Sunday 20 December 2015

மகாராணியாரின் ஆணைப்படி


புதிய கனவுகளோடு வந்தவர்கள், இன்னும் பழைய கனவுகளே நிறைவேறாதவர்கள் என்று, சென்னையில் உள்ள அனைவரும் உச்சரிக்கும் பெயர் “செம்பரம்பாக்கம் ஏரி” என்பதாகும். இந்த ஏரியானது புயல், மழை, வெள்ளத்தில் நிரம்பிக் கொண்டு இருந்தபோது, அதன் உபரி நீரை வெளியேற்ற யாருடைய உத்தரவிற்கோ காத்து இருந்ததாகவும், அதில் முடிவு எடுக்க ஏற்பட்ட தாமதமே சென்னையின் அழிவுக்கு காரணம் என்றும் சொல்கிறார்கள். இதில் எந்த அளவுக்கு உண்மைகள் உள்ளன என்று தெரியவில்லை. இங்கு எல்லாமே அரசியல்தான்.

மகாராணி உத்தரவு:

(Queen Alexandrina Victoria - 24 May 1819 – 22 January 1901) Picture courtesy: express.co.uk)

சிலசமயம் பேச்சு வழக்கில் ”பெரிய மகாராணின்னு நினைப்பு” என்று பழையகாலத்து ஆட்கள் சொல்லுவது வழக்கம். அவர்கள் அப்படி குறிப்பிடுவது, அந்தகாலத்து இங்கிலாந்து மகாராணி எனப்படும் அலெக்ஸாண்ட்ரினா விக்டோரியா (Alexandrina Victoria) அவர்களைத்தான். அவரைப் பற்றி குறிப்பிடும்போது, மாட்சிமை தங்கிய (MAJESTY) என்றுதான் குறிப்பிட்டார்கள். அவரும் அதற்குத் தகுந்தாற் போலவே தனது காலத்தில் ஆட்சி நிர்வாகம் செய்தார்.

இங்கிலாந்து  நாட்டு சட்டப்படி, எல்லா மசோதாக்களும் இங்கிலாந்து ராணியின் ஒப்புதல் பெற்ற பின்னரே சட்டமாக முடியும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் போது, ஆட்சிக் கட்டிலில் இங்கிலாந்து  அரண்மனை இருந்தபோதும், பிரிட்டிஷ் இந்தியாவின் நேரடி ஆளுகை என்பது வைஸ்ராய் மற்றும் கவர்னர்கள் முலமாகவே நடைபெற்றது. இவர்கள் அனைவரும் ஆங்கிலேயர்களே என்பதனை சொல்ல வேண்டியதில்லை. அவர்களுக்கு கீழிருந்த அதிகார வர்க்கம் என்பது இந்தியர்களே.
  
படம் – மேலே) பிரிட்டிஷ் ஆட்சியின் பிரகடனம் Picture courtesy: indiamike.com/files

எனவே ஒவ்வொரு சட்டத்தையும் அமுல்படுத்தும் போதும், சின்ன உத்தரவாயினும் “மாட்சிமை தங்கிய மகாராணி ஆணைப்படி ….. …. “ என்றே வாசிக்கப்பட்டது. ஆக பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில், இந்தியாவில் எந்த செயலைச் செய்தாலும் மகாராணியாரின் பெயரிலேயே செய்யப்பட்டதைப் புரிந்து கொள்ளலாம். எனவே இந்த உத்தரவை எதிர்ப்பவர்கள், மகாராணியாரின் உத்தரவை எதிர்ப்பவர்கள் , அரசு எதிர்ப்பாளர்கள், ராஜாங்க குற்றவாளிகள் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உருவாக்கப்பட்டது.

இந்தியாவில் கம்பெனி ஆட்சிக்குப் பிறகு, விக்டோரியா மகாராணி அவர்கள், 1876 இல் இந்தியாவின் பேரரசி என்று தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார்; இதன் மூலம் இந்தியா அவரது நேரிடையான ஆட்சிக்கு வந்தது; இந்தியா சுதந்திரம் அடையும் வரை இந்த ஆட்சி நீடித்தது.

