Saturday, 23 December 2017

கூடு விட்டு கூடு பாயும் கதைகள்



நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் பகுதியில் சண்முகம் என்று ஒருவர் இருந்தார். தினமும் இரவு நேரத்தில், ஒரு பொது இடத்தில், அவர் என்னைப் போன்ற பையன்களை கூட்டி வைத்து சின்னச் சின்ன கதைகளை சொல்லுவார். அவரை கதைசொல்லி (Storyteller) என்று சொல்லலாம். கதைகள் பெரும்பாலும் பறக்கும் குதிரை, மந்திரக் கம்பளம், பாதாள பைரவி என்று மந்திர தந்திரக் கதைகளாகச் சொல்லுவார். அதிலும் கூடு விட்டு கூடு பாயும் கதைகளை ரொம்பவும் ரசிக்கும்படி சொல்லுவார். மார்கழிப் பனியில் போர்வையை போர்த்திக் கொண்டு இது மாதிரி கதைகளைக் கேட்கும்போது இன்னும் சுவாரஸ்யம்தான். கதை கேட்கும் ஆர்வத்தில் வீட்டிற்கு போவதற்கு கூட மறந்து விடுவேன். அது மாதிரியான நாட்களில், எனது அம்மா என்னைத் தேடி எங்கள் வீட்டிலிருந்து வந்து விடுவார்கள். நான் கதை கேட்ட பிறகு வருவேன் என்று சொல்லி விடுவேன்.

விக்கிரமாதித்தன் மதனகாமராஜன் கதைகள்:

பெரியவன் ஆன பின்பும் இந்த கூடு விட்டு கூடு பாயும் கதைகள் மீது ஆர்வம் உண்டு. அப்புறம் இந்த விக்கிரமாதித்தன் கதைகளில் நிறைய இடங்களில் கூடுவிட்டு கூடு பாய்தல் நடைபெறும் விக்கிரமாதித்த மகாராஜாவே கூடுவிட்டு கூடு பாய்வான்.. அவ்வாறு செய்வதற்கு முன் தனது உடலை தனது ஆருயிர் நண்பன் பட்டி மூலம் பத்திரமாக ஓரிடத்தில் மறைத்து விடுவான். ஒருமுறை ஒரு பெண் கிளியின் துயரத்தைப் போக்குவதற்காக, அதன் துணையான இறந்து போன ஆண் கிளியின் உடலில் புகுந்து கொள்வான். திரும்ப வந்த பிறகு பார்த்தால், விக்கிரமாதித்தன் உடலில் ஒரு மந்திரவாதி கூடு விட்டு கூடு பாய்ந்து, போலி விக்கிரமாதித்தனாக உலா வருவான். அப்புறம் எப்படி போலி ஒழிந்தான் என்று ஒரு கிளிக்கதை சொல்லும்.மதனகாமராஜன் கதையில் வரும் கதைகளும் மந்திரம் தந்திம், வீரபிரதாபங்கள்  நிறைந்தவைதான்.

அம்புலிமாமா கதைகள்:

அம்புலிமாமாவில் அழகிய வண்ணப் படங்களோடு வரும் மந்திர தந்திரக் கதைகள் படிக்கப் படிக்க ஆர்வம் தரும். இதிலும் குழந்தைகளுக்கு பிடித்தமான  வகையில் நிறைய மந்திர தந்திரக் கதைகள். வேதாளம் சொன்ன கதைகளுக்கு அம்புலிமாமா போட்ட படம்தான் இன்றைக்கும் சூப்பர்.

விட்டாலாச்சார்யா படங்கள்:

