Friday, 5 January 2018

நடிகர் ரஜினியின் ஆன்மீக அரசியல்



இப்போது தமிழக அரசியலில் பெரிதும் பேசப்படும் விஷயம் நடிகர் ரஜினியின் ‘ஆன்மீக அரசியல்’ பற்றித்தான்.

…. …. …. …. போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டிற்கு அருகே செய்தியாளர்களை சந்தித்த ரஜினிஆன்மீக அரசியல் என்பது உண்மையான, நேர்மையான, வெளிப்படையான, நாணயமான அரசியல். இதில் எந்த விதமான சாதி, மத சார்பும் இல்லை. இது அறம் சார்ந்த அரசியல். இது ஆத்மாவுடன் தொடர்புடைய அரசியல்எனக் கூறினார். மேலும் தனது அரசியல் கட்சியின் பெயர், சின்னம், கொடி ஆகியவற்றை பின்னால் அறிவிப்பேன் எனவும் அவர் தெரிவித்தார். ( தகவல் - நன்றி http://tamil.webdunia.com வியாழன், 4 ஜனவரி 2018 )

அண்ணாயிசம்

நடிகர் ரஜினியின் விளக்கத்தைப் படித்ததும் எனக்கு எம்ஜிஆர்தான் நினைவில் வந்தார். எம்ஜிஆரும் இப்படித்தான் கட்சி தொடங்கிய புதிதில், ‘உங்கள் கட்சியின் கொள்கை என்ன’ என்று கேட்டதற்கு, ‘அண்ணாயிசம்’ என்று ஒன்றைச் சொல்லி அதற்கு விளக்கமும் கொடுத்தார். ‘காந்தியிசம், கம்யூனிசம், கேபிடலிசம் ஆகிய மூன்று கொள்கை தத்துவங்களில் உள்ள நல்ல அம்சங்களை திரட்டினால் என்ன கிடைக்குமோ அதுதான் அண்ணாயிசம்’ – கேட்டவர்களுக்கு தலை சுற்றியது. யாரும் எதிர்த்துப் பேசவில்லை. சொன்னவர் எம்ஜிஆர் ஆயிற்றே..

இதேபோல ஒருமுறை, மக்கட் தொகை கணக்கெடுப்பாளர், அவரிடம் ‘நீங்கள் என்ன மதம்?’ என்று கேட்டதற்கு, ‘திராவிட மதம்’ என்று கணக்கெடுப்பில் இல்லாத ஒன்றைக் கூறி அசத்தினார்.

கட்சியும் படக் கம்பெனியும்

எம்ஜிஆர் தனது கட்சிக் கொள்கைகளில் காந்தியிசம், கம்யூனிசம், கேபிடலிசம் என்று சொன்னாலும், இதில் ஒன்றைக்கூட அவர் கடைபிடிக்கவில்லை என்பதே உண்மை. அவர் தனது கட்சியை ஒரு சினிமா படக் கம்பெனி போலவே நடத்தினார். அங்கு எல்லாமே எம்.ஜி.ஆர் தான். அங்கு மூலதனம் எம்ஜிஆர் என்ற பிம்பம்தான்; கூடவே கருணாநிதி எதிர்ப்பு அரசியல். எம்ஜிஆருக்குப் பின் வந்த ஜெயலலிதாவும் இதே அரசியலைத்தான் கடை பிடித்தார். எம்ஜிஆர் காலத்தில் யாரும் அவரோடு  பேசவேண்டும் என்று நினைத்தால் எப்படியும் பேசி விடலாம்; ஆனால் அம்மையார் ஆட்சியில் எல்லாமே ‘மாட்சிமை தங்கிய மகாராணியின் பெயரால்’ நடத்தப் பட்டதால் சந்தித்து பேசுவது என்பது அவ்வளவு எளிதல்ல. 
   
