பெங்களூர் வாழ் தமிழரான பிரபல எழுத்தாளர் அமுதவன் அவர்கள் திருச்சிக்காரர்.
இவரது இயற்பெயர் மெல்க்யூ. இவர் ஒரு சிறந்த வலைப்பதிவரும் ஆவார். இவரது வலைத்தளம் சென்று
அடிக்கடி இவரது கட்டுரைகளைப் படிப்பது வழக்கம். விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ள இவர்
எழுதிய ‘என்றென்றும் சுஜாதா’ என்ற நூலை அண்மையில்தான் படித்தேன்.
நானும் அந்நாளைய எனது வாலிப வயதில் எழுத்தாளர் சுஜாதாவின் வாசகன்
என்ற முறையில், இந்த நூலுக்குள் உணர்வுப் பூர்வமாகவே ஒன்றிப் போனேன். ஸ்ரீரங்கத்து
தேவதைகள், நிர்வாண நகரம், கரையெல்லாம் செண்பகப் பூ, நில்லுங்கள் ராஜாவே என்று எழுதிய,
என்றென்றும் சுஜாதா மறக்க முடியாத வித்தியாசமான எழுத்தாளர். கூடவே, இவர் எழுதிய தொடர்களுக்கு
ஓவியர் ஜெயராஜ் வரைந்த ஓவியங்களும் வந்து நிழலாடுகின்றன.
சுஜாதாவும் அமுதவனும்
பெங்களூரில் தொலைபேசித் தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டு இருந்த
அமுதவனுக்கு, தன்னுடைய அபிமான எழுத்தாளர் சுஜாதா பெங்களூரில், பாரத் எலக்ட்ரானிக்ஸ்
(B.E.L) இல் என்ஜீனியராக பணிபுரிய வந்து இருக்கிறார் என்ற தகவல் கிடைக்கின்றது. நண்பர்
மூலம் கிடைத்த விலாசத்தை வைத்துக் கொண்டு, தான் முன்பின் பார்த்திராத சுஜாதாவை அவரது
இல்லத்திலேயே சந்திக்கச் செல்கிறார். அங்கு அப்போது அவருக்கு ஏற்பட்ட மகிழ்வான தருணத்தை,
இந்த நூலின் முதல் அத்தியாயத்திலே சொல்லி பரவசப் படுகிறார்.
அதன் பிறகு அடிக்கடி அவரைச் சந்திக்க தான் சென்றதையும், அன்போடு
நட்பு பாராட்டியதையும், பழகியதையும் தொகுத்து எழுத்தாளர் சுஜாதாவுடனான அனுபவங்களை முதல்
சந்திப்பு தொடங்கி அவருடனான கடைசி சந்திப்பு முடிய ஒரு நாவல் போன்று சுவைபட சொல்லி
இருக்கிறார் நூலாசிரியர் அமுதவன் அவர்கள்.
// எழுத்தாளன் என்றால் வறுமையை மணந்து
கொண்டு கூழுக்குப் பாடும் புலவர்களாகத்தான் இன்னும் பலரை நாம் பார்க்க முடிகிறது.
‘சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்’ என்ற திருவிளையாடல் வசனம்தான் ஞாபகத்துக்கு
வரும். ஆனால் இந்த மனிதன் ஜிப்பா வேட்டி ஜோல்னாப் பைக்குள் அடங்காத, பெல்ட் போடாமல்
டக் இன் பண்ணிக்கொண்டு ஒரு நிறுவனத்தின் பெரிய அதிகாரி என்பதற்கேற்ப காட்சியளித்தார்
// - இந்நூல் பக்கம்.158
இலக்கிய சந்திப்புகள்
நூலின் இடையிடையே சுஜாதாவின் எழுத்துக்களைப் பற்றியும், அவரைச்
சந்திக்க வரும் வாசகர்கள் குறித்தும், பெங்களூரில் நடந்த இளம் எழுத்தாளர்களுடனான சந்திப்புகள்,
அவர்களுக்கான அறிவுரைகள் மற்றும் இலக்கியக் கூட்டங்கள் குறித்தும் விவரிக்கிறார்.