தெலுங்கு பட உலகில் விட்டாலாச்சார்யா என்பவருக்கு தனியே ஓர் இடம் உண்டு. மாயாஜால மன்னன் என்று சொல்வார்கள். இவரது படங்களிலும் கூடு விட்டு கூடு பாயும் கதைகள் தொழில் நுட்பம் அவ்வளவாக இல்லாத அந்த காலத்திலேயே  தந்திரக் காட்சிகளை தனது ராஜாராணி, மந்திரபவாதி படங்களில் சிறப்பாக செய்து காட்டியவர். இவர் எடுத்த இந்த வகையான பல தெலுங்கு படங்கள் உடனுக்குடன் தமிழில் டப் செய்யப்பட்டு தமிழ்நாட்டில் பல இடங்களில் வெளியிடப்பட்டன. பெரும்பாலும் அவை விக்கிரமாதித்தன் பாணி கதைகள். தமிழ் டப்பிங் படங்களான மங்கம்மா சபதம், மதன காமராஜன் கதை, கந்தர்வ கன்னி, ஜெகன் மோகினி, மதன மஞ்சரி, நவ மோகினி ஆகியவை தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ன.                                                                              
நான் இந்த பதிவை எழுதத் தொடங்கியவுடன், கூடு விட்டு கூடு பாய்ந்த ஒரு கதை அரைகுறையாக நினைவில் வந்தது. அந்தக் கதையில் ஒரு இடத்தில் மந்திர தந்திரம் கற்ற குருவுக்கும், அவனது சீடனுக்கும் ஏற்பட்ட தகராறில், இருவரும் ஒவ்வொரு வடிவமாக (பாம்பு – மயில்; புறா – கழுகு என்று மாறுவார்கள்.) இறுதியில் கெட்டமதி படைத்த அந்த குரு அழிவார். இந்தக் கதையையும் காட்சியையும் வைத்து, காந்தாராவ் நடித்த ஒரு படம் தெலுங்கில் வந்தது இந்த படத்தின் பெயர்: குருவுனு மிஞ்சிய சிஷ்யுடு (Guruvunu Minchina Sishyudu).. பின்னர் தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு (வீரத்திலகம் என்ற பெயரில்) வெளிவந்தது. தயாரிப்பு மற்றும் டைரக்‌ஷன் விட்டாலாச்சார்யா.

திருமூலர் கதை:

பதினெண் சித்தர்களில் ஒருவராகிய திருமூலர் வரலாறு என்பது முழுக்க முழுக்க கூடு விட்டு கூடு பாய்ந்த கதைதான். தன்னுடலை விட்டு, இறந்து போன மூலன் என்பவன் உடலிலேயே கடைசிவரை அவரது வாழ்க்கை கடந்து முடிந்து இருப்பதாக அவரது கதை சொல்லுகிறது.

ஆங்கில திரைப்படங்கள்:

ஆங்கில திரைப்பட வரிசையில், நவீன தொழில் நுட்பத்துடன், ஸ்பைடர்மேன், பேட்மேன் என்ற பெயரில், இப்போது வரும் படங்களை, கூடு விட்டு கூடு பாயும் கதைகளின் இன்னொரு வடிவம் எனலாம். இன்னும் இந்த விஞ்ஞான பார்முலா படங்களையும் இந்த வகையில் சேர்க்கலாம்.

                  (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)
 

39 comments:

  1. மூத்த வலைப்பதிவர் திரு V.G.K (வை.கோபால கிருஷ்ணன்) அவர்கள் முன்புபோல் வலைப்பக்கம் வருவதில்லை. அவருடனான தொடர்பு செல்போன், மின்னஞ்சல், வாட்ஸ்அப் என்று தொடர்கிறது. ஒருமுறை அவர் “தான் எல்லா பதிவுகளையும் படிப்பதாகவும், ஆனால் பதிவு எழுதுவதோ அல்லது மறுமொழி எழுதுவதோ இல்லை” என்றும் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தார். இன்றும் அப்படித்தான். நான் வீட்டை விட்டு, வெளியே கடைவீதி சென்று இருந்த போது (இரவு) செல்போனில் தொடர்பு கொண்டு , இந்த பதிவு சம்பந்தமாக இரண்டு மின்னஞ்சல்கள் அனுப்பி இருப்பதாகவும், அவற்றை படித்து விட்டு, எனது கருத்துரைப் பெட்டியில் வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டார். (கீழே அவர் அனுப்பிய மின்னஞ்சல்கள் இரண்டையும் அப்படியே வெளியிட்டுள்ளேன்.)

    ReplyDelete
  2. திரு V.G.K (வை.கோபால கிருஷ்ணன்) அவர்கள் இந்த பதிவு சம்பந்தமாக அனுப்பிய முதல் மின்னஞ்சல் இது:

    அன்பு நண்பர் தமிழ் இளங்கோ அவர்களே, வணக்கம்.

    http://tthamizhelango.blogspot.com/2017/12/blog-post_23.html
    கூடு விட்டு கூடு பாயும் கதைகள்

    தங்களின் மேற்படி பதிவினை நானும் மிகச்சிறிய சிறுவன் போலாகி ரஸித்து ருசித்துப் படித்து மகிழ்ந்தேன்.