மடாலய அரசியல்

உலக வரலாற்றை சற்று உற்று நோக்கினால் ஒவ்வொரு சாம்ராஜ்ஜியத்திற்கும்  பின்னால் ஆன்மீகமும் அரசியலும் பின்னிப் பிணைந்து இருக்கக் காணலாம். ஐரோப்பியாவில் நடந்த புனித சிலுவைப் போர்கள் தொடங்கி, இன்று உலகம் முழுக்க பேசப்படும் மத தீவிரவாதம் வரை எல்லாமே ஆன்மீகம் (மதம்) சம்பந்தமான அரசியல்தான். 

இங்கிலாந்து மன்னர் ஆட்சியை எடுத்துக் கொண்டால், மன்னர் கிறிஸ்தவத்தில் எந்த பிரிவைச் சார்ந்தவராக ( கத்தோலிக் அல்லது புரோட்டஸ்டாண்ட் ) இருந்தாரோ அந்த பிரிவின் மதகுரு ஆட்சியாளரிடம் செல்வாக்கு உள்ளவராக விளங்கினார். ஐரோப்பிய நாடுகள். வரலாறு பலவும் இப்படித்தான்.முஸ்லிம் நாடுகளிலும் இதே பிரிவு அரசியல்தான்.

தமிழ்நாட்டிலும் ஆன்மீக அரசியல் நடந்தது. அரசன் எந்த மதமோ அந்த மதம் தழைத்தது. அந்தந்த மதங்களின் செல்வாக்கின் போது பிறருடைய வழிபாட்டுத் தலங்கள், இலக்கியச் சுவடிகள் அழிக்கப் பட்டன.. தமிழ் தமிழன் என்று சொன்னாலும் இவர்களுக்குள் ஒற்றுமை கிடையாது. பொதுவில் இந்து என்றாலும், இங்கு இருக்கும் ஒவ்வொரு ஜாதியும் ஒரு மதம். 

ரஜினியின் அரசியல்

ரஜினி பொத்தாம் பொதுவாக நான் அரசியலில் ஈடுபடப் போகிறேன் என்றால் பரவாயில்லை. ஆனால் அவரோ தனது பிரவேசம் ஆன்மீக அரசியல் என்கிறார். ஆன்மீகம் என்றால் இந்து ஆன்மீகமா, ஜெயின் அல்லது பவுத்த ஆன்மீகமா, இஸ்லாமிய ஆன்மீகமா அல்லது கிறிஸ்தவ ஆன்மீகமா என்று தெரியவில்லை. இல்லை எம்ஜிஆரின் அண்ணாயிசம் போல எல்லா மதமும் கலந்த கலவையா என்றும் தெரியவில்லை. இவரும் வழக்கம் போல எம்ஜிஆர் – ஜெயலலிதா பாணியில் படக் கம்பெனி அரசியல் செய்தாலும். ஆச்சரியப் படுவதற்கு இல்லை.

ஜாதியும், பணமும் மேலோங்கி உள்ள தமிழக அரசியலில், நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசம் என்பது, யாருக்காக என்பதனை அவர் யோசிக்க வேண்டும். மக்களிடையே வரவேற்பும் எதிர் பார்த்த அளவில் இல்லை. என்னைப் போன்ற நடிகர் ரஜினி மீது மதிப்பு வைத்து இருக்கும் பலரும் விரும்புவது, ரஜினிக்கு அரசியல் தேவை இல்லை என்பதுதான். 



41 comments:

  1. இதுக்கு முன்னாடி இருந்தவங்க மட்டும் என்னா பன்னிட்டாங்க..இவர் என்னதான் பன்றாருனு பாப்போம்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே. பார்ப்போம். காலம்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்.

      Delete
  2. கொள்கை என்றால் என்வென்று தெரியாதவனிடம்...

    உங்கள் கட்சி கொள்கை என்ன ?

    என்று கேட்டால் பாவம் இனிமேல்தான் யோசிக்கணும்...

    ReplyDelete
    Replies
    1. தங்கப்பதக்கம் திரைப்படத்தில் -
      வைகை வளவன் (திரு.சோ) சொல்லுவாரே.. அப்பாயிசம்!.. - என்று..