அந்நாளில், முடியாட்சி முறையில் இந்த ’மாட்சிமை தங்கிய’ என்ற வார்த்தையை, மன்னர்களுக்கும், மகாராணிக்களுக்கும் பெயரின் முன்னால் சேர்த்து, அவர்களை மரியாதையாக அழைப்பது வழக்கமாக இருந்தது. ( இப்போதும் புதுக்கோட்டையில் உள்ள ஒரு அரசு கல்லூரியின் பெயர் ’மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை’ என்று புதுக்கோட்டை சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் பெயரால் அழைக்கப்படுகிறது ) 

அரசாங்க உத்தரவுகள்:

எனினும் ஆங்கிலேயர் ஆட்சியில், ஒவ்வொரு அரசாங்க உத்தரவையும் அந்தந்த நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள அரசு ஊழியர்களே செய்தனர். ஒவ்வொரு உத்தரவையும் மகாராணியே தனிப்பட்ட முறையில் போட வேண்டும் என்று  யாரும் எதிர்பார்க்கவில்லை.  ஏற்கனவே சொல்லப்பட்டுள்ள அவரவர் அவரவருக்குண்டான அரசுப் பணிகளை செய்தனர். எனவே நிர்வாகம் வரிசைப்படி அமைந்தது. மேலும் அரசு அதிகாரிகளிடமும், அரசு ஊழியர்களிடமும் தங்கள் கடமையில் இருந்து தவறினால் என்ன நடவடிக்கை எடுப்பார்களோ என்ற பயமும் இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பல பிரிவுகள், பிரிட்டிஷ் அரசியலமைப்பு சட்ட அடிப்படையிலேயே அமைந்தது. எனினும்,  “மாட்சிமை தங்கிய மகாராணி ஆணைப்படி ….. …. “  போன்று  “மாட்சிமை தங்கிய ஜனாதிபதி (அல்லது பிரதமர்) ஆணைப்படி“  போன்ற வாசகங்கள் இல்லை. ஜனநாயக முறைப்படியே அமைகின்றன.

                              (ALL  PICTURES COURTESY: GOOGLE IMAGES)


36 comments:

  1. ///எனினும் ஆங்கிலேயர் ஆட்சியில், ஒவ்வொரு அரசாங்க உத்தரவையும் அந்தந்த நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள அரசு ஊழியர்களே செய்தனர். ஒவ்வொரு உத்தரவையும் மகாராணியே தனிப்பட்ட முறையில் போட வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே சொல்லப்பட்டுள்ள அவரவர் அவரவருக்குண்டான அரசுப் பணிகளை செய்தனர்.///
    நம்மவர்களும் இதுபோல் செய்திருந்தார்கள் என்றால்
    சென்னையின் இழப்பு குறைந்திருக்குமல்லவா
    உயிர் பலியைத் தவிர்த்திருக்கலாம் அல்லவா

    ReplyDelete
    Replies
    1. அன்பு ஆசிரியர் கரந்தை ஜெயக்குமார் அவர்களின் கருத்துரைக்கு நன்றி. செம்பரக்கம் ஏரி நிரம்பியது பற்றியும், அடையாற்றில் வெள்ளம் வரும் என்றும் சென்னை கலெக்டர் சுந்தரவல்லி அவர்கள் எச்சரிக்கை விடுத்தாக படித்தது நினைவில் இருக்கிறது. இந்த விஷயத்தில் கலைஞர், அம்மா என்று அறிக்கை அரசியல் நடக்கிறது என்றே நினைக்கிறேன்.

      Delete
  2. பதிவை வாசித்து அனைத்தம் அறிந்தேன் சகோதரா.
    வேதாவின் வலை

    ReplyDelete
    Replies
    1. சகோதரியின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  3. ஆங்கிலேயர்களுக்கும் அடிமைத் தனம் உண்டு என்பது புரிகிறது.அவர்கள் விட்டுவிட்டார்கள் நாம் தொடர்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. மூங்கில் காற்று டி.என்.முரளிதரன் அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete
  4. அறியாத தகவல்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் தளிர் சுரேஷ் அவர்களே நலமாக இருக்கின்றீர்களா? பெரும் மழை மற்றும் வெள்ளத்தின் சமயம் ரொம்பவே கஷ்டப்பட்டு இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

      Delete
  5. சரித்திரம் ,தமிழகத்தில் மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கிறதோ :)

    ReplyDelete
    Replies
    1. தோழர் பகவான்ஜீ அவர்களுக்கு நன்றி. உங்களுக்கு தெரியாதது இல்லை.