// பொதுவாக இளம் எழுத்தாளர்களுக்கு
அவர் நிறைய குறிப்புகள் கொடுத்தாலும் மறக்காமல் கொடுக்கும் ஒரு குறிப்பு இதுதான். ஒரு
கதையை முதல் பாராவின் முதல் வரியில் ஆரம்பித்து விட வேண்டும் // - இந்நூல் பக்கம்.31
பிரபலங்களும் சந்திப்புகளும்
எழுத்தாளர் அமுதவன் அவர்களுக்கு தமிழ் திரைப்பட உலகிலும் கமல்ஹாசன்,
சிவகுமார், பாரதிராஜா, இளையராஜா என்று நட்புகள். அவர்கள் எழுத்தாளர் அமுதவனுடனான நட்பில்
எழுத்தாளர் சுஜாதாவை சந்தித்த விஷயங்களையும் சுவைபடச் சொல்லி இருக்கிறார்.
நடிகர் கமலஹாசன் எழுத்தாளர் சுஜாதாவை சந்திக்க விரும்பி அமுதவனிடம்
சொல்கிறார். ஆனால் இருவரும் சந்தித்துக் கொள்வது என்பது ஓவ்வொரு முறையும் தள்ளிக் கொண்டே
போகிறது. ஒரு கட்டத்தில் சந்திப்பு நடந்தே விடுகிறது. எப்படி என்றால், கமலைச் சந்திக்க
அவர் வீட்டுக்கு அருகில் வந்தபோது சுஜாதா கார்
நின்று விடுகிறது. அப்போது அங்கு காத்து இருந்த அமுதவனும் மற்றவர்களும், கார் ஸ்டார்ட்
ஆக காரின் பின்னால் இருந்து தள்ளுகிறார்கள்.
அப்போதுதான் அங்கு வந்த கமல் தனது காரை விட்டு இறங்கி அவரும் தள்ளுகிறார். இத்தனைக்கும்
இருவரும் முன்பின் சந்தித்தது இல்லை. இப்படியாக ஒரு சந்திப்பு.
பிணக்கும் பிரிவும் சமாதானமும்
எழுத்தாளர் சாவிக்கும் எழுத்தாளர் சுஜாதாவுக்குமான நட்பைப் பற்றி
நூலாசிரியர் சொல்லும்[போது
// குமுதம் மூலம் சுஜாதா புகழ்பெற
ஆரம்பித்தார் என்றாலும் ஒரு நட்சத்திர எழுத்தாளராகவும் பரபரப்பான புகழுக்குச் சொந்தக்காரராகவும்
அவரை மாற்றியவர் சாவி//
என்று குறிப்பிடுகிறார். இந்நூல் பக்கம்..134. ஆனாலும் இவர்கள்
இருவருக்கும் இடையில் எதனாலோ ஒரு மனக்கசப்பு; ஏற்பட்டு ரொம்ப காலம் பேச்சு வார்த்தை
இல்லாமல் போய் விட்டது. இவர்கள் இருவரையும் சமாதானமாக்கும் முயற்சியில், அமுதவன் அவர்கள்
ஈடுபட்டு வெற்றியும் கண்டு இருக்கிறார். இந்த அனுபவத்தை ‘சாவியுடன் மனக் கசப்பு’ என்ற
அத்தியாயத்தில் சொல்லுகிறார்.
எலக்ட்ரானிக் ஓட்டு பதிவு
இயந்திரம்
இன்றைக்கு இந்தியாவில் ஓட்டு இயந்திரம் பற்றி காரசார விவதங்கள்
நடைபெற்று வருகின்றன. இந்த ஓட்டு இயந்திரத்தை கண்டு பிடித்தவர் எழுத்தாளர் சுஜாதா என்பது
நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தியிடம் இந்த இயந்திரத்தின்
செயல் விளக்கம் பற்றி சுஜாதா விளக்கியதையும் அவர் பாராட்டு சொன்னதையும், இந்த இயந்திரத்தின்
மீதான நம்பகத் தனமை குறித்து மற்றவர்களுக்கு எழுந்த சந்தேகங்களுக்கு சுஜாதா சொன்ன மறுமோழிகளையும்
ஒரு அத்தியாயத்தில் சொல்லி இருக்கிறார், இந்நூலாசிரியர்.
