Saturday, 16 September 2017

சேம்பு எனப்படும் சேப்பங் கிழங்கு



ரொம்ப நாளைக்கு அப்புறம், எங்கள் சொந்த ஊருக்கு (திருமழபாடி) அருகில் உள்ள, எனது பெரியம்மா ஊருக்கு சென்று இருந்தேன்.  ஊரின் பெயர் ஆலம்பாடி மேட்டூர். இந்த ஊர், லால்குடி மார்க்கத்தில், சிதம்பரம் சாலையில், புள்ளம்பாடி, விரகாலூர் தாண்டி உள்ளது. கொள்ளிடம் ஆறு, வாய்க்கால், குளம் என்று பசுமையாக இருக்கும். சின்ன வயதினில் அந்த ஊருக்கு அடிக்கடி சென்று இருக்கிறேன். போன தடவை போயிருந்த போது மழை இல்லாததால் வறட்சிதான். இப்போது ஒருவாரமாக நல்ல மழை. எனவே இந்த தடவை ஊரில் நிறையவே பசுமை. வாய்க்கால் ஓரத்திலும் குளக்கரையிலும் நிறையவே சேமை இலைச் செடிகள். சேம்பு எனப்படும் இந்த சேப்பங் கிழங்குச் செடிகள். மஞ்சள் செடியைப் போன்று கொத்து கொத்தாக காட்சி தந்தன. (அப்போது அந்த ஊரில் எடுத்த புகைப்படங்கள் கீழே)




அந்த ஊருக்கு பள்ளி விடுமுறையில் போகும்போதெல்லாம், எனது வயதுப் பையன்களோடு, இந்த இலைகளை வைத்து விளையாடி இருக்கிறேன். எனக்குத் தெரிந்து திருச்சி, அரியலூர் மார்க்கத்தில் உள்ள ஊர்களில் பல உணவு விடுதிகளில் இந்த சேம இலையைத்தான் டிபன் கட்ட பயன்படுத்தினார்கள். குறிப்பாக இறைச்சி கடைகளில் இந்த இலைதான். இப்போது எல்லவற்றிலும் பிளாஸ்டிக் மயம்.

இந்த சேம்பு செடிகள் குத்துகுத்தாக, மஞ்சள் செடிகளைப் போன்றே வளரும். இந்த செடியின் அடியில் விளையும் கிழங்கு சேப்பங்கிழங்கு எனப்படும். சேப்பங்கிழங்கு பொரியல், சேப்பங் கிழங்கு புளிக்குழம்பு, சேப்பங் கிழங்கு மோர்க்குழம்பு சமையலில் பிரசித்தம். கிழங்கு வழவழவென்று இருக்கும். செய்யும் முறையில் செய்தால் சுவையோ சுவை. ( இந்த சேப்பங்கிழங்கு மோர்க் குழம்பை திருச்சி ஆண்டார் வீதியில் இருக்கும் ‘மதுரா லாட்ஜ்’ ஹோட்டலில் ருசித்து சாப்பிட்ட நாட்கள் நினைவுக்கு வருகின்றன.) இந்த சேப்பங்கிழங்கை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கலும் மூல வியாதியும் வராது என்று பெரியவர்கள் சொல்ல கேள்விப் பட்டு இருக்கிறேன்.   

                            (படம் – மேலே – சேப்பங்கிழங்கு – நன்றி கூகிள் )

எங்கள் ஊர்ப்பக்க, வாய்க்கால் ஓர செடிகளாக இருக்கும், இந்த சேப்பங் கிழங்குச் செடிகள், சில இடங்களில், வயல்களில் பயிரிடப்பட்டு நல்ல லாபத்தைத் தரும் தொழிலாக உள்ளது.

பிற்சேர்க்கை ( 18.09.2017 – 19.05 P.M )

ஓய்வுபெற்ற வங்கி அதிகாரி மற்றும் வேளாண்மையில் பட்டம் பெற்றவருமான, மூத்த வலைப்பதிவர் V.N.S அய்யா அவர்கள், கருத்துரைப் பெட்டியில், மேலே பதிவு சம்பந்தமான ஒரு கருத்துரையை, ஒரு திருத்தத்தை கீழே சொல்லி இருக்கிறார். 

நீங்கள் வாய்க்கால் ஓரத்தில் பார்த்தவை சேப்பங்கிழங்கு குடும்பமான Araceae வைச் சேர்ந்தவை. ஆனால் அவை சேம்பு (சேப்பங்கிழங்கு) செடிகள் அல்ல என எண்ணுகிறேன். . நாம் சாப்பிடும் சேம்பு வின் தாவரப்பெயர் Colocasia esculenta. சேம்பில் மட்டும் ஆறு வகைகள் உள்ளன. 
  