      அது மாதிரி ஏதாவது ஒன்றை அடித்து விடவேண்டியது தான்..

      Delete
    2. கருத்துரை தந்த நண்பர்கள் தேவகோட்டை கில்லர்ஜி மற்றும் தஞ்சையம்பதி துரை.செல்வராஜூ இருவருக்கும் நன்றி.

      Delete
  3. >>> ரஜினிக்கு அரசியல் தேவை இல்லை.. <<<

    ரஜினி அரசியலுக்கே தேவை இல்லை!..

    ReplyDelete
    Replies
    1. தங்களின் மறு வருகைக்கு நன்றி சகோதரரே.

      Delete
  4. கமல் நாத்திகவாதியாக அவ்வப்போது தன்னைக் காட்டிக் கொண்ட போது, ஆத்திக முகாமில் அவ்வளவாக யாரும் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் நாத்திக முகாமில் அது பற்றிய பெருமையும் பாராட்டும் இருந்தது.

    ரஜினியின் ஆன்மிக முகம் எல்லோரும் அறிந்ததே. இருந்தும் அவரால் நாத்திக முகாம் நபர்களுடனும் நெருக்கமாக இருந்திருக்க முடிந்திருக்கிறது.

    ஆனால் அவர் இப்பொழுது ஆன்மிக அரசியல் என்று சொல்லும் பொழுதே ஏன் இந்தப் பதட்டம்?..

    கமல், ரஜினி இரண்டு பேர் விஷயத்திலும் ஆத்திக முகாமிலோ அலட்டிக் கொள்ளாத நிலை.. கிணற்று நீரை ஆற்று வெள்ளமா கொண்டு போகப் போகிறது என்கிற மாதிரி.

    ரஜினி அரசியலுக்கு வருவதும் புதிதில்லை. மூப்பனார் காலத்தில் வெற்றிக்கனி பறிக்க முழுமுதற் காரணமாக இருந்தவர். (அண்ணாமலை திரைப்படம், சைக்கிள் சின்னம் இத்யாதி...)

    பின்னால் மூப்பனார் திமுகவுடன் கைகுலுக்கியவுடன் நம்மவர், நல்லவர் என்ற நிலை.

    எவ்வளவு தான் புகழ் படைத்தவராய் இருப்பினும் அரசியலில் அவர் இரண்டாம் நிலையில் பின்புலமாய் இருக்கும் பொழுது அவர் இருப்பு குறித்து யாரும் அலட்டிக் கொள்வதில்லை.

    ஆனால் அவரே முதல் நிலைக்கு வரும் பொழுது, (தனிக்கட்சி, தனிக்கொடி, தனித் தலைவர்) என்று வரும் பொழுது கசப்பும் கரிப்பும் கூடவே வருகின்றன.
    மாமூலாக கடை போட்டிருப்பவர் மத்தியில் புதிகாக ஒருவன் தன் பொருள்களுடன் கடை விரிக்க வரும் பொழுது அவனைப் பார்க்கிற பார்வை.

    எம்ஜிஆருக்குக் கூட இதே நிலை தான் என்று சரித்திரமும் சொல்கிறது..

    ரஜினியின் ஆன்மீகத் துருப்புச்சீட்டும் சொல்லாத கதையெல்லாம் சொல்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மரியாதைக்குரிய மூத்த எழுத்தாளர் ஜீவி அவர்களின் நீண்ட அன்பான கருத்துரைக்கு நன்றி. இப்போதெல்லாம் யாரும் நடிகர் கமல் நாத்திகரா அல்லது ரஜினி ஆத்திகரா என்றெல்லாம் பார்ப்பது கிடையாது.

      ‘ சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும்”
      என்று பாடும் அளவுக்கு ரஜினி பொதுவானவர் என்பது எல்லோர் மனதிலும் பதிந்துள்ள விஷயம். அந்த பொதுவானவர் தேவையில்லாமல், இந்த அரசியலுக்கு வந்து ஏன் சீரழிய வேண்டும் என்பதுதான் பொதுவான கருத்து.