// இத்தன வருஷங்களா ஏதோ ஒன்னுக்குப்
பழகிட்டு, இப்போ புதுசா ஒன்னை அறிமுகப்படுத்தி இனிமேல் இதுதான், இதை நீ ஒத்துக்கிட்டாகனும்னு
சொன்னா அவ்வளவு சீக்கிரம் ஏத்துக்க மாட்டாங்க.
எதிர்ப்பு வரும். ஆனா இதில் பெரிய ஊழல் நடந்துரும், தப்பாட்டம் நடக்கும்னெல்லாம் சொல்றது
அறியாமைதான்.இது எல்லா கம்ப்யூட்டர்களும் இணைக்கப்பட்ட ஒரு நெட் ஒர்க் கிடையாது. ஒவ்வொன்னும்
தனிதனி யந்திரம் அவ்வளவுதான். ஒரு மொத்தத் தொகுதிக்கான அத்தனை இயந்திரங்களும் இணைக்கப்பட்டிருக்கா
என்றால் அதுவும் கிடையாது.// - இந்நூல் பக்கம்.144
கடைசி நாட்கள்
எழுத்தாளர் சுஜாதாவின் கடைசி நாட்கள், பற்றிய கடைசி இரு பதிவுகள்
நெஞ்சைப் பிழியும் வண்ணம் இருக்கின்றன. அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த சுஜாதா, வீடு
திரும்பியதும், தான் எழுதிய ‘கற்றதும் பெற்றதும்’ என்ற தொடரில் எழுதிய சில வாசகங்கள் கண்ணீரை வரவழைப்பதாகக் கூறி எடுத்தும் காட்டியுள்ளார்.
// ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கும்போது,
இறந்தவர் என்னைவிடச் சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால்,
‘பரவால்லை... நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவராக இருந்தால் கழித்துப் பார்த்து,
‘பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்கு’ என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல்லாம்
வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில்லாமல்
இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது.
Today I am alright, thank God! // - இந்நூல் பக்கம்.171
இன்னும் இந்த நூலில், சுஜாதாவின் எழுத்துக்கள், சுஜாதாவின் திரையுலகப்
பிரவேசம், சுஜாதாவின் தமிழ்ப் பற்று, தாய்மொழிக் கல்வி பற்றிய உயரிய எண்ணம், ரத்தம்
ஒரே நிறம் என்ற தொடர் எழுதிய போது வந்த மிரட்டல்கள், திருமதி சுஜாதா சொன்ன சம்பவங்கள்
என்று நிறையவே தகவல்களை சலிப்பு தட்டாதவாறு தனக்கே உரிய நடையில் சொல்லி இருக்கிறார்
இந்நூலின் ஆசிரியர் அமுதவன் அவர்கள்.
// வேலை வாய்ப்புகளுக்கும் தாய்மொழியில்
கற்பதற்கும் சம்பந்தம் இல்லை. நான் அடிக்கடி சொல்லும் உதாரணம் இது. அமெரிக்கா சென்றபோது
என்னுடன் பயணித்தவர்களில் பலர் சீன இளைஞர்கள். அனைவரும் கலிஃபோர்னியா சிலிக்கன் பள்ளத்
தாக்கில் கணிப்பொறி மென்பொருள் எழுதச் சென்று கொண்டிருந்தார்கள். பேச முயன்றதில் அவர்களுக்குத்
தெரிந்த இரண்டே ஆங்கில வார்த்தைகள் ‘சாஃப்ட்வேர், ஓகே’ அவ்வளவுதான். மற்றதெல்லாம் ஐயாயிரம்
பட எழுத்துகள் கொண்ட சீன மொழியில் கற்றவர்கள். தாய்மொழியில் பயின்றது வேலை வாய்ப்பை
பாதிக்கவில்லை // - சுஜாதா ( கற்றதும் பெற்றதும் ) இந்நூல் பக்கம் 48
நூலின் பெயர்: என்றென்றும்
சுஜாதா
ஆசிரியர்: அமுதவன் – நூலின்
பக்கங்கள்; 184
விலை: ரூ 90/= - நூல் வெளியீடு: விகடன் பிரசுரம், சென்னை.