    எனக்கும் என் சிறு வயதில் (சுமார் 10 வயதில்) என் அண்டை வீட்டில் குடியிருந்த சீனு என்பவர் நிறைய கதைகள் விடிய விடிய சொல்லியிருக்கிறார். சில கதைகள் கேட்கவே எனக்கு மிகவும் பயமாக இருக்கும். இரவு அவற்றை நினைத்துக்கொண்டு படுத்தால் தூக்கம் வராது.

    ஏதேதோ பழைய நினைவுகளைக் கிளறியது தங்களின் இந்தப் பதிவு. அம்புலிமாமாவில் வரும் வேதாளம் சொல்லும் கதை படிக்க மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். பகிர்வுக்கு நன்றிகள். பாராட்டுகள். வாழ்த்துகள்.
    மீண்டும் வயது குறைந்து சிறுவனாக மாறி விடமாட்டோமா என நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் விஞ்ஞானத்திலோ, மருத்துவத்திலோ அதற்கான கண்டு பிடிப்புகள் இன்னும் வரக்காணோம்.

    இது சம்பந்தமாக நான் சமீபத்தில் கேட்டு சிரித்ததொரு கதையை கீழே பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்:

    >>>>> தொடரும் >>>>>

    ReplyDelete
    Replies
    1. மின்னஞ்சல் வழியே கருத்துரை தந்த மூத்த வலைப்பதிவர் திரு V.G.K அவர்களின் கருத்துரைக்கு நன்றி. நான் இன்றைக்கும் வாசிப்பில் ஆர்வம் உள்ளவனாக இருப்பதற்கு முக்கிய காரணம், எனது சிறுவயதில் பெரியவர்களிடம் நான் கேட்ட கதைகள் கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

      Delete
  3. திரு V.G.K (வை.கோபால கிருஷ்ணன்) அவர்கள் இந்த பதிவு சம்பந்தமாக அனுப்பிய இரண்டாம் மின்னஞ்சல் இது:

    ஒரு ஊரில் ஒரு டாக்டர் இருந்தாராம். அவர் ஒரு புதிய மாத்திரையைக் கண்டுபிடித்து விற்க ஆரம்பித்தாராம். அதில் ஒரு மாத்திரையை வாங்கி சாப்பிட்டால், சாப்பிட்டவருக்கு ஒரு வயது குறைந்து போய் விடுமாம்.

    அந்த டாக்டரிடம், ஒருநாள், ஒரு 90 வயது கிழவி வந்து சேர்ந்தாள். இவர் வைத்துள்ள மாத்திரைகளின் மகத்துவத்தைப் பற்றி விஷயம் கேட்டு அறிந்து கொண்டாள். அவளுக்கும், தான் இளமையாக வேண்டும் என்று ஓர் நியாயமான ஆசையும் எழுச்சியும் ஏற்பட்டது. டாக்டரிடம் கேட்டு, ஒரு முழு பாட்டில் மாத்திரைகளை வாங்கிக்கொண்டு வீட்டுக்குப்போனாள்.

    மறுநாள் 30-வயதுப் பெண்மணியாக மாறி, அதே கிழவி, தன் மடியில் ஓர் சின்னக் குழந்தையுடன் வந்தாள். குழந்தை சட்டை ஏதும் போடவில்லை. எந்தக்கவலையும் இல்லாமல் வாயில் கட்டை விரலை வைத்து சூப்பிக்கொண்டு இருந்தது அந்தக் குழந்தை.

    டாக்டர், தன்னிடம் வந்துள்ள பெண்மணியிடம் “என்னம்மா விஷயம்?” என்று கேட்டார்.

    ”டாக்டர் நேற்று 90-வயதுக் கிழவியாக உங்களிடம் வந்தவளும் நான் தான். நேற்று உங்களிடம் ஒரு பாட்டில் நிறைய மாத்திரைகள் வாங்கிச் சென்றவளும் நான் தான். ஏதோ சீக்கரமாகவே இளமையாக வேண்டும் என்ற ஆர்வக் கோளாறினால் நேற்று இரவே ஒரு 40-50 மாத்திரைகளை மொத்தமாக நான் விழுங்கிவிட்டேன். இப்போ 30-வயதுப் பெண்ணாகி விட்டேன்” என்று மிகவும் வருத்தத்துடன் கூறினாள்.