      Delete
  6. //ஒவ்வொரு உத்தரவையும் மகாராணியே தனிப்பட்ட முறையில் போட வேண்டும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஏற்கனவே சொல்லப்பட்டுள்ள அவரவர் அவரவருக்குண்டான அரசுப் பணிகளை செய்தனர். எனவே நிர்வாகம் வரிசைப்படி அமைந்தது. மேலும் அரசு அதிகாரிகளிடமும், அரசு ஊழியர்களிடமும் தங்கள் கடமையில் இருந்து தவறினால் என்ன நடவடிக்கை எடுப்பார்களோ என்ற பயமும் இருந்தது.//

    அருமையான பல தகவல்களைத் திரட்டி தங்கள் பாணியில் மிகச் சிறப்பாகக் தொகுத்துக்கொடுத்துள்ளீர்கள்.

    மொத்தத்தில் எதைப்பற்றியோ ஏதோ சொல்ல வந்து, ஆனால் சொல்லாமல், அவரவர்களே புரிந்துகொள்ளட்டும் என விட்டு விட்டீர்கள் போல உள்ளது.

    ஆகவே, இதுவே மாட்சிமை தங்கிய பதிவாக உள்ளது.:) பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள V.G.K அவர்களின் அன்பான கருத்துரைக்கு நன்றி.

      // மொத்தத்தில் எதைப்பற்றியோ ஏதோ சொல்ல வந்து, ஆனால் சொல்லாமல், அவரவர்களே புரிந்துகொள்ளட்டும் என விட்டு விட்டீர்கள் போல உள்ளது. //

      ஆமாம் அய்யா! நீங்கள் சொல்வது சரிதான். அரசுப்பணி, அரசு ஊழியர் கடமை விதிகள் பற்றி எழுத வந்தேன். நிறையவே எழுதி வைத்து இருந்தேன். நமக்கு வேண்டாத வேலை என்பதால், கட்டுரையை வேறு மாதிரி முடித்து விட்டேன்.

      Delete
  7. வணக்கம்
    ஐயா

    புதிய தகவல்கள் தேடலுக்கு முதல் வாழ்த்துக்கள் ஐயா... சில நேரங்களில் அம்மா கொண்டு வந்தாலும் வரலாம்.... ஹா..ஹா..ஹா..த.ம 4
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. கவிஞர் ரூபன் அவர்களுக்கு நன்றி.

      Delete
  8. முக்கியமான ஒரு பொருண்மையை எடுத்துப் பகிர்ந்த விதம் நன்று. தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்த காலகட்டத்தில் (1982) மாண்புமிகு துணைவேந்தரவர்கள் என்ற குறிப்போடு அலுவலகக்குறிப்புகள் அனுப்பப்பட்டு வந்தன. அவ்வாறு எழுதும்படி நாங்கள் பணிக்கப்பட்டோம். அப்போதிருந்த முதல் துணைவேந்தர் ஒரு சுற்றறிக்கை விட்டு துணைவேந்தரவர்கள் என்பதற்கு முன்னால் மாண்புமிகு என்று (ஆங்கிலத்தில் Honourable)எழுதுவதைத் தவிர்க்கும்படி கூறினார். அது முதல் தொடர்ந்து அவ்வாறே (துணைவேந்தரவர்கள் என்று மட்டுமே)கடைபிடிக்க ஆரம்பித்தோம்.

    ReplyDelete
    Replies
    1. ஒரு புதிய தகவலைத் தந்திட்ட முனைவருக்கு நன்றி.

      Delete
  9. எத்தனையோ காரியங்களுக்கு அவனே பொறுப்பு என்று நம்பும் நாம் பிற பல காரியங்களுக்கு ஆள்பவரே பொறுப்பு என்று இருந்து விடுகிறோம்

    ReplyDelete
    Replies
    1. கருத்துரை தந்த ஜீ.எம்.பி அய்யா அவர்களுக்கு நன்றி. ஆம் அய்யா உண்மைதான். அவனன்றி ஓரணுவும் அசையாது என்று சொல்லி விட்டு, கல்லில் நாமே இடித்துக் கொண்டுவிட்டு, கல் நம்மை இடித்து விட்டது என்று சொன்ன கதைதான்.