அமுதவன் எழுதிய ‘என்றென்றும் சுஜாதா’ என்ற இந்த நூலினைப் படித்துவிட்டு, தங்கள் பாணியில் வெகு விரிவாக அழகாக பல விஷயங்களின் கோர்வையாகச் சொல்லி அசத்தியுள்ளீர்கள். ஒவ்வொரு வரியாக மிகவும் ரஸித்துப் படித்தேன். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteபல்வேறு பணிகளுக்கு இடையிலும், எனது வலைத்தளம் வந்து கருத்துரை தந்த, மூத்த வலைப்பதிவர் அய்யா V.G.K அவர்களுக்கு எனது நன்றி.
Deleteஇப்படி ஒட்டுமொத்தமாக
ReplyDeleteசுஜாதா அவர்களைப்பற்றி அறிந்து கொள்ள
அவருடன் நெருக்கத்தில் இருந்த ஒருவர்
எழுதிய நூல் குறித்த அறிமுகப் பதிவு
மிக மிக அருமை
எனது அபிமான எழுத்தாளர் அவர் என்பதால்
அவர் குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ளும்
ஆவலுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்
அருமையாக அறிமுகம் செய்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
கருத்துரை தந்த கவிஞர் எஸ்.ரமணி அய்யா அவர்களுக்கு நன்றி.
Deleteஇனிய பதிவு - இனி
ReplyDeleteசுயாத்தா என்றால் யாரென்று அறியாதவர்கள்
புரிந்துகொள்ள இனிய நூல் அறிமுகம்
கவிஞர் யாழ்பாவாணன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteநல்ல பகிர்வு. என்னிடமும் புத்தகம் இருக்கிறது. முன்பு எங்கள் தளத்தில் பகிர்ந்து கொண்ட நினைவு.
ReplyDeleteநண்பர் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. இந்த நூலுக்கான உங்கள் விமர்சனத்தையும் உங்கள் தளத்தில் வாசித்து இருக்கிறேன்.
Deleteரசிக்கும்படி விமர்சனம் எழுதியிருக்கீங்க. சுஜாதா, அவர் கதைகள்னு சொல்லும்போதே, ஓவியர் ஜெயராஜின் அத்துமீறின (ஆனா ரொம்ப ரசிக்கும்படியான :) ) ஓவியங்களும் நினைவுக்கு வரும்.
ReplyDeleteபுத்தகத்திலும் சிறு சிறு பகுதிகளைக் காண்பித்துச் சென்றது நல்லா இருந்தது. என்னை மாதிரி எத்தனைபேர், பாடப்புத்தகத்தைப் படிக்காமல் இவர் கதையை பல்கலைக்கழக நூலகத்தில் படித்து படிப்பைக் கோட்டைவிட்டார்களோ!
நண்பர் நெல்லைத்தமிழன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. சுஜாதாவின் தொடர் கதைகளுக்கு, ஓவியர் ஜெயராஜ் ஒவ்வொரு வாரமும் வரைந்த படங்களை, அந்த தொடர் கதைகள் நூல்களாக வெளிவந்தபோது பதிப்பகத்தார் விட்டு விட்டனர். யாரேனும் அந்த தொடர்கதைகளை பைண்டு செய்து வைத்து இருந்தால் அவற்றில் காணலாம்
Deleteஎன்னுடைய பூர்வ ஜெமக் கடன் என்னும் பதிவுக்கு அமுதவன் பின்னூட்ட மிட்டிருந்தார் அவர் தமிழ் மண நட்சத்திர எழுத்தாளாராக இருந்தபோது எழுத்ய பல பதிவுகளைப் படித்திருக்கிறேன் பெங்களூருவில் தமிழ் வலைப் பதிவர் சங்கமம் நடந்த போது அவரை எதிர்பார்த்தேன் அவரது விலாசம் கிடைக்காதாதால் அழைப்பு இருக்க வில்லை என்று தெரிந்தது நட்சதிரங்களுடனும் நட்சத்திர எழுத்தாளர்களுடனும் தொடர்பு கொண்ட அமுதவன் எழுத்தும் சுவாரசியமானது
ReplyDeleteஎழுத்தாளர் அமுதவன் பற்றிய கருத்துரை தந்த, மூத்த வலைப்பதிவர் அய்யா ஜீ.எம்.பி அவர்களுக்கு நன்றி.