    “நல்லது தானேம்மா ..... எல்லோரும் இளமையாக இருக்கத்தானே விரும்புவார்கள். உனக்கு இளமை திரும்பி விட்டதே ..... பிறகு ஏன் மீண்டும் என்னைப் பார்க்க நீ வந்தாய்? ஏன் இப்படி அநாவஸ்யமாக வருத்தப்படுகிறாய்” என டாக்டர் அவளிடம், மிகவும் அக்கறையுடன் விசாரித்தார்.

    “நான் வருத்தப்படுவது அதற்காக இல்லை டாக்டர்; இதோ என் மடியில் ஒரு குழந்தை வாயில் விரலைச் சூப்பிக்கொண்டு உள்ளது பாருங்க ..... அது என் வீட்டுக்காரர். அவரும் ஏதோ ஒரு ஆர்வத்தில் நேற்று இரவே ஒரு 70-80 மாத்திரைகளை விழுங்கி விட்டு இப்படி ஆகி விட்டார்; என் மடியில் ஏறிய அவரு ..... கீழே இறங்காமல் அடம் பிடிக்கிறாரு. இதுக்கு ஏதாவது ஒரு மாத்திரை கொடுத்து முதலில் இவரை கீழே இறக்கி விடுங்க ..... இதைத் தூக்கிக் கிட்டு நான் எப்படி எங்கே போய்க்கொண்டே இருக்க முடியும்? அதுதான் என் வருத்தத்திற்குக் காரணம்” என்றாளாம்.

    இயற்கைக்கு விரோதமாக நாம் ஏதாவது புதிய கண்டுபிடிப்புகள் கண்டு பிடித்தால் இதுபோன்ற விபரீதங்களை சந்திக்க நேரிடும். பிறகு நாம், தினமும் குழந்தையுடன் திரியும் பெண்களைப்பார்த்தால் “ஏம்மா, இது உன் குழந்தைதானா அல்லது உன் வீட்டுக்காரரா?” எனக் கேட்டுத் தெரிந்துகொள்ளும்படி ஆகிவிடும். :)))))

    -oOo-

    அன்புடன் கோபு (VGK)

    ReplyDelete
    Replies
    1. நல்ல நகைச்சுவை. கீழே நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களும் இந்த கதைபற்றி நகைச்சுவையாகவே ஒரு கருத்துரை தந்து இருக்கிறார்.

      Delete
    2. அன்பு நண்பர் வை.கோ. சாரை இங்கு பார்த்ததில் சந்தோஷம்.

      நேற்று மதியம் தான் அவரைப் பற்றை நினைத்துக் கொண்டிருந்தேன். (எல்லாம் காரணமாகத் தான்!..)

      இன்று அவரை இங்குப் பார்த்ததில் சந்தோஷம்.

      Delete
    3. //அவரைப் பற்றை//

      அவரைப் பற்றி

      Delete
    4. மரியாதைக்குரிய எழுத்தாளர் ஜீவி அவர்களின் வருகைக்கும், கோபு சார் பற்றிய கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  4. பதிவும் சுவாரசியம். இளமைக்காலத்திற்குக் கொண்டுசெல்கிறது. கோபு சார் கதையும் நல்லாத்தான் இருக்கு. பிறகு வந்து எழுதுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. மீண்டும் வருக.

      Delete
  5. கல்லூரி நாட்களில், விட்டலாச்சார்யா படங்களைப் பார்த்து ஆச்சர்யப்பட்டதும், பயந்ததும் நடந்தது. அவரது ஜெகன்மோகினி படமும் நன்றாக இருக்கும். விட்டலாச்சார்யா கடைசி காலங்களில் மன நோயால் பாதிக்கப்பட்டார் (பயங்கரக் கற்பனைகள் செய்ததனால் இருக்குமோ?).

    உண்மையாகவே, 'இளமை மீண்டும்' திரும்பும் மாத்திரைகள் கிடைத்தால் அதனால் என்ன என்ன விபரீதங்கள் நிகழும் என்று யோசித்துப்பாருங்கள். ஒரு வேளை கோபு சாருக்கு மனதில் உள்ள ஆசை கதையாக வந்துள்ளதா?

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் இரண்டாம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. தமிழ் டப்பிங்கில் வந்த விட்டாலாச்சார்யா படங்களை ரசித்து பார்த்து இருக்கிறேன். ஆனால் அவரைப் பற்றிய விவரங்கள் ஏதும் எனக்கு தெரியாது.