சேம்பைப்பற்றி வெளியிட்டு சேப்பங்கிழங்கு வறுவலையும், மோர்க்குழம்பையும் நினைவூட்டிவிட்டீர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி! //
 



28 comments:

  1. இந்த கிழங்கின் சுவை எனக்கு மிகவும் பிடிக்கும் :)

    ReplyDelete
    Replies
    1. நண்பர் பகவான்ஜீ அவர்களின் வருகைக்கு நன்றி.

      Delete
  2. TM 1 சேப்பங்கிழங்கு ரோஸ் மிகவும் பிடிக்கும் என் மனைவி இந்த கிழங்கை வைத்து மோர் குழம்பு செய்வாள்.. என் அம்மா இதை சாம்பாருக்கும் , ஆட்டு கறி குழம்பிலும் போட்டு செய்வார்கள் ஆட்டுகறியை ஒதுக்கிவிட்டு அதில் இருக்கும் கிழங்கை சாப்பிடுவேன்


    நீங்கள் பதியும் போட்டோ அனைத்தும் மிக நன்றாக இருக்கிறது அது புரொபஷனல் போட்டோகிரபர் எடுப்பதை விட மிகவும் நன்றாகவே இருக்கிரது பாராட்டுக்கள்

    ReplyDelete
    Replies
    1. நண்பர் மதுரைத்தமிழன் அவர்களின் கருத்துரைக்கும் பாராட்டினுக்கும் நன்றி. இப்போதெல்லாம், சின்னப் பிள்ளைகளின் கையில் நல்ல கேமிராவை கொடுத்து விட்டால் இன்னும் சிறப்பாகவே எடுப்பார்கள்.

      Delete
  3. சேப்பங்கிழங்கு
    உண்டு மகிழ்ந்திருக்கிறேன் ஐயா
    படங்கள் அருமை
    நன்றி
    தம +1

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியரின் கருத்துரைக்கு நன்றி

      Delete
  4. சேம்பு ரோஸ்ட், சேம்பு மோர்க்குழம்பு போன்றவை எனக்கும் பிடிக்கும். மண்வாசனை பொறுத்து ஒவ்வொரு ஊர்க்கிழங்கும் ஒவ்வொரு மாதிரி இருக்கும் இல்லை? தம மூன்றாம் வாக்கு.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  5. திருமழபாடி என்ற பெயரைப் பார்த்ததும் எனக்கு 'மழபாடியுள் மாணிக்கமே' பாடல்தான் நினைவுக்கு வந்தது.

    சேம்பு ரோஸ்ட் மற்றும் அதை வைத்துப் பண்ணும் எல்லா உணவு வகைகளும் எனக்குப் பிடிக்கும். நம்ம ஊர் சேம்பு, சைனா சேம்பைவிட ரொம்ப நல்லா இருக்கும். சைனா சேம்பு (நீங்கள் போட்டுள்ள படம்-கூகுள்?) கொஞ்சம் பெரிய சைஸ், உடனே ரொம்பவும் குழைந்துவிடும். நம்ம ஊர்ல ஜனவரி, பொங்கல் சமயம்தான் சேம்பு விளைச்சல் அதிகம்னு நினைக்கறேன்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      // திருமழபாடி என்ற பெயரைப் பார்த்ததும் எனக்கு 'மழபாடியுள் மாணிக்கமே' பாடல்தான் நினைவுக்கு வந்தது //

      தேவார பதிகங்களில் முக்கியமான பாடல் இது. ’அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே’ என்ற சுந்தரரின், சுந்தரத்தமிழ் பாடல்.

      மேலே பதிவினில் கடைசியாக உள்ள படம், கூகிள் உதவிதான். அது சைனா சேம்பா என்று எனக்கு தெரியாது.( சேப்பங்கிழங்கு விற்பனையாகும் கடைக்கு போய் படம் எடுத்து போட நேரம் இல்லை) நமது, தமிழ்நாட்டில் பொங்கல் வந்து விட்டாலே கரும்பு, மஞ்சள், சேம்பு மற்றும் கருணைக்கிழங்கு வகைகள் சந்தைக்கு அதிகம் வந்து விடும்.

      Delete
  6. சேப்பகிழங்குடன் ஆட்டுக்கறி கலந்த குழம்பு நித்தம் நித்தம் நெல்லுசோறுடன் அட்டகாசமாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. அன்பர் விமல் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. உங்களுடைய ‘டேஸ்ட்’டில் சேப்பங்கிழங்கு, ஆட்டுக்கறி குழம்பை சாப்பிட எனக்கு வாய்ப்பு கிட்டியதில்லை.