Deleteநூலைப் படித்தது போன்ற மன நிறைவு ஏற்பட்டது.
ReplyDeleteமூத்த வலைப்பதிவர் சென்னைப் பித்தன் அவர்களுக்கு நன்றி.
Deleteஎத்தனை முறை படித்தாலும் சலிக்காத எழுத்து சுஜாதா வின் எழுத்து. எத்தனை முறை படித்தாலும் அலுப்காது அவரைப்பற்றிய எழுத்துக்களும்.அமுதவனுக்கு நன்றி.
ReplyDelete- இராய செல்லப்பா சென்னை
மூத்த வலைப்பதிவர் திரு.இராய செல்லப்பா அவர்களுக்கு நன்றி. ( நியூஜெர்சியை விட்டு சென்னை வந்துள்ளீர்கள். வாழ்த்துகள்)
Deleteஎத்தனை முறை படித்தாலும் சலிக்காத எழுத்து சுஜாதா வின் எழுத்து. எத்தனை முறை படித்தாலும் அலுப்காது அவரைப்பற்றிய எழுத்துக்களும்.அமுதவனுக்கு நன்றி.
ReplyDelete- இராய செல்லப்பா சென்னை
எப்பவும் என்றென்றும் சுஜாதாதான் ..இங்கே வெளிநாட்டு லைப்ரரியில் தான் ஸ்ரீரங்கத்து தேவதைகள் ஆ ,நில்லுங்கள் ராஜாவே நடுப்பகல் மரணம் 24 ரூபாய் தீவு எல்லாம் வாசித்தேன் ..
ReplyDeleteஅமுதவன் ஐயா அவர்களின் புத்தக விமர்சனத்தை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி அண்ணா
சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteஅமுதவன் ஐயாவிற்கு வாழ்த்துகள்...
ReplyDelete(From mobile)
வலைச்சித்தரின் வார்த்தைக்கு நன்றி.
Deleteபுத்தகம் வெளிவந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டபோதும், திடீரென்று தங்களின் விமரிசனம் பார்த்து ஒரு கணம் ஆச்சரியம் அடைந்தது உண்மை. தங்களின் கருத்துக்களில் விமரிசனத்தைத் தாண்டி அன்பு வழிகிறது. அதற்கு நன்றி. இங்கு கருத்துத் தெரிவித்துள்ளவர்களுக்கும் எனது நன்றி.
ReplyDeleteகருத்துரை தந்த, மரியாதைக்குரிய எழுத்தாளர் அமுதவன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Delete// புத்தகம் வெளிவந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டபோதும், திடீரென்று தங்களின் விமரிசனம் பார்த்து ஒரு கணம் ஆச்சரியம் அடைந்தது உண்மை. //
.
ஆரம்பத்தில் இந்த நூல், திருச்சியிலும், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், காரைக்குடி ஆகிய ஊர்களில் நடைபெற்ற புத்தக கண்காட்சிகளிலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து, ஒரு பதிவினில், உங்களுக்கான கருத்துரைப் பெட்டி ஒன்றில் கூட எழுதியதாக நினைவு.
சுஜாதா
ReplyDeleteமறக்கக் கூடிய மனிதரா
சிறு வயதில் வாரம் தவறாமல், வார இதழ்களை வாங்கி, சுஜாதாவின் கதையுள்ளப் பக்கங்களை மட்டும் கிழித்துச் சேர்த்து, பைண்டு செய்த நாட்கள் இனிமையானவை
நன்றி ஐயா
ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.
Deleteகடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம். /// நூலாசிரியருக்கு வாழ்த்துகள். நூலை வாங்க வைக்கும் அளவிற்கு எங்களுக்கு உணர்த்திய அருமையான மதிப்புரை தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteமுனைவர் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. (கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக, எனது சூழ்நிலையும், எனது அப்பாவின் உடல்நிலையை முன்னிட்டு, அடிக்கடி வலைப் பக்கம் வர இயலாதபடியாய் இருக்கிறது.)
Deleteஅருமை
ReplyDelete’நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்’ என்பது போல, எனது வலைத்தளம் வந்து கருத்துரை தந்த, எழுத்தாளர் கே.பி.ஜனா அவர்களுக்கு
Deleteநன்றி.
சுஜாதாவைப்பற்றி அமுதவன் எழுதியிருப்பதைப்பற்றிய பதிவு சுவாரஸ்யமானது. அமுதவன் பெங்களூரில் வசிக்கும் எழுத்தாளர் என்பது எனக்குப் புதிய விஷயம்.
ReplyDeleteதங்களின் வரவுக்கும் கருத்துரைக்கும் நன்றி அய்யா.
Delete.வணக்கம்
ReplyDeleteஐயா
உன்னத மனிதர் பற்றி தாங்கள் படித்த நூலில்சொல்லிய விடயத்தை மிக அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் தம-6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கவிஞரின் கருத்துரைக்கு நன்றி.
Deleteநான் விரும்பி படிக்கும் எழுத்துகளில் எழுத்தாளர் சுஜாதாவின் எழுத்துக்களும் அடங்கும். கதையின் சுவை குறையாமல் அறிவியலை அநாசயமாக கதைகளில் கொண்டு வந்தவர் அவர்.
ReplyDeleteசுஜாதா அவர்களைப்பற்றி அறியும் ஆசை உள்ள இரசிகர்களுக்கு ‘என்றென்றும் சுஜாதா’ என்ற நூல் ஒரு ஆவணம் போல இருக்கும் என நினைக்கிறேன்.
இந்த நூலை படைத்த எழுத்தாளர் திரு அமுதவன் அவர்களுக்கு வாழ்த்துகள்!
மரியாதைக்குரிய V.N.S அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.
Deleteதுளசி : அருமை! உங்கள் விமர்சனமும் அருமை!
ReplyDeleteகீதா: சுஜாதாவைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?!! பாடப்புத்த்கங்களின் இடையில் இவரது தொடர்கதைகளை வைத்துப் படித்ததுண்டு. எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்.
//நடிகர் கமலஹாசன் எழுத்தாளர் சுஜாதாவை சந்திக்க விரும்பி அமுதவனிடம் சொல்கிறார். ஆனால் இருவரும் சந்தித்துக் கொள்வது என்பது ஓவ்வொரு முறையும் தள்ளிக் கொண்டே போகிறது. ஒரு கட்டத்தில் சந்திப்பு நடந்தே விடுகிறது. எப்படி என்றால், கமலைச் சந்திக்க அவர் வீட்டுக்கு அருகில் வந்தபோது சுஜாதா கார் நின்று விடுகிறது. அப்போது அங்கு காத்து இருந்த அமுதவனும் மற்றவர்களும், கார் ஸ்டார்ட் ஆக காரின் பின்னால் இருந்து தள்ளுகிறார்கள். அப்போதுதான் அங்கு வந்த கமல் தனது காரை விட்டு இறங்கி அவரும் தள்ளுகிறார். இத்தனைக்கும் இருவரும் முன்பின் சந்தித்தது இல்லை. இப்படியாக ஒரு சந்திப்பு.// இதனை முன்பே வாசித்திருக்கிறேன்.