      மூப்பனார் கூட்டணிக்கு ஆதரவாக ரஜினி அறிக்கை விட்ட போதும், அவ்வப்போது அரசியலில் முகம் காட்டிய போதெல்லாம் விமர்சனம் எழாமல் இல்லை. அ.தி.மு.க வுக்கு ஆதரவாக இல்லை என்ற ஒரே காரணத்திற்காக அவர் எப்படியெல்லாம் விமர்சிக்கப் பட்டார் என்பதும், குறிப்பாக மறைந்த நடிகை மனோரமா, நடிகர் ரஜினி மீது எப்படியெல்லாம் தூற்றினார் என்பதும் ஊரறிந்த ரகசியம்.

      இப்போதும் அவர் அரசியலில் கடை போடுவதும் போடாததும் அவர் விருப்பம்தான். பொது வாழ்வு என்று வந்து விட்டாலே விமர்சனம் இருக்கத்தான் செய்யும். ‘கடை விரித்தேன் கொள்வார் இல்லை' என வடலூர் வள்ளலாரையே மனம் வருந்தச் செய்த நாடு இந்த தமிழ்நாடு.

      Delete
  5. கடைக்காரர்களுக்குள் ஒரு அரசியல் இருக்கில்லியா?.. 'நாம் கடைக்காரர்கள்' என்று அணைத்துக் கொண்டு போகிற அரசியல்?.. அதனால் போகப் போக எல்லாம் சரியாயிடும்..

    ReplyDelete
    Replies
    1. எழுத்தாளர் ஜீவி அவர்களின் இரண்டாம் வருகைக்கு நன்றி.

      Delete
  6. தங்கள் தமிழ் நாட்டின் தலைமை நன்கு பரிச்சயமான சினிமா கதாநாயகனின் முகமாக இருப்பதையே பெரும்பாலான தமிழ் நாட்டு மக்கள் விரும்புகிறார்கள். அரசியல் அல்லது நிர்வாகம் பற்றி எந்தவிதமான ஞானமுமின்றி ஆட்சியைப் பிடித்து ஆண்ட வரலாறு தமிழ் நாட்டுக்கு உண்டு.

    ReplyDelete
    Replies
    1. அன்பரின் கருத்துரைக்கு நன்றி. நடிகர்கள் எல்லோருமே தங்களை எம்.ஜி.ஆர் மாதிரி என்று அரசியலுக்கு நினைத்துக் கொண்டால் யார் என்ன சொல்வது என்ற சோகம்தான்

      Delete
  7. சுவாரஸ்யமான தகவல்கள்.
    உங்களுக்கும் ரஜினியின் விளக்கத்தைப் படித்ததும் எம்ஜிஆரே நினைவில் வந்திருக்கார்.
    //எம்ஜிஆர் தனது கட்சிக் கொள்கைகளில் காந்தியிசம், கம்யூனிசம், கேபிடலிசம் என்று சொன்னாலும், இதில் ஒன்றைக்கூட அவர் கடைபிடிக்கவில்லை என்பதே உண்மை. அவர் தனது கட்சியை ஒரு சினிமா படக் கம்பெனி போலவே நடத்தினார். அங்கு எல்லாமே எம்.ஜி.ஆர் தான். அங்கு மூலதனம் எம்ஜிஆர் என்ற பிம்பம்தான்; கூடவே கருணாநிதி எதிர்ப்பு அரசியல். எம்ஜிஆருக்குப் பின் வந்த ஜெயலலிதாவும் இதே அரசியலைத்தான் கடை பிடித்தார்.//இதை எல்லாம் பார்த்தால் பயமாக தான் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வேகநரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. ரஜினி யாரை எதிர்த்து அரசியல் பண்ணப் போகிறார் என்று தெரியவில்லை.

      Delete
  8. எம்.ஜி.ஆரைப் போன்று
    தமிழ்நாட்டை ஆள
    இனி
    எந்த நடிகராலும் முடியாது!
    நடிகர்கள் முயற்சி செய்தாலும்
    மக்கள் பணத்துக் வோட்டுப் போடுவது
    மாறினால் மாற்றம் காணலாம்!