      Delete
  10. மகாராணி உத்தரவுக்கு காத்திருந்து திறந்திருந்தாலும் நீரின் வேகம் அதன் கொள்ளளவுடன் கொட்டும் மழை நீரின் அளவையும் சேர்த்தே கணித்து ஏரி வரும்பாதையில் பாதிக்கக்கூடிய இடங்களையெல்லாம் போர்க்கால அடிப்படையில் மக்களை மட்டுமாவது இடம் பெயர செய்திருக்க வேண்டும் அல்லவா ஐயா?

    நடந்து முடிந்தபின் அதனால் இதனால் என ஆராய்தலும் தப்புத்தான். அதே நேரம் அவ்வாராய்ச்சி இனியொரு பொழுதில் அன் நிகழ்வு நடைபெறாமல் காத்திடும் முன்னெச்சரிக்கையாகவும் இருக்கணும் தானே?

    ReplyDelete
    Replies
    1. சகோதரி நிஷா அவர்களின், அன்பான கருத்துரைக்கு நன்றி.

      Delete
  11. அறியாத தகவல் அறிந்தேன் நண்பரே நன்றி
    தமிழ் மணம் 6

    ReplyDelete
    Replies
    1. நண்பர் தேவகோட்டை கில்லர்ஜி அவர்களுக்கு நன்றி.

      Delete
  12. யார் மனதும் புண்படாத வகையிலும், படிப்பவர்கள் அவர் அவருக்கு ஏற்ப புரிந்து கொள்ளும் வகையிலும் எழுதுவதில் நீங்கள் தான் The Best!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நம்பள்கி அவர்களின் பாராட்டுரைக்கு நன்றி!

      Delete
  13. சூழ்நிலைக்கு ஏற்ற பதிவும் தலைப்பும் அருமை!

    ReplyDelete
  14. "செம்பரம் பாக்கம் ஏரி” ஆனது புயல், மழை, வெள்ளத்தில் நிரம்பிக் கொண்டு இருந்தபோது, அதன் உபரி நீரை வெளியேற்ற யாருடைய உத்தரவிற்கோ காத்து இருந்ததாகவும், அதில் முடிவு எடுக்க ஏற்பட்ட தாமதமே சென்னையின் அழிவுக்கு காரணம் என்றும் சொல்கிறார்கள்." என்ற செய்தி துயரம் மிகுந்த செய்தி ஆயிற்று!
    இனியாவது இந்நிலை வராமல் இருக்க இறைவனை வேண்டுவோம்.

    ReplyDelete
  15. //மொத்தத்தில் எதைப்பற்றியோ ஏதோ சொல்ல வந்து, ஆனால் சொல்லாமல், அவரவர்களே புரிந்துகொள்ளட்டும் என விட்டு விட்டீர்கள் போல உள்ளது.//

    திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்கள் சொன்னதை நானும் வழி மொழிகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா V.N.S அவர்களின் கருத்திற்கு நன்றி. ஆமாம் அய்யா! சொல்ல நினைத்தது ஒன்று. சொல்லி முடிந்தது ஒன்று.

      Delete
  16. உண்மை தான் ஐயா..நம் நாட்டில் அரசியலமைப்பு சீர்த்திருத்த வேண்டும் ..இதற்கு நாம் தான் சரியான பிரதிநிதியைத் தேர்ந்து எடுக்க வேண்டும்..இனியொரு விதி செய்வோம் ஐயா..

    ReplyDelete
  17. சொல்ல நினைத்தது ஒன்று... சொல்லி முடித்தது ஒன்று என்று தாங்கள் குறிப்பிட்டாலும் சொல்ல நினைத்ததை மிகச்சரியாக வாசகர் புரிந்துகொள்ளும் வண்ணம் எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள் ஐயா.

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி. சிலசமயம் சில பதிவுகள் இப்படித்தான் முடிந்து விடுகின்றன.

      Delete
  18. ஐயா தலைப்பே பல விஷயங்களைப் புரிய வைத்துவிட்டது. நீங்கள் சொல்ல நினைத்ததைச் சரியாகப் புரிந்து கொள்ள முடிந்தது!!! அருமை ஐயா!

    கீதா

    ReplyDelete
    Replies
    1. சகோதரி அவர்களின் கருத்துரைக்கு நன்றி.

      Delete