. அவர்கள். ஒன்றுமே எனக்குத் தேவையில்லை. வெறும் பெயர் போதும். அப்படியே விரும்பினால் திரு மட்டும்போதும்.

      Delete
  13. இனிமையான சந்திப்பு. செல்லப்பா ஸார் சொல்லியிருந்தார் திருச்சி போவேன் என்று....அவரது பெயர்க்காரணமும் அறிவோம் சகோ...சந்திப்புகள் தொடரட்டும். வாழ்த்துகள்!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி. திரு இராய செல்லப்பா அய்யா அவர்கள் எங்களைச் சந்தித்தபோது, ஶ்ரீரங்கம் சென்று திருமதி கீதா சாம்பசிவம் அவர்களையும் சந்திக்க வெண்டும் என்று சொன்னார். திரு V.G.K அவர்களும் அவர்களது செல்போன் எண்ணைத் தந்தார்.

      Delete
  14. நல்லதொரு சுவையான பதிவு. திரு செல்லப்பாவின் பன்முக ஆற்றல் பாராட்டுக்கு உரியது அனைவருக்கும் என் அன்பு வணக்கங்கள். மனமார்ந்த பாராட்டுகள் - பாபு

    ReplyDelete
    Replies
    1. அன்பர் பாபு அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  15. அருமையான சந்திப்பு, நல்ல பதிவு, மூத்தோர்களுக்கு வணக்கம்

    ReplyDelete
  16. திரு V.G.K.அவர்கள், இந்த பதிவு சம்பந்தமான தனது கருத்துரையை மின்னஞ்சலாக, நேற்று (09.01.18) இரவு அனுப்பி வைத்துள்ளார்.

    /// இந்தத் தங்களின் பதிவினில், மிகத் தெளிவான படங்களுடன், தெவிட்டாத நினைவலைகளைக் கிளப்பி மகிழ்வித்துள்ளீர்கள்.

    தாங்கள் அந்த ’அஜந்தா ஹோட்டலின் முன்புறம் உள்ள மிகப் பெரிய பெயர் பலகையைப் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்ததை, நானும் தூரத்திலிருந்து பார்த்தபடியே, எனக்குள் புன்னகைத்துக் கொண்டேன். :) தாங்கள் ஓர் பத்திரிகை நிரூபர் cum புகைப்படக் காரராக ஆவதற்கான அனைத்துத் தகுதிகளும் உங்களுக்கு உள்ளன. :)

    தங்களின் தனிப் பாணியில் படிப்பதில்தான் எனக்கும் ஓர் தனி இன்பமாக உள்ளது. அங்கு நானும் உங்களுடன் கூடவே இருந்தும்கூட, நான் சரிவர காதில் வாங்கிக்கொள்ளாத பல விஷயங்களை, நீங்கள் சேகரித்துக்கொடுத்துள்ளது அழகோ அழகு!

    நம் திரு. ஜீவி ஸார் அவர்களின் முதல் பின்னூட்டம், தங்களின் இந்தப் பதிவினை மேலும் ஜொலிக்கச் செய்துள்ளது.

    அன்புடன் + நன்றியுடன் VGK ///

    ReplyDelete
    Replies
    1. மின்னஞ்சல் வழியே தனது கருத்துரையைத் தந்திட்ட திரு V.G.K.அவர்களுக்கு நன்றி.

      Delete
  17. சுவாரஸ்யமான நேர்காணல் மற்றும் கருத்துப் பரிமாற்றம். திரு. இராய செல்லப்பா, திரு வை.கோபால கிருஷ்ணன் மற்றும் திரு. தி.தமிழ் இளங்கோ ஆகியோர் உரையாடலில் பயனுள்ள தகவல்களைத் தெரிந்துகொண்டேன். திருச்சி அஜந்தா ஹோட்டல் அழகான வரவேற்பறை பின்னணியாக அமைந்தது சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு ஆர் முத்துசாமி அவர்களே

      Delete
  18. சந்திப்புகள் என்றுமே இனிமையானவை
    இது போன்ற சந்திப்புகள் தொடர்வது வலைப் பூவிற்கும் நட்பிற்கும் வலு சேர்க்கும்
    நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  19. மாமனிதருடன் ஒரு மகத்தான சந்திப்பு. பதிந்த விதம் மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. தமிழ்ப்பூ கோவிந்தராஜூ அருணாச்சலம் அவர்களின் வருகைக்கு நன்றி.

      Delete
  20. அருமையான சந்திப்பு

    தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்

    ReplyDelete
  21. நேர்த்தியான பதிவு
    நாங்களும் கூடவே இருந்ததுபோல
    ராய செல்லப்பா அவர்கள் பைத்தான் மொழி படித்தவர் என்பது உங்களுக்கு தெரியுமா?
    கொஞ்சம் கிலி ஏற்படுத்திய விசயம் அது.
    இந்தவயதில் பைத்தான் (கணிப்பொறி நிரல்களை எழுதும் மொழி) ...
    நல்லதோர் சந்திப்பு

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் எஸ்.மது அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் மற்றும் திரு இராய.செல்லப்பா அவர்களுக்கு Python (programming language) மொழி தெரியும் என்ற தகவலைத் தெரிவித்தமைக்கும் நன்றி.

      Delete
  22. புத்தக வெளியீட்டைப் பற்றி இன்னும் தகவல் சொல்லலையே. தாமதமாகிறதா?

    ReplyDelete