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  9. "Not taking a decision itself is a decision, Narasimha Rao followed it and succeeded it" என்று முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவைப் பற்றிக் கூறுவர். ஆன்மீக அரசியல் என்ற சொல்லாடலைக் கேட்டபோது எனக்கு இதுதான் நினைவிற்கு வந்தது.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  10. மடலாய - மடாலய அரசியல். திருத்திவிடுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களுக்கு நன்றி. மடலாய > மடாலய என்று பிழைதிருத்தம் செய்து விட்டேன். என்னதான், பதிவை வெளியிடுவதற்கு முன்னால் பார்த்து பார்த்து வெளியிட்டாலும், Phonetic வழியே டைப் செய்யும் போது பிழை வந்து விடுகிறது.

      Delete
  11. ஆன்மீக அரசியல் என்பதை நேர்மையான அரசியல் என்று புரிந்துகொள்கிறேன். அவரும் அரசியலுக்கு வரட்டும் (ஆனால் 10 வருடத் தாமதம், அவருடைய சந்தர்ப்பங்களை வீணாக்கிவிட்டார் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது).

    அரசியல் கட்சிகளின் கொள்கைகளைத் தெரிந்து (அப்படி யாருக்காவது ஏதேனும் இருக்கா?) நமக்கு என்ன ஆகப்போகிறது. ஒரு அரசியல் கட்சிக்கும் ஒரு கொள்கையும் இருந்தமாதிரி தெரியலை.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      //அரசியல் கட்சிகளின் கொள்கைகளைத் தெரிந்து (அப்படி யாருக்காவது ஏதேனும் இருக்கா?) நமக்கு என்ன ஆகப்போகிறது. ஒரு அரசியல் கட்சிக்கும் ஒரு கொள்கையும் இருந்தமாதிரி தெரியலை. //

      எனக்கு மட்டும் என்ன சார்? ரஜினி அரசியலுக்கு வருவதும் வராததும் அவருடைய விருப்பம். மக்கள் ஆதரவு என்பது ஒரு பொதுத் தேர்தலை அவர் சந்திக்கும் போது தெரிந்து விடப் போகிறது.

      Delete
  12. அரசியலுக்கு வர வேண்டாம் என்பதே எனது கருத்து. தாமரையின் தலையீடு அதிகமாக இருக்கிறது. வருவதென்றால் ஆரம்ப காலத்தில் வந்துருக்க வேண்டும். இப்போது வருவது தேவையற்றது

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கவிமதி சோலச்சி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  13. வரி ஏய்ப்பு, சொந்த பள்ளி வாடகை பாக்கி, கிட்டத்தட்ட பத்து வருசத்துக்கு மேலா 4000க்குள் வாடகை கொடுத்து சென்னைல கடை நடத்தி, இப்ப வாடகை ஏத்தினா ஏத்துக்க முடியாதுன்னு சொல்லி மறுப்பு, ரசிகர்களை மனுசனாக்கூடா மதிக்காதது, முன்னுக்கு பின் முரண்பட்ட கருத்து, சுயநல போக்கு, மக்கள் பிரச்சனையில் தலையிடாம இருந்தது, சொந்த ஊர்பாசம்ன்னு ரஜினிக்கிட்ட மைனஸ் பாயிண்ட் நிறைய இருக்கு. ரஜினி அரசியலில் எடுபட மாட்டார் என்பது என் அனுமானம்ண்ணே

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்தினுக்கு நன்றி

      Delete
  14. ஆன்மிகம்னா மதம், பக்தி சார்ந்தது என்றே அனைவரும் புரிந்து கொள்வதாய் இருக்கிறது. மற்றபடி நான் ரஜினி ரசிகை எல்லாம் இல்லை! ஆனால் தூய்மையான அரசியல் செய்தால் நல்லது! இல்லைனா இவரும் குட்டையில் ஊறிய மட்டை தான்! மற்றபடி பிஜேபி கட்சி இவருக்குப் பின்னால் இருக்கிறது, இவர் பிஜேபியின் பினாமி என்று சொல்வதெல்லாம் நம்பும்படியாக இல்லை!