      இந்த மாயாஜால படங்களில், தீய மந்திரவாதி வேடத்தில் வில்லனாக வருபவர் உயரமான எஸ்.வி.ரங்கராவ் அவர்கள் என்பது ரொம்ப நாளாக எனக்குத் தெரியாது. தமிழ்ப் படங்களில் சாதுவான அப்பாவாக வரும் அவர், தெலுங்கு படங்களில் வில்லன் என்பது எனக்கு ஆச்சரியமான செய்திதான்.

      கோபுசாரின் நகைச்சுவைக் கதைக்கு நகைச்சுவையான பதில்தான்.

      திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களே, இதுபோன்ற கருத்துரைகளுக்கு நேரடியாகவே இங்கு வந்து பதில் தந்தால் சுவையாக இருக்கும். இடையில் என்னை போன்ற மீடியேட்டர்கள் தேவையில்லை என்பதே எனது கருத்து.



      Delete
    2. ஆனால் அவரைப் பற்றிய விவரங்கள் ஏதும் எனக்கு தெரியாது.- குமுதத்திலோ அல்லது விகடனிலோ அவரது கடைசி காலங்களின்போது வந்த செய்தியைப் படித்திருக்கிறேன். பொதுவா விட்டலாச்சார்யா ரொம்ப ஸ்டிரிக்ட்னும், நேரம் கழித்து வருவது அல்லது ஷூட்டிங்குக்கு டிமிக்கி கொடுப்பது போல் ஏதாவது நடிக நடிகையர் நடந்துகொண்டால், கதையில் அவர்கள் விலங்காக மாறுவது அல்லது பேயாக மாறுவதுபோல் ட்விஸ்ட் செய்து, அவர்கள் இல்லாமலேயே கதையைத் தொடர்ந்துவிடுவாராம். இதனாலேயே அவருடைய படங்களில் நடிக நடிகையர் அவ்வளவாகத் தொந்தரவு தருவதில்லை என்று படித்திருக்கிறேன்.

      அவரை நினைத்தான் எனக்கு ஞாபகம் வருவது, ஜெகன் மோகினி படத்தில், அடுப்பில் காலை நீட்டி, அதில் தீயை வைத்து பாத்திரத்தைச் சூடாக்கும் பேய்.

      Delete
    3. நண்பர் நெல்லைத் தமிழன் அவர்களின் மறு வருகைக்கு நன்றி. எனக்கு ஜெகன்மோகினி என்றாலே, அந்த படத்தின் நாயகி ஜெயமாலினிதான் நினைவுக்கு வருவார்.

      Delete
  6. அம்புலிமாமா, விட்டலாச்சார்யா படங்கள், விக்கிரமாதித்தன் கதைகள் என நம்மில் பலருக்கும் பிடித்த விஷயங்களைப் பற்றி பதிவாக எழுதியது சிறப்பு. எத்தனை கதைகள்.... அந்த ஸ்வாரஸ்யம் ஏனோ ஸ்பைடர்மேன் கதைகளில் வருவதில்லை.

    சிறப்பான பதிவு. பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டிற்கும் நன்றி.

      Delete
  7. பதிவு பழைய நினைவுகளைக் கிளறி விட்டது. எனக்கும் இந்த மர்மங்கள் உள்ள கதைகள்னா ரொம்பப் பிடிக்கும். சினிமாக்கள் கூட இப்படி இருந்தால் பார்க்கப் பிடிக்கும். ஆனால் விட்டலாச்சாரியா படங்கள் ஏதும் பார்த்ததாய் நினைவில் இல்லை!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி மேடம்.

      Delete
  8. வைகோ அவர்களின் கதையும் சுவாரசியம்! இந்தக் கதையை ஏற்கெனவே படித்திருக்கேன். :) அப்படி மீண்டும் இளமை திரும்பினால் ஒரு விதத்தில் நல்லது. ஏற்கெனவே செய்திருந்த தவறுகளைத் திருத்திடலாம். ஆனால் நினைவு இருக்கணும்! இளமை மட்டும் திரும்பி அந்த இளமைக்காலத்து நினைவுகள் மட்டுமே தங்கினால்! என்ன செய்யறது? மறுபடி பழைய குருடி கதவைத் திறடி கதை தான்! :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம். நானும் இந்த கதையை கோபு சார் பதிவினிலேயே முன்பொருமுறை படித்ததாக நினைவு. உங்கள் கருத்துரையைப் படித்து முடித்ததும், 'ஆசையே அலைபோலே' என்ற திரையிசைப் பாடலில் வரும் 'இளமை மீண்டும் வருமா? முதுமையே சுகமா?' என்ற வரி நினைவில் வந்தது.