// ஹிந்துவின் "ஆபிச்சுவரி" பார்க்கும்போது, இறந்தவர் என்னைவிடச் சின்னவரா, பெரியவரா என்று முதலில் பார்ப்பேன். சின்னவராக இருந்தால், ‘பரவால்லை... நாம தப்பிச்சோம்!’ என்றும், பெரியவராக இருந்தால் கழித்துப் பார்த்து, ‘பரவால்லை... இன்னும் கொஞ்ச நாள் இருக்கு’ என்றும் எண்ணுவேன். எதிர்காலம் என்பதை இப்போதெல்லாம் வருஷக் கணக்கில் நினைத்துப் பார்ப்பது இல்லை. மாதக் கணக்கில்... ஏன், உடம்பு சரியில்லாமல் இருக்கும்போது வாரக் கணக்கில், நாள் கணக்கில் அந்தந்த நாளை வாழத் தோன்றுகிறது. Today I am alright, thank God! // இதுவும் நான் அவரது கற்றதும் பெற்றதும் தொடரில்வாசித்திருக்கிறேன். அதே போன்று தாய்மொழி பற்றி அவர் சொன்னதும்...
நல்ல பகிர்வு! மிகவும் ரசித்தேன்.
சகோதரர் தில்லைக்கது V. துளசிதரன் அவர்களுக்கும், சகோதரி கீதா அவர்களுக்கும் நன்றி. எல்லோரையும் கவர்ந்த எழுத்தாளர் சுஜாதா. ‘என்றென்றும் சுஜாதா’ - என்ற தலைப்பை சரியாக கணித்துதான் ஆசிரியர் அமுதவன் அவர்கள் வைத்து இருக்கிறார்.
Deleteசுஜாதா ரொம்பப்பேரை படிக்க வைத்தவர்,அவருடைய எழுத்துக்கள் தனி ரகமே,அவருக்கென இருக்கிற இருந்த எழுத்து ரசிகர்கள் ஒரு தனிப்பெரும் பட்டாளமாகவே இருந்தார்கள்.அவருடைய எழுத்து தனி ஒரு ராஜாங்கத்தையே நிர்மாணித்தது எனச்சொல்லலாம்.
ReplyDeleteஓர் வருத்தமான செய்தி :(
ReplyDelete==========================
நம் அன்புக்குரிய வலைப்பதிவர் திரு. தி. தமிழ் இளங்கோ அவர்களின் தந்தையான திருமழபாடி திரு. திருமுகம் (வயது: 92) அவர்கள் நேற்று 08.07.2017 சனிக்கிழமை மதியம் 12.45 மணி அளவில் இயற்கை எய்திவிட்டார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் இங்கு பின்னூட்டமிட்டுள்ள அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்.
அவர்களின் இறுதி ஊர்வலம், திருச்சி கே.கே.நகர் பஸ் ஸ்டாப் அருகே நாகப்பா நகர் 3-வது கிராஸில் உள்ள அவரின் இல்லத்திலிருந்து, இன்று 09.07.2017 ஞாயிறு பகல் சுமார் 2 மணி அளவில் புறப்பட்டு விட்டது.
அவரின் ஆன்மா சாந்தியடையவும், அவரின் மறைவினை நினைத்து வருந்தி வாடும் அவரின் குடும்பத்தாருக்கு மன நிம்மதி ஏற்படவும், நாம் அனைவரும் பிரார்த்தித்துக்கொள்வோமாக !
சுஜாதாவின் நூல் பற்றிய தங்களின் திறனாய்வு மிகவும் சுவாரஸ்யம்! சீக்கிரம் இந்தப்புத்தகத்தை வாங்கி படிக்க வேண்டும். அன்பு நன்றி!
ReplyDeleteஇப்போது தான் தங்களின் வலைத்தளம் வந்த போது தான் த்ங்கள் தந்தையாரின் மறைவு பற்றி அறிந்து கொண்டேன். மிகவும் வருத்தமாக இருந்தது. அவர்களைப்பற்றிய பதிவும் நினைவுக்கு வந்தது. பிறவித்துன்பங்களிலிருந்து விடுதலை அடைந்து விட்டார்கள் என்று நினைத்து தங்களை சமாதானப்படுத்திக்கொள்ளுங்கள். அதுவே உங்களை ஆறுதலை அடைய வைக்கும். அவர்களுக்கு என் அஞ்சலிகளை சமர்ப்பித்துக்கொள்ளுகிறேன்!
ReplyDelete