    ReplyDelete
    Replies
    1. Sorry to write in English as I'm using phone. Anmeekam is clarified by the actor as a rule free from corruption, religion and caste. If so, why does he need the word Anmeekam? He could've chosen a word that is free from multiple interpretations. OK he's not a benami for BJP. But the BJP leaders themselves are saying the actor is a deep devotee of their religion and he will be their best bet to send atheist politicians of the State to mass graves. Please see TV channels running in front of you now the state BJP leader is telling journalists exactly that which I'm writing here. Whether benami or not, the actor and the BJP are inseparably one with other in political principles which are totally against Dravidian ideology. The actor has no emotional attachment to Tamil,its heritage and never lived among rural Tamils. He can't know the difference between Kural and Thevaram, rather he doesn't know or read them. He can't read Tamil. So he enters as a stranger. He has lived more than 4 decades in TN without taking any effort to know us. We don't mind if he sends Dravidian leaders to oblivion. But it'll be like the British ruling us if the actor enters Fort St George.

      Delete
    2. மேடம் அவர்களின் கருத்தினுக்கு நன்றி. முன்பு ஒருமுறை ரஜினி நான் தாமரைக்கு வாக்களித்தேன் என்று பகிங்கரமாக சொன்னதால், பிஜேபியின் பினாமி என்று இப்போது சொல்கிறார்கள் போலிருக்கிறது. அவர் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியதால், கலைஞரின் ஆள் என்று கூட சொல்லலாம். இதுவாவது பரவாயில்லை, ரஜினி நடித்த கபாலி படத்தில் டாக்டர் அம்பேத்கர் படம் காட்டப் பட்டதால், ரஜினி ஒரு தலித் என்று பா.ம.கவைச் சேர்ந்த ஒரு வலைப்பதிவர் எழுதினார். எதுவுமே நம்பும்படியாக இல்லைதான்.

      Delete
    3. திரு விநாயகம் அவர்களின் கருத்துக்கு நன்றி. எது எப்படி இருப்பினும், ரஜினிகாந்த் அரசியலில் திணிக்கப் படுகிறார் என்பதே உண்மை.

      Delete
  15. எதுவும் காலம் காட்டும் !காத்திருப்போம்!

    ReplyDelete
    Replies
    1. புலவர் அய்யாவின் கருத்தினுக்கு நன்றி.

      Delete
  16. தமிழ் நாட்டை மாற்ற மாநிலங்கள் எல்லாம் ஏளனமாய் பார்க்கம் நிலை வந்துவிட்டதை என்னம்போதுதான் மனம் வேதனையுறுகிறது திரைப் படத்தில் நடித்தால் முதல்வராகி விடலாமா?

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  17. //தமிழ் தமிழன் என்று சொன்னாலும் இவர்களுக்குள் ஒற்றுமை கிடையாது. பொதுவில் இந்து என்றாலும், இங்கு இருக்கும் ஒவ்வொரு ஜாதியும் ஒரு மதம். //

    உண்மை.

    தமிழகத்தில் அரசியல் மிகவும் மோசமாகிக் கொண்டே இருக்கிறது - எல்லோருக்கும் அவரவர் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே இருக்கிறது. தமிழகமும், தமிழக மக்களும் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்பதாகவே அரசியல் நடத்துவதாகத் தெரிகிறது.... என்ன தான் நடக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.

      Delete
  18. யார் யாரோ அரசியலுக்கு வருகிறார்கள் ரஜினி வந்தால் என்ன? மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வாக்களிக்க வேண்டாமே! ( vck, pmk) போல்...

    தமிழ் சினிமா செய்திகள்

    ReplyDelete
    Replies
    1. திரு ஶ்ரீ தரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்கள் விருப்பப்படியே அவர் அரசியலுக்கு வரட்டும் நண்பரே.

      Delete