      Delete
  9. அம்புலிமாமா மறக்கவே முடியாத சிறுவர் பத்திரிகை. சந்தாமாமா பப்ளிகேஷன்ஸ் அம்புலிமாமாவை வெளியிட்டு வந்தது. பிரபல திரைப்படத் தயாரிப்பாளர்கள் நாகிரெட்டி--சக்ரபாணிக்குச் சொந்தமான வெளியீட்டு நிறுவனம். சிறார்களுக்கான அவர்களின் உறுப்படியான காணிக்கை அம்புலி மாமா.. நாடு சுதந்தரம் பெற்ற ஆண்டிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது. 14 மொழிகளில் இந்த சிறுவர் பத்திரிகை வெளிவந்தது. இப்பொழுது எப்படி என்று தெரியவில்லை.

    அம்புலிமாமாவைப் போலவே அம்புலிமாமாவில் ஓவியம் வரைந்த 'சந்திரா' கதாபாத்திரங்களை கண்முன் நடமாடவிட்ட அற்புதக் கலைஞர்.. அவர் ஓவியங்கள் சிறுவர் மனதைச் சுண்டியிழுத்தன.

    ReplyDelete
    Replies
    1. அம்புலிமாமா பற்றிய பல தகவல்களைத் தந்த எழுத்தாளர் ஜீவி அய்யா அவர்களுக்கு நன்றி.

      Delete
  10. மனதை கொள்ளை கொண்ட சிறுவயதில் பார்த்த படங்கள் படித்த அம்புலிமாமா பற்றிய பதிவு படித்தேன் மகிழ்ந்தேன். விக்கிரமாத்தியன் கதை படிப்பதை விட கேட்பதில்தான் சுவராஸ்யம் இருக்கும் அடுத்து என்ன அடுத்து என்ன என்று நானும் என் பாட்டியிடம் கேட்டு இருக்கிறேன் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி மேடம். எனக்கு இப்போதும் அம்புலிமாமா கதைகள் படிப்பதில் உள்ள ஆர்வம் போகவில்லை. பழைய புத்தக கடையில் வாங்கிய, எங்கள் வீட்டில் இருந்த அம்புலிமாமா தொகுப்பை யாரோ படிக்க வாங்கிச் சென்று திருப்பியே தரவில்லை. இன்னும் எனக்கு அந்த வருத்தம் உண்டு.

      Delete
  11. மூத்த வலைப்பதிவர் திரு V.G.K (வை.கோபால கிருஷ்ணன்) அவர்கள் ஏதோ சில காரணிங்களினால் வலைப் பக்கம் எழுதுவதையும் மறுமொழிகள் தருவதையும் தவிர்த்து வருகிறார். இந்த பதிவிற்கு கூட இரண்டு மின்னஞ்சல்களை (மேலே குறிப்பிட்டு இருக்கிறேன்) அனுப்பி, மூன்றாவதாக ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த மின்னஞ்சல் கீழே.

    // Dear Sir, வணக்கம். என் நெருங்கிய நண்பர்களில் சுமார் 20 நபர்களுக்கு இந்தத் தகவல்களை இன்று மின்னஞ்சல் மூலம் நான் அனுப்பியுள்ளேன். அவர்களில் ஒரு 4-5 பேர்களாவது தங்கள் பதிவுப்பக்கம் வருகை தந்து ஏதேனும் கருத்துக்கள் எழுதக்கூடும். அதனால் அடுத்த பதிவு வெளியிடுவதை கொஞ்சம் ஒத்திப்போடவும். அன்புடன் VGK//

    .xxxxxxx.

    இதற்கு மறுமொழியாக நானும் கீழ்க்கண்ட மின்னஞ்சலை அனுப்பி வைத்துள்ளேன்.