      Delete
  7. எங்கள் வீட்டில் சமைப்பார்கள் த ம 6

    ReplyDelete
    Replies
    1. புலவர் அய்யாவின் கருத்துரைக்கு நன்றி. உணவே மருந்து, மருந்தே உணவு
      என்ற வகையில் இதன் பெருமையை உணர்ந்தவர்கள் இதனை உணவில் சேர்த்துக் கொள்வார்கள்.

      Delete
  8. பறித்த தோட்டத்து புதுமையோடு சேம்பு.... அந்த லைட் வயலட் ஷேட் அருமை!! நன்றி பகிர்வுக்கு.

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் கருத்தினுக்கு நன்றி

      Delete
  9. சேம்பு இலைகளும் கிழங்குகளுமாய் புகைப்படங்கள் மிக அழகு! பின்னூட்டத்தில்தான் அதைக் கறிக்குழம்பிலும் சேர்ப்பார்கள் என்பதைத் தெரிந்து கொண்டேன்.

    திருமழபாடி தஞ்சையிலிருந்து அரியலூர் போகும் வழியில் இருப்பது தானே? திருமழபாடி என்று போர்டு போட்டு ஒரு கிளைப்பாதை அரியலூருக்கு முன்னால் தென்படும்.

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      // திருமழபாடி தஞ்சையிலிருந்து அரியலூர் போகும் வழியில் இருப்பது தானே? திருமழபாடி என்று போர்டு போட்டு ஒரு கிளைப்பாதை அரியலூருக்கு முன்னால் தென்படும் //

      அதேதான். தஞ்சையிலிருந்து அரியலூர் நோக்கி வரும்போது, திருமானூர் கொள்ளிடம் பாலம் தாண்டி, அரியலூர் பாதைக்கு திரும்பும்போது, இந்த பலகையை பார்த்து இருப்பீர்கள். கொள்ளிடத்தின் வட கரையை ஓட்டி, மேற்கே செல்லும் சாலை திருமழபாடிக்கு செல்லும் பாதை ஆகும்.

      Delete
  10. அழகான போட்டோக்களுடன் செப்பங்கிழங்கு குறித்த தகவல்கள் அத்தனையும் அருமையானது. இக்கிழங்கை சாப்பிட்டதான நினைவு இல்லை.

    ReplyDelete
    Replies
    1. மேடம் அவர்களின் கருத்தினுக்கு நன்றி.

      Delete
  11. ருசியை அனுபவித்துள்ளேன். அது சரி. திருமழபாடி கோயிலுக்குப் போகவில்லையா?

    ReplyDelete
    Replies
    1. முனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. அன்று நான் சென்ற ஊரில், உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு, உடனே திருச்சிக்கு திரும்பி விட்டேன்.

      Delete
  12. இந்த கிழங்கின் வழவழப்பு எனக்குப் பிடிக்காது ஆனால் நன்றாய் ரோஸ்ட்
    செய்தால் உண்ணுவேன்

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் ஜீ.எம்.பி அவர்களுக்கு நன்றி. இந்த கிழங்கின் சிறப்பே இதன் வழவழப்பு தன்மைதான்.

      Delete
  13. நீங்கள் வாய்க்கால் ஓரத்தில் பார்த்தவை சேப்பங்கிழங்கு குடும்பமான Araceae வைச் சேர்ந்தவை. ஆனால் அவை சேம்பு (சேப்பங்கிழங்கு) செடிகள் அல்ல என எண்ணுகிறேன். . நாம் சாப்பிடும் சேம்பு வின் தாவரப்பெயர் Colocasia esculenta. சேம்பில் மட்டும் ஆறு வகைகள் உள்ளன.
    சேம்பைப்பற்றி வெளியிட்டு சேப்பங்கிழங்கு வறுவலையும், மோர்க்குழம்பையும் நினைவூட்டிவிட்டீர்கள். பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. மூத்த வலைப்பதிவர் V.N.S அய்யா அவர்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். எனவே நீங்கள் மேலே சொன்ன கருத்துரையை, அப்படியே இந்த பதிவின் முடிவில் பிற்சேர்க்கையாக சேர்த்துள்ளேன்.

      பொதுவாக இந்த செடியின் இலையை சேமை இலை என்றும், செடியை சேமைச் செடி என்றும்தான் சொல்லுகிறார்கள். இந்த செடியின் கிழங்கை சமையல் செய்து சாப்பிட்டதாகவும் தெரியவில்லை.

      Delete
  14. இந்தக்கிழங்கு மோர்க்குழம்பில் அரிந்து போட்டால் அருமையாக இருக்கும்.
    த.ம.பிறகு கணினியில்.

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.

      Delete