    // அன்புள்ள திரு V.G.K அவர்களுக்கு வணக்கம். உங்களின் இந்த மின்னஞ்சலானது, உங்களுக்கு இன்னும் வலைப்பக்கம் இருக்கும் ஆர்வத்தினையும், வாசகர்கள் மீது நீங்கள் வைத்து இருக்கும் அன்பினையும் வெளிப்படுத்துகிறது. நான் ஏற்கனவே எழுதிய,
    திரு V.G.K.அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் http://tthamizhelango.blogspot.com/2016/02/vgk.html
    என்ற எனது பதிவினை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். அதில்
    // நான் முன்பே குறிப்பிட்டது போல ஒவ்வொருவருக்கும் ஒரு வாசகர் வட்டம் இருக்கிறது. எல்லா விவரங்களையும் வைத்துப் பார்க்கும் போது திரு V.G.K. அவர்களின் வாசகர்கள், அவரது தளத்திலேயே தொடர்ந்து எழுதவும், அவர்களது கருத்துரைகளை அவரது தளத்தில் எழுதவுமே விரும்புகிறார்கள் என்று தெரிய வருகிறது. மேலும் அவரது மறுமொழிகளிலிருந்து அவருக்குள் இருக்கும் எழுதும் ஆர்வத்தையும் உணர முடிகிறது. //

    என்று குறிப்பிட்டு இருந்தேன். எனவே உங்களுக்குள் இருக்கும் எழுதும் ஆர்வத்தினை கட்டுப்படுத்தாமல், மீண்டும் வலைத்தளம் வந்து புதிய படைப்புகளை வாசகர்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    - அன்புடன் தி.தமிழ் இளங்கோ //

    .xxxxxxxxxxxx

    ReplyDelete
  12. எங்கள் தாத்தா, ஆத்தா மூலமாக மதனகாமராஜன் கதைகளையும், விக்கிரமாதித்தன் கதைகளையும் அவர்களுக்குப் படித்துக் காண்பித்து நாங்களும் அறிந்தோம். திருமூலரைப் படித்துள்ளேன். இன்று உங்கள் பதிவு மூலமாக அனைத்தையும் ஒருசேரக் கண்டேன்.

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  13. அம்புலிமாமா வாசிப்பு கடந்துதான் பெரும்பாலான தமிழர் தலைமுறை வளர்ந்திருக்கிறது. பால்ய நினைவுகளை மீட்ட பதிவு

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் கருத்தினுக்கு நன்றி

      Delete
  14. சிறுவயதில் மர்மக் கதைகள் பொதுவாக எல்லோருக்கும்பிடிக்கும் இதைத் தெரிந்துகொண்டு அந்தவயதில் பல வேண்டாத விஷயங்கள் போதிக்கப் படுவதை நினைத்தால் வருத்தம்மேலிடுகிறது

    ReplyDelete
    Replies
    1. அய்யா ஜீ.எம்.பி அவர்களுக்கு நன்றி.

      Delete
  15. விக்ரமாதித்தன் கதைகளைப் படித்திருக்கிறேன். ஆனால் எதுவும் நினைவில் இல்லை. விட்டலாச்சாரியார் படங்கள் பார்த்ததில்லை. கோபு சார் எழுதியிருப்பது நல்ல தமாஷான கதை தான். அதே சமயம் மீண்டும் இளமை திரும்பினால் என்னென்ன நடக்கும் என்ற சிந்திக்கவும் வைத்தது. பகிர்வுக்கு மிகவும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் கருத்தினுக்கு நன்றி. கோபு சாரை மீண்டும் வலைப்பக்கம் எழுதச் சொல்லுங்கள்.

      Delete
  16. எனக்கும் ரொம்ப பிடிக்கும் அண்ணா இந்த விக்ரமாதித்தன் வேதாளம் அம்புலிமாமா கதைகள் ..
    நான் ஆங்கிலத்திலும் சந்தமாமா காமிக்ஸ் படிச்சிருக்கேன் .முன்பு இந்தியா போனா அங்கே ஹிக்கின்பாதம்ஸில் எடுத்து வருவேன்.
    மகள் கொஞ்சம் காலம் ஆன்லைனில் படிச்சா ஆங்கிலத்தில் இப்போ வேப்சைட் ஒர்க் ஆகலை

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. பழைய வருடத்து அம்புலிமாமா கதைகளை http://chandamama.in என்ற அவர்களது இணையதளத்தில் ஆங்கிலம், தெலுங்கில் படிக்கலாம். தமிழில் இன்னும் வரவில்லை.

      Delete
  17. சிறு வயது நினைவுகள் மனதில் வலம் வருகின்றன ஐயா
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  18. சுவையான எண்ணங்களின்
    அருமையான தொகுப்பு

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் யாழ்பாவாணன் அவர்களுக்கு நன்றி.

      Delete